
கலைத்துப் போடும் எழுத்துக்களில் இருந்து
கிளம்பி வரும் புதிய அர்த்தங்கள்
வளர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்
நசுங்கிப் புழுங்கும் சொற்களை
விடுதலைச் செய்யும்
நல் மீட்பர் நாவுகள்
தொல்காப்பியக் காலத்திற்கு
முற்பட்ட இலக்கணம்
நவீன யுகத்தின்
எதிர்கால அழகியலும் கொண்டது
சொல்லி வைத்தது போல்
அவ்வுலகத்தில்
ஒருமைப் பன்மை
உயர்திணை அஃறிணை
கிடையாது
குற்றியலுகரம், குற்றியலிகரம் மூச்
பெயர்ச்சொல், வினைச்சொல்
பெயருக்குக் கூட இல்லை
மொழிகள் முயங்கிய
மரூஉ சொற்கள் மிகுதி
அந்தியில் மாறும் வானம் என
அவர்களின் அகராதி..
பொருளைத் தேடித் தேடி அறிய
உண்டாகும் சுவை
கண்டதும் அணையும்
சரியாகப் பேசத் தொடங்கும் வேளை
பிழைகளோடு
சேர்ந்து விலகும்
மழலை
நோக்கியபடி
மீண்டும் ஒரு முறை என உன்னைத் தேடி..
ஆர்ப்பரித்து இருக்கும் அலைகள்
ஒலியில்லா ஓசைகள்
உடுத்த வேண்டிப் பல உடைகள்
உதிர்ந்து போன வார்த்தைகள்
உறங்கி எழும் ஒரே போலப் பொழுதுகள்
உறக்கத்தில் பல கனவுகள்
புது உலகம்
புது நிலம்
புதிய மனிதர்கள்
இருக்கின்ற வழிகள் யாவிலும்
தேடி தீர்வதில்லை
நெய் நெருப்பை மூட்டுவதில்லை
நீளமும் அகலமும் அற்ற
இடத்தில இருந்து
நோக்கியபடி நான்
என்னை நோக்கியபடி நீ
நிகழ்தல்
எங்கோ ஒரு புள்ளியில் தொடங்கும்
ஏதோ ஒரு புள்ளியில் விழும்
பயணித்த பாதை முழுக்கப்
பாத சுவடுகள்
மணலின் ஈரமாய்ப் படர்ந்திருக்கும்
இரு பக்கம் இழுக்கப்படும் கயிறுக்கு
இடமென்று ஒன்றில்லை
நிறமில்லா வானம் ஒரு ஓரத்தில் நின்று பார்த்திருக்கும்
நிறங்களின் குளத்தில் முழுகும் வானை
அலசிக் கொண்டே இருக்கும் கைகளில் இருந்து
விரல்கள் சில விலகிப் போவதின் விபரம் அறிவதில்லை
குளித்து முடித்து மேலே வரும் போது
நனைக்காத பாகங்கள் எல்லாம் நினைவுக்கு வர
அடுத்தக் காட்சி ஆரம்பம்!
அந்தி
வண்ண வண்ணப் பாதரசங்கள்
சேர்த்துச் செய்த
அகன்று விரிந்த கண்ணாடியில்
தலைகீழாய் தெரியும்
கூம்புவடிவு மலைகள்,
குருவிகளை வெறுக்கும் கோபுரம்,
கலம் பொங்கிய பால் நுரை,
இருபக்க மரக்கிளைகள் சேர்ந்த
நெடுஞ்சாலை..
தங்கம் நிரப்பிய நீச்சல் குளத்தில்
நீந்தி வரும் அழகியை
ஓடி ஓடி வேடிக்கைப் பார்க்கும்
சிறுப்பிள்ளைக் கூட்டம்..
குளிரை விரட்ட சாம்பல் விறகில்
வேள்வித்தீ வளர்த்து
பாலைவனத்தைப் போர்த்திக் கொண்டு
நீரைத் தேக்கும் உறக்கங்களில்
அலைகள் நின்ற கடலை ரசித்திருக்கும்போதே
குட்டையாய் மாறக் கண்டு
குழம்பிக் குழம்பி
கண்ணெல்லாம் சிவந்து போகும்..
எங்கோ பார்த்த ஒரு மீனை வரைய
கூரிய வாள்நுனி
தோலை எல்லாம்
மழித்து விட எஞ்சும் எலும்புக்கூடு..
சின்னச் சின்னச் சமஸ்தானங்கள்
தம்முள் பூசலிட்டு எல்லைகளை வரையறுக்கும் வேளையில்
வைட்டமின் ஏ குறைப்பாடு வாசலைத் தட்ட
விட்டில் பூச்சித் திரியில் ஏற்றப்படும்
தீபங்கள்!