இரா. முருகனின் நளபாகம்

This entry is part 44 of 48 in the series நூறு நூல்கள்

“கடவுள் உணவைப் படைத்தார், சாத்தானோ சமையல்காரர்களை”

யூலிஸீஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ்

மிளகு என்ற புனைவைப் பற்றிப் பேசும்முன் அதன் வரலாற்றுப் பின்புலத் தரவுகளைச் சற்று பேசிவிடுவோம். பெப்பர் நீக்ரம் (Piper nigrum) என்ற இந்நாவலின் ஆதாரத் தாவரம் வெப்ப மண்டலத்தில் அடரும் ஓர் படர்கொடி. மரங்களின் மீது கட்டுக்கடங்காது படர அனுமதிக்கப்படுகையில் ஆறு மீட்டர் உயரம் வரையிலும் எழும்ப வல்லது. ஆனால் வேலிப்பந்தல் மீது படரும் அதன் கொல்லைப்படுத்தப்பட்ட வடிவத்தில் இதுபோன்ற நிர்வகிக்க முடியாத உயரங்களை எட்ட அது அனுமதிக்கப்படுவதில்லை. பிற மரங்கள் மீது அது படர்ந்திருக்கும் காட்சியைச் சங்க இலக்கியம் பல பாடல்களில் சித்தரிக்கின்றது: பைங்கறி நிவந்த பலவின் நீழல், கறிவளர் சாந்தம், கறி வளர் அடுக்கம்… போன்ற வரிகளில்.

சமஸ்கிருத உரை ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியத் துணைக் கண்டத்தில் அதன் பயன்பாடு மற்ற எந்த தாளிப்பு பொருளையோ மசாலாவையோ காட்டிலும் பின்னோக்கிச் செல்கிறது. மேற்கத்திய சொற்பிறப்பியல் அடிப்படையில் பார்த்தால்-கிரேக்க பெப்பரி, லத்தீன் பைபர், இத்தாலிய பெப்பே, ஜெர்மன் ஃபெஃபர் ஆங்கில பெப்பர், இவை அனைத்துமே கங்கை பள்ளத்தாக்கில் கிழக்கு வம்சாவளியைச் சேர்ந்த பிப்பலி என்ற சொல்லையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. நாம்தான் அதை முதலில் ஏற்றுமதி செய்தோம் என்பதில் எந்த சந்தேகமில்லை.

ஐரோப்பாவில் அதன் முதல் பதிவு செய்யப்பட்ட பயன்பாடு ஏறக்குறைய கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரையிலும் நம்மைப் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அலெக்ஸாண்டிரியாவில் மார்கஸ் அவுரேலியஸ் ஆட்சியின் போதும், அதைத் தொடர்ந்து ரோமானிய மற்றும் பைசண்டைன் பேரரசர்களின் ஆட்சிகளிலும், கிட்டத்தட்ட இஸ்லாமியர்களின் படையெடுப்பு வரையிலும் மிகையான விகிதத்தில் (25%) ஒரு இந்தியப் பொருளாக அதன்மீது வரி விதிக்கப்பட்டற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக அது ஒரு விலையுயர்ந்த தயாரிப்பாக இருந்தது என்பது திண்ணம். (மிளகு போல் விலை உயர்ந்தது என்று பொருட்படும் cher comme poivre என்ற பிரெஞ்சு சொலவடையும், பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற அகாநானூற்று வரியும் சுட்டுவது போல்…) அதன் வரலாற்று முக்கியத்துவம் அதன் அறுசுவை உணவியற் பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டது – விசுவாசத்தை வலியிறுத்தும் காணிக்கை, வாடகை, வரதட்சணை, பிணைப் பணம், அபராதம், ஏன் தேவாலயத்தால் விதிக்கப்படும் வரிகளாகவும் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மேற்குக் கடற்கரை மக்களால் ஏராளமாக (மே, ஜூன், ஜூலை மாதங்களில் சேகரிக்கப்பட்டு) பயிரிடப்பட்டதாக மார்கோ போலோ குறிப்பிடுகிறார். பதினைந்தாம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட மார்கோ போலோ புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியொன்றில் கொயிலான் ராஜ்ஜியத்தில் (இன்றைய மலபார் கடற்கரையில் உள்ள கொல்லம்) மிளகு அறுவடை செய்யப்படுவதைக் காட்சிப்படுத்தும் படமுள்ளது. இந்தியாவிலிருந்து நன்நம்பிக்கை முனை வழியே ஐரோப்பாவைச் சென்றடைந்த அதன் வர்த்தகப் பாதை பெரும்பாலும் போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்களின் ஏகபோகமாக இருந்தது. மிளகின் சீன நுகர்வு ஐரோப்பாவைவிட அதிகமாக வளர்ந்ததால், மிளகு வர்த்தகத்தின் மையம் ஜாவாவின் வடக்குக் கடற்கரைக்கு மாறியது (பாண்டம் துறைமுகத்திற்கு). மிளகின் வரலாற்று முக்கியத்தை உணர்த்த இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன்.

