ஓரிரவில் அமெரிக்க நிலப்பரப்பு இருமடங்கான அதிசயம்

முன்னுரை

சமீப காலமாக, கச்சத் தீவு தமிழகத்தில் ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. இத்தீவு வெகு காலமாக எங்குள்ளது என்பது தமிழர்களுக்கு தெரியவும் தெரியாது. அதில் அக்கறையும் இருந்ததில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன், இலங்கையின் சீனத் தூதர் கச்சத் தீவை நேரிடையாக பார்வையிட வந்தார் என்ற செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி மறைந்தது. பிறகு, இலங்கையின் பொருளாதாரம் சரிய ஆரம்பித்ததும், இந்திய அரசாங்கம் கைகொடுத்ததும் அனைவரும் அறிந்ததே. இச்சமயம், கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழகத்தில் குரல்கள் எழுந்தன. போன மாதம், பிரதம மந்திரி வருகையின் போது, தமிழக முதன் மந்திரி, அதே மேடையில், 70களில், தனது தந்தை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த கச்சத் தீவை மீட்க இதுதான் சரியான தருணம் என பிரதம மந்திரிக்கு ஒரு அறிவுரையை விண்ணப்பமாக வைத்தார். அமைதியாக இவ்வுரையை கேட்ட பின் எழுந்து நின்று அவரது கையை குலுக்கினார் பிரதம மந்திரி மோடி. ஒரு சிறந்த ராஜதந்திரி என உலகளாவிய புகழ் பெற்றுள்ள பிரதம மந்திரி மீண்டும் தனது பேச்சின் மூலம் அதை நிரூபித்தார். இலங்கைக்கு சென்ற முதல் இந்திய பிரதம மந்திரி என்ற குறிப்பிற்கு பின் கச்சத்தீவின் இழப்பைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்திய இலங்கை மக்களுக்கு பண உதவியையும் அத்தியாவசிய பொருட்களையும் இயன்ற அளவிற்கு உதவி செய்து வருகின்றது எனக் கூறி கச்சத்தீவு என்ற பெயரையே எடுக்காமல் அவ்விவரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஒருவர் அடிபட்டு கீழே கிடக்கும் தருணத்தில் அவருக்கு உதவி செய்யப் போனவர் அவரது உடைமைகளை எவ்வாறு பறிக்கலாம் என நினைப்பது கூட தவறு என்பதை நமது முதலமைச்சருக்கு சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்தார். இதற்கும் அமெரிக்காவிற்கும் என்ன சம்பந்தம் என வாசகர்கள் நினைக்கலாம். மேலே செல்வோம்.

தேர்ந்த அரசியலறிஞரும் மூத்த அமெரிக்க தலைவருமாகிய இவர், ஒரு பெரிய மாகாணத்தையே எவ்வித சண்டை சச்சரவும் செய்யாமல் மற்றொரு நாட்டிடமிருந்து சரியான தருணத்தில் அவர்கள் கேட்ட விலையை கொடுத்து தன்னாட்டுடன் இணைத்துக் கொண்டார். அதன் நிலப்பரப்பு 828800 சதுர மைல். தற்போது,

 1. ஆர்கன்ஸா,
 2. மிசோரி,
 3. அயோவா,
 4. ஒக்லஹாமா,
 5. கான்சாஸ்,
 6. நெப்ராஸ்கா,
 7. மின்னசோட்டா,
 8. வடக்கு டகோடா,
 9. தெற்கு டகோடா,
 10. வடகிழக்கு நியூ மெக்ஸிகோ,
 11. மோண்டானா,
 12. வயோமிங்,
 13. கொலராடோ,
 14. கடைசியாக லூயிசியானா

ஆகிய பதினான்கு மாகாணங்களை முழுவதுமாகவோ ஒரு பகுதியையோ உள்ளடக்கியது. இது இன்றைய அமெரிக்க பிரதேசத்தின் இருபத்துமூன்று விழுக்காடு ஆகும். இதற்கு அமெரிக்க கஜானாவிலிருந்து கைமாறிய தொகை ஒரு ஏக்கருக்கு ஐந்து சென்ட்டிற்கும் குறைவே.. இனி, இதன் வரலாற்றிற்கு வருவோம்.

