தந்திரக் கை – 1

This entry is part 1 of 3 in the series தந்திரக் கை

எங்கே போகிறோம் என்று அவளுக்கு ஒரு யோசனையும் இல்லை. தூங்க வேண்டும் என்று ஆகும்போது வழியில் வரும் முதல் மோடெலில் அவள் தங்கினாள்; ப்யூயிக் காரின் பெட்ரோல் மானி சிவப்புப் பகுதிக்கு இறங்கும்போது அவள் பெட்ரோலை நிரப்பிக் கொண்டாள், சில சமயம் ஆரஞ்சு சாற்றையோ, ஒரு சாண்ட்விச்சையோ அங்கே இணைப்பாக இருந்த சிறு அங்காடியில் வாங்கினாள். அவ்வப்போது இந்த மாதிரி நின்ற இடங்களில், அந்த பெட்ரோல் பம்பின் பணியாளரோ அல்லது சிற்றங்காடியின் வியாபாரப் பணியாளரோ அல்லாத வேறு ஒருவரிடம் சிறிது பேசினாள், அந்த உரையாடல்களை நிமிஷமாக மறந்து போனாள், மற்றெல்லாவற்றையும் கூட அவள் மறந்திருந்தாள், மறக்காதது இனிமையாக இருந்த புதன்கிழமை பின் மதியத்தில், சில வாரங்களுக்கும், உலகங்களுக்கும் முன்னதாக, அவளுடைய வீட்டு வாயில் கதவைத் தட்டி அங்கே வந்த இளம் பொலீஸ்காரர் சொன்ன வார்த்தைகள்தாம். கலக்கம் கசிந்த குரலில், அந்தக் காவலர் அவளுடைய கணவரும், மகளும் இறந்து விட்டார்கள் என்று சொன்னதும், அவரது குரலின் நினைவையும் தவிர வேறெதுவும் அவளுக்குள் இயங்கவில்லை: அவள் வீட்டிலிருந்து ஆறேழு தெருக்கள் தள்ளி, ஒரு தெருச் சந்திப்பில் தூக்கக் கலக்கத்திலிருந்த ஒரு பதின்ம வயதினன், தன் அக்ஸிலரேட்டரை, அது ப்ரேக் என்று தவறுதலாக நினைத்து அழுத்தியதில், கசங்கி மடிந்து, இனம் காணமுடியாத அழிப்பாக, சாம்பலாக ஆகியிருந்தது அந்தக் கார்.

சவ அடக்க நிகழ்ச்சி இருந்தது- அவள் இருந்தாள், ஆனால் அங்கே இல்லை- மேலும் பொலீஸ்காரர்கள், பிறகு ஒரு வழக்கறிஞர்; ஆலனின் சகோதரி எல்லாவற்றையும் நிர்வகித்திருந்தாள், எப்போதும் போல, தலையிடுவதே வழக்கமாகக் கொண்டிருந்த அந்தக் கடங்காரிக்கு இந்த ஒரு முறை அவள் உண்மையில் நன்றியுணர்வு கொண்டாள். அதெல்லாம் இப்போது மிகத் தொலைவாகி இருந்தன, நன்றியுணர்வும், பழைய வெறுப்புணர்வும் எல்லாம், ஒரு கணம் கட்டுப்பாடு இழந்து மூடிக் கொண்ட, அந்தப் பையனின் கண்ணிமைகளால் ஒன்றுமில்லாதவையாக ஆகிப் போயின. அந்த சூனியம், சவ அடக்கம் முடிந்த பின் பல தினங்களுக்கு அவளைப் போர்த்தி, வசதியாக வைத்திருந்தது, அதனால் முடிவில்லாது வந்த தொலைபேசி அழைப்புகளோடு மல்லாடவும், வருத்தம் தெரிவித்த கடிதங்கள், மின்னஞ்சல்களுக்கெல்லாம் பதிலெழுதவும், சமூகப் பாதுகாப்பு அமைப்பிடம் செய்தி சொல்லவும், கல்லூரி ஆசிரியர் ஓய்வூதிய நிதிக்குத் தெரிவிக்கவும் முடிந்தது. ஆலனுடைய ஆய்வு மாணவர்களில் மூன்று பேர்கள் உதவியோடு அவருடைய அலுவலகத்தைச் சுத்தம் செய்து பொருட்களை எடுத்து வந்தாள், கல்லூரி வளாகத்தில் அஞ்சலி நிகழ்ச்சிக்குப் போனாள், அது சீரானதாகவும், உண்மையிலேயே மனதைத் தொடுவதாகவும் இருந்தது, அல்லது அப்படித்தான் அந்த சூனியத்துக்குச் சொல்லப்பட்டது. அதைக் கேட்க அவள் சந்தோஷப்பட்டாள்.

