கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்

நவீன சிங்கள நாவல் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளியான மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கம்பெரலிய, கலியுகய, யுகாந்தய ஆகியன முத்தொகுப்பு (trilogy) நாவல்களாகும். முத்தொகுப்பின் இரண்டாவது நாவல் கலியுகய. இது 1957 இல் வெளியிடப்பட்டது; இதற்கு முன்னரே முத்தொகுப்பின் மூன்றாவது நாவலான யுகாந்தய 1949 இல் வெளிவந்து விட்டது.

கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.

கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது. குலப்பெருமையுடன் சமூக அடுக்கமைவில் உயர் அடுக்கில் இருக்கும் கசாறுவத்தே முகாந்திரம்- மாத்தறை அம்மையார் தம்பதியினரின் குலம் மற்றும் நிலப்பிரபுத்துவ மேலாதிக்க அடிப்படையிலான சமூக அந்தஸ்து நிலப்பிரபுத்துவ வீழ்ச்சியுடன் எவ்வாறு பட்டழிந்து போகிறது என்பதை நாவல் விரிவாகப் பேசுகிறது.

அவர்களின் மகளான நந்தாவை மணமுடிக்க பியல் விரும்பிய போதும் குல அடிப்படையில் அவன் அவர்களுக்குச் சமமானவன் அல்ல என்பதால் திருமணம் முடிக்க மறுக்கப்பட்டு, நந்தா ஜினதாச எனும் உயர் குலத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகிறாள். நாவலின் இறுதியில், நிலமானியத்தின் வீழ்ச்சியோடு அவர்களின் குலப் பெருமையும், சமூக அந்தஸ்தும் சிதைவடைகிறது. கசாறுவத்தே முகாந்திரம், ஜினதாச போன்றவர்கள் இறந்து விடுகின்றனர். அதன் பின் பியல் நந்தாவைத் திருமணம் செய்து கொள்கிறான்.

கலியுகய வின் கதை கம்பெரலிய கதாபாத்திரங்களின் இன்னுமொரு வாழ்க்கைக் கட்டத்திலிருந்து தொடங்குகிறது. கம்பெரலியவில் நிலமானிய சமூக அமைப்பின் இறுக்கமான அடையாளமாகவும், தாய்-தந்தையராகவும் விளங்கிய கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் குடும்பத்தைப் பிரதானமாகச் சுற்றி நகர்ந்த கதை கலியுகயவில் அடுத்த தலைமுறையான பியல்-நந்தா குடும்பத்தைச் சுற்றியும், அது முதலாளித்துவ சமூக அமைப்பாகத் திரட்சியுறும் பாங்கையும் விரிவாகக் கதையாடுகிறது. தவிர, நவீனத்துவ வாழ்க்கைமுறைக்கும், நகரமயமாக்கத்துக்கும் இலங்கைச் சமூகங்கள் காலனிய யுகத்தில் எவ்வாறு மடைமாற்றம் செய்யப்பட்டனர் என்பதையும் நாவல் விரிவாக முன்வைக்கிறது.

விக்கிரமசிங்க தனது முத்தொகுப்பு நாவல்களின் கதையை மேலும் அர்த்தப்படுத்தவும் வாசகனுக்கு நெருக்கமாக்கவும் அவர் கையாளும் வியக்கத்தக்க படைப்பு நுட்பம் அவரது படைப்பாற்றல் உச்சம் பெறும் இடமாக இருக்கிறது. கலியுகயவில் அந்த நுட்பம் சற்று சறுக்கலுக்குள்ளாகி இருந்தாலும் பல்வேறு மொழியியல் நுட்பங்கள், முழு அளவிலான மொழியின் வளங்கள் ஆகியவற்றின் துல்லியமானதும், உணர்ச்சிகரமானதுமான பயன்பாட்டினால் இதனை அவர் சாத்தியப்படுத்தி இருக்கிறார். அவரது விராகய நாவலிலும் இந்த மொழி அதி உச்சமாக வெளிப்பட்டு சில நாட்களேனும் நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனின் மனதிலே தங்கி விடுகின்றனர். விராகயவின் மையக் கதாபாத்திரமான அரவிந்த அடையும் உக்கிரமான வாழ்வுப் பாடுகளை வாசகனும் அவனுடன் சேர்ந்து அனுபவிப்பதாக சில கட்டங்களில் உணர வேண்டி இருக்கிறது.

