ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 10 in the series ஏ பெண்ணே

அம்மா உங்கள் சிம்லா- கால்கா பயணத்தின்போது வேறு என்ன நடந்தது?

உன்னுடைய பாட்டி, வழியில் கொண்டு செல்வதற்காக ஒரு கூடையை தயார் செய்திருந்தார். எலுமிச்சை, ஆரஞ்சு, ஊறுகாய், சூரணம், மாங்கூழ் வடகம் போன்றவைகளை அக்கூடையில் நிரப்பியிருந்தார். வண்டி ஒவ்வொரு முறையும் சுரங்கப்பாதையி ருந்து வெளிவரும் போதெல்லாம், “மருமகளே! உனக்கு தலைசுற்றுகிறதா, பயமாக இருக்கிறதா’ என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். இல்லை என்று சொல்லிவிட்டு நான் மறுபடியும் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க தொடங்கி விடுவேன். உன் அப்பாவுக்கு என் “இல்லை” என்கிற பதில் பிடிக்கவில்லை. சரியாக பதில் சொல்லும்படிம்படி என்னை அதட்டினார். உனக்கு தலைசுற்றல் வராமல் இருக்கவே முடியாது என்றார்.

உன்னுடைய தாத்தாவும் கூடவே இருந்ததினால் எனக்கு பதில் சொல்ல கூச்சமாக இருந்தது. பிறகு, உண்மையைச் சொல்ல ஏன் பயப்பட வேண்டும் என்று நினைத்தேன். தலை சுற்றக் கூடாதென்பது என் முடிவாக இருக்கும் போது, எனக்கு எப்படி தலை சுற்ற முடியும் என்று சொல்லிவிட்டேன். உன் அப்பாவின் கோபம் அதிகரித்தது.

‘இவையெல்லாம் கூர்மையான மலைப்பாதை வளைவுகள். இங்கு உன் முடிவு எடுபடாது’ என்றார். உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார்.

உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது.

நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.

அம்மா, சற்றே கண்ணயர்ந்த பிறகு,

மறுபடியும் தேநீரா குடிக்கிறாய்? பால் குடிப்பதற்கெ ன்ன? களைப்பு நீங்கும் இல்லையா?

அம்மா இப்பொழுது நீங்கள் கொஞ்சம் உற்சாகமாக இருக்கிறீர்கள் இல்லையா?

ஆமாம். உன்னிடம் பேசிக் கொண்டே தூங்கிவிட்டேன். என் எண்ணங்கள் எங்கே சிக்கிக் கொண்டிருந்தன வோ! கனவில் நான் அடர்ந்த பனியில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு சமயம் ஜாக்கூ ரவுண்டானாவின் வளைவின் மீது ஏறிக் கொண்டிருக்கிறேன்.மறு சமயம் டூட்டி கண்டி இறக்கத்தில் இறங்கி கொண்டிருக்கிறேன். தனியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறேன். இருப்பினும், யாரோ என் பின்னால் ஓடி வருவது போல காலடி ஓசை கேட்கிறது. அடையாளம் காண முயற்சித்ததில், அது உயர குதிகால் வைத்த செருப்பின் சத்தம் என்று புலப்பட்டது. சம்மர் ஹில்ஸ் சுரங்கப்பாதைக்கருகே சென்றதும், திடீரென அது என் செருப்பின் ஓசை தான் என்று கனவிலேயே அறிந்து கொள்கிறேன். என்னுடைய மிகப் பழைய செருப்பு அது. திருமணத்திற்கு பிறகு, உன் அப்பா, எனக்காக சைனாக்கார செருப்பு தைப்பவனிடம் சொல்லித் தைத்தது.க்ரீம் நிறத்தில், பட்டுப்போன்ற மிருதுவான மெல்லிய தோலாலானது.குறைந்த உயரம் கொண்ட குதிகால் வைத்தது. நடக்கும் போது மிகவும் லேசாக இருக்கும். கண்மூடித் திறப்பதற்குள் மஷோபரா போய்ச் சேர்ந்து விடலாம். பெண்ணே, நான் மிக வேகமாக நடப்பேன். இப்போது இல்லை. நான் நடந்து கொண்டிருந்த காலத்தில். இப்போது எப்படி நடக்க முடியும்? என் வேகநடை குறித்து நான் கண்டிப்பாக கர்வப்பட்டிருக்கக்கூடும். அதுதான் இப்போது என் முன்னே வந்து நிற்கிறது!

