(ஸ்வீடிய மூலக்கவிதையின் இங்கிலிஷ் மொழியாக்கம்: ராபர்ட் ப்ளை)
தமிழாக்கம்: கு. அழகர்சாமி

பாதி முடிந்த விண்ணுலகு
கோழைத்தனம் தன் செல் தடத்தில் திடுமென முடிவுறும்.
கடுந்துயர் தன் செல் தடத்தில் திடுமென முடிவுறும்.
வல்லூறு தன் பறத்தலில் திடுமென முடிவுறும்.
ஆர்வ ஒளி திறப்பில் மோதும்.
பேய்கள் கூட மதுவை மடுக்கும்.
நம் ஓவியங்கள் காற்று வெளியையும், பனியுக
ஓவியக் கூடங்களின் செவ் விலங்குகளையும் நோக்கும்.
ஒவ்வொன்றும் சுற்றி கவனிக்க ஆரம்பிக்கும்.
நூற்றுக்கணக்கில் யாம் வெளியேகுகிறோம் வெயிலில்.
ஒவ்வொருவரையும் ஓரறைக்கு இட்டுச் செல்கிற
ஒரு பாதி திறந்த கதவு ஒவ்வொருவரும்.
முடிவில்லா நிலம் எம் அடிக் கீழ்.
தண்ணீர் மரங்களிடை மினுமினுக்கும்.
ஏரி பூமிக்குள்ளிருக்கும் ஒரு ஜன்னல்.
காருருவம் நீந்துகிறது
சஹாராவின் ஒரு பெரும்பாறை மீது
கற்கால ஓவியமொன்று :
புராதனப் புதுநீர் நதியொன்றில்
நீந்துகிறது நிழலுருவமொன்று.
ஆயுதமின்றி, திட்டமின்றி ,
ஓய்வாயில்லாமலும், விரையாமலும்,
நெடுக கீழ் நழுவும் தன் நிழலிலிருந்து
பிரிக்கப்பட்டுள்ளான் நீந்துபவன்.
மில்லியன் கணக்கான துயிலுறும் இலைகளிலிருந்து
விடுவித்துக் கொள்ள அவன் போராடுகிறான்
மறுகரையை அடைந்து தன் நிழலோடு
மறுபடியும் சேர்வதற்கு,
Source: Tomas Transtromer, The Half-finished Heaven, Selected Poems,
Translated from the Swedish by Robert Bly