உணவு, உடை, உறையுள், … – 2

This entry is part 2 of 3 in the series உணவு, உடை, உறையுள்

ஞாயிற்றுக்கிழமை. காலை ஏழு மணி.

நீமா அறையில் இருந்த காஃபி-மேகரில் காப்பி தயாரித்து, அனுபவித்து அருந்தினாள். வானூர்தி நிலையம் போக பதினோரு மணிக்குக் கிளம்பினால் போதும். வேலை சம்பந்தப்பட்ட பயணங்கள் அவளுக்குப் பிடித்தமானவை. அவளுடைய வடிவான உருவத்துக்கேற்ற விதவிதமான வணிக மற்றும் அலங்கார ஆடைகள் அணிய வாய்ப்புகள். நேரக்கணக்குப்படி வர்த்தகக் கூட்டங்கள். பதில் நன்றாகத் தெரிந்த தேர்வுக்கேள்வி போல அங்கே யார் என்ன கேட்டாலும் அவள் தயாராக வைத்திருக்கும் விளக்கமான பதில்கள். பலவித உணவு வகைகள். விடுதியில் இருந்து எங்கே போவதாக இருந்தாலும் சொகுசான ஊர்தி. அவள் நேரத்திற்கும் காரியங்களுக்கும் இவ்வுலகில் எவ்வளவு மதிப்பு என்ற பெருமிதம்.

எல்லாவற்றையும் விட, பயணம் முடிந்து வீடு திரும்பும் மகிழ்ச்சி. அவள் வருகையை எதிர்பார்த்திருக்கும் ராகுலின் ஆவல் நிரம்பிய முகம். அவன் புது வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பான். எந்த சாமான் எங்கே என்று தேட வேண்டி இராது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வீடு மாற்றம். புது வீடு என்பதால் அதில் புதிதாக ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்தோ வந்தது. அப்படி எதைச் செய்ய அவளுக்கு ஆசை?

குளித்து ஒப்பனை இல்லாமல் சாதாரண ஆடையில் கீழ்த்தளம் சென்றாள். ஓட் சீரியல், பழத்துண்டுகள், பான்கேக், தயிர். மதிய உணவு தள்ளிப்போகும் என்பதால் நிதானமாக நிறையத் தின்றாள். கோவிட் குறுக்கீட்டுக்குப் பிறகு நடந்த அந்தப் பயணம் வெற்றிகரமாக முடியப்போகிறது. முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். ஸ்பெல்டா தலைமை நிர்வாகக்குழுவுக்கு அவள் திட்டத்தில் முழுத்திருப்தி. முந்தைய தினத்தின் இறுதிக்கூட்டத்தில்..

அனைவருக்கும் பிரமிட் ஆலோசனைக் குழுவில் இருந்து அன்பு கலந்த வணக்கங்கள்!

தற்போது வழக்கில் உள்ள மருந்துகளின் விற்பனையில் ஒரு தேக்கம். நோய்களைக் குணப்படுத்த அதிகம் பயணிக்காத பாதையில் கால்வைப்பது அவசியம் ஆகிறது. அப்படி ஒரு பாதையை மைடோகான்ட்ரியா தருகிறது. அது செல்லின் சக்தி நிலையம். மைடோகான்ட்ரியா பற்றிய ஆராய்ச்சி உலகெங்கும் நடக்கிறது. புதிய ஆய்வகம் தொடங்குவதற்கு பதில் மருந்துகளை உருவாக்கும் பாதையில் ஏற்கனவே வெகுதூரம் பயணித்த நிறுவனங்களை ஸ்பெல்டாவின் குடைக்குக் கீழே கொண்டுவருவது சிறந்த வழி என்பது எங்கள் எண்ணம்.

பாஸ்டனில் அமைந்திருக்கும் ‘டைன-மைடோ’ பயோடெக் நிறுவனம். பெயரில் மட்டுமல்ல உருவத்திலும் அது வேகமாக வளர்வதைக் கவனித்த நான் அதை முழு ஆளுகைக்குள் கொண்டுவர ஆலோசனை தெரிவித்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் அதற்கு ஸ்பெல்டா கொடுத்த விலை 225 மில்லியன் டாலர். இப்போது ‘டைன-மைடோ’வின் சதைச்சிதைவைத் தடுக்கும் மருந்து இரண்டாம் கட்டத்தைத் தாண்டிவிட்டது.

சென்ற ஆண்டு இஸ்ரேலிய ஆராய்ச்சி நிறுவனம் ‘மினோவா’வுடன் ஒரு புதிய ஒப்பந்தம். அதன்படி ‘மினோவா’வுக்கு முன் பணம் இருபது மில்லியன் டாலர். விற்பனைக்குத் தயாராகும் மருந்து ஒவ்வொன்றுக்கும் 550 மில்லியன்.

மூன்றாவதாக, சான்ஃப்ரான்சிஸ்கோவில்…

இந்த வணிக முயற்சிகளால் மைடோகான்ட்ரியாவைச் சார்ந்த மருந்துகளின் தயாரிப்பில் போட்டி இல்லாமல் ஸ்பெல்டாவுக்கு உலகில் முதலிடம் .

திரும்பிவந்து கதவைத் திறந்ததும்,

அலைபேசியில் டிங்ங்.

– தொலைவழி அறிவியல் உரை. வான்டர்பில்ட் பல்கலையின்… –

அவளுக்கு எது பிடிக்கும் என்று ‘பிரமிட் ஸ்காலர்’ அவ்வப்போது அனுப்பும் தொடர்புகள், கட்டுரைகள். ‘மைடோகான்ட்ரியா ஆஃப் மாரத்தான் ரன்னர்ஸ்’ ‘அலாஸ்கா மக்களின் மைடோகான்ட்ரியாவில் மாறுபாடுகள்’ போன்ற சம்பந்தம் இல்லாத விஷயங்களை செயற்கை மூளை தெரிவு செய்வதால் அவற்றை அவள் அலட்சியம் செய்வது வழக்கம்.

விடுதியின் அறையில் இன்னும் இரண்டு மணி. பொழுது போக ஏதோவொன்று.

ஸ்காலர் கொடுத்த எண்களை மடிக்கணினியில் புகுத்தித் தொடர்பு கொண்டபோது, அறிமுகம் மற்றும் முகவுரை முடிந்துவிட்டன.

– மைடோகான்ட்ரியாவின் ஆரோக்கியத்திற்கு எளிய மருந்துகள் –

உரையாளருக்குக் கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்பு. ‘நான் சொல்ல வந்தது என்னவென்றால்’, ‘ஏன் என்ற கேள்வி எழுவது இயற்கை’ – இப்படி சில அதிகப்படி சொற்றொடர்கள் திரும்பத்திரும்ப வந்தன. கேட்டுக்கொண்டே அலங்கார ஒப்பனை செய்து, பெட்டி பைகளை நிரப்பி, பயண ஆடைகளை அணிந்தாள். ஆரம்பத்தில் அவளுக்குத் தெரிந்த விவரங்கள்தான்.

