புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19

This entry is part 19 of 23 in the series புவிச் சூடேற்றம்

சிலர், மரம் வளர்த்தால், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்கள். இன்னும் சிலர், கார்கள், லாரிகள் குறைந்தால், காற்று மாசும் குறையும், புவி சூடேற்றமும் சரியாகிவிடும் என்கிறார்கள். இன்னும் சிலர், இதோ, காற்றில் உள்ள கரியமில வாயுவை ஒரு எந்திரத்தைக் கொண்டு சரி செய்யலாம் என்கிறார்கள். பில் கேட்ஸ், மரங்களின் ஒளிச்சேர்கையை துரிதப்படுத்தினால், எல்லாம் சரியாகிவிடும் என்கிறார். இன்னும் சில ஆர்வலர்கள், சூரிய பலகம் எல்லாவற்றையும் சரி செய்து விடும். சூரிய ஒளியை மின்சாரமாக்கும் மின்கலன்களின் செயல்திறன் கூடியுள்ளது. அதைப் பயன்படுத்தினாலே இந்தப் பிர்ச்சினையை தீர்க்க முடியும் என்றும் சொல்கிறார்கள்.

தலை சுற்றுகிறது அல்லவா?

ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

  1. எந்த ஒரு தீர்வும் இந்தப் பிரச்சினையைத் முழுவதும் தீர்க்கப் போவதில்லை. இந்த ராட்சச பிரச்சினையை, பல தீர்வுகள் கொண்டே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்
  2. சில தீர்வுகள், உடனே பயனளிக்கும் (பைக்கைத் துறந்து சைக்கிள்), மற்றவை சில ஆண்டுகளுக்குப் பிறகு பயனளிக்கும் (மரங்கள்).
  3. சில தீர்வுகள், மிகவும் அதிகமாக செலவாகும், மற்ற சில தீர்வுகள் எளிமையாக அனைவருக்கும் பொருந்தும்.
  4. இந்தியா போன்ற நாடுகள், முதலீடுக்கு எங்களிடம் பணமில்லை என்று சொல்லி பல தீர்வுகளை புறக்கணிக்கக் கூடும். இது போன்ற நாடுகளுக்கு எதில் முதலீடு செய்தால், எப்பொழுது என்ன பயன் விளைவிக்கும் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
  5. ஏன் ஒரு பிரச்சினை உருவானது என்பதைப் புரிந்து கொண்டாலே, அதைத் தீர்க்க முடியும்.

ஆக, இந்தப் பகுதியில், மிகச் சுருக்கமாக, எப்படி இந்தப் பிரச்சினையில் மனிதகுலம் மாட்டிக் கொண்டு விட்டது என்பதைப் புள்ளி விவரங்களோடு பார்ப்போம். அதன் பின், எந்தத் தீர்வுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பார்ப்போம். ஒன்று மட்டும் நிச்சயம். இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும், ஏதோ ஒரு விஷயத்தில், உங்களது புரிதல், முற்றிலும் ஒரு புதிய பாதையில் பயணிக்கும். இது என் உத்தரவாதம்.

எப்படி மாட்டிக் கொண்டோம்?

