பெண்களும் கற்புப் பூட்டும்

மனிதனுடைய வரலாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதில் ஏடு அறிந்ததும், ஏடு அறியாததும் என பொதுவாக ஆராயப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் உண்மைகளுடன் புனைவுகளும் சேர்ந்தே பதியப்படுகிறது. இங்கு உண்மை, புனைவு என்பதை பகுத்தறியும் ஆற்றல் கொண்டவர்களால் தொடர்ந்த தேடலில் இனம் காணக்கூடியதாகவே இருக்கும். எனினும் ஏடறிந்த வரலாற்றின்படி உலகலாவிய ரீதியில் முதலில் தோன்றிய ஒடுக்குமுறை பெண்கள் மீதே என்பது யாவரும் அறிந்ததே.

மேலைநாடுகளில் சூனியக்காரிகளின் வேட்டைக்கு முன்பே கற்புபெல்ட் என்ற புனைவு தொடங்கியுள்ளது எனலாம். சூனியக்காரிகள் பற்றி கூறும்போது அவர்கள் பாலியல்வேட்கை உடையவர்கள் எனவும், பிசாசுடன் பாலியல் உறவுகளை கொண்டவர்கள் எனவும் புனையப்பட்டது. “கற்பு பெல்ட்” (Chastity belt) என்பதும் அவ்வாறே புனைவுகளுடன் பிணைந்து உள்ளது என கூறப்படுகிறது. தடித்த உலோகத்தாலான உள்ளாடைகள். பூட்டுகளினால் பிணைக்கப்பட்டிருக்கும். இது பெண்களது பாலியல் தூய்மையை(chastity) பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வகையான கட்டுக்கதைகளை உற்று பார்க்கும்போது பெண்களது பாலியல் குறித்து பொதுவாக ஆணாதிக்க சமூகத்தில் உள்ள ஆண்கள் பொறாமை, சந்தேகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அதனால் தமது அதிகாரத்தை கொண்டு பெண்களை கட்டுப்படுத்த முனைகிறார்கள் எனலாம்.

‘கற்பு’ என்ற சொல் புராண இலக்கியங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும் இன்று வழக்கொழிந்த பதமேயாகும். இது பாலியல் ஒழுக்கம், பாலியல் தூய்மை, என பலவாறு கூறப்படுகிறது. ஆயினும் இந்த பாலியல் ஒழுக்கம் பெண்களுக்கு மட்டுமே உரியது என்பதாகவே ஆண்மைய கருத்தியல் வலியுறுத்துவதை காணலாம். அத்துடன் பெண்களுடைய பாலியலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே விரும்புகிறார்கள். இதனை பாரதியார் “கற்பு நிலை என சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் பொதுவில் வை” என கூறுவதன் அர்த்தம் பாலியல் ஒழுக்கம் என்பது என்பது உடல் சார்ந்த விடயம் இல்லை. அது உளம் சார்ந்த விடயம். ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவாக இருத்தல் அவசியம் என்கிறார்.

கற்புபெல்ட் என்பது உலோகத்தினால் ஆன உள்ளாடையாகும். பெண்களது பாலியல் உறுப்பான யோனியை மறைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்கு பூட்டும் சாவியும் உள்ளது. இது பல்வேறு வடிவங்களில் உள்ளது. அவற்றில் சில சிறுநீர், மலம் கழிப்பதற்கு ஏற்பவும் வடிவமைத்துள்ளது. இவை வரலாற்றின் இடைக்காலத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை பாதுகாக்க பயன்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்த பெண்கள் தங்கள் கணவரின் அனுமதியின்றி உடலுறவு கொள்ள முடியாது.

இத்தகைய கற்பு பெல்ட் வரலாற்றில் உண்மையா? புனைவுடன் ஆன கட்டுக்கதையா என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் கருத்துகளின்படி உண்மையில் உலோகத்தாலான கற்புபெல்ட் இருந்ததற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன. அத்துடன் இதனை பயன்படுத்தும் பெண்களுக்கு உடல்நல அபாயம் கொண்டது. சில நாட்களில் பாதிக்கப்பட்ட தோல் காயங்கள், யோனி குத தொற்றுநோய்கள் ஏற்படுத்தி இறுதியில் மரணமும் சம்பவிக்கலாம். ஆதலால் உலோகத்தாலான கற்புபெல்ட் என்பது முற்றும் முழுதாக புனைவு என்பதாகவே இருந்துள்ளது என குறிப்பிடுகின்றனர்.