நாவற்களம், அக்களத்தின் உயிர்நாடி இவற்றைப் பொறுத்தவரையில் – உத்தரகர்நாடகாவில் ஷராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கெருஸொப்பா என்ற சிறு நகரமும் அதன் புகழ்பெற்ற ராணி சென்னபைராதேவியும் – வரலாறு ஒப்பீட்டளவில் சுருக்கமாக இருந்தாலும் தெளிவாகவே இருக்கிறது. இந்நகரம் சால்வா மன்னர்களின் தலைநகரமாக இருந்தது. ஹொன்னாவர் அதன் உள்நாட்டுத் துறைமுகமாகவும், பட்கல் அதன் முக்கியமான சர்வதேச துறைமுகமாகவும் இருந்தன. ராணி எலிசபெத்தின் சமகாலத்தவரான ரெய்னா-டி-பிமெண்டா (Reina de Pimenta) அல்லது மிளகு ராணி என்று அன்புடன் அழைக்கப்பட்ட சென்னா, ஹைவா, துளுவா மற்றும் கொங்கன் பகுதிகளை ஆட்சி செய்தார். ஏற்கனவே வீழ்ச்சியில் இருந்த விஜயநகரப் பேரரசிற்கு இது போன்ற குறுநில ராஜ்யங்கள் கப்பம் செலுத்திய காலம். மிளகு நாடும் அதன் செழிப்பான துறைமுகங்களும் எப்போதுமே அதற்கும் பிற விஜயநகர சாம்ராஜ்யங்கள் மற்றும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்பட காரணமாக இருந்தன. சொல்லப்போனால் போர்த்துகீசியர்களை விரட்டி அவர் ஈட்டிய துணிகரமான வெற்றியே, இந்திய வரலாற்றின் மிக நீண்ட பெண்ணாட்சி என்ற பெருமை வகிக்கும் அவரது 54 ஆண்டுகால ஆட்சியின் அடிக்கல்லாக அமைந்தது. சமணராகவே இருந்தாலும் அனைத்து மதப்பிரிவுகளையும் பரிபாலிக்கும் கருணைமிக்க புரவலராகவும் அவர் விளங்கினார். பல கால்வாய்கள், ரகசியத் தாழ்வாரங்கள் மற்றும் அகழிகளால் நிரம்பிய, கர்நாடகாவின் கும்தா நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பழம்பெருமை மிக்க மிர்ஜான் கோட்டையும், நான்கு வாசல்களைக் கொண்ட புகழ்பெற்ற சமண ஆலயமான சதுர்முக பஸதியும் அவரது கட்டிடக்கலை சாதனைகளில் முக்கியமானவை. கேளடி நாயக்கர், பில்கி தலைவர்களின் நீண்ட கால சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டு, தனது அறுபதுகளின் பிற்பகுதியில் கெளடியில் வீட்டுக்கைதியாக அவர் மரித்தார்.

