கல்நின்று முன்நின்றவர்

உணர்வு தன் சிறகுகளை ஒன்றிணைத்து உறங்கும் பட்டாம்பூச்சியென உரைந்து சிறகடிப்புகளில் தன்னை மீட்டு மீண்டும் அடங்கியது. மனம், எதிலோ முட்டிக்கொண்ட விசையுடன் அதை ஊதி நகர்த்திற்று. கணந்தோறும் உணர்வின் சிறகடிப்பு. உணர்வு, எழுந்து பறந்து அதன் வண்ணங்களை உதிர்த்து வெற்றுச் சிறகுகளுடன் வேறொரு புல்லில் அமர்ந்த கணமே உதிர்ந்த வண்ணங்களை மனம் ஊதி உணர்விடம் மீண்டும் சேர்த்தது. அது ஒரு முடிவிலி. சலிப்பின்றி ஆடப்படும் ஆட்டம். அதன் கோடிக்கணக்கான கண்ணிகளின் இடுக்குகளில் சிலவற்றிலே விரல் அகஸ்மாத்தாக சிக்கிக்கொள்கிறது.

“ கேரளத்துச் சாமி ”

என்ற ஒலி குரலின்றி எழுத்துருக்களாய் உணர்வின் சிறகில் படிந்தது. உணர்வு தன் சிறகு நுனிகளில் கனலை உணர்ந்து கண்களை மூடி கொம்புகளை சுருட்டிக்கொள்ள சிறகுதிர்ந்து சாம்பல் பறக்க மனம் ஊதுவதை நிறுத்திக் கொண்டது.

கண்விழித்ததும் கண்டது சுவரைத்தான். பச்சையாய், ஆங்காங்கே கொப்பளிப்புகளுடன். அதன் மேடுகளில் எறும்புக்கூட்டத்தின் ஓட்டம். திரும்பிப்பார்க்கையில் ஆவுடையாப்பிள்ளை, மலைத்தொடர் வானில் அப்பிக்கொண்டிருக்க அதிலிருந்து புடைத்து நின்றிருந்தார். கவிழ்த்து போட்ட சுவரென மலைத்தொடர், அதன் மேடுகளில் முட்டிக்கொண்டு ஓடும் மேகத் திரள்.

“ கேரளத்துச் சாமி ”

“ ம், என்னாச்சு ”

“ வந்து, பட்டாளத்துச் சாமி இறந்துட்டாருங்க ”

கையூன்றி எழுகையில் குளிர் ரிஷபத்திலிருந்து நொடியில் நிசாதத்திற்கு தொற்றிக்கொண்டு மெல்ல நரம்புகள் வழி வழுக்கி வந்தது. ஆவுடையாப்பிள்ளை ஒவ்வொரு அடிக்கும் வேட்டி கணுக்காலில் சிக்கி ‘சரக்’ என்ற சத்தம் முழவதிர்வென அவ்விடம் நிரம்ப நடந்தார். பனியாய் ஓட்டிடுக்குகளில் திரண்டு பல மணிக்கண்கள் கொண்ட விசும்பின் பார்வை மேலூர மனம் சற்று கூசிற்று. ஆவுடையாப்பிள்ளையின் முழங்கைகளில் பாம்புத் தடத்தை பார்த்ததும், அனிச்சையாக என் கைகள் பார்க்க, விரல் ஹார்மோனிய கட்டைகளின் மேல் நகர்ந்து செல்வதுபோன்றதொரு உணர்வு. அதன் ஸ்வரங்கள் எங்கோ கேட்டுக்கொண்டிருக்குமென ஒரு கற்பனை. அறையினுள் நுழைவதும் போவதுமாய் இருப்பதிலேயே யாருக்கும் என்ன செய்வதென தெரியாது நிற்கின்றனர் என்று தெரிந்தது. பொது அபிப்ராயங்களின் சரளிக்கிடையில் மேலும் புதிய அபிப்ராயங்கள் இடம் தேடி முட்டிக்கொண்டன.

