ஆர்கலி

அவன் அந்தத் தகட்டுக்கதவை ஓங்கி அடித்துக்கொண்டிருந்ததில் ஊரே சற்று நேரத்திற்குக் குழுமியிருந்தது. சதகத்தும்மா ஒரு ஓரமாக அத்திவாரத்திட்டில் குந்தியிருந்தாள். கண்ணிலிருந்து நீர்வரத்து நின்றிருந்த பிசுபிசுப்புக்குத் தாடைய ஒட்டவைத்துப் பார்த்தபடியிருந்தாள். கால்களைச் சுற்றி பூனைக்குட்டிகள் ஒன்றன் மீதொன்று வாகாய்ப் படுத்திருந்தன. அத்தனை அவமானத்திலும் பூனைகள் கால்களைக் கவ்வி உரசும் வால்சுரணை கொஞ்ச நேரத்திற்கு இருக்கலாமென்றிருந்தது. கிணற்றைச் சுற்றி குளிக்கக் கட்டிய சீமெந்துக் கட்டின் கீழ் மணல் சாந்தோடு அரித்துப்போனதில் சாய்ந்திருந்தது. அந்தக் கட்டில் உடைந்த கண்ணாடியொன்று மாட்டியிருந்தது. அந்தக் கண்ணாடி ஆடுகிற தெறி விம்பம் பளிச்சென அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆடிஆடி விழுந்தது.

“ இந்த மாப்ளோலியாரு என்ன வெட்டக் கெறக்க..?”.

“ இது ஒண்ட ஊடா நாயே, ஒனக்கொரு சொத்துமில்ல. வெட்டக்கிப் போடா பேயா.?”.