முருகன் சொற்பமான இவ்வரலாற்றுத் தரவுகளைச் சாரக்கட்டாகப் பயன்படுத்தி நானூறு ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும் இரு நூற்றாண்டு முடிவுகளில் (பதினாறாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி) அரசியல், ராஜதந்திரம், வஞ்சகம், போர், பொது மக்கட்கருத்துத் திரிபு, தீவிரவாதம், மதச்சார்பு, நட்பு போன்றவற்றை பாவிழையாகவும் உணவையும் காமத்தையும் அவற்றிற்கு மேலும் கீழும் ஓடும் ஊடு நூலாகவும் பின்னிப் பிணைத்து ஒரு மாபெரும் கதையாதலை நெய்கிறார். பதினாறாம் நூற்றண்டிலிருந்து திரண்டு வரும் இக்கதையாடல்கள் பரமன் என்ற பாத்திரத்தின் வழியே இருபதாம் நூற்றாண்டிறுதியில சன்னமாக எதிரொலித்து புது அர்த்தங்கள் கொள்கின்றன. பழங்காலத்து மிளகு வர்த்தகம் விருப்ப உரிமை ஒப்பந்தங்களில் புதுப்பிக்கப்படுவது போல்.

நானூறாண்டுகள் அகலமான காலத்தாலானதொரு படுகுழியின் மீது முன்னும் பின்னுமாக நிகழும் ஒரு கம்பி நடனமாக நாவல் விரிகிறது. காலம் என்ற நான்காவது பரிமாணத்தில் நழுவும் பரமன் என்ற பாத்திரம் நிகழ்காலத்திலிருந்து முப்பது ஆண்டுத் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கணத்திலிருந்து நானூறாண்டுகள் தொலைவிலிருக்கும் ஒரு கணத்திற்கு பயணித்து ஷராவதி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஹொன்னாவர் என்ற நகரத்தைச் சென்றடைந்து அங்கு நிகழும் அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறது. அங்கிருந்து மீண்டு நிகழுக்கு அவர் திரும்புகையில் அவ்விரு காலங்களையும் (நாவலின் இரு பகுதிகளையும்) இணைக்கும் ஒரு பாலமாகவும் அவர் அமைகிறார். கெருஸொப்பா, ஹொன்னாவர், மிர்ஜான் கோட்டை அத்தியாயங்களின் மையக் கதாபாத்திரம் மிளகு ராணி எனப்படும் சென்னாதேவியே என்பது வெளிப்படை. பதினைந்து வயதில் அரியணை ஏறி, திருமணமே செய்து கொள்ளாது (பதின் பருவத்தில் வரதன் என்ற பயிற்றுவிப்பாளருடன் ஏற்பட்ட விடலைக் காதலை அசைபோட்டபடி, போரில் அவன் மறைந்ததை நொந்தபடி) தனித்து அரசாளுகிறாள், மருத்துவர் பைத்தியநாத், பணிப்பெண் மிங்கு, அவர்களைக் காட்டிலும் முக்கியமானவர்களான வளர்ப்பு மகன் நேமிநாதன், அண்டை நாடான உள்ளாலை ஆட்சி செய்யும் பால்ய தோழியான அபயராணி என்ற அப்பக்கா, போர்த்துகீசிய பிரதிநிதி இம்மானுவேல் பெட்ரோ ஆகியொருடன் அவள் கொண்டிருக்கும் உறவுகளின் வழியே சென்னாவின் காத்திரமான ஆளுமையை நாவல் வார்த்தெடுக்கிறது. அவர்களுடன் தனித்தனியாக (சிலசமயங்களில் சேர்ந்தும்) நிகழும் சந்திப்புகளே நாவலின் கணிசமான பகுதி என்பதால் இவையே வாசகனை அதன் மையப்பாத்திரத்துடன் உணர்வுரீதியாக பிணைப்பவையாகவும் அமைகின்றன. முதற்பாதியின் எழுச்சியில் உவகையும் பிற்பாதியின் வீழ்ச்சியில் துயரையும் வாசகன் தன்னில் உணரும் அளவிற்கு அவளுடன் அவன் புரிந்துணர்வால் பிணைக்கப்பட்டிருக்கிறான்.

