மிளகு  – அத்தியாயம் இருபத்துநான்கு

1599 ஜெரஸோப்பா

பரமன் ஜெரஸோப்பா வண்டிச் சத்திரத்தில் தங்கியிருக்க ஆரம்பித்தார். வந்து இரண்டு நாளாகி விட்டது. நேற்று ராத்திரி வெறும் தண்ணீரைக் குடித்தபடி படுக்க நினைத்தபோது வண்டிக்காரர்கள் அவர் சாப்பிடாமல் தூங்க முடியாது என்று ஆளுக்குக் கொஞ்சம் வியஞ்சனமும், சோறும் எடுத்து ஒரு பூவரசு இலைத் தட்டில் வைத்து சாப்பிடுங்க துரை என்று கொடுத்தார்கள்.

அடுத்த நாள் காலைச் சாப்பாடு பற்றிக் கவலைப்பட வேண்டும் என்றால் ராத்திரி சாப்பிட்டு விட்டு கவலைப் படுங்கள் என்று மூத்த வண்டிக்காரர் வீரய்யா சொன்னார். இங்கேயே உட்கார்ந்து கொண்டிருப்பதை விட, கிழக்கில் இன்னும் கொஞ்சம் காலாற நடந்து போய்விட்டு வரலாம் என்றார் அவர்

நேமிநாதன் கோவில், சென்னகேசவன் கோவில், லிங்கேசுவரர் கோவில் என்று பெரிய பெரிய கோவில்கள் அங்கே இருப்பதாக வீராயி சொன்னாள். வீரையாவின் மகள். வந்த நாளில் மாம்பழம் சுமந்து வந்து தமிழில் பேசியது இன்னமும் பரமனுக்கு நினைவில் இருக்கிறது.

நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம்.

இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?

கால்சராயையும் குப்பாயத்தையும் நல்ல தண்ணீரில் அலசிப் போட்டதுமே காய்ந்து அழுக்கும் வியர்வை நெடியும் போய்விடுவதைக் கவனித்தார். ஷராவதி ஆற்றுத் தண்ணீரின் மகிமை.

Home, Robert; A South Indian Temple; Government Art Collection; http://www.artuk.org/artworks/a-south-indian-temple-28459

ஆற்று மணல், துவைக்கும்போது உடுப்பில் ஒட்டி அப்புறம் விலகும்போது சகல கசடையும் எடுத்துப் போய்விடும் என்றாள் வீராயி. இருக்கலாம்.

பரமன் காலையில் கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்க, வண்டியடிச் சத்திரத்தில் வண்டிக்காரர்கள் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்கள். கிழக்கில் நடக்க ஆரம்பித்ததுமே விரிந்து பரந்த நெல்வயல்களும் அங்கங்கே தென்படும் காய்கறி பயிர் செய்து விளைச்சல் குவிக்கும் தோட்டங்களும், உயரமான நெட்டுலிங்க மரங்கள் வரிசையாக நிற்கும் தோப்புகளுமாக இனி நகரம் இந்தத் திசையில் இல்லை என்று தவறாகக் கணக்கிட்டு விட வாய்ப்பு உண்டு எனத் தெரிந்தது.

தோப்புகள் அடுத்தடுத்து வந்த பகுதியில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வயதான இருவர் பரமனைப் பார்த்து சிநேகிதமாகச் சிரித்தார்கள். பரமன் அவர்களிடம் சாப்பாடு, தொழில் தேடுவது பற்றி விசாரிக்கலாம் என்று அருகே போனார். அவர்கள் இரண்டு பேரும் ஆட்கள் இல்லை, சோளக்கொல்லை பொம்மைகள் என்று உணர்ந்ததும் சிரிப்பு வந்தது. சதா புன்சிரிக்கும் முகத்தோடு அந்தப் பொம்மைகள் காற்றில் முன்னும் பின்னும் அசைய பரமன் வெளியே நடக்கும்போது ’யார் வேணும்?’ என்று சத்தம்.

பெரிய குடத்தை இடுப்பில் சுமந்து வந்து கொண்டிருந்தவள் வீராயிதான்.

