வாக்குமூலம் – அத்தியாயம் 4

அவன்

சாந்தி முப்பது நாப்பது வருஷத்துக்குப் பின்னாலேயே இருக்கா. 1970-க்கு முன்னே உள்ள நாவல், தொடர் கதை, கதைகள், சினிமாக்களையே நெனைச்சுக்கிட்டு இருக்கா. அதுக்கப்புறம் அவளோட ரசனை வளரவே இல்லை. அப்படியே நின்னு போச்சு. ஒரு காலத்திலே நானும் நா. பார்த்தசாரதி மணிவண்ணன்ங்கிற பேர்ல எழுதுன குறிஞ்சிமலரைப் படிச்சுட்டுக் கெறங்கிக் கெடந்தவன்தான். ஆனந்த விகடன்லே வந்த ஜெயகாந்தனோட முத்திரைக் கதைகள், சித்திரை மலர் – பொங்கல் மலர்களிலே வந்த ஜெயகாந்தனோட குறுநாவல்களை எல்லாம் படிச்சு சந்தோஷப்பட்டவன்தான். இப்போ என்னாலே குறிஞ்சிமலரோ, ஜெயகாந்தனோட பிரளயமோ, ரிஷிமூலமோ படிக்க முடியலை. போயும் போயும் இந்தக் கதைகளையா படிச்சு மயங்கிக் கிடந்தோம்னு ஆச்சரியமா இருக்கு. ஜெயகாந்தனோட கதைகளிலே சத்தம் அதிகமா இருக்கு. வளவளன்னு அவர் உரத்த குரல்லே கதை சொல்றார். கே. பாலசந்தருடைய சினிமாப் படங்களிலே எல்லா கதாபாத்திரமும் புத்திசாலித்தனமா பேசற மாதிரி ஜெயகாந்தனோட கதாபாத்திரமெல்லாம் ரொம்ப சமத்காரமா (ஜெயகாந்தனுக்குப் பிடித்தமான சொல் இது) சத்தம் போட்டு பேசுது, விவாதம் பண்ணுது.

ஆனா ஜானகிராமனோட சிறுகதைகள் அவர் நாவலை மாதிரி சலிச்சுப் போகலை. கலைஞன் மாசில்லாமணி இருபது இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ‘தி. ஜானகிராமன் மோகமுள்ளிலே இருந்து நளபாகம் வரை எல்லா நாவல்களிலேயும் ஆண் – பெண் பிறழ் உறவுகளைத்தானே திரும்பத் திரும்பச் சொல்லுதாரு’ என்று சொன்னார். ஆனா அவரோட கதை சொல்லும் நடை அபாரமாகத்தான் இருக்கு. அந்த நடை சலிப்புத் தரலை. ஜெயகாந்தனோட நடை அலுப்புத் தட்டுகிற மாதிரி ஜானகிராமனோட நடை அலுப்புத் தட்டலை.

ஒரு காலத்திலே ஆனந்த விகடன், கல்கி, குமுதமெல்லாம் வாராவாரம் படிக்கலைன்னா என்னவோ மாதிரியா இருக்கும். இப்போ இந்தப் பத்திரிகைகளைப் படிக்கவே முடியலை. முன்னே தாமரை, கணையாழி மாதிரி சிற்றிதழ்கள் கூடப் படிக்கப் பிடிச்சிருந்திச்சு. இப்போ வருகிற இலக்கியப் பத்திரிகைகளைக் ‘கடனே’ன்னுதான் படிக்க வேண்டியதிருக்கு. சினிமாவும் இப்படித்தான் ஆகிப்போச்சு. ஆரம்பத்திலே ஶ்ரீதரோட நெஞ்சில் ஓர் ஆலயம், அவளுக்கென்று ஒரு மனமெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்துது. போலீஸ்காரன் மகளும் அப்படித்தான். கே. பாலசந்தர் வந்த பிறகு, அவருடைய நீர்க்குமிழி, நாணல், மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம் இதெல்லாம் பார்த்துப் புல்லரிச்சுப் போனேன். நாளாக நாளாக ஶ்ரீதர் மனசை விட்டுத் தூரப் போனார். பிறகு கே.பி. படங்களைப் பார்க்கிற ஆர்வமும் குறைஞ்சு போச்சு.

