அணங்கு கொல்?

“அந்த மாதிரி பாட்டியை எங்கே தேடிக் கண்டு பிடிக்கறது?” என்றான் ராம்.

“வாஸ்தவம்தான், கண்டு பிடிக்கறது கஷ்டம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால அந்த மாதிரி பாட்டிகள் கிடச்சா. இப்ப கொஞ்சம் சிரமம்தான்” அம்மா சொன்னாள்.

“ என்னம்மா சொல்ற? சமுதாயம் இன்னும் விதவைகளை மொட்டை அடிச்சு நார்மடி புடவை கட்டிக்க வச்சிருக்கணும்னு சொல்றயா? அந்த அக்கிரமத்திலேந்து கொஞ்சமாவது வெளியிலே வந்திருக்கோம்னு நான் சந்தோஷப்படறேன்” வர்ஷா கொதித்தாள்.

“ இருடி இரு! அவசரப் படாதே! எனக்கும் நிலைமை மாறியிருக்கறது சந்தோஷம்தான். ஆனா இந்த பூஜைக்கு இப்படி ஒரு விதி இருக்கே. அந்த மாதிரி மொட்டை, நார்மடி புடவை பாட்டியைக் கண்டு பிடிச்சு அவர்களுக்கு இந்த புடவையைக் கொடுக்கணும்னு” அம்மாவின் சங்கடம் அந்த காணொளி கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

“ இந்த மாதிரி பூஜையை நான் வேற எங்கேயும் கேள்விப் படலையே? எதுனால நம்ம குடும்பத்தில மட்டும்?” கேட்டாள் வர்ஷா.

“எனக்கும் அதே கேள்விதான்” ராம் சேர்ந்துகொண்டான்.

ராமும் , வர்ஷாவும் அவரவர் கணினிச் சாளரத்திலிருந்து அம்மாவை எதிர்பார்ப்போடு பார்த்தனர்.

பின் புலத்தில் இருந்த அப்பா “நாங்க எல்லாம் பெரியவா சொன்னா அதைக் கேள்வியே கேட்க மாட்டோம்! உங்களுக்கு எல்லாத்திலையும் சந்தேகம்தான்” தன் ஐ பாடை பார்த்துக்கொண்டே பேசினார்.

“கேள்வி கேக்கறது தப்பா? என்னாப்பா நீங்க?” என்றாள் வர்ஷா.

“பொதுவா சுமங்கலிப் பிரார்த்தனை என்பது குடும்பத்தில சுமங்கலிகளா இறந்து போன பெண் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை வேண்டி பண்றது. ஆனா நமக்கு மற்ற முன்னோர்களின் ஆசிகளும் வேண்டும் அல்லவா அவர்கள் அமங்கலிகளாக இருந்தாலும் கூட? அதுதான் இந்த பூஜைக்கான காரணம்னு நான் நினைச்சேன்…..” இது அம்மா.

“ இது தர்க்க ரீதியாவும் நியாய ரீதியாவும் சரியான காரணமா இருக்கேம்மா! எனக்கு இந்த காரணம் பிடிச்சுருக்கு” என்றான் ராம்.

“ஆனா அதுக்கு அப்புறமும் எதோ நீ யோசிக்கறா மாதிரி இருக்கே! என்ன?” எனக் கேட்டான்.

“இதைப்பத்தி நான் நிறையபேர்ட்ட கேட்டேன். சரியான விளக்கம் கிடைக்கல. அப்புறம் கொஞ்ச வருஷம் முன்னாடி கிராமத்தில எங்களுக்கு தூரத்து சொந்தமான ஒரு வயசான பாட்டியைப் பார்க்க நேர்ந்தது. பேச்சு பராக்கில் நம்பிக்கை இல்லாமதான் கேட்டேன், ஆனா பாட்டி அதுக்கான காரணத்தை வேற விதமா சொன்னா….” அம்மா தயங்கினாள்.

“என்னம்மா சஸ்பென்ஸ் வைக்கறே ! சொல்லு சீக்கிரம்” வர்ஷா அவசரப் படுத்தினாள்.

“அதாவது …. வந்து….. எந்த குடும்பத்தில ஏதாவது ஒரு தலைமுறையிலே ஏதோ ஒரு பெண் சதியா ஆயிருக்காளோ அவங்க பரம்பரையிலே மட்டும்தான்..” அம்மா முடிக்கவில்லை.

