நான் யார் யாரென்று சொல்லவில்லை

ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’

ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.

சொல்வனம் இதழில் முன்பு வெளியான ‘ஆடிப்பாவையில்’ மூளை நன்றாகச் செயல்படும், ஆனால், உடல் இயங்காத ஒரு மனிதனுக்கு, மூளைச் சாவடைந்த ஒரு இளைஞனின் உடல் பொருத்தப்படுவதும், அதை ஒட்டிய அவன் எண்ணங்களும் சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் அவரவரே வேண்டும்; தன்னை நேசிப்பதைப் போல் பிறிது வேறொன்றில்லை. குருதியாலும், தசையாலும், வடிவத்தாலும் இணைக்கப்பட்டுள்ள நமது பிரக்ஞை அல்லது உணர்வு எப்போதும் நமக்கு முக்கியமானது.

தன்னுணர்வு ஏன் இருக்கிறது?

1974ல் தாமஸ் நேகல் (Thomas Nagel) என்ற தத்துவவாதி ‘உயிருடன் இருக்கும் இச்சை பொதுவான ஒன்றாக இருக்கிறது; அது தன்னுணர்வின் பாற்பட்டது.’ எனச் சொன்னார். ஆனாலும், அந்த உணர்வு எங்கிருந்து தோன்றுகிறது, ஏன் தோன்றுகிறது போன்ற கேள்விகள் கடினமானவை. இதற்கு விடை காண்பது இயலாவிட்டாலும் (இன்றைய நிலையில்) பிரக்ஞையைப் பகுத்துப் பார்க்கும் அளவிற்கு அறிவியல் முன்னேறியுள்ளது. நம் எண்ணங்கள், நடத்தைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றை உடல் மற்றும் மனம் (புத்தி) சார்ந்த புரிதல்களாகத் தெரியப்படுத்தும் அறிவியல், அவற்றுடன் எப்போதுமே இணையும் இந்த விசித்திரமான ‘நானை’ தெளிவுபடுத்தத் திணறுகிறது. இந்த அகிலமானது, அனைத்து உயிரினங்களுக்கும் அளித்துள்ள அற்புத நன்கொடை என்று பிரக்ஞையை அறிந்து கொள்ளலாம். ஆனால், இந்த அற்புத அல்லது விசேட சக்தி எது? இதை அழகாக, பிலிஸ் (Phyliss) என்ற பள்ளிச் சிறுமிக்கு அனுப்பிய கடிதத்தில் ஐன்ஸ்டைன் சொல்கிறார்: “எளிமையாக மதத்தைப் புரிந்து கொள்ளும் விதத்தில் விஞ்ஞானிகள் அதை ஏற்பதில்லை. மத ஏற்பாளர்கள் என்பவர்கள் வேறு வகை; ஆன்மீகம் வேறு. உலகத்தில் நாம் அறிந்துள்ள சக்திக்கு மேற்பட்ட ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கைக் கோணம் சிறப்பு வாய்ந்தது.”

தன்னுணர்வு விசேடமான ஒன்றுதான்; ஆனால், மாறுபடும் தன்னுணர்வின் இடுபொருட்களை நம்மால் அறியமுடியும். பிரக்ஞை அனுபவங்களை அளவிட விஞ்ஞானிகளிடத்தில் கருவிகளும், செயல் முறைகளும் உள்ளன. உயிரியல் வளரவளர, கிருமிகள் தொடங்கி, ஒற்றைத் திசு உயிரினம் வரை ஆய்வுகள் தொடர்ந்ததில், உணர்வு என்பது அப்படியொன்றும் மர்மமானது அல்ல என மனிதன் புரிந்து கொண்டான். பிரக்ஞையின் பலகூறுகளை ஆராயும் போது தன்னுணர்வைப் பற்றி அறிகிறோம். இவைகளைத்தான் தன்னுணர்வின் உண்மைச் சிக்கல்கள் என்று சொல்கின்றனர். உதாரணமாக, பார்வைப் புரணியில் (Visual Cortex) நடைபெறும் செயல்பாடுகள், எவ்வாறு நம்மால் இளஞ்சிவப்பையும், கருஞ்சிவப்பையும் மாறுபடுத்த முடிகின்றது எனக் காட்டுகின்றன. மூளைக் காணும் பௌதீக வடிவங்கள் தன்னுணர்வைச் சார்ந்து நடைபெறுகின்றன என்பதை நிரூபிக்க நிரூபிக்க, பிரக்ஞையின் மர்ம்ம் குறையும் என்று சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.

