நான் சிவன் அல்லேன்
(ஷிவ் தோ நஹீன் ஹம் பிர்பி ஹம்னே துனியாபர்கே ஸஹர் பீயே
இருப்பினும்
குடம் குடமாய் விஷம் குடித்துள்ளேன்
வாய் முழுக்கக் கசந்திருக்கையில்
எப்படி இனிக்க இனிக்கப் பேச?
இத்னீ கடுவாத் ஹை மூவ்ன்மேன் கைசே மீட்டி பாத் கரேன்)
அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

துவக்கத்தில் கதை எழுதுவதில் விருப்பம் கொண்டிருந்த அவர் கவிதைகளின்பால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய இருபத்து மூன்றாவது வயதில் தன் கவிதைப் பயணத்தைத் துவங்கினார். 1960இல் இந்திரா காந்தி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த கவியரங்கில் அஜீஸ் பானு கவிதை வாசித்தார். அந்தக் கவிதை இந்திரா காந்தி உட்படப் பலராலும் பாராட்டப்பட்டது.
கவிஞராக அடையாளம் காணப்பட்டு பெரிய அவைகளில் அங்கீகாரம் கிடைத்திருந்த போதும் அவர் தன்னுடைய கவிதைத் தொகுதியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அஜீஸ் பானு ஆண்டு 2005இல் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய கவிதைத் தொகுப்பு ‘கூன்ச்’ (எதிரொலி) வெளியானது. பெண் கவிஞராக இதயத்தின் வலிகளைப் பாடிச் சென்ற கவிஞர்களின் வரிசையில் அஜீஸ் பானு தாராப் வஃபாவுக்கு முக்கியமான இடம் உண்டு.
1. யாருடைய அவையில் தீபமாக எரிந்தேனோ அவனைக் கொஞ்சமாவது கண்கலங்க வைத்தேன் புகையாகி (சராக் பன்கே ஜலீத்தீ மைன் ஜிஸ்கே மெஹ்ஃபில்மேன் உசே ருலாத்தோ கயா கம்சே கம் துவான் மேரா) 2. என் இறந்த காலச் சாம்பலை அதிகம் கிளறுகிறான் நான் அங்கு தட்டுப்பட்டால் அவன் விரல்கள் பொசுங்கிவிடும் (குரேத்தா ஹை பஹூத் ராக் மேரே மாஸீ கி மைன் சூக் ஜாவூன் தோ வோ உங்கிலியான் ஜலாலேகா)
தன்னுடைய ஓவியத்தை வரைய முற்படும் ஒவ்வொருவரும் நெற்றிச் சுருக்கங்களில் ஒரு வரியை வரைந்து செல்வதாக எழுதப்பட்டிருக்கும் கவிதையில், தனிமையையும், வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் சிறிய துயரத்தை உண்டாக்கிச் செல்லும் சித்தரிப்பும் அற்புதமாக்க் காட்டப்பட்டிருக்கும்.
என் ஓவியத்தை எழுத நினைத்த விரல்களெல்லாம் என் நெற்றியில் இன்னொரு சுருக்கத்தை எழுதிச் சென்றன (மேரி தஸ்வீர் பனானேகோ ஜோ ஹாத் உட்டா ஹை ஏக் ஷிகான் அவுர் மேரே மாத்தே பே பனா தேத்தா ஹை)
இலக்கில்லாமல் திரியும் மனநிலையைச் சொல்லும் தன்னுடைய ஒரு கஜலைத் தானே கண்ணனாகவும் ராதையாகவும் மாறி மாறி இலக்கின்றி திரிந்துப் பெண் துறவியாக இருப்பதைச் சொல்லும் வரிகளால் துவங்கியுள்ளார்.
கஜல்களில் துவக்க இரண்டடிகள் முக்கியமானவை. அந்த இரண்டு அடிகள்தான் குறிப்பிட்ட கஜலுக்கான சந்தத்தையும் (meter), இயைபையும் (rhyming words), கருப்பொருளையும் (theme, topic) கேட்பவர்க்கு அறியத் தருபவை.
சில கணங்களில் கோகுலனாக சில கணங்களில் ராதையாக சில கணங்களில் கண்ணனாக(1) மாறி மாறி நான் கற்பனையில் திரிகிறேன் பெண்துறவியாக (1) உருது மொழியில் ‘மோகன்’ என்னும் சொல் கண்ணனைக் குறிப்பிடவும் பயன்படுகிறது. (கபி கோகுல் கபி ராதா கபி மோகன் பன் கே மைன் கயாலோன்மே பட்டக்தீ ரஹீ ஜோகன் பன் கே)
இந்த கஜலுக்கு மட்டுமல்லாமல், அஹீஸ் பானுவின் பெரும்பாலான கவிதைகளுக்கும் முதலடியாக இவ்வரிகளைக் கொள்ளலாம். அந்த அளவுக்கு தனிமை அவருடைய கவிதைகளில் ஒலிக்கிறது.