அந்த சூனியம் அவளுக்கு நன்றாக உதவியது, ஆலனுடைய முதல் திருமணத்தில் பிறந்த மகள் அவருடைய பொருட்களில் சிலவற்றை அவர் நினைவாக வைத்துக் கொள்ளவென்று எடுத்துப்போக வந்த தினம் வரை நீடித்தது. அவள் முற்றிலும் நயமான பெண்ணாகவே இருந்தாள், தன் அம்மாவின் மண வாழ்வில் குறுக்கிட்ட ஒருத்தியின் முன்னிலையில் கூட, நியமப்படி மரியாதை காட்டியவளாகவும் இருந்தாள், அவளுடைய அனுதாபம் சந்தேகத்துக்கிடமின்றி, நல்ல நடத்தை உள்ளவர்கள் காட்டக்கூடிய விதமாக நிஜமானதாகவே இருந்தது; ஆனால் அவள் ஒளிப்படங்கள், மற்றும் புத்தகங்களை ஒரு மளிகைக்கடைக் காகிதப் பையில் வைத்துக் கொண்டு கிளம்பிப் போனதும், அந்த வெறுமை அகன்று இடம் விட்டது, இவள் முழுதாகத் தன்னிலை அழிந்து போனாள்.

அவளுடைய கணவரின் சகோதரர் அவளை அமைதிப்படுத்தினார், அறிவு பூர்வமாகப் பேசினார், உண்மையான கனிவுடனும், கரிசனத்துடனும் அவளுடைய துன்பத்தை மட்டுப்படுத்திக் கொள்ள உதவினார். ஆனால் அந்த இரவே, யாரிடமும் பேசாமல், வெறுமையான புத்தியுடன், ஆனால் திட்டமிட்ட முறையில், தான் ஒரு சிறு கைப்பெட்டியை அவசியப் பொருட்களால் நிரப்புவதையும், அதை கராஜில் நிறுத்தப்பட்டிருந்த, ஆலனின் பழையதான, பெரிய ப்யூயிக் காருக்கு எடுத்துப் போவதையும், பிறகு வீட்டுக்குள் மறுபடி போய் தன்னுடைய செல் ஃபோனையும், அதற்கான சார்ஜரையும் ஆலனின் மேஜையில் இழுப்பறையில் வைப்பதையும், ’காரை ஓட்டிக் கொண்டு வெளியே போயிருக்கிறேன்,’ என்று சொல்லும் ஒரு சிறு குறிப்பை தன் நாத்திக்கு எழுதி வைப்பதையும், தானே கவனிப்பதாக அவள் அறிந்தாள். அதற்குப் பிறகு அந்த ப்யூயிக்கைத் தெருவுக்கு ஓட்டிச் சென்றவள், தான் ஒரு காலத்தில் வசித்து வந்த வீட்டைத் திரும்பிக் கூட பாராமல் மேலே பயணம் செய்தாள்.