சத்தங்களும் வசைகளும் ஓயாமல் நீண்டு கொண்டேயிருந்தன. புதிதாக கட்டப்பட்ட ஒத்தாப்பிலிருந்து தட்டுமுட்டுச்சாமான்களை வீசியபடி இருந்தான் நௌபல். தலையிலிருந்து வீறிட்டு ஓடிய ரத்தம் இப்போதைக்கு உறைந்துவிட்டிருந்தது. போதை மாத்திரைப் பழக்கத்திற்குப் பிறகு விகாரமாக ஊதி உப்பியிருந்த உடலில் முன்னும் பின்னுமாக ரத்தக் கோடுகளும் சிராய்ப்புகளும் நீண்டிருந்தன. சிறுவயதில் வரிசையான பற்களோடு அவன் சிரிப்பதில் அத்தனை வாக்காயிருக்கும். வாழ்நாளில் பாதி நாளை எங்கள் வீட்டிலோ பெரியம்மாவின் வீட்டிலோ தான் கழித்திருப்பான். கறுத்த உருவம், ஒட்ட வெட்டிய முடி, முற்றாத தேக்கு உடம்பென அவன் வாகு கவர்ச்சியாயிருக்கும். சதக்கத்தும்மாவின் வீடு எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளியிருந்தது. படலையைத் திறக்க இரண்டு தென்னைகள் போஸ்ட் மாஸ்டரின் ஓரத்தில் பொதுவேலியினை ஊடறுத்து நிற்கும். வாசலில் ஆற்றுமணலை காலையிலேயே துப்பரவாக்கி வைத்திருப்பார். கோழிக்கூட்டுச்சத்தமும் பெரியப்பாவின் ஓதுகிற சத்தமும் இழைந்து ரம்மியமாயிருக்கும். சதக்கத்தும்மாவுக்கு ஒரே ஒரு பெண் தான். மற்றைய மூன்றும் ஆண். சுலைஹாவுக்கு அப்படியே உம்மாவின் ஜாடைபோல உருண்டை உருண்டையான கை கால், சுருண்ட கறுகறு எண்ணெய் முடி, இருண்ட தென்னைமர நிறமென இருப்பாள். ஊரெங்கும் தேடியும் யாரும் அவளுக்கு மாப்பிள்ளை பேச வரவில்லை. இருந்த காணி நிலத்தையெல்லாம் சீதனமாகப் பேசி வெளியூர் மாப்பிள்ளையைக் கட்டிவைத்தனர். அவரும் அநியாயத்திற்கு கறாராயிருந்தார். பார்க்க கோரமாயிருந்தாலும் காரமான மனுசனென்பார் பெரியப்பா. சதகத்தும்மாவின் மூன்று ஆண்களும் ஆளுக்கொரு ரகம். அடிக்கடி வீதியிலிறங்கி அடித்துக் கொண்டேயிருந்தனர். ஆளுக்காள் கடிப்பது, நடுமுதுகில் வெந்நீரை ஊற்றுவதென எந்த மட்டத்திற்கும் இறங்கிச் சண்டை பிடித்தனர். இத்தனைக்கும் சதக்கத்தும்மா சாதுவான மனுஷி. தன் பிள்ளை வேற்றான் பிள்ளையென்று வேறுபாடு காட்டாதவள். உம்மோய் புள்ளேயென்று அவள் வாஞ்சையோடே பேசுவாள். என் உம்மாவிற்கு ரத்த சொந்தமில்லை. ஆனாலும் அவள் எனக்குப் பெரியம்மா. அவள் சுடுசோறும் உழுவை மீன் சுண்டலும் வைப்பதைப் போல இந்த அக்கறைப்பற்றில் யாருமே வைப்பதில்லை. அவித்த உழுவை மீன் சதைகளை கிள்ளித் தேங்காய்ப்பூ, காரக்கொச்சிக்காய் தக்காளி விட்டு மாட்டெண்ணெயோடு தாளித்து மண்பானையில் கிண்டி வைத்திருப்பாள். மாலையானால் முக்காடிட்டு மன்சீலோடு குந்தியிருந்து ஓதுவாள். சாம்புராணி மணம் கோடுகள் போல எங்கள் திண்ணை வரை தட்டும். பெரியப்பா கனிவான மனுசன். அவர் ஒரு பாவா. கடைக்குப் போகும் நேரம் தவிர்த்து மிகுதி நேரமெல்லாம் ஓதிக் கொண்டிருப்பார். பெரிய பெனியனோடு வார் பெல்ட்டு அணிந்தபடி ஆற்றுமணலில் இரும்புக் கைத்தடியோடு ஆடிய சீன அடி இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கிறது. பெரியப்பாவின் வைரம் பாய்ந்த உடம்பையும் தைரியத்தையும் சொல்ல ஒரு கதையுண்டு. அதுதான் எங்களுக்கெல்லாம் தந்தையதிகாரம். அந்த வாசலில் தென்னை மரங்கள் வருவதற்கு முன்னர் ஒரு மாட்டுக்கவணையிருந்திருக்கிறது. அதில் புதிதாக வாங்கி வந்த நாம்பன் மூர்க்கமாக அறுத்து ஓடப்பார்த்திருக்கிறது. சிறுவனாகவிருந்த நௌபலின் அண்ணன் விளையாட்டாக அந்த மாட்டை சீண்டவும் மாடு நீண்ட கயிற்றோடு அவனை பக்கத்திலிருந்த கமுகோடு சுற்றி ஓடியபடி இறுக்கவும் குழந்தையின் மாரில் கயிற்று வளையங்கள் அழுந்த விறைத்து அழுதிருக்கிறது. மின்னல் போல பெரியப்பா பாய்ந்து வந்த மாட்டை கொம்போடு சாய்த்து குழந்தையை மீட்ட கதையை உம்மா அடிக்கடி சொல்வதுண்டு. வாப்பா என்றாலும் சும்மா இல்லையென்று ஈன்றவனின் உசத்தி பேச இந்தக் கதையை எங்களூரார் சொல்லுவதுண்டு.

பெரியப்பா சூஃபி தரீக்கா ஈடுபாடு கொண்டவர். அவருக்குத் தெரியாத பெரியார்களோ ஞானிகளோ இருக்க முடியாது. சுவற்றில் பையத்து எடுத்த சூஃபிகளின் படம் கொழுவியிருக்கும்.