“ குருவுக்கு சொல்லியாச்சுல ”

“ சொல்லியாச்சு வந்துட்டு இருப்பாங்க ”

பட்டாளத்துச் சாமி எப்பொழுதும் போல சுவரைப் பார்த்து திரும்பி படுத்திருந்தார். அவர் இறந்தாரென்றே சொல்வதற்கில்லை. ஆவுடையாப்பிள்ளை அவரை நெடு நேரம் உற்று பார்த்திருப்பார், சில முறை விளித்திருப்பார், இறுதியில் நாடி பிடித்து பார்த்திருப்பார். ஆவுடையாப்பிள்ளையின் பார்வை பொதுவாக அறையை சுற்றிற்று. அது யானையின் முதுமை வீச்சத்தை முகர்ந்து நாட்கணக்கில் தொடர்ந்து, அதன் இறப்பை உற்றுநோக்கி இறப்பில் பசி தீரும் கழுதை புலியின் பார்வையென வெட்டிச் சென்றது. அவ்வறையில் முழு பிரக்ஞையுடன் இருந்தது தியாகராஜர் படம் மட்டும்தான்.

“ தம்பி ஒரு கீர்த்தனை பாடுங்களேன் ”

என்று பட்டாளத்துச் சாமி கேட்பதுண்டு, சுழன்று வழியும் பிருகாக்களை காற்றில் தேட அவ்வப்போது விழிகள் திறக்கும். பாடியபின் ஈரிலை முளையென உயிர்ப்புடன் இமை திறக்கும்.

“ சின்ன வயசுல சாதகம் பண்ணது. நேவில சேர்ந்தப் பிறகு விட்டுப் போச்சு. விடாம சாதகம் பண்ணுங்க. குரு சொன்னதும் சரிதான். இசைய விட வேறெதுவும் தெய்வத்துக்கு பக்கத்துல போக முடியாது. ஆனா சரியான நேரம் வரப்ப அத விட்டுடனும், இல்லனா எல்லாம் பொம்மையையும் கல்லையும் கட்டிக்கிட்டு அழற மாதிரி அதுவும் ஆய்டும். ” நெடுமூச்சு வழி வரும் சொற்கள்.

இசை மட்டுமே என்னுள் எஞ்சிய நாட்கள் இவை. இங்குவரும் முன் மனம் எதிலும் இலயிக்காமல் நீர்த்து, விரகத்துடன் தேங்கி நின்றிருந்தது. ஒவ்வொரு ஒற்றையடிப் பாதையையும் விஸ்தரித்து மனம் ராஜபாட்டைகளில் உருளும். நான் ராஜயோகி ஆனால் வேறொரு பிரிவு என்று எவரேனும் சொன்னால் கேள்வியின்றி நம்பி தொடர்ந்த நாட்கள் அவை,

“ டேய் கால இன்னும் அகல விரிச்சு வைடா, உள்ளே ஏறுதா இல்லியா? ”

கலம் முழுக்க நீர் நிரப்பி அதன் முன்னாள் அமர்ந்து, குதத்தின் வழி நீரை இழுக்க வேண்டும். காற்று குடலை நீங்கியவுடன் வெற்றிடத்தை நிரப்ப குதம் வழி நீர் மேலேறும்.

“ டேய் நான் இருபது நிமிஷம் மூச்சடக்கி குளத்துல நின்னு செய்வேண்டா. நீ இப்படியே இருந்தா என்ன பண்ணறது. ”

அன்று முழுக்க நிற்க தான் முடியும். எதில் அமர்ந்தாலும் குதம் நீர் சொரியும், கடலை நீங்கிய பின்பும் அலையை உணரும் பாதங்களென. நிற்கும் போதெல்லாம் குதத்திலிருந்து நீர் வடிகிறதா என்று தொட்டுத் பார்த்துக்கொள்ளவேண்டும்.