இப்போ டி.வி., யூ டியூப் எல்லாம் வந்த பிறகு அந்தப் படங்கள், அந்தக் காலத்துல ரசித்த பாடல்களை எல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்து ‘போர்’ அடிச்சுப் போச்சு. ஒரு காலத்திலே ரொம்பப் பிரமாதமாகத் தோன்றின ஜெர்ரி லூயீஸ் நடிச்ச படங்கள், ஸீன் கானரி நடிச்ச 007 படங்கள், பென்ஹர், ஆப்ஸன்ட் மைன்டட் ப்ரொபஸர், ஹடாரி போன்ற படங்கள் மேலே இருந்த ஈர்ப்பு எல்லாம் காணாமல் போயிட்டுது. ஆனால் ஹிட்ச்காக்கோட சில படங்கள் மேலே மட்டும் இன்னமும் மதிப்பு இருக்கு. பிலிம் சொஸைட்டிகள், அமெரிக்க, ப்ரெஞ்ச், ஜெர்மானியத் தூதரகங்களில் பார்த்து வியந்த கலைப் படங்கள் மேலே கூட, பல படங்கள் மேலே இருந்த மதிப்பு, மரியாதை எல்லாம் குலைஞ்சு போயிட்டுது. பெர்க்மானோட ‘பெர்ஸோனா’ யூ டியூபிலே சீரழியுது. ட்ருபாவோட 400 ப்ளோஸ் இப்படி எந்தக் கலைப் படம் வேண்டுமானாலும் யூ டியூப்பிலே நாம நெனைச்ச நேரத்திலே பார்க்கலாம் என்று ஆனபிறகு அந்தப் படங்களோட அருமை, தேடித் தேடிப் போய் பார்த்த அபூர்வம் எல்லாம் காணாமல் போயிட்டுது.

எல்லாமே இப்படித்தான். கிடைக்க அபூர்வமா இருந்தாத்தான் அது மேலே மதிப்பு இருக்கும். காலுக்குள்ளேயும் கைக்குள்ளேயும் கெடந்து சீரழியிதுன்னா அது சர்வ சாதாரணமாப் போயிருது. சின்ன வயசிலே தீபாவளி, பொங்கல் இந்த மாதிரி விசேஷங்களுக்குப் புதுச் சட்டை எடுத்துக் குடுப்பாங்க. அந்தத் துணிமணிகளைப் போடும் போதெல்லாம் சந்தோஷமா இருக்கும். இதுவே ஏகப்பட்ட துணிமணிகள் இருந்தா எது மேலேயும் பெரிய மவுசு ஏற்படாது.

மாற்றம் ஒன்றே மாற்றமில்லாததுன்னு இப்போ சொல்றாங்க. இது நெசந்தான். கிரகங்கள் பால்வீதியிலே உருண்டு உருண்டு எங்கேயோ போய்க்கிட்டிருக்க மாதிரிதான் நம்ம மனசு, ரசனை, ருசி எல்லாம் கூட மாறித்தான் போயிருது. இது ஏன்னு தெரியலை. இது ஏதாவது பிரபஞ்ச விதியோ என்னவோ? நான் சின்னப் பிள்ளையிலே நடந்த தெருக்கள்லே இப்போ நடந்தா அதெல்லாம் ரொம்பச் சிறுசான மாதிரியில்லா இருக்குது. அதே தெரு, அதே அகலமும், நீளமுமான ரோடுதான். ஆனா இதுவே ஒவ்வொரு வயசிலே, ஒவ்வொரு காலத்திலே சிறுசா எப்பிடிப் போச்சுன்னு தெரியலை. இது என்ன மயக்கம்? மன மயக்கமால்ல இருக்கு. அதே நாவல், அதே சினிமா பிடிக்காமப் போற மாயத்தை என்ன சொல்ல? மனசு, ரசனை எப்பிடி மாறிச்சு? யாரு மாத்தினது? வளர்-சிதை மாற்றம் எல்லாம் உடம்புக்கு மட்டுமில்லை, மனசுக்கும் நடக்குது. எல்லாம் மாயமா இல்லே இருக்கு.