நாவலின் நவீன பாகங்களில் (அவற்றை அப்படிக் கூறமுடியுமாயின்) அவளைப் போலொரு ஒருங்கிணைக்கும் மையப் பாத்திரம் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக முருகன் பல குடும்பங்களாக விரியும் ஒரு சுவாரஸ்யமான வலையைப் பின்னுகிறார் (மிளகு வர்த்தகர் திலீப் ராவ்ஜி, அவரது தந்தையான மேலே குறிப்பிட்ட காலப்பயணி பரமன், செயலர் சங்கரன், உணவக நடத்துனர் சாரதா தெரிஸா, இவர்களின் இல்லத்துணைவர்கள் (தற்கால/மாஜி), காதலர்கள், குழந்தைகள் — என்று கதைமாந்தர்களை அதிகரித்தபடி நாவலை அவர் முன்னெடுத்துச் செல்கிறார். இந்நாவலில் திருமணத்திற்குப் புறம்பான உடலுறவே சாமான்யம். ஒரு கட்டத்திற்குப் பின் யார் யாருடன் படுத்தெழுந்தார்கள் என்பதை நினைவுகூர்வது கடினமாகிவிடுகிறது. மிளகின் வர்த்தக புலனின்பக் கூறுகள் இரண்டுமே நாவலின் பதினாறாம்/ பதினேழாம் நூற்றாண்டுப் பகுதிகளின் உந்துவிசைகள் என்று கருதினால் அதன் புலனின்பக் கூறுகளே இருபதாம் நூற்றாண்டுப் பகுதிகளில் விரவிக் கிடக்கின்றன. மிளகு புலனின்பத்தில் களிக்கும் ஓர் நாவல். உணவு, காமம் வழியே கிட்டும் ஆனந்தத்தில் லயிக்காத அத்தியாயங்களே இல்லை என்று கூறுமளவிற்கும். “உண்டு வெளியேற்றி உடலுறவில் களித்திருப்பதற்காகவே வாழ்கிறோம்” என்பதே அதன் இலக்குவாசகம் என்று எண்ணும் அளவிற்கும். அன்றாட அடிப்படைச் செயல்களின் பருண்மையில் பொதிந்திருக்கும் இன்பத்தை இவ்வளவு லாகவமான வாஞ்சையுடன் அது முன்வைப்பதால் அவ்விலக்கு வாசகத்தைச் சந்தேகித்தாலும் அதுனடன் உடன்போகவே நாம் விழைகிறோம்.

கதையைச் சுவரஸ்யமாகக் கூற முனையும் இலக்கியவாதிகள் என்ற வேகமாக மறைந்துவரும் இனத்தின் கடைசிச் சில உயிர்களில் முருகனும் ஒருவராக இருக்கலாம். அட்டகாசமான கதையையும், படிக்க எளிமையான நடையையும் ரசிப்பது ஏதோ இலக்கியப் பாவம் என்று சலிப்பளிக்கும் இலக்கியத் தூய்மைவாதிகள் நம்மெல்லோரையுமே நம்பவைத்துவிட்டார்கள். நிச்சயமாக, பொன்னியின் செல்வன் போன்ற படைப்புகளின் நீடித்த புகழ், அவற்றின் முதல் வெளியீட்டிற்கு கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற ஆரவாரமான வலிந்து முன்வைக்கப்படும் கருத்துக்களை நையாண்டி செய்வதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம், “வெச்சு செஞ்சிடுவாங்க” என்றே நம்பினாலும் இக்கூற்றை இங்கே முன்வைக்கிறேன்: கல்கியின் சிறப்பான அம்சங்களை இருபத்தோராம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்திற்குள் முருகன் மிகச் சிறப்பாகவே எடுத்துச் சென்றிருக்கிறார். இதை அவர் ஒரு புகழாரமாகவே எடுத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். ஆனால் சுவாரஸ்யமாக கதை சொல்லும் உத்தியை மட்டும் அவர் அம்முன்னோடிப் படைப்பிலிருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. வீரபாண்டியனை சிரச்சேதம் செய்ததற்காக சோழ வம்சத்தையே நந்தினி சூழ்ச்சி செய்து அழிக்க முற்படுவது பொன்னியின் செல்வனின் மையச்சரடுகளில் ஒன்று. அவள் மிளகின் மிட்டாய்க் கடைக்காரியும் வசியம் செய்து கழுத்தறுக்கும் ஃபெம் ஃபடால் ஆன (femme fatale) ரோகிணியால் பிரதிபலிக்கப்படுகிறாள்; சென்னா ஊமத்தைப் போரை வெல்வதற்காக வனைந்த சூழ்ச்சியில் ரோகிணியின் கணவன் மரிக்கையில் அவள் சென்னாவின் வம்சத்தைப் பூண்டோடு அழிக்கச் சபதமிடுகிறாள். .

