பொற் தேவன்

This entry is part 4 of 9 in the series எங்கிருந்தோ

பொன்னம்பலத்தில் ஆடும் இறைவன், வடவாறு, வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து நதிகள் ஓடும் திருவையாற்றில் பஞ்சநதீஸ்வரராகத் திருக்கோலம் கொண்டுள்ளார்.

அதைப் போலவே ஜீலம், ஷட்லெஜ், ப்யாஸ், (வியாஸ்) ரவி, (ரபி) செனாப் என ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாபிற்கு, அதிலும் அமிர்த சரசிற்கு உங்களை வரவேற்கிறேன். இன்றைய பஞ்சாபில் ஷட்லெஜ், ப்யாஸ், (வியாஸ்) ரவி, (ரபி) மூன்று மட்டுமே பாய்கின்றன. தேசப் பிரிவினையின் போது நதிகளும்… அரசியலில்லை, ஆதங்கம் மட்டுமே.

ஆனால், அரசியலைப் பற்றி பேசலாம்; ஏனெனில் நான் பஞ்சாபை ஆண்டவள்; ஷேர்- இ- பஞ்சாப் (பஞ்சாபின் சிங்கம்) என்று புகழப்படும் மகாராஜா இரஞ்சித் சிங்கின் இருபதாவது மனைவி. என் பெயர் ஜிந்த் கௌர். அரும்பாடு பட்டு அவர் அமைத்த அரசு சிதறுண்டு போகாமலிருக்க நான் அரசியானேன்; என் திறனைக் கண்டு இராணுவத்தினர் அதற்கு அனுமதி அளித்தனர். முதற் செயலாக என் முக்காட்டைக் கழற்றினேன். ஆட்சி செய்யும் இராணியாக, மேம்பட்ட ‘கால்சா’ குழுவைக் கொண்டு வந்தேன். பொது நிர்வாகத்திற்கும், இராணுவத்திற்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கினேன். அரசவையில் ராஜபீடத்தில் அமர்ந்தேன். பொது மக்கள் அரசவைக்கு வந்து முறையிட அனுமதித்தேன். சட்ட முறைப்படி அவர்களின் குறைகளையும் போக்கினேன். இராணுவ வீரர்களிடமும். மக்களிடமும் நன் மதிப்பு பெற்றேன்.

இன்று இந்தப் பொற்கோயிலைப் பார்க்கையில் என்னுள் எத்தனை நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன. பதினாலாம் நாள் வளர்பிறை; காற்று வருடிச் செல்லும் குளம். அங்கே மனிதம், புனிதம் என்று சொல்வது போல் எழுந்து நிற்கும் பொற்கோயில். ஜாதி, மத, இன வேறுபாடில்லை. வணங்க வரும் அனைவரும் தலையினை சிறு துணியால் பிணைத்திருக்கின்றனர். நெற்றியின் உச்சியிலிருந்து முழுத் தலையை அணைத்துக் கொண்டு பின் கழுத்தின் தொடக்கத்தில் அந்தத் துணியை முடிச்சிடுவது எங்கள் வழக்கம். எங்கள் குருமார்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை அது.

‘பொன்னார் மேனியனே, புலித் தோலை அரைக்கசைத்து’ என்ற உங்கள் பாடலைக் கேட்டிருக்கிறேன். நிலவின் கரங்கள் தழுவும் பொற் கோபுரங்கள், அந்த நீரில் பிரதிபலித்து இன்னமும் அழகாகத் தெரிகின்றன. பொன் என்பதன் மயக்கத்தையும் மீறி ஆன்மீகம் பொலிகிறது. நிமிர்ந்த முதுகுடன் ஆசனத்தில் அமர்ந்து சிலையோ என வியக்கும் வண்ணம் ‘க்ரந்த சாகிப்’ நூலை குருமார்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘குருமுகி’ என்ற மொழியில் 5867 கீர்த்தனங்கள் உள்ள ‘குரு க்ரந்த் சாகிப்’ சீக்கியர்களின் மறை நூல். பத்து குரு மார்கள் உள்ள இந்த மார்க்கத்தில் 11-வதும், முதன்மையானதுமாக ‘குரு க்ரந்த் சாகிப்’ கருதப்படுகிறது.