அவள் வடதிசையில் போனதற்கு ஒரே காரணம், அவள் வீட்டை வீட்டுப் போன திக்கில் முதலில் தட்டுப்பட்ட நெடுஞ்சாலைக்கான நுழைவுப் பாதை அந்தத் திக்கில் போகச் சுட்டியதுதான். அதற்குப் பிறகு அவள் நேராக ஓட்டிக் கொண்டு போகவில்லை, ஏனெனில் நேரே போய் அடைய ஒரு குறிக்கோளும் இல்லை. விலகிப் போவதைத் தவிர வேறு எந்த இடமும் நோக்கத்தில் இல்லாதவள், தொடர்ந்து பயணம் போவது என்பதைத் தவிர வேறு அறிந்த திட்டம் ஏதும் இல்லாமல், அந்த நெடுஞ்சாலையை விட்டு அவ்வப்போது விலகிப் போனாள், பிறகு பல மாநிலங்களிடையே செல்லும் தட்டையான ரிப்பன் போன்ற அந்த நெடுஞ்சாலைக்கு தற்செயலாகத் தேர்ந்தெடுத்த இடைவெளிகளில் திரும்பினாள். சிலசமயம் பக்கவாட்டுச் சாலைகளுக்குள் போனாள், ஊர்களுக்கு வெளியே சுற்றிச் செல்லும் சாலைகளில் பயணித்தாள், எங்கு என்றில்லாது அங்குமிங்குமாகத் தடங்கள் மாறினாள். குறிக்கோளில்லாது, புத்தியிலும் ஏதும் இல்லாது, தன் வலியைக் கூட அதிகம் உணராது – அதுவும் அந்த சூனிய உணர்வின் பகுதியாகி விட்டிருந்தது – அவள் சளைக்காமல் மேன்மேலும் போராடிப் போனாள். பயணம் நின்ற இடங்களில் துரிதமாக உறக்கம் வந்தது அவளுக்கு, ஆனால் ஒரு போதும் நீண்ட உறக்கமாக இல்லை, இருள் பிரியும் முன்னமே பெரும்பாலும் மறுபடி பயணம் போனாள், நிலா இன்னும் வானில் உயரே இருக்கையிலேயே சாலையில் இருந்தாள். அவ்வப்போது பற்களிடையே மெல்லிய சீட்டி அடித்துக் கொண்டு போனாள்.
தட்பவெப்ப நிலை சூடாக இருந்தது, ஆனால் மலைப் புறங்களின் உயரமான கணவாய்களில் இன்னும் பனிப் பொழிவு உருகாமல் நின்று கொண்டிருந்தது. அவள் கடற்கரையருகே கிளம்பினாள், அது இப்போது பல மாநிலங்களுக்குப் பின்னே இருந்தது; இப்போது மலைகளே தொடர்ந்து எதிரில் வந்தன. ப்யூயிக் அவற்றில் கஷ்டப்பட்டுத்தான் பயணம் செய்தது, ஏகப்பட்ட பெட்ரோலை விழுங்கியது, ஆனால் வளைவுகளில் மான் போல எத்தனமின்றித் திரும்பியது, அனேகமாக தானே வழியைக் கவனித்து இயங்கியது போலச் செயல்பட்டது. அது அவசியமாக இருந்தது, ஏனெனில் அவளில் பகுதிதான் அந்த ஸ்டியரிங் சக்கரத்தின் பின்னே இருந்தது; மீதி எல்லாம் ஆலனோடு, அவர்களுடைய மகள் மணற்கோட்டை ஒன்றைக் கட்டுவதைப் பார்த்திருந்தது, அவரோடு புத்தகக்கடைகளில் உலவியது, இடம் தெரியாத தெருக்களில் அவர் கையை நாடிப் பிடித்தது, அவள் தலையைத் திரும்பிப் பார்க்காமலே அந்தக் கை எங்கே இருக்கும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் அவள் அவருடன் பேசுவதில் ஆழ்ந்திருப்பதால், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு நிறைய நேரம் ஆகி இருந்தாலும், காரின் முகப்பு விளக்குகளை எரிய விடத் தாமதமாக்கி இருப்பாள். ஆனால் அந்தக் கார் அவளைப் பராமரித்தது, அது அப்படிச் செய்யும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. என்னவானாலும், அது ஆலனுடைய காராயிற்றே.

சில நேரங்களில் அந்த ப்யூயிக் சாலையின் வலது ஓரத்தை நோக்கி அலைவது போலக் காட்டும், அல்லது இடது புறம் எதிரே போக்குவரத்து வருகிற பாதையில் இடறுவது போல அலையப் போகும், அந்தப் போக்கை அவள் தெளிவில்லாது, விட்டேற்றியாகக் கவனித்திருப்பாள். ஒரு முறை அவள் உரக்கக் கேட்டாள், ‘இதுதான் உனக்கு வேணுமா? நான் உன்னிடம் விட்டிருக்கேன் – நீ என்னை ஆலன் கிட்டே அழைச்சிகிட்டுப் போகறியா?’ ஆனால் எப்படியோ அவளுடைய வழிகாட்டலாலோ, அல்லது தன்னிச்சையாலோ, அந்தப் பழைய கார் எப்போதும் தன் போக்கைச் சரி செய்து கொள்ளும், அவர்கள் சேர்ந்தே போனார்கள்.

இப்போது அந்தச் சாலை கீழிறங்கத் தொடங்கியது,பின் சமதளமாகி, விவசாய நிலங்களும், பழத் தோப்புகளும் உள்ள நிலப்பரப்பு வழியே போயிற்று. அவ்வப்போது ஒரு சிற்றூரைக் கடந்து போயிற்று, அவை எல்லாமே மிக அதிகமான குறுக்குச் சாலைகளைக் கொண்டிருந்தன. முந்தைய நாள் இரவில் பெரும்பகுதியை அவள் கார் ஓட்டுவதில் கழித்திருந்தாள், இன்று பகல் பூராவும் ஓட்டி இருந்தாள், தன்னுள் தொலைவில் இருந்த ஒரு பகுதியில் சீக்கிரமே எங்காவது நிறுத்த வேண்டி இருக்கும் என்று தெரிந்து கொண்டிருந்தாள். சந்தியா நேரத்தின் ஒளி மங்கிய வேளையில், ஒரு மணிக்குச் சற்றுக் குறைந்த நேரத்தில், அடுத்த ஊருக்கு வந்தாள். அங்கு பல பாலங்களின் கீழே ஒரு ஆறு, ஈயமும் வெள்ளியுமான நிறத்தோடு அந்த அஸ்தமன நேரத்தில், ஊர் வழியே வளைந்து நெளிந்து ஓடியது.