தன்னுணர்வின் பல நிலைகள்

பிரக்ஞை என்பது பல நிலைகளில் தோன்றும் சிக்கல்; உயிருடன் இருப்பதைப் போலவே சுய உணர்வுடன் இருப்பதும் ஒற்றைப்படை நிகழ்வல்ல. மாறுபட்ட கோணங்கள், சிந்தனைகள் தேவையாகின்றன். நம் மூளை, விழித்திருக்கையில், உறங்குகையில், கோமாவில் இருக்கையில் வெவ்வேறு உணர்வு நிலையில் உள்ளது. மன நோய் மருந்து எடுத்துக் கொள்பவர்களின் மூளை நிலையோ வேறு.

அப்படியென்றால், இத்தகைய மாறுபடும் பிரக்ஞைகளை அளக்க முடியுமா? அறிவியலாளர்கள் அதைச் செய்துள்ளார்கள்; வழி முறைகளை மேம்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள்.

‘இரு நிறமாலைக் குறியீடு’ (Bispectral Index-BSI) இதில் முன்னோடி. அறுவை சிகிட்சையின் போது மயக்க மருந்து செலுத்தும் மருத்துவருக்கு உதவும் வண்ணம், இந்தக் குறியீடு, பலப் பகுதிகளில் பல கோணங்களில் எடுக்கப்படும் மூளை-ஊடுகதிர் பிம்பங்களை ஒன்றாக இணைத்துத் தருகிறது. உண்மையில் இது நல்லதுதான். ஆனால். அறுவை சிகிட்சையின் போதே இடையில் சில நோயாளிகள் கண்களைத் திறக்கிறார்கள்; மருத்துவக் குழு பேசுவதும் அவர்களுக்குப் புரிகிறது.

இந்திய யோகம், இந்த மயக்க மருந்தினால் ஏற்படும் மயக்க நிலையை ‘நினைவு’ நிறுத்தப்படுவதாகவும், உணர்வு உள்ளபடியே இருக்கிறது எனவும் சொல்கிறது. ‘மர்மக்’ கலை சில நரம்புகளைத் தற்காலிகமாக அமைதிப்படுத்தி, இதே போன்ற, ஆனால் பக்க விளைவுகளற்ற, எளிய முறையில், நோயாளிக்குத் தேவையான அறுவை சிகிட்சை முதற்கொண்டு செய்ய முடியும் என்றும் அது சொல்கிறது. நவீன மருத்துவ நரம்பியல் நிபுணர்கள், இடையில் ஏற்படும் விழிப்பையும், நோயாளி அறுவை சிகிட்சை மேஜையில் உணர்வுடன் இருப்பது எவ்விதம் என்றும் புரியவில்லை எனச் சொல்கிறார்கள்.

தன்னுணர்வை அளக்க புதுக் கருவிகள், முறைகள் வந்த வண்ணமிருக்கின்றன. இடாலியைச் சேர்ந்த மார்செல்லோ மாசிமினி (Marcello Massimini) ‘குழப்பச் சிக்கல் குறியீடு’ (Perturbational Complexity Index-PCI) என்ற ஒன்றை தன் குழுவினருடன் வடிவமைத்துள்ளார். இதை பி சி ஐ எனக் குறிப்பிடுகிறார்கள். இதில் காந்தத்தைக் கொண்டு மூளையின் ஒரு பகுதி தூண்டப்பட்டு, அந்த சங்கேதமானது அதாவது அந்த அதிர்வானது மூளையின் மற்றப்பகுதிகளுக்குப் பரவுகையில், அந்தச் சங்கேதச் சிக்கல்களை அழுத்தி ஒரு கணினி வழிமுறையின் (Algorithm) மூலம் அளவிடுகிறார்கள். மயக்க நிலையில் இருக்கும் மனிதர்களின் மூளையில், இந்த பி சி ஐ குறைவாகக் காணப்படுகிறது. ஏனெனில் சங்கேதங்கள் விரைவில் குறைந்து விடுகின்றன. ஆனால், சுய உணர்வு நிலையில் இது அதிக நேரம் நீடித்து அதிகமாகக் காணப்படுகிறது. பி சி ஐ, பி எஸ் ஐயை விட நம்பகத்தன்மை மிகுந்த ஒன்று. நாம் உறக்கத்தில் காணும் கனவுகளின் போது, விரைவாக கண்கள் இயங்கும் (REM); அந்த நிலையிலும், முழுதும் விழித்திருக்கும் நிலையிலும் பி சி ஐ ஒன்றாக இருக்கிறது. எனவே, உறக்கத்திலும், விழிப்பிலும் தன்னுணர்வு இருக்கிறது என்பதும் நிரூபணமாகிறது. இந்த பி சி ஐ மருத்துவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. சுய உணர்வோடு இருக்கும் ‘உடல் பூட்டு நோய்’ (Locked-in-syndrome) உள்ள நபரை இனம் காண இது உதவுகிறது.

