யார் இக்கோலத்தில் இந்த மனிதனைப் படைத்தானோ
அவனே எனக்கும் இறைவனா?
எனக்கு ஏற்பில்லை
(ஜிஸ்னே இஸ் தௌர் கே இன்சான் கியே ஹைன் பைதா
ஹஃபீஸ் ஜலந்தரி
வஹீ மேரா பி குதா ஹோ முஜே மன்ஸூர் நஹீன்)
சூஃபியிசச் சிந்தனையில் ஆழ்ந்து இளம் வயது முதலே மார்க்கப் பற்றுள்ளவராக வளர்ந்தவர் ஹஃபீஸ் ஜலந்தரி. பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, இந்தியப் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுக்குச் சென்றவர். பாகிஸ்தானின் தேசிய கீதத்தை எழுதியவர்.

இளம் வயதில் ஏழ்மையின் காரணமாக ஹஃபீஸ் ஜலந்தரியால் பள்ளிப் படிப்பைத் தொடர இயலாமற் போகிறது. ஆனாலும், ஹஃபீசுக்கு இயல்பிலேயே கவிதைகளின் மேல் இருந்த ஆர்வத்தால், நபிகள் நாயகத்தின் புகழைப் பாடும் பாடல்களை மனப்பாடமாகப் பாடும் திறன் கொண்டவராக வளர்கிறார்.
மௌலானா நவாபுத்தீன் ராம்தாஸி என்னும் அறிஞரை ஹஃபீஸ் ஜலந்தரி சந்திக்கும்போது நபிகள் நாயகத்தின் புகழைப் பாடுகிறார். மௌலானா ஹஃபீஸின் படிப்பு குறித்துக் கேட்கையில், ஹஃபீஸ் பள்ளிப்படிப்பையும் முடிக்காதவர் என்று தெரியவருகிறது. பக்திப் பாடல்களின் மீது ஹஃபீஸ் ஜலந்தரிக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்த மௌலானா, அவரைத் தன் சீடனாக ஏற்றுக்கொள்கிறார்.
இஸ்லாமிய மார்க்க வழியில் மௌலானா நவாபுத்தீனின் சீடராகவும், இலக்கிய ஈடுபாட்டுக்கு மௌலானா குலாம் காதிர் பில்க்ராமி என்னும் அறிஞரின் அறிவுரைகளையும் ஏற்கிறார். குலாம் காதிரின் வழிகாட்டுதலில் அதிகமான நூல்களைக் கற்று மரபுப்பா எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்கிறார்.
இஸ்லாமிய மார்க்கப்பற்றுள்ளவராகவும், பாகிஸ்தான் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவருமான ஹஃபீஸ் ஜலந்தரியும் கிருஷ்ணபிரானைத் தன் கவிதையில் பாடியிருக்கிறார்.
காண்பவர்களே! இந்த வசீகரத்தைக் காணுங்கள் இந்த ரகசியத்தைப் புரிந்துகொள்ளுங்கள் இந்த ஓவியம் ஓர் உயர்ந்த சிந்தனை ஓர் ஒளியின் விளக்கம் இது கிருஷ்ணனின் ஓவியம்
நெருப்புதான் ஒளி, அது ஒளியென்பதால் நெருப்புக்கு அருகில் செல்ல இயலாது, நாம் ஒளியின் அருகில் இருக்கவேண்டுமா? தூரத்தில் இருக்கவேண்டுமா? ‘தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி’யாக உறவாட வேண்டுமா? இப்படியும் ஒலிக்கும் ஒரு கருத்தைத் தன் நீண்ட கவிதையில் இடையில் ஒருவரியில் சொல்லி, கிருஷ்ணபிரானுக்கு அருகில் தான் செல்வதா வேண்டாமா என்னும் குழப்ப நிலையை ஹஃபீஸ் ஜலந்தரி வெளிக்காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.
‘அருகிலா? தொலைவிலா? நெருப்பா? ஒளியா?’ (நஸ்தீக் ஹை யா தூர்? யஹ் நார் ஹை யா நூர்?) இவுவ்லகிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக இந்தப் புல்லாங்குழலோன் கோகுலத்துக் கண்ணன் – இப்படியாகக் கவிதை தொடர்கிறது. இக்கவிதையை ‘நக்ம்’ என்னும் யாப்பில் செய்யுள் வடிவில், மிக நீண்ட செய்யுளாக எழுதியுள்ளார். கிருஷ்ணபிரானை ‘இந்தியாவின் மன்னனே’ என அழைக்கும் ஒரு வரியும் செய்யுளில் இடம்பெற்றுள்ளது.
‘ஹிந்துஸ்தானத்தின் மன்னா மீண்டும் ஒருமுறை வா’ (ஏ ஹிந்த் கே ராஜா ஏக் பார் ஃபிர் ஆஜா) கிருஷ்ணனின் பெருமைகளைப் பேசும் கவிதை தொடர்கிறது, முத்தாய்ப்பாக, ‘நீ மட்டும் தனியாக வராதே திருவிழாக்களையும் உடன் அழைத்து வா கோபியர்களின் குறும்புகளையும்’ (ஆனா நா அகேலே ஹோன் சாத் வோ மேலே சாக்கியோன் கே ஜமீலே)
இக்கவிதையில் கிருஷ்ணனின் கருப்பு வண்ணத்தைக் கூறி அதனை பாரத நாட்டுக்கு ஒளியாக உருவகப்படுத்திருப்பது சிறப்பு.
வா என் இருள்வண்ணனே பாரத நாட்டின் ஒளிவண்ணனே (ஆஜா மேரே காலே பாரத் கே உஜாலே)