நீரில் எழுத்தாகும்

மேல்புறம் கண்ணாடியால் ஆன சிறு மரப்பேழை ஒன்று எங்கள் வீட்டின் பூஜையறையில் உள்ளது. சின்னஞ்சிறு மரப்பேழை. காவிரியின் உற்பத்தி ஸ்தானம் உள்ள பிராந்தியம் மர வேலைப்பாடுகளுக்குப் பேர் போனது. இந்த பேழை அந்த பகுதியின் கைவினைஞர் ஒருவரால் எனது தாத்தாவின் விருப்பத்துக்கேற்ப வடிவமைத்துத் தரப்பட்டது. அதனுள் ஒரு கதர்த் துணி மடித்து வைக்கப்பட்டு அதன் மேல் ஒரு காகிதத்தில் ‘’நீரில் எழுத்தாகும் யாக்கை’’ என எழுதப்பட்டுள்ளது. அவ்வாறு எழுதிக் கையெழுத்திட்டிருப்பது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. என்னுடைய தந்தையின் பெயர் மோகன்தாஸ். என்னுடைய பெயர் ராஜாராம். எங்கள் இருவருக்குமே பெயரிட்டவர் என்னுடைய தாத்தா.

***

பிரதான சாலையிலிருந்து மலையடிவாரத்துக்கு இட்டுச் செல்லும் மண்பாதையில் தபால்காரர் அனுமந்த ராவின் சைக்கிள் சீராக முன்னேறிக் கொண்டிருந்தது. ராமாயணத்திலிருந்து சில சுலோகங்களைச் சொன்னார். அவருடைய அம்மா அவருக்கு வழங்கிய அறிவுரை. ‘’அனுமந்து, உனக்கு இந்த பேரு வச்சதே நீ எப்பவும் ராம நாமம் சொல்லணும்னு தான். தபால்காரனா ஆயிட்ட. ஒரு விதத்துல நீயும் ஆஞ்சநேயனைப் போல செய்தி தான் எடுத்துக் கிட்டு போற. அவரைப் போலவே ராம நாமம் சொல்லிட்டே போ. அந்த பேருதான் மாருதியை செய்ய முடியாத காரியங்களை செய்ய வச்சுது.’’ அமைதியான இயல்பு கொண்டவர் தபால்காரர். கோதண்டஹள்ளி கிராமம் பெரியது. அதன் மேற்கு கோடியில் உள்ள சென்னகிரி குன்றின் அடிவாரம் தபால் அலுவலகத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ளது. பெங்களூர் ஹசன் சாலையில் பிரதான சாலையிலிருந்து மண் பாதையில் பிரிந்து வர வேண்டும்.

நடராஜனுக்கு வந்த கடிதத்துடன் மேலும் சிலருக்கு வந்த கடிதங்களையும் கொடுத்து விட்டு அனுமந்த ராவ் புறப்பட்டார். ராவ் குருஜியின் மானசீக சீடர். சென்னகிரி குன்றின் குகைகளில் வசிப்பவர்களுக்கு தனது சொந்த ஆர்வத்தால் கடிதங்களைக் கொண்டு வந்து தருகிறார். குருஜியின் பாதை யோகமும் மௌனமும். குருஜி ஹடயோகி. சென்னகிரிக்கு எப்போது வந்தார் எப்படி வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பல நாட்கள் சர்வ சாதாரணமாக உணவு இல்லாமல் அவரால் இருக்க முடியும். எளிய ஆசனங்களை நீண்ட நேரம் செய்வது அவரது வழிமுறை. மேய்ச்சலுக்கு வரும் இடையர்கள் அவர் நாளின் பெரும் பொழுது பயிற்சி செய்து கொண்டிருப்பதையும் மௌனத்தில் ஆழ்ந்திருப்பதையும் கண்டு ஊரில் சொன்னார்கள். ஆர்வத்தால் பார்க்க வந்த சிலர் அங்கே அவருக்கு அவல் கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினர். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் கொஞ்சமாக எடுத்துக் கொள்வார். ஹடயோகம் பயில விரும்பும் சிலர் அங்கே வந்து குருஜியுடன் இருந்த போது ஒருவேளை உணவு உண்டு மௌனமாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விதியென்றாக்கினார் குருஜி. குன்றின் சுனைகள் நீர்த்தேவைக்குப் பயன்பட்டன. வந்த சில நாட்களில் பலர் பஞ்சாய் பறந்தோடினர். சென்றவர்கள் சென்னகிரி குறித்து கூறிய தகவல்களால் உந்தப்பட்டு பலர் வந்து கொண்டிருந்தனர். பேச்சே மிக மிகக் குறைவு என்பதால் சிக்கல்கள் பெரிதாக இல்லை. யாரையும் வரவேற்பதும் இல்லை. புறப்பட்டுப் போனாலும் அதையும் யாரும் கருதுவது இல்லை.