  • நம்முடைய மூதாதையினர், தங்களுடைய நடவடிக்கைகளால், சின்ன சின்ன சுற்றுச்சூழல் மாறுதல்களை தங்களுடைய குறுகிய சுற்று வட்டாரத்தில் உருவாக்கினர்
  • கடந்த 200 ஆண்டுகளாக, நம்முடைய நடவடிக்கைகள், சுற்று வட்டாரத்திலிருந்து, உலகளவில் சுற்றுச்சூழல் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கியது
  • இன்று, உலகில் 7.5 பில்லியன் மனிதர்கள் வசிக்கிறோம். அதில் 50% மனிதர்கள், நகரங்களில் வசிக்கிறார்கள்
  • கடந்த 50 வருடங்களில், உலகின் மக்கட்தொகை இரட்டிப்பானது. உலகின் பொருளாதாரத்தில் அளவு 5.5 மடங்கு அதிகரித்தது. இரட்டிப்பு மனிதர்களுக்கு 5.5 மடங்கு பொருளாதார வளர்ச்சி!
  • கடந்த 50 ஆண்டுகளில், நமது தண்ணீர் தேவை 1.8 முறை அதிகமானது, தொல்லெச்ச எரிபொருள் தேவை 2.8 முறை அதிகமானது, நமது உணவுத் தேவை மூன்று மடங்கானது!
  • கடந்த 50 ஆண்டுகளில், வெப்ப மண்டலக் காடுகள், 30% குறைந்து விட்டன.
  • அதே 50 ஆண்டுகளில், உலகத்தின் மிகப் பெரிய காடான அமேசான் காட்டில் 25%, விவசாய நிலமாக மாற்றப்பட்டது. எதற்கு? சீனாவில் உள்ள பன்றிகளுக்கு உணவாக சோயா வளர்ப்பதற்கு!
  • கடந்த 50 ஆண்டுகளில், உலகின் 35% முதல் 40% நிலம், விவசாயத்திற்காக அழிக்கப்பட்டுள்ளது (இவை காடுகளாக முன்னம் இருந்தவை)
  • உலகின் 70% குடிநீர், விவசாயப் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது
  • நம் பூமியில் கடந்த 6 மில்லியன் வருடங்களாக நடக்காத மாற்றம், கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது!

அப்படி என்ன கிழித்தோம்?

கடந்த 50 ஆண்டுகளில், மனித முன்னேற்றம், முன்னம் இருந்த காலங்களை விட பல விதத்திலும் துரிதமானது.

  • சராசரி மனிதனின் வாழ்நாள் 55 -லிருந்து 71 ஆக உயர்ந்தது. உலகளவில் மருத்துவ முன்னேற்றம் இதற்கு முக்கிய காரணம்.
  • பெண்கள், சராசரி 5 குழந்தைகளிலிருந்து, இன்று 2.4 குழந்தைகளுக்குத் தாயாகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், வளர்ந்து வரும் (பெண்) கல்வி அறிவு மற்றும் மருத்துவம்.
  • உலகின் சராசரி எழுத்தறிவு 50% -லிருந்து 86% -ற்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், கல்வி என்பது உலகின் பல கீழ்மட்ட மனிதர்களுக்கும் எட்டியதுதான்.
  • கடந்த 6 மில்லியன் ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாக, மனிதர்களுக்குள் போக்குவரத்து, மற்றும் தொடர்பு வளர்ந்து விட்டது. கடந்த 15 ஆண்டுகளாக, சமூக வலைத்தளங்கள் இதை மேலும் ஊக்கி வைத்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், மலிவான கார்கள், உயரும் வாழ்க்கைத் தரம், மின்னணுவியல் மற்றும் கணினித் துறை முன்னேற்றங்கள்.
  • கடந்த 50 வருடங்கள், மனித சரித்திரத்தில், மிகவும் அமைதியான காலம். பெரும் உயிரிழப்பு நேரும் போர்கள் மிகவும் குறைவான ஒரு காலகட்டம்.
  • இந்த முன்னேற்றங்களுக்கு, பொறுப்பில்லாமல் நாம் கொடுத்த விலைதான் புவி சூடேற்றம்.

பிரச்சினையின் உயர்நிலைப் புரிதல்

  • ஏராளமான கரியமில/மீதேன் வாயு காற்று மண்டலத்தில் கலந்ததுதான் காரணம் என்று பல முறை சொல்லியாகிவிட்டது. இந்த ஏராளத்தை சற்று பிரிக்கலாமா?
    • 62 % – தொல்லெச்ச எரிபொருள் எரிப்பதால் உருவாகும் கரியமில வாயு
    • 16% – மாடுகள் மற்றும் இதர பிராணிகள் விவசாயத்தில் (தொழில்/பரம்பரை) உருவாக்கும் மீதேன் வாயு
    • 11% – காடுகளை அழிப்பதால் உருவாகும் கரியமில வாயு
    • 3% – சிமெண்ட்/எஃகு மற்றும் தொழில் ரசாயனங்களால் உருவாகும் கரியமில வாயு
    • 8% – மற்ற காரணிகளால் உருவாகும் கரியமில மற்றும் இதர வாயு
      • 2% – குளிர்சாதனங்களிலிருந்து கசியும் HFC வாயுக்கள்
    • ஆக மொத்தம், ஒவ்வொரு ஆண்டும், 7.5 பில்லியன் மனிதர்கள் உருவாக்கும் புவி சூடேற்ற வாயுவின் அளவு 52 கிகா டன். அதாவது, ஏறக்குறைய ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி 7 டன்