குருமார்களின் பெயரை உங்களுக்காகச் சொல்கிறேன். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் குரு நானக். கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகின்றன. வீரம், விவேகம் இரண்டும் கண்கள். அவருக்குப் பிறகு வந்த குருமார்கள் அங்கத், அமர் தாஸ், ராம் தாஸ், அர்ஜுன், ஹர்கோவிந்த், ஹர் ராய், ஹர் க்ருஷன், தே(க்) பஹாதர்.

அம்ருத்சர் என்ற நகரை நிர்மாணித்தவர் குரு ராம்தாஸ். இந்தக் கோயிலை 1604-ம் வருடம் குளம் கூடிய குட்டித் தீவில் கட்டியவர் குரு அர்ஜுன்.

முழுதும் பளிங்குக் கற்கள்; எங்கள் புனித நூலின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ள, சித்திர வேலைப்பாடுகளும், தோரணங்களும், விதானங்களும் கொண்ட இரு அடுக்கு கோயில் இது. என் கணவர் 400 கிலோ தங்கத்தினை அளித்து மேல் பாதியைக் கட்டினார். தங்கம் என்றால் சுத்தத் தங்கம்- ஆம் 24 காரட்’ அதை தாமர இழைகளில் பதித்து முகடுகள் வேய்வார்கள். இந்தக் கோயிலுக்கு மற்றொரு பெயருமுண்டு ‘ஹர் மந்திர் சாகிப்’

எங்கள் கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும் எழில் நிறைந்தவை. வெளிப் பிரகாரத்தில் அமைந்துள்ள குரு பீடங்களில் சீக்கியர்கள் இசைக்குழுவாகக் கூடி கீதம் இசைக்கிறார்கள். மேல் மாடத்தில் நிலவும், பொன்னும், குருமுகி வாக்கியங்களும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருக்கின்றன.

எங்கள் ‘லங்கர்’ பற்றிச் சொல்லவில்லையே. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தவர் தான். ரோட்டியும், சப்ஜியும், அரிசிச் சோறும், கீர் என்ற பாயசமும் அனைவருக்குமே வழங்கப்படுகின்றன. மிகுந்த நியமத்துடன் உணவிடுவோம் நாங்கள். எவருக்கும் இல்லையெனச் சொன்னதில்லை. இப்படி உணவிடுவதைச் சிறப்பாக மேம்படுத்தியவர் எங்கள் மாதா கிவி. இவர் குரு அங்கத் தேவின் மனைவி. அன்னை சொன்ன மந்திரச் சொற்கள் இவை : “அன்னம் அனைவருக்குமானது. எந்த மனிதனுக்கும் உணவின் மீது தனி உரிமை கிடையாது. அது கடவுளுக்குச் சொந்தமானது.”

என் கணவரான இரஞ்சித் சிங் பற்றி எனக்கு மிகவும் பெருமிதம் உண்டு. நவ 13, 1780-ல் பிறந்த அவர் 27/06/1839-ல் மறைந்தார். அவர் சந்திக்காத போர்களில்லை. பத்து வயதில் தந்தையுடன் போர்க்களம் சென்றவர். தன் பதினேழாவது வயதில் ஆப்கானியர்களை வென்றவர். மிகப் புகழ் பெற்ற போர்கள் குஜராத், மற்றும் அம்ருத்சருக்காக நடந்தன.

சிறு வயதில் தாக்கிய பெரியம்மை நோயினால் ஒரு கண்ணில் பார்வை இழந்தவர். ஆனால் எவ்வளவு பரந்த சாம்ராஜ்யம் அமைத்தார் தெரியுமா? இன்றைய சீனாவின் எல்லை, இன்றைய இஸ்லாமிய ஆப்கன் எல்லை என அவர் அரசின் எல்லைகள் இருந்தன. 1799-ல் லாகூரை கைப்பற்றினார். அவர் ஆட்சியில் செல்வம் பெருகியது; மத நல்லிணக்கம் நிலவியது. படை வீரர்களில் பல இன, மத, மொழி பேசும் மக்கள் இருந்தனர். முதல் ஆங்லோ –சிக் போரில் கிழக்கிந்திய கம்பெனி வஞ்சகமாக வகுத்திருந்த ஒப்பந்தங்கள்- (லாகூர், பைரோவல் ஒப்பந்தங்கள்) எங்கள் பரந்த அரசைச் சுருக்கின.