”நீ இங்கே தான் வேலை பார்க்கறியா” என்று பரமன் விசாரிக்க, ஆமா, மிளகு சாகுபடி என்று மரங்களைக் காட்டினாள். ஒவ்வொரு நெட்டை மரத்திலும் பாதி உயரத்துக்கு பசுமையாகப் படர்ந்திருந்த கொடிதான் மிளகு என்று புலப்பட்டது பரமனுக்கு.

“மிளகை மண்ணுலே குழிச்சு ஊணினால் செடி வந்து காய் விளைஞ்சுடுமா?” பரமன் ஆர்வத்தோடு கேட்டார். “போச்சு போ. அரிசி மரம் வச்சு சோத்துக்கு அரிசி பறிக்கலாம்னு சொல்ற மாதிரி விவசாயமே பார்த்தது இல்லே போல.” என்றாள் சிரித்தபடி.

“ஏதேதோ பண்றாங்க. மிளகை இனிப்பாக்க முடியுமா?” பரமன் கேட்டார்.

“ஏன் முடியாது? இனிப்பா இருக்காது காரமாகவும் இருக்காது. அதோ அந்த தெற்குக்கோடி ரெண்டு பாத்தியும் அப்படிப்பட்ட மிளகு. மூணு மாசப் பயிர்” என்றாள் வீராயி. அவள் சுட்டிக்காட்டியது குடைமிளகாய் என்ற பெயரில் அறிமுகமான காயை.

“அது இனிப்பு மிளகாக்கும். மத்தது?” பரமன் சிரித்தபடி கேட்டார்.

”வால்மிளகு. குறுமிளகு. கருமிளகு. சிவப்பு மிளகு. பச்சை மிளகு. எல்லாம் காரம். ரொம்ப காரம்னா, இதோ இது அஞ்சு மாசப் பயிர்.. இன்னும் நெறைய வகை இருக்கு.”

”சாவகாசமா அதெல்லாம் சொல்லு, கேட்டுக்கறேன்” என்றார் பரமன்.

”எங்கே கிளம்பிட்டீங்க, ஊர் உலகம் எல்லாம் நல்லா இருக்கான்னு பார்க்க ராஜா பவனி வந்துட்டிருக்கீங்க போல,” வீராயி கண்ணால் சிரித்தாள்.

“ஆமா அப்படித்தான் வச்சுக்க” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு வெளியே போகத் திரும்பினார் பரமன்.

”ஓய் பொம்மன், எல்லாம் பார்த்து முடிச்சு இந்தப் பாதையிலேதானே வருவீங்க இல்லே வேறே பாதையிலே வந்து சேர திட்டமா?” வீராயி கேட்டாள்.

அவ்வளவு பெரிய குடத்தை இடுப்பில் சுமந்து வந்தவளை நிறுத்திப் பேசுவது அவளுக்கு சிரமம் கொடுக்கும் என்று தோன்ற, இதே பாதைதான் என்று சொல்லியபடி வெளியேறினார்.

“அப்போ, நீங்க இந்தத் தோப்புக்கும் இதே படிக்கு வாங்க. ஒரு விஷயம் பேச வேண்டியிருக்கு சரியா வருதா பார்க்கலாம்,” என்றாள் வீராயி.

தோப்பு முடிந்து மறுபடியும் ஊர் தொடர்ந்த இடத்தில் வரிசையாகக் கோவில்கள் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வெவ்வேறு தொனியில் மணிகள் முழங்கி இருந்தன. முதல் கோவில் மகாவீரரும், ரிஷபநாதர், அஜிதநாதர், சுமதிநாதர், விமலநாதர் என்னும் இன்னும் நான்கு தீர்த்தங்கர்களும் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகப் பெரிய சமணக் கோவில்.

உள்ளே போய்த் தொழுது திரும்பலாம் என்று தோன்ற வாழ்க்கையில் இதுவரை சமணக் கோவிலுக்குள் போனதே இல்லை என்பதும் காரணம்.