கலியுகயவில் பியலும் நந்தாவும் அவர்களின் சொந்தக் கிராமத்திலிருந்து கொழும்புக்குச் சென்றபின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள், சாதனைகள், ஏமாற்றங்கள், மற்றும் சமூக அசைவியக்கத்தின் தெளிவின்மைகள் ஆகியவற்றையும் ஒரு சமூகவியலாளனின் பார்வையில் மார்ட்டின் விக்கிரமசிங்க கலியுகய வில் முன்வைக்கிறார்.

ஐரீன் என்ற பேர்கர் இனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பியல்-நந்தாவின் மகன் ஆலன் அனுப்பிய நீண்ட கடிதத்துடன் நாவல் தொடங்குகிறது. நாவலில் பியல்-நந்தா மகனான ஆலன் ஒரு பேர்கர் இன பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். பியலும் நந்தாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையும் அவன் இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்து செல்ல ஒரு காரணமாகிறது. நந்தா ஆலன் இங்கிலாந்து சென்று பத்து வருடங்களுக்குப் பின்னரே பியலுக்கும் நந்தாவுக்கும் இந்தக் கடிதத்தை எழுதுகிறான். அவனது மனைவி ஐரீன் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாள். அந்த நிகழ்வுக்குப் பின் அவன் தனது வாழ்வு குறித்து ஓர் உள்ளார்ந்த விசாரணையை மேற்கொள்கிறான். அந்தக் கடிதம் பியலினதும் நந்தாவினதும் வாழ்க்கையும் மனப்பான்மையும் பற்றி ஓர் உக்கிரமான, நேர்மையான குற்றச்சாட்டையும், அதேநேரம், தன்னைப் பற்றிய ஒரு தேடலான விசாரணையையும் முன்வைக்கிறது.

அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. நந்தாவின் சகோதரனான திஸ்ஸ அதன் உள்ளடக்கத்தை அவளுக்கு விளக்கிக் கூறுகிறான். காலனித்துவ காலத்தில் தொடங்கிய ஆங்கிலப் பிணைப்பு இலங்கையரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பக்கமாகி விட்டது என்ற சமூக யதார்த்தத்தின் குறியீடாக அந்த ஆங்கிலக் கடிதம் தெரிகிறது. ஆலன் தனது கடிதத்தில் பெற்றோரை மிகவும் கடுமையாக விமர்சிக்கிறான். தனது பெற்றோரால் தான் மோசமாக நடத்தப்பட்டதாக ஒரு எண்ணம் ஆலனிடம் உள்ளூர இருந்தது. கடிதம் நந்தாவுக்கு வாசித்துக் காட்டப்படுகையில், ஆலனின் கருத்துகளுக்கு அவள் கடுமையாக எதிர்வினையாற்றுகிறாள். அவளிடம் இருந்த நியாயங்களை திஸ்ஸவிடம் சொல்வது போன்று நாவல் கதையாடுகிறது.

நாவலைத் தொடர்ந்து வாசிக்கும் போது, கதை பின்னோக்கிச் சென்று கம்பெரலியவின் முடிவைத் தொட்டு கலியுகயவுடன் இணைகிறது.

