சீமாப் அக்பராபாதி

This entry is part 4 of 5 in the series கவிதை காண்பது

நீண்ட ஆயுளுக்கு தவமிருந்து
நான்கு நாள்களைப் பெற்று வந்தேன்
இரண்டு எதிர்பார்ப்பிலும்
இரண்டு காத்திருப்பிலும் கழிந்தன

இது அடிக்கடி உருதுவில் மேற்கோளாகக் காட்டப்படும் கவிதை இந்தக் கவிதையை எழுதியவர் சீமாப் அக்பராபாதி. புத்தர் குறித்தும், ஹோலிப் பண்டிகை குறித்தும் கவிதை எழுதியிருப்பவர்.

புத்தரைக் குறிப்பிடும்போது ‘இந்தியத் திருநாட்டின் முதல் ஒளி’ (சர்-ஜமீன்-ஏ-ஹிந்த் கா இர்ஃபானி-ஏ-அவ்வல் ஹை து) என்கிறார். இந்தியாவில் உன் ‘நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன / சீனம் ஜப்பான் திபெத் வரை உன் குரல் எட்டியுள்ளது’ என்பது அந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு அடி. தன்னுடைய ஹோலி கவிதையில் சீமாப் விடுதலை வேட்கையையும் இணைத்து எழுதியுள்ளார். ‘என் மடியில் முன்னேற்றம் தன் வண்ணங்களை நிறைக்கட்டும் / என்னுடைய ஹோலியின் வருகையைப் போல் விடுதலையும் வரட்டும்’ (இர்த்திகா கே ரங்க் சே லப்ரீஸ் ஜோலி ஹோ மேரி / இங்குலாப் ஐசா கோயி ஆயே தோ ஹோலி ஹோ மேரி).

அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் பதிவு செய்தவர்கள் அவருடைய உடைத் தேர்வைத் தவறாமல் குறிப்பிட்டுள்ளனர். அழகிய ஷேர்வானி, வெள்ளை பைஜாமா துருக்கித் தொப்பியுடன் மிடுக்காக இருந்த்தாகக் குறிப்புகள் சொல்கின்றன.

அரபி, உருது, பாரசீகம் ஆகிய மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்ரிருந்த சீமாப், ரூமியின் மஸ்னவியை உருதுவில் மொழிமாற்றம் செய்துள்ளார். 1898இல் கான்பூரில் இரயில்வேயில் தனக்கிருந்த பணியை உதறிவிட்டு, புகழ் பெற்ற கவிஞர் தாக் தெஹ்ல்வியின் சீடனாகச் சேர்ந்து அஜ்மீருக்குச் சென்றார். அதன் பின்னர் 23 ஆண்டுகள் கழித்து, 1921இல் வளரும் கவிஞர்களுக்குப் பயிற்சி அளிக்க தன்னுடைய கஸ்ர்-உல்-அதாப் (பண்பாட்டு மாளிகை) பயிற்சிப் பட்டறையைத் துவங்குகிறார். பத்திரிகை துவங்குகிறார். 1936இல் அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியானது.

தன்னுடைய திருக்குர்-ஆன் மொழிமாற்றத்துக்கு பதிப்பாளரைத் தேடும் முயற்சியில் 1948இல் லாஹூருக்குப் பயணமான சீமாப் அக்பராபாதி தனது சொந்த ஊரான அஜ்மீருக்குத் திரும்பவேயில்லை, கராச்சியில் 1949இல் கடுமையான மாரடைப்புக்கு ஆளாகி அதிலிருந்து மீளாமல் 1951 இயற்கை எய்தினார். சீமாப்பின் இறப்புக்கு பின் நீண்ட நாள்கள் கழித்து அவருடைய மூன்று புத்தகங்கள் வெளியாயின.

சீமாப் அக்பராபாதியின் கிருஷ்ணன் கவிதையிலிருந்து சில வரிகள்:

பேரானந்தத்தை இசைக்கின்ற புல்லாங்குழலைக் கொண்டு 
இம்மண்ணின் பருவங்களில் காதல் கீதத்தைப் பாடித் திரிந்தான்

(ஃபஸா-யே-தர் மேன் காத்தா பிரா வோப்ரீத் கே கீத்
நஷாத்-கேஸ்-ஓ-சுக்கூன்-ரேஸ் பான்சுரி லேக்கர்)
*

புன்னகையுடன் சுகதுக்கங்களைக் கடந்தான்
காலத்துடன் அதிசயங்களை நடத்தி விளையாடினான்

(ஹன்சி ஹன்சி மே வோ துக் தர்த் ஜீல்தாஹி ரஹா
கரீஷ்மாபாஸ் ஸமானேசே கேல்தாஹி ரஹா)

விண்ணுக்கு அந்தப் பொற்காலத்தின் சொற்கள் நினைவில் உள்ளன
அந்தப் புல்லாங்குழலிசை, அந்த அன்பு, அந்த மங்கிய இரவு

(ஃபலக் கோ யாத் ஹை இஸ் அஹ்லே பாக் கி பாத்தேன்
வோ பான்சுரி வோ மொஹப்பத் கி சான்வ்லி ராத்தேன்)
*

இதயத்தில் அன்பின் வண்ணங்களை அழுத்தமாக வரைந்தான்
இந்துஸ்தானத்தைத் தன் கீதையால் இன்னிசை பாடவைத்தான் 

(திலோன்மே ரங்கே மொஹப்பத் கோ உஸ்த்துவார் கியா
சவதே ஹிந்த் கோ கீதா சே நக்மா-பார் கியா)
*
Series Navigation

One Reply to “சீமாப் அக்பராபாதி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.