இருந்தும், தன்னுணர்வு என்பதுதான் என்ன?

வெவ்வேறு நிலைகள் உள்ளன என்றும் அவற்றை அளவிட முடியும் என்றும் மேலே பார்த்தோம். இன்றைய அறிவியல் இதை மேலும் மெருகேற்றியுள்ளது. உணர்வு என்பதன் அடிப்படை குணம், தகவலும் அதன் ஒருங்கிணைப்பும் (Integrated Information) என்று அறிவியலாளர்கள் டொனோனி (Tononi) மற்றும் எடெல்மேன் (Edelman) சொன்னது பல அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உணர்வானுபமும் புதியது, மற்றும் அத்தருணத்தியது. சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவையை முன்னரும் பார்த்திருப்பீர்கள்; இப்போது பார்க்கும் போது இது புதிது மற்றும் இந்தத் தருணத்தைச் சார்ந்தது. ஆனால் இந்த உணர்வானுபவம் தொகுக்கப்பட்ட ஒன்றும் கூட- நாம் அந்தப் பறவையின் நிறத்தை மட்டும் பார்க்கவில்லை; அதன் வடிவத்தையும் கூடப் பார்க்கிறோம். இந்தக் கோட்பாட்டின்படி, உணர்வு என்பது தகவல்களின் தொகுப்பு; நமது மூளை தகவல் தொகுப்பு இயந்திரம்; அதிக அளவில் உள் வாங்கி அதிக ஒழுங்கில் மூளை தகவல் தொகுப்பைக் கையாள்கிறது. இந்தக் கோட்பாடு ஐ ஐ டி (IIT-Integrated Information Theory) என அழைக்கப்படுகிறது.

ஐ ஐ டி உணர்வினை அளக்க ‘பை’ (phi) என்பதைப் பயன்படுத்துகிறது. தகவல் எந்த அளவிற்குத் தொகுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து எந்த அளவிற்கு உணர்வு இருந்தது என கணிக்கலாம். தனித்தனிப் பகுதிகள் கொணரும் தகவல்கள், அமைப்பின் தகவல்களுடன் ‘பை’யில் ஒப்பிடப்படுகின்றன. தனித்தனி பாகங்கள் எத்தனையை உற்பத்தி செய்யுமோ, அத்தனைதானே அமைப்பும் செய்ய முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், சிக்கலான அமைப்புகள் அவ்வாறெல்லாம் செயல்படுவதில்லை; ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதிகளோடு சிக்கலானத் தொடர்பில் இருக்கிறது. உதாரணத்திற்கு பறக்கும் பறவைக் கூட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; தனித்தனி பறவைகள் ஒரே குழுவாகப் பறக்கின்றன. பறக்கும் போதே, பறக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு, சிக்கலான (நமக்கு) குறிகளோடு அவை தமக்குள் தொடராடல் செய்கின்றன. கணினி, சில எளிய சூத்திரங்களைப் பெற்று பல சிக்கலான விஷயங்களைத் தருவதைப் போல, ஒரு அமைப்பு அதிக அளவில் தகவல்களைத் தந்தால், அதன் ‘பை’ அதிகம், அதன் உணர்வு செம்மை எனப் பொருள் கொள்ளலாம். கோடிக்கணக்கில் ந்யூரான் உள்ள மூளை அதிக ‘பை’யைப் பெறும்.

சொல்வது எளிது; செய்வது கடினம். மூளையின் சாத்தியங்கள் மிக அதிகம். அது உற்பத்தி செய்யும் தகவல்களை அளக்க வேண்டுமென்றால், அது எந்தெந்த வழிகளில் செயல்படும் என்பதும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைய நிலையில், அது செய்வதை நாம் பதிவு செய்கிறோம்; ஆனால், செய்ய இயலுவதை? எனவே இந்தக் கருதுகோள் செயல்முறையில் சாத்தியமான ஒன்றாக உருவெடுக்கவில்லை; ஆனால், சிந்தனைக்கு முக்கியமான ஒன்று.

உணர்வின் உள்ளடக்கம் என்பது மூளை கட்டுப்படுத்தும் மாயத் தோற்றங்களே!