இடம் உண்டு என்ற அறிவிப்புப் பலகையோடு தட்டுப்பட்ட முதல் மோடெலில் அவள் பதிவு செய்து கொண்டாள், அருகாமையில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டுக்குப் போக மூன்று தெருக்களைக் கடந்து நடந்தாள், அது தெருவிலிருந்து பார்த்தால் ஒரு மதுபானக் கடை போலத் தெரிந்தது. அதில் 1950களின் பாணியில் இருந்த ஒரு சாப்பாட்டுக் கடை இணைக்கப்பட்டிருந்தது. உள்ளே போனபின் அவள் எதிர்பார்த்ததை விடப் பெரியதாக இருந்த அக்கடையில் பாதிக்குச் சற்றுக் குறைவான மேஜைகளும், சாவடிகளும் நிரம்பி இருந்தன. ‘உங்களுக்கு உதவி கிட்ட இங்கே காத்திருங்கள்’ என்ற அறிவிப்புப் பலகைக்கு இடது புறம் ஒரு சுவரொட்டி தொங்கியது. அதில் இருந்த ஒளிப்படத்தில் இருந்தவர் கழுகு மூக்கு கொண்ட ஒரு ஆண், நடுவயதுக்காரர், வெண் முடியும், அடர்ந்த கண் புருவங்களும் கொண்டவர், மாலை நேரத்துக்கான சம்பிரதாயமான உடைகள் அணிந்தவர்: முதுகுக்குக் கீழே நீண்ட மேலங்கியும், வில் வடிவக் கழுத்துப் பட்டியும், உயர்ந்த குல்லாயும் அணிந்திருந்தார். அவர் இலேசாகச் சிரித்தபடி இருந்தார், நீண்ட, நேர்த்தியான விரல்களிடையே விளையாடும் சீட்டுக் கட்டின் அட்டைகளை விசிறியாகப் பிடித்திருந்தார். படத்தின் கீழே பெயர் ஏதும் இல்லை; தலைப்பு சொன்னது, டின்னர் மாஜிக். அவள் அதைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள், ஓர் இளம் பரிசாரகப் பெண் வந்து அவளை ஒரு தடுப்பறைக்கு அழைத்துப் போனாள்.

தன் சாப்பாட்டுக்கு உத்தரவு கொடுத்து விட்டு – வீட்டை விட்டுக் கிளம்பிய பின் இதுதான் முதலாக அவள் மேஜையில் அமர்ந்து ஏற்கும் ஒரு சாப்பாடு – அவள் அந்தப் பரிசாரகியிடம் அந்த டின்னர் மாஜிக் பற்றிக் கேட்டாள். அவளுக்குத் தன் குரலே சற்று வினோதமாகக் கேட்டது, மொழியும் தயக்கத்துடன், கஷ்டத்தோடு வெளி வந்தது. அந்தப் பெண் தோள்களைக் குலுக்கினாள், “அவர் முழு நேரம் வர்றதில்ல- அப்ப இப்ப வர்றார், சில ராத்திரில ஷோ நடத்தறார், அப்றம் போயிடறார். சில வாரங்கள் முன்னே ஆரம்பிச்சார். அவரோடு ரெண்டு வார்த்தை கூட இன்னும் பேசல்லை. என் முதலாளியைத் தவிர, வேற யாரும் அவர் கூடப் பேசினதாத் தெரியல்ல.’