“ டேய் ஒரு பங்கு பூரகத்துக்கு நாலு பங்கு கும்பகம் வரணும். மூச்ச மெல்ல இழுத்து நிறுத்து. ”

கண்களில் வெங்காய வேர்களென நரம்பெழுந்து படரும். உலை மூடியை தட்டி திறக்கும் ஆவி மயிர்கால்களை பெயர்த்து கசியும். வெம்மை சதையை உருக்கி என்புவரை வந்து நாசுழற்ற அதனெச்சில் வியர்வையாய் படர்ந்து மறையும். கடைசியாக அவ்விடம் நீங்கியது இரத்த வாயிலெடுத்து தொண்டைக்குழி ஆழத்தில் சுருண்டு கிடுக்கும் இரத்தக் கருமணி தொண்டைவழி செல்லும் எல்லாவற்றையும் தொட்டனுப்பிய பொழுதுதான்.

இக்குருகுலத்தை அடைகையில் நிலவின்றி வானம் நட்சத்திரம் மூலம் நிலத்தை கேட்டுக்கொண்டிருந்தது. கல் பதித்த வழித்தடத்தில் கூந்தல் அவிழ்ந்த சரக்கொன்றை. கண்ணில் படாத கோட்டானை மருதம் தனக்குள்ளிருந்து ஒலித்தது. கண் மூடிய தூங்குவாகையை அதன் வேர்கள் தொட்டு எழுப்பியது என்னை கண்டு சிலிர்த்த வேங்கை. உதிர்ந்து வீழ்ந்த அரளிகளை தொட்டு மீட்க அசைந்தாடியது கல் வாழை. நான் கடக்கும் கற்களுக்கிடையே புல்தலைகள் உள்ளங்கால்களை தொட்டசைந்தன. திண்ணையில் கூரை தலைவரை தாழ்ந்து குடையென இருக்க, சற்று குறுகி அமர்ந்த உடலின் பின் சட்டத்தில் தொங்கிய அரிக்கன் விளக்கு இருளின் ஓரலையில் மிதந்து நின்றது. வேட்டி காற்றில் பறக்க அதை பிடித்த கை அல்லிக்குளத்தின் நெளிவுகளில் படர்ந்தது. கறை விலக நிலவு தரையை மீட்டெடுத்தது. மங்கிய வெள்ளை திரையில் கருப்பு கீற்றுகள் வெட்டி சென்றன. வெண்மஞ்சளுக்கிடையில் நிழல் ஒளியின்மையை ஒட்டிப் பார்த்து அதை பிரித்து மீண்டும் வேறொரு இடத்தில் ஒட்டிப் பார்த்துக்கொண்டது. அவ்விடம் முழுக்க தொட்டு மீண்ட அது என்னருகில் மடங்கி ஒழிந்தது. சர்வ பிரக்ஞையுடன் அது என்னை விலக்கி சுழன்றது. வெள்ளை கறை கொண்டு நான் நிற்கையில், இலைகள் கைதட்ட கிளைகள் குலுங்கி நகைத்தன. இன்னும் எழாமல் இருந்த தூங்குவாகையை இம்முறை வேங்கை கிளை நீட்டி எழுப்பியது. இலைகளை நொடி நேரம் திறந்து சிரித்து, உறைந்த சிரிப்புடனே அம்மரம் மீண்டும் துயின்றது. கண் பனிக்க திரும்புகையில், இருமருங்கிலிருந்தும் நிழல் வழிந்து வந்து சூழ்ந்தது. மூவிலையாய் வலப்பக்கம் நின்றது. திரும்பி பார்க்கையில் அரிக்கன் விளக்கொளியில் ஒரு கை சின் முத்திரை காட்டி நின்றது. இன்னும் தூங்கிக் கொண்டிருந்த தூங்குவாழையை வேங்கை ஆந்தை குரல் கொண்டு எழுப்ப, அது இலைகளை திறந்து குரல் தேடி தவித்தது. கரிச்சான் குரல் கொண்டு அது அதிகாலையில் அழைக்கையில் நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.