இங்கே எல்லாம் பிரசாதம் என்று ஏதும் தரமாட்டார்களா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வம் மேலெழுந்திருந்தது.

ஏனோ அவர் நினைப்பில் சமணக் கோவில்களில் பதாம், முந்திரிப்பருப்பு, பேரிச்சை, நெய் வடியும் ஹல்வா, ஜாங்கிரி, பாதுஷா போன்ற இனிப்புகள் இவையே பிரசாதமாக அளிக்கப்படும் என்றும் தோன்றியது.

பத்து நிமிடத்தில் வழிபட்டு வரலாம் என்று நினைத்தவர் அந்தக் கோவிலின் அமைதியாலும், எளிய பிரம்மாண்டத்தாலும் ஈர்க்கப்பட்டு அங்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கண்கள் மூடி அமர்ந்திருந்தார்.

வெளியே வந்தபோது சர்க்கரைப் பொங்கலும், வெண்பொங்கலுமாக இரண்டு பெரிய இலைத் தொன்னைகளில் கொடுத்தார்கள். இதைவிட சிறப்பாக காலை உணவு எங்கே கிடைக்கும்?

காலைச் சாப்பாடு பிரச்சனை தீர வைத்த வண்டியடி சத்திரத்து வண்டியோட்டிகளுக்கு மனதில் நன்றி சொன்னார் அவர்.

திரும்பப் போகும்போது வாசலில் நின்றவரிடம் நாளைக்கு பிரசாதம் என்ன என்று கேட்க, ”வழக்கம் போல் வெண்பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் தான் நாளைக்கு அரண்மனையிலிருந்து விநியோகம் சொல்லியிருக்கிறார்கள். பகல் அன்னதானமும் உண்டு,” என்றார்.

திரும்பும்போது அதே பாதையில் வரச் சொல்லியிருந்தாளே வீராயி. அந்தப் பெரிய கோவிலுக்குள் காலாற நடந்து தியானத்தில் உட்கார்ந்தபோது எல்லாத் திசையும் ஒன்றாகி நேரே போவது ஒன்றே வழியாகத் தெரிந்தது. பரமன் ஆன்மீகனான நொடி அது.

எந்தச் சந்தேகமும் இன்றி அதே பாதையில் போக நகர் முடிந்து தோப்புகள். வாங்கய்யா வாங்க என்று சோளக்கொல்லை பொம்மைகள் சிரித்தபடி வரவேற்றன. இங்கே தான். வாசலில் புறப்பட்டுக் கொண்டிருந்த வீரையாவின் வண்டியில் மாம்பழக் கூடையோடு உட்கார்ந்திருந்தாள் வீராயி.

“சந்தைக்கு போய்ட்டிருக்கேன். அம்மா உள்ளே தான் இருக்காங்க. உங்களைப் பத்தி சொல்லியிருக்கேன். போய்ப் பார்த்து பேசிட்டு வாங்க,” என்று சொல்லி விட்டுப் போனாள் அவள்.

ரெட்டைக் குதிரை சாரட் வாசலில் நிற்பதைக் கவனித்தார் பரமன். உள்ளே தரையில் பாய் விரித்து உடற்பயிற்சி செய்தபடி ஒரு பெண். ஜெர்ஸோப்பாவில் பரமனைக் கொண்டு வந்து விட்டவள் தான் அவள்.

பரமனைப் பார்த்ததும் இடப்புறமாகத் திரும்பி காலை நீட்டி இன்னொரு காலை மடித்து வயிற்றுப் பக்கம் வைத்தபடி உக்காருங்க வரேன் என்றாள். அவளுடைய தமிழ் கொஞ்சம் போல் புரிந்தாலும் வேறு எதுவும் சொல்லியிருக்கச் சாத்தியம் இல்லாததால் பரமன் புரிந்து கொண்டது அதேபடித்தான்.

