கல்வித் துறைக் கொடுமையாளர்கள்

ஆட்ரி ட்ருஷ்கி (Audrey Truschke), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மதப்படிப்பு பேராசிரியர். முகலாயர்கள் ஸமஸ்க்ருத மொழியின் ஆதரவாளர்கள் என்பதைப் பற்றி செய்துள்ள ஆய்வுகளினால் சற்றே பிரபலமானவர். அந்த இடத்தை அடைவதற்கே, கருத்தியல் ரீதியான கட்டாயக் கோட்டில் கால் பிறழாமல் நடந்தவர். அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ இந்துக்களை தங்கள் தூண்டிலில் மாட்ட விழையும் நிறுவனம் எதிர்ப்பாளர்களை கல்வி உலகத்தில் நீண்ட நாள் காலூன்ற விடாது. எதிர்பார்த்தது போலவே, முந்தைய தலைமுறை கல்வியாளர்களின் நிலையையே இவரும் விரிவுபடுத்துகிறார். உதாரணம், அவுரங்கசீப்பிற்கு வெள்ளை பூச்சு.இது அவருக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. ஏனென்றால் அவர் தான் கூறுவதை உண்மையாகவே நம்புபவர் எனத் தோன்றுகிறது. மாறாக, மற்றவர்கள் விரும்பும் கருத்துக் பதிவை வெளியே காட்டி விட்டு உண்மை நிலையை தனக்குள்ளே மூடி மறைத்திருக்கவும் கூடும்.

கொடுமைப்படுத்தல் (Bullying)

அவரது “வரலாற்றில் வலதுசாரிகளின் பிரச்சனை “(The Right’s problem with history-DNA,26 October 2016) என்ற கட்டுரை மூலமாக அவர் நிலையை சுருக்கமாக “இந்தியாவின் வரலாற்று எட்டுக்கட்டுகளை அறிவுபூர்வமாக பாதுகாக்க இயலாததால் ஹிந்து வலதுசாரிகள் மற்றொரு வழியில் பதில் சொல்ல இறங்கியுள்ளனர்: அதன் பெயர் கொடுமைப்படுத்தல்” என எழுதியுள்ளார். மதசார்பற்ற வரலாற்று ஆசியர்களையும் அவர்களைது மேற்கத்திய புளுகுணிகளையும் அதே தர வரிசையிலுள்ள மாற்றுக் கருத்துடைய – அதாவது ஹிந்து வலது சாரியை சேர்ந்த – வரலாற்று ஆசியர்களுடன் ஒப்பிடுவதுதான் முறையானது. இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாமால் இருப்பதின் காரணம், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கல்வியாளர்கள் தங்களது ஒரு கருத்தை மட்டுமே அனுமதிப்பதால் இவர்களை உள்ளே வர விடாமல் தடை செய்து வைத்துள்ளதுதான். அவ்வாறிருந்தும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களும் அவர்களது ஆய்வுகளும் ஆட்ரியின் பதிவில் காணவில்லை. ஒரு தெருச் சண்டைக்காரன் மற்ற தெருச் சண்டைக்காரர்களை இகழலாம். ஆனால் ஒரு கல்வியாளர் அவரையொத்தவர்களுடன்தான் விவாதத்தில் இறங்க வேண்டும்.

Koenraad Elst, David Frawley, Wendy Doniger, Sheldon Pollock

இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள புகைப்படமே இவர் சொல்லப்போவதை முழுவதுமாக அறிவித்து விடுகிறது.இக்கட்டுரை இவரது பல்கலைக்கழகத்தின் வரலாறாக இருந்திருந்தால், அங்கு நிலைபெற்றுள்ள வெண்டி டோனிகர், ஷெல்டன் போல்லாக் போன்றவர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். இக்கட்டுரை இவர்களது எதிராளிகளை பற்றியது என்பதால், வரலாறு சம்பந்தப்படாத ஒரு குழுவின் புகைப்படத்தை பார்க்கிறோம். அவர்கள் குளிரூட்டப்பட்ட கூடத்தில் அமர்ந்திருக்கவில்லை. தங்கள் கருத்து சுதந்திரத்திற்காக தெருவில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பவர்களின் கூட்டம். வாசகர்களிடம் , இவர்கள்தான் ஹிந்து வலதுசாரிகள் அல்லது கொடுங்கோலர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதற்காக இணைக்கப்பட்ட புகைப்படம்.

ஹிந்து வலதுசாரிகளின் திட்டுகளை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது எனக் கூறியுள்ளார். இது ”அவருடைய மதம், பால், இன அடிப்படையில் நடந்த தனிப்பட்டத் தாக்குதல்” என மதிப்பிட்டுள்ளார். ஒரு திருத்தம்: இதே மதம், பால், இனத்துடன் இவர் தென்னாசிய அறிஞர்கள் குழுவைச் சேராதவராய் இருந்திருந்தால் ஹிந்துக்கள் இவரை பழித்திருக்க மாட்டார்கள். (உண்மையாகச் சொல்வதாயிருந்தால், பெரும்பாலான யூத வெள்ளைப் பெண்மணிகள் எங்குமே தாக்கப்பட்டதில்லை). இவ்வறிஞர்கள் தங்களை தூண்டிலில் மாட்டுபவர்களாக ஹிந்துக்கள் கருதுகிறார்கள். எனவே, அவர் எழுதியதைத்தான் தாக்குகிறார்கள். வேறெதற்குமல்ல.

