வாக்குமூலம் – அத்தியாயம் 3

அவள்

ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது. பாசமலர், பாலும் பழமும், பச்சை விளக்கு மாதிரியா இந்தக் காலத்துப் படங்கள் இருக்கு? அத்தை, மாமாவும் இதைத்தான் சொல்லுதாங்க. நான்தான் வெவரமில்லாதவ, கூறு இல்லாதவன்னா அவுக அப்பா, அம்மாவுமா அப்பிடி? அவுகளுக்கும் இந்தக் காலத்துப் படங்களைப் புடிக்கல. மாமா, “என்ன ஒரே அடிதடியாவே இருக்குது”ங்கிறாக. “எம்.ஜி.ஆர். பாட்டெல்லாம் கருத்தோட இருக்குமே. இப்பம் உள்ள பாட்டைக் கேக்க முடியலியே. என்ன பாடுதான்னே தெரியலியே”ன்னு அத்தை சொல்லுறது பொய்யா?

ஆனால் பிள்ளைகளுக்கெல்லாம் புடிச்சிருக்கு. அதுக நம்மளைக் கேலி பண்ணுதுங்க. சம்பந்த மூர்த்தி கோவில் தெருவுல சினிமாவுக்குப் போறதுன்னா வளவோட எல்லாரும் போவோம். சினிமாவுக்குப் போற அன்னைக்கு சீக்கிரமா தோசைக்கெல்லாம் அறச்சு வச்சிருவோம். ராயல்ல கல்யாணியின் கணவன், பாப்புலர்ல அவள், கனிமுத்துப் பாப்பா இதெல்லாம் வளவோட போய்ப் பார்த்த படங்கள்தான். படத்துக்குப் போயிட்டு வந்தா கார்சேரி ஆச்சிக்கு கதை சொல்லணும். வில்லன் வாற கட்டத்துல்ல ஆச்சி, வில்லனைப் பேதியில போவான், கரிமுடிஞ்சு போவான் என்று திட்டுவாள்.

கார்சேரி ஆச்சி வீட்டுல வச்சுதான் ஔவையார் கொழுக்கட்டை பண்ணுவோம். வடக்கு வளவு தங்கத்தக்கா, தெருவடி வீட்டு அருணாசலத்து அத்தை எல்லாரும் ஔவையார் கொழுக்கட்டை பண்ண வருவாங்க. சிவராத்திரி அன்னைக்கு எல்லாரும் வாசல்ல உக்காந்து சாப்புட்டுட்டு விடிய விடியத் தூங்காம கதை படிச்சுக்கிட்டு இருப்போம். காலையில ஆத்துக்கு வளவோட குளிக்கக் கெளம்பிருவோம். இந்த ஊருல ஔவையாரு ஏது, கொழுக்கட்டை ஏது? ஒரு வெள்ளி, செவ்வாய் கூட இல்லாமப் போச்சே. அடையாறு, கூவம்னு சொல்லுதாங்க. எலெக்ட்ரிக் ட்ரெயின்ல போகும்போது பார்த்தா சாக்கடையா ஓடுது. கொரவர் தெரு வாய்க்கால்ல சாக்கடை எல்லாம் விழுத மாதிரி, கூவத்துலயும் அடையாத்துலயும் ஊர்ச் சாக்கடை பூரா வந்து சேருது.

திருவிழாவுக்குச் சப்பரம் பார்க்கப் போனா, அம்மை, தார்சாவிலே எனக்கும், பாஞ்சாலி ஆச்சிக்கும் படுக்கை எல்லாம் எடுத்துப் போட்டிருப்பா. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரமா இருக்கும். பச்சை சாத்தி, வெள்ளை சாத்தின்னு பூ அலங்காரத்திலே அம்மனையும் சாமியையும் பாக்கப் பாக்க ஆச தீராது. சீனியிலே பாய், செப்பு சட்டி பானை எல்லாம் செஞ்சு வட்டச் சொளகில வச்சு விப்பாரு. அவ்வளவு ருசியா இருக்கும். அந்தக் காடா வெளக்கு வெளிச்சத்துலே அந்தச் சீனி மிட்டாயெல்லாம் மினுமினுக்கும். திருவிழாவும், சப்பரமும் பார்த்தே எத்தனையோ வருஷமாச்சு. இங்க அறுபத்து மூவர்னு சொல்லுதாங்க. ஆனா பார்க்கப் போகணும்னு தோணலை. கூட்டத்தை நெனச்சா பயமா இருக்கு.