மைடோகான்ட்ரியாவில் ஏற்படும் குறைபாடுகள் அழற்சி, மிகையான இரத்த அழுத்தம், இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டலக் கோளாறுகள் எனப் பலவிதங்களில் உடல்நலத்தைப் பாதிக்கின்றன.

உரையின் பின் பாதியில்

தீவிர வினை புரியும் ‘ஐஸோலெவுக்ளான்டின்’ என்ற வேதிப்பொருள் தவறான பாதையில் உருவாகி அவசியமான ப்ரோடீன்களைச் செயலிழக்க வைப்பதால் மைடோகான்ட்ரியாவின் திறன் குறைகிறது என்பது எங்கள் ஆராய்ச்சியில் வெளிப்படுகிறது.

அதனால், மைடோகான்ட்ரியாவின் குறைபாடுகளை நிவர்த்திக்க அவற்றினுள் சாமர்த்தியமாகப் புகுந்து ‘ஐஸோலெவுக்ளான்டினை’ மட்டுமே அழிக்கும் சின்னஞ்சிறு மருந்துகளில் கவனம் செலுத்தினோம். அம்முயற்சியில் எங்களுக்கு ஓரளவு வெற்றி என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன்.

இவை அவள் கவனத்துக்கு வராத விவரங்கள்.

ஆராய்ச்சியில் உதவியவர்கள்.

என் உரையைக் கேட்க நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி!

கேள்விகள், கருத்துகள்?

“நான் மருத்துவம் சம்பந்தப்பட்ட வணிக முயற்சிகளில் முதலீடு செய்பவன்” என்று நடு வகிடு எடுத்த ஒரு நடுவயதினரின் அறிமுகம். “வெறும் ஆராய்ச்சியுடன் நின்றுவிடாமல் இந்த மருந்துகளை விற்பனைக்குக் கொண்டுவரும் திட்டம்?”

“இருக்கிறது. அது என் பொறுப்பில் இல்லாததால் நான் குறிப்பிடவில்லை.”

“எந்த கட்டத்தில்?”

“அவற்றால் உடல்நலத்துக்கு பாதிப்பு இல்லை என்கிற அளவில்.” அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், “ஒரு நாள் தேவைக்கான விலை பத்து ஆஸ்பிரினுக்குள் அடங்கும் என்பதால் அவை மக்களிடையே பரவலாகப் பயன்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று பெருமை அடித்துக்கொண்டார்.

“அத்தனை மலிவாகவா?” என்றார் பணக்கணக்கு பார்ப்பவர்.

“இப்படி ஒரு கேள்வி எழுவது இயற்கை. காரணம் சொல்கிறேன். இந்த மருந்துகளை எளிய வழிகளில் தயாரிக்க முடியும் என்று என் குழுவின் வேதியிலாளர் காட்டியிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் ஆராய்ச்சியின் செலவு ஆறு மில்லியன் டாலர். மீதி சோதனைகள் நாற்பது மில்லியன் டாலருக்குள் முடிந்துவிடும்.”

மற்றவருக்கு நம்பிக்கை வரவில்லை.

“ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து விற்பனைக்குக் கொண்டுவர சராசரியாக ஒரு பில்லியன்” என்று அழுத்திச் சொன்னார் .

“எனக்கும் தெரியும். காரணம்? பெரிய ஃபார்மாக்களில் உயரப்போகும் அதிகாரப்படிகள். சிஈஓ, சிபிஓ, சிஎஃப்ஓ என்று பெருந்தலைகள். ஒவ்வொருவருக்கும் மில்லியன் கணக்கில் சன்மானம். எண்ணற்ற உதவித் தலைவர்கள். அவர்களின் சம்பளம். இத்தனை பேர் இருக்க, பிரமிட் கன்சல்டிங் போன்ற ஆலோசக நிறுவனங்களுடன் ஒப்பந்தம். அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் அளவு சம்பளம். அதே என் குழுவில் இருக்கும் எல்லாரும் ஆராய்ச்சியை அனுபவித்துச் செய்கிறார்கள். இந்த ஆண்டு இவ்வளவு வருமானம், அடுத்த ஆண்டு அதைவிட மிக அதிகமாக இருக்கும் என்று கணக்குப் போடாதவர்கள். அரசாங்கம் மான்யத்தை வெட்டினால் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள அவர்கள் தயங்குவது இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்டை சாக்குப் போட்டு வீட்டில் தங்கவும் இல்லை.”

“சரி, இம்முயற்சியில் பங்குபெறும் நிறுவனங்கள்..”

“மருந்து விற்பனைக்கு வந்தபிறகு உங்களுக்குத் தெரியவரும்.”

அடுத்த இரண்டு மணி நேரம் நீமாவின் கவனம் அவள் செய்கைகளில் இல்லை. யாரோ பெட்டிகளை எடுத்துவைக்க, இளமங்கை, “உங்கள் ஜப்பான் பயணம் எப்படி?” என்று கேட்க, “இனிய அனுபவம்” என்ற பதில் தானாக வர…

அவள் மனதைத் தாக்கிய கிழக்கு ஐரோப்பிய உச்சரிப்பு உரை.

நான்கு ஆண்டுகளாக அவளுக்குக் கிடைத்த வணிக விவரங்களை வைத்து அவள் போட்ட திட்டத்திற்கு இப்போது ஒரு புதிய போட்டி. வர்த்தக உலகில் போட்டி சகஜம் என்றாலும் அதைக் கட்டுப்படுத்துவது ஆலோசகரான அவள் கடமை. ஸ்பெல்டாவின் வளரும் கட்டங்களில் இருக்கும் மருந்துகளில் எதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தாலும் ஓர் ஆண்டுக்கு 5,000 டாலர்; 50,000 பேர் பயன்படுத்துவார்கள். 5 ஆண்டுகளில் முதலீட்டுத்தொகையை ஈட்டலாம் என்று போட்ட கணக்கு நடைமுறைக்கு வராது போல் இருக்கிறது. எளிதாக, மலிவாக, பல விதங்களில் மைடோகான்ட்ரியாவின் நலனைப் பாதுகாக்கும் மருந்துகள் தொடுவானத்தில்.

அது கூட போகட்டும், அவள் தொழில் வாழ்க்கையை ஒருவன் அநாவசியம் என்று குறை சொல்கிறான். கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே போகாத அவனுக்கு அவள் வேலையின் முக்கியத்துவம் எங்கே தெரியப் போகிறது? பல சமயங்களில் ஒரு நிறுவனத்தின் குறைகள் அதனுடன் சம்பந்தப்படாத புற-நிபுணர்களின் கண்ணில் உடனே படும். அவற்றை நிவர்த்திக்கும் வழிகளும் அவர்களுக்குத்தான் புலப்படும். மும்பை நூற்பு ஆலையின் தயாரிப்பை பத்து சதம் உயர்த்தி இருக்கிறாள். சில வாரங்களுக்கு முன்னால் ஐந்து நட்சத்திர விடுதி, ‘வெல்கம் கான்டினென்டலி’ன் செலவைக் குறைத்திருக்கிறாள். உடல்வலியை மந்திக்க வைக்கும்…

” ஹாய் நீமா! என்ன ஆச்சரியம்!” என்ற பரிச்சயமான வார்த்தைகளால் அவள் எண்ணம் தரையைத் தொட்டது.