நடராஜன் தனக்கு வந்த கடிதத்தை வாசித்தான். பெங்களூரிலிருந்து நஞ்சப்பா எழுதியிருந்தான். செய்தி இதுதான் : மகாத்மா காந்தி பெங்களூரில் இருக்கிறார். மூன்று நாட்கள் சென்னகிரி குன்றின் அடிவாரத்தில் தங்கப் போகிறார். உடன் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதற்காக இந்த தனிமை. நடராஜன் மீண்டும் ஒருமுறை தனக்கு வந்த கடிதத்தை வாசித்து விட்டு அதனைக் கிழித்துப் போட்டான். மற்ற சிலருக்கு அவர்கள் குடும்பத்திலிருந்து கடிதம். என்ன எழுதியிருப்பார்கள் என்று தெரியும். ‘’எல்லாரும் உன் நினைப்பாகவே இருக்கிறோம். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதனை இங்கிருந்தே செய். நாங்கள் ஏதும் உன் மனம் வருந்தும்படி நடந்திருந்தால் எங்களை மன்னித்து விடு. நீ வந்து சேரும் நல்ல நாளை எதிர்நோக்கியிருக்கிறோம்’’ சமீபத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கு இந்த கடிதம். சில மாதங்கள் இருந்து விட்டு வருகிறேன் என்பவர்களுக்கு ,’’ வருகிறேன் என்று தெரிவித்திருந்தாயே. தினமும் வாசலை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். சீக்கிரமாக வந்து விடு.’’ நடராஜன் வந்து ஒரு வருடம் ஆகிறது. வீட்டாருக்கு அவன் இங்கிருப்பது தெரியாது. பெங்களூர் நண்பன் நஞ்சப்பாதான் அவ்வப்போது கடிதம் எழுதுவான்.

***

சென்னகிரி குன்றும் குகைகளும் அடிவாரத்தின் நில அமைப்பும் நடராஜனுக்கு அத்துப்படி. அடிவாரத்தில் மூன்றடிக்கு மூன்றடிக்கு அளவுள்ள குழி பத்து அடி ஆழத்துக்கு எடுக்கப்பட்டிருக்கும். அது போல பதினைந்து குழிகள் வெட்டப்பட்டிருக்கும். அதன் மேல் நடுவில் மரத்தில் ஒரு அடிக்கு ஒரு அடி அளவு துளை கொண்ட பலகை பொருத்தப்பட்டிருக்கும். காலைக்கடன்களுக்கு அந்த குழியைப் பயன்படுத்திக் கொண்டு பின்னர் குழியில் மண்ணை போட்டு விட்டு வர வேண்டும். நூறு பேர் வரை அங்கே இருந்தார்கள்.

குருஜியின் பெயர் யாருக்கும் தெரியாது. நாளின் பெரும்பாலான பொழுது மௌனமாகவே இருப்பார். ஓரிரு சொற்களில் மிக மிகக் குறைவாகவே பேசுவார். அவரது ஹிந்தி உச்சரிப்பு அவர் வடநாட்டைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று எண்ண வைக்கும். அதிகாலை சூர்ய நமஸ்காரம் செய்யத் துவங்கி விடுவார். நான்கு மணி நேரம் ஆகும். உடல் வியர்த்து வியர்வை உடலில் ஆறாய் பெருகி ஓடும். இடையாடையை வறிந்து கட்டிக் கொண்டு பயிற்சி செய்வார். அவர் சூரியனை வணங்குவது ஒரு நடனம் போல இருக்கும். அவர் வணக்கத்தை ஏற்கவே சூரியன் தினமும் பூமிக்கு வருகிறான் என்று சீடர்களுக்குத் தோன்றும்.