பியலும் நந்தாவும் கொழும்புக்கு குடிபெயர்ந்த பிறகு, அவர்கள் நகர்ப்புற வாழ்க்கையின் போக்குகளை அப்படியே பின்பற்றி சமூக ஏணியில் உயர ஆர்வமாகவும், கண்மூடித்தனமாகவும் முயன்றதை நாம் உணர்கிறோம். மேற்கத்திய வாழ்க்கைமுறையக் கொண்ட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை முறைகளையும் பெறுமானங்களையும் அவர்கள் விரைவாக உள்வாங்கிக் கொண்டனர். அவர்களின் மூன்று குழந்தைகளான ஆலன், சந்திரசோம, நலிகா ஆகியோர் வாழ்க்கையில் இதே பாதையில் முன்னேறுவதைக் காண அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆலன், சிங்கள உயர் குழாத்தினரின் பிள்ளைகள் படிக்கும் கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரியில் படிக்கிறான். அங்கு ஒரு மாணவனாக சிறந்து விளங்கி பல்கலைக்கழகத்துக்கும் தெரிவாகிறான். அங்கு ஐரீன் எனும் பேர்கர் இனப் பெண்ணை காதலிக்கிறான். இந்த உறவுக்கு அவனது பெற்றோரின் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. இதனால், ஆலனின் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. முன்பு நந்தாவிடம் வெளிப்பட்ட குலப்பெருமை இப்போது இனத்துவம் என்ற எல்லையை நோக்கி விரிந்திருந்ததை நாவலில் காண முடிகிறது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் பிரதிநிதிகளாக விளங்கிய கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தலைமுறையில் ஆழமான செல்வாக்குடன் இருந்த குலப்பெருமை, சாதியம் போன்றவை முதலாளித்துவ சமூக அமைப்பின் பிரதிநிதிகளான பியல்-நந்தா தலைமுறையில் செல்வாக்கிழந்து இனத்துவம் என்ற வடிவத்தைப் பெறுவதன் குறிகாட்டி இது. இதுவே ஆலனின் காதலுக்கு நந்தாவும் பியலும் எதிர்ப்புத் தெரிவிக்க காரணமாகிறது.

ஆலனின் தம்பியான சந்திரசோம ஒருபோதும் படிப்பில் சிறந்து விளங்குபவன் அல்ல, பெற்றோருடன் முரண்படும் இயல்புள்ளவனாக மார்ட்டின் அவனைச் சித்தரிக்கிறார். அவன் தந்தையுடன் சண்டையிட்டுக் கொண்டு, அவரிடமிருந்து பணத்தையும் திருடி, பொறுப்பற்ற வாழ்க்கையை நடத்துகிறான்.

நந்தாவின் மகளான நலிகா, சமூகத்தில் நற்பெயரைக் கொண்ட ஒரு தொழிலதிபரின் மகனான சவிமான் கபலானவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். . கம்பெரலியவிலிருந்தே திருமணம் முடியாது நத்தாவுடன் ஒன்றாக வாழும் அவளது மூத்த சகோதரியான அனுலாவின் உறவு இந்த நாவலிலும் தொடர்ந்து வருகிறது. அவள்தான் நந்தாவின் பிள்ளைகளை கவனித்துக் கொள்கிறாள். ஆலனுக்கு அவளிடம்தான் மிகுந்த பற்றுதல் இருந்தது. அனுலா காசநோயால் பாதிக்கப்பட்டு, அவர்களது சொந்தக் கிராமமான கொக்கலவுக்குத் திரும்பி அங்கேயே இறந்து விடுகிறாள்.

அனுலா எனும் பாத்திரம் கிராமிய சிங்களப் பாரம்பரியத்தின் வலிமையாலும் அதன் நினைவாலும் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருக்கிறாள். அவளது பிரிவு நந்தா குடும்பத்தை மட்டுமல்லாது மார்ட்டின் விக்கிரமசிங்கவின் வாசகனையும் கடுமையாகப் பாதிக்கிறது.

நாவல் முடிவடையும் போது, பியலும் உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார். பின்னர், நந்தா ஒரு குழப்பகரமான தனிமையான சூழலில் விடப்படுகிறாள். நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நிகழும் இந்த சோகமான சம்பவங்கள் வாசகனை துயருரச் செய்யும் படைப்பு நுட்பத்துடன் இருக்கின்றன. நந்தா அடைந்த துயரார்ந்த தனிமையையும் அவள் முகம் அடைந்த வெறுமையையும் மார்ட்டின் விக்கிரமசிங்க- பேரழிவுகளுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக கறை படிந்ததற்கான அடையாளங்களைத் தாங்கிய ஒரு கறை படிந்த நாணயமாக திஸ்ஸ அந்த முகத்தைப் பார்த்தான்”

என விவரிக்கிறார். நந்தா கம்பெரலியவில் அறிமுகமாகும் போதே குலப்பெருமை பிடித்தவளாகவும் அதன் அகங்காரத்தை தன்னில் சூடிக்கொண்டவளாகவுமே சித்தரிக்கப்படுகிறாள். இறுதியில் அவள் அடையும் தனிமையையும், வெறுமையையும் அவளுக்கான தண்டனை போன்றே மார்ட்டின் விக்கிரமசிங்க சித்தரிகிறார்.