நந்தினி பழுவேட்டரையரை வசியம் செய்து பாண்டியநாட்டு ஆபத்துதவிகளுடன் கூட்டுசேர்ந்து சதி செய்ததைப் போல் ரோகிணியும் சென்னாவின் மகன் நேமிநாதனை மயக்கி அவனைப் போர்த்துகீய மறைகுழுவுடன் தொடுத்து சென்னாவின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டுகிறாள். இவை அனைத்துமே மிகைவாசிப்பின் மிகையார்வத்தால் வலிந்து கண்டெடுக்கப்பட்ட ஒற்றுமைகளாவே இருக்கலாம். ஆனால் இந்நாவலை வாசிக்கையில் கிட்டிய இன்பங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது என்பதையும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன். நாவலின் பதினாறாம் நூற்றாண்டுப் பகுதியில் ரோகிணி நாவலின் கதாநாயகி சென்னாவையே வாசகனின் நினைவில் விஞ்சும் அளவிற்கு மிக வசீகரமாகவும் அதே சமயத்தில் அச்சுறுத்துபவளாகவும் படைக்கப் பட்டிருக்கிறாள். அபாரமான மெட்டுக்கள் அனைத்துமே சாத்தானுக்கே உரியவை போலும்! அனைத்தும் என்பது சற்று மிகையாகவே இருக்கலாம். கசாண்ட்ரா / காசிரை தலைமையில் நிகழும் ஷராவதி போற்றுதும் நதி விழா நினைவிற்கு வருகிறது. எண்ணெய் மிளிரும் தொடைகளில் தாளம்தட்டி கும்மியடிக்கும் நங்கைகள் நிச்சயமாக பொன்னியின் செல்வனின் பிரசித்தி பெற்ற ஆடிப்பெருக்கு காட்சிக்கு மறைமுகமாக இலக்கிய வணக்கம் வைக்கிறார்கள்.

ஆனால் முருகன் வெறும் கல்கி 2.0 அல்ல, தமிழ் நவீனத்துவம் தொடங்கி இவ்வளவு தசாப்தங்களுக்குப் பிறகும் அவரால் அப்படி இருக்க முடியுமா என்ன. எனெனில் அவரே அந்நவீனத்துவத்தின் ஒரு பிரதிநிதி ஆயிற்றே. வரலாற்றைக் கலைத்து அபத்தமாக்கும் நேரியலற்ற கதைகூறல், வேறுபட்ட பேச்சுமொழி (ஆனால் சில சமயங்களில் உலகம் முழுவதும் அம்பலப்புழை என்ற சின்னஞ்சிறு இடத்திற்குள் சுருங்கிவிட்டதாகவும், அனைவருமே அதன் மலையாளம் கலந்த தமிழில் உரையாடுவது போலவும் ஒரு பிரமை எழுந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்), புலனின்ப விஷயங்களில் மிளிரும் வெளிப்படையான ரபலேசிய மகிழ்ச்சி, நான்காவது பரிமாணத்து குரங்கு வித்தைகள்…இவை எல்லாம் கடந்த நூற்றாண்டின் மத்தியில் வெகுஜன இதழில் தொடராக வந்த புனைவிலிருந்து பல மைல்கள் தொலைவில் மிளகை இருத்துகின்றன. ஏறக்குறைய ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிளகின் நிழல் நீள்வது அதன் குறியீட்டு வெளியை விரிவுபடுத்துவதற்கான ஒரு நவீனத்துவ உத்தியே; உணவுப் பொருள், பாலுணர்வு ஊக்கி, வர்த்தகப் பொருள் என்ற வெளிப்படையான பாதிப்புகளைக் கடந்து வரம்பு மீறலைத் தண்டிக்கும் / சுட்டும் ஒரு அமானுஷ்ய சக்தியாகவும் மிளகு இந்நாவலில் உருமாறுகிறது. நாவலின் இரு பகுதிகளிலும் பேய் மிளகாக (Devil’s Pepper) அது கட்டுக்கடங்காமல் படர்ந்து அச்சுறுத்தும் தருணங்கள் இடம் பெறுகின்றன. கவுடின்ஹோ துரையின் ஹொன்னாவர் இல்லத்தில் அவரது எடுபிடி விஞ்ஞானி அமைத்திருக்கும் சோதனைக் கூடத்திலிருந்து அதன் கொடிகள் கிளைத்து விரிந்து அம்பலப்புழையில் உள்ள மருத்துவர் பிஷாரடி சாரதா தெரிஸா ஆகியோரின் வீடுகளில் படர்ந்து அறத்தின் அபாயச் சங்கை ஒலிக்கின்றன.