“ வாட் நான்சென்ஸ்!” “என்னம்மா இது நம்பும்படியாவே இல்லையே” இரண்டு பேரும் ஏக காலத்தில் கத்தினார்கள்.

அப்பா “என்ன உளரறே! எங்க அம்மாவுக்குக்கூட தெரியாத காரணம் உனக்குத் தெரிஞ்சுடுத்தா? அது ஒண்ணும் இல்லைடா! உங்க அம்மாவுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி!. இதை நம்பத்தேவையில்லை” இத்தனை நேரம் பேசாமல் இருந்த அப்பா கொஞ்சம் எரிச்சலோடு இடைமறித்தார்.

“இருங்கோ அப்பா! கோவப்படாதீங்கோ! யோசிச்சு பாக்கலாம்! லாஜிக்கலா பாத்தாக்கூட இதுக்கான சாத்தியம் ரொம்ப குறைச்சலேம்மா. இந்த மாதிரி சதி வழக்கங்கள் எல்லாம் ரஜபுதனம், வங்காளம் மாதிரி ப்ரதேசங்களில் பல தலைமுறைக்கு முன்னாடி இருந்தது, தமிழ்நாட்டுலே அந்த பழக்கம் அவ்வளவாக இருந்ததா சொல்ல முடியாது. என்ன ராம் சொல்ற” நம்பிக்கையோடு ராமைப் பார்த்தவாறு கேட்டாள் வர்ஷா.

அவன் ” அதான் யோசிக்கறேன்! ஆனா பொன்னியின் செல்வன்ல ஞாபகம் இருக்கா? வீரபாண்டியனை ஒரு உக்கிர ஆவேசத்தில ஆதித்ய கரிகாலன் கொன்னுட்டு போன மறுநாள் நந்தினியோட காலை கையைக் கட்டி வீரபாண்டியனின் சிதையில் போட அந்த ஊர்வாசிகள் முயற்சிக்கிறார்கள். அவள் அலறல் சத்தத்தைக்கேட்டு அங்கு வந்த பழுவேட்டரையர் ஆட்கள் அவளை பழுவேட்டரையரிடம் கொண்டு செல்கிறார்கள் என்று வருமே? கல்கி நிச்சயம் ஆராய்ச்சி பண்ணாம எழுதி இருக்க மாட்டார். ஒரு வேளை சதி பழக்கம் தமிழ்நாட்டிலையும் இருந்திருக்குமோ என்னமோ” என்றான்.

“அந்த சதி முயற்சியே ஒரு நாடகம்னு தோணறது . பழுவேட்டரையரிடம் தான் சென்று சேர்வதற்கான ஓர் யுக்தியா அந்த சதி முயற்சியை நந்தினி பண்ணியிருக்கான்னு நான் நினைக்கறேன். ஆனா நீ சொல்றது சரிதான். அந்த பழக்கம் குறைந்த அளவிலையாவது இருந்திருக்கலைன்னா கல்கி அப்பிடி எழுதியிருக்கமாட்டார்.” அம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

வர்ஷா ஏதோ ஆழ்ந்து யோசிப்பது போல இருந்தாள்.

ராம் சொன்னான் “உங்களோட பேசிண்டே நெட்டைப் பார்த்தேன். சங்க கால இலக்கியங்களில் கூட இந்த உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்ததைப் பற்றி பல பாடல்கள் இருக்குன்னு தெரியறது.”

வர்ஷா நிதானமாக “அம்மா! ராம்! உங்க ரெண்டு பேருக்கும் நம்ப குடும்ப வரை படம் பத்தி நினைவிருக்கா? “ என்று கேட்டாள்.

“ஆமா! அதுக்கு என்ன இப்போ?” அம்மா கேட்டாள்.

“ நா இப்போ வேலைக்கு கிளம்ப ரெடியாகணும்! அடுத்த வாரம் இதைப் பத்தி பேசலாம்” என்றாள் வர்ஷா.

“அம்மா பை! ராம் , அப்பா பை!, அப்புறம் பேசலாம்”

திரையிலிருந்து மறைந்தாள்.

அப்பா” குழந்தைகளை ஏன் குழப்பி விடறே” என்றார்.

ராம்” அப்படி இல்லப்பா! விஷயங்களை சரியா புரிஞ்சுக்கறது நல்லதுதானே ” என்றான்.