ஜேர்மன் இராணுவ பொறியியலாளர் Konrad Kyeser என்பவர் ‘Billifortis’ என்ற படைப்பில் இராணுவ தொழில்நுட்ப இயந்திரங்கள், ஆயுதங்கள், கருவிகள் குறித்து தாக்குதல், பாதுகாப்பு நுட்பங்கள் சித்திரவதை பற்றிய விளக்கப்படங்களை வரைந்திருந்தார். அந்த வரைபடங்களில் கற்புபெல்ட்டின் வரைபடமும் 1405ல் முதன் முதலில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவை அவரது நகைச்சுவையே என்றும் அறியப்படுகிறது. ஆனால் Konrad Kyeser இன் வரைபடம் Gottigen பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக ‘கற்பு பெல்ட்’ என்பது கிரீக் மித் எனறே கருதப்படுகிறது. இதன் கட்டுக்கதைகள் பலவாறு உள்ளது. சிலுவைப்போரில் ஆர்வம் கொண்ட ஆண்கள் போவதற்கு முன்பு தங்கள் மனைவியரை கற்புபெல்ட்டில் பூட்டி வைத்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த சிலுவைப்போரானது நீண்ட காலங்களைக் கொண்டிருக்கும். பெண்கள் தமது பாலியல் விருப்பங்களை அடக்கி வைத்திருக்கும் தன்மை அற்றவர்கள் என்ற ஆண்மைய கருத்துக்களை அன்றைய சமூகத்தினர் கொண்டிருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய கட்டுக்கதைகள் கத்தோலிக்க மத திருச்சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏனெனில் பெண்களை ஏமாற்றுவது பாவமாக கருதப்பட்டது. அக்காலத்தில் வழக்கமாக ஏமாற்றப்படும் பெண்கள் கொல்லப்படுவார்கள். மோசடி செய்யும் ஆண்கள் தப்பிவிடுவார்கள். பெண்கள் பாலியல் ரீதியில் வன்கொடுமைக்கு உள்ளாகாமல் கற்புபெல்ட் பாதுகாப்பு அளிக்கும் என நம்பினார்கள். அதேபோல் ஆண்களுக்கும் இந்த கற்புபெல்ட் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது அவர்களது ஆண்மையைக் குறைக்கும், மனச்சோர்வை உண்டாக்கும், குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும், இன்னும்பிற நம்பிக்கைகள் கட்டுக்கதைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஆகும்.

கற்பு பெல்ட் ஒரு கட்டுக்கதை எனின் இன்னும் ஏன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது ?

கற்பு பெல்ட் பற்றிய கட்டுக்கதைகள் பெருமளவில் பெண்களை மையமாக வைத்தே உருவகம் செய்யப்பட்டது. இந்த கற்பு பெல்ட், பிரித்தானியாவின் லண்டனிலும், பிரான்சில் Musée de Cluny என்ற இடத்திலும் வேறு சில நாடுகளிலும் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில லண்டனில் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட காட்சியில் இடைக்கால கற்புப்பட்டி அகற்றப்பட்டதாகவும் அறியப்படுகிறது. ஏனெனில் அது போலியான ஆவணம் எனக் கருதப்பட்டமையே ஆகும். இதனை இடைக்கால்ம் பற்றிய தவறான கருத்துக்கள்( Misconception about middle age) என்கிற நூல் விவரிப்பதாக உள்ளது. இவை இடைக்காலத்து கலைப்படைப்பாக கருதப்படுகிறது. எனினும் அவை நவீனமானவையாக இருந்தன. பிரான்சில் காணப்பட்ட கற்புபெல்ட உலோகப் பரிசோதனையிற்கு உட்படுத்தபோது அவை 19 ம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரியதாக காணப்பட்டது என ஒரு தகவல் அறிய முடிகிறது. வேறுசில தகவலின்படி ஆரம்ப கற்புபெல்ட் பண்டைய ரோமில் இருந்து வந்தவை எனவும், அவை உலோகக் கலவையற்ற எளிய முடிச்சுக்களை கொண்டது எனவும் கூறப்படுகிறது.