சிறுவயதில் பயந்தால் தம்ளரில் நூரெடுத்து ஓதி ஊதிவிடுவார். எங்கள் வீட்டில் பெரிய தேக்கு அலுமாரியொன்றிருக்கும். அதை தள்ளவேண்டுமென்றால் பெரியப்பாவைக் கூப்பிடுவோம். தனியாகத் தள்ளுவார் மனுஷன். வருடம் ஒரு முறை வீட்டில் கந்தூரி நடக்கும். ஊர்ச்சனம் குவியும். மாடறுத்து பந்தி போட்டு தடபுடலாய் மௌலீது ஓதி முடியும் கந்தூரிக்காக சதகத்தும்மாவின் சொந்தபந்தங்கள் இரண்டு நாள் முன்னரே வந்துவிடுவர். காட்டு மாடு கட்டிக்கிடக்கும் வாசலில் பெரிய ஃபோகஸ் லைட் மாட்டியிருக்கும். கண்ணாடி இல்லாத லைட்டின் தங்குதன் சூட்டுக்கு விட்டில்கள் எரிந்து விழுகிற வாசம் இப்போதும் நாசியிலிருக்கிறது. இரவே கித்மத்து என்கிற சமையல் வேலைகள் துவங்கிவிடும். அக்கம்பக்கத்திலிருந்து ஆளாளுக்கு உரல் உலக்கை, துருவமனை, பாய்விரிப்பு பீங்கானுகளென ஏறக்குறைய எல்லாப் பெண்களும் வந்து சேர்ந்துவிடுவர். குவியலாக அரிந்து வைக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பூண்டு இத்தியாதியெல்லாம் இரவே வேறாக்கப்பட்டு மூடியிருக்கும். பெரிய போத்தல்களில் நெய் சாத்தியிருக்கும். அடுக்கப்பட்டிருக்கும் அரிசிப் பைகளுக்கு நடுவே சதக்கத்தும்மாவின் குடும்பப் பெண்களின் பிள்ளைகளோடு திருடன் போலிஸ் விளையாடுவது வாடிக்கையான ஒன்று. இரவானதும் இஸ்லாமியக் கீதங்களைப் பாடுவதற்கு நௌபல் ஒரு பெரிய தோற்பறையோடு வந்து நெருப்புக்காட்டுவான். அதை நாங்கள் ரப்பான் என்று சொல்லுவோம். நெருப்பு ஏற ஏற தோற்சத்தம் கிண் கிண்ணென்று இருக்கும். சதகத்தும்மாவின் ஆண்களுக்கு அழகான குரல்வளமிருந்தது. இறைவனைப் பாடும் குரல். சுற்றியணைத்துப் பெருக்கோடும் ஆர்கலி அது.

“ அருள் மழை பொழிவாய் ரகுமானே.”.

இசுலாமிய கீதங்களை ராகமெடுத்துப் பாடுகிற போது மாடறுக்கும் ஆட்கள் வந்து விடுவார்கள். பெரிய உரப்பையிலிருந்து நீண்ட கத்திகள், கோடரி, அரம், பெரிய பலகைக்குற்றியென இருக்கும். மாட்டின் கால்களுக்கு முடிச்சுக் கயிறு போட்டு ஒட்டவைத்து மாடு சாயும்போது அறுப்பதைப் பார்த்தால் பயந்துவிடுவார்களென்று சிறுவர்களை விரட்டிவிடுவார்கள். காய்ந்த ஓலைகளை பரப்பி விட்டு மாட்டை இழுத்து வந்து பெரியப்பா கத்தியை எடுத்துக் கொடுக்க கலீமா ஓதி அறுப்பார்கள். மாடு கொத்தும் பலகைச்சத்தம் கேட்டபடியே தூங்கப் போவோம். மறுநாள் இலேசான சாண வாசத்தின் மீது சாம்புராணி ஆதிக்கம் செய்யும். தடிப்பமான மில்க் மைடு டீ பரிமாற வேலைகள் திரும்பத் துவங்கும்.

