புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20

This entry is part 20 of 23 in the series புவிச் சூடேற்றம்

சென்ற பகுதியில், நாம் முன்வைத்த ஒரு விஷயம், பூமியின் காற்று மண்டலத்தில் கலக்கும், கரியமில வாயுவின் முக்கிய காரணம், தொல்லெச்ச எரிபொருள் எரிப்பது – அதாவது 62%. ஆக, முதலில் நாம் இந்த 62% எப்படி உருவாகிறது என்று பிரித்துப் பார்த்தால், எந்த மூலத்திலிருந்து உருவாகும் கரியமில வாயுவைக் குறைத்தால், நல்ல பயன் கிடைக்கும் என்று பார்ப்போம். இதன் வெவ்வேறு பாகங்கள்:

  • 25% – மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்
  • 24% – உணவு உற்பத்தி மற்றும் நிலப்பயன்/ விவசாயம்
  • 21% – பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்
  • 14% – போக்குவரத்து – பைக், கார், பஸ், லாரி, விமானம், கப்பல் எல்லாம் இதில் அடங்கும்
  • 6% – கட்டிடங்கள் – வணிக கட்டிடங்கள் மற்றும் வீடுகள்
  • 10% – மற்ற சக்தி சார்ந்த உமிழ்கள் (பெட்ரோல் சுத்திகரிப்பு, இயற்கை வாயு தயாரிப்பு, தார் மண் கச்சா எண்ணெய் தயாரிப்பு)

இதை முன் பகுதியில் பார்த்தோம். மிக முக்கியமான விஷயம், நாம் முதல் 5 விஷயங்களை மட்டும் சமாளித்தால், 90% சத்வீத பாகங்களை கட்டுப்படுத்த முடியும்.

முதல் விஷயமான மின்சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விவரமாக கவனிப்போம்.

  • மின்சக்தியில் உள்ள மிகப் பெரிய பிரச்சினை, மின்சக்தி உற்பத்திக்கான மூலப்பொருள். உலகில், இன்னும் பெரும்பாலான நாடுகள், கரி மற்றும் இயற்கை வாயுவைப் பயன்படுத்தி, வெப்பத்தை உண்டாக்கி, அந்த வெப்பத்தைக் கொண்டு நீரை நீராவியாக்கி, நீராவியால், டர்பைனை சுழலவிட்டு மின்சாரம் உற்பத்தி செய்வதுதான். இந்த இரண்டு வகை மின் உற்பத்தியும் அனல்மின் சக்தி என்று சொல்லப்படுகிறது.
  • ஏன் கரியையும், இயற்கை வாயுவையும் தனிமைப்படுத்திக் காட்டுகிறோம்?
    • கரியை எரித்து மின்சக்தி உற்பத்தி செய்தால், கிலோவாட் ஒவ்வொன்றிற்கும் 2.2 பவுண்டு கரியமில வாயுவை சராசரியாக, காற்று மண்டலத்தில் நாம் கலக்கிறோம். கலந்த கரியமில வாயு, காற்று மண்டலத்தில் சில நூறு ஆண்டுகள் பூமியைச் சூடேற்றும்
    • இயற்கை வாயுவை எரித்து மின்சக்தி உற்பத்தி செய்தால், கிலோவாட் ஒவ்வொன்றிற்கும் 1.2 பவுண்டு கரியமில வாயுவை சராசரியாக, காற்று மண்டலத்தில் நாம் கலக்கிறோம். கலந்த கரியமில வாயு, காற்று மண்டலத்தில் சில நூறு ஆண்டுகள் பூமியைச் சூடேற்றும்
    • நீர், கதிரொளி மின்பலகை (Solar panels), காற்றுச் சுழலிகள், அல்லது அணு சிதறல் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்தால், கிலோவாட் ஒவ்வொன்றிற்கும் 0 பவுண்டு கரியமில வாயுவை சராசரியாக, காற்று மண்டலத்தில் நாம் கலக்கிறோம். அதாவது, நம்முடைய காற்று மண்டலம் விரும்பும் வழிகள் இவை
  • மின்சக்தி உற்பத்தியில் கரி மிகவும் மலிவான மூலப்பொருள். பல நாடுகள், கரியை நம்பிய நாடுகள். அனல் மின் நிலையங்களை மூடினால், தகுந்த மாற்று அமைப்பு உருவாக்குவது மிகவும் கடினமான விஷயம். உதாரணத்திற்கு, சமீப இந்திய மின்சார விரிவாக்கம், பெரும்பாலும், இயற்கை வாயுவை மூலமாகக் கொண்டது. சைனா, இன்னும் தன்னுடைய ராட்சச கரி சார்ந்த மின் நிலையங்களை மூடத் தொடங்கவில்லை. சொல்வது எளிது. ஆனால், செய்வது மிகவும் கடினம். நீர், காற்று மற்றும் சூரிய ஒளி குறைந்த பகுதிகள், அணு மின் நிலையம் ஒன்றே வழி. இதற்கான முதலீடு அதிகம்

