காஃபி

17 ஆம் நூற்றாண்டில் (1670) கர்நாடகாவில்  (அப்போதைய மைசூர்) சிக்மகளூர்  பழங்குடியின கொள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தொடர்ந்து நடந்த கொள்ளைகளில் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் உண்டாகி கொண்டே இருந்ததால். அங்கிருந்த  மக்கள் அடிக்கடி கொள்ளையர்களுக்கு அஞ்சி இடம் மாறிக்கொண்டே  இருந்தனர். 

சிக்மகளூரைச்சேர்ந்த  பாபா புதான்  என்னும் சூஃபி துறவி ஒருவரும் அவரது சீடர்களும் அவ்வாறு கொள்ளையர்களிடமிருந்து விலகி விலகி சென்று கொண்டே இருந்த பயணத்தில்  கடைசியாக சந்திரகிரியின் ஒரு பெருங்குகையில்  குடிஅமைந்தார்கள். 

குகையிலிருக்கையில் பாபா மெக்கா புனிதப்பயணத்துக்கு புறப்பட்டார், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சந்திரகிரி குகையிலேயே தங்கியிருந்தனர்.

புனித பயணத்தின் போது மெக்காவில்  அனைத்து பயணிகளுக்கும் அருந்த அடர் கருப்பு நிற பானமொன்று சூடாக அளிக்கப்பட்டது. அதன் சுவையில் மெய்மறந்த பாபா அதைக் குறித்து  விசாரித்தார். கஹ்வா (Qahwah) என்றழைக்கப்பட அப்பானம் சில வருடங்களாகவே மெக்கா வரும் பயணிகளுக்கு அளிக்கப்படுவதாகவும் மோகா துறைமுகத்திலிருந்து அவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதையும் கேட்டறிந்தார்.அவர் மெக்காவில் தங்கி இருந்த நாட்களிலெல்லாம் அவருக்கு அப்பானம் வழங்கப்பட்டது.

அது ஒரு புதர்ச்செடியின் கனிகளிலிருந்து எடுக்கப்படும் விதைகள் என்பதையும் அறிந்து கொண்ட  பாபா இந்தியாவிற்கு திரும்புகையில் அக்கொட்டைகளை கொண்டு போக விரும்பினார்

 மெக்காவிலிருந்து புறப்பட்டு ஏமானின் மோகா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த பாபா அங்கும் அதே பானத்தை அருந்தினார். அங்கு ஏராளமான கப்பல்களில் வறுத்த காஃபி கொட்டைகள் ஏற்றுமதியாவதையும் கவனித்தார்.

அரேபியர்கள் காஃபி பயிரிடுதல் வேறெந்த  நாடுகளுக்கும் கிடைத்து  விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.  எனவே  அனைத்து காஃபிக் கொட்டைகளும் வறுக்கப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்யப்பட்டன. மோகா துறைமுகம் அப்போது காஃபி ஏற்றுமதிக்கு மிக பிரபலமாக இருந்தது

அரேபியாவிலிருந்து பச்சைக் காஃபி கொட்டைகளை பிற நாடுகளுக்கு எடுத்துச்செல்வது சட்டப்படி அப்போது தடை செய்யப்பட்டிருந்தது. பாபா கடினமாக முயற்சி செய்து பச்சைக் காஃபிக்கொட்டைகள் சேகரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அங்கிருந்து 7 பச்சைக் காஃபி கொட்டைகளை எடுத்துக்கொண்டார். 

மோகா துறைமுகத்திலிருந்து கப்பல்களில் சொந்த நாட்டுக்கு திரும்பும் பயணிகளை கடுமையாக சோதனை செய்வார்கள் என்பதால் அந்த 7 கொட்டைகளையும் தனது அடர்ந்த தாடிக்குள்  பொதிந்து மறைத்து வைத்துக்கொண்டு யாரிடமும் பிடிபடாமல் கர்நாடகத்தின் சந்திரகிரி குகைக்கு  வந்து சேர்ந்தார் பாபா.

 அந்த காஃபிக் கொட்டை விதைகள் ஏழும் அவர்கள் தங்கி இருந்த அதே மலைக் குகையை சுற்றி நட்டு வைக்கப்பட்டன. சந்திரகிரியின் சாதகமான காலநிலையில். அனைத்து விதைகளும் முளைத்து காஃபி பயிராக வளர்ந்தன,

அந்த காஃபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான்  கொண்டு வந்தது காஃபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி  பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காஃபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது

அந்த 7 காஃபி தாய் பயிர்களின் சந்ததிகள் தற்போது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளையும் காஃபி பயிர்களில் கலந்திருக்கின்றன.

இப்போதும் கர்நாடக காஃபி வகைகளில் தாடி வைத்த துறவியின் சித்திரமும், 7 விதைகள் மற்றும் புதான் என்னும் பெயருள்ள காஃபியகங்களும் பிரபலமாக இருக்கிறது.

காஃபி ஏராளமாக பயிராகும் மேற்குத்தொடர்ச்சிமலையின் பகுதியான அந்தப்பகுதியே இப்போது பாபா புதான் குன்று என்று அழைக்கப்படுகிறது. பாபாவின் சமாதியும் அங்குதான் அமைந்துள்ளது

காஃபி கதைகள்

உலகின் மூன்று பிரபல பானங்களிலொன்றான காஃபி (தேநீருக்கும், தண்ணீருக்கு அடுத்தபடியாக) உருவான கதைகளும்,  காஃபி உலகெங்கும் பாபா புதானின் தாடிக்குள் ஒளிந்து  வந்ததுபோல் பல வழிகளில் பயணித்ததும் மிக சுவாரசியமானவை. பலநூறு கதைகள் காஃபி பானம் கண்டுபிடிக்கப்பட்டதை குறித்து  உலகெங்கிலும் இருக்கின்றன.