வாசலில் நின்றபடி சோளக் கொல்லைப் பொம்மைகளைப் பார்த்துக்கொண்டு நிற்க, எப்படி பம்பாய்க்குப் போவது என்று அவருக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு கிராமப் புறமாக, பெரிய கோவில்கள், மாளிகைகள் ஒரு பக்கம் இருக்க, மின்சாரத்தின் சுவடுகூட இல்லாமல், உடுப்பும் வேதகாலம் போல் பஞ்சகச்சமும் மூலக்கச்சமும் அணிந்து ஒரு பெரிய நகரமே மேடையில்லாத நாடகத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்ப மனதில் வந்தது.

வாசலுக்கு வந்த அந்தப் பெண் ‘ஓய் வாரும் எப்படி இருக்கீர்,’ என்றாள். பிரமாதம் என்று அவர் சொன்னது புரியாமல் குழப்பத்தோடு நின்று, அடுத்து உடனே வசீகரமாகச் சிரித்தாள் அவள்.

“ஜெரஸோப்பா வண்டியடி சத்திரத்தில் குடியேறி விட்டீராமே. உத்தியோகம் பார்க்கிற தோதில் மனசு போகமாட்டேன் என்கிறதா?”

தெலுங்கும் தமிழுமாக அவள் கேட்க பரமன் ஆழ்ந்து பார்த்தபடி, ”எஜமானி, எனக்கு இந்த மாதிரி சொகுசு எல்லாம் ஏதும் வேண்டாம். பம்பாய் போகிற விமானம் எங்கே ஏற வேண்டும் என்று சொன்னால் போதும்,” என்றார்.

“ஆரம்பிச்சுட்டீங்களா யாருக்கும் புரியாத விஷயம் பேச? நீர் சொன்ன விமானம், பம்பாய் எல்லாம் யாருக்கும் தெரியாத சமாசாரங்கள். ஜெரஸோப்பாவில் மட்டுமில்லை, பழைய தலைநகரம் ஹம்பியிலே, இப்போதைய தலைநகரம் பெனுகொண்டாவிலே கூட இதுதான் நிலைமை. ஆக, இங்கே கொஞ்ச நாள் இருந்து பாரும். நிச்சயம் பிடித்துப் போகும். அப்புறம் பம்பாய், விமானம், நாக்பூர் எல்லாம் மறந்துடுவீங்க”

பெரியதாகப் பேசி நிறுத்தினாள்.

“சரி, ஜீவனத்துக்கு என்ன பண்ணப் போறீர்? மூன்று வேளையும் சமணக் கோவில், பெருமாள் கோவில், சிவன் கோவில் பிரசாதம் போதுமா? வேறு தேவைக்கு காசு வேணாமா?”

“காசுக்கா பஞ்சம் இதோ” என்றபடி கையில் பிடித்திருந்த சஞ்சியில் இருந்து சில காசுகளை பரமன் எடுத்துக் காட்ட ஏகமான சுவாரசியத்தோடு அவள் அந்த காசுகளைக் கையில் வாங்கிப் பார்த்தாள்.

“ஓய் இந்தக் காசெல்லாம் உம் ஊரில் அது எங்கே இருக்கோ அங்கே செல்லும். இங்கே இதுக்கெல்லாம் ஒரு மதிப்புமில்லை,” என்றாள் அவர் கையில் அந்தக் காசுகளைத் திருப்பி உதிர்த்தபடி.

“இப்போதைக்கு உத்தியோகம் ஏதும் கிடைத்தால் சேர்வேன்,” என்றார் பரமன். ”கணக்கு எழுதுவீரா?” என்று முதலில் கேட்டாள் அந்தப் பெண்.

“கணக்கை வெறுக்கற பலபேர்லே நானும் ஒருத்தன்,” என்றார் பரமன்.

“கணக்குத் தெரியாதவன் இந்த தேசத்துக்குத் தேவையில்லை,” என்றாள் அவள்.

“உங்க பெயர் என்ன மிளகு ராணியா?”