உயர் வகுப்புப் பயணிகளுக்கான முதல் மரியாதை வரிசையில் நின்றிருந்த அவள் திரும்பிப் பார்த்தாள்.

“வால்டர்! நீ இங்கே எப்படி?”

அடுத்த தினம் முடிவுக்கு வர அரைமணி.

நீமா இந்நேரம் சாக்ரமென்ட்டோ விமான நிலையத்தில் ராகுலுடன் பெட்டிகளை இழுத்து நடந்திருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு முன்னெப்போதோ பழக்கமான கோபுரக் குடியிருப்பின் இருபத்திமூன்றாம் மாடியில் ஓய்வாக ஒரு படுக்கையில். வால்டர் இன்னொரு படுக்கை அறையில். ஆனால் ஒரே படுக்கையில் இருவர் செய்யும் காரியத்தின் தாக்கம் தேய்வதற்கு முன் அது எப்படி நேர்ந்தது என்ற குற்ற உணர்வு. வால்டருடன் நிகழ்ந்த முதல் அனுபவங்களின் அதிர்ச்சியும் ஆழமும் காலப்போக்கில் அழிந்துவிட்டன என நினைத்திருந்தாள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவை மனதின் மேல்மட்டத்திற்கு வந்துவிட்டன.

“நீமா! முன்பு பார்த்ததற்கு நீ அதிகம் மாறவில்லை.” ‘முன்பு’ மேல் விழுந்த அழுத்தம்.

“நீயும் தான், வால்டர்!”

அறிமுகம் இருவரையும் அந்த ‘முன்பு’க்கு அழைத்துப்போனது. அதில்..

ஸ்பெல்டா ஃபார்மசூடிகல்ஸ் தயாரித்த ‘ஃபென்ட்டானில்’ களிம்பு தடவிய துண்டுகளை யூ.எஸ்.ஸில் அறிமுகம் செய்வது பிரமிட் ஆலோசக நிறுவனத்தில் நீமாவின் முதல் பொறுப்பான ப்ராஜெக்ட்.

“அதற்கு ஒரு கவர்ச்சிகரமான பெயர் தேவை.” வால்டரின் முதல் அறிவுரை.

“ப்ரிவென்ட்.”

“அப்பெயரில் ஏற்கனவே நிறைய மருந்துகள்.”

“ஸ்டாப்பெய்ன்.”

“மிக வெளிப்படை.”

“அபாலிஷ்.”

“அரசியல் சட்டம் போல இருக்கிறது. மக்களிடம் எடுபடாது.”

“எரேஸ்!”

“உடல் வலியை எழுத்துப் பிழைகளைப்போல அழிக்கும். பிரமாதம் நீமா!”

“கற்றுக்குட்டிக்கு பாடம் சொல்லித்தர அனுபவப்பட்ட உனக்கு நிறையப் பொறுமை, வால்டர்!”

அதே கற்றுக்குட்டிக்கு வேறொரு பாடம் சொல்லித்தருவதிலும் அவனுக்குத் தனிப்பட்ட சாமர்த்தியம், அனுபவம்.

“அடுத்தடுத்த இருக்கைகள் தரமுடியுமா?”

“நோ ப்ராப்ளம்.”

பன்னிரண்டு மணிப்பயணம். தூங்கும் நேரம் தவிர எதையெதையோ பேசினார்கள்.

“விமான உணவு நன்றாகவே இருக்கிறது.”

“உன் முகத்தில் – ஜப்பான் பயணம் நன்றாகப் போகவில்லை.”

“கிளம்புவதற்கு முன் கிழக்கு ஐரோப்பியனின் உரையைக் கேட்கும் வரை நன்றாகத்தான் இருந்தது.”

“அவன் கிடக்கிறான். வர்த்தக நிறுவனங்களின் செலவுகளைக் குறைப்பதும் வருமானத்தை வளர்ப்பதும் ஆலோசகர்களின் தொழில். அதை நீ நன்றாகவே செய்கிறாய். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதைப் பற்றி ஏன் இப்போதே கவலை? இன்று உன்னால் ஸ்பெல்டா லாபம் கொழிக்கிறது.”

ஆனால் இருவர் மனதையும் ஆக்கிரமித்த ‘முன்பு’ மூன்று மாதங்கள். அவற்றின் முடிவுரை வால்டரின் திடீர் அறிவிப்பு.

பலவிதங்களில் எனக்குத் திருப்தி கொடுத்த என் வாழ்க்கையின் ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது. ‘பிரமிட் கன்சல்டிங்’கில் எனக்குத் துணைநின்ற அனைவரிடமும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

தொழில் அளவில் ஒரு எல்லையைத் தொட்டுவிட்டேன். இனி இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னால் ஆகக்கூடியது எதுவும் இல்லை. நான் காலிசெய்த இடத்தில் என்னைவிடச் சிறந்த ஒருவர் அமரப்போவது நிச்சயம்.

(அந்த இனிய ஒருத்தியும் நானும் கூட உறவின் ஆழத்தைத் தொட்டுவிட்டோம். இனி எங்களுக்கு அடுத்த அவசர உறவுகளின் ஆரம்பம்!)

மின்-நாணயங்களுக்கு எதிர்காலத்தில் யாரும் எதிர்பாராத அளவில் மதிப்பு கூடப்போகிறது. அவற்றின் உயர்ச்சியில் நானும்..

குற்றத்தை ஒப்புக்கொள்ளும் குரலில், “நான் வெளிப்படையாக அறிவித்த ‘குட் பை!’ மாபெரும் வெற்றி. மறைமுகமாக வெளிப்படுத்திய ‘சயோனாரா’ தவறாகிவிட்டது.”

அதன் அர்த்தம்?

“இத்தனை காலமும் ஆழமான உறவு கிடைக்கவில்லை” என்றான் ஏக்கத்துடன்.

‘நிஜமான காதலுக்குப் பணம் வேண்டாம், ஆனால் நேரமும் அன்பான செய்கைகளும் அவசியம்’ என்று யாரோ சொன்னது ஞாபகத்துக்கு வர,

“க்ரிப்டோ நாணயங்களை வாங்கி விற்க ஒருநாளைக்கு நாலு மணி போதாதா?”

“அது கம்பெனி பங்குகள் போல இல்லை. வாரத்தின் ஏழுநாளிலும் இரவு பகல் எந்நேரமும் கைமாறலாம். புதிய தொழில்நுட்பம் என்பதால் அதன் பெருமையை மற்றவர்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.”