நீண்ட மௌனத்திற்கு பிறகு, அம்மா கண்களைத் திறக்கிறார்.

பனி அதிகமாக பெய்திருக்கிறது. தேவாலயத்துக்க ருகே உள்ள மைதானம், பனியால் மூடப்பட்டிருக்கிறது. தேவாலயத்தின் மணிக்கூண்டு கடிகாரம் ஏன் நின்றுவிட்டதெ னத் தெரியவில்லை. வெகுநேரமாக மணியும் அடிக்க வில்லை. இப்போது மணி என்ன என்று கொஞ்சம் பார்.

மகள் கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறாள்.

மணி நான்கு.

அம்மா, தன் நினைவுகளின் தொடர்ச்சியில்..

கால்கா போய் சேரப் போகிறோம்.படோக் ஸ்டேஷன் எப்பொழுதோ தாண்டிவிட்டது. அங்கு கிடைக்கும் தேநீரைப் போல வேறு எங்கும் கிடைப்பதில்லை.

மகள் டேபிள் லாம்பை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா, கையால் படுக்கையை நீவியவாறு,

என்னுடைய கம்பளி கோட் எங்கே? அணிந்து கொண்டிருந்தேனே? மேலே இருக்கும் அலமாரியில் இருக்கிறதா? தேடு. அது எனக்கு மிகவும் பிடித்த கோட். அதற்கான கம்பளியை உன் அப்பா, ஒரு ஆட்டிடையனிடமிருந்து வாங்கி வந்தார். கிடைத்ததா?

உங்கள் அலமாரியில் தான் இருக்கிறது அம்மா.

அம்மா வெகு நேரம் மௌனமாக இருக்கிறார்.

பிறகு கோபமான குரலில்…

நீங்கள் என்னுடைய சாமான்களை இப்போதிலிருந்தே இங்குமங்கும் மாற்றி வைக்க ஆரம்பித்து விட்டீர்கள். இது நல்லதிற்கில்லை. சூசன், கேபினட்டிடிலிருந்து என்னுடைய கண்ணாடியை எடு. என் பற்களையும் பிரஷ்ஷால் சுத்தம் செய்து விடு. இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று உனக்கு தானாக ஏன் தோன்றவில்லை? நோயாளியை கவனித்துக் கொள்ளும் போது, இவையெல்லாம் உன் கடமை இல்லையா. பெண்ணே, பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய், இவளுடைய கவனக்குறைவை. என்னுடைய பர்ஸில் சாவிகளும் இருந்தன. இருக்கிறதா என என்னிடம் கொண்டு வந்து காட்டு.

மகள் அலமாரியிலிருந்து பர்சை கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கிறாள்.

அம்மா பர்சை திறந்து சாவிக்கொத்தை எடுத்துப் பார்க்கிறார். பிறகு ஏதோ ஞாபகம் வந்தது போல-

இதில் நான் சேகரித்து வைத்திருந்த நாணயங்களும் இருந்தன.

அம்மா, கவலைப்படாதீர்கள். அவை லாக்கரில் பத்திரமாக இருக்கின்றன.

அம்மா, ஆழ்ந்த யோசனையில் எதையோ தேடுவதைப்போல, கண்களால் அறையை சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

ஒரு விஷயம் சொல் பெண்ணே! நீண்ட நாட்களாக உன் அப்பாவை எங்கே காணவில்லை?

மகள் அம்மாவின் நெற்றியைத் தொட்டுப் பார்த்து….

அம்மா, கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள். பிறகு காலையில் தேநீர் குடிக்கலாம்.

அம்மா வழக்கம்போல கதவை நோக்கி பார்க்கிறார். பிறகு தளர்ந்த குரலில்,

எனக்கு ஏதேனும் சாப்பிடக் கொடு. என் தொண்டை வறண்டு கிடக்கிறது.

மகள், சூசனிடம் உலர் பழங்களும், பருப்புகளும் வைத்திருக்கும் பெட்டியை கொண்டு வரச் சொல்கிறாள்.

மகள் அம்மாவின் வாயில் விதை நீக்கப்பட்ட இரண்டு திராட்சைகளைப் இடுகிறாள்.

அம்மா வெகுநேரம் அவற்றை அசை போட்ட பிறகு-

வசந்தகாலத்தின் கடைசி பகுதியில் காய்த்த பழம் இது. இதை உண்பது எத்தனை இன்பமாக இருக்கிறது! நீ பாதாம் மரத்தை எப்போதேனும் பார்த்தி ருக்கிறாயா? பார்த்திருக்க மாட்டாய்! எப்படிப் பார்த்திருக்க முடியும்? பெண்ணே, அந்த ஒரு சுகத்திலிருந்து தான் பல சுகங்கள் ஆரம்பிக்கின்றன.உனக்குத்தான் எதுவும் கிடைக்கவில்லையே!