இந்தப் பிரச்சினையின் இன்னொரு முகம், மின்சக்திப் பயன்பாடு. நாம் எவ்வாறு உருவாக்கிய மின்சக்தியைப் பயன்படுத்துகிறோம்?

  • இது போன்ற இந்திய புள்ளி விவரங்கள் இந்திய வீடுகள் பற்றி இல்லாததால், ஒரு சராசரி அமெரிக்க வீட்டில் எவ்வளவு மின்சக்தியைப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். வடக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் குளிர்காலத்தில் சூடேற்ற, ஏராளமான சக்தி தேவை. அமெரிக்கத் தென் பகுதிகளில், நீண்ட கோடை காலத்தில், குளிர்சாதன மின்சாரத் தேவை அதிகம். ஆக, சராசரி வருடம் ஒன்றிற்கு, 12,000 கிலோவாட் மின்சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இது வருடத்திற்கு 16,900 பவுண்டு அல்லது 8 டன் கரியமில வாயுவை காற்றுமண்டலத்தில் கலக்கும். வட அமெரிக்காவில் 200 மில்லியன் வீடுகள் என்று வைத்துக் கொண்டால், இதன் மொத்த கரியமில வாயுவின் அளவு 1.6 கிகா டன். இன்னும் தென் அமெரிக்கா, ஆசியா, யுரோப், ஆஸ்த்ரேலியா எல்லாவற்றையும் சேர்த்தால், இந்த கணக்கு எளிதில் 10 கிகா டன்னைத் எட்டிவிடும்

இதிலிருந்து ஒன்று மட்டும் நிச்சயம். மின்சக்தி உற்பத்தியை மாற்றுவதை விட, உடனே பயனளிக்கவல்லது, மின்சக்திப் பயன். இதனால்தான், அரசாங்கங்கள், உலகெங்கும், பல்வேறு ஊக்கங்களைத் தருகின்றன:

  • எல்.ஈ.டி விளக்குகள், 6 வாட் சக்தியில், கம்பி விளக்கின் 60 வாட் ஒளியைத் தருகின்றன. இவற்றைப் பயன்படுத்தினால், நாம் இந்தப் பிர்சிசினையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறோம்
  • வீட்டில், வெப்பம் மற்றும் குளிரைக் கட்டுப்படுத்தும் வெப்ப சீர்நிலைக்கருவி (thermostat) நாம் சூடேற்றத்திற்கோ, குளிர்விப்பதற்கோ பயன்படுத்தும் மின்சக்தியை மிச்சப்படுத்தும்
  • இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சூரிய வெப்ப நீர் சூடாக்கி, மின்சாரத்திற்கு பதில் இயற்கையைப் பயன்படுத்தும் எளிமையான பயன்பாடு
  • குளிர் பகுதிகளில் உள்ள மிக முக்கிய பிர்ச்சினை, வெப்பக்காப்பு (heat insulation). சரியான ஜன்னல், கதவு போன்ற கட்டிட பகுதிகளில் வெப்பக்காப்பு சரியாக இல்லையெனில், அதிக இயற்கை வாயு மற்றும் மின்சாரம் வீட்டை/ வியாபாரத்தை சூடேற்றுவதில் செலவாகும். இதனால், அரசாங்கங்கள் சரியாக கட்டிடங்களை வெப்பக் காப்பு செய்வதற்கு பல வகை ஊக்கங்கள் (வரிச்சலுகை) அளிக்கின்றன. இந்த விஷயம், குளிர்காப்பிற்கும் சூடான பகுதிகளில் பொருந்தும் வியாபார கட்டிடங்களில், பெருவாரியாக கண்ணாடி வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படுகிறது. எல்லா கண்ணாடிகளும் ஒன்றல்ல. சில உயர்தர கண்ணாடிகள், சூரிய வெப்பத்தை அதிகம் கட்டிடத்திற்குள் அனுமதிக்காது. இதனால், குளிர்விக்கும் மின்சாரச் செலவு குறையும். கட்டிட கண்ணாடிக்கான செலவு ஒரு முறைதான். ஆனால், மின்சார செலவு மிச்சம், மாதா மாதம் என்பதை வியாபாரங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
  • அமெரிக்காவின் வட பகுதி மற்றும் கனடாவில், வீடுகளில், குளிர்கால வெப்பக்காப்பு மிகவும் முக்கியம். இங்கு ஜன்னல் கண்ணாடிகளின் அமைப்பில் இரண்டு அடுக்குகள், இடையே வெற்றிடத்துடன் உருவாக்கப்படுகிறது. இவ்வகை கண்ணாடிகள், 10 முதல் 15 வருடத்திற்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இவற்றின் செயல்திறன் நாளடைவில் குறைந்து, மின்சாரப் பயன் அதிகரித்துக் கொண்டே இருக்கும்
  • கட்டிடங்களின் கூரையின் மேல், வளர்க்கப்படும் செடிகொடிகள், கட்டிடம் உள்வாங்கும் வெப்பத்தைக் குறைக்கும். இதனால், கட்டிடங்களின் குளிர்ச்சி மற்றும் அதற்கான மின்சாரத் தேவையும் வெகுவாகக் குறையும்.

சற்று நேரம் அதிகமானாலும், மின்சக்தி உற்பத்தித் துறையிலும் செயல்திறன் கூட்டுவது மற்றும், தெல்லெச்ச எரிபொருளைக் குறைப்பதும் அவசியம். சில நடந்துவரும் முயற்சிகளின் பட்டியல்:

  • கடந்த 120 ஆண்டுகளாக நாம் உருவாக்கிய மின்சாரமும் இன்றையத் தேவையும் வெவ்வேறு. நம்முடைய வழக்கமான முறை, டில்லி அருகே புகையை கக்கும் NTPC அனல் மின் நிலையம் முழு டில்லிக்கும் மின்சாரத்தை வழங்கி, காற்றை மாசுபடுத்துவது
  • மாறுபட்ட சிந்தனையில் ஒன்று, அடர்த்தியான கதிரொளி மின்பலகைகள் மூலம், வெப்பத்தை உண்டாக்கி, நீரை ஆவியாக்கி, ண்-நீராவி சுழலிகள் மூலம் மின்சாரம் தயாரித்தல்
  • பல்லாயிரம் கதிரொளி மின்பலகைகள் மூலம், வெப்பத்திற்கு பதில், ஒளியை மின்சாரமாக்குதல். இது ஒன்றும் புதிய ஐடியா அல்ல. புதியது இது: ஒரு கரி அல்லது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தில், படிப்படியாக அதன் உற்பத்தியைக் குறைக்கும் பொழுது, கதிரொளி மின்பலகைகளை சேர்த்துக் கொண்டே போனால், மின்சார நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள்
  • சிறு காற்றுச் சுழலிகள் மூலம், 100 அல்லது 200 நுகர்வோர் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குதல்
  • கடலில் உள்ள காற்றுச் சுழலிகள் மூலம் மின்சக்தியை உருவாக்கி, கடலோரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல்
  • சாணம், சமயல் குப்பை போன்ற விஷயங்களை இயற்கையை எரிவாயுவாக மாற்ற வைத்து, சின்ன கட்டிடங்களுக்கு மின்சாரம் வழங்குதல். இது இந்தியா மற்றும் வளரும் நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது

மேலே சொன்ன முறைகள், உறபத்தி விரிவாக்க முறைகள். உற்பத்தியான மின்சக்தி, விரயம் ஆகாமல் பார்த்துக் கொள்லுதல் மிக அவசியம். அங்கங்கு மின்சக்தி உருவாக்கப்பட்டால், கம்பிகள் மூலம் மின்கடத்துதலில் ஏற்படும் நஷ்டம் குறையும். இது பெரிய நாடுகளின் மிகப் பெரிய பிரச்சினை. இன்னொரு முக்கிய தேவையான முன்னேற்ற்ம், உருவாக்கிய மின்சக்தியைத் தேக்குதல். இன்றைய மின்கலன்கள் ஏராளமாக முன்னேறினால் மட்டுமே இது சாத்தியம். ஒரு காரை இயக்கலாம், ஆனால், இன்றைய மின்கலன்கள், ஒரு ஊரை இயக்குமா என்பது சந்தேகமே.

இதுவரை நாம் பார்த்தது, மின்சார உற்பத்தி மற்றும் பயனில் எப்படியெல்லாம் தொல்லெச்ச எரிபொருளைக் குறைப்பது என்பது. இன்று 25%, என்றிருக்கும் இந்த அளவை, இன்னும் 10 ஆண்டுகளில், நாம் மனது வைத்தால், 10% ஆகக் குறைக்க முடியும். அதற்கான தொழில்நுட்பம் இன்று நம்மிடம் உள்ளது. இதில் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர், இருவரின் பங்கும் முக்கியம்.

தொல்லெச்ச எரிபொருளை நம் காற்றுமண்டலத்தில் கலப்பதில், மின்சக்தி உற்பத்தி மற்றும் பயனுக்கு அடுத்தபடியாக, நாம் சமாளிக்க வேண்டிய விஷயம், உண்வு உற்பத்தி (24%). இந்த 24% -தை பிரித்துப் பபார்ப்போம்:

  • 9%, – காடுகளை அழித்து, மற்றும் நிலத்தை தரிசலாக விடுவதால்
  • 6% – விவசாய விலங்குகள் காற்றுமண்டலத்தில் கலக்கும் மீதேன் வாயு. இதில் 1%, அரிசியிலிருந்து.
  • 4% – அதிகபட்ச உரத்திலிருந்து நீரில் கலந்து, காற்று மண்டலத்தில் இறுதியாகக் கலக்கும் நைட்ரஸ் ஆக்ஸைடு
  • 5% – மற்ற விவசாயக் காரணங்கள்

என்ன செய்தால், இந்தக் காரணிகளைக் குறைக்க முடியும்?