குருஜி எதையும் சொல்லித் தர மாட்டார். ஒருவேளை மட்டுமே உணவு என்பதில் மிக உறுதியாக இருப்பார். சமைக்காத உணவு மட்டும்தான் என்பதிலும். கோதண்ட ஹள்ளி கிராமத்து நாகம்மா கோயில் ஊழியர் ஒருவர் குருஜியின் சீடர். புதிதாக வருபவர்களை நாகம்மா கோயில் வளாகத்தில் தங்க வைத்து விடுவார். ஒருவேளை மட்டும் உண்ண அவல் தருவார். காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும். மற்ற நேரம் மௌனமாக இருக்க வேண்டும். இவ்வாறு 90 நாட்கள் நடக்கும். அதன் பின் அடுத்த 90 நாட்கள் காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் சூர்ய நமஸ்காரம் இருக்கும். மூன்றாவது 90 நாளில் இரு சந்திகளிலும் மூன்று மணி நேர பயிற்சி. ஒரு வருடம் கழித்து அனைவரும் காலை மாலை நான்கு மணி நேரம் சூர்ய நமஸ்காரம் செய்யத் துவங்குவார்கள். நூறு பேர் குருஜியைக் காண வந்தால் ஒருத்தர் இந்த அடிப்படை பரீட்சையில் தேறுவார். அப்படித் தேறிய நூறு பேர்தான் குருவுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தான் வீட்டிலிருந்து கடிதம் வந்து கொண்டு இருக்கிறது. இந்த எட்டு மணி நேரப் பயிற்சி எப்போதும் உள்ளது. சீடர்கள் மற்ற நேரத்தில் வேறு சில யோகாசனப் பயிற்சிகள் செய்வார்கள். அவர்களின் செய்முறையையும் பக்குவத்தையும் பார்த்து சிறு அளவில் குருஜி திருத்தங்கள் செய்வார். ஐந்து பூதங்கள், புள்ளினங்கள், அமைதியில் உறைந்திருக்கும் பாறைகள் என உலகின் வேறொரு பரிணாமத்தில் அங்கே வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும். சில மாதங்கள் இங்கிருந்து யோகாசனங்கள் கற்றுக் கொண்டவர்கள் அவர்கள் ஊரில் இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். சிலர் சிலம்பப் பயிற்சி கொடுத்தார்கள். சிலர் மல்யுத்தம் சொல்லித் தந்தனர். இந்த சீடர்கள் தொடர்ந்து அவல் மூட்டைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

***

நஞ்சப்பா சொல்லியிருந்த நாள் என்றைக்கு என்று அனுமந்த ராவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான் நடராஜன். குகைகளில் நாட்காட்டியும் கிடையாது. கடிகாரமும் கிடையாது. குன்றின் உச்சிக்கு ஏறி ஏதேனும் புதிய நடமாட்டம் தெரிகிறதா என நாலாதிசைகளிலும் காலை பயிற்சியை முடித்தவுடன் நோக்கினான். குன்றின் தென் திசையில் இரண்டு பேர் தென்பட்டார்கள். ஒருவர் மரத்தின் அடியில் இருந்த பாறையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற போது அவர் வஜ்ராசனத்தில் தென்திசை நோக்கி அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர் முன்னால் நடராஜன் சுகாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ரொம்ப நேரம் கண்களை மூடியிருந்தான். பின்னர் ராம நாமம் உச்சரிக்கப்படுவது கேட்டது. நடராஜன் கண்களைத் திறந்தான்.

காந்திஜி நடராஜனைப் பார்த்து ‘’ராம் ராம்’’ என்றார்.

நடராஜன் கண்களைத் திறந்து இரு கைகளையும் கூப்பி நெஞ்சில் வைத்துக் கொண்டு ‘’ராம் ராம் ஜி’’ என்றான்.

‘’உங்கள் பெயர் என்ன?’’