வரலாற்று ஆசிரியர் Sarah pond “கற்பு பெல்ட்” பற்றி ரோமானிய காலத்து வேர்களை ஆராய்ந்தபோது, பழமையான சடங்காக திருமணத்திற்கு முன்பு ரோமானிய மணப்பெண் tunica rectangles என்ற துணியை அணிந்திருந்தார்கள். அதன் வெள்ளை நிறம் தூய்மையைக் குறிக்கிறது. சிலர் காவிநிறமும் அணிவர். அத்துடன் ருனிகாவிற்கு மேலாக zona or Cingular எனும் கவ்விப்பிடிக்கும் ஆடையையும் அணிந்தார்கள். இந்த cord பெல்ட் மணமகளின் கற்பைக் குறிக்கிறது. அதிலுள்ள (Herculea knots)முடிச்சுகளை கணவர் பின்னர் அவிழ்த்துவிடுவார். ஆண்களும் முடிச்சுப்பட்டி அணிந்திருப்பார்கள். ஆரம்ப மற்றும் இடைக்காலங்களில் (meadivale) முடிச்சு பெல்ட் பெண்களின் அடக்கத்தையும், பாலியல் ஒழுக்கத்தையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அந்த முடிச்சு ஆடையின் மடிப்புக்களை உயர்த்தி பிடித்தவாறு இருப்பதனால் அது இடுப்பை அழகாக காட்டுவதாக கூறப்படுகிறது . ரோமானிய காலத்தில் சிக்கலான முடிச்சுகளை கொண்ட பழமையான உடைகளுக்கான வழக்காக இருந்துள்ளது. ஆனால் அது உலோகத்தால் ஆனது என்பது பொருத்தமற்றதாக உள்ளது என்கிறார்.

20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மானடவியலாளரான எரிக் ஜான் டிங்வால் (Eric John Dingwall) எழுதிய நூலில் “The gridle of chastity belt” அறிவொளி காலத்திற்கு (Renaissance) முந்திய பின்தங்கிய இருண்டகாலத்து(Dark age) காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்துவதாக கூறுகிறார். ஆதலால் கற்புபெல்ட் பற்றிய கருத்தியல் புனைவானது 18ம்,19ம் நூற்றாண்டிலேயே பிரபல்யமானது என கூறுகிறார்கள். இப்போ இருண்டகாலத்திற்கு ஒரு சிறிய பார்வையை செலுத்துவோம்.

பொதுவாக ஐரோப்பிய வரலாற்று காலகட்டங்களை ஐந்து கட்டங்களாக பார்க்கப்படுகிறது. அவை

  • இருண்டகாலம் (Dark Age period) 5,6 —- 11,12 நூற்றாண்டு
  • மறுமலர்ச்சிக்காலம் ( Renaissance) 13 ——- 14
  • அறிவொளிகாலம் (Enlightenment )17 ——— 18
  • கைத்தொழில் மயமான காலம் (Industrial Revolution ) 18 ——- 19
  • ஜனநாயக புரட்சிக்காலம் (Democracy ) 19 —- 20, 21

