தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

This entry is part 5 of 9 in the series எங்கிருந்தோ

ஜிந்த் கௌராகிய நான் இந்திய விடுதலையில் எங்கள் பங்கினைப் பற்றிச் சொல்ல வேண்டிய நேரமிது. கண்ணீராலும். செந்நீராலும் வளர்த்த விடுதலையின் விலையை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிய வேண்டும். ஜாலியன் வாலாபாக்கின் சுவர்களில் இன்றும் கூட குண்டுகள் துளைத்த ஓட்டைகளை நீங்கள் பார்க்கலாம். இந்த இடமே தனித்த ஒன்று; இரண்டு குறுகிய நுழைவாயில்கள் தானுண்டு. 19 சென்ட் நிலத்தில் சிறிதான தோட்டமிருந்த இதை பொது மைதானமாக அளித்தவர் ஹமீத் சிங் ஜாலா.

தேசமெங்கும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்த நேரம். மார்ச் 29,1919ல் இந்தத் திடலில் மாபெரும் கூட்டம் ரௌலட் சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்டது. மறு நாள் முழு ஊரடங்கும் வெற்றிகரமாக நடந்தது.

ஏப்ரல்13,1919 எங்கள் குரு கோவிந்த் சிங் கால்ஸா அமைப்பிற்கு அடிக்கல் நாட்டிய நிகழ்விற்காக பலர் இந்த மைதானத்தில் அமைதியாகக் கூடினர்- எனதருமைக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள். பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டையர் என்பவன் வாயில்களை அடைத்து ,முன்னெச்சரிக்கை எதுவும் தராமல் 100 ஆங்கிலேய சிப்பாய்கள், மற்றும் 50 இந்தியச் சிப்பாய்களைக் கொண்டு வெறித்தனமாக சுட்டுக் கொண்டேயிருந்தான். என்னுயிர் மக்கள் மதிலைக் கடக்க முனைந்தும், துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பக் கிணற்றில் குதித்தும், குண்டுகள் துளைத்தும், மிதிபட்டும் ஆயிரக் கணக்கில் மாண்டனர். என் ஆவி துடித்து சுற்றிச் சுற்றி வந்தது. இரவு நேர ஊரடங்கு அமலிலிருந்ததால், பிழைக்கும் வாய்ப்புள்ளவர்கள் கூட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை. வாணிகத்திற்கு வந்த வஞ்சகர்கள் நம் நாட்டையே ஆண்ட கொடுமையை என்னவென்று சொல்ல? தன் அரக்கச் செயலை நியாயப்படுத்திய டையரை 1940ல் கேக்ஸ்டன் மண்டபத்தில் உத்தம் சிங் கொன்றார்.

பகத்சிங், சுக்தேவ் ராஜ்குரு ஆகியோரும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி, வன்முறையில் ஈடுபட்டு உயிர் துறந்தனர். 1928-ல் உதவி காவல் கண்காணிப்பாளரான ஜான் சேன்டர்ஸ் (John Sanders) என்பவரைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு அவர்கள் மீது பதிவாகியது. தில்லி நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கும் இருந்தது. 23 முதல் 30 வயதேயான இவ்வீரர்கள் இந்த நாட்டிற்காகக் தூக்கில் தொங்கினர்.

சில வதந்திகள், செய்திகள் நிலவி வந்தாலும், இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலை அதை இரண்டாகப் பிரிப்பதில் முடியுமென்றும், அதன் துயர விளைவுகள் பஞ்சாபியரையும், வங்காளத்தவரையும் அதிகம் பாதிக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.

ஆகஸ்ட் 15,1947 பொன்னாள். நாம் சுதந்திரம் அடைந்தோம். எது இந்தியப் பகுதி, எது பாகிஸ்தான் பகுதி என்பது அப்போது (இப்போதும்?) தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 17, 1947ல் தான் வரைபடத்தை வெளியிட்டார். பல சமஸ்தானங்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் கழித்து இந்திய தேசத்துடன் இணைந்தன.