 ஒரு புதர்ச் செடியின் பழங்களில் இருக்கும் சிறு விதையானது உலகின் இரண்டாவது மிக அதிகமாக சந்தைப்படும் பொருளாக உருவாகி இருக்கிறது என்பதை காஃபியின் வரலாறு மூலம் அறிந்துகொள்கையில்  மிகவும் ஆச்சரியமூட்டும் .

மொராக்கோவை சேர்ந்த சூஃபி ஞானியான அக்பர் நூருதீன் அபு அல் ஹசன் (Ghothul Akbar Nooruddin Abu al-Hasan al-Shadhili) எதியோப்பியாவுக்கு பயணம் மேற் கொண்டிருக்கையில் ஒரு சில இடங்களில் பறவைகளின் விநோதமான செயல்களை  கண்டார், சாதாரணமாக இருக்கும் அந்த பறவைகள் ஒரு குறிப்பிட்ட வகை புதர்களின் ரத்தச் சிவப்பு பழங்களை  உண்ட பின்னர்,  மிகுந்த உற்சாகமடைந்து பரபரப்பாக இருப்பதை கவனித்த அக்பர் தானும் அப்பழங்களை உண்டார். அவருக்கும் பறவைகளைப் போலவே உற்சாக மிகுதியும் புத்துணர்வும் உண்டானது. அவர் அப்பழங்களின் கொட்டைகளிலிருந்து காஃபி உருவாக்கினார் என்பது ஒரு பிரபல காஃபிக்கதை.

மற்றுமொரு கதையில் அக்பரின் சீடரும், பிரார்த்தனைகள் மூலமே நோயாளிகளை குணப்படுத்தும் சக்தியும் கொண்டவரான  ஓமர் என்பவர் ஒருமுறை மோகாவிலிருந்து பாலைவனம் வழியே பயணிக்கிறார்.   குசாப் (Ousab). என்னுமிடத்தில் இருந்த கடும்பாலை குகையொன்றிற்கு வந்து சேர்ந்த அவர் பசியிலும் சோர்விலும் தாகத்திலும் களைத்திருந்தார். உயிர் பிழைக்க வேண்டி அங்கிருந்த புதர்ச்செடிகளின் கசக்கும் பழங்களை கொட்டையுடன் உண்டார்.அவை மிக கடினமாக இருந்ததால் நெருப்பு மூட்டி அவற்றை வறுத்தும் அவை கடினமாகவே இருந்திருக்கிறது. பிறகு அங்கிருந்த சிறிதளவு குடிநீரில் அவற்றை வேகவைத்து  கிடைத்த நல்ல மணமுள்ள பின்னாட்களில் காஃபி என்றழைக்கபட்ட  அந்த பானத்தை அருந்தினார்.அதன் பிறகு அவர் பல நாட்களுக்கு பசியின்றியும் புத்துணர்வுடனும் இருந்தார்.இதுவும் ஒரு புகழ் பெற்ற காஃபிக்கதைதான்

இவற்றில் மிக பிரபலமானதும் உலகெங்கிலும் பரவலானதுமான கதையென்றால் அது  மகிழ்ச்சியான ஆடுகளும் ஆட்டிடையனும்  கதைதான்.    எத்தியோப்பிய (அப்போதைய அபிஸீனியா) ஆட்டிடையனான கல்தி குறிப்பிட்ட சில புதர்ச்செடிகளின் பழங்களை உண்டபின் ஆடுகள் புதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கவனித்தார். பழங்களை உண்டபின்னர் அவை உற்சாக மிகுதியில் நடனமிடுவதும் ஓடியாடுவதுமாக இருந்தன. சாதாரணமாக அவை அவ்வாறு செய்வதில்லை எனவே அந்த பழங்களில் என்னவோ புதுமையாக இருப்பதை  யூகித்தார்.

 அப்பழங்களை   உண்ட கல்திக்கும் அதே உணர்வுகள் தோன்றியதால் அவர் அக்கொட்டைகளிலிருந்து பானமொன்றை தயாரித்த்தார் அதுவே காஃபி.

இக்கதையின் நீட்சியாக கல்தி தனது கண்டுபிடிப்பை ஒரு துறவியிடம் பகிர்ந்து கொண்டதாகவும் இரவெல்லாம் விழித்திருக்க ஒரு வழியை தேடிக் கொண்டிருந்த அத்துறவி அப்பழக்கொட்டையிலிருந்து உருவான பானத்தை விழிப்புடன் இருக்க  மிகச்சரியான தீர்வாக கண்டுகொண்டாரென்றும், அவரிடமிருநதே காஃபி பானம்  உலகெங்கும் பிரபலமாகியது என்றும் ஒரு துணைக்கதை உண்டு.

இக்கதைகளின் தோற்றம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். 

இப்படியான கதைகளில் எதுவுமே 16ம் நூற்றாண்டுக்கு முன்பாக எழுத்து வடிவில்  இல்லை. எனவே இக்கதைகளில் உண்மையின் சதவீதம் எத்தனை என்பதும் கணிக்க முடியாது. எனினும்   காஃபி எத்தியோப்பியாவில் தான் தோன்றியது என்பது உண்மைதான்.இவை நடந்ததாக  சொல்லப்பட்ட காலத்திலிருந்து சுமார் 800 வருடங்கள் கழித்து தான் இக்கதைகள் எழுத்து வடிவில் கிடைத்தன்

1583ல் லியோனார்டு ராவுல்ஃப்(Leonhard Rauwolf) என்னும் ஜெர்மன் நாட்டு தாவரவியலாளர் 10 ஆண்டுகள் அண்மைக் கிழக்கு நாடுகளில் பயணம் செய்த திரும்பிய பின்பு வெளியிட்ட தன் பயணக்குறிப்புகளடங்கிய நூலில்  அவர் பயணித்த நாடுகளில் கரிய நிறத்தில் உள்ள காப்பியைக் காலையில் மக்கள் விரும்பி பருகுவது பற்றியும், அப்பானம் பல்வேறு வயிற்று நோய்களுக்குத் தடுப்பாக இருந்தது என்றும் எழுதினார்

“ A beverage as black as ink, useful against numerous illnesses, particularly those of the stomach. Its consumers take it in the morning, quite frankly, in a porcelain cup that is passed around and from which each one drinks a cupful. It is composed of water and the fruit from a bush called bunnu.’’