எப்போதுமே நீங்கள் பிரமையில் இருக்கிறீர்கள் என்று சொன்னால், மேற்கொண்டு இக்கட்டுரையை நீங்கள் படிக்காமல் விட்டு விடக் கூடும். ஆனால், அப்படி ஒன்றும் மடத்தனமாகச் சொல்லவில்லை. உண்மை என நாம் நினைக்கும் அனுபவங்கள் ‘உண்மை நிலை’யைப் பற்றிய மூளையின் ஊகங்களே! கண்டு, கேட்டு என்று அனைத்தையுமே உணர்வுடன் செய்கிறோம்; உலகோடு அதை இணைக்கவும் செய்கிறோம். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. நம்முடைய உணர்வுக் கருவிகள், உலகத்தை வடிகட்டாமல் மூளைக்குக் காட்டும் ஜன்னல்களல்ல. மூளைக்குப் பார்க்கும் திறனோ, கேட்கும் திறனோ கிடையாது. அது, உணர்வுக் கருவிகள் அனுப்பும் நரம்புச் செய்திகளைக் கொண்டு தன்னால் முடிந்த வரை அந்த உணர்வை அறிகிறது.

உண்மையைப் புரிந்து கொள்ளும் முழுத் திறன் நம் உணர்வுகளில் இல்லை என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதில் மெய்ஞானிகளும் அடக்கம். ஆனால், புறத்திலிருந்து மூளைக்கு என்பதில்லாமல் மூளையிலிருந்து கற்பிக்கப்பட்டது என்று சொன்னால், உண்மையின் அருகே நெருங்குகிறோமோ?

இந்தப் புரட்சிகரமான கருத்தை ஜெர்மனியைச் சேர்ந்த அறிவியலாளர் ஹெர்மன் வான் ஹெல்ம் ஹோல்ட்ஸ் (Hermann Von Helmholtz) 19-ம் நூற்றாண்டில் அறிவித்தார். எந்தப் பார்வையும், உணர்வு சாரா அனுமானங்களே என்றார் அவர். நம்முடைய பழைய வெளி உலக அனுபவங்களைக் கொண்டு, மூளையானது தொடர்ந்து வெளியே என்ன உள்ளது என்று உத்தேசித்துக் கொண்டே இருக்கிறது. அந்த உத்தேசங்களை, நரம்புச் செய்திகளைக் கொண்டு சரி செய்து கொள்கிறது. உணர்வு பூர்வமான அறிதல் வெளியிலிருந்து உள்ளே அல்ல; உள்ளிருந்து வெளியே.

இதனால் தான், நம் உணர்வின் உள்ளடக்கம் மாயத் தோற்றமாகிறது. மூளைதான் இதைச் செய்கிறது; ஆனால், அதிர்ஷ்டவசமாக இத் தோற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கின்றன. உலகைப் பற்றி தொடர்ந்து கணித்துக் கொண்டிருக்கும் மூளை, உணர்வுச் செய்திகளைக் கொண்டு நேர் செய்தும் கொள்கிறது. நாம் உண்மையிலேயே பிரமையில் இருக்கும்போது, நமது எதிர்பார்ப்புகள், அதாவது நாம் காணும் விதத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் வலுவாக உள்ளதால், வெளி உண்மையுடன் பிணைக்கப்படாமல் போகின்றன.

அப்படியென்றால் இந்த உலகே ஒரு கனவா?

பௌதீக உலகம் இருக்கிறது. அடிப்படையான முக்கியத் தன்மைகளோடு- இயங்கு தன்மை- உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால், இரண்டாம் தன்மை என சொல்லத்தக்க நிறம், சுவை போன்றவை ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன.

முந்தைய நம்பிக்கைகளைக் கொண்டு ஊகிக்கும் ஒரு இயந்திரம் நமது மூளை.

நாம் காணும் உலகை மிகச் சிறந்த ஊகங்களைக் கொண்டு கட்டுப்படுத்தப்பட்ட மாயத் தோற்றங்களென மூளை கட்டமைக்கிறது எனக் கொள்வோம். அப்படியென்றால் இந்த ஊகங்களை மூளை எவ்விதம் செய்கிறது? இதை கணித தர்க்கம் கொண்டு புரிந்து கொள்ளப் பார்ப்போம். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித தாமஸ் பேய்ஸ் (Rev Thomas Bayes) ‘ஊகங்களின் சிறந்த விளக்கங்கள்’ என்ற கருதுகோளை முன்வைத்தார். ஒன்றை அறிய வேண்டுமென்றால், நிகழ்தகவுகள் அதற்கான சிறந்த விளக்கத்தைக் கொடுக்கும் என்பது அவரது கருதுகோள். ‘நான் இருப்பது இந்தியாவா, சிங்கப்பூரா,?’ என்ற எண்ணம் வந்தால், எதற்கான சாத்தியங்கள் அதிகமோ அதைக் கொண்டு நீங்கள் முடிவு செய்வீர்கள் இல்லையா, அதுதான் பேய்ஸின் தத்துவம். எளிய ஒன்றாகத் தோன்றினாலும், மருத்துவத் துறையிலிருந்து இராணுவம் வரை இது பயன்படுகிறது. தகவல்களின் நம்பகத் தன்மையைப் பொறுத்து, சிக்கலான சூழ்நிலைகளில் முடிவெடுக்க இது உதவுகிறது.