“சமூக ஊடகங்களில்.”

“முடிந்தால் அச்சில், தொலைக்காட்சியில். அதற்கு என்றே சில வலைத்தளங்கள். நான் ஹாங்காங், ஜப்பான் வந்ததும் அதற்காகத்தான். நான் திட்டமிட்டு வாங்கி விற்றதால் என்னிடம் இருக்கும் ‘டெல்ஃபியம்’ காசுகளின் இன்றைய மதிப்பு நூறு மில்லியனுக்கு மேல்.”

பிரமிட்டில் அவளுடன் தொடர்ந்து இருந்தால் அவனிடம் இத்தனை செல்வம் சேர்ந்திருக்குமா?

“ஷிகாகோ போனதும் ஒரு மணி கொடு! க்ரிப்டோவில் சுலபமாகப் பணம் பண்ணும் ரகசியங்களைக் காட்டுகிறேன்.”

விமானத்தில் இறங்கிக் குடியேற்றக் கூடம் வரை ஒன்றாக நடந்தார்கள். அதிகாரி அவர்களை வெவ்வேறு வரிசைகளின் வால்களால் பிரித்தார்.

“நான் மாலை அழைப்பேன். மறக்காதே, நீமா!”

இன்றைய விருந்தினர் வால்டர் டியாகோ. க்ரிப்டோ நாணயங்களின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் அவற்றின் ஆரம்பக்காலத்திலேயே உணர்ந்த முன்னோடி அவர். ஹாய், வால்டர்!

“ஹாய் ஜேன்!”

“கரவுக்காசுகளின் இளவரசர் என்று உங்களை அழைக்கலாமா?”

“என் முன் தலை வழுக்கையைப் பார்த்த பிறகுமா?”

அடங்கிய சிரிப்பொலி.

“சரி, மிஸ்டர் க்ரிப்டோ-கிங்! செல்வத்தைப் பெருக்கும் அறிவுரைகளுக்குப் பதில் அவற்றை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய நிஜமான மனிதர்களின் கதைகளைக் கேட்பவர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது நிகழ்ச்சியின் நோக்கம். அவ்வழியில் உங்கள் அனுபவத்தை..”

“நான் சொல்லப்போவது இல்லை.”

“ஏன்?”

“ஒரு டாலர் ஆதாயத்தைவிட அரை டாலரின் இழப்பு நம்மை அதிகமாகப் பாதிக்கும் என்பது உளவியலாளர்கள் கருத்து. அதன்படி என் வெற்றிக்கதைக்கு பதில் நான் கொடுத்த ஒரு நல்ல அறிவுரையை அலட்சியம் செய்த ஒருவரைப் பற்றிச் சொல்கிறேன்.”

“அது க்ரிப்டோஸில் முதலீடு செய்யத் தயங்குகிறவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்!”

“சந்தேகம் இல்லாமல். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘உழைப்பு இல்லாத ஊதியம்’ உன் கண்ணில்பட்டு இருக்கும்.”

“அதன் மதிப்புரை மட்டுமே. அதைப் படித்து புத்தகம் அதிகம் விலைபோகாது என நினைத்தேன். என் கணிப்பு வீணாகவில்லை.”

உழைப்பு இல்லாத ஊதியம்

(வெல்த் வித்அவுட் வொர்க்)

எழுதியவர்: அருள் ஆனந்தம்

ஈ.எஃப்.ஷுமாகரின் அடிச்சுவட்டில் எழுதப்பட்ட, காந்தியப் பொருளாதாரம் பற்றிய இந்நூல் என்னை உயர்த்திய பத்துப் புத்தகங்களில் ஒன்று. ஈ.டி.எஃப்., என்.எஃப்.டி., க்ரிப்டோ என்று புரிபடாத செல்வங்கள் உருவாகியிருக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டில் காந்தியின் அறிவுரை மிகவும் அவசியம் என்பதைப் பேராசிரியர் ஆனந்தம் தகுந்த ஆதாரங்களுடன் நிலைநாட்டி யிருக்கிறார். வெறும் வார்த்தைகளுடன் நில்லாமல் அவ்வறிவுரைகளைப் பின்பற்றிய பலரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் சேர்த்தது புத்தகத்தின் வெற்றிக்குக் காரணம்.

முதல் அத்தியாயத்தில்..

“நானும் அதன் புகழ்ச்சியைப் படித்து அதன் ஆசிரியருக்கு பத்து புத்தகங்கள் வாங்குவதாகத் தகவல் அனுப்பினேன்.”

“புத்தகம் படிப்பதை நிறுத்தியவர்களுக்கு க்றிஸ்மஸ் பரிசாகக் கொடுக்க உதவும்.”

“அப்போது டெல்ஃபியம் காசின் மதிப்பு பதினைந்து டாலர்.”

“கிட்டத்தட்ட ஒரு புத்தகத்தின் விலை.”

“பத்து நாணயங்களுக்கு நன்றியாக அவர் தன்னுடைய ‘ஹாப்பி டேஸ்’ என்கிற பிரபலமான வலைத்தளத்தில் இந்தப் பேரம் பற்றி ஒரு கட்டுரை. காசுகளை உடனே விற்காமல் பத்திரப்படுத்தப் போவதாகவும், காந்தி புத்தகத்தை விற்றுவரும் பணத்தில் அவ்வப்போது இன்னும் நிறைய ‘டெல்ஃபியம்’ வாங்கி சேர்க்கப்போவதாகவும், எதிர்காலத்தில் அவற்றின் மதிப்பு பலமடங்கு பெருகும் என்றும் எழுத வேண்டும்.”

“ம்ம்.. என்னிடம் அப்படி யாராவது கேட்டிருந்தால்..”

“ஆனந்தம் மறுத்துவிட்டார்.”

“சந்தர்ப்பங்களை நழுவவிடும் முட்டாள்களுக்குப் பஞ்சமே இல்லை. பத்து பிரதிகள் விற்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்.”

“அது ஒன்றுமே இல்லை. அந்தப்பத்து டெல்ஃபியம்களின் இன்றைய விலை – அரை மில்லியன்.”

“த்ஸொ. த்ஸொ.”

“தினம் வணிகச் செய்திகளைப் பார்க்கும்போது எல்லாம் அவர் தன்னை நொந்துகொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை.”

—–

நீமாவின் பரந்த அலுவல அறையின் ஒரு மூலையில் அவள் பெட்டிகள். மதியத்திற்கு முன் அவள் பயண அறிக்கை முடிந்தது. வால்டரின் அறிவுரைக்கேற்ப அது ஞாயிற்றுக்கிழமையைத் தொடவில்லை. அதை பாஸுக்கு அனுப்புமுன் அவனிடம் இருந்தே,

– சந்திக்க வர முடியுமா? –

அறைக்கதவைத் தட்டிவிட்டு அவள் நுழைந்தபோது அங்கே நிறுவனத்தின் சட்ட நிபுணர் மெல்லோ. அவர்களின் முகங்களைப் பார்த்ததும் ஜப்பானிய அறிக்கை பின்னுக்குப்போனது.