காஃபியின் பயணம்

எத்தியோப்பிய பழங்குடிகளே காஃபிக்கொட்டைகளை அரைத்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து உற்சாகம் அளிக்கும் பானத்தை  முதன் முதலாக தயாரித்து அருந்தி உலகிற்கும் அறிமுகப்படுத்தியவர்கள் .இந்த பானத்தை  அவர்கள்தான்  ’’தூக்கத்தை தடுக்கும்’’  என்னும் பொருளில்  “qahwa”  என்று அழைத்தர்கள். இதே சொல்லுக்கு’ கொட்டைகளில் இருந்து உருவாக்கப்படும் மது’ என்றும் பொருள் இருக்கிறது

செங்கடல் வழியே காஃபி கொட்டைகள் எத்தியோப்பியாவிலிருந்து முதன் முதலில் யேமனுக்கு மோகா துறைமுகம் வழியே 15 ம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தது.பல்லாயிரம் ஆண்டுகளாக காட்டுப்பயிராக இருந்த காஃபி 1400ல் இருந்து யேமனில் பயிராகத் துவங்கியது பின்னர் 1500களில் அங்கிருந்து பெர்சியா, எகிப்து, சிரியா மற்றும் துருக்கியில் பயிராக்கப்பட்டது 1526 ல் துருக்கி ஹங்கேரியில் போர் தொடுத்த போது ஐரோப்பாவுக்கும் அறிமுகமான காஃபிப் பயிர் அங்கிருந்து ஆஸ்திரியா, மால்டா மற்றும் இத்தாலிக்கும் சென்றது.  

 மோகாவில் முதன் முதலாக காஃபி இறக்குமதியானதால் அக்காலத்தில் இருந்து மோகா என்பதே காஃபி என்பதற்கு இணையான சொல்லாக இருந்தது.  

காஃபி குறித்த  முக்கியமான தடயங்களும் ஆவணங்களும் 15 ஆம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் தான் யேமனின் சூஃபி மடங்களில் இருந்து கிடைத்தன.யேமனில் காஃபி ஏராளமாக  பயிரிடப்பட்டது, யேமனிய சூஃபீக்கள் உற்சாக மனநிலையில் மந்திரங்களை உச்சரிக்க காஃபியை  தொடர்ந்து அருந்தினார்கள்

அங்கிருந்து பின்னர் காஃபி மெக்கா, மெதி்னா மற்றும் மாபெரும் நகரங்களான கெய்ரோ, டமாஸ்கஸ் மற்றும் கான்ஸ்டண்டினோபிலுக்கும் அறிமுகமானது.1414 ல் காஃபி  மெக்காவில்  வெகுவாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. 

1500 களில்   வட ஆப்பிரிக்காவிற்கு  அறிமுகமான காஃபி .அங்கு அரேபிய மது என்று அழைக்கப்பட்டு பிரத்யேக கடைகளில் விற்கப்பட்டு மேலும் பிரபலமடைந்தது. இந்த காஃபிக்கடைகள் அறிவாளிகள் கூடும் இடம் என்று அழைக்கப்பட்டது. 1500களில்  மது  என்று பொருள்படும் பெயரில் இருந்த குழப்பத்தால் மெக்காவில் காஃபி மத ரீதியான காரணங்களைக்காட்டி தடைசெயபட்ட பானம் என அறிவிக்கபட்டது. அதே காலகட்டத்தில் எகிப்திலும் எதியோப்பாவிலும் காஃபி தடைசெய்யபட்டது  

இந்த தடைக்கெதிராக தொடங்கிய   போராட்டங்கள் பெரும் வன்முறையில் முடிந்ததால் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. 

கிழக்கே இந்தியா, இந்தோனேஷியாவிலும், மேற்கே இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பிறபகுதிளுக்கும் காஃபி அறிமுகமாகி வேகமாக பிரபலமாகியது 

ஐரோப்பாவிற்கு காஃபி மால்டா தீவுகளில் 16 ஆம் நூற்றாண்டில்  அடிமை வர்த்தகத்தின்  வழியே (1565ல்)  நுழைந்தது. துருக்கிய இஸ்லாமிய அடிமைகள் மால்டா தீவுகளில் சிறைவைக்க பட்டபோது சிறையில் அவர்கள் தங்களுடன் கொண்டுவந்திருந்த காஃபிக்கொட்டைகளிலிருந்து  அவர்களின் பாரம்பரிய பானமான காஃபியை தயாரித்து அருந்தினார்கள். அவ்வழக்கம் பின்னர் சிறைக்கு வெளியேவும் பரவியது 

காஃபி தேவைப்படும் நாடுகள் அவற்றை ஏமனிலிருந்து  இறக்குமதி செய்தனர். ஏமனிய அரசு இதை மிகக்கவனமுடன் செய்தது எந்தக்காரணத்தை கொண்டும் காஃபி விற்பனயை பிற நாடுகள் செய்யாவணணம் பாதுகாத்தது. ஏற்றுமதி செய்யப்படும் கொட்டைகள் அனைத்துமே வறுக்கப்பட்டு முளைதிறன் இழந்தவைகளாக இருப்பதை மிக மிக கவனமுடன் சரிபார்த்த பின்னரே எற்றுமதி செய்யப்பட்டன. அப்போதுதன் பாபா புதான் அவற்றிலிருந்து 7 கொட்டைகளை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.