ஆனால், உண்மையான வருத்தப்படக்கூடிய விஷயம், அருவருப்பைத் தருமளவிற்கு, உச்ச தொனியில் சில நபர்கள் கருத்தியல் கண்டிப்பை தனிப்பட்ட நீசத்தனமான தாக்குதல் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். ஆட்ரியின் அவல நிலை எனக்கு புரிகிறது. ஹிந்து பாரம்பரியவாதிகள், சம்ஸ்கிருதம் ஆதியும் அந்தமுமற்ற மொழி, வேதம் கடவுளால் இயற்றப்பட்டது, ராமசேதுப் பாலம் வானரங்களால் கட்டப்பட்டது, கிருஷ்ணரை போற்றும் பக்திப் பாடல்கள் கீதையை சேர்ந்தது போன்ற நம்பத்தகாத விவரங்களை உண்மையாக கருதுகின்றனர். அது போல, ட்ருஷ்கி பணிபுரியும் பல்கலைகழகமும், இந்தியாவில் முஸ்லீம் அரசாட்சி எவ்வித தீங்குகளையும் விளைவிக்கவில்லை, சம்ஸ்கிருதம் இந்தியாவிற்கு வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி போன்ற கோட்பாடுகளை தகர்க்கமுடியாதவையாக நினைத்துள்ளனர். ஆதாரமற்ற இத்தகைய கூற்றுகளை நான் மறுத்து எழுதியதை கண்டித்து கணிசமான வெறுப்பு அஞ்சல்கள் என்னையும் வந்தடைந்துள்ளது. அபாயககரமான தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே ட்ருஷ்கி வருணிப்பது போல் நேர்முகத் தாக்குதலை எதிர்கொண்டார் என்பது சந்தேகத்திற்கிடமான உள்ளது. ஒருவேளை டோனிகர் மீது லண்டனில் முட்டை வீசப்பட்டதை வைத்துக் கூறுகிறாரோ?

ஆரம்பத்திலேயே, தார்மீகத்தின் உச்சி நிலையை பிடிப்பதற்காக, அவரை ஒருவர் ‘விஷ வாயுவால் இந்த யூதரை கொல்லுங்கள் ‘ என கடுமையாக சாடினார் என்கிறார். அமெரிக்காவில், ஹோலோகாஸ்ட் எனப்படும் படுகொலையை தனி நபர் எவரையும் குறித்து உபயோகிப்பதில்லை. இந்திய மத சார்பற்றவர்களும் மேற்கு வகுக்கும் வழியையே பின்பற்றுவதால் அவர்களும் இதே உணர்வைத்தான் கொண்டுள்ளனர். சாதாரண ஹிந்துக்கள், இரண்டாவது உலகப்போர் சம்பந்தப்பட்ட விவரங்களில் தேவைக்கு மீறிய கவனம் காட்டுவதில்லை. மேலும், அவர்கள் யூதமதத்தை வெறுப்பவர்கள் அல்ல. எனவே, இவருடைய மேற்கோள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மற்றும், ஹிந்துக்கள் தங்கள் மதத்தை போலவே பிற மதங்களையும் மதிப்பவர்கள்.

இவரது கூற்று உண்மையாக இருக்கவும் சாத்தியமுண்டு. ஏனென்றால், சில மூளை கொதிப்புடைய ஹிந்துக்கள் இத்தகைய சொற்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இணையதள காலத்திற்கு முன், இவர்கள் சொந்த சதிக் கோட்பாட்டு கஷாயத்தை காய்ச்சிக் கொண்டிருந்தனர். தற்சமயம், இணையதளத்தின் வலைப்பக்கங்களை சுயமாக அணுக முடிவதால், யூதர்களின் மேல் காழ்ப்புணர்ச்சியை உண்டு பண்ணுவதற்காகவே விவரிக்கப்படும் “யூதர்களின் சதித் திட்டங்கள்” போன்ற போலி விவரங்களில் மீண்டும் மீண்டும் துப்பப்படும் தவறான பதங்கள் இவர்களது வாயிலிருந்தும் வெளிவருகிறது.இது வருந்தத்தக்க ஒன்று. ஆனால், இது நிச்சயமாக ஹிந்து வலதுசாரிகளிடமிருந்து வந்தது அல்ல. இது வலதுசாரியிலுள்ள சண்டைவாதிகள், தலைவர்கள் இருவருக்குமே பொருந்தும். (சாவர்க்கர், கோல்வால்கர் இருவருமே யூதர்களை பாரம்பரியப் பற்றுதலுக்கு முன்மாதிரியாகக் கருதினர்) எனவே, இவர் புறக்கணிக்கும் வலதுசாரி அறிஞர்கள் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வந்திருக்கவே முடியாது.

கல்வித்துறையின் சண்டை போக்கு : (Academic Bullying)

ஆட்ரி ட்ருஷ்கி குறிப்பிடும் சண்டை போக்கு இவர்களது கட்சியின் போக்கை ஒத்ததாக உள்ளது. உதாரணத்திற்கு, 1996ல் மாடிஸன், விஸ்கான்சின் நகரில் நடந்த தென்னாசிய மாநாட்டில் இரண்டு முறையும், அதற்கு முன் பேராசியர் ஆண்ட்ரு சிக்ளர் (Andrew Sihler) தொகுத்து வழங்கிய தனி நிகழ்விலும் என்னை பேசவிடாமல் தடுக்க முயன்ற இடதுசாரி மாணவர்களை குறிப்பிடலாம். அல்லது, தர்மா சிவிலிசேஷன் பவுண்டேஷன் (Dharma Civilization Foundation), இர்வைன் நகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசியர் இருக்கைக்கு நிதியளிக்க முன்வந்தபோது அதை எதிர்த்து வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதையும் கூறலாம். சவுதி அரேபியா இது போன்ற பல இருக்கைகளுக்கு நிதியுதவியை எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் செய்துள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.