பஞ்சாபிலும், வங்காளத்திலும் புலம் பெயரும் தேவை உண்டாகியது. மக்கள் தன் தேசம் எது எனத் தடுமாறினர். தலைமுறையாய், நிலம், வீடு, அக்கம்பக்கத்தினர், மொழி, அவரவர் மதம், வழிபாடு என இருந்த மக்கள் நிலைகுலைந்து போயினர். அகதிகள் சிறப்பு புகை வண்டிகள், காவல் மற்றும் இராணுவத் துறையின் பாதுகாப்பில் இயக்கப்பட்டன. 4 சிறப்பு இரயில்கள் மொத்தம் 15,900 பேர்களுடன் ஒவ்வொரு நாளும் ஜலந்தரிலிருந்து லாகூர் சென்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், மனம் மற்றும் உடல் நல பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை.

இராம்பா(க்)கில் (Rambagh) இந்தப் பிரிவினையின் வரலாறு ஒரு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. கல்லும் உருகும் காட்சிகள், நிழற்படங்கள், செய்தித்தாள் தொகுப்புகள், வானொலியில் பொது மக்கள் அளித்த பேட்டிகள், தலைவர்கள் மனம் வருந்தி விடுத்த செய்திகள், பின்னர் காணொலியாக மாற்றப்பட்ட நிகழ்வுகள், அத்தனையும் சோக கீதங்கள். நம்பிக்கை மரம் என்ற ஒன்று இந்த வளாகத்தில் உள்ளது. பிரிவினையால் இரு எல்லைகளுக்குள் மாட்டிக் கொண்ட மக்கள், அவர்களது வம்சத்தினர், தங்கள் தந்தையை, அன்னையை, பிள்ளைகளை, அத்தைகளை, மாமாக்களை, நண்பர்களை எண்ணி ஏங்கி எழுதிய கவிதைகளும், கடிதங்களும் இந்த நம்பிக்கை மரத்தில் இலைகளாகத் தொங்குகின்றன. தாங்கள் இழந்த உறவுகளின் நினைவாக பலரும் பலப் பொருட்களை இந்த அருங்காட்சியகத்திற்கு அளித்திருக்கிறார்கள். ஒரு சான்று சொல்கிறேன். பிரிவினை நேரம்; பாகிஸ்தானில் உள்ள நௌஷேராவில் உயிரற்ற உடல்கள், யாரும் உரிமை கோராத உடல்கள், உரிமை கோரியோ, தேடியோ எவரும் எங்கும் செல்ல முடியாத நிலை- அவைகளை ஒருவர் அகற்றி அடக்கம் செய்தார். அதில் தன் நண்பனை அவருடைய ‘பாக்கெட் வாட்ச்’சால் அடையாளம் கண்டார். ஆனால், உறவினர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அவருக்கும் தெரியாது. அந்த பைக்கடிகாரத்தை புகைப்படமெடுத்து விளம்பரம் செய்தார். உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் தான் இறந்தவரின் குடும்பம் இந்த விளம்பரத்தைப் பார்த்தது. அவர் குடும்பத்தைச் சேர்ந்த சுதர்சன குமாரி அந்த கடிகாரத்தைக் கண்காட்சியகத்திற்கு உருக்கமான செய்தியுடன் கொடுத்துள்ளார். இதைப் போல நிறைய செய்திகள், கடிதங்கள், நினைவுப் பொருட்கள்… இன்னமும் குருதி வாசத்துடன், அதே நேரம் பிரிவினை கூடாதென்பதை உணர்த்தும் விதமாக இடம் பெற்றுள்ளன.

உங்களுக்குத் தெரியுமா, பாக்-ஸ்தான் என்ற பெயரே ரஹ்மத் அலி என்ற கேம்ப்ரிட்ஜ் மாணவன் விளையாட்டாக அமைத்த ஒரு பிரிட்டிஷ் மாகாணத்தின் பெயர்ச் சுருக்கம்.