சமையலறையைப் பார்க்கத் திரும்பினவள், தோளுக்கு மேலாகச் சொன்னாள், “அவர் நல்லாச் செய்வார். முடியும்னா இருந்து காட்சியைப் பாருங்க.”
அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடிக்குமுன்னே டின்னர் மாஜிக் நிகழ்ச்சி துவங்கி விட்டது. மேடை ஏதும் இல்லை, பின்னணியில் அலங்கரிக்கும் இசை இல்லை, முறையான அறிமுகமும் இல்லை: மாலை நேரத்துக்கான சம்பிரதாய உடையிலிருந்த ஒருவர் சமையலறையிலிருந்து சாப்பாட்டு அறையின் நடுவிற்கு வந்தார், உண்பவர்களுக்குச் சுருக்கமாகக் குனிந்து மரியாதை செலுத்தி விட்டு, மெல்லிய, பலவண்ணக் கழுத்துப் பட்டி ஒன்றை மேலே வீசினார். அது ஆடி இறங்குகையில் அதைப் பற்றினார், அதைத் தன் முன் நீட்டிப் பிடித்தார், தன் பட்டுத் தொப்பியிலிருந்து, பளபளப்பான தோல் காலணி வரை இருந்த உருவை அதற்குப் பின் மறைத்தார்…….காணாமல் போய் விட்டார், அயர்ந்து போன பார்வையாளர்களுக்கு மறுவினை தெரிவிக்கக் கூட இயலவில்லை. அவர் அந்த உணவகத்தின் முன் வாசல் கதவு வழியே மறுபடி நுழைந்த போது, ஒரு கணம் கழித்து கைதட்டல்கள் துவங்கின.

மறுபடி பார்வையாளர்கள் முன் நின்றபடி, அந்த மாயாஜால வித்தைக்காரர் முதல் தடவையாகப் பேசினார். அவர் குரல் ஆழமாக, தெளிவாக இருந்தது, கீழ் ஸ்தாயியில் சிறிது கரகரப்பாக இருந்தது கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. “சீமாட்டிகளே, சீமான்களே, டின்னர் மாஜிக் என்பதன் பொருள் அதன் பெயரில் உள்ளதுதான். என் மீது ஒரு கணம் கூடக் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும், உங்கள் காஃபியிலும், இனிப்பு அப்பத்திலும் கவனம் செலுத்தலாம்- அது அருமையான இனிப்பு, இங்கே சிறப்பானது லெமன் மெர்ராங் – அல்லது உங்களுடைய துணைவர்களிடம் கவனம் செலுத்தலாம், அதை மெர்ராங்கை விடக் கூடுதலாக நான் சிஃபாரிசு செய்கிறேன். என்னை உங்கள் அடுத்த வீட்டிலிருக்கும் கிழவர், இரவு பூராவும் விழித்திருந்து தன் சிறுபிள்ளைத் தனமான தந்திரங்களைப் பழகிப் பார்க்கிறவர் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் போட்டிருக்கிற மலிவான இந்த வாடகை உடுப்புக்குப் பின்னே நான் அப்படி ஒரு ஆள்தான். சரி, இப்போ பாருங்க..”

அவர் உயரமாக, சுவரொட்டியின் படத்திலிருந்ததை விட வயதானவராக இருந்தார் – எவ்வளவு வயதானவர் என்பதைக் கணிக்க முடியாதபடி இருந்தார், ஆனால் அவரது கன்னங்களிலும், சற்றே சாய்ந்திருந்த கண்களின் அடியிலும் இருந்த கோடுகள், அந்த ஒளிப்படத்திலிருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்; ஆலன் தன் கணினியால் அது போல நீக்குவதை அவள் பார்த்திருக்கிறாள். தன் தடுப்பறையிலிருந்து பார்த்தவள், கை முட்டியின் மீது தாடையை வைத்திருந்தாள், அந்த மனிதர் தன் பல தந்திர வித்தைகளை வரிசையாக நடத்திப் போனபோது, அவற்றோடு நிகழ்ச்சியை நடத்த அவர் நிகழ்த்திய உரை மிகச் சாதாரணமாக இருந்தது, ஆனால் அந்த வித்தைகள் ஒவ்வொன்றும் அற்புதங்கள் என்றே அழைக்கப்படக் கூடியவை போல இருந்தன, அவள் அவரை விட்டுத் தன் பார்வையை இம்மி கூட அகற்றவில்லை. யானைகளும், புலிகளும் இல்லாமல், ஜிகினா நட்சத்திரங்கள் பதித்த ஆடைகள் அணிந்து, நீண்ட கால்களுடன் நடமாடும் உதவியாட்கள் இல்லாமல், அவர் அறையில் உள்ளவர்களின் கவனத்தைப் பிடித்து வைத்திருந்தார். தன் கையிலிருந்த கரிய கோலை ஒரு தூண்டிலைப் போலப் பயன்படுத்தி, சிரித்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளிலிருந்து இழுத்தார். அதைத் தன் கைவிரல் நுனிகளிடையே இலேசாகப் பிடித்து, கூட்டிசையை நடத்துபவரின் கோலைப் போல அல்லது கம்பளி நூலைப் பின்னுவோரின் ஊசியைப் போலப் பயன்படுத்தி, ஒவ்வொரு மேஜையிலும் கை துடைக்க வைக்கப்பட்ட துணிகளை மேலே எழுந்து மிதக்கச் செய்து, பருத்தித் துணிகளின் சன்னமான ஒலி கொண்ட சிறு புயலாக அறையைச் சுற்றி சுழலச் செய்தார். அவை பின்னர் அந்தந்த மேஜைகளிலேயே மறுபடி போய் அமர்ந்தன. பல பார்வையாளர்களைப் பெயர், முகவரி, தொழில், மண உறவு நிலை, மற்றும், ஒரு கடைசி நேர எண்ணமாக, காரோட்டும் உரிமைச் சீட்டில் உள்ள மாநிலப் பெயர், மற்றும் எண்ணையும் சொல்லி அடையாளப்படுத்தினார். அவள் அவர்களில் ஒருத்தியாக இருக்கவில்லை; உண்மையில் அந்த மாஜிக் வித்தைக்காரர் அவளுடைய கண்களை நோக்குவதைக் கவனமாகத் தவிர்த்த மாதிரி இருந்தது. அவள் அத்தனை ஈடுபாடு காட்ட எண்ணியிருக்கவில்லை, இருந்தபோதும், அவளுடைய ஆர்வம் தூண்டப்பட்டிருந்தது- இன்னும் சொன்னால் அவளுக்கு இப்போது உறக்கம் கலைந்து விழிப்புத் தட்டிய மாதிரி இருந்தது –அவள் இன்னொரு கோப்பை காஃபிக்கு உத்தரவு கொடுத்து விட்டு, இருந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