North America after 1763 America in 1750 America in 1763

ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளின் உரிமைகள்

1763 பிரென்ச்-இந்திய போருக்கு பின், பிரென்ச் அரசாங்கம் தன் கைவசமிருந்த அனைத்து அமெரிக்க பகுதிகளையும் இழந்தது. காலனீய பேரரசாக உருவாக வேண்டும் என்ற நம்பிக்கை கனவாகியது . இப்பேரரசின் மையம், கரீபியத் தீவாகிய சாண்டா டொமிங்கோ (இன்றைய ஹிஸ்பானியோலா தீவு; டொமினிக்கன் குடியரசு, ஹெய்டி நாடுகளை உள்ளடக்கியது)வும் அதன் லாபகரமான கரும்புத் தோட்டங்களுமாகும். அமெரிக்காவின் . பிரென்ச் பகுதி ‘லா லூயிசியான்’ என்றழைக்கப்பட்டது. இது, மிசௌரி நதிக்கு மேற்பக்கமுள்ள நியூ ஆர்லியன்ஸிலிருந்து இன்றைய மோண்டானா வரை நீண்ட பிரதேசம். இப்பகுதி, பேராசினுடைய, மாவு, உப்பு, மரக்கட்டை, சாண்டா டொமிங்கோவிற்குத் தேவையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் களஞ்சியமாக விளங்கியது. 1763ல் செய்யப்பட்ட ஃபவுண்டன் புளு (Fountainbleu) ஒப்பந்தத்தின் பிரகாரம், மிசௌரி நதியின் மேற்குப் பக்கத்திய லூயிசியானா ஸ்பெயினிற்கும் கிழக்கு பகுதியை வெற்றி கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் கைமாறியது. பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்த பின், 1783ல் அமெரிக்காவிற்கு இருந்த இரண்டு தீராத பிரச்சினைகள், மேற்கு எல்லை பகுதியில் பிரிட்டிஷாரின் தொந்தரவும், மிஸிஸிப்பி நதிக்குள் நுழைவதிலுள்ள தடைகளுமாகும். மேற்குப்பதியில் குடியேறிய அமெரிக்கர்களுக்கு கிழக்குப்பகுதிகளுக்கு பண்டங்களை அனுப்புவதற்கு பேரிடராக இருந்தது அப்பலாச்சிய மலைத்தொடர். அவர்களது உற்பத்தியை கிழக்கு முகமாக அனுப்புவதற்கு சுலபமான வழி, தட்டைப் படகுகளில் ஓஹியோ மிஸ்ஸிஸிப்பி நதிகள் மூலமாக நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கடலை நோக்கிச் செல்லும் பெரிய படகுகளிலும் கப்பல்களிலும் ஏற்றி விட முடியும். இதிலிருந்த சங்கடம், மிஸ்ஸிஸிப்பி நதியின் இரண்டு பக்கங்களும் நாட்ச்செஸ் என்ற பகுதிக்குக் கீழ் ஸ்பெயினுக்கு சொந்தமாக இருந்தது.

1795ல், அமேரிக்கா ஸ்பெயினுடன் பிங்க்னி ஒப்பந்தத்தை கலந்து பேசி முடிவு செய்தது. இதன் பிரகாரம், நதியில் அமெரிக்க படகுகள் செல்வதற்கும், நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் சரக்குகளை இறக்குவதற்கும் உரிமை கிடைத்தது. இந்த ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் புதுப்பிக்கபடலாம் என இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். 1802க்கு பிறகு அமெரிக்க விவசாயிகள், வணிகர்கள், மரத் தொழிலதிபர்கள் நியூஆர்லியன்ஸ் துறைமுகத்தில் இறக்கிய சரக்குகளின் மதிப்பு வருடத்திற்கு 1 மில்லியன் டாலருக்கும் மேலாகும். ஸ்பெயின் அதிகாரிகள் அமெரிக்க குடியேற்றம் தங்கள் எல்லையை நெருங்கி வருவதை கண்டு அஞ்சினர். லூயிசியானாவில் ஏற்படும் நிதி விரயத்தை குறைப்பதற்காக ஸ்பெயின் லூயிசியானாவை கைகழுவ நினைத்தது. 1800ஆம் வருடம் அக்டோபர் 1ம் தேதியன்று நெப்போலியன் போனபார்ட் சான் இல்டிபான்சோ என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இத்தாலியில் முடியரசை ஸ்பெயினுக்கு கொடுத்து பிரான்ஸிற்கு லூயிசியானாவை மீண்டும் சொந்தமாக்கினார். நெப்போலியன், லூயிசியானாவை சர்க்கரை தீவின் கிடங்காகவும் அமெரிக்க குடியேற்றத்தின் வேகமான முன்னேற்றத்தை குறைக்கவும் உபயோகிக்க எண்ணினார். 1801 அக்டோபர் மாதம், ஒரு பெரிய அளவு ராணுவப் படையை சாண்டா டொமிங்கோவிற்கு அனுப்பி, 1790களில் அடிமைகள் கலகத்தில் இழந்த இத்தீவை, மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அமெரிக்க தலைவரின் திட்டம்