ஒரு பெண்ணை அதுவும் தனது பாரம்பரியத்தை மரபுகளை எதற்காகவும், யாருக்காகவும் கைவிடாது பிடிவாதமாகப் பின்பற்றி வரும் ஒரு பெண்ணை தோல்வியடைந்தவளாக, வில்லங்கம் நிறைந்தவளாக, கறைபடிந்தவளாக விக்கிரமசிங்க சித்தரிக்க முனைவது அவரது காலனித்துவ அறிவு கட்டமைத்த மனப்பாங்கின் போதாமையையும், அவருக்குள்ளிருக்கும் ஆணாதிக்க திமிர் மனநிலையையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. நந்தா போன்றவர்கள் மேற்கு முன்வைத்த நவீனத்துவ வாழ்க்கைத் திட்டத்துக்கு முற்றிலும் எதிரானவர்களல்ல.தன் பாரம்பரியம் மீதான பிடிவாதப் பற்றிலிருந்து விலகி, சுய முன்னேற்றத்திற்கான வழிமுறையாக மேற்கத்திய மற்றும் நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையை விரைவாக உள்வாங்க பியலுடன் சேர்ந்து அவளும் முயல்கிறாள். அந்த முயற்சிதான் அந்தக் குடும்பத்தையே மிக இக்கட்டான சூழ்நிலைகளை நோக்கித் தள்ளுவதை நாம் உணர்கிறோம். நாவலில் ஆலனுக்கும் அவனது பெற்றோருக்குமிடையே நிகழும் மோதல் வெளிப்படையானது; ஆனால் நந்தா மற்றும் அனுலா ஆகிய இரு சகோதரிகளுக்கிடையே, குறைவான, வெளிப்படையான ஆனால் முன்னைய மோதலுக்குச் சமமான சக்தி வாய்ந்த மற்றொரு மோதலும் நிகழ்கிறது.

ஒரே குடும்பத்திலிருந்து, ஒரே கிராமத்திலிருந்து வந்த பாரம்பரியப் பற்றுமிக்க சமூக குடும்ப மட்டத்திலிருந்து வந்த சகோதரிகளுக்கிடையில் நிகழும் ஒரு கருத்தியல் மாற்றமாகவும், அதன் விளைவான முரணாகவுமே நந்தாவுக்கும், அனுலாவுக்குமிடையிலான முரண்பாட்டை நோக்க முடியும். மேற்கத்திய மற்றும் நகர்ப்புற விழுமியங்களை ஏற்றுக்கொள்வதில் நந்தாவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை, ஆனால், அனுலா அதைக் குறித்து தீவிரமான விசாரணையுள்ளவளாக இருக்கிறாள். அவள் கிராமப்புற கடந்த காலத்திற்கும் நகர்ப்புற நிகழ்காலத்திற்குமிடையில் தெளிவற்ற முறையில் சிக்கித் தவிக்கிறாள். அனுலாவின் சுயமரியாதை, விசித்திரமான முறையில், அவளது சுய உறுதிமொழியாகிறது. தனக்குள்ளும் தனக்கு வெளியேயும் நிகழும் இந்த மோதலில் பாரம்பரிய வாழ்க்கையை விட்டுக் கொடுப்பதில்லை என்ற உறுதியான தீர்மானத்துக்கு அவளது சுய-மரியாதை அவளை இட்டுச் செல்கிறது. இந்த மோதலுக்கு மார்ட்டின் விக்கிரமசிங்க உருவம் கொடுக்கும் விதம் அவருடைய கலாச்சார உணர்வையும், சிங்கள வாழ்க்கையைப் பற்றிய நுணுக்கமான புரிதலையும் காட்டுகிறது. இந்த இடத்தில் விக்கிரமசிங்க நந்தாவின் பக்கமா? அல்லது அனுலாவின் பக்கமா? என்பது பூடகமாகவுள்ளது.