ட்ருஷ்கியின் பக்கத்தில், சண்டைக்காரர்களையும் கல்வியாளர்களையும் பிரிக்கும் கோடு நேரான ஒன்றல்ல. பல்கலைக்கழகப் பதவியை பத்திரப்படுத்திக் கொண்டபின் (Tenured) தெருச் சண்டையில் ட்ருஷ்கி இறங்க வேண்டிய அவசியம் என்ன? சம கல்வியாளர்களுடன் சண்டையிடுவது இன்னுமே பயனுள்ளதாக அமையும். கலிபோர்னியா மாகாண பாடப் புத்தக விவகாரத்தில், ஹிந்து பெற்றோர்கள் ஹிந்துக்களை இழிவு படுத்தும் பகுதிகளை நீக்க முனைந்தபோது, வெளிப்படையாகவே பாகுபாடுடைய பேராசிரியர்கள் இவ்விவகாரத்தில் தலையிட்டதோடல்லாமல் மத்தியஸ்தர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்டனர். இவர்கள் கல்வித்துறையை சேர்ந்தவர்களாக மட்டும் இல்லாமலிருந்தால் இதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. (ஹிந்து பெற்றோர்களின் நிலைப்பாட்டைப் பற்றிய எனது விமரிசனம் ஏற்கனவே பதியப்பட்டுள்ளது). தெருச்சண்டை செய்பவர்களிடம் இவர் காட்டும் கவனம், வாசகர்களின் கவனத்தை தவறான வழியில் எடுத்துச் செல்வதால், கல்வியாளர்களுடன் செய்யும் வாதத்தின் மூலம் கிடைக்கும் பலனை இல்லாமல் செய்து விடுகிறது.

தங்களுக்கு பிடித்தமான ஒரு புத்தகத்திற்கு ஏதாவது தடையேற்பட்டால் உடனே, ‘தணிக்கை’ என்று கூக்குரலிடும் இதே பேராசியர்கள் நான் இந்தியவியல் மன்றங்களில் கலந்து கொள்வதை நேரடியாக தலையிட்டோ அல்லது பின்னிருந்து உடந்தையாகவோ பல முறை தடை செய்துள்ளனர். 300 ராமாயணங்கள் என்ற மூல ராமாயணத்தை சிறுமைப்படுத்தும் புத்தகத்தை டில்லி பல்கலைக்கழகம் கட்டாய புத்தக வரிசையிலிருந்து நீக்கிய போதும், வெண்டி டோனிகரின் தவறுகள் மலிந்த ஹிந்துக்கள்: ஒரு மாறுபட்ட வரலாறு என்ற புத்தகத்தை முதல் பதிப்பகம் திரும்பப்பெற்ற போதும் கருத்து சுதந்திரம் பறி போகிறது எனப் பதறிய அதே பேராசியர்களிடம் ரீசா (Religion in South Asia) மன்றம் அதனுடைய சாசனத்தை மீறி என்னை தடை செய்துள்ளதை ரத்து செய்ய முறையிட்டபோது வாய் மூடி மௌனிகளாக இருந்து விட்டனர்.

ஒரு சமீபத்திய உதாரணம். 2014ல், ஸுரிக் நகரில் நடந்த தென் ஆசிய ஆய்வு மன்றத்தின் ஐரோப்பிய மாநாட்டில் ‘தெய்வீகம்’ என்ற கருத்துக்குழுவில் ரிக் வேத ரிஷி வசிஷ்டரின் தெய்வீகம் என்ற கட்டுரையை வாசித்தளித்தேன். அது, பார்வையாளர்களிடமும், பதிவிற்கான இறுதி கட்டுரை குழு நிர்வாகிகளிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதை ஏற்றுக் கொண்ட பின் நிர்வாகிகளிடமிருந்து ஒரு காரணமும் கொடுக்காமல் எனது கட்டுரையை பதிப்பிக்க இயலாது என்று ஒரு மின்னஞ்சல் வந்தது. மேலும் விசாரித்ததில், அவர்களது திட்டத்துடன் ஒத்து வரவில்லை என்ற அரைகுறை பதில் கிடைத்தது. இதை பெரிதாக கருத்தாவிட்டாலும், இது ஒரு அப்பட்டமான பொய் என்பது இவர்கள் முதலில் இதை உற்சாகமாக ஏற்றுக்கொண்டதிலிருந்தே தெரிகிறது. மேலிடத்திலுள்ள யாரோ ஒருவர், இதர சந்தர்ப்பங்கள் போலவே, என்னை விலக்கி வைக்கப்பட்டவனாக நடத்தப்பட வேண்டும் என எச்சரித்திருக்க வேண்டும்.