பல்லாண்டுகள் கழித்து ஒரு டச்சு குடும்பத்தினரும் ஏமனிலிருந்து காஃபி கொட்டைகளை திருடி  ஹாலந்தில் பயிரிட முனைந்தனர். ஆனால் ஹாலந்தின் காலநிலையில் காஃபிக்கு தேவையான வெப்பம் கிடைக்கததால் காஃபி பயிர்  அப்போது அங்கு வளரவில்லை

இதே சமயத்தில் மிக சரியாக டச்சு கவர்னருக்கு இலங்கையிலிருந்து சில காஃபி கொட்டைகள் பரிசளிக்கப்பட்டன அதன் பிறகு காஃபி பயிரிடுதல் பலமுறை தோல்வியுற்றாலும் 1704ல் அங்கு காஃபி வெற்றிகரமாக பயிராகியது 

 1669ல் ஃப்ரான்ஸில் காஃபி அறிமுகமானது. அங்கும் காஃபி கடைகளில் ஆண்கள் கூடுவதும் நேரம் செலவழிப்பதும் வழக்கமானது. 1674ல் கணவர்கள் காஃபி கடைகளிலிருந்து வீட்டுக்கே வருவதில்லை என்னும் காரணததைக்காட்டி பெண்கள் காஃபி கடைகளை மூட பொதுநல வழக்கு தொடுக்கும் அளவுக்கு காஃபி கடைகளில் ஆண்கள் கூட்டம் இருந்தது. 18 ம் நூற்றாண்டில் 14 ம் லூயிஸ் மன்னருக்கு  ஆம்ஸ்டர்டாம்  மேயரால் காஃபி நாற்று பரிசளிக்கபட்டது. எனினும் அது நன்கு வளரவில்லை எனவே அது பிரத்யேக பசுமைக்குடிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது பின்னர் அந்த சிறு செடி பாரிஸின் ராயல் தாவரவியல் பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டு  பாதுகாக்கப்பட்டது

 ஃப்ரன்ச்  கப்பற்படை தளபதியான  டி க்ளூ (Gabriel Mathieu de Clieu) பாரீ்ஸூக்கு வந்திருந்த போது அவர் அங்கிருந்த காஃபி செடியை (அனுமதியுடனோ  அல்லது இல்லாமலோ) எடுத்துச் சென்றிருக்கிறார்

அங்கிருந்து கரீபிய தீவுகளுக்கு கடல்வழி பயணித்த  டி க்ளூ அந்த நீண்ட பயணத்தில் அச்செடி வாடிவிடாமல்  பாதுகாக்க அரும்பாடு பட்டிருக்கிறார் அவருக்கென வழங்கபட்ட குடிநீரை செடிக்கு ஊற்றிவிட்டு பலநாட்கள் அவர் தாகத்தில் இருந்திருக்கிறார்

கரீபியன் தீவுகளுக்கு வந்து சேர்ந்த  டி க்ளூ பிறசெடிகளுடன் காஃபிச்செடியை ரகசியமாக கலந்து நட்டு வைத்தார். 3 வருடங்களில் கரீபியன் தீவுகளிலும் அதனை சுற்றியிருந்த பகுதிகளிலும் காஃபி பயிரிடுதல் பரவி இருந்தது.  

இப்போது காஃபிக்கு பிரபலமாயிருக்கும் பிரேஸிலுக்கு காஃபி வந்த கதையும் கொஞ்சம் வித்தியாசமும் ரம்மியமுமானதுதான்

1727ல் பிரேசிலின் ராணுவ அதிகாரியான ஃப்ரான்ஸிஸ்கோ  (Francisco de Melo Palheta) கியானாவுக்கு,  டச்சு மற்றும் ஃப்ரான்ஸூக்கு இடையேயான ஒரு பிரச்சினையை பேசித் தீர்த்துவைக்க அனுப்பப்பட்டிருந்தார். உண்மையில் ஃப்ரான்ஸிஸ்கோவின் நோக்கம் சண்டையை தீர்ப்பது மட்டுமல்ல காஃபி செடியை பிரேசிலுக்கு கொண்டுவருவதும்தான்.

ஃப்ரென்ச் கவர்னரிடம் ஃப்ரான்ஸிஸ்கோ காஃபிச்செடிகளை கேட்டபோது அவருக்கு அது மறுக்கப்பட்டது. ஃப்ரென்ச் கவர்னரின் மனைவிக்கு சில நாட்களில் நெருக்கமாகிக் விட்ட ஃப்ரான்ஸிஸ்கோ காதலியாகிவிட்டிருந்த அவரிடமிருந்து ரகசியமாக சில காஃபி செடிகளின் நாற்றுக்களை எளிதில் பெற்றுக்கொண்டார்

அப்படி மணவுறவுக்கு வெளியெயானதொரு பந்தத்தில்  பிரேஸிலுக்குள்  நுழைந்த காஃபிச்செடிகளிலிருந்து   1822லிருந்து காஃபி உற்பத்தி  துவங்கி 1852 லிருந்து இன்று வரைஉலகின் முன்னனி காஃபி உற்பத்தியாளராக பிரேஸிலே இருந்துவருகிறது

அட்லாண்டிக் கடலை கடந்த காஃபி அமெரிக்காவில் தேயிலைக்கு மாற்றாக புரட்சியாளர்களால்  1773 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹவாயில் 1825 ல் காஃபி பயிராக  துவங்கியது. அமெரிக்காவில் மிக மிக குறைந்த அளவே காஃபி பயிராகின்றது. எனினும்  உலகின் முன்னணி காஃபி இறக்குமதியாளராக இருப்பது  அமெரிக்காதான்.

19 ஆம் நூற்றாண்டில், காஃபி  உலகாளவில் புகழ்பெற்ற விருப்ப பானமாகிவிட்டிருந்தது. 

1932ல் பொருளாதார காரணங்களால் பிரேஸில் தனது விளையாட்டு வீர்களை லாஸ்  ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கிற்கு அனுப்ப முடியாமல் போனபோது  வீரர்கள் பயணிக்கும் கப்பல் முழுக்க காஃபி கொட்டைகள் நிரப்பப்பட்டன கப்பல் கரையணையும் பகுதிகளிலெல்லாம் காஃபிக்கொட்டைகளை விற்பனை செய்தே அவர்கள் எந்த நிதி பற்றாக்குறையும் இன்றி லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சேர்ந்தனர். 