சிலரைப் பிடிக்குது. சிலரைப் பிடிக்கவே பிடிக்கலை. சில முகம் ரொம்ப அழகா இருக்குது. சில முகம் அழகு குறைச்சலா இருக்குது. எல்லோருமே ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகான மொகத்தோட பொறக்க முடியுமா? காடு, நதி எல்லாம் மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதை எல்லாம் பொழுதெல்லாம் பார்த்துக்கிட்டே இருந்தா, பிடிக்காமல் போகாவிட்டாலும், அது மேலே ஏற்பட்ட பரவசம், ஆச்சரியம், சந்தோஷம் இதெல்லாம் இல்லாமல் போயிரலாம். காட்டிலேயே, மலையிலேயே வாழுகிற பழங்குடி மக்களுக்கு காடு, மலை, ஆறு இதையெல்லாம் பார்த்தா பரவசமாகவா இருக்கும்? அதெல்லாம் அவங்களுக்கு அபூர்வமானது இல்லையே. தினசரி, நாள் கணக்கா, வார-மாத-வருஷக் கணக்கா புழங்குகிற மலையும், காடும், ஆறும் அவங்களுக்கு கிளர்ச்சியைத் தரும்னு சொல்ல முடியுமா?

புதுமைப்பித்தனோட ஜிப்பா போட்ட படம் மூக்காண்டி மாமாவைத்தான் ஞாபகப் படுத்திச்சு. மூக்காண்டி மாமா எப்போதும் ஜிப்பாதான் போடுவா. எழுத்தாளர்ன்னா ஜிப்பாதான் போடணுமோ என்னமோ? ஆனா யார் ஜிப்பா போட்டாலும் அழகாத்தான் இருக்கு. அதுவும் பெண்கள் ஜிப்பா போட்டா ரொம்ப நல்லா இருக்கு. பெண்கள் முழுக்கை சட்டை போட்டு அதைக் கொஞ்சம் மடிச்சு விட்டாலே அழகாத்தான் இருக்கும். ஆம்பிள்ளைகள் போடுகிற சட்டையை, வேட்டியை பெண்கள் அணிந்தாலே ஒரு தனி அழகு வந்திருது. ஆனால் பெண்கள் அணிகிற எந்த உடைகளை ஆண்கள் அணிந்தாலும் பார்க்கச் சகிக்காது. ஏனென்று தெரியவில்லை. இதுவொரு மாயம்தான்.

எதையும் நிச்சயமா, உறுதியாச் சொல்ல முடியாதுன்னு ஒரோரு சமயம் தோணுது. ஒரு நேரம் இந்த உலகத்தைப் படைச்ச சக்தின்னு ஒண்ணு, பாரதி சொல்ற மாதிரி, பார்க்க முடியாத பராசக்தி இருக்குதுன்னு தோணும். ஆனால், இதை விஞ்ஞானம் ஏத்துக்கிடாது. வெறும் சூன்யத்திலே இருந்து ஸ்தூலமான ஒரு அணு உண்டாக முடியும்னு சொல்றாங்க. பக்தர்களுக்கு சாமி கும்பிடும்போது, படிச்சவங்களுக்கு இதெல்லாம் ஞாபகத்துக்கு வராமலா இருக்கும்? ஹிந்து மதத்திலேதான் எத்தனை சாமிகள், குருமார்கள், சித்த புருஷர்கள்… இயேசு, ஆப்ரஹாம் எல்லாம் சித்த புருஷர்கள்தானே? நபிகள் நாயகம் கூட தலைமை வகிச்ச சித்த புருஷர்ன்னுதான் தோணுது. இந்த மாதிரி லௌகீகமா, விஞ்ஞானம் அது இதுன்னு யோசிச்சா பக்தி, கடவுள் நம்பிக்கை, பாரதி நெனச்ச மாதிரி பராசக்தி கூட இல்லாமப் போயிரும். பாரதிக்கும் கடவுளைப் பற்றிய குழப்பம் எல்லாம் வந்து போயிருக்குமோ என்னவோ?

சம்பந்தம் சொல்றான், பாரதி பராசக்தின்னு சொன்னது, சக்தி வழிபாட்டை ஒட்டித்தான்னு சொல்றான். காளியைத்தான் பராசக்திங்கிறார் அப்படிங்கிறான் சம்பந்தம். நான் பாதி நாஸ்திகன், பாதி ஆஸ்திகன். ரெண்டுங் கெட்டான். ஒரோரு சமயம் கடவுள் இல்லைன்னு தோணும். ஒரு சமயம், இந்தப் பிரபஞ்சத்தை இத்தனை கட்டுக்கோப்பா, இத்தனை வழிமுறைகளோட உருவாக்கின மாபெரும் சக்தி ஒண்ணு இருக்குன்னு தோணும். ஆனா அது சிவனா, பெருமாளா, இயேசு சொல்கிற தகப்பனான்னு அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதெல்லாம் மத ஸ்தாபனங்கள் உண்டாக்கின கடவுள்கள்ன்னு முடிவு பண்ணிட்டேன். இதிலே சந்தேகம் வராது.