‘’நடராஜன். மெட்ராஸ் மாகாணத்தில் தஞ்சாவூர் பக்கம் என்னுடைய ஊர்’’

மகாத்மாவின் மார்பு ஒரு ராணுவ வீரனுக்குரியது. அத்தனை விரிந்திருந்தது. தன் தோளில் இருந்த துண்டை உதறி மீண்டும் உடலின் மேல் போட்டுக் கொண்டார்.

‘’ஜி ! உங்கள் தனிமைக்கு இடையூறாக இருக்கிறேனா?’’

‘’அப்படி ஒன்றும் இல்லை. மகாதேவிடம் இந்த இடம் குறித்து யாரோ சொல்லியிருக்கிறார்கள். இரண்டு நாள் நான் இங்கே இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பம். யாரையும் சந்திக்காமல் இருந்தால் எதையும் யோசிக்காமல் இருப்பேன் என்று அவன் எண்ணுகிறான்.’’

நடராஜன் எதையும் பேசாமல் அமைதியாக எதிரில் இருந்தவரின் முகத்தையைப் பார்த்த வண்ணம் இருந்தான். அவரது முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு இருந்தது. நோக்க நோக்க அவரது பார்வையின் கனிவு மேலும் மேலும் என ஆழ்ந்து கொண்டிருந்தது. நடராஜன் குருஜியின் பார்வையில் அதனைப் பலமுறை உணர்ந்திருக்கிறான். வாழ்க்கையின் சில நிகழ்வுகள் வானத்தின் கண்டறிய முடியாத சக்திகளால் தீர்மானிக்கப்படுபவை என்ற எண்ணம் அப்போது அவனுக்கு உண்டானது.

‘’உங்கள் குழு குறித்தும் உங்கள் குருஜி குறித்தும் மகாதேவ் சொன்னான்’’

’’நூற்று இருபது பேர் இருக்கிறோம்’’

‘’ஒரு வேளை உணவு மட்டுமே என்பதும் நாளின் பெரும்பாலான பொழுது பேச்சில்லாமல் இருக்க வேண்டும் என்பதும் அடிப்படை நிபந்தனையாக இருந்தும் இத்தனை பேர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்றால் மிகவும் நல்ல விஷயம் தான்’’

‘’ஜி! எங்கள் ஆசிரமத்தில் கூட இருந்து விடலாம் ; உங்கள் ஆசிரமம் இன்னும் கஷ்டமானது என்று பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள்.’’

காந்திஜி குலுங்க குலுங்க சிரித்தார்.

‘’அங்கே பேச்சும் ஹாஸ்யமும் கும்மாளமும் எப்போதும் இருக்கும். உணவு மூன்று வேளை. தோட்ட வேலை நிச்சயம் செய்ய வேண்டும். ராட்டையில் நூல் நூற்க வேண்டும். ஆசிரமத்தில் அனைவரும் தினசரி காலை மாலை நடக்கும் வழிபாட்டுக்கு வந்து விட வேண்டும்’’

‘’உங்கள் ஆசிரமத்தில் இருந்த சிலர் இங்கே இருக்கிறார்கள்’’

‘’முழுமையான சூர்ய நமஸ்காரம் தான் உங்களுடைய குழுவின் செயல்முறையா?’’

‘’குருஜி மனிதர்கள் சூரியன் போல் ஆற்றல் கொண்டவர்களாக சாத்தியம் கொண்டவர்கள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்.’’

‘’நடராஜ் ! நம் நாடு முழுக்க நிறைய வீடுகளில் அக்னி ஹோத்ரம் நடக்கிறது. சிறு நெருப்பு. அணையா நெருப்பு. தலைமுறைகளை நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருக்கும் நெருப்பு. ஒரு குடும்பத்தின் ஒரு ஜீவனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரைக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சாட்சியாய் இருக்கும் நெருப்பு. அது அந்த வீட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அந்த வீட்டின் சூழலைக் காவல் அரண் போல் இருந்து காக்கிறது. அது ஒரு சூரியத் துளி. நுண் சூரியன். அந்த சிறு நெருப்புக் கனலையே ஒவ்வொரு ஜீவனிலும் உண்டாக்க ஏதேனும் ஒரு விதத்தில் என்னால் ஏதும் செய்ய முடியுமா என்பதையே வாழ்க்கை முழுக்க முயன்று கொண்டிருக்கிறேன்.’’

