மணல் கூட ஒரு நாள் தீர்ந்து போகலாம்!

தமிழில்: கோரா

அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கை, மணல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக கடற்கரையில் மணல் அள்ளுதல் தடை உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு உறுப்பினர் நாடுகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

உலகம் விரைவில் மற்றொரு நெருக்கடியைச் சந்திக்கப் போகிறது,மணல் பற்றாக்குறை தான் அது.

உலகில் மிகவும் அதிகமாக அகற்றப்படும் திடப்பொருளாகவும் , உலகின் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் இயற்கை வளங்களில் நீருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் இருக்கும் மணலின் பயன்பாடு மொத்தத்தில் முறைப்படுத்தப் படாமலேயே இருந்து வருகிறது. இதனால் கடந்த பல நூறு ஆயிரம் ஆண்டுகளில் நிதானமான புவியியல் நடைமுறைகளால் உருவாக்கப்பட்டு வந்துள்ள மணல் வளம், இன்று ஈடு செய்து கொள்ளப் பட முடியாத அளவில் உற்பத்தி விகிதத்தை விட மிக அதிக வேகத்தில் நம்மால் நுகரப் பட்டு வருகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும்.

மணல் வளத்தின் கட்டுப்படுத்தப்படாத பயன்பாட்டால், கென்யாவில் அமைந்துள்ள ஐ. நா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP-United Nations Environment Programme) ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. “மணல் வளங்களின் மீதான ஆளுகையை மேம்படுத்தினால் மட்டுமே, சமூகங்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள முடியும் என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று UNEP-ன் பொருளாதாரப் பிரிவு அறிக்கையின் முன்னுரையில் அதன் நெறியாளரான ஷீலா அகர்வால்-கான் குறிப்பிட்டுள்ளார். “இப்போதே நடவடிக்கை எடுத்தால் கூட மணல் நெருக்கடியைத் தவிர்த்து விடலாம்” என்றும் கூறியுள்ளார்.

உலகளாவிய கண்ணாடி, கான்கிரீட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தயாரிப்புகளுக்கான மணல் பயன்பாடு கடந்த இரு தசாப்தங்களாக மும்மடங்கு உயர்ந்து ஆண்டுக்கு 50 பில்லியன் மெட்ரிக் டன் அளவை எட்டி இருக்கிறது. (தலைக்கு ஒருநாள் தேவைப்படும் மணல் 17 கிலோ கிராம்). இதனால் ஆறுகளும் கடலோரங்களும் பாதிக்கப்படுவதோடு சிறு தீவுகள் முற்றிலுமாக அழிந்து போயின என்று அறிக்கை கூறுகிறது.

ஏன் மணல் முக்கியத்துவம் பெறுகிறது?

மணல் உலகின் அதிகப் பயன்பாட்டுப் பொருட்களில் ஒன்றாகும். கான்கிரீட் கட்டுமானங்கள் மற்றும் கண்ணாடிச் சுவர்கள் எழுப்புதல் போன்ற அனைத்திற்கும் மணல் பயன்படுத்தப் படுகிறது. அதிகப் பயன்பாட்டால் ஆற்றுப்படுகை மற்றும் கடற்கரை மணல் முற்றிலுமாக அள்ளப் பட்டு ஒரு சூழல் நெருக்கடி உருவாகி இருக்கிறது.

சுற்றுச்சூழலை சீராக்குவதில் மணல் பெரும் பங்கேற்றுள்ளது- புயல் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பது, எண்ணற்ற உயிரினங்களின் வாழிடமாக இருப்பது மற்றும் மண் அரிப்பைத் தடுப்பது போன்ற அனைத்தும் சூழலுக்கு மணலின் கொடைகள்.

கட்டுப்பாடற்ற மணல் பயன்பாடு உயிரின வாழ்வியல் முக்கியத்துவம் கொண்ட (ecologically sensitive) தொகுதிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்கி பல்லுயிர் பெருக்க சிதைவுக்கு வழிவகுக்கும்.

UNEP அறிக்கை என்ன சொல்கிறது?

கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை, கடற்கரை மணல் அள்ளுதலுக்கு தடை போடுவது உட்பட்ட பல அவசர நடவடிக்கைகள் எடுத்து மணல் நெருக்கடி வராமல் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது.

22 அறிஞர்கள் தயாரித்த அறிக்கையின் UNEP ஒருங்கிணைப்பாளரான பாஸ்கல் பெடுஸி, ஏற்கனவே மிகு சுரண்டலின் (over-exploitation) தாக்கங்கள் உணரப்பட்டு விட்டன என்றுரைத்தார். தென் கிழக்கு ஆசியாவின் வெகு நீள நதியான மேக்கோங் நதியில் மணல் அள்ளுதல் காரணமாக கழிமுகம் தாழ்ந்து போனதால் வளம் மிக்க வயல்கள் உப்புத் தன்மை ஏறி பயனற்றுப் போயின.

ஸ்ரீலங்காவின் ஒரு ஆற்றில், மணல் அகற்றம் காரணமாக நீரோட்டம் எதிராக மாறிக் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததோடு கடல்வாழ் முதலைகளையும் உள்ளே கொண்டுவந்து விட்டன என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முடிவாக, கடலோரப் பகுதிகளில் மணல் அகற்றம், கடும் புயல் போன்ற காலநிலை மாற்றத் தாக்குதல்களால் வெகுவாகப் பாதிக்கப்படும் அளவுக்கு கடலோர நிலங்களை பலவீனப் படுத்திவிடும் என்று அறிக்கை கூறுகிறது.

மணல் எப்படி உருவாகிறது?

அமெரிக்க அரசு வணிகத் துறையின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆட்சியியல் (National Oceanic and Atmospheric Administration- NOAA) நிறுவனத்தின் கருத்து: ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக (மில்லியன்கள் கணக்கிலும் இருக்கலாம்) பாறைகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும்

சிதைவுகள் மற்றும் இயல்பான அரிமானங்கள் மணலை உருவாக்குகின்றன. படிகப் பாறைகள்(சிலிக்கா) மற்றும் களிமப் பாறைகள் (feldspar) உருக்குலைந்து மண்ணாக நெடுங்காலம் பிடிக்கும்.

பெரும்பாலும் ஆயிரக் கணக்கான மைல் தொலைவில் இருந்து இழுத்து வரப்படும் பாறைகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் மெதுவாக பயணித்து வழியெங்கும் உடைபட்டு மணலாகக் கடற்கரையை அடைகின்றன என்று NOAA கூறுகிறது.

பெரும்பாலான கடற்கரை மணல் கபில (மஞ்சள் கலந்த பழுப்பு) நிறத்தில் காணப்படுவதின் காரணம் அதிலுள்ள அயர்ன் ஆக்சைட் வேதிமமே என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

மேலும்: World Running Out Of Sand And UN Says It Is Pretty Concerning

One Reply to “மணல் கூட ஒரு நாள் தீர்ந்து போகலாம்!”

  1. No boundary for mens’ greed. It would be better if Govts come out with strict laws banning new constructions of all places of worship. The interested philanthropists may contribute in preserving existing ones. A very famous contemporary writer replied to a query that there was nothing wrong in breaking hills and mountains and that was how wonders of architecture emerged. However this is not a responsible statement. Sand and soil have quartz, moisture, clay etc. The monazite sands of Kerala are rich in Thorium. It is used as replacement for Uranium in reactors. Thus smuggling goes on. There are so many Thorium reactors now. Let us awake. The article is nice and timely.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.