பொழுது புலர்கிறது.

மகள் ஜன்னல் மற்றும் வாயிற்கதவு திரைச்சீலைகளை அகற்றி, அறையை வெளிச்சமாக்குகிறாள்.

அம்மா வெகுநேரம்வரை எங்கோ வெறித்துக் கொண்டிருக்கிறார். பிறகு கோபமான குரலில்,

என்னுடைய வேலையை நீ எப்போதிலிருந்து தனதாக்கிகா கொண்டு விட்டாய்? ஒருவழியாக, என்னை நகர்த்தி விட்டு, நீ ‘நானாக’ மாறி விட்டாய் இல்லையா? இந்த வேலை, வாழ்நாள் முழுவதும் என் பொறுப்பில் இருந்தது. திரைச்சீலைகளை முதலில் விலக்குவதும் பின்னர் மூடுவதும்.

அம்மா கொஞ்சமேனும் தூங்கினீகளா?

ஆமாம். முதல் ஜாமத்தில் மட்டும் கொஞ்சம் தூங்கினேன்.

பெண்ணே, விடியல் என்பது பெரும் கொடை. தூங்கி யார் இதை கோட்டை விடுகிறார்களோ, அவர்கள் பெரு நஷ்டம் அடைகிறார்கள். இரவும் பகலும் இணைவதையும் விலகுவதையும் அவர்கள் காண்பதில்லை. அதிகாலையில், இளஞ்சூரியனின் வெளிர்செந்நிற ஒளியில், பறவைகள் குரலெழுப்பி கீச்சிடும்போது, இப்பிரம்மாண்டம் முழுவதிலும், அப்பறவை குதூகலம் எதிரொலிக்கிறது. அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் மங்களகரமானது. உன் குடும்பத்தாரிடம் இரவு குளிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் பெண்ணே, இவர்களைப் பார்த்து நான் என் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நான் எப்போதும் கை ரேகை சரியாகப் புலப்படாத அதிகாலை இருட்டில் தான் குளிப்பது வழக்கம். கொட்டும் பனியிலும், நான் விடியற்காலையில் தனியாகவே ஜாக்கூவை சுற்றிவிட்டு வருவேன். உன் அப்பா தாமதமாகத்தான் எழுந்திருப்பார். திரும்பி வந்து தான் நான் அவருக்கு தேநீர் தயாரித்து தருவேன்.

பெண்ணே, குளிர்காலங்களில் வானர சேனை, ஜாக்கூ விலிலிருந்து இறங்கி தெருக்களை ஆக்கிரமித்துக் கொள்ளும். இங்குமங்கும் குதித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் காலை, அவை என்னை சூழ்ந்து கொண்டன. கையில் தடி இருந்தபோதிலும், நான் மிகவும் அன்பாக, ‘என்னிடம் வம்பு செய்யாதீர்கள் குழந்தைகளே, அம்மாவை போக விடுங்கள். நாளை உங்களுக்காக கடலை கொண்டு வருவேன்’ என்று சொன்னேன். வானரங்களுக்கு நாம் சொல்வதெல்லாம் புரியும், தெரியுமா பெண்ணே? அவை சாலையின் ஓரமாக ஒதுங்கிக் கொண்டு எனக்கு வழி விட்டன.

கடலை?

அடுத்த நாள் கொண்டு போனேன்.

தேவாலயத்துக்குப் போகும் பாதையும், சிம்லா வீட்டு பெரிய அறையும், இதோ, கண் முன், இப்போதும் தெரிகின்றன. குளிர்காலத்தில், இரவும் பகலும் கணப்படுப்பு எரிந்து கொண்டே யிருக்கும். அந்நாட்கள் எல்லாம் எங்கே நழுவி மறைந்துவிட்டன?

சூசன், அம்மாவின் உடலைத் துடைத்து உலர வைத்தாயிற்றா?

என்ன பேசுகிறாய்? துவைத்து உலர்த்தி காய வைப்பதற்கு நான் என்ன துணியா? பல் தேய்த்து விட்டு கைகால்களை கழுவிக்கொண்டாயிற்று. படுக்கை விரிப்பையும் மாற்றியாயிற்று. இப்போது தே நீருக்காக காத்திருக்கிறேன்.