திருநவேலியிலயும் கூட்டம் இருக்கும். ஆனா அந்தக் கூட்டத்தைப் பார்த்தாப் பயம் வராது. அது ஏன்னு தெரியலை. இவுக “எல்லாம் மனப் பிரமை”ன்னு சொல்லுதாங்க. ஒரு தடவை காஸினோ தியேட்டருக்கு இ.ட்டி.ன்னு ஒரு படம் பார்க்க வீட்டுல எல்லாரும் போனோம். ஏதோ வேத்து கெரகத்து ஆளு பூமிக்குத் தப்பி வந்துட்டுதாம். ரவியும், கீதாவும் அவங்க அப்பாவோட சேந்துக்கிட்டு படத்தை ஆஹா ஓஹோன்னாங்க. மாமா, படம் பரவாயில்லன்னாங்க. அத்தை ஒண்ணுமே சொல்லலை.

வீட்டுக்கு எல்லாப் பத்திரிகையும்தான் வருது. பெண்கள் பத்திரிகை எல்லாம் ரவியோட அப்பா வாங்கிப் போட்டுருவாங்க. ஆனந்த விகடன், குமுதமெல்லாம் ரொம்ப மாறிப்போச்சு. ஜெயகாந்தன் கதையெல்லாம் இல்லாமே விகடனைப் படிக்கவே முடியலை. இவுக படிக்கிற இங்கிலீஷ், தமிழ் இலக்கியப் பத்திரிகையெல்லாம் படிச்சா ஒண்ணும் வெளங்கவே மாட்டேங்குது. அவுஹ ரசனை வேற மாதிரி இருக்குது. அப்போ திருநெல்வேலியிலே இருந்த போதெல்லாம் அவுஹ இப்பிடி எல்லாம் மாறலை. இங்க மெட்ராஸுக்கு வந்த பெறகுதான் என்னென்ன பத்திரிகைகளோ, புஸ்தகங்களோ படிக்கிறாங்க. ப்ரெஞ்சு சினிமாங்கிறாஹ, ஜெர்மன் சினிமாங்கிறாஹ. வீட்டுக்கு ப்ரெண்ட்ஸ்கள் வந்தா மார்க்சியம் அது இதுன்னு என்னென்னமோ பேசுறாங்க.

நான் எங்கியோ ஒரு பக்கம் போனா, அவுஹ வேற எங்கியோ போற மாதிரி இருக்குது. ரெண்டு பேர் ஜாதகத்தையும் எடுத்துக்கிட்டு மாம்பலம் ஜோசியரைப் போய்ப் பார்த்தேன். என்னம்போ தெசா புத்தி சரியில்லைன்னாரு. ராகு காலத்துல துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்துல வெளக்குப் போடச் சொன்னாரு. ஒரு மண்டலம் மைலாப்பூர் கோயில்ல போயி வெளக்குப் போட்டேன். ஒழுங்கா வேலைக்கெல்லாம் போறாஹ. சம்பளத்தை எல்லாம் செலவுக்கு எடுத்துக்கிட்டு மிச்சத்தை ஒழுங்காத் தந்துருதாங்க. ஆனால் ரெண்டு பேரும் மனசுவிட்டு ஆற அமரப் பேசி ரொம்ப வருசமாயிட்டுது. சமையல் கட்டுதான் கதின்னு ஆயிப் போச்சு.