இந்த மாதிரி என்னை மாதிரி சந்தேகப் பேர்வழியா யாரும் இருக்கக் கூடாதுன்னுதான் எல்லா மதமும் சரணாகதியை வலியுறுத்துது. நம்பிக்கையைப் பற்றிப் பெரிசாச் சொல்லுது.

கண்ணை மூடிக்கிட்டு நம்பிட்டால் கடவுள், படைத்தவன் இருக்கானா இல்லையான்னு சந்தேகமெல்லாம் வராதுல்லா? நம்பிக்கையில் தொய்வு ஏற்படாமல் இருக்கத்தான் பிரார்த்தனை, சடங்குகளை வரிஞ்சு வரிஞ்சு மனுஷன் மேலே கட்டியிருக்காங்க. இப்படித் திட்டம் போட்டுச் செய்யலைன்னாலும் காலப் போக்கிலே இதெல்லாம் உண்டாகியிருக்கணும்.

பழனி, கோவிலுக்குப் போனான்னா சாமி முன்னாலே நின்னு ஏதேதோ பேசுதான். அவன் போகாத கோயில் இல்லே. சாந்தியை எல்லாம் விட பழனிக்குத்தான் பக்தி ஜாஸ்தி. உச்சினி மாகாளி, முத்தாரம்மன், சாஸ்தா, சிவன், பெருமாள் எந்தத் தெய்வமும் அவனுக்கு விலக்கில்லே. திருப்பதிக்குப் பல தடவை போயிருக்கான். திருச்செந்தூருக்கும் அடிக்கடி போவான். பங்குனி உத்திரத்துக்கு வருஷந்தோறும் சாத்தாங் கோயிலுக்குப் போயிருவான். முழுமையான பக்தன். ஆனால், பழனி மாதிரி நம்முடைய அன்றாட, லௌகீக வாழ்வை கடவுள்தான் வழி நடத்துகிறார்னு நம்புகிறவங்கதான் ஜாஸ்தி. என்னை மாதிரி ரெண்டுங் கெட்டான்களா இருக்கிறதுக்கு என்ன காரணம்னு ஜோஸ்யத்திலே ஏதாவது பதில் இருக்கலாம். இந்தப் புத்திக் குழப்பத்துக்கு கிரக அமைப்புகள் காரணமோ, என்னமோ? சொல்லப் போனால் ஜோஸ்யத்திலேயும் முழு நம்பிக்கை கிடையாது. என்னத்தைச் சொல்ல?

குருசாமி ஒரு அறிவுஜீவி. எதையும் அலசி ஆராஞ்சு எழுதுகிறவரு. ஆன்மீகம் முதல் அரசியல் வரை சகலத்திலும் புகுந்து வெளிவரக் கூடிய ஆளு. பல மடாதிபதிகளையும் தெரியும், அரசியல்வாதிகளையும் தெரியும். தீவிரமான தேச பக்தர். தமிழ், ஆங்கிலம் ரெண்டிலேயும் நல்ல பாண்டித்யம். இவருக்குன்னு ஏராளமான வாசகர்கள் இருக்கிறாங்க. காலையிலே ரொம்ப நேரம் பூஜை பண்ணுவார். பூஜை முடிக்காமே சாப்பிட மாட்டார். விரதங்களை எல்லாம் ஒழுங்கா அனுஷ்டிப்பார். என்னாலே ஒரு பத்து நிமிஷம் கூட பசியோட இருக்க முடியாது.

“டேய் ராமச்சந்திரா… நீ… நீயாவே இருடா… ஏன் குருசாமிய, பழனிய நெனச்சு, அவங்கள மாதிரி இருக்க முடியலியேன்னு வருத்தப்படறே?…” என்கிறார் தஞ்சை பிரகாஷ். தஞ்சை பிரகாஷ் நாலைந்து மொழி தெரிஞ்சவர். இலக்கியத்திலே, அவர் சொல்ற மாதிரிச் சொல்லணும்னா, அபாரமான ஈடுபாடு. மௌனியோட சிறுகதைகளை அப்படியே சொல்லுவார்.