“ பெரியப்போ ..”.

“ இந்த மாட்டிற தோலெங்க..”. பெரியப்பாவைக் கேட்பேன்.

“ அது மாடறுக்க வந்தவன் கொண்டு பெய்த்தான்.”.

“ நாமானே மாடறுத்த. நம்முட தோல அவரெப்படி எடுத்துக்குப் போற.?”.

“ மாடறுக்கிறவனுக்குத்தான் தோலோட உரித்து இருக்கு. அத அவன் ஆருக்காலும் விப்பான். செருப்பு செய்றவன் ரப்பான் செய்றவன் ஆருக்காலும்..”.

“ அப்ப இந்த ஊடு வளவெல்லாம் ஆருக்கு உரித்து.. “.

எல்லாப்பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுப்பதாக அன்றைக்கு அவர் சொன்னதில் அவ்வளவு முகமன் இருக்கவில்லை. சித்தமாக மனதில் நாம் முடிபு செய்வதெல்லாம் நிகழ்ந்துவிடுவதில்லை. நினைத்தது நடந்துவிடுகிற கிளர்ச்சியும் உள் நிறைவும் எப்போதும் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அந்த உவகை எப்போதும் கிட்டாதது என்பதை ஒரு சூஃபி நன்கறிவார். ஓதப் போகிறவர்கள் வரப்போகிறார்கள், வந்து சீலையைப் பிடி என்பார் பெரியப்பா. அழகாய்க் கழுவி மடிக்கப்பட்ட ஒயில் புடவைகளை நீளப்பாட்டில் பானா வடிவில் விரித்து ஒவ்வொரு இரண்டடிக்கும் மூன்று ஈச்சம்பழங்கள், ஒரு பிடி கற்கண்டென வைத்து வைத்து வருவோம். மண் குவித்த பாத்திரத்தில் நாலு பெட்டி சாம்புராணியை முழுக்கக் கொழுத்தி மண்ணில் ஊன்றுவார் பெரியப்பா. சீலைத் தொப்பியணிந்த பெரியவர்கள் வந்ததும் ஓதல் திலாவத்துகள் துவங்கி விடும். மறுபக்கம் மூன்று கருங்கல் உருட்டி முக்கோண அடுப்புத் தயாராகி தென்னை மட்டை விறகில் ஊறிய மண்ணெண்ணெய்க்கு நெருப்பு புஷ் புஷ்ஷென ஏறும். மாஜரின் உருண்டை உருகி வெங்காயம் கறிவேப்பிலை ரம்பையிலை என மணம் பரவும். தாளிப்பு முடிந்ததும் ஊர்த்தூள் போட்ட இறைச்சியைக் கொட்டிக் கிண்டி தேங்காய்ப் பாலை ஊற்றுவார்கள். அரிசி வெந்ததும் அடுப்பைப் பிரித்து தணலை ஆற விடும் இடைவெளியில் வீட்டிலிருந்து கொண்டு வந்த நாட்டு முட்டையைத் தணலில் போட்டு வேக வைத்துத் தருவார் பெரியப்பா. சாப்பாட்டை இலையில் போட்டுக் கொடுப்பது சதக்கத்தும்மா கந்தூரியின் வழக்கம். அதற்காக தாமரை இலைகள் வெட்டப் பட்டு கழுவிக் கொணர்ந்திருப்பார்கள். அந்த இலை முடிச்சில் தாமரைக்காய்களைத் தேடுவோம். தண்ணீர் கொஞ்சம் விட்டு வழுக்கி விளையாடுவோம். மதியமானதும் இலையில் பாற்சோறோடு ஒட்ட எலும்பிலிருந்து கழன்ற இறைச்சியைக் கண்டதும் எச்சிலூறும். சாப்பிட்டு முடிந்த கையோடு களைப்போடு சாய்ந்து வெற்றிலை போடும் கிழவிகளைத் தூண்டி விட்டு பேய்க்கதை கேட்போம். மம்மாலிப் போடியார் தனியே நடந்து போய் பேயை அடித்து வந்த கதை, என் உம்மம்மாவுக்கு பேய் இறைச்சி கொண்டு வந்த கதை என்று அதே கதைகளை திரும்பவும் திகிலோடு உப்பு விசுகோத்து தேநிரென்று கிழவிகளோடு கழிப்போம். இப்படித்தான் அந்த வாசலில் வளர்ந்திருக்கிறோம். அந்த சுவர்களில் தெய்வாம்சமிருக்கிறது. அந்த மண்ணில் ஊறிய எத்தனையோ மாடுகளின் ரத்தத்தில் தியாகம் தான் இருக்கிறது. பெரியார்கள் வந்து அமானுஷ்யமாக பெரியப்பாவோடு பேசி விட்டுப் போகிற சாய்மனை அங்கு தான் இருக்கிறது. ஓதி ஓதித் தேய்ந்து போன குர்ஆனும் சதக்கத்தும்மா முனுமுனுத்தபடி உருட்டும் மரமணிக் கோர்வையும் அங்குதானிருக்கிறது.