மகள் தேனீர் கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டை மேஜையின் மீது வைக்கிறாள்.

சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உலர்த்திய கேரட் துண்டங்களை சாப்பிடுங்கள் அம்மா.

அம்மா மகிழ்ச்சியுடன்,

கேரட் துண்டம் மட்டுமே போதுமே. அதற்கு மேல் பாலேட்டை ஏன் கவிழ்த்திருக்கிறாய்? நீ எதையும் ஒழுங்காகச் செய்ய கற்றுக் கொள்ளவே இல்லை. பெய்தால் கன மழை! இல்லையேல் கடும் வறட்சி!

சற்றே குரலை உயர்த்தி,

இந்தப் பிறவியிலேயே எல்லா கொடுக்கல்-வாங்கல்களையும், கணக்கு வழக்குகளை யும் நேர் செய்து முடித்து விடப் பார்க்கிறாயா? உனக்குத்தான் நன்றாக நடிக்க வருமே! கடைசிவரையிலும் உன் பாத்திரத்தை சிறப்பாகவே நடித்துவிடு வாய். உன் அம்மாவுக்கு சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர, இப்போது வேறு எந்த வேலையுமி ல்லை என்று உனக்குத்தான் தெரியுமே!

சூசன் தலையணையை அம்மாவின் முதுகுக்குப் பின்புறம் வைத்து, தேநீர் கோப்பையை தருகிறாள்.

அம்மா கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு, உற்சாகத்துடன்

“தேநீர் குடியுங்கள். நீண்ட நாள் வாழுங்கள்.” தேநீர் கம்பெனியின் இந்த விளம்பரம் எனக்கு நன்றாக பொருந்துகிறது. நான் இன்னும் உயிருடன் இருப்பதே இதன் மகிமையால் தான்.

ஒரு மிடறு தேநீரை விழுங்கிவிட்டு,

என் வயதிலிருந்து, முதல் பதினெட்டு வருடங்களை கழித்துவிடு. அதுவரை நான் பால் தான் குடித்துக் கொண்டிருந்தேன். மீதமிருக்கும் நாட்களை, தினமும் நான்கு கோப்பைகள் வீதம், நான்கால் பெருக்கிக் கொள். இந்த பெண்மணி எத்தனை கோப்பைகள் தேநீர் குடித்திருக்கிறாள் என்று தெரிந்துவிடும்.

அம்மா சிரிக்கிறார்.

இன்னும் எத்தனை கோப்பைகள் மீதமிருக்கின்றனவோ தெரியவில்லை.

மகள் தன் காலிக் கோப்பையை மேஜைமீது வைக்கிறாள்.

அம்மா உங்களுக்கு பிடித்தமான பாடல் எதையேனும் கேட்கிறீர்களா?

முதலில் இன்னொரு கோப்பை தேநீர் கொடு. காலை நேரத் தேநீர் எந்த சங்கீதத்துக்கும் குறைந்ததி ல்லை. நன்றாகக் கொதித்த தண்ணீரும், சூடாக்கப்பட்ட கோப்பையும், கெட்டிலில் தூவப்பட்ட சிறந்த தேநீர்த் தூளும் – இதைவிட இனிய லயமும் சுரமும் இருந்துவிட முடியுமா?

சூசன் சிரிக்கிறாள்.

அம்மா உங்களுக்கு தேநீர் கம்பெனிக்காரர்கள் கண்டிப்பாக ஏதேனும் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

கொடுத்திருக்கிறார்கள். பொருட்காட்சியில், நான் சேகரித்து வைத்திருந்த கூப்பன்களுக்கு பதிலாக, லிப்டன் கிரீன் டப்பாக்கள் கிடைத்தன. பெண்ணே, என் சமையலறையில் இத்தனை வருடங்களில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இருப்பினும், நான் எப்போதும் லிப்டன் கிரீன் தேநீர்த்தூளை மட்டுமே பயன்படுத்தினேன். உயிரோடு இருப்பவர்களுக்கு இது பெரிய கொடுப்பினை. இருக்கும் வரை குடித்துக்கொண்டே இருக்கலாம். பிறகு இந்தக் கோப்பை அனாதை போல எங்கோ விழுந்து கிடக்கும்.

கெட்டிலிலிருந்து தேநீரை ஊற்றிக் கொண்டிருக்கும் மகளின் கை ஒரு கணம் நின்றுவிடுகிறது.