காஃபியின் பெயர்

அரபு மொழிச் சொல்லான கஹ்வா  ஆட்டோமன் துருக்கி மொழியின் கஹ்வே (kahve) என்பதில் இருந்து பெறப்பட்டது.. இது இத்தாலிய மொழியில் caffè என்றும் பிரெஞ்ச்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ் மொழிகளில் café  என்றும் வழங்கப்பட்டது.

முதன் முதலில் 16 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் coffee என்னும் பெயர் ஐரோப்பாவில் வழங்கத் தொடங்கினாலும், ஏறத்தாழ 1650 வாக்கில் தான் ஆங்கிலத்தில் cahve, kauhi, coffey மற்றும்  caufee என்றெல்லாம் அழைக்கப்பட்ட காஃபி இந்த காஃபி என்னும் இறுதி வடிவத்துக்கு வந்தது

ஐரோப்பாவில் காஃபியை Caffee என்னும் பெயரில் பரவலாக்கியவர்கள் இத்தாலியர்கள் அரபி மொழியின்  Qahwah  பீன்ஸ்களிலிருந்து கிடைக்கும் மது என்னும் பொருள் கொண்டது. 

இந்திய காஃபி

இந்தியாவில் காஃபி அருந்தப் பட்டதை குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம் 1616 ல் ஜஹாங்கீர் அரசவையில்  ஜேம்ஸ் மன்னரின் தூதராக இருந்த சர் தாமஸ் என்பவரின் மதகுருவான எட்வர்ட் டெர்ரி என்பவரால் எழுதப்பட்டது

டெர்ரி அவரது நூலில் ’’பல இந்தியர்கள் தங்களின் மத கோட்பாடுகளின் படி மது அருந்துவதில்லை, எனினும் அவர்களில் பலர் மதுவைக் காட்டிலும் சுவையான கறுப்புக்கொட்டைகளை நீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் காஃபி எனும் பானத்தை விரும்பி அருந்துகிறார்கள் அந்த  பானம் ஆறிப்போனால் நீர்த்து, சுவை இழந்து விடுகிறது சூடாக அருந்துகையில் வெகுவாக புத்துணர்ச்சி அளிக்கிறது’’  என்று குறிப்பிட்டிருந்தார்.

டெர்ரியின் ஆவணத்துக்கு பிறகு சுமார் 200 ஆண்டு்கள் கழித்தே  1840 ல் பிரிட்டிஷ் இந்தியாவில் வணிகரீதியான காஃபி பயிரிடுதல் துவங்கியது.

19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா முழுவதும் ஏராளமான காஃபியகங்கள்/காஃபி பானமருந்தும் கடைகள் உருவாகின. இந்தியாவின் முதல் காஃபிக்கடை1827ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட பெங்கால் காஃபி கிளப். அதனை தொடர்ந்து மெட்ராஸ் காஃபி கிளப் 1832 லும் பெங்களூர் கிளப் 1863லும் தொடங்கப்பட்டன.

விக்டோரிய அரச விருந்துகளில் இரவுணவுக்குப் பிறகு காஃபி அருந்தும் சம்பிரதாயம் பரவலானபோது மக்களிடையேயும் காஃபி அருந்தும் பழக்கம் வேகமாக பரவியது

மொத்த காஃபி உற்பத்தியில், மிக தரமான காஃபியை உற்பத்தி செய்யும்  உலகநாடுகளில் 6 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 16 வகையான மிக தரமான காஃபி வகைகள்  இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சம்  காஃபி சாகுபடியாளர்கள் உள்ளனர்.

தென்னிந்தியாவில் கேரளா தமிழ்நாடு  மற்றும் கர்நாடகாவில் இந்தியாவின் பிற பகுதிகளை விட மிக அதிகம் காஃபி விளைகிறது 

தென்னிந்தியாவின் டிகிரி காப்பியின் பெயர் வந்த கதையும் சுவாரஸ்யமானதுதான் 

பாலின் அடர்த்தியையும் பாலில் கலந்துள்ள நீரையும் அளக்கும் லேக்டோ மீட்டர் அளவுகளுக்கு பிறகு தரம் பிரிக்கப்படும் முதல் தரமான பால் டிகிரி பால் என்றழைக்கப்பட்டது

அவ்வாறான முதல்தர டிகிரி பாலில் கலக்கப்பட்ட முதல் டிகாக்‌ஷனிலிருந்து பெறப்பட்ட  காஃபியே டிகிரி காப்பி.

இன்றைய காஃபி கடந்து வந்த பாதை

200 வருடங்களில் காஃபி சாகுபடியிலும் காஃபி கொட்டைகள் பக்குவ்படுத்தப்படுவதிலும் வறுத்தரைக்கும் வெப்பநிலையிலும் கொண்டுவரப்பட  புதிய உத்திகளும் மாற்றங்களுமாக காஃபி ஏராளமான மாற்றங்களை  அடைந்திருக்கிறது

1818ல் பாரிஸ்  உலோகவியலாளர் ஒருவரால் தயரிக்கப்பட்டது உலகின் முதல் காஃபி வடிகட்டும் இயந்திரம்.1865 ல் அதன் மேம்படுத்திய வடிவம் அமெரிக்காவில் கண்டறியபட்டு ஜேம்ஸ் நேசன் என்பவர் அதற்கு காப்புரிமையும் பெற்றார்

 1864 ல் நியூயார்க்கை சேர்ந்த  ஜேபெஸ் பர்ன்ஸ் என்பவரால் (Jabez Burns)   முதல் காஃபி கொட்டை வறுக்கும் இயந்திரம் உருவானது

 1871ல் ஜான் அர்பக்கில் (John Arbuckle) காஃபித் தூளை அளந்து, காகித கவர்களில் கொட்டி, சீல் வைத்து, முத்திரைத்தாள் ஒட்டும் தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்தார்

 1886 ல் ஜோயெல் சீக் (Joel Cheek) பிரபல  Maxwell House என்னும் பெயரில் புதிய காஃபி வகையை உருவாக்கினார். மேக்ஸ்வெல் உடனடி காஃபி தூள் (instant coffee) இரண்டாம் உலகப்போரின் போது குடிமக்களும் ராணுவ வீரர்களும் ஏராளமாக  அருந்திய பானமாக இருந்தது.