முக்கியமாக, இந்தியாவிலும் அமெரிக்காவிலும், ஹிந்து ஆதரவாளர்களை கல்விக்கூடங்கள் உள்ளே வரவிடாமல் தடை செய்கின்றன. அவர்களது ஆய்வுகளையும் வேண்டுமென்றே புறக்கணிக்கின்றன. இந்தியாவில், இதை மூடிமறைத்துள்ள கம்பளிப் போர்வையை டாக்டர். ஏ. தேவஹுதி எழுதிய “வரலாற்று எழுத்தாண்மையில் ஒருதலை சார்பு (Bias in Indian Historiography-1980) என்ற புத்தகம் சற்றே விலக்கியுள்ளது. மேம்படுத்தப்பட்ட இப்புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது எனத் தெரிகிறது. அமெரிக்காவில், ராஜிவ் மல்ஹோத்ரா அவருடைய ‘புனிதத்தின் மேல் படையெடுப்பு’ (Invading the Sacred-2007), ‘கல்வித்துறையின் ஹிந்து வெறுப்பு’ (Academic Hinduphobia– 2016) என்ற புத்தகங்கள் வாயிலாக திரையை சிறிதே விலக்கியுள்ளார்.

Sources of Funding by Country

ஹிந்து வெறுப்பு : (Hinduphobia)

ட்ருஷ்கியின் கட்டுரைக்குள் செல்வோம்! ‘கல்வியாளர்களை ஹிந்து வலதுசாரிகள் தாக்குகின்றனர் என குற்றம் சாட்டுகிறார். இவர்கள் ஹிந்துக்களை எதிர்க்கும் இடதுசாரிகளைத்தான் தாக்குவார்கள் என எதிர்பார்த்தேன். இந்த கல்வியாளர்களையும், ட்ருஷ்கியையுமே இவர்கள் இவ்வாறுதான் பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்நிலை மாற வேண்டுமென்றால், இவரது எதிராளிகளை பெயரிடுவதை முதலில் நிறுத்தவேண்டும். வலம்/ இடம் எனும் இரட்டைப் பிரிவு சங்கடத்தை உண்டுபண்ணக் கூடியதென்றாலும், கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அனைத்து விவரங்களும் இதன் கீழ்தான் வருகின்றது. ஆனால், இடது சாரிகள் தங்களை நடுநிலையாளர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் வலப்பக்கம் இருப்பவர்களை வலதுசாரிகள் அல்லது தீவிர வலதுசாரிகள் என அரசியல் சாயம் பூசுகிறார்கள்.

எப்படி இருந்தாலும், இந்துத்துவத்தை கீழிறக்கும் கருத்துக்களை ஹிந்து வெறுப்பு என்ற வைக்கோல் உருவத்தை காண்பித்து பயமுறுத்தப் பார்க்கின்றனர் என்கிறார். இந்த பதத்தை ஹிந்துத்துவம் என்பதை முன் பின் உச்சரியாத ராஜிவ் மல்ஹோத்ராதான் முதன்முறையாக பிரயோகித்தார். ஹிந்துத்தன்மை என்ற பொருளுடைய ஹிந்துத்துவம், ஆர்.எஸ்.எஸ்.பாரம்பரிய ஹிந்து தேசியவாதத்தை குறிப்பிடும் சொல்லாக மாறி விட்டது. அமெரிக்க இந்திய நோக்காளர்களின் பதிவுகள் அனைத்துமே தீவிர ஹிந்து எதிர்ப்பு எனும் பாரபட்சமான நிலையைத்தான் முன்மாதிரியாக கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள ஒருவர் இந்தியராகவோ, ஹிந்துவாகவோ, அல்லது ஹிந்துத்துவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை. நான் ஹிந்துத்துவா என்ற சித்தாந்தத்தையும், ஹிந்துத்துவ நிறுவனங்களையம் பல முறை விமரிசித்துள்ளேன். என்னாலேயே ஹிந்துக்களை தூண்டில் மாட்டும் பல பன்னிரண்டு மேற்கத்திய இந்திய வல்லுனர்களையும், அவர்களது இந்திய இணையாளர்களையும் குறிப்பிட முடியும்.

சொற்பிறப்பியலில், ஃபோபியா எனும் சொல் ‘பகுத்தறிவிற்கு ஒவ்வாத பீதி’ என்ற பொருளைக் கொண்டிருந்தது. ஹிந்துயிசத்தை எண்ணி யாருமே பீதியடைவதில்லை. இம்மனோவியற் சொல் ரஷிய அரசாங்கம், மாற்றுக் கருத்துடையவர்களை மனோ நல மருத்துவமனைகளில் அடைப்பதற்கு உதவியது. மேலும், இஸ்லாம் மதத்தின் ஆழந்த விசாரணையில் ஈடுபடுபவர்களை எதிர்ப்பவர்கள் , அவர்களை மூளை கலங்கிய சமூக விளிம்பில் இருப்பவர்களாக உருவாக்கப்படுத்துகின்றனர். இஸ்லாமிய விமரிசகர்கள் அம்மதத்தை அச்சுறுத்துவதாகத்தான் பார்க்கின்றனர். இஸ்லாமிய மதத்தின் மேலுள்ள பீதியை உணர்த்த வந்த சொல் அதன் மேலுள்ள காழ்ப்பைக் காட்டும் சொல்லாக இப்போது முற்போக்குக் கல்வியாளர்களால் சகஜமாக உபயோகிக்கப்படுகிறது. ஹிந்து மதம் கொடூரமானது, தீயது, மூடநம்பிக்கையுடையது, கேலிக்குரியது என பலவகைகளில் விமரிசிக்கப்பட்டிருந்தாலும், அச்சுறுத்துவதாக விமரிசிக்கப்பட்டதில்லை. ஹிந்துக்கள் மட்டுமே, ஆபிராமியர்கள் ஹிந்து மதம் அவர்களது மதத்தை விட சிறந்ததாகவும், கவர்ச்சிகரமானதாகவும் உள்ளதால் அதைக் கண்டு பயப்படுகின்றனர் என தங்கள் மதத்திற்கு முகஸ்துதி செய்கின்றனர்.