வேண்டாம். நிறுத்தாதே. கோப்பையை பாதி நிரப்புவது சரியில்லை. அதற்கும் ஒரு மானம் மரியாதை எல்லாம் உண்டு. தன்னால் குடிக்க முடியாவிட்டாலும் பிறரைக் குடிக்க வைக்கும். கொஞ்சம் யோசித்துப் பார், இந்த கோப்பையை முதன்முதலாக வடித்தவனுக்கு, தான் எதை படைத்திருக்கிறோம் என்று தெரிந்திருக்குமா?
பெண்ணே, கோப்பையை படைத்ததே எடுத்து, உதட்டருகே கொண்டு சென்று, குடிக்க த்தான். முடியும் வரை குடித்துக்கொண்டிரு.

மகள் வாய்விட்டு சிரிக்கிறாள்.

அம்மா, இன்னொரு கோப்பைத் தேநீர் குடிக்கலாமா?

அம்மா, முதலில் ஆச்சரியமாகவும் பிறகு கோபத்துடனும்..

மறுபடியும் எதற்கு? கேலி செய்கிறாயா? என்னை நோயாளி தானே என நினைத்து, சீண்டிப் பார்க்கிறாயா? இது மிகவும் அற்பத்தனமான செயல்.

இல்லை அம்மா. அப்படி நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஹ்ம்ம். நான்தான் எதையெதையோ வீணாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். நான் சமுத்திரக் கரையில் உட்கார்ந்து அலைகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன் என எண்ணுகிறாய். என்னை வைத்து பகடி செய்து கொண்டிருக்கிறாய்.

அம்மா, நான் சாதாரணமாகத்தான் சொன்னேன். அது உங்களுக்கு தவறாக பட்டிருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நீ உன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே. நீ ஒன்றும் தொலைபேசியில் மிட்டாய்களை விநியோகித்துக் கொண்டிருக்க வில்லை. சிலரிடம் சிரித்தும், சிலரிடம் வேடிக்கையாகப் பேசியும், சிலரிடம் பாசாங்காக நடித்தும். நன்றாக யோசித்துப் பார். உன் வயதுக்காரர்கள் பாட்டிகளாகிவிட்டார்கள். நீ மனதளவில் தன்னை இன்னும் இளம் பெண்ணாகவே நினைத்துக்கொண்டு வளைய வருகிறாய்.

மகள் சுவற்றை வெறித்தபடி நிற்கிறாள்.

இந்நாட்களில் நீ எதற்காக காத்துக் கொண்டி ருக்கிறாய் என்பதை நான் நன்கு அறிவேன். அம்மா எப்போது போவாள், எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும் என்று தானே?
நான் போன பிறகு யார் மீது அதிகாரம் செலுத்துவாய்?
உனக்கு பின்னால் வரிசையில் யாரும் இல்லை. நீ எவருக்கும் தாயும் இல்லை, பாட்டியும் இல்லை. பெண்ணே, நீ வெறும் தாவரம்… காய்ந்த சருகு… துரும்பு…
நான் என்ன சொல்கிறேன் என்றாவது உனக்குப் புரிகிறதா?

மகள் உரத்த குரலில்,

அம்மா, போதும் நிறுத்துங்கள்.

நான் தகாததெ தையும் சொல்லவில்லை. சரியாகத்தானே சொல்கிறேன். இதை வேறெப்படி சொல்லிவிட முடியும்?

மகள் நாற்காலியிலிருந்து எழுந்து கொள்கிறாள்.

எங்கே போகிறாய்?

புதிதாக தேநீர் தயாரித்துக் கொண்டு வருகிறேன். ஏலக்காய் போடலாமா?

எனக்கு பாலில் ஏலக்காய் போடுவது தான் பிடிக்கும். நான் இதுவரைக்கும் தேநீரில் ஏலக்காய் போட்டுக் குடித்ததில்லை.

சூசன் தேநீர் தட்டை எடுத்துச் செல்கிறாள்.

வேண்டாம். அது இங்கேயே இருக்கட்டும்.