“எனக்கும் ஒரு மீட்டிங்க் இருக்கு இன்னும் அரை மணி நேரத்திலே. அடுத்த வாரம் பாக்கலாம்! இதைப் பத்தி நிச்சயம் பேசணும்! பை அம்மா! பை அப்பா!” ராம் சிரித்துக்கொண்டே கை அசைத்து விடை பெற்றான்.

*****************************************

மூன்றாவது முறையாக இந்த கனவு வருகிறது. என்ன அர்த்தம் இதற்கு ? வர்ஷா தலையைப் பிடித்துக்கொண்டாள்.

கனவில் வந்த வீடு பழங்காலத்து சாயை கொண்டிருந்தது. கனவே மங்கிய கறுப்பும், இளகிய ஆரஞ்சு வண்ணமுமாக பழங்காலத்து புகைப்படம் உயிர்த்தெழுந்தது போல இருந்தது.

மராத்திகட்டு கட்டிகொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மாதுவும், ஓர் அழகிய இளம்பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ஆயி! எனக்குப் பயமாக இருக்கு” என்று அந்த இளம்பெண் மராத்தியில் சொன்னாள்.( எனக்கு எப்படி அது புரிந்தது? ஆயி என்கிறது அம்மாவைக் குறிக்கிறது என்று மட்டும் தெரியும். மற்றபடி எனக்கு மராத்தி தெரியாதே! வர்ஷா தலையைப் பிய்த்துக்கொண்டாள்)

“குழந்தை! பயப்படாதே! எல்லாம் நல்லபடி நடக்கும்!” இதுவும் மராத்தியில்.

இதற்குப் பின்னர் வந்த உரையாடல் எல்லாம் பெரும்பாலும் தமிழிலும், கொஞ்சம் மராத்தியிலும் இருந்தது.

“நாம இங்க வந்து ரண்டு தலை முறை ஆச்சு! நாமளே பாதி தமிழாளா ஆயாச்சு! ஒண்ணும் பயப்படறதுக்கு இல்லை!” ஆயி சொன்னாள்.

“தமிழ் ஸ்மார்த்தா எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்?”

“அதான் சொன்னாளே! தமிழ் ஸ்மார்த்த பொண்ணு கிடைக்க மாட்டேங்கறது அதான் மராத்தி ஸ்மார்த்தாளா இருந்தாலும் தேவலைன்னு. இதெல்லாம் ஒரு சுழற்சியில வருது. ஒரு தலை முறையிலே புருஷாள் எண்ணிக்கை நிறைய இருக்கு. இன்னொரு தலைமுறையிலே பொண்கள் ஜாஸ்தி ஆயிடறது. இப்ப பொண்கள் குறைச்சலா இருக்கற காலம் போலிருக்கு”

“ நாம தேவலைன்னு பண்ணிக்கறாளாமா? சரிதான்!”

“அப்படி இல்லைம்மா! உன்னை ரொம்ப பிடிக்சுருக்கு, நம்ம குடும்பத்தைப் பிடிச்சுருக்கு. அப்பாவோட ஆத்ம சினேகிதருக்கு ரொம்ப வேண்டப்பட்டவா. அதான் நானும் இதுக்கு சரின்னுட்டேன்”

பெண் பேசாமல் இருந்தாள்.

ஆயி தொடர்ந்தாள்.” தவிர தமிழ் ஸ்மார்த்தாள் எல்லாம் கெட்டிக்காரா. நன்னா சம்பாதிக்கத் தெரியும். சொத்து சேக்கத் தெரியும். .இந்தப் பையன் நல்ல குணவானும் கூட! அம்மா அப்பா பரம சாது ஜனங்கள்! வேற என்ன வேணும்? ஒண்ணுக்கும் கவலைப்படாதே!

அப்புறம் இன்னுமொண்ணு. உனக்கும் அவருக்கும் எத்தனை பேர் பொருத்தம்? “

இந்தக் கனவு இதோடு முடிந்தது. அதன் பின்னர் அதற்கு தொடர்ச்சி போல மற்றுமொன்று.

அதில் அந்த பெண் கொஞ்சம் பெரியவளாக இருபதுகளின் இறுதியில் இருப்பவள் போல இருந்தாள். அவளும் மராத்திக்கட்டு புடவை கட்டிக்கொண்டிருந்தாள்.கூட இரண்டு பெண்ணும் ஒரு ஆணுமாக குழந்தைகள்.