மகாத்மா எழுந்து கொண்டார். நடராஜனைப் பார்த்து கரம் கூப்பி வணக்கம் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டார். ‘’இன்றோ நாளையோ நாம் மீண்டும் சந்திப்போம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் குறித்து அப்போது கேட்டு தெரிந்து கொள்கிறேன். ராம் ராம்’’

***

கிராமத்துக்குச் சென்று மாருதி ராவைப் பார்த்து ஒரு வெள்ளைக் காகிதமும் பேனா ஒன்றும் அவரிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டான் நடராஜ்.

‘’என்னப்பா! ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. பேப்பர் பேனா உங்களுக்கு எந்த விதத்தில பயன்படும். உங்க குரூப்ல யாரும் யாருக்கும் எந்த லெட்டரும் எழுதறதில்லையே. லெட்டர் வரும். யாராவது இங்கேயிருந்து கிளம்பினா நேரா வீட்டுக்குத் தான் போறாங்க. உனக்கு எதுக்கு காகிதமும் பேனாவும்?’ அனுமந்த ராவ் கேட்டார்.புன்னகையை பதிலாக அளித்து விட்டு நடராஜன் புறப்பட்டான்.

காந்திஜி குன்றை ஒட்டி புல்தரையில் தன் தோள் துண்டை தரையில் விரித்து அதன் மேல் அமர்ந்திருந்தார். எப்போதும் போல் வஜ்ராசனம். நடராஜன் அவர் எதிரில் அமர்ந்து கொண்டான். அவரைப் பார்த்த போது தசீசி முனிவர் இவ்வாறு இருந்திருப்பாரோ என்று அவனுக்குத் தோன்றியது.

நடராஜன் தான் பேச்சைத் துவக்கினான். ‘’குன்றின் உச்சியிலிருந்து பார்த்தேன். குருஜியும் நீங்களும் அருகருகே நின்று பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டீர்கள்‘’

‘’அவரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி தந்தது.’’

‘’அவரும் அவ்வாறே உணர்ந்திருப்பார்’’

‘’உங்கள் குழுவின் பயிற்சிகளைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் சூரியன் போல் ஜொலிக்கிறீர்கள்.’’

‘’குருஜி அப்பியாசத்தில் மிகவும் உறுதியாக இருப்பவர். அப்பியாசம்தான் எங்கள் மார்க்கம்.’’

நடராஜன் மகாத்மாவிடம் ஆட்டோகிராஃப் கேட்டான்.

‘’நீரில் எழுத்தாகும் யாக்கை’’ என்று எழுதி மோ.க. காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டார்.

‘’தென்னாஃப்ரிக்காவில் எனது நண்பர்கள் பலர் தமிழர்கள் . அவர்களிடமிருந்து கொஞ்சம் தமிழ் கற்றுக் கொண்டேன்.’’

***

தாத்தா ஊருக்குத் திரும்பி வந்தார். அவர் திரும்பி வந்ததில் அவருடைய பெற்றோருக்கு மகிழ்ச்சி. குருஜி சித்தியடையும் வரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை கோதண்டஹள்ளி சென்று அவல் மூட்டைகள் வழங்கி விட்டு வருவார். குருஜி சித்தியான பின் ஆண்டுக்கொரு முறை அங்கே நிகழும் குருபூஜைக்கு சென்று விடுவார். தனது வாழ்நாளின் கடைசி தினம் வரை அதிகாலை தொடங்கி நான்கு மணி நேரம் சூர்ய நமஸ்காரம் செய்வார். எந்த காரணத்துக்காகவும் ஒரு நாளும் விடுபட்டது கிடையாது.

ஊருக்குத் திரும்பி வந்தவுடன் தனது சொத்தில் நாலில் ஒரு பகுதியை விற்று ஒரு பள்ளிக்கூடம் தொடங்கினார். சுற்றியுள்ள பத்து கிராமங்களுக்கு அதுதான் கல்வி அளித்தது. அளிக்கிறது. தாத்தா தொடங்கிய பணியை அப்பாவும் நானும் தொடர்ந்தோம். இப்போது என் மகன் நடராஜ் தொடர்கிறான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.