ஆவுடையாப்பிள்ளை குடை பிடித்து வர குரு கல் வழித்தட இடைவேளைகளில் செறிந்து நிற்கும் புல் விரிப்பை தொடாமல் வந்துகொண்டிருந்தார். ஒவ்வொரு அடியிலும் உள்ள நேர்த்தி அதை ஒரு மகா யோகமென ஆக்கியது. குடையின் விழிம்பில் குவிந்து நின்ற ஒரு துளியை சுட்டு விரலால் தட்டிச் சென்றார். அதற்காகவென்றே கோடிமுறை மண்ணையும் விண்ணையும் அளந்தோடிய தவத்தை அத்துளி தன்னுள் நிறைத்து நீங்கியது. அக்கணம் மனம் தன் எல்லா நம்பிக்கைகளையும் உடைத்தெரிந்து அவர் பாதம் நோக்கி தள்ளியது. அக்கணத்தை சொற்களால் மூழியாக்க விரும்பாமல் மனம் எடுத்துக்கொண்டது ஒரு சொல்,

“ குருவே ”

தலையில் விரல்கள் அலைந்து விலகின. நிமிர்ந்து பார்க்கையில் குரு அறைநோக்கி சென்றுகொண்டிருந்தார். அவரது வெம்மை படிந்த என் தலையை விசும்பு எண்ணற்ற விரல் நீட்டி தொட்டு பார்த்துக்கொண்டது. அதன் பார்வையை உணர்ந்து அதை திரும்பி பார்க்கையில் சட்டென்று முகத்தை திருப்பி கொண்டதந்த தூங்குவாகை.

ஒரு நாள் பல நினைவுகளின் இடையே, மனம் எதிலும் ஒட்டாமல் நிற்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டி நிற்க, நினைவுகளின் இடையே பார்வை நெளிந்துகொண்டிருந்ததை உணரமுடிந்து கண் திறந்து பார்க்கையில் குரு நின்றுகொண்டிருந்தார்.

“ விபாசனா பண்ணிட்டு இருக்கேன் குரு ”

வலப்பக்கம் சற்று உதட்டை பிரித்து சிரித்தபடி

“ விபசானா பண்ணும்போதே அது விபாசனா கிடையாதே. ” என்றார்.

“ இத எங்க தெரிஞ்சுக்கிட்ட? ”

“ குருவே இத பத்திதான் இப்பம் எல்லா புஸ்தகத்திலும் போடுறாங்க. கோயன்கானு ஒருத்தவர் சொல்லித்தரார். தியானம்னாலே இந்தியா முழுக்க இப்போ இதுதான். புத்த மத தியானமாம். ”

“ ஆமா. ”

“ குருவே, புத்தத்தை பத்தி படிச்சேன். புத்த மதத்துல எனக்கு இப்பம் விருப்பம் உண்டு. ”

“ ரெண்டு புத்த மதம் உண்டு. ஒன்னு முன்னாடி இருந்த பிக்குகள் கடைபிடிச்சது, இன்னொன்னு வெள்ளைகாரங்க உருவாக்குனது. இதுல இப்போ பரவலா இருக்குறது ரெண்டாவது புத்தம்தான். ஆனா ரெண்டுமே புத்தர் பக்கத்துல போகாது. நீ பாக்குற புத்தம் நியதிகளோட ஆறு, பலகாலமா அதுல தண்ணி ஓடி புது நியதிகளோட புத்தம் மாறிக்கிட்டே இருந்துச்சு, இப்ப தேங்கி நிக்கிது. எப்போ கல்லுல உளி பட்டு புத்தர் எழுந்தாரோ அப்பயே இன்னொரு பக்கம் புத்தர் குலைஞ்சுகிட்டே வந்து கரைஞ்சுட்டாரு. ஆனா புத்தர் கல்லுல வந்தபிறகுதான் பலநாட்டுக்கு அவர கொண்டுபோக முடிஞ்சுது. போதனைகள் வெறும் வார்த்தை மட்டும்தான், ஒரு ஊரிலேயிருந்து அடுத்து ஊரு போறதுக்குள்ள தன்ன மாத்திக்கும். கல் மாறாது, அதுனாலயே அது புத்தத்த கடந்து போய்டுச்சு. சபே சங்காரா அனிச்சா, எல்லாம் மாறக்கூடியவை.” குரு பேசுவதை மனம் தொடுத்துக்கொள்ளவிடாமல் விபாசனா எங்கோ என்னை வைத்திருந்தது. மனம் விழி வழி கசிந்து வழிந்திற்று. வேறேதோ சொல்ல உதட்டை பிரித்தவர் சிரித்து,