” வாம்மா! வாங்கோடா கண்களா!” குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஆயி கேட்டாள் “என்னடி பார்வதி! உங்க மடிசார் கட்டிக்காமல் நம்ம கட்டு கட்டிண்டு இருக்கே “

“சில நாளைக்கு தோணும் கட்டிப்பேன். மாமியார் ஒண்ணும் சொல்ல மாட்டா. இதிலயும் கச்சை போட்டுத்தானே கட்டிக்கறே! பரவாயில்லைம்பா!

நா சொல்லுவேன். மடிசார்தான் எப்பவும். மராத்திக்கட்டு எப்பவாவது தான்னு. சிரித்துக்கொண்டு ‘சரி சரி ! அதனால ஒண்ணும் பாதகமில்லைம்பார்’’

குழந்தைகள் முன் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தன. அம்மாவும் பெண்ணும் உள்ளே போனார்கள்.

வாசலில் கொஞ்சம் கூச்சலும், குழப்பமும். அழுகையுமாக குரல்கள் கேட்டன. ஆயி உள்ளேயிருந்து என்ன என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தாள். குழந்தைகளும் பின்னோடு வந்தன.

அவர்கள் சொன்னதைக்கேட்டு சர்வேஸ்வரா என்ற அலறலோடு ஆயி தடாலென்று கீழே விழுந்தாள். பார்வதி பாய் உள்ளேயிருந்து ஓடி வந்தவள் அப்படியே உறைந்து நின்றாள்.

இதோடு அந்த கனவு முடிந்தது.

***************************

“ என்ன வர்ஷா ! அவசரமா பேசணும்னு மெஸேஜ் அனுப்பியிருந்தயே என்ன?” ராம் கேட்டான்.

“ஒரு பத்து நிமிஷம் பேசணும் உன்னோட! நேரம் இருக்கா?’

“ ஆமா! பரவாயில்லை சொல்லு!”

அவள் கனவை சொன்னாள்.

“ என்ன அர்த்தம் இதுக்கு ? புரியலயே”

“நான் உனக்கு நம்ம குடும்பமர வரைபடத்தை அனுப்பியிருக்கேன் பாரு! அதைத் திற” என்றாள் வர்ஷா. குரலில் அவசரம் தொனித்தது.

“ம்… திறந்துட்டேன். சொல்லு ” என்றான்.

அதில நம்ம கொள்ளு தாத்தாவுக்கு கொள்ளு தாத்தா பேரைப் பாரு! அதாவது சாம்பசிவ ஐயரின் கொள்ளுதாத்தா! “

“ம்…. ஈஸ்வர அய்யர். சரியா “

“சரி! அவர் மனைவி பெயர் ?”

“ பார்வதி பாய்…”

“ஏன் பார்வதி பாய்னு இருக்கு, தமிழ் குடும்பத்தில? ஞாபகம் இருக்கா?

நம்ம குடும்பத்தில மராத்தி ரத்தம் ஓடறதுன்னு பாட்டி சொல்றதுண்டு. அந்த தாத்தா ஈஸ்வர அய்யர் ஒரு மராத்திப் பெண்ணைக் கல்யாணம் பண்ணின்டார்னு நாம குழந்தைகளா இருக்கும் போது பாட்டி சொல்லியிருக்கா! அந்த ஈஸ்வர அய்யருடைய காலம் கிட்டத்தட்ட 1730,40 ஆ இருந்திருக்கலாம். அந்த காலகட்டத்துல தஞ்சாவூர்ல மராத்திய மன்னர்களின் ஆட்சி காலம். அந்த சூழ்நிலையில இந்த மாதிரி ஒரு கலப்பு திருமணம் நடப்பதற்கான சாத்தியங்கள் இருந்திருக்கலாம் இல்லையா? ”

“ஓ! மை காட்! அந்த கனவுல கூட வருதே பேர் பொருத்தம்னு. ஈஸ்வர அய்யர், பார்வதி பாய்! ஆனா இதை நம்பறது கொஞ்சம் கஷ்டமா இருக்கே! ஒரு வேளை நாம இதைப் பத்தி ரொம்பப் பேசி அது இப்படி கனவா வந்துருக்கா? தவிர இது ஏன் சதி பழக்கத்தோட சம்பந்தப் பட்டுருக்குன்னு நீ நம்பறே!”