முன்னேற்பாடற்ற சைகையாக, பழைய பாணியில் குதித்துக் கூடையில் பந்தைப் போடுவது போல, எல்லா மேஜைகளிலும் இருந்த உண்ணும் கலன்கள் எல்லாம் எழுந்து பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் கிணுகிணுத்து ஒலிப்பதாகச் செய்து முடித்த மந்திர வித்தைக்காரர், எப்படி திடீரென்று முதலில் நுழைந்தாரோ, அதே போல சட்டென்று நடந்து வெளியேறி விட்டார். பரிசாரகி இவளுடைய கட்டணக் கணக்கைக் கொணர்ந்தாள், ஆனால் மேஜை துடைப்பவர்கள் எல்லாவற்றையும் அகற்றிய பின்னரும் தன் இருக்கையிலேயே அவள் அமர்ந்திருந்தாள். உண்ண வந்தவர்களில் பலரும் அவளைப் போலவே தங்கி இருந்து, பேசிக் கொண்டும், வியப்பைத் தெரிவித்துக் கொண்டும், இன்னும் வேண்டும் என்று கூவிக்கொண்டும் இருந்தனர். ஆனால் அந்த நபர் திரும்பி வரவில்லை.

அவள் கடைசியாகத் தன்னையும், தன் பயணத்தையும் நினைத்துத் தன்னை மீட்டுக் கொண்ட போது, உணவகத்தில் கால் வாசிதான் உண்பவர்களிருந்தனர். அவள் அந்த உணவகத்திலிருந்து வெளியேறியபோது, அங்கு இரவு சூடாக, புழுக்கமாக இருந்தது, தெரு இருட்டாக இருந்தது. ஒரு கணம் தான் எங்கே தன் காரை நிறுத்தினோம் என்பது அவளுக்கு நினைவு வரவில்லை; பிறகு மோடெல் நினைவு வந்து அந்தத் திக்கில் நடக்கக் கிளம்பினாள். வினோதமான விதத்தில் புத்துணர்ச்சியூட்டப்பட்டவளாக உணர்ந்தாள், அதனால் மோடெலை விட்டு நீங்கி மறுபடியும் காரைச் செலுத்திக் கொண்டு பயணிக்கலாமா என்று தீவிரமாக யோசித்தாள். பல தெருக்களைக் கடந்தபின் தான் எப்படியோ தவறான திக்கில் போயிருப்பதாக முடிவு செய்தாள், ஏனெனில் அங்கு மொடெலின் பெயர்ப் பலகை எங்கும் காணோம், அவள் ரெஸ்டராண்டுக்குப் போகிற வழியில் பார்த்திருந்த சில அடையாளங்களை இப்போது அவளால் காண முடியவில்லை. அவள் திரும்பினாள், மறுபடி திரும்பினாள், தயக்கத்துடன் இப்படியும் அப்படியும் சில எட்டுகள் எடுத்து வைத்து நோக்கினாள், பின் தான் வந்த வழியே திரும்பிப் போகவும் ஆரம்பித்தாள், ஆனால் எதுவும் தெரிந்ததாகப் புலப்படவில்லை.