“உட்கார், நீமா!”

நன்றி சொல்லத்தோன்றாமல் அதைச் செய்தாள்.

“‘எரேஸி’ன் விற்பனையை நீ வளர்த்தது நினைவிருக்கும்.”

அதில் ஏதோ தகராறு.

“பத்து பெரிய மாநிலங்களில், பெனெடிக்ட் சட்ட நிறுவனம் பிரமிட் மேல் அறுநூறு மில்லியன் டாலருக்கு வழக்கு சமர்ப்பித்து இருக்கிறது” என்றார் மெல்லோ.

காரணம்?

“எரேஸ் துண்டுகளைத் தவறாகப் பயன்படுத்தியதால் இதுவரை இருபத்தியொன்பது பேர் அவசர சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.”

“அரசாங்க உத்தரவின்படி ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக எழுதப்பட்ட வழிமுறைகள் ஆறு மொழிகளில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய கல்வி அறிவை அவர்களுக்குத் தராதது அரசாங்கத்தின் குற்றம்” என்றாள்.

பாஸ் அவளை விநோதமாகப் பார்த்தார்.

“தாயின் மார்பில் தவழ்ந்த ஒரு வயதுக் குழந்தை அவளுடைய எரேஸ் துண்டைக் கடித்து சுயநினைவை இழந்து பிறகு இறந்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் இது இரண்டாவது.”

“ஒவ்வொரு ஆண்டிலும் துப்பாக்கி விபத்துகளில் நூறு குழந்தைகள் இறக்கிறார்கள். அதை யார் கேட்பது?”

“துப்பாக்கி கடவுள்போலப் புனிதமானது. அதன் வம்புக்கு யாரும் போவது இல்லை.”

“வழக்கின் விவரங்களை மெல்லோ உனக்கு அனுப்புவார். தகுந்த பதில்கள் இன்றைக்குள் எழுதிக்கொடு! எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை.”

தன் அலுவலகம் வந்ததும்,

என் அறுபது வயது உறவினருக்கு சதைச்சிதைவின் வலியை மந்திக்க மூன்று மணிக்கு ஒரு ஆக்ஸிகோடோன் மாத்திரை தேவை. இரவில் தூக்கம் கெடுவது மட்டுமில்லாமல், பகலிலும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாதபடி மனஉளைச்சல். எரேஸ் துண்டை மேல்கையின் உள்புறத்தில் அணியத் தொடங்கியதில் இருந்து அவருக்கு மூன்று நாட்கள் கவலை இல்லாமல் போகிறது. இப்படி எத்தனையோ பேர். பலர் முன்னாள் இராணுவத்தினர். அவர்களுக்கு அவசியமான ஒரு பொருளை ஒருசிலர் சரியாகப் பயன்படுத்தவில்லை, குழந்தைகளிடம் ஜாக்கிரதையாக இல்லை என்ற காரணங்களால் விற்பனையில் இருந்து அகற்றுவது விவேகம் அல்ல.

முன்னுரையைத் தொடர்ந்து நீண்ட விளக்கங்கள். அவற்றைத் தேடிப்பிடித்து கோர்வையாக எழுதி முடிக்க ஆறு மணி ஆகிவிடும். சாக்ரமென்ட்டோ ஃப்ளைட்டை ரத்து செய்தாள். ராகுலுக்கு அப்புறம் தெரிவிக்கலாம். பதினோரு மணிக்கு முன் அவன் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டியது இல்லை.

பாஸுக்கு அனுப்பியபோது அவளுக்கும் அவளுடைய நியாயமான வாதங்களுக்குப் பலன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அறுநூறு மில்லியன் டாலர் அதிகம் இல்லை யென்றாலும் வழக்கு பிரமிட் நிறுவனத்தை எந்த அளவு பாதிக்கும்? ஒருவேளை அது மதிப்பிழந்து சாய்ந்தால்? மனவிரக்தியில்..

வால்டர் அழைத்தபோது, “எங்கே? எப்போது?”

“நானே பிரமிட் பக்கம் வருகிறேன்.”

அவளுடைய சம்மதத்திற்குக் காத்திராமல் ஏதோவொரு சக்தி அவளை எங்கோ இழுத்துச் செல்வது போலத் தோன்றியது.

அவனுடைய, அவளுக்கு முன்பு பரிச்சயமான இல்லத்தில்.. ‘மலபார் ஹில்ஸி’ல் இருந்து தருவித்த உணவில் வயிறு நிரம்ப, வால்டரின் சேகரிப்பில் இருந்த சிறப்பான பானத்தில் மனம் காலியாக.

“ப்ளாக்செய்ன் டெக்னாலஜி வழியில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை ‘டெல்ஃபியம்க’ள் தான் வெளியிடப்படும். காகிதப் பணம் போல கணக்கு வழக்கு இல்லாமல் அச்சிடப்படாது. அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. அரசியல்வாதிகளின் குளறுபடிகளால் பாதிக்கப்படாது.”

“சாதாரண காசு போல பயன்படுமா?”

“ம்ம்.. ஸ்டார்பக்ஸ் காஃபியில் இருந்து டெஸ்லா கார் வரை வாங்கலாம்.”

“நான் செய்ய வேண்டியது?”

“என் ரகசியக் குழுவில் இருந்து தகவல் வந்ததும் அவற்றை வாங்க வேண்டும், விற்க வேண்டும்.”

“அது முடியக்கூடியது.”

“ஒரு முக்கியமான விஷயம்.”

“என்ன?”

“இத்தனையும் மின்னல் வேகத்தில். மற்றவர்கள் அதைச் செய்வதற்கு முன்னால்.”

“எப்படி?”

“அதற்கு என்றே ‘காய்ன்-பர்ஸ்’ இணையத்தளம். ஒரே நாளில் பலதடவை செய்தால் வேகமாகக் காசுகள் சேரும்.”

“ம்ம்.. சந்தேகம்.”

“நீ செய்ய வேண்டாம். உன் கணினி. இல்லையென்றால், வாரத்தில் ஒன்றிரண்டு தடவை.”

“அது சாத்தியம்.”

கரவுக்காசுகளுக்குப் பிறகு உடலின் ரகசியங்கள்.

‘வேலைக்குப் போகாத கணவன் என்ற அலட்சியத்தில் தானே’ – மனசாட்சியின் முதல் குற்றச்சாட்டு. ‘இல்லை, நிச்சயமாக இல்லை. நான் அப்படி நினைத்ததே இல்லை.’

‘எப்போதோ சாப்பிட்ட உணவின் சுவை அதை ரசித்த விடுதியின் பக்கம் மறுபடி போகும்போது நாக்கில் எட்டிப்பார்ப்பது போல.’