 1900 ல் நெஸ்ட்லே நிறுவனம்   குளிர வைத்த அரைத்த காஃபி குழம்பை பதப்படுத்தி  உலர செய்து அதிலிருந்து  உடனடி காஃபியை  கண்டுபிடித்தது. இன்றும் நெஸ்ட்லே வின் இந்த தயாரிப்புத்தான் உலகளவில்  முன்னிலையில் இருக்கிறது 

பணி இடைவேளைகளில்  விரைவில் காஃபி அருந்திவிட்டு பணிக்கு திரும்ப செல்ல வசதியாக காஃபி தயாரிக்கும் நேரத்தை குறைப்பதற்கு லூயிகியால்  (Luigi Bezzera)  காஃபித்தூளில் நீரையும், நீரவியையும் கடும் அழுத்தத்தில் சல்லடை வழியே பீய்ச்சி அடித்து உருவாகும்  எஸ்பிரெசோ காஃபி இயந்திரம் 1901 ல் இத்தாலியில்  உருவாக்கப்பட்டது.. பின்னர் அது பலரால் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது 

1933.  Dr. Ernesto Illy முதல் தானியங்கி எஸ்ப்ரெசோ இயந்திரத்தை கண்டுபிடித்தார் அவரது கூற்றுப்படி நல்ல தரமான எஸ்ப்ரெசோ காஃபியின் நிறம்  நாக்கில் ஒட்டிக் கொள்ள வேண்டும் .இவரே எஸ்ப்ரெசோவின் தந்தை என கருதப்படுகிறார்

1908 ல் ஒரு ஜெர்மானிய பெண்மணி தனது மகனின் பழைய பள்ளி புத்தக காகிதங்களை உபயோகித்து எளிய  காகித காப்பி வடிகட்டியை உண்டாக்கினார்.அதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது

1960களில் காஃபி இன்னொரு புரட்சிகரமான மாற்றதுக்கு உள்ளானது அல்ஃப்ரெட் பீட் (Alfred Peet) எனும் டச்சு அமெரிக்கர் ஒருவர் ஹாலந்தில் காஃபி விற்பனை செய்து கொண்டிருந்த தனது   தந்தையிடமிருந்து காஃபி கொட்டையை வறுக்கும் கலையை அறிந்து கொண்டு. 1966ல் கலிஃபோர்னியாவில் பீட் காஃபி நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார். மிக வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த அந்த நிறுவனத்துக்கு பிறகு 1971 ல் பீட் சியாட்டிலில் ஒரு புதிய கிளையை துவங்கினர் அதுவே ஸ்டார்பக்ஸ் நிறுவனம்.( Starbucks.)

முதலில் வறுத்த காஃபி கொட்டைகள் மட்டும் இங்கு விற்பனை செய்யப்பட்டன.பின்னர் காஃபி பானமாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

1982 ல்  இத்தாலியின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று விதம் விதமான காஃபி தயாரிப்புக்களை குறித்து கற்றுத்தேர்ந்த, காஃபி பான விற்பனையில் தேர்ந்த அனுபவமும் கொண்டிருந்த ஹவர்ட் ஷ்யூல்ட்ஸ் (Howard Schultz), ஸ்டார் பக்ஸின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

கொள்கை ரீதியான சில கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு 1984ல் ஹவர்ட் அதிலிருந்து விலகி தனது சொந்த காஃபி நிறுவனமான Il Giornale வை  துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். ஹவர்ட் குறுகிய காலத்திலேயே ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தை சொந்தமாக  $3.8  மில்லியனுக்கு வாங்கி இத்தாலிய  கலவையுடன் மிகத்தரமான சுவையான  காஃபியை வழங்கினார். பின்னர் ஸ்டார்பக்ஸ் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு  பரந்து விரிந்து கிளை பரப்பி உலகெங்கும் காஃபியின் பேரலையை  உருவாக்கியது.  

உலகின் மிகப்பெரிய காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின்  30,000 கிளைகள்  உலகெங்கும் மிக வெற்றிகரமாக செயல்படுகின்றன இதனை தொடர்ந்து இருப்பவை  Dunkin’ Donuts, Tim Hortons, Costa Coffee, மற்றும்  McCafe ஆகிய நான்கு நிறுவனங்கள்.

நான்கு மிகப்பெரிய காஃபிக்கொட்டைகளை வறுக்கும் நிறுவனங்கள்  Kraft, P&G, Sara Lee மற்றும்  Nestle. இவை நான்கும் உலகின் மொத்த காஃபி உற்பத்தியில் 50 சதவீதத்தை வாங்கிக்கொள்கிறார்கள் .

காஃபி பயிர்

600 பேரினங்களும் 13, 500 இனச்செடி வகைகளும் உள்ள ருபியேசி (Rubiaceae) குடும்பத்தைச் சேர்ந்த காஃபி பயிர்கள் பசுமை மாறா புதர்கள் அல்லது குறுமரங்களாக  10 லிருந்து 15 அடி உயரம் வரை வளரும். இவற்றின் எதிரடுக்கில் அமைந்திருக்கும் அகலமான அடர் பச்சை இலைகள்   பளபளப்பானவை,  வெளை நிற அழகிய மலர்கள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும் 

காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான சிற்றின வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு,  காஃபி பானம் தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டு இனங்களின் அறிவியல் பெயர்கள் காப்பியா அராபிக்கா (Coffea arabica) மற்றும் காஃபியா கன்னெஃபோரா (Coffea canephora) (காஃபியா ரொபஸ்ட்டா (Coffea robusta) என்பது இதன் இணைப்பெயர்). மேலும் சில காஃபி பயிர்வகைகள் இருப்பினும் வணிகரீதியான வெற்றிகரமான இருவகைகள்  அராபிகா மற்றும்  ரொபஸ்டா ஆகியவையே

அராபிகா காஃபி என்பது”மலை காஃபி”  என்றும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு அரேபியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டு வரும்  இந்த வகையே காஃபியின் முதல் இனம் என்று நம்பப்படுகிறது. வணிக ரீதியாக வளர்க்கப்படும் மற்ற பெரிய காஃபி இனமான Coffea canephora வை (robusta) விட இது சிறந்த காஃபியை உற்பத்தி செய்கிறது  ரொபஸ்டா காஃபி வகைகளை விட அரேபிகாவில்  காஃபின் அளவும் குறைவுதான். 