மாவீரரான அவர் மாமனிதரும் கூட. தனக்கு ஷுஜா ஷா துர்ரானி பரிசாக அளித்த கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு அளித்தார். தேச பக்தியும், குடிமக்களின் பால் தீராத அன்பும் கொண்ட உயர்ந்த மனிதர். இன்றும் அவர் பெயரைச் சொன்னாலே கண்களில் நீர் ததும்ப, பயணிகளிடம் உணர்ச்சிகரமாகப் பேசிய ஒரு வழிகாட்டி நபரை நான் ‘கோவிந்த்ஹர் கோட்டையில்’ சந்தித்தேன்.

நீள் பெரும் சாலை வழியே ஆப்கானியர்களும், மற்ற சிறு குழுக்களும் அமிர்தசரஸ் நகரை அடிக்கடிச் சூழ்ந்து கொள்ளையடித்தனர். என் கணவர் கோவிந்தஹர் கோட்டையை பலப்படுத்தினார். முதலில் இதைக் கட்டியவர் குஜ்ஜார் சிங். 1000 மீட்டர் சுற்றளவுள்ள சதுர வடிவக் கோட்டை இது. ‘பாங்கியர்களின் கோட்டை’ என்று முன்னர் அழைக்கப்பட்ட இதற்கு எங்கள் 10வது குரு கோபிந்த் சிங் பெயரை வைத்தவர் என் கணவர். (ஊர்கள், தெருக்கள், போன்றவற்றின் பெயர்களை மாற்றுவது இந்திய இரத்தத்தில் உள்ளது.) 25 பீரங்கிகள் உள்ள இந்தக் கோட்டை 1805 முதல் 1947 வரை ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்தது.

என் கணவர் பாங்கியர்களை வென்று கைப்பற்றிய கோட்டையின் உள் அரங்கத்தில், படை வீடுகளையும், அதன் பாதுகாப்பில் எங்கள் கருவூலத்தையும் அமைத்தார். முதலில் மண் கட்டுமானமாக இருந்த கோட்டையை செங்கற்களும், சுண்ணாம்பும் கொண்டு இராணுவக் கேந்திரமாக மாற்றினார். கோட்டையைச் சுற்றியும், உட்பகுதியிலும் பாதுகாப்பிற்கென 2000 வீர்ர்கள் தங்கியிருந்தனர். அனைவருக்கும், உணவு, வசிக்குமிடம் என்ற அனைத்தையுமே பார்த்துப் பார்த்துச் செய்தார். ஃப்ரெஞ்ச் தேசத்தின் இராணுவக் கட்டுமானங்களின் அமைப்பை மாதிரியெனக் கொண்டு அவர்களில் சிலரை இந்தப் பணியில் ஈடுபடுத்தி வலுவான ஒன்றாக்கினார். லாகூருக்குச் செல்ல சுரங்க வழிப் பாதையும் கட்டினார். இராணுவக் கோட்டை என்ற போதிலும், சுழன்றேறும் பாதைகளும், ஒரு கோட்டைக்குள்ளே மூன்றை இணைத்த விதமும், உயரமான கண்காணிப்பு கோபுரமும் அழகியலையும், அறத்தையும் உணர்த்துபவை. இக்கோட்டையில் ‘ஜம்ஜமா’ என்ற பெரிய பீரங்கி இருந்தது. தற்போது லாகூர் அருங்காட்சி வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வழிகாட்டி சுற்றுலா பயணிகளை, அதிலும் இந்த வரலாற்றில் ஆர்வம் காட்டியவரை, தன் வீட்டிற்கு உணவருந்த அழைத்தபோது நான் அன்னை கிவியை மனதால் வணங்கினேன். எங்கள் குருதியில் கலந்துள்ளதை எந்த சீக்கியன் மறப்பான்?

நமது நாடாளுமன்றத்தில் 22 அடி வெண்கலச் சிலையாக மகாராஜா இரஞ்சித் சிங் நிற்கிறார். ஃப்ரெஞ்ச் அரசு புனித ட்ரோபேயில் வெண்கலத்தில் கழுத்து வரையிலான சிலையை வைத்துள்ளது.

‘புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்’ திருக்குறள்.

Series Navigation<< காலக் கணிதம்தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.