ஹிந்துஃபோபியா என்ற சொல், இஸ்லாமோஃபோபியாவின் தற்போதைய அர்த்தத்தை கணித்து ஏற்பட்டுள்ளதாகும். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அனைத்து இஸ்லாமியர்களின் அழுத்தம் அளிக்கும் இஸ்லாமிய கூட்டுறவு சங்கம் போன்றவை இந்த அசிங்கமான தீய சொல்லை கைவிட்டால் ட்ருஷ்கி விரும்பாத ஹிந்துஃபோபியா என்ற சொல்லும் பழையபடியே சரியான ‘ஹிந்துக்கள் மேலான வன்மம்’ என்ற அர்த்தத்தில் பிரயோகிக்கப்படும். அதுவரை, இஸ்லாமியர்களை தட்டிக்கொடுத்து , ஹிந்துக்களை ஓங்கியடிக்கும் ட்ருஷ்கி போன்ற அறிஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அப்பட்டமான உண்மை என்னவென்றால், இஸ்லாமிய மத விமரிசனத்திற்கு காரணம் அதன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி என்று கூறும் இவர்கள் அதே காழ்ப்புணர்ச்சியைத்தான் ஹிந்துக்களிடம் வெளிப்படுத்துகின்றனர் என்பதாகும்.

வரலாறு : (History)

ட்ருஷ்கியின் பிரகாரம் ‘இரண்டு உண்மைகளின் விஷக்கூட்டே ஹிந்து வலதுசாரிகள் தென்னாசிய அறிஞர்களை தாக்குவதற்கான எரிபொருள்; ஹிந்து தேசியக் கருத்தியல் ஒரு குறிப்பிட்ட இந்திய வரலாற்றை சார்ந்துள்ளது. அவ்வரலாறு நிதர்சனமான போலி வரலாறு’.

இப்போது இவ்வாதம், சுவாரஸ்யமாக மாறுகிறது. போட்டியிடும் இரண்டு வரலாறுகள். ஒன்று பொய்; மற்றொன்று உண்மை. ஹிந்து வலதுசாரிகள் கூற்று; கடந்த கால இந்தியாவில், குறுகிய அளவில் வரையறுக்கப்பட்டிருந்த ஹிந்து மதம் புகழுடன் செழித்து வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ஹிந்துக்களல்லாத, குறிப்பாக முஸ்லிம்களால், காட்டுத்தனமாக ஒடுக்கப்பட்டது என்பதாகும். ஆனால், உண்மையான இந்திய வரலாறு இதைவிட சிக்கலானதும் சுவாரஸ்யமானதாகும்.

ஹிந்து மதத்தின் குறுகிய வரையறுப்பு, அரைகுறை ஞானமுள்ள வரலாற்று அறிவற்ற விவரமறியாத ஆர். எஸ்.எஸ்ஸின் நடுவரிசையிலுள்ளவர்களால் உருவாக்கப்பட்ட படிமம். ஜாதுநாத் சர்க்கார், ஆர்.சி. மஜூம்தார், ஹரிஷ் நாராயண், கே.எஸ். லால் போன்ற வரலாற்று வல்லுனர்களோ சமகால அறிஞர்களான, பரத் குப்த், மீனாட்சி ஜெயின் போன்றவர்களோ, ட்ருஷ்கி விவரிக்கும் கடந்தகால இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒத்திசைவையும் மறுக்கும் முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள். ஆனால், இங்குமே , ட்ருஷ்கி எதிர்மறை கருத்தையுடைய இந்த அறிஞர்களிடம் விவாதிப்பதை தவிர்த்து நாட்டுப்புறத்தினரை தேர்ந்தெடுத்துள்ளார்.

அதிநவீன வரலாற்று வல்லுநர்கள், ஒரு விதத்தில் இந்தியாவின் கடந்த காலம் செழிப்பானதும் சிக்கலற்றதாகும் என உறுதிப்படுத்துவர். இந்தியா சுதந்திரமாக இருந்தது. அங்குபிரச்சினைகள் இருந்தன. உள்நாட்டு சண்டைகள் இருந்தன. அது பூலோக சுவர்க்கமில்லை. ஆனால், முஸ்லீம், ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியர்கள் அதற்கு முன்னிருந்த இந்தியாவை செழிப்பானதாக நினைவு கொண்டிருந்தது சரியானதே. அங்கு சுயாட்சி நிலவியது. பிரிட்டிஷ் அரசாங்கம், காந்தியிடம் அவர் நம்பிக்கை வைத்திருந்த இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் சாதிப் பிரச்சினை, இனவாதம், போன்ற தலைவலிகள் மீண்டும் கிளம்பும் எனக் கூறியபோது, அவர் சுதந்திர இந்தியா பிரச்சினைகளை கட்டாயமாக சந்திக்க வேண்டி வரும். ஆனால் அப்பிரச்சனைகள் எங்களுடைய சொந்தப் பிரச்சினைகள் என பதிலளித்தார். வெளிநாட்டினரின் ஆதிக்கத்தில் இருப்பதை விட சுயாட்சி என்றுமே போற்றத்தக்கதாகும்.