அவளுடைய குழப்பம், தனக்கு முன்னே ஒரு தெருவிளக்கினடியில் அந்த ஜால வித்தைக்காரரைப் பார்த்தபோது, கலக்கமாக மாறத் தொடங்கியது. மாலை நேர உடைகளிலிருந்து சாதாரண உடைகளுக்கு அவர் மாறியிருந்தாலும், அவரை அடையாளம் காண்பதில் பிழை ஏதும் இருக்க முடியாது. அவருடைய மெலிந்த தோற்றம் அவருக்கு மனிதர் என்பதை விட, ஒரு நிழல் போன்ற அடையாளம் கொடுத்தது: கோடுகளோடிய கன்னங்களும், பளபளப்பான நீண்ட கண்களும் கொண்ட நிழல். அவள் அணுகியபோது, அவளுடைய பெயரை அவர் சொன்னார். ‘உங்களுக்காக நான் காத்திருந்தேன்,’ என்றார். காட்சியை நிகழ்த்தியபோதை விட மெதுவாகப் பேசினார், முன்பு அவள் கவனித்திராத ஒரு பேச்சு முறையின் சாயம் அதிலிருந்தது.

கலக்கம் உடனே பறந்தது, அறியும் ஆர்வத்தின் அமைதி அங்கு குடியேறியது, அது ஆலனின் கார் அமைதியாக சாலையின் பக்கவாட்டுத் தடுப்புக் கம்பிகளை நோக்கியோ, அல்லது சாலை ஓர ஒதுக்குப் பாதைக்கும், மரங்களுக்கும் நழுவிப் போகத் தொடங்கும்போதுஅவளுக்கு எழும் உணர்வைப் போலவே இருந்தது.

“என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? மற்ற ஜனங்களைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்தது?”

”அனேகமாக எல்லாருடைய எல்லாவற்றையும் பற்றி எனக்குத் தெரியும். அது என்னுடைய நிலையின் சாபம். ஆனால் நிறையப் பேரை விட உன்னை எனக்கு நன்றாகத் தெரியும்.”

அவள் அவரை உற்றுப் பார்த்தாள். “எனக்கு உங்களைத் தெரியாது.”

“இருந்தாலும், நாம் முன்பு சந்தித்திருக்கிறோம்,” அந்த ஜாலக்காரர் சொன்னார். “அதுவும், இரண்டு தடவை, அது கொஞ்சம் அபூர்வமானது என்று நான் ஒத்துக் கொள்வேன். இரண்டாம் தடவை ரொம்ப காலத்துக்கு முன்னால். நீ அப்போது ரொம்ப சின்னவளாக இருந்தாய்.”

“இது அபத்தம்.” தன்னுடைய குரலில் தெரிந்த இகழ்ச்சியின் ஜாடை அவளுக்கு வியப்பு கொடுத்தது, அது இலேசாகத்தான் இருந்தது ஆனால் கூர்மையாயிருந்தது.

“இது கொஞ்சம் கூட நம்பும்படி இல்லை.”

“அப்படித்தான் இருக்கும். அந்தத் தந்திரம் எப்படிச் செய்யப்பட்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் உனக்குத் தெரியாது, அதனால் உனக்கு நிலைமை அத்தனை சாதகமாக இருக்காது.” அவர் தன் நீண்ட விரல் ஒன்றை உதடுகள் மீது வைத்து அவற்றைக் குவித்தார், மறுபடி பேசுமுன் யோசித்தார். “இதை ஒரு புதிர் போலப் பார்ப்போம். இப்போது நான் எப்படித் தெரிகிறேனோ, அப்படி நிஜத்தில் நான் இல்லை, நான் காலத்தைப் போன்றே வயதானவன், வெளியைப் போல விசாலமானவன், எதிர்காலத்தைப் போல முடிவில்லாதவன். என் இயல்பு பற்றி எல்லாருக்கும் தெரியும், ஆனால் அது பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படும். மேலும் நான் உயிரோடு உள்ள எல்லாரையும், அனைத்தையும் ஒரு முறையாவது சந்திக்கிறேன். சொல்லப்போனால் அந்த சந்திப்பு தவிர்க்கவியலாதது. நான் யார்?”