பிரான்ஸ் அமெரிக்காவில் மீண்டும் கால் பதிப்பதை அமெரிக்க தலைவர் விரும்பவில்லை. மேலும், நியூ ஆர்லியன்ஸை தன்னுடைமையாக்கிக் கொண்ட பின் நெப்போலியன் எந்த சமயத்திலும் மிஸ்ஸிஸிப்பி நதியில் அமெரிக்க வணிகப் போக்குவரத்தை தடை செய்ய முடியும்.என்பதை தெரிந்து வைத்திருந்தார். எனவே, பிரான்சில் அமெரிக்க அமைச்சராக இருந்த ராபர்ட் லிவிங்ஸ்டனிடம், நியூ ஆர்லியன்ஸையும் மிஸ்ஸிஸிப்பி நதியின் கிழக்கு கரையையும் அந்நதியில் தடையற்ற போக்குவரத்திற்காகவும் பிரான்சிடம் இரண்டு மில்லியன் டாலருக்குள் பேசி முடிக்குமாறு உத்தரவிட்டார். அந்த சமயம், லூயிசியானா ஸ்பெயினிடமிருந்து பிரான்சிற்கு அதிகாரபூர்வமாக மாறவில்லை. ஆனால், நெப்போலியன் ஸ்பெயினுடன் செய்திருந்த பேரம் பலருமறிந்த ரகசியமாக இருந்தது. 1802 அக்டோபர்,18ந்தேதி எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. லூயிசியானாவின் இடைக் காரியதரிசி, ஹுவான் வென்ச்சுரா மொராலிஸ், அமெரிக்கா நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் சரக்குகள் இறக்குவதை உடனடியாக ஸ்பெயின் தடை செய்வதாக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அமெரிக்காவிற்கு மிக முக்கியமான துறைமுகத்தை மூடியது அமெரிக்கர்களிடையே கோபத்தையும் திகைப்பையும் கிளப்பியது. மேற்குப் பகுதியில் அமெரிக்க வணிகம் திடீரென நின்று போனது. வரலாற்று ஆசிரியர்கள் இத்தடைக்கு காரணம், கடத்தல் போன்ற அமெரிக்க முறைகேடுகளேயாகும்; அப்போதைய மக்கள் நினைத்தாற் போல் பிரான்சின் சூழ்ச்சிகள் காரணமல்ல என்கின்றனர்.

பிரான்சுடன் போருக்கு செல்ல வேண்டும் என மக்கள் கொடுத்த அழுத்தத்திற்கு அமெரிக்க தலைவர் செவி சாய்க்கவில்லை. மாறாக, ஜேம்ஸ் மன்ட்ரோவை நெப்போலியனிடம் நியூ ஆர்லியன்ஸை விலைக்கு வாங்க சிறப்பு தூதுவராக அனுப்பி வைத்தார். இதற்கான நிதியை பத்து மில்லியன் டாலர்களாகக் கூட்டினார்.

இதற்கிடையே, கரிபியத் தீவிற்கான நெப்போலியனின் திட்டம் , டுசெய்ன்ட் லோவேர்ச்சர் (Toussaint L’Ouverture), அவரது முன்னாள் அடிமைகளை கொண்ட படை, மஞ்சள் காய்ச்சல் ஆகியவற்றினால் அமலாக்க முடியாத அளவிற்கு பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துக் கொண்டிருந்தது. 10 மாதங்களாக சாண்டா டொமிங்கோவில் நடந்து கொண்டிருந்த சண்டையில் பிரான்ஸ் நாற்பதாயிரம் போர் வீரர்களை இழந்திருந்தது. சாண்டா டொமிங்கோ இல்லாமல் நெப்போலியனின் பிரான்ஸ் பேரரசு எனும் லட்சியம் அமெரிக்காவில் நடவாது சர்க்கரை தீவுகளின் சர்க்கரை இல்லாமல் லூயிசியானா உபயோகமற்ற வெற்றுக் களஞ்சியமாகத்தான் இருக்கும். நெப்போலியன், பிரான்சிடம் அமெரிக்கா கோபமுற்றுள்ளதையும்,பிரிட்டனுடன் உறவை வலுப்படுத்துவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்திருந்தார். ஸ்பெயின் பிரான்சிற்கு ஃப்ளோரிடாவை விற்க மறுத்தது நெப்போலியனுக்கு கடைசி வைக்கோல் துரும்பாக ஆகி விட்டது. எனவே, தனது கவனத்தை மீண்டும் ஐரோப்பியாவின் பக்கம் திருப்பினார். ஒன்றுக்கும் லாயக்கில்லாத லூயிசியானாவை விற்பதின் மூலம் கிடைக்கும் வருவாய் ஐரோப்பாவில் சண்டையிட உதவும் என முடிவு செய்தார். டாலிராண்ட், பார்-மார்போய் என்ற இரு அமைச்சர்களிடம் லூயிசியானா பிரதேசம் முழுவதையுமே விரைவாக அமெரிக்காவிற்கு விற்பனை செய்யச் சொல்லி பணித்தார்.