இது ட்ருஷ்கியின் ஆய்விடத்திற்கு எடுத்துச் செல்கிறது. ‘ஹிந்து தேசியவாதிகளுக்கு மிகுந்த பிரச்சினையை கொடுப்பது இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஆட்சியைப் பற்றிய புலமை. ‘இக்காலம், பல கலாச்சாரங்களின் தொடர்பும் பல மதங்களின் பரிமாற்றங்களும் நடந்த வளமான காலம். துடிப்பு மிகுந்த இந்த கடந்த காலம் பெரும்பான்மையான இந்தியர்கள் பெருமை கொள்வதாகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருக்கிறது. ஆனால், ஒருமைப்பாட்டுடைய ஹிந்து நாகரீகம் என்ற ஒரே கல்லில் நிற்கும் ஹிந்து வலதுசாரிகள் இஸ்லாமியர்களின் கைப்பிடியில் சிக்கி தவித்த இக்காலத்தை சங்கடமான சவாலாகப் பார்க்கின்றனர்’.

இரண்டு பிரச்சினைகள் இங்கு ஒன்றாக கலந்துள்ளன. ஒன்று, கேள்விக்குரிய ஹிந்து நாகரீகத்தைப் பற்றிய வலதுசாரிகளின் ஒருமித்த கருத்து. மற்றொன்று, இஸ்லாமிய மதத்தின் கீழ் ஹிந்து நாகரீகம் உண்மையாகவே பட்ட அவதிகள். ஹிந்து தேசியவாதிகளின் ஹிந்துயிசத்தைப் பற்றிய கருத்து சரியானதாக இல்லையென்பது ஒரு பக்கம் இருந்தாலும் , இந்திய இஸ்லாமிய ஆட்சி பெருமைப்படத்தக்கதாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது என்பது உண்மையல்ல. ஹிந்து வலதுசாரிகள் மட்டுமே இக்கருத்தை எதிர்க்கின்றனர் என்பதும் உண்மையல்ல. இவ்வாட்சியைப் பற்றிய தற்கால புலமை, இக்கருத்தை மட்டுமே கொண்டுள்ள ட்ருஷ்கியின் பள்ளியும், கல்வித்துறையும்தான். இதன் காரணம், எதிர்மறை கருத்துள்ள அறிஞர்களை நேருக்கு நேர் சந்திப்பதில்லை எனும் அவர்களது கொள்கை.

பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள், முகம்மது பின் காசிம், மற்ற முகலாய காலனீயர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். நேருவிய மதச்சார்பற்றவர்கள் இந்தியா,இந்துயிசம் பற்றிய ஆங்கிலேயர்களின் எண்ணத்தையே இன்றும் கொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், காலனீயத்தின் சில நல்ல அம்சங்களை ஒப்புக் கொண்டாலும் அடிமைப்பட்டிருந்ததை பெருமையாக கருதுவதில்லை. காலனீயக்காரர்களுக்கு சில சமயங்களில் அவர்கள் ஒத்துழைப்பை வழங்கினார்கள். நூறாயிரக் கணக்கான இந்தியர்கள் சிந்திய வேர்வைதான் பிரிட்டிஷ் ரெயில்வே பாதைகளுக்கு காரணம். ராஜபுத்திரர்கள் முகலாய படைகளில் சேர்வதற்காக தங்கள் பெண்களை முகலாய அந்தப்புரங்களுக்கு அனுப்பினர்.. இது போன்றவை மிகக் கஷ்டமான ஒரு காலத்தில் நடந்த தவிர்க்க இயலாத தீமைகள். ஆனால் இதில் பெருமைப்படுவதற்கும் உத்வேகம் பெறுவதற்கும் என்ன இருக்கிறது?

சில முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி துடிப்பாக இருத்தது என்பது உண்மை. அக்பர் ஹிந்துக்களின் சக்தி சமன்பாட்டை சரியாக அறிந்திருந்ததால் ஹிந்துக்களை எதிர்த்துக் கொள்ளாமல் அவர்களுடன் இணைந்து ஆட்சி செலுத்தினார். ஹிந்துக்களும் தங்களுடைய கலாச்சார சிறப்பை மீண்டும் வெளிக் கொணர்ந்தனர். சுல்தான்களின் ஆட்சியில் இடிக்கப்பட்ட ஆலயங்களை புனருத்தாரணம் செய்தனர். (அவுரங்கசீப் அவ்வாலயங்களை மீண்டும் தரைமட்டமாக்கினான்). சில முஸ்லிம்கள் மதப் பரிமாற்றங்களில் இறங்கினர். தாரா ஷீக்கோ உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார். இதனால் மதத் துரோகம் செய்ததாக பின் சிரச்சேதம் செய்யப்பட்டார்.

கல்வியாளர்கள்,இத்தகைய விவரங்களை ஆழ்ந்து நோக்காமல், முக மதிப்பை மட்டும் வைத்து எழுதுவதை தவிர்க்க வேண்டும். முன்னர் சொன்ன ஸுரிக் மாநாட்டில் ஒரு கல்வியாளர் ஹிந்து எழுத்தாளர்கள் எவ்வாறு அவர்களது தலை விதியை நிர்ணயிக்கும் அவுரங்கசீப்பை போற்றி எழுதியுள்ளனர் என்பதை விவரித்தார். ஸ்டாலினை புகழ்ந்து பல தோழர்கள் அவர் விதித்த மரண தண்டனையை ஏற்றுக்கொண்டு பேசிய போதும் கூட புகழ்ந்துள்ளனர். ஆனால், இப்புகழாரங்களை படித்து விட்டு கல்வித்துறையிலுள்ள ஒரு வரலாற்று ஆசிரியர் ஸ்டாலின் நல்ல ஆட்சியாளர் என முடிவெடுத்தால் அவரை ஒரு மோசமான வரலாற்றாசிரியராகத்தான் பார்க்க முடியும்.