***

நௌபல் இப்போதெல்லாம் வீட்டில் தங்குவதை ஏறக்குறைய முழுவதுமாகக் குறைத்திருந்தான். அவன் அவசரமாக அவளைத் திருமணம் செய்திருக்காவிட்டால் ஒரு வேளை ஏதாவது வேலைக்குப் போய் ஒழுங்காக இருந்திருப்பான் என்பாள் உம்மா. அவ்வப்போது திடீரென கறிக்கடையில் தோன்றுவான். பிறகு எங்காவது திருமண வீடுகளில் எடுபிடியாய்ச் சிரித்தபடி ஓடித்திரிவான். வானில் எப்போதாவது பளிச்சென்று சிறு வெம்மை போல வான் பொருள் மினுங்குவதாய் அவனுக்கும் சீவிதத்தில் அற்புதங்கள் நிகழ வேண்டுமென்று எங்களுக்கும் உள்ளூர வேட்கை இருந்தது தான். இப்படித்தான் அன்றொரு நாளும் கூச்சலாயிருந்தது. நௌபல் யாரோ ஒருத்தியை மனைவி என்று கூட்டிவந்திருந்தாள்.

“ மூனுதரம் கலியாணம் முடிச்சு உட்ட ஓடுகாலியைக் கூட்டிக்கி இங்க என்னத்துக்கு வந்த..”. என்று சுலைஹா கத்திக் கொண்டிருந்தாள்.