“இந்த கனவுக்கு அப்புறம் தஞ்சாவூரில் மராத்திய அரசு பற்றி நா படிச்சேன்.அதில மூன்றாவது சரபோஜி இறந்து போனப்போ அவருடன் இரண்டு ராணிகள் உடன் கட்டை ஏறினார்கள்னு இருந்தது. இன்னும் பிரதாப சிம்மர் இறந்தபோதும் அவருடன் ராணிகள் உடன் கட்டை ஏறியதைப் பத்தியும் இருந்தது.. அதனால இந்த பார்வதியும் …..”

“பாசிபிள்! கொயட் பாசிபிள்!” என்றான் ராம். “ இப்ப என்ன பண்ணலாம்? இது நம்ம குடும்பத்தில நடந்திருக்கலாம்னு என்று ஓரளவு ஊகிக்கலாமே ஒழிய நிச்சயம்னு எப்படி சொல்றது?”

“அம்மா இந்த மாதக் கடைசியில் சென்னை போகிறாள், அந்த புடவையைக் குடுப்பதற்கான பாட்டியைத் தேடி! நானும் போகலாம்னு நினைக்கறேன்.ஒரு வேளை என் கேள்விக்கான பதில் அங்கு கிடைக்கலாம்னு தோணறது.”

“சே! நானும் இந்தியாவில இருந்தா நிச்சயம் வந்திருப்பேன்! சரி ! நீ போயிட்டு என்ன கண்டு பிடிச்சேன்னு சொல்லு! பவித்ரா கிட்ட இதைப் பத்தி சொல்றேன். ரொம்ப சுவாரசியமா கேப்பா” என்றான் ராம்.

“பயந்துக்கப் போறா பாத்துக்கோ! அவகிட்ட வார இறுதியில பேசறேன்னு சொல்லு !பை ராம்!” ஃபோனை வைத்தாள்.

*****************************

குமரன் சில்க்ஸை விட்டு வெளியே வந்து , மயிலாப்பூர் குளக்கரையோரமாக நடக்கும் பொழுது வர்ஷா கேட்டாள் ” ஏம்மா! இந்த ஹோட்டலை தேர்ந்தெடுத்த?”

“இல்லடி! நாம தேடி வந்த பாட்டிகள் இந்த மயிலாப்பூர் ஏரியால இருப்பதற்கான சாத்தியக் கூறு ஜாஸ்தி. அப்படி நம்ம கண்ணுக்கு தட்டுப்படலைன்னா , கோவில்ல இருக்கற அர்ச்சகர் , அங்க வர்ற புரோஹிதர் யாரையாவது கேட்கலாம்னு நினைச்சேன்”

எதிரில் வருகிற ஆட்டோ, சைக்கிள், டெம்போ இவற்றில் அடி படாமல், குவித்து வைத்திருகிற காய்கறிகள் , பழங்கள் மேல் விழாமல் நடக்க கூர்ந்த கவனம் தேவைப்பட்டது.

தங்கியிருந்த ஹோட்டலை நெருங்கும் சமயத்தில் அம்மா மேல் மோத வந்த ஆட்டோவைத் தவிர்க்க பக்கத்து சந்து முனையில் ஒதுங்கினாள்.

“பாத்தும்மா! விழுந்துடப் போறே!” என்று அந்த பாட்டி அம்மாவை விழாமல் பிடித்தாள்.

நிமிர்ந்து பார்த்த அம்மா கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்தாள்.

“ மாமி! உங்க கிட்ட நான் பேசணும், கொஞ்சம் அந்த நிழலுக்கு வரேளா?”

கட்டட நிழலைக் காட்டினாள்.

பாட்டியின் முகத்தில் வேர்வை வடிந்தது. நிழலுக்கு வந்தவாறே ” என்னம்மா, சொல்லு” என்றார்.

“ எங்காத்தில கல்யாணம் , பூணல் மாதிரி விசேஷங்களுக்கு மின்னாடி ஒரு பூஜை பண்ற வழக்கம் . அந்த பூஜையில வச்சு பூஜை பண்ணின புடவையை உங்களை மாதிரி பாட்டிக்குக் கொடுக்கறது சம்பிரதாயம். நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா வந்து வாங்கிக்க முடியுமா?”

“நான் கட்டிக்கறா மாதிரி நார்மடி புடவையா?”

“ஆமா மாமி”

“சரிமா! வாங்கிக்கறேன். உங்க ஆம் எங்க இருக்கு?”

