
நிலை
எண்ணிலடங்கா
அர்த்தம் கொள்வதை
என்னைப் போல்
ஒரு பித்தனிடம்
ஒப்படைத்துவிட்டேன்
இத்துயரத்தையும் சேர்த்து
மரணத்திற்கு நிகரான
பயணத்தை மேற்கொள்கிறேன்
யாருடைய கட்டுப்பாட்டிலும்
இல்லாத வாழ்க்கையில்
புகுந்துகொண்டு
வெளிவர முடியாமல்
தவிக்கிறேன்
எதுவும் இல்லை
என்பது அறியாமை
அது எதிரொலிக்கிறது
எனக்குப் புரிந்தது போக
இன்னும் இருக்கிறது
என்னைப் பலவீனமாகவும்
முழு மனிதனாகவும்
அடையாளம் காண்கிறேன்
நானே என்னை
யாருக்கும் தெரியாமல்
மறைத்து வைக்கிறேன்
என் கண்கள் மட்டும்
அனைத்தையும் பார்க்கத்
தற்சமயம் நான்
உயிருடன் இல்லை
ரகசியம்
அது புதைக்கப்பட்டிருக்கிறது
யாருக்கோ தெரிந்திருக்கிறது
நீட்டி முழக்கி
எழுதப்பட்ட ஆவணத்திலும்
அதன் பயங்கர பயணம்
தெரிந்ததே ஒழிய
விடை ஏதும் காணவில்லை
ஓராயிரம் முறை ஆடினாலும்
ஒரே ஆட்டம் இன்னொருமுறை
ஆடப்படுவதில்லை
இவ்வளவு பெரிய பிரபஞ்சம்
உருவாதற்குக் காரணமே
அது ரகசியமாக
இருப்பதினால் தான்
உச்சத்தில் இருக்கும்
ஏதுவொன்றும்
தோற்றுப்போவது
அது இல்லாமல்
இருப்பதினால் தான்
கடைசிவரை அது
அதுவாகவே இருக்கிறது
அது
தெரிந்ததும்
தெரியாதது
ஒரே பாதையில்
இருக்கிறது
ஒரு கட்டத்தில்
கைகூடும்
வேளையில்
அனைத்தும்
உதிர்ந்து
போகின்றன
மிச்சத்தில்
எதுவோ
அதுவே
அது
அவன்
கட்டிப் போட்டிருக்கும்
உன்னை நீ
விடுவித்துக் கொள்
அப்படி நீ
திரியும் போது
உனக்கு எந்த
பாதுகாப்பும் இல்லை
உனக்கான
அறுவை சிகிச்சையை
நீயே மேற்கொள்ள வேண்டும்
சரி தவறு என்பது
நடை முறையில்
தெரியவரும் போது
இந்த உலகத்திடம்
இருந்து கைவிடப்பட்ட
மனிதனாய் இருக்கிறாய்
நீ மீதியாய் மற்றும்
தொடங்கும்
ஒருவனைப் போல்