நாலு மாசத்துக்கு முன்னாலே திருநெல்வேலியிலே ஒரு கல்யாணம். குடும்பத்தோட எல்லோரும் போயிருந்தோம். அவுஹளுக்கு ரெண்டே ரெண்டு நாள்தான் லீவு. எனக்கு மெட்ராஸ் சடவு தீர ஒரு வாரமாவது ஊர்ல இருக்கணும் போல இருந்தது. “நீ வேணும்னா இருந்துட்டு வா”ன்னுதான் சொன்னாங்க. பிள்ளைகளுக்கும் படிப்பு இருக்குது. இனிமேல் ஊருக்கும் நமக்கும் உள்ள உறவு அவ்வளவுதான்னு நினைச்சுக்கிட்டு பொறப்பட்டுட்டேன்.

கல்யாணத்துக்கு வந்திருந்த சபாபதி சித்தப்பா மகளும் இதைத்தான் சொல்லுதா. அவ மன்னார்குடியிலே இருக்கா. “ஊருல வந்து மனசார ஒரு பத்து நாள் இருக்க முடியல அக்கா”ன்னு சொல்லுதாள். எல்லாப் பொம்பளைகளும் பொறியில மாட்டிக்கிட்ட மாதிரி, சொந்த பந்தத்தை எல்லாம் விட்டு குடும்பத்துக்குள்ள சிக்கிக் கொண்ட மாதிரிதான் இருக்குது. “காலையில அஞ்சு மணிக்கி அடுப்படிக்குள்ள போனா, ராத்திரி பத்து பத்தரை ஆயிருதுக்கா வெளியில வர” என்கிறாள் கலா. கலாவை பெரிய மாமா பையன் கல்யாணம் பண்ணிக்கிடணும்னு ஆசைப்பட்டான். ஆனால் மனுஷ வாழ்க்கையிலே நெனச்சதுல்லாமா நடந்துருது? கலாவுக்கு செம்பகம் பிள்ளைத் தெருவுல மாப்பிள்ளை பாத்து சபாபதி சித்தப்பா கட்டிக் குடுத்திட்டா. பெரிய மாமா பையனோட கலாவுக்கு கல்யாணம் ஆகியிருந்தா கலா சந்தோஷமா இருந்திருப்பாளோ என்னமோன்னு தோணும். கலாவைக் கல்யாணம் பண்ண முடியலைன்னதும் தூக்க மாத்திரிரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை பண்ணிக்கிட்டான்.

இந்த ஆம்பளைகளுக்குத்தான் காதல் அது இது எல்லாம் வருது. ஆசப்பட்டவ கெடைக்கலைன்னா எதுக்காக செத்துப் போகணும்? அப்பிடியே அவன் கலாவைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும் வேற என்ன புதுசாவா வாழ்ந்துறப் போறான்? அவன் ஏதாவது வேலைக்கிப் போயிருப்பான். இவ, கலா, சோத்தப் பொங்கிக்கிட்டும், இட்லிய அவிச்சுத் தட்டிக்கிட்டும்தான் காலத்தை ஓட்டியிருப்பா. புள்ளைகளப் பெத்திருப்பா. வேறென்னத்தைச் செஞ்சிருக்கப் போறா? பொம்பளைகளுக்கு வேற விமோசனம் ஏது? அடுப்படி, பிள்ளை பெத்துக்கிறது இதுதானே பொம்பளையோட வேலை.

இல்லேன்னா கோயில், சினிமா, இந்தக் காலத்துல டி.வி. பாக்கிறது. வேற என்ன இருக்குது? இவுஹளைப் பார்க்க வருகிறவங்க பெண்கள் சுதந்திரம், பெண்ணுரிமைன்னு ஏதேதோ சொல்வாங்க. மாம்பலத்திலேருந்து கௌஸல்யான்னு ஒரு பொண்ணு பேண்ட், சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு, ஜோல்னாப் பையைத் தொங்க விட்டுக்கிட்டு வரும். அவள் கவிதை எல்லாம் எழுதுதாளாம். “ஆன்ட்டி, ஆன்ட்டி”ன்னு அடுப்படிக்கே வந்து பேசிக்கிட்டு இருப்பா. அவளுக்கெல்லாம் வீட்டு வேலையே செய்யத் தெரியாதோன்னு தோணும். அவள் ஆபீஸிலே வேலை பார்க்கிறா. ஆனால், அவதான் வீட்டிலே எல்லா வேலையும் பார்ப்பாளாம். சமையல், துணி துவைக்கிறது எல்லாம் செஞ்சுட்டு ஆபீஸ் வேலையும் பார்க்கிறா. ஆச்சரியமாத்தான் இருந்தது. வேலைக்குப் போற பெண்களுக்குத்தான் கூடுதல் வேலைப் பளு.