தன் சூனியத்தில் ஒரு திருகலை அவள் உணர்ந்தாள், அதைக் கோபம் என்று அறிந்தாள். “காட்சி முடிந்து போச்சு. நான் இப்போது டின்னர் சாப்பிடவில்லை.”
ஜாலக்காரர் புன்னகைத்தார், தன் தலையை லேசாக அசைத்து மறுத்தார். “நீ இப்பொ வழி தவறிப் போயிருக்கே, இல்லையா?”

“என்னோட மோடெல் தொலைஞ்சு போச்சு. நானில்லை. நான் எங்கேயோ தப்பாத் திரும்பி இருக்கணும்.”

“எனக்கு வழி தெரியும்,” ஜால வித்தைக்காரர் சொன்னார். “நான் வழி காட்டறேன்.”

சீருடன், நிரம்பிய மரியாதையோடு அவர் தன் கையை நீட்டினார், ஆனால் அவள் ஒரு எட்டு பின்னே போனாள். அவருடைய புன்னகை மேலும் விரிந்தது, அவர் தன் கையைக் கீழே போட்டார். “வா,” என்றார், அவள் பின்னே வருகிறாளா என்று பார்க்காமல் திரும்பி நடந்தார். அவள் துரிதமாக அவரை எட்டி விட்டாள், அவருடைய கை திறந்திருந்தது, ஆனால் அவள் அதைத் தொடாமல் நடந்தாள்.

“நாம முன்னே பார்த்திருக்கோம்னு சொல்றீங்க. எங்கே?” அவள் கேட்டாள்.

“இரண்டாவது தடவை நியூயார்க் நகரில். சென்ட்ரல் பார்க்,” ஜாலவித்தைக் காரர் சொன்னார். “அங்கே உன்னோட ஒன்று விட்ட சகோதரன் மாத்யூவின் பிறந்த நாள் விருந்தில்.”

அவள் நடப்பதை நிறுத்தினாள். “ஓகே. நீங்க யாருன்னு எனக்குத் தெரியல்லை, அல்லது நான் நியூயார்க் நகர்ல வளர்ந்தேன், எனக்கு ஒரு சகோதரன் மாத்யூன்னு இருக்கான்ங்கறது எல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியல்லை. ஆனா நீங்க இப்ப கோட்டை விட்டுட்டீங்க, ஷெர்லாக். நாங்க குழந்தைக்களா இருந்த போது, அந்த முட்டாள் பயல், ஊத்தை வாயன் மாத்யூவை நான் அடியோட வெறுத்தேன், அவனோட பிறந்தநாள் விருந்துக்கெல்லாம் எதுக்குமே நான் போனதே இல்லை. என்னோட அப்பா அம்மா என்னை போக வைக்கணும்னு முயற்சி செய்தாங்க, ஒரே ஒரு தடவை, நான் அத்தனை அடம் பிடிச்சதால விட்டுட்டாங்க. அதுனால நீங்க முழுக்கத் தப்பாச் சொல்றீங்க.”

ஜால வித்தைக்காரர் திடுமென கை நீட்டினார், அவள் தன் தலை முடியில் துரிதமான, குளிர்ந்த சிலிர்ப்பை உணர்ந்தாள். அவர் ஒரு சிறு வெள்ளிக் குதிரையின் உருவை உயர்த்திக் காட்டினார், போலியான கடுமையோடு கேட்டார், “நீ என்ன செய்யறே, ஒரு குதிரையை அங்கே வச்சுகிட்டு? லாயம் ஒண்ணு இல்லைன்னா குதிரையை எல்லாம் வச்சுக்கிடக் கூடாது.”

அவள் தன்னையறியாமல் வாயைப் பிளந்தாள், கண்கள் அகன்று விரிந்தன, விக்கித்து நின்றாள். பின் ஒரு குழந்தையைப் போல பேராசையுடன் அந்தக் குதிரையை லாவிப் பிடித்தாள். “அது என்னோடது! நீங்க எங்கே இதைப் பிடிச்சீங்க?”

“நான் தான் அதை உனக்குக் கொடுத்தேன்.” ஜால வித்தைக்காரரின் குரல், என்றோ இன்னொரு கடற்கரையோரம் காலத்தில் தொலைந்துபோயிருந்த அவளது குழந்தைப் பருவத்தைப் போலவே எட்ட முடியாத தூரத்தில் கேட்டது.

அப்போது அவருடைய ஆணை கேட்டது: “ஞாபகப் படுத்திக் கொள்.”

(அடுத்த இதழில் தொடரும்)

  • Language ‏ : ‎ English
  • ISBN-10 ‏ : ‎ 1616960043 (ISBN13: 978-1616960049)
Series Navigationதந்திரக் கை – 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.