இது வெறும் நாக்கின் ருசியா?

‘இம்மாதிரி ஒரு சூழ்நிலை உருவாவதற்கு முன்பே நான் அதைத் தவிர்த்து இருக்க வேண்டும். ஏதோ என் போறாத காலம், தவறிவிட்டேன்.’

இப்போது செய்யக்கூடியது என்ன?

ஜப்பானில் அடுத்த தினம் வந்துவிட்டது. அவளும் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.

முன்பு நடந்தது, அதிகாரப்படிகளின் உச்சியில் இருக்கும் ஆண்கள் தங்களுக்குச் சாதகமாக ஏற்படுத்திக்கொண்ட பொறுப்பற்ற நடத்தை. இனி நடக்கப்போவது மனசாட்சியுள்ள ஒருத்தியின் வாழ்க்கைத் தீர்மானம்.

சத்தமிடாமல் எழுந்து உடை அணிந்தாள். தோள்-பையில் இருந்து எடுத்த சாமான்களை அதில் மறுபடி திணித்தாள். கைப்பையைத் திறந்தபோது சாவிக்கொத்தில் லெக்சஸ் திறவுகோலுக்குப் பக்கத்தில் சதுரத்தலையுடன் பளபளத்த ஒரு சாவி.

வரவேற்பறையின் மேஜைமேல் ஒரு குறிப்பு.

வால்டர்! எதிர்பாராத சந்திப்புக்கு நன்றி! இம்முறை நான் உன்னிடம் இருந்து விடைபெறுகிறேன். க்ரிப்டோ அறிவுரைகளுக்கு நன்றி! அவற்றைச் செயல்படுத்துவேன். குட் லக்! நீமா

தோள்-பையை மாட்டிக்கொண்டாள். படுத்திருந்த பெட்டிகளை நிமிர்த்தி இழுத்து வெளியே வந்தாள். கதவு தானாக மூடி சத்தம் எழுப்பும் என்பதால் அவளாகவே மெதுவாக அதைச் சாத்தினாள். கட்டடத்தின் பிரதான வாயிலுக்கு வந்ததும் அழைப்பு-ஊர்திக்கு ஒரு தகவல்.

பழைய இருப்பிடம் வந்தபோது அடுத்த நாளின் ஆரம்பம். சதுரத்தலை சாவி முன் கதவைத் திறந்து அடைக்கலம் தந்தது.

சென்ற வாரம் ராகுலும் அவளும் அதில் இருந்து வெளியேறியபோது குத்தகையில் இருபது நாட்கள் பாக்கி. அங்கே அவளுடைய தனி வாழ்கையின் ஞாபகார்த்தமான ஒற்றைப் படுக்கை, சாப்பாட்டு மேஜை, நாற்காலிகள், நசுங்கிய பாத்திரங்கள் மற்றும் மிஞ்சிய சமையல் சாமான்கள். இடத்தை நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கு முன், அவற்றை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய ‘ஸ்பார்க்ல் க்ளீனை ‘அழைப்பதாக இருந்தாள். அதைத் தள்ளிப்போட்டது நல்ல காரியம்.

இரண்டாம் படுக்கை அறையின் பழைய படுக்கையில் ‘ஸீஸீஸீக்வில்’ மாத்திரையின் உதவியில் நிம்மதியான நித்திரை.

சமையல் அறையில் சத்தம்போடும் ஒரு காஃபி-மேக்கர். காப்பி டப்பாவில் அடியில் மிஞ்சிய பொடி. இரண்டும் சேர்ந்து அவளுக்கு மனத்தெளிவைக் கொடுத்தன.

முதல்முறை நடந்ததை அறியாமையில் என்று மறைக்கலாம், மன்னிக்கலாம். இரண்டாம் முறை அது சரியில்லை. இனி ராகுலுடன்.. நினைத்ததுமே மனதில் உதறல், உடல் கூனிக்குறுகியது. வர்த்தக ஒப்பொந்தங்கள் கூட எழுதாத சில விதிகளை மீறினால் அர்த்தமற்றுப் போகும்.

ஒரு முடிவுக்கு வந்ததும் மன நிம்மதி.

அசௌகரியமான விஷயங்களை நேரில் சொல்லும்போது தடங்கல்கள் குறுக்கிடும். சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும் பாதி தொண்டையிலே சிக்கி, தகவலின் தாக்கம் வெளிப்படாமல் போய்விடும். சொல்லத் தொடங்கும்போதே கேட்பவர் செய்தியை ஊகித்து முகம் கோணுவதைப் பார்த்து, முழுத்தகவலையும் விவரிக்க இயலாமல் சொல்பவரே மனம் மாறிவிடலாம். இல்லை, உரையாடல் பிரதான விஷயத்தில் இருந்து திசைமாறிப்போகலாம்.

ராகுல்! நாம்.. நாம்.. பிரிந்துவிடுவது தான் நல்லது.

ஏன் அப்படிச் சொல்கிறாய்?

காரணத்தோடு தான்.

நீ இல்லாத வாழ்க்கையை என்னால் நினைக்கக்கூட முடியவில்லை.

அப்படிச் சொல்லாதே! நான் செய்தது மன்னிக்கமுடியாத தவறு.

அப்படி எதுவும் கிடையாது.

கணவன்-மனைவி உறவின் இலக்கணத்தை மீறிவிட்டேன்.

இலக்கணத்தை மீறுவதால் தான் இலக்கியம்.

நான் உன் மட்டத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டேன்.

கைநீட்டி உன்னை உயர்த்திவிடுகிறேன்.

அப்படியென்றால்..

நீ எனக்கு எந்த விவரமும் விளக்கமும் தரவேண்டாம். என்னிடம் திரும்பிவந்தால் போதும்.

நிச்சயமா?

நிச்சயமாகத்தான்.

கடிதம் – காகிதமோ மின்-அஞ்சலோ – ஒரு படி மேல். செய்தி முழுவதையும் சற்றுத்தள்ளி நின்று உணர்ச்சி வசப்படாமல் எழுதி, எழுதியதைச் சரிபார்த்து அதை அனுப்பியதும் அதன் பாதையில் இருந்து விலகி அதை மறந்துவிடலாம்.

அன்புமிக்க ராகுல்,

திருமணத்துக்கு முந்தைய உறவை நானாகச் சொல்லவில்லை, நீ என்னிடம் கேட்டதும் இல்லை. அது உன் உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது.

நேற்று இரவு..

விவரங்களை ஊகிப்பது சிரமம் இல்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.

குழப்பத்தில் இருந்து விடுபடும் வரை நாம் பிரிந்து இருப்பது நல்லது.

கடந்த ஐந்து ஆண்டுகளைப் பார்க்கும்போது நான் எவ்வளவு அதிருஷ்டசாலி என்று தெரிகிறது. அது அப்படியே இருக்கட்டும்.