இருண்டகாலம் என்பது வளர்ச்சி அடையாத நிலப்பிரபுத்துவ காலகட்டம் எனலாம். மனித வரலாறு மதத்தோடு பிணைந்திருந்தது. கிறிஸ்தவம் சட்டபூர்வ மயப்பட்டதாக இருந்தது. சமூகம் மதத்தால் ஆளப்பட்டது. சமூகத்தின் மீதான செல்வாக்கு கத்தோலிக்க திருச்சபையிடம் இருந்தது. விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி அற்றதாகவே இருந்தது. பைபில் இருந்தபடி உலகம் தட்டையானது என்றே நம்பப்பட்டது. உலகம் உருண்டை என கண்டுபிடித்தவர்கள் தண்டனைக்கு உள்ளான காலகட்டமாக இருந்தது. இங்கு மக்கள் சிலுவையை ஏந்திய வண்ணம் மற்றைய மதத்தவருடன் போருக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையே சிலுவைப்போர் என அழைப்பர். இது ரோமில்(இத்தாலி) இருந்து யேசுநாதர் பிறந்த இடமான பாலஸ்தீனம் வரை எனவும் தகவல் அறியப்படுகிறது. சமூக அமைப்பின் குடும்பத்தில் பெண்களது நிலைமை மதத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஆதாமுக்காகவே ஏவால் படைக்கப்பட்டாள் என்ற நம்பிக்கை வலுவாக நம்பப்பட்டது. பெண்களை பற்றிய மிக மோசமான அடிமைத்தனங்கள் பின்பற்றப்பட்டது எனலாம்.

கற்புபெல்ட் குறித்த புனைவுகள் இன்று புத்தகங்களிலும், திரைப்படங்களிலுமே அதிகமாக பேசப்படுகின்றன. “Robin Hood”, “Man in Tight” ஆகிய திரைப்படங்களில் இதனைக் காணக்கூடியதாக உள்ளது.

University of Arizona இடைக்கால ஆய்வாளர், அறிஞர் ஆல்பிரெக் கிளாசன் (Albrecht Classen) என்பவர், தமது நூலில் ‘The medieval chastity belt: A myth – making process’ஆண்களிடம் காணப்படும் பாலியல் ரீதியான தாழ்வுச்சிக்கலே நகைச்சுவையாக வெளிப்படுகிறது என்கிறார். வளர்ச்சியடையாத இருண்டகால அடக்குமுறைக்கான கற்பனையான உருவகமே கற்புபெல்ட் ஆகும். இதனை சித்திரவதைக்கான அதி பயங்கர கருவியாக காட்ட முனைந்தனர். எனினும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் பற்றாக்குறையாக உள்ளது எனவும் கூறுகிறார். இடைக்காலத்தைப் பற்றியோ கலாச்சார வரலாற்றின் வேறு எந்த கட்டத்தைப் பற்றியோ நாம் தெரிந்து கொள்வதற்காக பெரும்பாலும் epistemological filters அறிவியல் வடிகட்டல்களையே பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அதன் பின்னர் உள்ள யதார்த்தத்தை மாற்றியமைத்து தெரிவிக்கின்றன. எனவே உண்மையான புரிதலுக்கு உன்னிப்பான பகுப்பாய்வுகள் தேவை என்கிறார்.

Kyeser இன் கருத்துப்படி 1405 ல் Florence முதலில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு பெண்ணின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த பயன்படும் எனவும் குறிப்பிடப்பட்டது. பின்னர் இது நகைசுவையாக வரையப்பட்டது என அறிய முடிகிறது. ஆனால் உண்மையில் வரலாற்று ரீதியில் முக்கியமான எழுத்துகளிலோ கலைப்படைப்புகளிலோ(serious texts or art work) காணப்படவில்லை. ஆனால் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் வந்த நகைச்சுவை எழுத்தாளர்களின் எழுத்துகளில் காணப்படுகிறது. ஆண்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்கள் மீது அவர்களது பாலுணர்வை கட்டுப்படுத்த பயன்படுத்தினார்கள் எனக் கூறப்படுகிறது.

19ம் நூற்றாண்டில் அறிவார்ந்த(Scholr) மற்றும் சில சாதாரண படைப்புகளின் ஆசிரியர்கள் கற்புபெல்ட் பற்றி கொடூரமானதாக கருத தொடங்கினர். இதனால் கற்புபெல்ட்டின் கருப்பொருள் முக்கியத்துவம் பெற்றது. ஐரோப்பா முழுவதும் மிகவும் பிரபல்யமான இடைக்கால சித்தரவதை அருங்காட்சியகம் நிறுவப்பட்ட காலமும் இதுவேயாகும். பெரும்பாலும் அக்காலத்தில் நவீனமான பொருட்களே வழங்கப்பட்டது.