  • முதல் இரண்டு காரணிகள் தொடர்புடையவை. மாமிசத்திற்காக, ஆட்டையும் கோழியையும், மாட்டையும் வளர்க்கிறோம். இவற்றிற்கு தீனி போட காடுகளை அழிக்கிறோம். காடுகளை அழித்து, விவசாயம் செய்து, பயிர்களை கால்நடைகளுக்குக் கொடுக்கிறோம். இது ஒரு முடிவில்லா சங்கிலி. இதை உடைக்க ஒரே வழி, அடுத்த பத்தாண்டுகளில், மனிதர்கள் பெரிய அளவில் மாமிசத்தை உணவில் குறைக்க வேண்டும். நம்புவதற்கு கடினமாக இருக்கும் – மாமிசத்தைத் துறந்தால், ஏராளமான புதிய காடுகளை நாம் மீண்டும் உருவாக்கத் தொடங்கலாம். இவை பயன் தர பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், தொடர் புவி சூடேற்றம் குறைவது நிச்சயம். மாடுகள் வெளியேற்றும் மீதேன் வாயு, அவை உண்வு உண்டுவிட்டு விடும் ஏப்பத்தால்.
  • இன்னொரு மிகப் பெரிய விவசாயம் சார்ந்த விஷயம், விவசாயக் கழிவுகள். இது ஏழை மற்றும் பணக்கார நாடுகளில் இரண்டு வெவ்வேறு முறைகளில் வியாபிக்கிறது. பணக்கார நாடுகளில், அதிகமாக உணவை விரயம் செய்வதால் உருவாகும் கழிவு குறைக்கப்பட வேண்டும். வேண்டாத உணவை வாங்குவது, அதை உண்ணாமலே தூக்கி எறிவது, என்பது பணக்கார நாடுகளில் சகஜம். பெரும் சூப்பர் மார்கெட்டுகள், மிகப் பெரிய பொட்டலங்களில், எப்படியோ உண்வை/உண்வுப் பொருட்களை, நுகர்வோர் தலையில் கட்டி விடுகின்றன. தேவைக்கு அதிகமாக வாங்கப்படும் உணவுப்பொருள் மற்றும் உணவு, கழிவாவதில் என்ன வியப்பு? ஏழை நாடுகளில், பெரும் பிரச்சினை, விளைந்த காய்கள், பழங்களை சந்தைக்குக் கொண்டு செல்ல வசதி இல்லாதது. ஒரேடியாக பழுத்த வாழைப்பழம், மாம்பழம் அல்லது காய்கறிகள், தகுந்த குளிர்சா்ன வசதி இல்லாததால், வழியிலேயே அல்லது விவசாய நிலத்திலேயே கழிவாகின்றன. இந்த கழிவுப் பிரச்சினை ஒரு உலகளாவியப் பிர்ச்சினை. ஒரு புறம் உண்வுப் பற்றாக்குறை, மற்றொறு புறம், உணவுக் கழிவு என்பது நாம் அன்றாடம் பார்க்கும் முரண். கழிவாக மாறும் உணவு, காற்றுமண்டலத்தில் சூடேற்ற வாயுக்களை சேர்ப்பது உண்மை. இதைக் குறைப்பது மிகவும் அவசியம்
  • உரங்களைப் பெருவாரியாகத் தெளிப்பது அல்லது தூறுவது எளிதான விஷயம். ஆனால், மண் ஓரளவிற்கே, கொடுக்கப்பட்ட உரத்தைப் பயன்படுத்தும், அதிகமாக இருக்கும் உரம், நீருடன் கலந்து, அந்த நீர் ஆவியாகும் பொழுது,, நம் காற்றுமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்ஸைடாகக் கலக்கிறது. சரியான அளவு உரங்களைப் பயன்படுத்தினால், உர உற்பத்தியையும் குறைக்கலாம் (இது ஒரு ஏராளமான சக்தியை உறிஞ்சும் உற்பத்தித் தொழில்), காற்றில் கலக்கும் வெப்பமேற்றும் வாயுவையும் குறைக்கலாம்.
  • பல புதிய விஞ்ஞான ரீதியான விவசாய முறைகள், மேலும், இருக்கும் நிலத்தை மேலும் அதிக பயந்தருமாறு செய்யலாம்:
    • காப்பு வேளாண்மை (conservation agriculture)
    • மீளாக்க வேளாண்மை (regenerative agriculture)
    • நீர்பாசன செயல்திறன் (irrigation efficiency)

நாம் இங்கு பட்டியலிட்ட விஷயங்களை தீவிரமாக காரியத்தில் இறங்கினால், நிச்சயமாக, 24% பங்களிப்பை, 10% முதல் 14% -ற்கு, அடுத்த பத்தாண்டுகளில் சாத்தியம்.

அடுத்த, முக்கிய கரியமில வாயுக் காரணி, தயாரிப்புத் தொழில். ஊசியிலிருந்து ராக்கெட் வரை தயாரிப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாலிவிட்டது. ஆனால், இதன் காற்றில் கலக்கும் கரியமில பங்கு 21%. வழக்கம் போல, இந்த 21% -ஐ, பிரித்து ஆராயலாம்:

  • 5% எஃகு மற்றும் இதர உலோகங்கள் தயாரிப்பு. இவை ஏராளமான மின்சக்தி மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தும் தொழில்
  • 3% – சிமெண்ட் தயாரிப்பு. சிமெண்ட தயாரிப்பு, காற்றில், எஃகை விட அதிகமாக, கரியமில வாயுவை கலக்கும் ஒரு தேவையான, ஆனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழில்
  • 3% – ரசாயனத் தயாரிப்பு – இதில், உரம், வண்ணப்பூச்சு, அமிலம் மற்றும் பல தயாரிப்புகள் காரணிகள்
  • 3% – நாம் தூக்கி எறியும் பொருட்களை எரிப்பது அல்லது புதைப்பதற்கான தொழில் உருவாக்கும் கரியமில வாயு
  • 8% – மற்ற தொழில்கள் – பெட்ரோலிய, ப்ளாஸ்டிக், வாகனங்கள் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது

இன்னொரு மிக முக்கிய தயாரிப்பு சார்ந்த விஷயம், குளிர்விக்கும் திரவங்கள் சார்ந்த விஷயம். நாம் ஓஸோன் அடுக்கு பகுதியில் எப்படி CFC குளிர்திரவங்கள் ஓஸோன் அடுக்கை பாதிக்கிறது மற்றும் மாண்ட்ரீயல் ஒப்பந்தப்படி எப்படி, உலகம் ஒன்று சேர்ந்து அதை தடுத்து வெற்றி கண்டது என்று பார்த்தோம். CFC குளிர்திரவங்களுக்கு மாற்றாக, HFC குளிர்திரவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் பார்த்தோம். இது தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகியுள்ளது. HFC குளிர்திரவங்கள், ஓஸோன் அடுக்கை குலைக்காவிட்டாலும், ஏராளமாக நம் காற்றுமண்டலத்தில், கரியமில வாயுவை கலக்க வழி செய்கிறது. தொழிற்சாலைகளில் குளிர்திரவங்களின் கசிவு அதிகம்.

இதற்கான தீர்வு என்ன?

பல வழிகள் தயாரிப்பு தொல்களுக்கு இன்று உள்ளது உண்மை:

  • ப்ளாஸ்டிக், உலோகங்கள் மற்றும் சிமெண்ட் ஆகிய மூன்று பொருட்களுக்கும், மாற்றுப் பொருள்கள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் பயன்பாடு அப்படியே இருக்க, இவை, குறைந்த சக்தியோடு, குறைந்த கரியமில வாயுவை காற்றில் கலக்கும் வழிகள் உள்ளன. அரசாங்கங்கள், இந்த மூன்று தயாரிப்பாளர்களையும் மாற்ற, தடாலடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முன்னமே சொன்னது போல, கழிவுகளைக் கொண்டு, புதிய பொருட்களை உருவாக்கலாம். எரிக்கப்படும் குப்பையிலிருந்து, மின்சக்தியையும் உருவாக்கலாம்
  • குளிர்படுத்தும் ரசாயன வாயுக்களை, அப்புறப்படுத்த்ப்படும் பொழுதும், பயன்படுத்தப்படும் பொழுதும், இவை காற்றுமண்டலத்தில் கலாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இன்னும் சில ஆண்டுகளில் (சில நம்பிக்கையூட்டும் அராய்ச்சி), இவை புதிய ரசாயனங்களுக்கு (புவி சூடேற்றா குளிர்சாதன வாயுக்கள்) மாறுதலும் முக்கியம்
  • மாற்று முயற்சி ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்படும் அதே நேரத்தில், இருக்கும் தயாரிப்பு அமைப்புகளின் செயல்திறன் (அதாவது கரியமில வாயு கண்ணோட்டத்தில்) அதிகப்படுத்தப்பட வேண்டும்

இந்த முயற்சிகள், 21% பங்கீட்டை, 12% முதல் 15% -ற்கு, அடுத்த பத்தாண்டுகளில் செய்து முடிக்க நம்மிடம் வழிகள் உள்ளன. அரசாங்கங்களின் தொலைநோக்கு மற்றும் செயல்பாடு ஒன்றே குறை.