என் மகள் எனக்கு தேநீர் அல்ல, பால் கொண்டு வருவாள். நன்றாக காய வைத்த நுரை ததும்பும் பால். அதில் அரைத்த பாதாம் பொடியையும், அதன் மணமே மறைந்து விடுகிற அளவுக்கு அள்ளிப் போடுவாள். சூசன், கேட்டுக் கொண்டி ருக்கிறாயா? இவளுக்கு கண்மதிப்பாக எதையும் அளவாகப் போடவே தெரியாது. குடும்பம் என்ற ஒன்று இருந்திருந்தால், கைகள் தாமாகவே பழகிக்கொண்டிருக்கும். இவளோ வருவதையெல்லாம் செலவு செய்பவள். அளவு என்பதன் அழகே வேறு. அளவுக்கதிகமாகவும் வேண்டாம். மிகக் குறைவாகவும் வேண்டாம். குடும்ப வாழ்க்கை, அளக்கவும் மதிப்பிடவும் கற்றுக்கொடுக்கிறது. கைப்பிடி போட வேண்டுமென்றால் கைப்பிடி தான். சிட்டிகை என்றால் சிட்டிகை தான். ஆனால் இவளுக்கு குத்து மதிப்பென்பதே தெரியாது. எப்போதும் குழப்பத்திலேயே இருக்கிறாள். ஏனோ தெரியவில்லை.
இரண்டு மூன்று வேலையாட்கள் இருந்தபோதிலும், எப்போதும் நான் களைத்துப் போய்விட்டேன் என்றே கூறுகிறாள். என்னுடைய நோயைக் கூட ஒரு வேலையாகவே கருதுகிறாள். இவள் இரவில் தூங்கி நான் ஒருபோதும் பார்த்ததில்லை. நண்பர்களோ தோழியர்களே யாருமில்லை. புத்தகங்களோடேயே இவளுடைய நேரம் கழிந்து விடுகிறது. போதாததற்கு திமிர். யாரையும் அண்டாமல் தன் காலில் சுயமாக நிற்கிறோம் என்கிற அகம்பாவம்.

சூசன் புன்முறுவலிப்பதைப் பார்த்து..

நீ ஏன் என் பேச்சை ஒட்டுகேட்டுக் கொண்டிருக்கிறாய்? அடுத்தவர் பேசுவதை கேட்க கூடாது. நான் ஏதோ தனக்குத்தானே தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

மகள் பால் கொண்டு வருகிறாள்.

அம்மா, யாரோடேனும் தொலைபேசியில் பேச விரும்புகிறீர்கள்?

நீ எதற்கு என்னை பேச வைக்கப் பார்க்கிறாய்? ஏழு திரைகளுக்குப் பின்னால் மறைத்து வைத்திருக்கும் என் மனதை புரிந்து கொள்ள முடியுமா உன்னால்? பெண்ணே, நீ என்னை வேவு பார்க்கிறாயா? இது சரியில்லை.

அம்மா, பாலை ஒரு மிடறு குடித்துப்பார்த்துஎப்படி இருக்கிறதென்று சொல்லுங்கள். சர்க்கரை சரியாக இருக்கிறதா?

ஆம். நீ தான் சுவைத்துப் பார்த்திருப்பாயே. திராட்சை, ஏலக்காய், பட்டை. பாதாம் பருப்பு எண்ணி ஐந்து.

அம்மா, உங்களுக்கு எப்படித் தெரியும்?

நீ பாதாம் பருப்பை இடித்துக் கொண்டிருக்கும் போது, என் காதுகள் பார்த்துக் கொண்டிருந்தன. வானப்பிரஸ்தம் ஆரம்பித்துவிட்டது. காது பார்க்கிறது. கண்கள் கேட்கின்றன. முதுமை வெறும் காலடி ஓசைகளை கேட்டுக் கொண்டிருக்கிறது.

பெண்ணே, ஒரு விஷயம் சொல். ஒரு இழையை பிடித்தால் இன்னொன்று நழுவி விடுகிறது. இடுப்பெலும்பு முறிவதற்கும் ஞாபக சக்திக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீங்கள் என்னைவிட புத்திசாலி. என்னைவிட சுறுசுறுப்பு. டாக்டரிடம் கேளுங்களேன் – தன்னுடைய நோயாளியை பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.

என் டாக்டரை நான் நன்கு அறிவேன். அவரிடம் பேசும்போது, தயவுசெய்து என்னைப்பற்றி எதுவும் கேட்டு விடாதே. உடனடியாக சொல்லிவிடுவார் – உன் அம்மாவின் மூளை வேலை செய்வதை நிறுத்தி விட்டதெனச் சொல்லி, உடனே அதற்காக இன்னொரு மருந்தை ஆரம்பித்துவிடுவார்.

இருவரும் சிரிக்கின்றனர்.

(தொடரும்)

Series Navigation<< ஏ பெண்ணேஏ பெண்ணே – அத்தியாயம் 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.