‘The medieval chastity belt: A myth – making process என்ற நூல் 2007 ல் வெளிவந்தது. அதற்கு முன்னர் பெரும்பாலான அறிஞர்களும் கற்பு பெல்ட் இடைக்காலத்தில் இருந்ததாகவும் சிலுவைப்போர் மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகளுக்கு புறப்படுபவர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். பாலியல் வரலாற்றில் அக்கறை கொண்டவர்களில் பெரும்பாலானோர் கடந்தகாலத்தில் இருந்த கட்டுக்கதைகளை நம்பினார்கள்.

15ம் நூற்றாண்டு புரளியாக இருந்தது. பின்னர் 19ம் நூற்றாண்டு வரலாற்று அருங்காட்சியகங்களின் புரளியாக மாறியது. இடைக்காலத்தைப் பற்றி நமது அறிவு தவறான கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டது. பூமி தட்டையானது என்பது இடைக்காலத்து மக்களால் நம்பப்பட்டது. ஆனால் அது ஒரு அனுமானமே ஆகும். உண்மைக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை. அக்காலத்தில் பிரபல்யமான கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தியது எனலாம். ஆனால் அந்த அனுமானம் நிறுவப்பட்டவில்லை. இவ்வாறு அல்பிரேக் கிளாசன் தமது ஆய்வின் முடிவுகளை வெளிப்படுத்துகிறார்.

கற்பு பெல்ட் என்னும் கருத்தாக்கத்தை மேற்கூறப்பட்டவாறு மானிடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் போன்றோர் போதிய ஆதாரங்களும், சான்றுகளும் இல்லை என்பதால் இதனை புனைவு என்றே கூறுகின்கிறார்கள். இது இருண்டகாலத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாகவே உள்ளது. பெண்கள், தமது கணவர்களை தவிர வேறு ஆண்களுடன் பாலியல் உறவு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு பின்பற்றப்பட்டதால் அதன் வெளிப்பாடாக இத்தகைய சித்திரவதை சாதனம் கற்பனை வடிவமாக உருவகம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் கூறுகின்றனர். கற்புபெல்ட் என்பது ஐதீகமாக ரோமில் இருந்திருக்கலாம். ஆனால் உலோகத்தாலானது என்பதற்கு போதிய ஆதாரங்கள் ஊடாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறு ஐரோப்பிய வரலாறு பாலியல் ஒழுக்கம் பற்றி கூறினாலும் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் பாலியல்ஒழுக்கம் பெண்களுகே உரியது என்ற ஐதீகம் இன்றுவரை உயிருடனே வாழ்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.

சில சமூகங்களில் திருமணத்தின் முதல்நாள் அவர்களது படுக்கை வெள்ளை பெட்சீட் விரிப்புகளை கொண்டதாக இருக்கும். அடுத்தநாள் படுக்கை விரிப்பில் இரத்தக்கறை இருந்தால் மணப்பெண் (vergin) தூய்மை உடையவராக கருதப்படுகிறது. இதேபோல் ஆபிரிக்க சமூகங்களில் கத்தம் என்ற நிகழ்வும் பெண்களது தூய்மை என்ற புனைவை வைத்தே நிகழ்த்தப்படுகிறது. இதன்போது பெண்ணின் யோனியை பகுதியாக தைத்து விடுவதும், திருமணத்திற்கு முன்பு அவிழ்ப்பதுமானதாகும். இவற்றை பார்க்கும்போது இந்த ‘கற்புபெல்ட்’ பெண்களை சித்திரவதை பண்ணுவதற்கு பயன்படுத்தியிருப்பார்கள் என்று கூறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. பெண் உடலின் பாலியலை ஆண்மைய சமூகம் எவ்வாறு மிருகத்தனமாக கட்டுப்படுத்த பொய்களினாலான புனைவுகளை உருவாக்கி அதனை கட்டியும்காக்கிறது என்பது புலப்படும். உலோகத்தாலான கற்பு பெல்ட் என்பது புனைவு என்று சொல்லப்பட்டாலும் பெண்கள் மீது அழுத்தம் கொடுக்கும் பாலியல் ஒழுக்கம் பற்றிய புனைவு உலோகத்தைவிட உறுதியாகவே ஒடுக்குகிறது என்பது உண்மையிலும் உண்மையே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.