நானும் உம்மாவோடு எட்டிப் பார்க்கலாமென்று போனேன். சதக்கத்தும்மா தேம்பியபடி அழவும் யாரோ இருவர் தேற்றியபடி இருந்தனர். என்னைக் கண்டதும் மதினியைப் பார்ப்பதென்றால் பார்த்துக் கொள் எனச் சிரித்தான். முழுக்க மூடிய ஹிஜாபணிந்த பெண் அங்கு நடக்கும் குழப்பங்களுக்கும் அவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதைப் போல நின்றிருந்தாள். இன்னுமொரு நாள் அவள் விட்டுப் போன பிறகு அவன் வீட்டு முன்னாலிருந்த வடிகானில் கால்களைத் தொங்கப் போட்ட படியிருந்தான். வேலை செய்த மருந்தகத்தில் யாரோ போதை மாத்திரைகளைப் பழக்கிவிட்டிருத்தனர். கணீரென்ற அவனது கசல் குரல் கரகரத்தபடி அழைத்தது. விகாரமான முகத்தோடு ஒடுங்கலான போதைச்சிரிப்போடு அவன் இமாஸு என்றதும் அடித்தொண்டையில் இறங்கி வலியாகச் சுரித்தது. திரும்பிப் பார்த்தேன். சதக்கத்தும்மாவின் வீடு இருண்டு கிடந்தது. பெரிய படலை இப்போது ஒற்றைப் படலையாகி கிணற்றடிப் பக்கம் ஒரு மாற்றுக்கதவு போடப்பட்டிருந்தது. முன்னால் தொங்கிய குமிழ் பல்பில் மழை நீர்படாது கவிழ்த்த கோப்பை பறவை எச்சிலின் கனத்திற்கு உடைந்திருந்தது. நௌபலை ஊராருக்குத் தெரிந்ததெல்லாம் அவனொரு நல்ல நடிகனென்று தான். தன் மீது பரிதாபம் வரவேண்டுமென கோரமாகப் பாவமாக வெகுளியாக முகத்தை வைத்துக் கொள்வான். நடுவீதியில் குத்துக்கரணம் போடுவான். எங்காவது யாரோடாவது வம்பிழுத்து வந்து வாசலில் ஆட்களோடு நிற்பான். இன்றைக்கும் அப்படியாரோ விரட்டி வந்து சுட்ட மோட்டோடுகள் ரெண்டைத் தலையிலேயே டமாரென்று போட்டிருக்கிறார்கள். ரத்தம் வடிய வடிய பிளந்த தலையோடு நின்றவனை வெளியூர் மச்சான் வாசலிலேயே விரட்டவும் போக மறுத்து கூச்சல் போட்டபடியிருந்தான். பெரியப்பா நோய்வாய்ப்பட்டிருந்த போது ஒரு கால்துண்டு மீதமிருந்த நிலத்தை விற்றுத் தான் வைத்தியம் பார்த்தார்கள். அந்தத் துண்டையாவது நௌபலுக்குக் கொடுக்கலாமென்றிருந்தார். பெரியப்பா போனதும் நௌபல் வீட்டுப் பக்கமே போவதை நிறுத்தியிருந்தான். இப்போது ஓரிரண்டு நாளாகத் தான் ஒத்தாப்பில் படுத்திருந்தானாம்.

“ இந்த ஊராக்கள் ஒரு நியாயத்தச் சொல்லுங்கோ. இவன் இப்புடி வெறிச்சிக்கி அடிபுடிப் பட்டுக்கு நிண்டா சரி வருமா.? எனக்குப் பொம்புளப் புள்ளயளெல்லாமிருக்கிலுவொ..”. வெளியூர் வாடை அடித்தது.

ஊர்ப்பெரியவர்கள் நௌபலை ஆசுபத்திரிக்குக் கூட்டிப் போனார்கள். அவனை இனி வீட்டுப் பக்கம் போகாதே என எச்சரித்து விட்டார்கள். பெரியப்பா சீனடி செய்து காட்டிய மணலில் ஒரு நாய்ச்சண்டை ஓய்ந்திருந்தது. எனக்கு மணியின் ஞாபகம் வந்தது. மணி பெரியப்பா வளர்த்த ஆட்டுக் குட்டியின் பெயர். கறுத்த மேனியின் வெண்புள்ளிகளோடு பெரியப்பாவின் நெஞ்சில் உதைத்து நடக்கும். அதன் காதில் ஒரு துண்டு இல்லாமலிருந்தது. ஒரு நாள் வழக்கமான கூக்குரல் தான். பெரியப்பா ஓய்ந்து சாய்மனைக்குள் வைரமொடுங்கியிருந்தது. மணியை நாய் கொண்டு போனதிலிருந்து சதக்கத்தும்மா மன்சிலில் ஒரே கூச்சலும் குழப்பங்களும் அடிக்கடி வந்தன. சதக்கத்தும்மாவைக் கட்டிலில் கிடத்துவதையும் நௌபலின் தலையில் துணியைத் திணித்தபடி ஆட்டோவில் ஏற்றுவதையும் மணி, பெயர்த்த தகட்டுக் கதவோரம் துண்டு போன காதோடு பார்த்தபடி நின்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.