எதிர்பாராத வாய்ப்பு

1803 ஏப்ரல் 11ம் தேதி, டாலிராண்ட், ராபர்ட் லிவிங்ஸ்டனிடம் அமெரிக்கா லூயிசியானாவிற்காக எவ்வளவு பணம் தரத் தயாராக உள்ளது என வினவினார். லிவிங்ஸ்டனுக்கு இக்கேள்வி குழப்பத்தை உண்டாக்கியது. ஏனென்றால் அவருக்கு நியூஆர்லியன்ஸையும் அதை சுற்றியுள்ள நிலத்தை மட்டுமே வாங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரும் ஜேம்ஸ் மனட்ரொ இருவருமே நெப்போலியன் எந்த நேரத்திலும் மனதை மாற்றிக் கொள்ளக் கூடும் என்பதை அறிந்திருந்தனர். தலைவரின் அனுமதி வேண்டுமென்றால் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். எனவே, இருவரும் டால்லிராண்டிடம் பேரம் பேசத் துவங்கினர். ஏப்ரல் 30ம் தேதி லுயிசியானா பிரதேசம் முழுவதையுமே அறுபது மில்லியன் ஃப்ராங்க்குக்கு (சுமார் 15 மில்லியன் டாலர்) விலை பேசி முடித்தனர். இதில், பிரான்ஸ் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய கடனை கழித்தபின், மீதித் தொகையை அமெரிக்கப் பத்திரங்களாக அளித்தனர். நெப்போலியன் உடனே இப்பத்திரங்களை தள்ளுபடி செய்து விற்றதால் பிரான்சிற்கு லூயிசியானாவை விற்றதற்கு கையில் கிடைத்த தொகை எட்டு மில்லியனும் எண்ணூற்றி முப்பத்தியோராயிரத்தி இருநூற்றிஐம்பது (8,831,250) டாலர்கள் மட்டுமே.

லூயிசியானா கொள்முதலைக் கேள்விப்பட்ட தலைவர் மிகவும் ஆச்சரியமடைந்தார். அவர் அனுமதியளித்தது ஒரு துறைமுக நகரத்தை வாங்குவதற்காகான பத்து மில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆனால் அவரிடம் கொடுக்கப்பட்ட்டது, அமெரிக்க நிலப்பரப்பை இரு மடங்காக்கும் நிலத்திற்கான பதினைந்து மில்லியன் டாலருக்கான ஒப்பந்தங்கள். ஃபெடரலிஸ்ட் கட்சியை சேர்ந்த அரசியல் எதிரிகள் லூயிசியானா உபயோகமற்ற பாலைவனம்; மேலும் அரசியலமைப்பு சட்டம் மேற்சபையின் அனுமதி இல்லாமல் புதிய நிலத்தை வாங்குவதற்கோ ஒப்பந்தங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ தலைவருக்கு உரிமை இல்லை எனக் கூறினர். இவர்களது கவலை என்னவென்றால், இப்புதிய பிரதேசம் பல மாநிலங்களாக உருவெடுக்கும். அதனால், மேற்கிலும் தெற்கிலும் உள்ள இப்புதிய மாநிலங்களின் செல்வாக்கு காங்கிரசில் ஓங்கும். தேசிய விவகாரங்களில் இது புதிய இங்கிலாந்தை சேர்ந்த ஃபெடரலிஸ்ட் அங்கத்தினர்களின் செல்வாக்கு மேலும் குறையும் என்பதாகும். ஆனால் தலைவர் மேற்கில் அமெரிக்கா விரிவடைவதில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பதால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். ஃபெடரலிஸ்ட் ஆட்சேபணைகள் இருந்தபோதும் மேற்சபை லூயிசியானா ஒப்பந்தத்திற்கு 1803 அக்டோபர் 20ம் தேதி ஒப்புதல் அளித்தது.