“ ராமகிருஷ்ண பரஹம்சர் சரியா சொன்னார். எல்லாரும் கலத்துல பால வாங்குறதுலதான் குறியா இருக்காங்க, அந்த கலத்த பாக்குறதே இல்ல, அது உள்ள தான் பாம்பு பூரான் எல்லாம் உறங்குது, அதுல பாற்கடலையே கடைஞ்சு ஊத்துனாலும் அடுத்த நொடியே அது விஷமாயிடும். கலத்த முதல்ல சுத்தமாக்கு, அதுல நீ தண்ணி குடிச்சாலும் அதுவே போதும். உன் மனசு நெளிவு சுளிவு இல்லாத எதுலையும் நிக்காது, நீ படைப்பாளி கற்பனையும் மாயையும்தான் உன் வேர். உன்னால வேர் அறுத்து மரத்த சாய்க்க முடியாது. வேர் இன்னும் மண்ணுக்குள்ள போகட்டும் பல மடங்கு விரியட்டும். மரம் செழிச்சு கனியட்டும். இலை தெரிய இடமில்லாம லட்ச கனி நிறையட்டும். கனியோட கனம் தாங்காம மரம் வேரோட சாய்ந்து லட்ச கனியும் மண்ணுல புதையட்டும். அதுதான் முழுமை. முழுமையே விடுதலை. உன்னோட யோகம் இசை. அதோட நேர்த்தில நீ கரைஞ்சாதான் உனக்கு விடுதல. கலத்துல இருக்குற அழுக்க எதையாவது ஊத்திதான் வெளிய எடுக்கணும். இசை உன் கலத்தல நிறையட்டும். அது எல்லாத்தையும் வெளிய எடுத்துடும். ஜெய் விஜயி பவ. ”
என்று சொல்லிவிட்டு குரு பக்கத்தில் பூத்திருந்த சந்தனமுல்லை அருகே குனிந்து அதன் மணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்.

இன்று அதை திரும்பி பார்க்கையில் அதன் பின் என்னுள் எஞ்சியது இசைமட்டுமே. உச்சஸ்தாயியில் இசை கலத்தின் விளிம்புகளில் படர்ந்து அதன் கழுத்தில் வளைந்து வழியும். திக்கற்ற வெளியில் அதன் சுருள்கள் பரவி வெளியை தனதாக்கிக்கொள்ளும். சாதகம் முடிகையில் அது வடிந்த கறையில் பார்வை நிற்க இடமின்றி கொடுக்குடைந்த தேள்களையும் பாம்புகளையும் அறுந்து விழுந்த நூலாம்படைகளையும் விட்டுச்செல்லும். கலத்தில் ஏதுமில்லை என்ற உணர்வு வந்தபிறகே வீட்டிற்கு கிளம்பினேன்.

“ கலத்துல எதுவுமில்லங்குற நினப்பு கலத்த நிறைக்காம பாத்துக்கோ. ஆயுஷ்மான் பவ. ” என்று குரு வழியனுப்பிவைத்தார்.

அவ்வப்போது குருகுலத்திற்கு வந்து செல்வதுண்டு. அப்படி ஒருமுறை வருகையில்தான் பட்டாளத்துச் சாமி அங்கிருந்தார்.