தொல்லெச்ச எரிபொருள், விவசாயம் மற்றும் காடுகள், இந்த மூன்று விஷயத்தில் நாம் கவனம் செலுத்தினால், பிர்ச்சினையின் ஏறக்குறைய 90% தாக்குதலை சமாளிக்க முடியும் என்று சொல்ல நாம் ஒரு விஞ்ஞானியாக இருக்கத் தேவையில்லை. உடனே தொல்லெச்ச எரிபொருள் பக்கம் சாய்வதற்கு முன்னர், ஒன்றைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். எல்லா புவி சூடேற்ற வாயுக்களும் ஒன்றல்ல.

  • மீதேன் வாயு காற்று மண்டலத்தில் கலந்து ஒரு பத்தாண்டுகளில் மறைந்துவிடும். கரியமில வாயு, காற்றுமண்டலத்தில் கலந்தால் பல நூறு வருடம் அங்கேயே நம் குடியைக் கெடுக்கும்
  • இதையே இன்னொரு கோணத்தில், புவி சூடேற்றத்தில் மீதேன் வாயுவை நாம் பார்க்கலாம்:
    • 16% – அடுத்த 100 வருடங்களில்
    • 32% – அடுத்த 20 வருடங்களில்
  • ஆக, அடுத்த 20 ஆண்டுகளில், மீதேனின் தாக்கம் ஏராளமாக இருப்பதால், அதை சமாளிக்கும் முயற்சியை தள்ளி வைக்க முடியாது. கரியமில வாயுவை விட அதிக சூடேற்றும் தன்மை கொண்டது மீதேன் என்று பார்த்தோம்

பிர்ச்சினையை முழுவதும் மேல்வாரியாகப் புரிந்து கொள்ள இன்னொரு விஷயம் எஞ்சியுள்ளது. நம்முடைய பூமி, இத்தனை புவி சூடேற்ற வாயுவை எப்படி சமாளிக்கிறது? வெளியேற்றப்படும் புவி சூடேற்ற வாயுவில்:

  • 24% – நிலம் சார்ந்த உட்கொள்ளல் (land based GHG sinks)
  • 17% – கடல் சார்ந்த உட்கொள்ளல் (ocean based GHG sinks)
  • 59% – பூமி, உட்கொள்ள முடியாமல் தவித்து, காற்றில் கலக்கிறது. இன்னும் சில நூறு ஆண்டுகள் தொடர்ந்து நம் பூமி சூடேறும்.

தீர்வுகளுக்குப் போகு முன், இங்கு இரு பெரிய விஷயங்களைச் சொல்லியுள்ளதை கவனித்திருப்பீர்கள்.

ஒன்று, புவிசூடேற்ற வாயுக்களின் வெளியேற்றல் (இதை மனிதர்கள் தங்களது நடவடிக்கைகளால் ஏராளமாக அதிகரித்து விட்டனர்).

இரண்டாவது, இயற்கை புவிசூடேற்ற வாயுக்களை உள்வாங்கல். அதாவது, உங்களது கட்டிடத்தின் மேலே உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் நீரை மோட்டார் மூலம் நிரப்பிக் கொண்டே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிடத்தில் உள்ள வீடுகள் தண்ணீரைப் பயன் படுத்திக் கொண்டே வருகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்த இரு நிகழ்வும் சரியாக நடந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஓடிக் கொண்டே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், வீட்டில் வசிப்பவர்கள், எல்லா குழாயையும் மூடிவிட்டு தூங்கப் போய்விட்டார்களானால், என்ன நடக்கும்?