நாம் இதுவரை இவற்றைப் பார்த்தோம்.

  • நமது மூளை ஒரு கணிக்கும் இயந்திரம்.
  • வெளியில் உள்ளதை தொடர்ந்து ஊகிக்கிறது.
  • பேய்ஸியன் வழிமுறையில் சிறந்த நிகழ்தகவுகளின்படி செயல்படுகிறது.
  • முந்தைய நம்பிக்கைகளைக் கொண்டு உலகைப் பற்றி சிறந்த ஊகங்களைச் செய்கிறது.
  • தன்னுள்ளே வரும் நரம்புணர்வுகளிலிருந்து சீரமைத்துக் கொள்கிறது.

நம் நம்பிக்கைகள் நம் கோணங்களாகின்றன எனப் பல நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறோம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எர்ன்ஸ்ட் காம்ப்ரிச் (Ernst Gombrich) என்ற கலை வரலாற்றாளர், ‘பார்வையாளரின் பங்கு’ (Beholders’part) என்ற சொற்றொடரைப் பிரபலப்படுத்தினார். ‘எந்தப் பார்வையிலும் வெள்ளந்தித்தனமில்லை. அவரவர் அனுபவம், நம்பிக்கை, கருத்துக்கள்’ இவைகள் ஒன்றைத் தீர்மானிக்கின்றன.

எர்னெஸ்டின் கருத்து இன்று அறிவியலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வாளரும் எழுத்தாளருமான ஜெயர் பின்டோ (Zair Pinto) நாம் எதிர்பார்ப்பவைகளை வெகு விரைவில் காண்கிறோம் என்று சொல்கிறார். ஒரு பரிசோதனையில் ஒருவரின் கண் முன்னால் வெகு விரைவில் செல்லும் புவியியல் அமைப்புகள் காட்டப்பட்டன. சிறிது சிறிடாக மங்கும் வீடோ, முகமோ காட்டப்பட்டது. வீட்டைக் காணுங்கள் என்ற சொன்னவுடன் அவர்கள் துரிதமாக அதைக் கண்டார்கள்; அதைப் போலவே முகமும். நம்முடைய எதிர்பார்ப்புகள் நம் உணர்தன்மையை விரைவாக்குகிறது என்பது நிரூபணமானது.

சுயம் என்ற உணர்வு கட்டுப்படுத்தப்பட்ட மாயத் தோற்றங்களின் கூட்டே

உணர்வின் மூன்றாவது பகுதி சுயம் அல்லது தான் அல்லது நான் என்று சொல்லப்படுகிறது.

உண்மையில் சுயம் அல்லது ஆத்மா என்பது உங்களுக்குள் மிக ஆழத்தில் இருக்கிறதா? இல்லை, அப்படியொன்றுமில்லை. சுயம் என்பதும் உங்கள் மூளை கட்டமைக்கும் ஒரு மாயமே. அது ஒற்றை உணர்வைச் சார்ந்ததில்லை- அது பல்வேறு கூறுக்களால் ஆனது.

முதலாவது நான் என்று உணரும் இந்த உடல். இந்த உடல் என்னுடையது என்ற கோணத்தில் உலகில் நாம் செயல்படுகிறோம்.

அடுத்ததாக, நமக்கு சுதந்திரம் இருக்கிறதென்றும், நம் செயல்பாடுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றும் நினைக்கிறோம்/ நம்புகிறோம்.

நமக்கே நமக்கான வரலாறும், குணாதியசங்களுமான மூன்றாவது பகுதி; அது நம்மைப் பற்றிய குறிப்பு.

நமது சமூக சுயம் என்ற ஒன்றும் இருக்கிறது. நம்மைப் பற்றி பிறர் உணர்வதை அறியும் பகுதி இது. எனவே, கட்டுப்படுத்தப்பட்டுள்ள மாயத் தோற்றங்களின் கலவை இவ்வகைகளில் சுயம் என ஆகிறது.