“ நாங்க பங்களூர்ல இருக்கோம் மாமி. இதோ இந்த ஹோடல்ல தங்கி இருக்கோம். வாங்கோ!”

வர்ஷாவுக்குத் தன் கேள்விக்கான பதில் வரப் போகிறது என்பதற்கான அறிகுறி தென்பட ஆரம்பித்ததைப் போல இருந்தது.

“ மெதுவா வாங்கோ பாட்டி” என்றாள்.

“ஆகட்டும் குழந்தை!” என்றாள் பாட்டி.

“இந்த குழந்தைக்குத்தான் கல்யாணமா? என்று கேட்டாள்

“உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கட்டும். இவ அண்ணாவுக்கு இரண்டு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. அப்போ பூஜை பண்ணித்து” என்றாள் அம்மா.

அறைக்கதவை திறந்த அப்பா ” என்ன இவ்வளவு லேட்” என்றவர், பாட்டியைப் பார்த்து , லேசான ஆச்சர்யத்துடனும், மகிழ்ச்சியுடனும் “வாங்கோ மாமி ! வாங்கோ” என்றார்.

“உக்காருங்கோ மாமி “அம்மா மர நாற்காலியைக் காண்பித்தாள்.

“ரோடில நடந்து வந்தது, காலை அலம்பிண்டு உட்கார்றேன்”

காலை, முகத்தை அலம்பிக்கொண்டு பாட்டி உட்கார்ந்தாள்.

“காபிக்கு தோஷமில்லைன்னா கொஞ்சம் சாப்பிடறேளா?’

“இல்லம்மா! வேண்டாம் ஆத்தில ரண்டாம் காபி குடிச்சுட்டு தான் கிளம்பினேன். கொஞ்சம் ஜலம் மட்டும் கொடு ” என்றாள் பாட்டி.

அம்மா குடிக்க ஜலம் கொடுத்து விட்டு, பெட்டியிலிருந்து புடவையை எடுத்து, டீபாயிலிருந்த டிரேயை துடைத்துவிட்டு வைத்தாள். அதன் மேல் ஒரு சீப்பு வாழைப்பழத்தையும், இருநூறு ரூபாயையும் வைத்துவிட்டு , பாட்டி கையில் குடுத்தாள். “குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்கோ மாமி! “ என்றபடி அப்பாவைப் பார்த்தாள்.

அப்பாவும் , அம்மாவும் நமஸ்காரம் பண்ணினார்கள்.

“தீர்க்க சுமங்கலியா, தீர்க்க ஆயுசோட இருங்கோ. உங்க பிள்ளையும் மாட்டுப் பொண்ணும் தீர்க்க ஆயுளோட திட ஆரோக்யத்தோட ஸந்தோஷமா குழந்தை குட்டிகளோட க்ஷேமமா இருப்பா! இந்த குழந்தைக்கும் நல்ல இடத்துல கல்யாணம் ஆகும்! எல்லாரும் ஷேமமா இருங்கோ!”

“ரொம்ப சந்தோஷம் மாமி! நான் கூப்பிட்ட உடனே மறுப்பு சொல்லாம வந்ததுக்கு தாங்க்ஸ் மாமி” என்றாள் அம்மா.

“உங்க பேர் என்ன மாமி?

“என் பேர் துர்க்கா”

அப்பா “தாயே ! தேவி பராசக்தி !” என்றபடி மாமி காலில் மறுபடி விழுந்தார். அம்மாவும் முகமும் கண்ணும் சிவந்தவளாய் மறுபடி நமஸ்கரித்தாள்.

வர்ஷா திகைத்து நின்றாள்.

பாட்டி சின்ன அதிர்ச்சியோடு “என்ன ? என்ன? ‘ என்றாள்.

“இல்லை! நாங்க பண்ணின பூஜைக்கு பேரு துர்கா பரமேஸ்வரி பூஜை!” என்றாள் அம்மா.

“பகவானே! இதுக்கு மேல என்ன சொல்றதுக்கு இருக்கு!. பகவானோட பரிபூர்ண அனுக்ரஹம் உங்களுக்கு இருக்கும்மா”

“வரட்டுமா? இப்பிடியே காய்கறி வாங்கிண்டு ஆத்துக்குப் போணும்” என்று கிளம்பினாள் பாட்டி.

கீழ் வரை போய் பாட்டியை வழியனுப்பினார்கள் அம்மாவும், வர்ஷாவும்.