திடீர்ன்னு ராஜமுந்திரியிலே இருந்து லெட்டர் எழுதுவார். வெங்காய வியாபாரத்துக்காக வந்தேன்னு சொல்வார். கோதாவரி ஆற்றை அப்படி வர்ணிச்சு எழுதுவார். அவராலே எப்படி வியாபாரம் பண்ண முடியும்ன்னு தோணும். முடியலை. எவ்வளவு பணம் நஷ்டமாச்சுன்னு கேட்டேன். “விட்டுத்தள்ளு டா”ன்னு ஒரே வரியிலே சொல்லிட்டார். இலக்கிய நூல்களை பப்ளிஷ் பண்ணனும்னு பதிப்பகம் ஆரம்பிச்சார். அதுவும் சரியா வரலை. பிரகாஷை நினைக்கும் போது மனசுக்கு ரொம்பச் சங்கடமா இருக்கும்.

க.நா.சு. சென்னயிலே 1980-களின் பிற்பகுதியிலே டி.எஸ்.வி. கோவில் தெருவிலே குடியிருந்தபோது, அவர் கிட்டே ‘பித்தப் பூ’ன்னு ஒரு நாவல் இருக்குன்னு கேள்விப்பட்டு, அதை பப்ளிஷ் பண்ண தஞ்சாவூரிலே இருந்து சென்னைக்கு வந்தார் பிரகாஷ். நானும் பிரகாஷ் கூட க.நா.சு. வீட்டுக்குப் போயிருந்தேன். க.நா.சு.கிட்டே அந்த நாவலை வாங்கிக்கிட்டுப் போய் அதைப் புஸ்தகமாகப் போட்டார். க.நா.சு. யார்ன்னு அவர் குடியிருந்த வீட்டுக்காரருக்குக் கூட தெரியாது. சாண்டில்யன்னா எல்லாருக்கும் தெரியும். அவரோட நாவல்கள் இன்னைக்கும் ஆயிரக்கணக்கிலே வித்துக்கிட்டிருக்கு.

புதுப் புஸ்தகத்தைத் திறந்து முகர்ந்து பார்த்தால் அந்தத் தாள், மையோட வாசனை எல்லாம் திரும்பத் திரும்ப முகர்ந்து பார்க்கத் தோணும். சாண்டில்யனோட யவன ராணியை வாங்கி முகர்ந்து பார்த்தாலும் இந்த வாசனை வரும். க.நா.சு.வோட பித்தப் பூ நாவலை முகர்ந்து பார்த்தாலும் அந்த வாசனை வரும். ஆனா யவன ராணியோட விற்பனைக்கும், பித்தப் பூவோட விற்பனைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. கனகாம்பரம், முல்லை இதெல்லாம் தாழம்பூ, மருக்கொழுந்து மாதிரி வருமா? நமக்கு எது வேணுமோ அதை எடுத்துக்கிட வேண்டியதுதான். அலோபதி, ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, மலர் மருத்துவம்னு எத்தனையோ வகை மருத்துவம் இருக்குது. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதை எடுத்துக்கிட வேண்டியதுதான். உலகத்திலேயே எல்லாமே பன்முகத் தன்மையா, பல விதமா இருக்கிறதுதான். நாமதான் தேர்ந்தெடுக்கணும். சாண்டில்யனா, க.நா.சு.வா, முல்லையா, தாழம்பூவா, அலோபதியா, ஆயுர்வேதமான்னு நாமதான் தேர்ந்தெடுக்கணும். பல வகைகளில் எதைத் தேர்ந்தெடுக்கிறதுன்னு குழப்பம் வந்தாலும் ஏதோ ஒண்ணைத் தேர்ந்தெடுத்துத் தானே ஆகணும்? வசதி இருந்தால் கூட ரெண்டு, மூணு கூட தேர்ந்தெடுக்கலாம். தப்பு ஒண்ணும் இல்லை.

(அளிக்கப்படும்)

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 3வாக்குமூலம் – அத்தியாயம் 5 >>

One Reply to “வாக்குமூலம் – அத்தியாயம் 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.