இதுவே நம்முடைய புவி சூடேற்ற இன்றைய நிலை. இந்த உதாரணத்தில், அதிகபட்ச நீர், மண்ணுடன் கலந்து ஓடிவிடும்; ஆனால், புவி சூடேற்ற வாயுக்கள், இங்கேயே நம் காற்று மடலத்தில் நமக்கு அழிவின் பாதையில் எடுத்துச் செல்லுகின்றன.

இந்த இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டுவிட்ட நாம், என்ன செய்ய வேண்டும்? இரண்டு வழிகள் தான் உள்ளன:

  1. புவி சூடேற்ற காரணிகளில் பெரிய காரணிகளைக் குறைக்க வேண்டும். இது நம் உதாரணத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டாரின் வால்வைக் கட்டுப்படுத்தி, குறைந்த அளவு தண்ணீரைத் தொட்டியில் சேர்ப்பதைப் போன்றது
  2. இயற்கையின் சூடேற்ற உள்கொள்ளலை அதிகரிக்க உதவுவது. இது நம் உதாரணத்தில் தண்ணீரைப் பயன்படுத்தும் வீடுகளில், தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்த முயவதைப் போன்றது. இதிலும் எல்லா பயன்களும் ஒரே அளவில் தண்ணீரைப் பயன்படுத்துவதில்லை. எந்தப் பயனில் அதிக தாக்கம் இருக்கிறதோ, அதையே முதலில் செய்ய வெண்டும்.

முதல், பெரிய காரணியான, தொல்லெச்ச எரிபொருள் என்ற விஷயத்தை மேலும் அலசி, அதில் உள்ள காரணி விதங்களைப் பார்ப்போம்.

  • 25% – நம் கண்ணுக்குத் தெரியாத மின்சார உற்பத்தி. இதில், கரி, இயற்கை வாயு மற்றும் டீசல் அடங்கும்
  • 24% – நம் கண்ணுக்குத் தெரியும் உணவு உற்பத்தி மற்றும் நிலப்பயன். இதில், கால்நடை, மற்றும் உரம் அடங்கும்
  • 21% – எஃகு, சிமெண்ட், ரசாயனத் தயாரிப்பு இதில் அடங்கும்
  • 14% – பைக், கார், லாரி, கப்பல், விமானம் இதில் அடங்கும்
  • 6% – கட்டிடங்கள், தனியார் மற்றும் வணிக கட்டிடங்கள் இதில் அடங்கும்
  • 10% – பெட்ரோலிய தயாரிப்பில் உருவாகும் இதர கழிவு எரிப்பு இதில் அடங்கும்
  • இவை எல்லாம் சேர்ந்து தொல்லெச்ச காரணியான 62% அடங்கும்
  • இந்த தொகுதி காரணிகளில், மின்சாரம், நிலப்பயன், தொழிற்சாலை, போக்குவரத்து மற்றும் கட்டிடங்கள் 90% காரணிகள்

அடுத்த பகுதியில், இந்த 62% தொல்லெச்ச எரிபொருள் சார்ந்த கரியமில வாயு வெளியேற்றலை எப்படியெல்லாம் பிரித்து, கரியமில வாயு உமிழைக் குறைக்கலாம் என்று புரிந்து கொள்ள முயற்சிப்போம். சில அரசாங்க முயற்சிகள், புகைக்கும் டீசல் லாரி போல இல்லாவிட்டாலும், புவி சூடேற்றத்தைக் குறைக்க எப்படி வழி செய்கிறது என்பது தெளிவாகும். “அரசாங்க பஸ்கள் டீசல் புகை மண்டலத்தில் இயங்குகையில், நான் மட்டும் ஏன் விலை அதிகமான எல்.ஈ.டி விளக்குகளை வாங்க வேண்டும்?” என்று நீங்கள் கோபப்படுவது நியாயமாக இருந்தாலும், எப்படி இந்தச் சிறுசிறு முயற்சிகள் உதவும் என்பது தெளிவாகும்.

Series Navigation<< உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.