“இல்ல ஆன்ட்டி… அதெல்லாம் ஒண்ணும் கஷ்டமா இல்ல.”

“உன்னோட வீட்டுக்காரர் கூடமாட உதவி செய்வாரா?”

“செய்யாமே என்ன? அவருக்குச் சமையல் கூடத் தெரியும் ஆன்ட்டி…”

“குடுத்து வச்சவம்மா நீ…”

“ஏன், சார் உங்களுக்கு உதவி எல்லாம் பண்ண மாட்டாரா?”

“நானும் அவங்ககிட்ட உதவி கேட்டதில்லை. அவங்களும் செஞ்சது இல்லை. அவங்க சமையல்ல உதவி எல்லாம் செய்கிறதை எங்க மாமாவும், அத்தையும் விரும்ப மாட்டாங்க.”

“ஏன் அவங்களுக்கு என்ன பிரச்சனை?”

“எங்க ஊரிலே புருஷனை வேலை வாங்கிப் பழக்கமில்லே…” என்றேன். கௌஸல்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“நான் சார் கிட்டே சொல்லி சமையல் செய்யச் சொல்லட்டுமா?” என்றாள். நான் சரி என்றும் சொல்லவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை.

சென்னையில் பிலிம் பெஸ்டிவல்னு சொன்னாங்க. ஒரு நாள் தேவி தியேட்டருக்கு “நீயும் வந்து பாரு”ன்னு என்னை ரவியோட அப்பா கூட்டிக்கிட்டு போனாங்க. அன்னைக்கி கௌஸல்யாவும் அவள் புருஷனும்கூட எங்ககூட வந்திருந்தாங்க. ‘டீச்சர்’னு ஏதோ பிரெஞ்சுப் படம். அது அம்மணக் குண்டிப் படம். பொம்பளை எல்லாம் துணி இல்லாமே வர்றா. எனக்கு ஒரே வெக்கமாப் போச்சு. இதை எல்லாம் எப்படி ஆணும், பொண்ணுமா உக்காந்து பார்க்கிறாங்கன்னு தோணிச்சு.

வீட்டுக்கு வந்தா அது ஆர்ட் படம்னு சொன்னாங்க. ‘ஆர்ட்’ன்னா என்னன்னு கேட்டேன். ‘கலைப் படம்’ன்னாங்க. “ஒடம்புல துணி இல்லாமே வாரதா கலைப் படம்”ன்னு கேட்டேன். “படம் பூராவுமா துணி இல்லாமே வர்றாங்க?”ன்னு திருப்பிக் கேட்டாங்க ரவியோட அப்பா. இனிமே அவுங்க இங்கிலீஷ் படத்துக்குக் கூப்பிட்டா போகிறதில்லைன்னு முடிவு பண்ணினேன்.

நான் ஏழாங் கிளாஸ் படிக்கும் போதுன்னு ஞாபகம். ரவியோட அப்பா வீட்டிலேயும், எங்க வீட்டிலேயும் சேர்ந்து பார்வதி டாக்கீஸிலே ‘கர்ணன்’ படம் பார்க்கப் போயிருந்தோம். எல்லாரும் படம் முடிஞ்சு அதைப் பத்திப் பேசிக்கிட்டே வீட்டுக்கு வந்தோம். எல்லாருக்கும் படம் ரொம்பப் புடிச்சிருந்தது. அப்படிப்பட்ட படமெல்லாம் பார்த்தவங்க, இந்த மாதிரி படத்தைப் போயி ஆர்ட் பிலிம், கலைப் படம்ன்னு சொல்றாங்களேன்னு தோணிச்சு. இவங்க ரொம்ப மாறிட்டாங்கன்னு பயமா இருந்தது. ரவியும், கீதாவும் இவங்களை மாதிரி ஆகிடக் கூடாதேன்னு பயமா இருந்தது. இங்லீஷ் பொஸ்தகம், இங்லீஷ் படம் எல்லாம் கெட்டது. நம்ம பிள்ளைகளுக்கு அதெல்லாம் பழக்கம் ஆகிரக்கூடாது. இவங்கள எப்பிடிக் காப்பாத்துறதுன்னு தெரியலை.