இவற்றை நாம் தனித்தனியாக, வேறுபட்டவைகளாகக் காண்பதில்லை. அவை ஒன்று கலந்து ‘நானாக’ இருக்கிறது. அதற்காக அதை உருவற்ற ஆத்மா என எடுத்துக் கொள்ளக் கூடாது. சுயம் பிரிந்து செயலிழந்தோ, ஒன்றை மற்றொன்று வெல்வதோ நடக்கிறது. ‘மர்மக் கை செயல்பாடு’ (Alien-hand syndrome) என்பதில் உடலின் ‘சுயப்’ பகுதியும், சுதந்திரச் செயல் புரியும் ‘சுயப்’ பகுதியும் சமரசம் செய்து கொள்கின்றன. தங்கள் கைகள் அந்தச் செயலைச் செய்யவில்லை என அவர்கள் சொல்கிறார்கள்/ நம்புகிறார்கள். மயக்க மருந்திலோ. மயக்க போதைகளிலோ சுயம் என்பது மாறுபட்ட ஒன்றாகிவிடுகிறது.

நிகழ்நிலை உண்மைக் காட்சிகளில் உங்கள் உடம்பிலிருந்து நீங்கள் மற்றோர் உடலிற்குச் செல்ல முடிகிறது. பார்ஸிலோனாவிலுள்ள ‘ பி அனதர் லேப்பில்’(Be Another Lab) உங்கள் உடலை யதேச்சையாக அங்கு வரும் நபரின் உடலுடன் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்; வேறொரு உடலில் வசிப்பதாக உணரலாம். வலிப்பு நோயின் அறிகுறிகளை நீக்குவதற்காக மூளையின் அரைக்கோளங்களை அறுவை சிகிட்சையின் மூலம் பிரித்தார்கள்; இரு மாறுபட்ட ஆளுமைகள் உண்டாயின.

இம்மாதிரியான பரிசோதனைகள் சொல்வது ஒன்றுதான்- சாதாரண சூழலில் இருக்கும் ‘நான்’ எப்போதும் அப்படியே நீடிப்பதில்லை. என்னைச் சார்ந்த மதிப்புகள், நம்பிக்கைகள், அனுமானங்கள், மூளையின் நிரந்தரப் பார்வைகள், அவை மேம்படுதல் போன்ற பலவற்றின் கலவை- சிதறியும் போகும். ‘நான்’ என்பது மூளையின் தந்திரமான மாயத் தோற்றம். ஆனால், அது விளையாட்டாகச் செய்யப்படுவதில்லை. நம் இருப்பே, இருப்பின் விழைவே இதனால் தானே ஏற்படுகிறது.

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த டெனெ டெஸ்கா(ர்)ட்ஸ் (Rene Descartes) வாழும் உயிரிகள் அனைத்துமே மிருக இயந்திரங்கள் என்றும், மனிதனுக்கு மட்டும் தெய்வீக, உருவமற்ற / பொருளற்ற ஆன்மா உள்ளது என்றும் சொன்னார். அவர் சொன்னதில் ஒரு பாதி சரி; மனிதன் இயந்திரம் போல உழைக்கிறான். ஆனால், நாம் உணர்வோடு இருப்பதில் பொருளற்ற ஆன்மாவின் பங்கு இருக்கிறதா என்ன? சுவாசிக்கும் இந்த மனித இயந்திரத்தில் உணர்வு என்பது உள்ளார்ந்தது. வாழுகின்ற இந்த உடலால் தானே உலகை அறிகிறோம்?

நம் உடல் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றதோ அப்படித்தான் உணர்வும் வளர்ந்தது. நம்மை நாமே புலனாய்வு செய்வதற்காக பரிணாமம் வளரவில்லை; நாம் வாழ்வதே, அந்த உணர்வினால்- சுய உணர்வினால் தான். எனவே உணர்வு என்பது இயற்கைச் செயல்முறை.

நாம் வாழ்வதற்கு உணர்வு என்பது எவ்வளவு அவசியம் என்பதை 70 களில் கோலோச்சிய அறிவியல் துறையான ‘தன்னாள்வியலைப்’ (Cybernatics) பார்க்க வேண்டும். அதன் முதன்மை நோக்கம் மிருகங்களும், இயந்திரங்களும் தங்கள் உடலை எவ்வாறு கட்டுப்படுத்தி தொடர்பில் இருக்கின்றன என்பதை ஆய்வதே. மிருகங்கள் தங்கள் உடலின் வெப்ப நிலை போன்றவற்றை சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும்- இது கட்டுப்பாட்டை நோக்கி நிகழ்த்தப்படும் ஒரு உணர்வுச் செயல்பாடு என்று தன்னியல் ஆதரவாளர்களான வில்லியம் ராஸ் ஆஷ்பி, (William Ross Ashby) ராஜர் கானெட் (Roger Conant) சொல்கிறார்கள். பசிக்கையில் உணவு, ஒய்வெடுக்க உறக்கம் போல இந்த உடலை உணர்தல், தன்னியல்பு என்பது அவர்களது வாதம். வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) இரண்டாவது விதியான ‘என்ட்ரோபி’ (entropy)யுடன் அனைத்து உயிரினங்களும் போரிடுகின்றன. எந்த அமைப்பும் கால மாறுதலுக்கும், அதனால் ஏற்படும் சிதைவுகளுக்கும் உட்பட்டவையே. அதனால் தான் வாழும் சூழல் மாதிரிகளை தொடர்ந்து அமைத்து, கண்காணித்து, வளர்ச்சியின் நிழலான வீழ்ச்சியை குறைக்கும் செயல்பாடுகளில் உணர்வின் மூலம் உயிரினங்கள் ஈடுபடுகின்றன.