“ குருவே, உண்மையிலேயே சத்துவ குணத்துக்கு தமோ குணத்துக்கும் என்ன தான் வித்தியாசம். ஞானமும் ஒரு வகையிலான சோம்பேரித்தனம் தான. ” பட்டாளத்துச் சாமி கேட்டு முடித்து உடலை சற்று குறுக்கி சால்வையை இழுத்துக்கொண்டார்.

“ ஆமா சோம்பேரித்தனம் தான் ஆனா எதோட சோம்பேரித்தனம் அப்பிடிங்குறது முக்கியம். நம்ம பண்ற எல்லா செயலும் வெறும் நடிப்பு. மனசு அந்த செயல ஏற்கனவே செஞ்சு முடிச்சிருக்கும் அத தான் உடம்பு நடிச்சுக்காட்டுது. சிலசமயம் மனசு செஞ்சு முடிச்சத உடம்பு நடிக்க மறுக்குது. சத்துவ குணம் ரஜோகுணம் தமோ குணம் எல்லாம் மனசு செய்யறதுலதான் இருக்கு உடம்பு நடிக்கிறதுல இல்ல. அதுனாலதான் சத்திரியனோட குணம் ரஜோகுணம் அவன் யாரையும் கொள்ள அவசியமில்லை ஆனா மனசு ஏற்கனவே கோடி பேர கொன்னு குவிச்சிருக்கும். உடம்பு அத நடிக்கல அவ்ளோதான். தமோ குணத்தில உடம்பு எதையும் செய்யாது ஆனா மனசு பல விஷயத்தை செஞ்சு முடிச்சிருக்கும். ஒரு மரவட்டை மாதிரி தான் மரவட்டை ரொம்ப மெதுவா நகரும் அதோட ஆயிரம் கால பாத்தா அது இயங்குற வேகம் எந்த குதிரைக்கும் வராது. ஆனா இதையெல்லாம் கடந்த விஷயம் ஒன்னு உண்டு. அது நடிக்க மட்டுமே செய்றது. மனசு எதையும் செய்யாம உடம்பு எல்லாத்தையும் செய்றது. அதுவே முழுமை. இட் ஹாப்பென்ஸ் ஒன்லி வென் யூ டிடாட்ச் பிரம் யுவர்ஸெல்ப். திரையிலதான் முழு படமும் ஓடுது ஆனா திரை எப்பவும் வெள்ளையா தானே இருக்கு. இத ஸ்திதப்பிரக்ஞன் அப்படினு சொல்லலாம். அவன் உண்மைய தேடவோ நம்பவோ தேவ இல்ல ஏன்னா அது சூரிய வெளிச்சம் மாதிரி அவன் கண்ணுக்கு முன்னாடியே இருக்கு. எல்லா குணமும் மனசுலதான், அது செயல்படுற வர குணங்கள் இருக்கத்தான் செய்யும். ”

சற்று தெளிவற்ற நிலையிலேயே அவ்வுரையாடல் கலைந்தது. மாலையில் பட்டாளத்துப் பிள்ளை ஒரு தனி குருகுலம் நடத்தி கொண்டிருந்தார். விந்துநாதம் அதன் மையச் சரடு. அவரது வாதங்களில் புதிய வள்ளலாரும் அருணகிரிநாதரும் உருவாகிவந்தனர். அலமாரியில் பிரம்மசூத்திரமும் விவேகசூடாமணியும் ஒன்றை ஒன்று உரசி நின்றன. ஓஷோவின் திறந்த பக்கங்களுக்கிடையே ஜே கிருஷ்ணமூர்த்தி அடையாளத்திற்காக சற்று முகத்தை சுளித்து அமர்ந்திருந்தார்.

“ ஹேகல் படிச்சதுண்டா தம்பி? கண்டிப்பா படிக்கணும். ”

அவரது ஒரு நாள் என்பது குறைந்தது மூன்று வெவ்வேறு தத்துவப் பள்ளியின் கூடுகை. சாக்தம் பேசியவுடனே சார்வாகம் பேசுவார்.