கீதாகூட தடிதடியா இங்லீஷ் பொஸ்தகமெல்லாம் படிக்கிறா. அதெல்லாம் ஆபாசக் கதைகளா இருக்குமோன்னு பயமா இருக்கு. நல்ல வேளையா ரவி பாடப் புஸ்தகத்தைத் தவிர வேற பத்திரிகை, கதைப் பொஸ்தகம் எதையும் படிக்கிறதில்லை. அவனுக்கு கிரிக்கெட்தான் வேணும். ஸ்கூல் விட்டு வந்து மட்டையைத் தூக்கிகிட்டு விளையாடக் கெளம்பிருவான்.

மாமா, அத்தையெல்லாம் நான் சின்னப் பிள்ளையா இருந்தபோது அடிக்கடி நெல்லையப்பர் கோவிலுக்குத்தான் போவாங்க. இங்கே மெட்ராஸுக்கு வந்த பிறகு எப்போ பார்த்தாலும் டி.வி.தான் பார்க்கிறாங்க. மெட்ராஸ் எல்லாரையும் மாத்திட்டுது.

(அளிக்கப்படும்)

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்வாக்குமூலம் – அத்தியாயம் 4 >>

One Reply to “வாக்குமூலம் – அத்தியாயம் 3”

  1. எல்லோருக்கும் கிடைப்பது போல தோணி , ரிச்சர்ட்ஸ் க்கும் அதே 20 அடி கிரிக்கெட் பிட்ச் தான், ஆனால் ஆட்டத்தின் போக்கையே அந்த 20 அடி பிச்சுக்குள் மாற்றும் கலை கொண்டவர்கள் இவர்கள் என்பர்.

    அது போலவே எல்லோருக்கும் உள்ளது போலவே அதே 247 தமிழ் எழுத்துக்கள் தான் வண்ண நிலவனுக்கும்,
    ஆனால் அந்த 247 ஐ வைத்துக் கொண்டே வாசிப்பவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றும் வித்தை கொண்டவராக வண்ண நிலவன் இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் சென்னை வாழ்க்கைக்கும் , இரண்டாம் நிலை , மூன்றாம் நிலை நகர வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளை, எதார்த்தங்களை , மன உணர்வுகளை உள்ளது உள்ளபடியே நம் மண்டைக்குள் ஏற்றுகிறார் வண்ண நிலவன்.
    ———–
    பேராசிரியர், கவிஞர், சிறுகதையாளர் சுடலைமணி அவர்கள் சொன்னது – “”எப்போதெல்லாம் தனக்கு ச் சொந்த ஊரான நெல்லையைத் தேடுகிறதோ, அப்போதெல்லாம் வண்ணதாசனின் “”நிலை”” (தேர் நிலை வந்து அடைதல்) கதையின் வரிகளை வாசிப்பேன், நெல்லைக்கு மனதளவில் போய் வந்த உணர்வு, திருப்தி கிடைக்கும்”” .

    இந்த அத்தியாயம் வாசிக்கையில் நெல்லைக்கு மனதளவில் மட்டுமல்ல, உடல் அளவிலும் போய் சுற்றி வந்த உணர்வு கிடைக்கும். அந்தளவு அற்புதமாக ஒவ்வொரு தெருவையும், கடையையும், வீட்டையும், வளவையும்
    வார்த்தைகளால் வீடியோவாகக் காட்டுகிறார் , ராமச்சந்திரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.