சுமுகமாக விடைபெறுகிறேன்.

மறுபடி சந்திக்கும் வரையில்,

அன்புடன்,

நீமா.

பின் குறிப்பு: உன் நிதி நிலைமை என் பொறுப்பு.

அதிலும் ஒரு ஆபத்து. கடிதத்தின் பதில்.

அன்பான நீமா,

நிஜமான காதல், திருமணத்தையும் தாண்டிய உறவு. நாம் இருவரும் சேர்ந்து ஐந்து ஆண்டுகளில் கட்டிய மாளிகை. வாழ்நாள் முழுக்க நிலைத்து நிற்கும். அதை எந்தக் காரணத்துக்காகவும் ஒருநாளில் இடிக்க முடியாது.

நிதானமாக யோசித்து முடிவுசெய்!

என்றென்றும் உன்

ராகுல்

பற்று குறைவான இன்னொரு வழி. நேராக முழுச்செய்தியை அனுப்பாமல் அதைப் பல பாகங்களாகப் பிரித்து சம்பந்தம் இல்லாதவர்கள் வழியாக மற்றவர் கவனத்துக்குக் கொண்டுவருதல். அதன் தாக்குதல் தண்ணீரை முகத்தில் அடிப்பதுபோல இராமல் ஹலபினியோ மிளகாய்க் காரம் போல மெல்ல மெல்ல நாக்கில் உறைக்கும். கசப்பான செய்தியை ஜீரணிக்கும் மனப்பக்குவம் வரும். அவ்வழியில்..

நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்களைத் தாண்டிதில் இருந்து அவளிடம் சேர்ந்த நாலாயிரம் பிரமிட் பங்குகள். ‘ஜிபிஒய்ஆர்’ என்ற குறியீட்டில் தேடினாள்: ஒரு பங்கின் மதிப்பு.. கோவிடுக்கு முன் 41 டாலர். முந்தைய வாரம் 336 அன்று 321. பழுது இல்லை.

அன்றைய மதிப்பில் மொத்தம் ஏறக்குறைய ஒன்றேகால் மில்லியன்.

எல்லாவற்றையும் விற்க ‘ஃபிடலிடி’க்கு விண்ணப்பம் அனுப்பினாள்.

மற்ற கணக்குகளின் மொத்தம் ஐம்பதாயிரம் டாலர்.

“ராகுல்! என்னோட எல்லா அக்கௌன்ட்லியும் உன்னையும் சேர்த்துடறேன்.”

“எனக்கு பணவிவகாரம் தெரியாது. உன் பேரிலேயே இருக்கட்டும். எப்போ வேணுமோ அப்போ உன்னைக் கேட்டு வாங்கிக்கிறேன்.”

அபார்ட்மென்ட் ஒப்பொந்தம் அவள் பெயரில்.

“அதுவும் அப்படியே இருக்கட்டும். வீடு வாங்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.”

நீமா பார்பராவை அழைத்தாள். வேகமாக முகமன்களைத் தாண்டி,

“எல் டொராடோ ஹில்ஸ் வீடு பிடித்திருக்கிறது. இப்போதே அதை வாங்க ஆசை.”

“நல்ல தீர்மானம். அப்பகுதியில் இன்னும் ஒன்றிரண்டு காலி மனைகள் தான் பாக்கி.”

“ஒரு மில்லியனுக்குக் கொஞ்சம் குறைச்சல் என்று நீ சொன்னதாக ஞாபகம்.”

“என் ஞாபகமும் அதுதான்.”

“வீட்டை ராகுல் பெயரில் பதிவு செய்ய முடியுமா?”

“முடியும்” என்ற தொனியில் ‘ஏன்’ என்ற கேள்வி தொக்கிநின்றது. “சில பிரச்சினைகளைத் தவிர்க்க இருவர் பெயரிலும் வாங்குவது தான் நல்லது.”

நீமா மட்டுமே சம்பாதிக்கிறாள் என்று அவளுக்குத் தெரியும்.

“சரி, அப்படியே செய்!”

“வீட்டுக்கடனுக்கு..”

“அவசியம் இல்லை. முழுவிலையும் கொடுத்துவிடுகிறேன்.”

இன்னொரு ‘ஏன்?’-ஐயும் விழுங்கி,

“எல்லா ஏற்பாடுகளையும் முடித்து உன்னை அழைக்கிறேன்.”

“தாங்க்ஸ், பார்பரா!”

ராகுல் கவலைப்படாமல் வீட்டில் வசிக்கலாம். அடுத்தது, அவனுடைய ஒரு வருட செலவுகள். அதை அவன் கணக்குக்கு மாற்றியதும், முன்னூறு ஆயிரமாவது மிஞ்சும்.

அதில் பாதி அவசிய எதிர்பாராத செலவுகளுக்கு. மீதிப் பணத்தில் நான்கு டெல்ஃபியம் காசுகள். அடுத்த எதிர்கால சேமிப்பின் ஆரம்பம்.

டாலர்களை நகர்த்தும் வேலைகள் முடிந்ததும், அலைபேசியில் சில மணிகளுக்கு முன் வந்த தகவல்.

– ஆர் யு ஓகே நீமா? ராகுல் –

நீண்ட நேரம் யோசித்தாள். கேள்விக்குத் தகுந்த பதில் கிடைக்கவில்லை. உடன்பாடான பதில் பொய். உடல்வலி மனவேதனை இரண்டும் வார்த்தைகளில் வெளிப்படுமா? குற்ற உணர்வு அவளை மௌனமாக்கியது.

கவலையை மறக்க வேலையின் கடமைகள். வீட்டில் இருந்து செய்ய சௌகரியமான மேஜை நாற்காலி இல்லை. அலுவலகம் போய்வர வாடகைக்கார். அது கிடைத்ததும் முதல் காரியமாக, அணிந்திருந்த ஆடையைத் தவிர மற்ற துணிகளை உலர்சலவையில் கொடுத்தாள்.

பொழுது போகாத வக்கீல்களின் வழக்கை மூழ்க வைப்பதுபோல அடுத்த ப்ராஜெக்ட். அதை அடக்க முடியாத சந்தோஷத்தில் பாஸ் குறிப்பிட்டதும் நீமாவுக்கு மறைக்கமுடியாத புன்னகை.

“‘எலிப்டெக்ஸை’ யு.எஸ்ஃஸில் பிரபலப்படுத்த வேண்டும்.”

“அது என்னவிதமான வர்த்தகம்?”

“நிதிப் பரிமாற்றம். முக்கியமாக, கரவுக்காசுகளை வாங்கி விற்கும் வலைத்தளச் சந்தை. சிங்கப்பூரை மையமாகக்கொண்ட உலகளாவிய நிறுவனம். ஏற்கனவே வேரூன்றிய ‘காய்ன்-பர்ஸு’க்குப் போட்டியாக இங்கே நுழைகிறார்கள். க்ரிப்டோ என்றதும் ‘எலிப்டெக்ஸை’ அமெரிக்கர்கள் நினைக்கவேண்டும். அதன் ‘ஆப்’ எல்லாருடைய அலைபேசிகளின் முதல் பக்கத்தில்.”