அடுத்த முக்கிய காரணி, நாமெல்லாம் அன்றாடும் பார்க்கும், போக்குவரத்துத் தொழில். 14%, தொல்லெச்ச எரிபொருளை எரித்து, கரியமில வாயுவை காற்றுமண்டலத்தில் கலக்கும் இந்தத் தொழில், மூன்றாவது பெரிய காரணி என்பது சற்று வியப்பளிக்கக்கூடும். இதையும் பிரித்துப் பார்த்து விடுவோம்:

  • 10% – சாலைப் போ்க்குவரத்து
  • 2% – விமானப் போக்குவரத்து – வணிக மற்றும் ராணுவப் போக்குவரத்து
  • 2% – மற்றப் போக்குவரத்து – கப்பல், ரயில் இதில் அடங்கும்

சாலைப் போக்குவரத்தை நாம் முதலில் சமாளித்தால்தான், இந்தன் பங்கீட்டைக் குறைக்க முடியும். சில முக்கிய விஷயங்கள் இங்கு மனதில் கொள்ள வேண்டும்

  • வட அமெரிக்காவில், சரக்கு ரயில்கள் டீசலில் இயங்குகின்றன. சரக்குப் போக்குவரத்து, பெரும்பாலும், வட அமெரிக்காவில் லாரிகளின் மூலம் நடக்கிறது. பல லட்சம் லாரிகள், ஒவ்வொரு நாளும் கனடா மற்றும் அமெரிக்காவில் சரக்குகளை துறைமுகத்திலிருந்து சில்லரை வியாபாரங்கள், தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லுகின்றன. இதன் பங்கு கார்களை விட பல மடங்கு அதிகம். டெஸ்லா நிறுவனம், மின்சார லாரிகளை அறிமுகப்படுத்துவதாகச் சொல்வது சற்று நம்பிக்கை அளிக்கிறது
  • கார்களுக்கு வருவோம்.
    • சராசரி கார் ஒன்று, வட அமெரிக்காவில், வருடத்திற்கு 24,000 கி.மீ. பயணிக்கும்.
    • ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலை எரிக்கையில், சராசரி 2.37 கிலோ, கரியமில வாயுவை காற்றில் கலக்கிறது
    • ஒவ்வொரு லிட்டருக்கும், சராசரி கார், 10.55 கி.மீ தூரம் போகிறது. அதாவது, 24,000 கி.மீ. பயணத்திற்கு, ஏறக்குறைய 2,400 லிட்டர் பெட்ரோல் தேவை. இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால், 2,400*2,37 = 5,688 கிலோ கரியமில வாயுவை காற்றில் கலக்கிறோம். இது, காற்று மண்டலத்தில் கலந்து, பல நூறு ஆண்டுகள், நம் பூமியைச் சூடேற்றும்
    • சராசரி காரின் எடை 2 டண். காரின் எடையை விட மூன்று மடங்கு ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு காரும் கரியமில வாயுவை காற்றில் கலந்து விடுகின்றன

  • இதற்கு என்ன தீர்வு?
    • முதல்படியாக, ஹைப்ரிட் கார்கள் அல்லது மின்சாரக் கார்கள், இவை இரண்டு மட்டுமே விற்கப்பட வேண்டும். ஹைப்ரிட் கார்கள், பேட்டரி உதவியுடன், கொஞ்ச தூரம் பயணிக்கும். பிறகு, வடிவமைப்பிற்கு தகுந்தாற்போல, மின்சாரம் மற்றும் தொல்லெச்ச/ எரிபொருள் மூலம் கணினி உதவியுடன் பயணத்தை மாற்றிக் கொண்டே வரும். வெறும் தொல்லெச்ச எரிபொருள் கார்களை விட இவை குறைவான பெட்ரோலையே பயன்படுத்தும். இந்தியா, சைனா போன்ற தேசங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இதைச் செய்யத்தான் வேண்டும். மேற்குலகம், இதற்கு முன்னுதாரணமாய் அடுத்த 2 ஆண்டுகளில் செயலிறங்க வேண்டும்
  • மின்சாரக் கார்கள் இன்று விலை அதிகமாக உள்ளன. சற்று அரசாங்க ஊக்கம்/ வரிச் சலுகை இருந்தால், இவற்றை மேலும் விலை குறைக்க முடியும். இது நடந்து வருகிறது. மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்
    • சில சோதனை முயற்சிகளில், 400 கி,மீ தூரம் பறக்கும் மின்சார விமானங்கள் வெற்றி பெற்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது
    • SUV -களுக்கு 500% அதிக வரி விதித்து அவற்றை மிக அதிக விலை உயரச் செய்ய வேண்டும்
    • மின்சாரப் பொதுப் போக்குவரத்து அதிகமாக்கப்பட வேண்டும்