மனித இனத்திற்கும் இது பொருந்துகிறது. நம்முடைய கட்டுப்படுத்தப்பட்ட மாயத் தோற்றங்கள், பிரமைகளைக் கட்டுப்படுத்துகின்றன.

உதாரணத்திற்கு சுய உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு ஒரு செயலைச் செய்ய சுதந்திரம் இருக்கிறதென்று நம் ‘சுயத்தின்’ ஒரு பகுதி சொல்கிறது. குறிப்பிட்ட ஒரு சூழலில், நாம் “ ‘இதை’ வேறுவகையாகச் செய்திருக்கலாமோ?” என்று தோன்றுகிறது. ஆனால், அந்தச் சந்தர்ப்பத்தில் அது அந்த வகையில் தான் செய்ய முடிந்திருக்கக்கூடும். ஆனால், இந்த உணர்வானது, மறுமுறை ஒரு செயலை நாம் முன்னெடுக்கையில், நமக்கு ஒரு அனுபவ அறிவாக வழிகாட்டும். இங்கே ஒரு பொறியியலாளரைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். 70 களில் இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமான ஒன்று. சிறந்த மதிப்பெண்கள் இருந்தும் அவர் விரும்பிய துறையில் அவர் படிக்க முடியவில்லை. அந்தக் கனவை கைவிடும் முன் அவர் தன் மூத்த மாணவர்களிடம் பேசினார். அவர்கள் ஓராண்டு முழுதும் பொறியியலுக்கு இயைபான இயற்பியல், கணிதம் போன்றவற்றைத் தெளிவாகப் படித்து பின்னர் நுழைவுத் தேர்வெழுதச் சொன்னார்கள். வீட்டாரோ ஒரு வருடம் வீண், அப்படியும் இடம் கிடைக்கவில்லையென்றால் என்று கேள்வி எழுப்பினர். அவர் தன் மூத்த மாணவர்களை நம்பினார். இயந்திரவியல் பொறியியல் படிப்பு முழுதும் ஊக்கத் தொகையில் முடித்தார். இன்று தான் படித்த கல்லூரியில் அந்தத் துறைக்கான ஆய்வு அமைப்பிற்கு பெரும் நன்கொடை கொடுத்துள்ளார். அடிப்படை என்னவென்றால், பள்ளிப் படிப்பில் சிறந்த மதிப்பெண் இருந்தும், நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மதிப்பெண்களை முன்னர் அவர் பெறவில்லை. அதைக் கருத்தில் கொண்டு வெற்றியும் பெற்றார்.

உணர்வு அனைத்து உயிர்களுக்கும் உண்டு.

எனினும், அவை உயிரியல் செயல்முறையைப் பொறுத்து மாறுபடுகிறது.

ஆம், மிருகங்களுக்கு உணர்வு உண்டா? உறுமியதற்காகவும், குழந்தைகளைக் கொன்றதற்காகவும், பன்றிகள், நீதி மன்றத்தில் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டன. இன்று இது கேவல நகைப்பிற்குரிய ஒன்று; அதே போலத்தான் விலங்குகளுக்கு உணர்வில்லை என்று சொல்வதும்.

விலங்குகள் உணர்வு எந்த அளவில்?

அளவிடுவது கடினம். ஒரு விலங்கின் அது பார்த்திராத பகுதியில் சிவப்புப் புள்ளி வைத்து பின்னர் அப்பகுதியை அந்த விலங்கிடம் கண்ணாடியில் காட்டினார்கள். அதால், தன்னை அடையாளம் காண இயலவில்லை. சில குரங்கினங்கள், டால்பின், ஒரு யானை இவற்றைத் தவிர பல விலங்குகள் இந்தக் ‘கண்ணாடி பரிசோதனை’யில் தோற்றன.

மீன், பறவை, பாலூட்டிகள் அனைத்திற்கும் உள்ளுணர்வு இருக்கிறது என நாம் நம்புகிறோம். விழிப்பிலும், உறக்கத்திலும், நாமும், மற்ற உயிரினங்களும் ஒரே மாதிரியான மூளைச் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறோம்.