குரு கோபிந்த் சிங் அவுரங்கசீப்பிற்கு எழுதிய ‘வெற்றிக் கடிதம், அவரது ஆட்சியை போற்றுவதற்காக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவுரங்கசீப் இவரது தந்தையையும், நான்கு மகன்களையும் கொன்றதைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. இதையறிந்த கிராமப்புறத்தில் வசிக்கும் அசடு கூட, குரு கோபிந்த் சிங்க் வெறுத்த மனிதர்களில் முதன்மையானவர் அவுரங்கசீப்தான் என ஊகித்து விடுவார். பெருந்தன்மையுடன் அக்கடிதத்தை அவர் எழுதியதின் காரணம், அச்சமயம் அவுரங்கசீப்பின் கை ஓங்கியிருந்தது என்பதாகும். கல்வியாளர்கள் வேற்று கிரகவாசிகளை பார்த்தோம் என நம்புபவர்களை கண்டு சிரிப்பார்கள். ஆனால், தன தந்தையையும் நான்கு மகன்களையும் கொன்ற ஒருவரை வியந்து போற்றும் மனிதரை முதன் முதலாக ஒரு கல்வியாளர்தான் கண்டு பிடித்துள்ளார்.

நிறைய ஹிந்துக்கள் இஸ்லாமிய ஆட்சியின் கொடுமைகளையும் ரத்த வெறியையும் அடிகோடிட்டுள்ளனர் என்பதை ட்ருஷ்கி ஒப்புக் கொள்கிறார். ஆனால் அவர்கள் அனைவரையுமே ஹிந்து வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்துகிறார். நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று உண்மைகளை அறிந்தவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நியதியில்லை. நிறைய ஆவணங்கள், இக்கொடூரங்களை இழைத்த முஸ்லிம்களாலேயே எழுதப்பட்டவை. ட்ருஷ்கியை போலவே நானும் ஹிந்துவோ இந்தியனோ அல்ல. ஆனால் இந்த ஆவணங்களை படிக்கும்போது, ஆலயங்களை இடிக்கும்போதும் . கா ஃபிர்களை படுகொலை செய்தபோதும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி அவர்களது காலக்கிரமமான எழுத்துகளில் வெளிப்படையாக தெரிகிறது.

கருத்துத் திருட்டைப் பற்றிய தவறு (The Mistake of Plagiarism):

‘கல்வியாளர்களின் விரிவான பணியை போலல்லாமல் ஹிந்து தேசியவாதிகளின் கடந்த கால இந்தியாவைப் பற்றிய கருத்துகள் ஆதாரமற்ற வரலாற்றின் மேல் அபாயகரமாக நின்றுள்ளது. ஆதலால், ஹிந்து வலதுசாரியினர் ஹிந்துவியலாளர்களுடன் அறிவுபூர்வமாக கலந்துரையாட முடியவில்லை. சில ஹிந்து கருத்தியலாளர்கள், தங்களது புலமையை வெளிப்படுத்த முயன்றபோது ஆதாரங்களை தவறாக பயன்படுத்தல், கருத்துத் திருட்டு, அளவு மீறிய விவாதங்கள் போன்ற தவறுகளினால் முதலிலேயே தடுக்கி விழுவதால், கல்வித்துறையாளர்கள் இவர்களை புறக்கணிக்கின்றனர்’

கருத்துத் திருட்டு என்பதை முதல் தவறுகளில் ஒன்றாக வைப்பதின் மூலம், மல்ஹோத்ராவின் பெயரை சொல்லாமல், அவரது படைப்புகளை பற்றி எரிந்து விழுகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏனென்றால், அவரது இந்திரனின் வலை (Indra’s Net} புத்தகத்தில் கருத்துத் திருட்டு நடந்துள்ளது என ஒரு கிருத்துவ குழுவின் அறிவுரையாளர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணம், மல்ஹோத்ரா, மேற்கத்திய அறிஞர் ஆண்ட்ரு நிக்கல்சன் ஒருங்கிணைக்கும் ஹிந்துயிசம் (Unifying Hinduism) என்ற புத்தகத்தில் ‘ஹிந்துயிசத்தை மேற்கத்தியர்கள் கண்டு பிடிப்பதற்கு வெகு காலம் முன்னரே, ஹிந்துயிஸத்தின் முதுகெலும்பான கோட்பாடுகள் நன்கு விரிவடைந்து விட்டன என்று எழுதியுள்ளதால், மேற்கத்தியர்களும் இந்த நுண்ணறிவை அடைய முடியும்.; இது ஹிந்து தேசியவாதிகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல என குறிப்பிட்டுள்ளார். பல இடங்களில் இவரது பெயரை குறிப்பிட்டிருந்தாலும், உரைநடைக்கு தடையில்லாமல் இருப்பதற்காக சில இடங்களில் அவரது கருத்துகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளதால் அவரது கருத்துகளை மல்ஹோத்ரா திருடி விட்டார் என்கின்றனர். அவ்வாறு பார்த்தால், எல்லா கட்டுரைகளையும் கருத்துத் திருட்டு என்றுதான் கூற இயலும். ஆனால், மற்றவர்களின் கட்டுரைகளில் இதை கண்டும் காணாதது போல் இருந்து விட்டு அவர் தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டவர் என்ற ஒரே காரணத்தினால் இதை பெருங்குற்றமாக பார்க்கின்றனர்.