இங்கு சொல்லியுள்ள யோசனைகள் எல்லாம் இன்றைய சாத்தியம். பெட்ரோல் கார்களை கொஞ்சம் கொஞ்சமாக துறக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில், இந்த 14% பங்கீடு, 7% ஆக குறைப்பது சாத்தியம்.

கடைசியாக, நாம் பார்க்கப் போகும் காரணி, 6% பங்கிடு உள்ள கட்டிடங்கள். கட்டிடங்கள், கரியமில வாயு விஷயத்தில் இரண்டு கோணங்களில் பார்ப்பது அவசியம். இவை, ஏராளமான சக்தியை பயன்படுத்துவதோடு, கரியமில வாயுவையும் உமிழும் காரணிகள். vஅழக்கம் போல, பிரித்து ஆராய்வோம்:

  • 2% – வணிகக் கட்டிடங்கள்
  • 4% – குடியிருப்புகள்

ஒரு சராசரி வட அமெரிக்க (மன்னிக்கவும், இந்தியப் புள்ளி விவரங்கள் இந்த விஷயங்களில் மிகவும் வீக்) வீடு வெளியேற்றும் கரியமில வாயு, வருடத்திற்கு 6,000 கிலோ. இது பெரிய விஷயமா என்று தோன்றலாம். சராசரி வீட்டில் இரண்டு கார்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த வீட்டின் வருடாந்திரப் பங்கு 18 டண் கரியமில வாயு! இது போல, 200 மில்லியன் வீடுகள் வட அமெரிக்காவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நாம் இங்கு பார்ப்பது 3.6 கிகா டண் கரியமில வாயு.

இதற்கு என்ன தீர்வுகள்?

  • வீட்டில் உள்ள உலை, கொதிகலன்கள், குளிர்சாதன எந்திரங்கள், செயல்திறன் அதிகமானதாக மாற்றப்பட வேண்டும். மேலும், வீட்டின் வெப்பம் மற்றும் குளிர்காப்பு திறன் அதிகப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கங்கள், இவ்வகை மாற்றங்களுக்கு மேற்குலகில் சலுகைகள் அளிக்கின்றன
  • வீடுகளில், திறன் வெப்ப மற்றும் குளிர் கட்டுப்பாட்டுக் கருவிகள் நிறுவப்பட வேண்டும்
  • குளிர் பகுதிகளில், கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் குளிர் மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டிற்கு உதவும் ரகமாக இருக்க வேண்டும். கட்டிடங்களில், விரயத்தால் நிறைய சக்தி வீணாகிறது
  • முன்னமே சொன்னது போல, கூரைகளில் சின்ன செடிகள் குளிர்விப்பதற்காக நிறுவப்பட வேண்டும்
  • சூரிய வெப்ப நீர்கொதி எந்திரங்கள், மின்சாரத்தை உறிஞ்சாமல், நீரைச் சூடாக்குகின்றன

ஆக, இந்தப் பகுதியில் நாம் விவரமாகப் பார்த்தது, 62% தொல்லெச்ச எரிபொருள் கார்ரணியை எப்படி எல்லாம் நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது. இதில் உள்ள பெரும்பாலான இன்றைய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தினால், இந்த பங்கீட்டை, 25% முதல் 30% ஆகக் குறைக்க முடியும்.

அடுத்த பகுதில், நாம் பார்க்கப் போவது, இந்த கரியமில வாயுவை உட்கொள்ளும் இயற்கைக்கு நாம் எப்படி உதவுவது என்பதைப் பற்றியது. காரணிகளை மட்டும் சமாளித்தல் போதாது. இயற்கையின் உள்வாங்களுக்கும் உதவுதல் அவசியம். அப்பொழுதுதான், நாம் இந்தப் பிர்ச்சினையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும்.

Series Navigation<< புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.