பொதுவாகச் சொல்வதானால், நாவலின் பதினாறாம் நூற்றாண்டுப் பகுதிகள் இருபதாம் நூற்றாண்டுப் பகுதிகளை விட திருப்திகரமாக இருந்தன, ஏனெனில் அவற்றின் பாத்திரங்கள், குறிப்பாக பெண் பாத்திரங்கள், பன்முகக் கூறுகளுடன் காத்திரமாக படைக்கப்பட்டிருப்பதால். மிளகு ஒரு விதத்தில் பெண்களின் மன வலிமையைப் பற்றிய நாவலும்கூட. சென்னா, ரோகிணி, அப்பக்கா ஆகியோர் பன்முகத் தன்மையுடன் வரலாற்றில் அவர்கள் வகிக்கும் பங்கை முற்றிலும் உணர்ந்தவர்களாகவே நம்மிடம் பேசுகிறார்கள். அதனால்தான் இந்த நாவலின் அட்டை வடிவமைப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது, அதில் மருந்துக்குக்கூட ஒரு பெண்ணில்லை. நாவலின் நவீன பகுதிகளை ஆண்களே ஆக்ரமித்தாலும் அவர்களின் போதாமைகளை ஏதோ ஒரு தார்மீக உயரத்திலிருந்து அனுதாபத்துடன் அணுகும் பெண்களும் (சாரதா, வசந்தி, கல்பா) இடம்பெற்றிருப்பது நிறைவளிக்கிறது.

இருபதாம் நூற்றாண்டிலிருந்து மறைந்து, காலப் பரிமாணத்தில் ஒருவித சுழலில் சிக்கி, பதினாறாம் நூற்றாண்டின் ஹொன்னாவரைச் சென்றடையும் பரமன் கதாபாத்திரத்தை நான் முன்பே குறிப்பிட்டேன், ரோகிணியின் இனிப்பு அங்காடியில் சமையற்காரராகத் தொடங்கி அவளது கணவனாகவும் (பெயரளவில்) அவளது குழந்தைக்குத் (நேமிநாதன் வழியே) தகப்பனாகவும் பதவி உயர்வு பெற்று, அவளது சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு நூற்றுப் பத்து வயதான முடமான தந்தையாக தனது மகன் திலீப் ராவ்ஜியின் வாசற்கதவைத் தட்டியபடியே இருபதாம் நூற்றாண்டிற்குத் திரும்புகிறார். ஹொன்னாவர் அனுபவத்தின் சில சிதிலமான நினைவுகளால் பீதிக்கப்படுகிறார். அந்நினைவுகளைத் தர்க்கரீதியாக அவரால் விளக்க முடியாததால் அவரை ஹிப்னாடைஸ் செய்தே மருத்துவர் பிஷாரடி அவற்றை ஓரளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது. எப்போதும் எங்கேயும் இப்போதே இங்கேயே இருக்கும் ஒரு கால-வெளித் தொடர்மத்தில் மாற்று நேரங்களில் வெவ்வேறு உலகங்களில் நாம் ஆளுமைகளாக (பிரதிகளாக) இருக்கிறோம் என்ற ஒரு கோட்பாட்டை நாவல் வெளிப்படையாகவே முன்வைக்கிறது.