பிரான்ஸ்,ஸ்பெயின் போ! போ! அமேரிக்கா வருக! வருக!

நியூ ஆர்லியன்ஸில் 1803 நவம்பர் 20ம் தேதி பரிமாற்ற விழா ஒன்று நடைபெற்றது. அன்று ஸ்பெயின் தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு பிரான்சின் தேசியக் கொடி மேலே ஏற்றப்பட்டது.அதற்கடுத்த நாள், ஜெனரல்.ஜேம்ஸ் வில்கின்சன் நியூ ஆர்லியன்ஸை அமெரிக்காவின் உடைமையாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டார். 1804 மார்ச் 9ம் தேதி இதைப் போன்ற விழா செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. ஸ்பெயின் நாட்டுக் கொடி இறக்கப்பட்டு ஃபிரான்சின் கொடி உயர்த்தப்பட்டது. அதற்கு மறு நாளே, அமெரிக்காவின் முதற் பீரங்கிப் படையின் கேப்டன்,. ஏமாஸ் ஸ்டோட்டார்ட் தனது படையுடன் நகருக்குள் நுழைந்து அமெரிக்கக் கொடியை கோட்டையின் கொடிக் கம்பத்தில் ஏற்றினார். லூயிசியானா பிரதேசம் முழுவதும் அதிகாரபூர்வமாக அமெரிக்க அரசாங்கத்தின் கைக்கு மாறியது. மெரிவெதர் லூயிஸ்அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதியாக பொறுப்பேற்றார்.

பின்னுரை

என்னால் இயன்றவரை அமெரிக்கத் தலைவரின் பெயரை மறைக்க முயன்றுள்ளேன். வாசகர்களின் வரலாற்றாறிவை நான் குறைவாக மதிப்பிட்டுள்ளேன் என எண்ண வேண்டாம். இக்கட்டுரையை சிறிதளவு விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவல்தான் காரணம். லூயிசியானா பெயரை பார்த்தவுடனேயே இத்தலைவர் வேறு யாருமில்லை. அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெஃபர்சன்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பை ஐந்து சென்டிற்கும் குறைவாகக் கொடுத்து வாங்கியது (1800ம் வருட ஒரு டாலரின் இன்றைய மதிப்பு 23 டாலர்) அமெரிக்காவிற்கு இவர் செய்த மிகச்ச்சிறந்த பங்களிப்பாகும். லூயிசியானா உண்மையாகவே ஓரிரவில் அமெரிக்காவின் நிலப்பரப்பை இரு மடங்காக்கியது. இதற்காக சண்டை சச்சரவு ஒன்றும் இல்லாமல், ஒரு உயிரைக் கூட இழக்காமல் ஒரு பிரதேசத்தையே வாங்கியதென்பது அதுவரை வரலாறு காணாத ஓர் அதிசயம். அமெரிக்கா மேலும் பசிஃபிக் பெருங்கடல் வரை விரிவடைவதற்கு வழிகோலியது மட்டுமல்லாமல் உலகிலேயே பெரும் சக்தி வாய்ந்த நாடாக மாறுவதற்கும் உதவியது. கரிபியத் தீவுகளின் சர்வதேச விவகாரங்களும், போரிடத் தேவைப்பட்ட நிதிக்கான நெப்போலியனின் தாகமும், ஜெஃபர்சனின் ஜனாதிபதி பதவிக்கு புகழ் மிக்க சாதனையை கொண்டு சேர்த்தது.

மீண்டும் கச்சத் தீவிற்கு வருவோம். அமெரிக்காவிற்கு எதிர்மாறாக, இந்தியாவின் எல்லைகள் பல நூற்றாண்டுகளாக சுருங்கிக் கொண்டே வந்துள்ளது. சுதந்திரம் அடைந்த பின்னும், அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர். போதாதற்கு, மத்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் இணைந்து இலங்கைக்கு கச்சத்தீவை 70களில் தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். அன்றைய பிரான்ஸைப் போலவே, இன்றைய இலங்கையும் நிதிப் பற்றாக்குறையினால் பெரிய சிக்கலில் உள்ளது. ஆனால், ஃபிரான்ஸைப் போல் இலங்கை கச்சத்தீவை திருப்பத் தயாராக இல்லை. இந்திய அரசாங்கமும் இது சரியான தருணமல்ல என்பதை உணர்ந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆதாரம்: முதற் வெளியீடு: LegendsOfAmerica.Com

இரண்டாம் வெளியீடு: American Essence; 4;April 2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.