பாட்டி இடது காலை தாங்கி தாங்கி நடந்தபடி மெதுவாகப் போனாள்.

“அம்மா! இந்த பக்கத்து டைலர் கிட்ட குடுத்த ப்ளவுஸை வாங்கிண்டு வரேன். வெயிட் பண்ணு” என்றாள் வர்ஷா.

அம்மா எதிர் சரகைப் பார்த்தபடி நின்றாள்.

குளக்கரையின் சுவரை ஒட்டி நின்று கொண்டிருந்த மராத்தி கட்டு கட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவைப் பார்த்து சிரித்தாள்.

நல்ல கத்திரிப்பூ கலர் உடலும் , மிளகாய்ப் பழ நிற பார்டருமாக புடவை. ஒல்லியாய் , உயரமாய், நல்ல நிறமாக தீர்க்கமான மூக்கோடும், சிரிக்கிற கண்களுமாக அழகாக இருந்தாள்.

தெரிந்த மாதிரி சிரிக்கிறாளே? இவள் யாரென்று தெரியவில்லையே என்று நினைப்பதற்குள். தள்ளு வண்டிகள், மாடுகள், வான்கள், டாக்ஸிகள் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு கோழிக்குஞ்சின் மெல்லிய இறகின் மென்மையான , லகுவான அசைவோடு மிதந்தாற்போல் நடையாக அம்மாவிடம் வந்தவள் மீண்டும் வரிசைப் பற்கள் ஒளி விட அழகாக சிரித்தாள்.

“ நல்ல கார்யம் பண்ணினேள்! எனக்கு சந்தோஷமா இருக்கு” என்றாள்.

அம்மாவுக்கு நாக்கு கல் மாதிரி கனத்து புரள மறுத்தது. என்ன சொல்கிறாள் இவள்?

ரொம்ப பிரயத்னம் செய்து கேட்டாள் “என்ன ?”

“ அந்தப் பாட்டிக்கு புடவை கொடுத்ததைச் சொல்றேன்” என்றாள்.

“என்ன? உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்க யாரு?” குரலே எழும்பாமல் கிசுகிசுப்பாக கேட்டள்.

“ நானா? நான் பார்வதி பாய்”

சிரித்தபடியே திரும்பி அதே காற்றில் மிதக்கிற மெல்லிய சிறகாய் நடந்து எதிர்சாரிக்குப் போனாள்.

“நல்ல வேளை. ப்ளவுஸைக் குடுத்துட்டான்” என்று வந்த வர்ஷா அம்மாவின் முகத்தைப் பார்த்து திடுக்கிட்டவளாக “என்னம்மா?’ என்றாள்.

“அங்க பாரு எதிர்சாரில, மராத்திகட்டு புடவையோட!”

வர்ஷா இதயம் மெஷின் கன் போல படபடத்தது.

“யாருமா அவ?” கேட்கும்போதே தெரிந்துவிட்டது.

“பார்வதி பாய்”

வர்ஷா “பார்வதி பாய்” என்று சத்தமாக கூவினாள்.

அவள் அங்கிருந்து திரும்பிப் பார்த்து இவளை அடையாளம் கண்டது போல சிரித்தாள்.

கத்தாமல் வாய்க்குள்ளாக கேட்டாலே அவளுக்கு கேட்கும் என்று தோன்றியது.

“நீங்கதானா அந்த சதி?” வாயசைப்பாகக் கேட்டாள்.

இவள் சொல்வதைக் கூர்ந்து கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். வர்ஷாவை இன்னுமொருமுறை பார்த்துவிட்டு, பின்கச்சை அசைய அசைய கோவிலுக்கு திரும்புகிற பாதையில் மிதந்து போனாள்.

11 Replies to “அணங்கு கொல்?”

  1. Interesting. The author is really courageous to tell us a story on a truly slippery terrain – linking a ‘potentially blind’ faith with history! Though the ending is expected & dramatic, I loved the painstaking efforts of the author to provide a ‘link’, crossing several generations of family tree, with the political & social history of that era. Interesting conversations between four characters take this complex story smoothly forward.

  2. Brilliant opening that has put full faith in the maturity and level of reader. But, by the same token, story ends right here-குளக்கரையின் சுவரை ஒட்டி நின்று கொண்டிருந்த மராத்தி கட்டு கட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவைப் பார்த்து சிரித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.