“நான் எதுக்கு மிளகு ராணியாக இருக்கணும்? நான் ரோகிணி. ஜெர்ஸோப்பாவில் பிரசித்தமான மிட்டாய் அங்காடி நடத்தறேன். நீர் கணக்கு எழுத மாட்டீரா? போகுது. மிட்டாய்க்கடை பொருள் சர்க்கரை, நெய், வெண்ணெய், பாதாம் பருப்பு இப்படி எல்லாத்தையும் உக்கிராணத்துலே வச்சு அப்பப்போ கேட்கும் போது எடுத்துத் தந்து மேற்பார்வை செய்வீரா?”

”மாட்டேன் ஆனால் நான் ரவாலாடும், தில்லி ஜிலேபியும், கல்கத்தா ரஸகுல்லாவும், இனிப்பு தயிரும் செய்வேன். எங்க அம்மா இதையெல்லாம் ஒரு ஐம்பது வருஷம் முந்தி செய்தபோது பார்த்து பார்த்து கத்துக்கிட்டேன்.”

”சரி நீர் ஒரு சுத்துகாரியம் பார்க்கற மடையரா வேலைக்கு சேரும்.”

“என்ன?”

“மடையன்…. சமையல்தொழில் செய்யறவன்.”

அன்றைக்கு இரண்டு நாள் சென்று இனிப்புத் தயிர் குடிக்க கடைவாசலில் பெரிய கூட்டம் கூடியது. ஊரில் தயிர்ப் பஞ்சம், பால் பஞ்சம். எல்லாம் ரோகிணி மிட்டாய் அங்காடிக்குள் தஞ்சம் புகுந்து இனிப்புப் பலகாரமானது.

தினசரி என்ன புது இனிப்பு அறிமுகப்படுத்தினாலும், ஏற்கனவே அறிமுகம் செய்த பால் இனிப்பு திரும்ப உண்டாக்கினாலும், அரண்மனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசு ஆணையும் வாய் வார்த்தையாகக் கிடைத்திட, ரோகிணியின் மகிழ்ச்சிக்கு தடையே இல்லை.

ஆயிற்று. சீக்கிரமே பரமன் இனிப்பு வாத்தியார் ஆகிவிட்டார்.

“நீரே தனியாகக் கடை ஆரம்பிக்கலாமே,” என்று வீராயியும் வீரையாவும் ஆலோசனை சொன்னாலும், எங்கிருந்தோ வந்து அப்படி எல்லாம் பெரிய தோதில் இனிப்பு அங்காடி தொடங்குவதின் சிக்கல்கள் பரமனுக்குத் தெளிவாகப் புலப்பட்டன.

அவருக்கு எல்லாவற்றையும் விட பம்பாய் போகவேண்டும் என்ற நினைப்பு தினம் தினம் தீவிரமடைந்துகொண்டே வருகிறது. இன்று காலை கடைக்கு அவசர அவசரமாகக் கிளம்பும்போதும் மனதின் மேல் பரப்பிலும் ஆழமாக ஊடுருவியும் இருப்பது அந்த நினைப்பு தான்.

என்றாலும் எத்தனை நாள் வண்டியடி சத்திரத்தில் தங்கி இருப்பது? வண்டிக்காரர்கள் யாரும் அவர் அங்கே இருப்பதற்கு ஆட்சேபம் சொல்லவில்லைதான்.

ஒரு பொம்மன், என்றால் பிராமணன், அவர்களோடு ராச்சாப்பாட்டை பங்குபோட்டு, இருக்கும் இடத்தில் கொஞ்சம் போல் இருக்க, படுத்து உறங்க வைத்துக்கொண்டு உழைக்கும் நேரமெல்லாம் மிட்டாய்க் கடையிலிருந்தபடி ராத்திரி ஒரு ஏழெட்டு மணி நேரம் மட்டும் இங்கே உறங்க வந்து எல்லா சிரமம், துர்வாடை, குளியலறை அசௌகரியம், வெளியே வயல்பக்கம் போய் கழிவு நீக்கி வருவது என்று பழகினாலும், பத்து வராகன் பிரதிமாத வாடகை கொடுத்தால் தங்கி இருக்க பெரிய வீடுகள் எத்தனையோ இருக்கும்போது ஏன் கஷ்டப்படணும்?