அதாவது ஒவ்வொரு தனிப்பட்ட ஆளுமையும் கால-வெளித் தொடர்மத்தில் அமைந்திருக்கும் ஏதோவொரு கூட்டு ஆளுமையின் பகுதி ஆளுமையே, வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு காலத்தில் இருக்கவல்ல இப்பகுதி ஆளுமைகள் அக்கூட்டு ஆளுமையின் பொது நினைவுக் கிடங்கை இற்றைப்படுத்தியபடியே இருக்கின்றன. பொது நினைவு ஒரு தனிப்பட்ட பிரதியின் தனி நினைவாக உருக்கொள்ளும் போது அப்பிரதி குழம்பி பீதியடைகிறது. இதுவே பரமன் பாத்திரத்திற்கு நேர்ந்திருக்கலாம் என்ற அனுமானத்தை நாவல் முன்வைக்கிறது. ஆனால் இவ்வளவு விலாவாரியான விளக்கங்களை ஒரு நாவல் முன்வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இவ்வனுமானத்தை வாசகர் மனதில் இயல்பாகவே எழுப்ப நாவல் மெனக்கெட்டிருக்காலாமோ என்ற கேள்வியும்.

இவ்வளவு நீளமான நாவலில் (1189 பக்கங்கள்!) கதையாதலின் சுவாரஸ்யத்தைத் தக்கவைப்பது ஒரு சவால்தான். கதையாடல் தொய்வுறும் இடங்களும் நாவலில் உள்ளன. ஹொன்னாவரில் நிகழும் ஒரு திருமணத்தை விவரிக்கும் அத்தியாயம் 54 உடனடியாக நினைவிற்கு வருகிறது. சங்கரன் சம்பந்தப்பட்ட தீவிரவாதக் காட்சிகள் நாவலின் ஒட்டுமொத்த தாளகதியுடன் ஒன்றவில்லை என்பதும் ஒரு குறையே.

ஆனால் இது போன்ற ஒன்றிரண்டு குறைகளை நாவலின் கணிசமான நிறைகளின் உந்துதலால் வாசகன் கடந்து சென்றுவிடுவான். அதன் தென்றலை ஒத்த லாகவமான கதை சொல்லும் பாணியும் அதன் காத்திரமான பெண் பாத்திரங்களும் வரலாற்றை அபத்தமாக்கும் விதமும் மிளகை சிறந்த நாவலாக்குகின்றன.

சாப்பிடுவதைப் பற்றி இவ்வளவு சுவாரஸ்யமாக வேறெந்த நாவலும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை. இட்டலியில் தொடங்கி தோசை உப்பிட்டு, தோசைக்குள் உப்பிட்டு, வினோதமான ரொட்டி வெங்காயச் சட்னி சேர்க்கை, பிஃபானா என்ற போர்ச்சுகீசிய பன்றி இறைச்சி சாண்ட்விச்சுகள், தெரிந்த மற்றும் தெரியாத இனிப்புகள் என்று முடிவில்லாது நீளும் இப்பட்டியல் ஒரு சுவையான விருந்தை அனுபவித்த சந்தோஷத்தைத் தருகிறது. அவ்விருந்தின் நீளம் அஜீரணத்தை அளிக்குமோ என்று பயப்படுபவர்களுக்கு, பிரபலமான தமிழ் பழமொழியை சற்றே மாற்றி, “மிளகு பெருத்தாலும் சுவை குறையாது” என்று கூறி முடித்துக் கொள்கிறேன்.

சுவைத்துப் பாருங்களேன்!

மூலநூல்கள் / மேலும் படிக்க:

முருகன், இ.ரா, மிளகு, எழுத்து பிரசுரம், 2022
Toussaint-Samat, Maguelonne, History of Food, Tr. by Anthea Bell, Blackwell, 1992

Kamat, Jyotsna, Queen of Gersoppa, Kamat’s Potpourri, 2005

Series Navigation<< தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமிபின்கட்டு >>

2 Replies to “இரா. முருகனின் நளபாகம்”

  1. மிகச் செறிவாக, சர்வ வியாபகமாகச் சிறப்பாக மதிப்பீடு அளித்திருக்கும் நண்பர் நம்பி அவர்களுக்கும், பிரசுரித்த சொல்வனம் இலக்கிய இதழுக்கும் நன்றி/

    சிறப்பாக மிளகு ஒலிவடிவம் அளிக்கும் திருமதி சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கு நன்றி சொல்லவும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    இரா.முருகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.