எனினும்,அவைகளுடையதும், நம்முடையதுமான உணர்வுகளில் மிகுந்த வேறுபாடுகளுள்ளன என ஆய்வுகள் சொல்கின்றன. ஆக்டோபஸ்ஸை எடுத்துக் கொள்வோம்; அதன் நரம்பு மண்டலம் நம்மிடமிருந்து மிகவும் மாறுபட்டது; அது அதி புத்திசாலி. அதன் அங்கங்கள் முழுதும் மூளை. ஆனாலும், அது ‘கண்ணாடிப் பரிசோதனையில்’ வெற்றி பெறவில்லை.

சரி, உயிரற்ற பொருட்களுக்கு உணர்விருக்கிறதா? செயற்கை நுண்ணறிவு அதை சாதிக்கலாம். தன் உடல், தன் சூழல், தன் ஊகங்கள், ஊக மேம்படுத்தல்கள், உடல் இயக்கங்கள் போன்றவைகளின் கூட்டறிவின் கலவையாக உணர்வினைச் சொல்கையில் எந்த அளவிற்கு இயந்திரத்தில் இது சாத்தியம் என்ற கேள்வியும் எழாமலில்லை. உடலின் ஒவ்வொரு திசுவும் ‘ நான் வாழ்கிறேன், நான் இருக்கிறேன்’ என்று சொல்கின்றன.

உணர்வு என்பது சிக்கலான ஒன்று. அது தத்துவவாதிகள் சொல்வதைப் போல் தெய்வீக ஒளிக்கீற்றல்ல. வாழும், சுவாசிக்கும் உடலின் செயல்தான் அது. மூளையிலுள்ள கட்டுப்படுத்தப்பட்ட மாயங்களின் தொகுப்பு. காலப்போக்கில் இந்த புதிர் அவிழலாம்.

இந்திய ஞான மற்றும் யோக மரபு ‘நான்’ என்னும் சுய உணர்வை மூளையின் கூட்டுக் கலவை எனச் சொல்வதில்லை. புத்தி (மூளை), மனஸ் (மனது). அகங்காராம் ( அடையாளம் ) சித்தி எனப் பகுக்கிறது. புத்தி முன் மடல் (Front Lobe) எனப்படுகிறது. மனது நினைவுச் சேகரிப்புப் பகுதி. இந்த மனதிற்கே பதினாறு பரிமாணங்களுள்ளன. மனதும், உடலும் நுணுக்கமாகப் பிணைந்திருக்கின்றன. உணர்வானுபங்களில் மனது ஈடுபடுகிறது, அவற்றைக் குறி வைக்கிறது. அச் செயல்களை மனதின் நேர்மறை, எதிர்மறை, வெகு எழுச்சி, தாழ்வெழுச்சி, இதம், திறம், முகமை, அனுபவம், உணர்ச்சி, காரணம், மனதும்-உடலும், உடலும்- மனதும், சமூகம், சமூகத் தேவையின்மை ஆகிய 16 பரிமாணங்கள் அலசுகின்றன. அவரவர் அடையாளத்திற்குத் தக்கவாறு விளைவுகள் ஏற்படுகின்றன. நினைவு மனதின் செயல்பாடு; ஆனால், தீர்மானிப்பது அகங்காரம் தான். எனவே நினைவுகளுக்கு எல்லையுண்டு. சித்தம் இந்த மூன்றையும் அறியும், ஆனால், மூன்றுடன் வினை புரியாது.

அம்ருதபிந்து உபனிஷத் (2 வது பாடல்) சொல்கிறது: மனமே ஒருவரை பந்தத்தில் பிணைக்கிறது; அதுவே விடுவிக்கவும் செய்கிறது.

मन येव मनुश्याण कारण बन्दमोक्षयो: बन्धाय विश्याशक्थम् मुक्थम् निर्विसयम् स्म्रुतम्.

निरपेक्षो निर्विकारो निर्भरः शीतलाशयः ।
अगाधबुद्धिरक्षुब्धो भव चिन्मात्रवासनः ॥

தூய உணர்வைப் பற்றிக் கொள்ளுங்கள்- அது நிபந்தனையற்றது, உருவற்றது, நகராதது, புரிந்து கொள்ள இயலாத விழிப்பு அது, குழப்பமில்லாதது.

என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்?

உசாவிகள்:

  • உபனிடதங்கள், காட்சி ஊடக உரைகள்,
  • A new science of Consciousness- Book by Anil Seth.

One Reply to “நான் யார் யாரென்று சொல்லவில்லை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.