ரோகிணி தான் முதலில் சொன்னது, அவளே அவள் வீட்டுக்கு அடுத்து ஒரு ரெண்டு நிலைக் கட்டிடம் இருப்பதாகவும் குடக்கூலி மாதம் எட்டு வராகன் என்றும் சொன்னாள். அடுத்த நாளே பரமன் அங்கே குடிபெயர்ந்து விட்டார். கூடவே வீடு சுத்தம் செய்ய, துணி துவைக்க என்று வீட்டு வேலைக்கு வீராயியையும் அமர்த்தி விட்டாள் அவள். மாதம் ஒன்றரை வராகன் என்ற மாதாந்திரக் கூலியை மூன்று வராகன் ஆக்கினார் பரமன். அந்தப் பெண் ’எந்த கூலியும் வேண்டாம்; பரமன் இருக்கும் இடத்தில் புழங்க உரிமை கிடைப்பதே போதும்’ என்று சொல்லும் வகை.

ஆயிற்று, நாலு மாதமாக இந்த ஏற்பாடு சரிவர நடந்து கொண்டிருக்கிறது. பரமன் எப்படியாவது இங்கே இருந்து அவருக்குப் பிறந்ததில் இருந்து பழக்கமான பம்பாயும் மதறாஸும் திரும்பப் போக முடியுமானால் கிளம்பி விடுவார். வாடகை, வீராயிக்கு மாதாந்திர காசு எல்லாம் கொடுத்துவிட்டுத்தான் கிளம்புவார் அவர்.

ஒவ்வொரு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பரமன் வேலைக்கு வர வேண்டியதில்லை என்று விடுமுறை கொடுத்திருந்தாள் ரோகிணி.

அப்போதும், பரமன் வீட்டில் இருக்கும் தினசரி ராத்திரியிலும் ரோகிணி வீட்டில் இருந்து அவருக்கு இட்டலி, தோசை, புளியஞ்சாதம், தேங்காய்ச் சாதம், தயிர் சாதம் என்று வந்து சேர்ந்து விடுவதால் வீட்டில் அடுப்பு பக்கம் போவதே இல்லை.

இரண்டு பவுர்ணமிக்கு முந்திய பௌர்ணமியின் போது வண்டியடிச் சத்திரம் வீரையா முயற்சியில் ஒரு வண்டி அமர்த்திக்கொண்டு கோகர்ணம் கோவில் எல்லாம் தரிசித்து வரப் போனார் பரமன். அங்கிருந்து கடற்கரை வழியாக ஹொன்னாவர் போக மனசுக்கு ரம்மியமாக இருந்தது அவருக்கு.

அடுத்த பௌர்ணமிக்கு உள்ளால் போகத் திட்டமிட்டார். மழை காரணம் அதை ஒத்திப் போட வேண்டிப் போனது. வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பானேன் என்று மிட்டாய்க்கடைக்கே வந்து விட்டார் அந்த பௌர்ணமிக்கு.

அப்போது புதியதாகச் செய்தது தான் துங்கபத்ரா என்ற புது இனிப்பு.

அந்த இனிப்பு அறிமுகமாகி ஒரு மணி நேரத்தில் அரண்மனையிலும், வாடிக்கையாளர்களுக்கு இடையிலும் பிரபலமாக அடுத்த ஈடு செய்ய ரமணதிலகன் என்ற உதவி மடையனுக்கும் – சமையல் தொழிலில் இருப்பவர்களை இங்கே அப்படித்தான் அழைக்கிறார்கள் – அடுத்த மூன்று மணி நேரம் சோதனைக் காலமாக இருந்தது. பரமனின் மேற்பார்வையில் அவர்கள் நல்லபடியாக அந்த இனிப்பை அதேபோல உண்டாக்க, எல்லோருக்கும் மகிழ்ச்சி.

துங்கபத்ரா என்று உரக்கச் சொல்லியபடி திருப்தியாகக் கண் திறந்த பரமன் முன்னால் டாக்டர் அமர்ந்திருந்தார்.

(தொடரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் இருபத்திமூன்றுமிளகு அத்தியாயம் இருபத்தைந்து >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.