ரொபஸ்டா  மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய காஃபி வகை. அங்கு கொனிலன் (Conillon) என்று அழைக்கப்படும் இப்பயிர் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் வளர்க்கப்படுகிறது,  

காஃபி செடியிலிருந்து முதிர்ந்த பழங்கள் இயற்கையான உலர்ந்த முறை மற்றும் ,கழுவிய ஈரமாக்கப்பட்ட முறை  ஆகிய  இரண்டு விதங்களில் பக்குவப்படுத்தப் படுகின்றன. 

சந்தைப்படுத்த பட்டிருக்கும் காஃபி பயிரின் நான்கு முக்கிய இனங்கள்  

  Arabica, Robusta, Excelsa, மற்றும் Liberica இவை நான்கும் உலகின் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் காஃபியின் முக்கிய நான்கு வகைகள் . நான்குமே அவற்றிற்கான பிரத்யேக சுவையும் மணமும் கொண்டிருப்பவை

 அரேபிகா

இதுவே உலகின் மிக பிரபல காஃபி  வகை. உலகின் 60 சதவீத காஃபி அரேபிகா காஃபிதான்.  பால் கலக்காத கருப்பு காஃபிக்கேற்றது இந்த வகைதான். 

ரொபஸ்டா

அரேபிகாவிற்கு அடுத்ததாக  இருக்கும் ரொபஸ்டா உலகின் இரண்டாவது அதிக உற்பத்தியாகும் காஃபி இனம். பாலும் சர்க்கரையும் கலந்து உண்டாக்கப்படும் காஃபி வகைகளுக்கு ஏற்றது ரொபஸ்டா. 

லிபெரிகா

 லிபெரிகா காஃபிகொட்டைகள் கடினமானவை. பிற வகைகளை காட்டிலும் இவை அளவில் பெரியவை, மேலும் காஃபிக்கொட்டை வகைகளில் இவைதான் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. இந்தோனேஷியாவில் இவ்வகை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றின் நறுமணமும் பிரத்தியேகமானது

எக்ஸெல்சா

 இவை வித்தியாசமான பழங்களின்  நறுமணம் கொண்ட கொட்டைகள்  Coffea liberica var. dewevrei என்னும் இவ்வகை 2006 ல் தான் சரியாக தாவரவியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டது  தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் விளையும் இவை மொத்த காஃபி உற்பத்தில் வெறும் 7 சதவீதம் தான்.

இவற்றுடன் இப்போது புதிதாக அட்ரினோ என்னும் மஞ்சள் பழங்களைக் கொண்டிருப்பது  மற்றும், பப்பா நியூ கினி காப்பியான ஜமைக்காவின் நீல மலைக்காப்பி ஆகிய இரு வகைகளும் பிரபலமடைந்திருக்கின்றன. 

கஃபின் ஆல்கலாய்டு

 காஃபி அருந்தப்படுவதற்கு அதிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தான் காரணம் என்பது எத்தனைக்கு உண்மையோ அத்தனை உண்மை அதிக காஃபின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதுவும்.

 Friedlieb Ferdinand Runge, என்பவரால் 1819 ல் காஃபி கொட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த காஃபின் ஆஸ்பிரின்,  அசெட்டமினோஃபென் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளின் செர்மானங்களில் ஒன்றாக இருக்கிறது

பச்சிளம் குழந்தைகளுக்கும், அறுவை சிக்கிசை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் காஃபின் ஒவ்வாமையை உருவாக்கும் பெரும்பாலான காஃபின் காஃபி கொட்டைகளிலிருந்தல்லாது செயற்கையாகவும் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகிறது.

காஃபின் நீக்கம் (Decaffeination)

காஃபியின் சுவை மட்டும் இருந்தால் போதும் அதில் இருக்கும் காஃபின் வேண்டாம் என்பவர்களுக்காக  உருவானதுதான் காஃபின் இல்லாத காஃபி. சில வேதிச்செயல்களின் மூலம் காஃபின் நீக்கப்படுகிறது. 

விலையுயர்ந்த காஃபி வகைகள்

உலகின் மிக அதிகவிலையுள்ள காஃபி புனுகு பூனைகளுக்கு காஃபி பழத்தை உண்ணக்கொடுத்து அவற்றின் கழிவில் செரிமானமாகாமல் வந்திருக்கும் காஃபிக்கொட்டைகளிலிருந்து பெறப்படும் கோப்பி லூவாக் (Kopi Luwak)  காப்பிதான் .அதிக விலை கொண்ட தாவர உணவுகளின் பட்டியலில் இருக்கும்  கோப்பி லுவாக்கின் விலை  கிலோ 400 டாலர்கள். 