இவ்வாறிருந்தும், ஹிந்துவியலாளர்கள் மற்றவர்களை விட தங்களை புனிதமானவர்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக “கருத்துத் திருட்டு” என இவர் மேல் வசை பாட ஆரம்பித்து விட்டனர். மல்ஹோத்ரவும் விடவில்லை. இதற்கு மேல் ஒரு படி போய், நிக்கல்சன் பெயரை எடுத்துவிட்டு அவரது புத்தகத்திலிருந்து காட்டிய மேற்கோள்களை கூறியவர்கள் பெயரை இணைத்து விட்டார். (இதன் மூலம், நிக்கல்சன் அவர்களே கருத்துத் திருட்டை செய்துள்ளார் என கோடி காட்டியுள்ளார். ஆனால், ஒரு இந்துவியலாளரும் இதைப் பற்றி வாயே திறக்கவில்லை). இந்த புதிய சங்கடத்தை இவர் கிளப்பியபோது இவர்கள் மவுனம் சாதித்து விட்டனர். ட்ருஷ்கியும் தான் பிடித்த முயலிற்கு மூன்றே கால் என்ற பிடிவாதத்துடன், மல்ஹோத்ராவின் புத்தகத்தில் இவர் கணடதாக நினைத்துக் கொண்டிருக்கும் கருத்து திருட்டை அனைத்து ஹிந்து வலதுசாரிகளுக்கும் நீட்டுகிறார்.

கல்வித்துறை சமூகம் மல்ஹோத்ராவை புறக்கணிக்கத்தான் செய்தது. ஆனால் அவரது விமரிசனங்கள் மூலம் தன்னை புறக்கணிக்க முடியாமல் செய்து விட்டார். இதற்கு, மக்களை கையாளும் திறமை நிறையவே தேவை. ஏனென்றால், இதற்கு முன், ஹிந்துக்கள் கல்வித்துறையாளர்களின் தவற்றை சுட்டிக்காட்டி உண்மையை நிலைநாட்டுவதற்கு மிகுந்த சிரத்தை எடுக்க வேண்டியிருந்தது. மல்ஹோத்ரா, முன்னணியிலுள்ள டோனிகர், போலாக், ராம்பச்சன் போன்றவர்களின் படைப்புகளை ‘திட்டவட்டமாக வெட்டி சோதித்தல்’ எனும் தனிப்பட்ட முறையை வகுத்துக் கொண்டதின் மூலம் அமெரிக்க மத மன்றத்தின் (American Academy of Religions) வருடாந்திர மாநாட்டில் தனக்கென கூட்டத் தொடரை பெற்றுள்ளார். ஹிந்துவியல் விவாத குழுக்களில் இவருடைய கருத்துக்கள் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும், கல்வியாளர்கள் தங்களை உயர்த்திக் காண்பிப்பதற்காக, அவ்வாறு முன்வைப்பவர்களை மட்டம் தட்டுகின்றனர். அதன் மூலம், அவர்களது படைப்புகளை பற்றிய விமரிசனங்களை புறக்கணிப்பதை நியாயப்படுத்துகின்றனர்.

“ஹிந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்” என மல்ஹோத்ராவை நான் குறிப்பிட்டதை பார்த்திருப்பீர்கள். அவருடைய விவகாரம் நிரூபித்ததைப்போல் ஒருவர்தன்னை ஹிந்துவாகவோஅல்லது ஹிந்துயிசத்தை ஆதரிப்பவர் என அடையாளப்படுத்திக்கொண்டால், ட்ருஷ்கி சமீபகாலத்தில் இணைந்துள்ள பள்ளியினர் அத்தகையவரின் பெயருடன் சேர்க்கும் அடைமொழிகளாவன: ஹிந்து வலதுசாரி, அல்லது ஹிந்து லட்சியவாதி அல்லது ஹிந்து வெறியர் என்பனவாகும்.

எத்தகைய ஹிந்துக்கள் இவர்களுக்கு சம்மதமானவர்கள்? மல்ஹோத்ரா ‘சிப்பாய்’ என்றழைக்கும் இவர்கள் தங்களை ஹிந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இந்தியர் என்றோ அல்லது அதற்கும் மேலாக ஒரு படி சென்று பெங்காலி, மலையாளி என்றே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் கீழ்ச் சாதியினராகவும், மதச்சார்பற்றவராகவும் இருக்க வேண்டும். ஆனால், ஹிந்துக்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இவர்களை விமரிசனம் செய்தால் மட்டுமே, ‘நானும் ஒரு ஹிந்துதானே’ என்பர். மற்ற ஹிந்துக்கள் ஹிந்துயிசத்தைப் பற்றி பேசும் உரிமையையும் உலகக் கண்ணோட்ட உரையாடல்களில் ஹிந்துயிசத்தின் இருப்பை வெளிப்படுத்துவதை தடுப்பதும்தான் இவர்களது முக்கிய பணி.

Series Navigation<< ‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்லமேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.