“எவ்வளவு டாலர் செலவில்?”

“ஆரம்பத்தில் நூறு மில்லியன்.”

“அவ்வளவா?”

“அது அவர்களுக்கு சில்லறை. மொத்த க்ரிப்டோ காசுகளின் மதிப்பு இன்றைக்கு இரண்டு ட்ரில்லியன் (மில்லியன் மில்லியன்) டாலருக்கு மேல்.”

“அப்படியா?”

அவளே அதில் ஒரு துளியை விரலில் வழித்து வாயில் போட்டுக்கொள்ளப் போகிறாள்.

‘ஃபென்ட்டனைல்’ துண்டுகளின் அறிமுகத்துக்கு மில்லியன் டாலர். இப்போது அதைப்போல நூறு மடங்கு அவள் ஆளுகைக்குள். பெருமையுடன் தன் அலுவலகம் வந்தாள். ‘எலிப்டெக்ஸி’ன் பெயரை மக்கள் நடுவில் வைக்க வேண்டும். அதற்கு எத்தனையோ வழிகள். யு.எஸ்.ஸில் நான்கு குழு-விளையாட்டுகள் – கால்பந்து, பேஸ்பால், கூடைப்பந்து, ஐஸ் ஹாக்கி – மிகப்பிரபலம். ஆட்டக்காரர்களின் வருமானம் மில்லியன் கணக்கில். அவர்கள் ஆடும்போது மட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மற்றும் நேர்காணல்கள் வழியாகவும் எல்லாருடைய இல்லங்களில் நுழைகிறார்கள். அவர்கள் வார்த்தைகளில் மயங்கி சர்க்கரை பானங்களையும், எண்ணெயில் பொரித்த சௌகரிய உணவுகளையும் மக்கள் விழுங்குகிறார்கள்.

முதலில், ஒரு விளையாட்டு அரங்கிற்குப் பெயரிடும் உரிமை. ‘ஃபெட்-எக்ஸ் ஃபோரம்’ இல்லை ‘பாங்க் ஆஃப் அமெரிக்கா’ ஸ்டேடியம் போல. அரங்கின் உள்ளேயும் வெளியிலும் ஆளுயர எழுத்துக்களும் அடையாளமும். அதை நேரிலோ தொலைக்காட்சியிலோ பார்ப்பவர்கள் மனதில் ‘எலிப்டெக்ஸ்’ பதிந்துவிடும். எந்த அரங்கு? கோவிட்டுக்கு முன் கும்பலாக மதிய உணவு சாப்பிடுவது நினைவுக்கு வந்தது. ஒருத்தி வயிற்றுடன் குறுக்கெழுத்துப் புதிரையும் நிரப்புவாள். அவளுக்கு உதவப் பல மூளைகள்.

“வர்த்தகப்பெயர் இடாத (அமெரிக்க) கால்பந்து மைதானம்.”

“எத்தனை எழுத்து?”

“பன்னிரண்டு.”

“லாம்போ ஃபீல்ட்.”

“ஃபீல்ட் சரி. முதல் பாதி உதைக்கிறது.”

“சோல்ஜர்ஃபீல்ட்.”

“தாங்க்ஸ்.”

சோல்ஜர்ஃபீல்டுக்கு ‘எலிப்டெக்ஸ் ஃபீல்ட்’ என்று பெயர்சூட்ட இருபது முப்பது மில்லியன் தேவைப்படும்.

அடுத்தது, பல சாம்பியன்ஷிப்கள் வென்ற கால்பந்து ஆட்டக்காரன், அவனுடன் அவன் மாடல் மனைவி. ஆளுக்கு ஒரு மில்லியன் ‘எலிப்டெக்ஸ்’ பங்குகள் ‘பரிசு’. இருவரையும் முன்னிருத்தி பல விளம்பரங்கள். இன்னொரு இருபது மில்லியன். அப்படி யார்? ராகுல் போட்டி விளையாட்டுகளை ரசிப்பது உண்டு.

‘ராகுல்! உனக்கு அப்படி யாரையாவது தெரியுமா?’

‘டாம் ப்ரேடியையையும் கரோலைனையும் வளைத்துப்போட முடியுமா பார்! அதற்கு முன் ஒரு கேள்வி – ஆர் யு ஓகே?’

‘ம்ம்ம்.’

அடுத்த சில நாட்கள் திருமணத்துக்கு முந்தைய அவள் வாழ்க்கை. கிட்டத்தட்ட காலி என்றாலும் பழக்கப்பட்ட இருப்பிடம். காலையில் காப்பி, ஒரு கிண்ணம் ஓட்ஸ். வேலையில் பதினோரு மணி. மதியம், தரமான சான்ட்விச். வீட்டிற்கு வந்ததும் தருவித்த உணவு – இந்திய, இத்தாலிய, தாய்லாந்திய, மங்கோலிய… நாள் ஏதோவொரு குறையுடன் முடிந்துபோனது.

சில நாள் அவள் வீட்டிற்குப் போக ஏழெட்டு மணி ஆகிவிடும். ஆனாலும் ராகுல் அவளுக்குக்காகக் காத்திருப்பான்.

“நீ முன்னாடியே சாப்பிட வேண்டியது தானே.”

“தனியா அதுவும் நான் சமைச்சதை நானே சாப்பிடறதுன்னா மஹா போர்.”

அவள் சௌகரியமான வீட்டு ஆடைக்கு மாற்றி வருகிறாள்.

“இன்னிக்கி பருப்புத் துவையல்.”

“நான் துவையலில் பிசிஞ்சு துவையலைத் தொட்டுண்டு சாப்பிடப்போறேன்.”

சாப்பிடும்போது,

“ஐரீனா டீவோர்ஸ் செய்யப்போறா.”

“அது வருஷம் தவறாம நடக்கறது தானே.”

“ஒரு வித்தியாசம். அவளோட நாலு டிவோர்ஸ்களை நடத்திய லாயர் அடுத்த கணவன்.”

“சௌகரியம் தான்.”

“என்ன யோசிக்கறே?”

“ஒருசில விஷயங்கள் நிலைச்சு நிற்கும் என்கிற நம்பிக்கை இருந்தா, மற்ற விஷயங்களை இஷ்டப்படி மாற்றிக்கொள்ளலாம். அவளுக்கு வேலை நிரந்தரம். அதனால கணவனை மாத்தறா.”

“அதோட கான்வெர்ஸ். உலகத்தில எது மாறினாலும் உறுதியான உறவை அது அசைக்காது. ம்ம்.. நான் கூட அழகா ஒண்ணு சொல்லிட்டேனே.”

***

Series Navigation<< உணவு, உடை, உறையுள், … 1உணவு, உடை, உறையுள், … – 3 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.