எங்கள் பூல்காரி துணி வேலைப்பாடுகள்- பூ மாதிரிகள்- மிகவும் பிரசித்தம். அதைக் கைத்தொழிலாகச் செய்து வந்த பெண்கள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினர். அன்று செயல்பாட்டிலிருந்த உலோகத் தட்டுக்களும், கிண்ணங்களும், தையல் இயந்திரங்களும் காட்சியகத்தில் உள்ளன.

விடுதலை அடைந்தவுடன் தூண்களும், சில கட்டிட உடைசல்களும் தான் எல்லையைப் பிரித்தன. 1986ல்தான் இரும்பு வலை அமைக்கப்பட்டது. பிரிகேடியர் மொஹிந்தர் சிங் சோப்ரா அக்டோபர் 11,1947ல் இந்த அட்டாரி- வாகா ‘செக்போஸ்ட்’ அமைத்தார். இன்றும் கூட கொடி இறக்கும் வைபவம் இந்த இரு நாட்டின் எல்லைப் பகுதியில் (இந்தியா-அட்டாரி; பாகிஸ்தான்- வாகா) ஒவ்வொரு மாலையிலும் நடைபெறுகிறது. வீரத்தையும், தேசப்பற்றையும் காட்டும் அதே நேரத்தில் அமைதியாக வாழ வேண்டும் என்ற கருத்தை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இருபுறத்திலும் வீர்ர்கள் உயர்ந்த காலடிகள் எடுத்து வைத்து நடக்கிறார்கள். கைகளை உயரே தூக்கி கோஷமிடுகிறார்கள். இராணுவ இசைஞர்கள் கீதம் இசைக்கிறார்கள். உற்சாகமாகவும், உத்வேகத்துடனும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இதில் பங்கேற்கிறார்கள். வயதான பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கௌரவிக்கிறார்கள்.

இந்திய- பாக் பிரிவினைக்குச் சற்று முன்பாகவும், சுதந்திரம் அடைந்த போதும் சிறிய கும்பலாக கிழக்கிலும், மேற்கிலுமாகப் புலம் பெயர்ந்த மக்கள், அதிக எண்ணிக்கையில் எல்லைகளைக் கடந்த நிலையில், சேதங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீள் நெடுஞ் சாலை, எந்த இடத்தில் இந்தியாவை விட்டு பாகிஸ்தானில் நுழைகிறது என்பதற்கான கோடுகளில்லை. எனவே இருபுறத்திலும் கண்காணிப்புத் தேவைபட்டது. லாகூர், மற்றும் அமிர்தசரஸ் மாவட்ட எல்லைப் பிரிவுகளைப் பின்பற்றி அட்டாரி- வாகா எல்லையை மொஹிந்தர் சிங் சோப்ரா அமைத்தார்.

கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் 1990-ல் ஒன்றாக இணைந்தன. பெர்லின் சுவர் விழுந்தது. பிரிவினைகள் எவருக்கும் எந்த நன்மைகளையும் செய்ததில்லை. கனடா மற்றும் மேலை நாடுகளின் உள்நோக்கத்தை சீக்கியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒன்று. இன்று நம்மை விட்டுப் பிரிந்தவரை விட கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், மனித நலம் போன்ற பலவற்றில் நாம் முன்னேறியுள்ளோம்; அதை விடவும் மதிப்பு வாய்ந்தது நாம் குடியரசாக இருக்கிறோம் என்பதே. 21/11/47 நாம் நமதேயான தபால் தலைகளை வெளியிட்டுவிட்டோம்; பாக்கில் ஜூலை 48-ல் வெளியிட்டார்கள்.

‘தன்னலம் பேணி இழி தொழில் புரியோம்;

தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்.’

பாரதி

Series Navigation<< பொற் தேவன்பேயவள் காண் எங்கள் அன்னை >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.