இதைப்போலவே காஃபி பிரியர்கள் அவசியம் சுவைத்து பார்க்கவேண்டிய ஒரு புதுமையான காஃபி கருப்பு தந்தக்காஃபி வகை(Black ivory coffee) இதில் பசும் புல்லின் வாசனையும் தானியங்கள், சாக்கலேட் மற்றும் காஃபியின் மென் கசப்புச்சுவை ஆகியவை கலந்திருக்கும் பிரெத்யேக நறுமணம் இருக்கும்

மேலும் இந்தக்காஃபி அருந்துவதன் மூலம் அளிக்கபப்டும் தொகையானது  ஆசிய தங்க முக்கோண யானை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு நேரடியான உதவியாக சென்று சேரும்

மிகத் தூய அரேபிகா காஃபி கொட்டைகளும், அரிசிச்சோறு, வாழைப்பழம், புளி ஆகியவையும் கலக்கப்பட்டு யானைகளுக்கு உணவாக கொடுக்கப்படும். 12 லிருந்து 72 மணி நேரத்தில் யானையின் கழிவில் இருந்து செரிமானமாகாத காஃபிக்கொட்டைகள் பிரித்தெடுக்கப்paடுகின்றன.வறுத்து அரைக்கப்பட்டு தயாராகும் இக்காஃபி ஒரு  கிலோ இந்திய ரூபாய்களில்  இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகிறது. சுமார் 33 கிலோ காஃபிக்கொட்டைகளிலிருந்து ஒருகிலோ இவ்வகை காப்பி கிடைக்கிறது  

 தாய்லாந்தில் உருவாகும் இதுவே உலகின் அரிய வகை காஃபியுமாகும்  

காஃபி இப்போது 

21ஆம் நூற்றாண்டில் வாடிக்கையாளர்களின்  தொடர்ந்து மாறிவரும் தேவையை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  நறுமணத்தை பாதுகாக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய  பிளாஸ்டிக் காஃபி குளிகைகளில் அடர்காஃபி திரவம் அடைக்கப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது

இவற்றை உடைத்து கொதிநீரிலோ அல்லது பாலிலோ கலந்தால் சுவையான நறுமணம் கொண்ட காஃபி தயாராகிவிடும்.  இந்த காஃபி குளிகைகள் இப்போது இணைய தளத்திலும் விற்பனையாகின்றன.  

இன்று காஃபி உலகின் இரண்டாவது அதிக சந்தைப்படுத்தப்படும் பொருள்,(முதலிடத்தில் கச்சா எண்ணை இருக்கிறது) . தற்போது  சுமார் 500 மில்லியன் மக்கள் உலக காஃபி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது உலக வங்கியின் புள்ளி விவரம்.

2020ல் உலக காஃபி வர்த்தகம் சுமார் 465.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது  உலகின் அனைத்து விதமான காஃபி வகைகளின் ஒட்டு மொத்த  மற்றும் சில்லறை வணிகங்களை உள்ளடக்கிய மதிப்பு

காஃபி புத்துணர்ச்சி அளிப்பதோடு அதிலிருக்கும் முக்கிய சத்துக்களான வைட்டமின்களும் புரதங்களும் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. அதிக அளவில் அருந்துகையில் காஃபி தூக்கமின்மை பரபரப்பு ஆகியவற்றையும் உருவாக்கும்.அதிக  காஃபி ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்கும்.குழந்தைகளும் கர்ப்பிணிகளும் முதியவர்களும் அதிக காஃபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் மிக அதிக சர்க்கரை சேர்க்கப் பட்ட காஃபி  நிச்சயம் எல்லா வயதினருக்கும்  ஆபத்துதான்

உலகெங்கும் மிகப்பிரபலமான 30 வகைகாஃபிகளில் முதல் இடங்களில் இருப்பது பாலில்லாத கருப்பு காப்பி, பால் கலந்த காஃபி, க குளிர் காஃபி ,கேப்பசீனோ மற்றும் எஸ்பிரெசோ ஆகியவை.(பிரபல கேப்பசீனோ காஃபி கேப்பசின் துறவிகளின் துறவாடையின் அடர் மண் நிறத்தில் இருப்பதால் அப்பெயரை கொண்டுள்ளது)

உலகின் மிக அதிக காஃபி ஏற்றுமதி நாடுகள் பிரேஸில், வியட்னாம் இந்தோனேஷியா, கொலம்பியா, மற்றும் இந்தியா ஆகியவை. காஃபி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 2.6  மில்லியன் டன் பச்சைக்காஃபிக்கொட்டைகள் பிரேசிலில் உற்பத்தி செய்யப்படுகின்றது

சென்ற வாரம் ஏற்காடு காஃபி தோட்டத்தில் அதிகாரியாக இருக்கும் மாணவி ஒருத்தியை பார்க்க சென்றிருந்த போது அங்கு  பலநூறு ஏக்கர்களில்  காஃபியா ரொபஸ்டா மற்றும் காஃபியா அராபிகா வகைகள் பயிராகிக்கொண்டிருந்தன. புதிய புதிய ஆய்வுகள் காஃபி பயிர்களில்  நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு  அங்கு செய்யப்பட்டு   கொண்டிருக்கிருந்தன. அன்று காஃபித்தோட்டத்தின் சில்வர் ஓக் மரங்களினடியில்  அமர்ந்து  அருமையான  நறுமணம் மிக்க மிகச் சுவையான   காஃபியை அருந்துகையில்  சூஃபி துறவியின் தாடிக்குள் மறைந்துகொண்டு சுமார் 6500 கிமீ பயணித்து வந்த காஃபியின் பயணத்தை நினைத்துக் கொண்டேன்.

2 Replies to “காஃபி”

  1. Plantation A என்பது அரேபிகாவின் அடுத்த
    (இரண்டாம்) தரக்காபி மர வாசனை பழவாசனையுடன் கூடுதல் ஸ்டாராங்காக இருக்கும்.மிதமாக வறுக்கப்படும் வகை இது. Peaberry வழக்கமாக காபிப்பழத்தின் உள்ளிருப்பதைப்போல இருபகுதிகளாக இல்லாமல் ஒற்றை முத்துப்போல கொட்டை கொண்டது. PlantatiinA வை விட Strength குறைவான காபி இது. அரேபிகா ரொபஸ்டா இரண்டிலும் உண்டகும் ம்யூட்டேஷனில் பீபெரி உருவாகும் காபின் அளவும் இதில் சற்று மிகுந்திருக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.