“ ஸோபென்ஹவர் இருக்கானே தம்பி இங்க உள்ளத அப்படியே அங்க எடுத்துட்டு போய்ட்டான்ங்குறேன். ”

இம்முறை குறள் ஸ்வாத்யாயத்திற்கு வந்தபொழுது பட்டாளத்துச் சாமி எதையோ வாய்க்குள் ஜெபித்துக்கொண்டிருந்தார். மந்திரத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் முப்பொழுதும் வாய் மட்டும் உச்சாடனத்தின் இலயத்தில். கண்மணிகள் இரண்டும், வெளிவரும் சொற்கள் விழித்திரையில் பதிவதுபோன்றதொரு குவிப்பில். அவர் அறையை கடக்கையில் கதவிடுக்கில் சிக்கி, ‘ கல்நின்று முன்நின் றவர் ’ என்று எழுதிய தாழ் காற்றுக்கசைந்தது. அறை முழுக்க ‘ கல்நின்று முன்நின்றவர் ’ இரைந்து கிடந்தது. உற்று பார்க்கையில் பட்டாளத்துச் சாமியின் உதடும் ‘ கல்நின்று முன்நின் றவர் ’ என்ற ஸ்வரத்திலேயே அசைந்தது. அறைக்கு வந்து புஸ்தகத்தை பார்க்கையில் நினைத்தது சரிதான், அது

‘ கல்நின்று முன்நின் றவர் ’ அல்ல ‘ முன்நின்று கல்நின் றவர் ’.
“ என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர் ”

பட்டாளத்துச் சாமி ஒரு ஜூர வேகத்தில் இருந்தார், எவர் சொல்லும் காதுகளில் விழவில்லை. என் காதுகளிலிருந்து ‘ கல்நின்று முன்நின் றவர் ’ என்னுள் சொட்டிக்கொண்டிருந்தது. அதன் ஒரு அலை அடங்கிய மறு நொடி அடுத்த துளி வந்து விழும். அலைகள் ஒன்றை ஒன்று மோதி மேலெழுந்து துளியாகி காதுகள் வழி ஒழுகும். வானுக்கும் கடலுக்குமாய் ஆன உரையாடலெனவே தொடர்ந்து நிகழும். பட்டாளத்துச் சாமி கடைசி இரண்டு நாட்களாக இப்பொழுது சுவரைப் பார்த்து படுத்திருப்பதுபோல் படுத்திருந்தார், ‘ கல்நின்று முன்நின் றவர் ’ என்ற முனகல் உட்புறம் திரும்பி வெளியில் கேட்காமலானது, அதனாலேயே வல்லமை பெற்றது.

“ குரு வராங்க ” என்று ஆவுடையாப்பிள்ளை சொன்னதும், ஒரு மிருகத்தின் பிடியிலிருந்து மீண்டது போன்றொரு ஆசுவாசமே அவ்வறை முழுக்க சூழ்ந்தது.

“ கீர்த்தனை வேண்டாம் ஆலாபனம் மட்டும் பாடு. ” என்றார்.

குழியில் முதல் பிடி மண்ணை குரு போட்டபிறகு ஒவ்வொருவரும் கைப்பிடி மண் போட பின்பு நிலம் தன்னை மீண்டும் இழுத்துக்கொண்டது. இது எல்லாவற்றுக்குமிடையே தோடி சதைப்பிண்டங்களுக்கிடையே வழிந்து ஓடியது. மண்ணை அறைந்து திறக்க முயன்று, வான் நோக்கி நெடுமூச்செறிந்து நின்றது. ஆவுடையாப்பிள்ளை குருவை அணுகி,

“ குருவே கல்லுல என்ன பொறிக்குறது. ”

“ கல்நின்று முன்நின் றவர். ”

அறைக்கு வந்து அகராதியைத் திறந்து கல் என்பதற்கு பொருள்தேடி கண்டபின்பு என்னுள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. குருவிடம் விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினேன். இசை என்னுள் கனத்துக்கொண்டிருந்தது, கூடவே அந்த தூங்குவாகையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.