மார்ட்டின் விக்கிரமசிங்க தனது எல்லா நாவல்களிலும் சிங்களப் பண்பாட்டு மரபான வாழ்க்கைக்கும், மேற்கத்தேய நவீன நகர வாழ்க்கை முறைக்குமிடையில் நிகழும் மோதலை சித்தரிக்கும்போது தனக்கென ஓர் உறுதியான இடத்தை நிறுவாமல் நழுவிச் செல்லும் ஒருவராகவே இருந்து வருகிறார்.

முத்தொகுப்பின் முதல் நாவலான கம்பெரலியவில் விக்கிரமசிங்க முன்வைக்கும் கிராமிய மரபார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு நகரமய வாழ்க்கையையே கலியுகய முன்வைக்கிறது. இந்நாவலின் பொருளில் நகரத்தின் அனுபவமே மையமாக உள்ளது. உண்மையில், நகரம் என்பது கலாச்சாரத்தின் ஒரு விளைபொருளாகவும், அதேநேரம், அது கலாச்சாரத்தின் உற்பத்தியாளராகவும் உள்ளது என்பதை நாவல் நிறுவுகிறது.

சமூக நவீனமயமாக்கலில் முக்கிய பங்கை நகரங்கள் கொண்டுள்ளன. கலாச்சாரங்களின் சில அடிப்படையான நடைமுறைகளை பிரதிபலிக்கும் அதே வேளையில் கலாச்சாரங்களின் வளரும் வடிவங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. சிலவேளைகளில் அவற்றை வடிவமைக்கவும் செய்கின்றன. கம்பெரலியவில் தொடங்கப்பட்ட கலாச்சார நவீனத்துவத்தின் கற்பனையான கதையாடல் கலியுகத்தில் மேலும் வளர்த்துச் செல்லப்படுகிறது. பாரம்பரிய வாழ்க்கைமுறைகள், நவீனமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் குறித்த புரிதல்களையும், அறிதல்களையும் நோக்கி கதாபாத்திரங்களை புதிய நாவல் விரைவாக நகர்த்திக் கொண்டு செல்கிறது. முற்றிலும் புதிய வாழ்க்கை முறையை அங்கீகரிக்கும் உள்ளுணர்வொன்றால் அவர்கள் தூண்டப்படும் பல்வேறு சந்தர்ப்பங்களையும் நாவலில் விக்கிரமசிங்க உருவாக்கிக் காட்டுகிறார். ஆலன் லண்டனுக்குப் புறப்பட்டு, ஒரு ஆங்கிலேயப் பெண்ணை மணந்து அங்கேயே குடியேற முடிவு செய்யும் தீர்மானம் அந்நாட்களில் உலகமயமாக்கலின் தோற்றம், நவீனத்துவத்தின் விரிவடையும் கருத்தாக்கம் போன்றன இந்திய, இலங்கைச் சமூகங்களின் அக-புற வாழ்க்கையின் மீது எத்தகைய தாக்கத்தைச் செலுத்தின என்பதைப் பிரதிபலிப்பதாகவே பார்க்க வேண்டும். இன்னொரு புறம் அனுலாவின் பாத்திரம் குறிப்பாக நவீனமயமாக்கலின் கவலைகளையும், வலிகளையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மார்ட்டின் விக்கிரமசிங்கவின் கம்பெரலிய, கலியுகய, யுகாந்தய ஆகிய முத்தொகுப்பு நாவல்கள் இன்றளவிலும் சிங்கள இலக்கிய உலகில் கொண்டாடப்படுவதன் காரணத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த காலத்தின் கட்டாயங்களுக்கும் நிகழ்காலத்தின் கோரிக்கைகளுக்குமிடையேயான சரியான சமநிலை என்ன? மரபுக்கும் நவீனத்துவத்திற்குமிடையில் நியாயமானதும் ஆக்கப்பூர்வமானதுமான இடையூடாட்டம் இருக்க முடியுமா? கடந்த கால கலாச்சாரத்தில் இன்னும் சமகாலத்துக்கு பொருத்தமான பலமான அம்சங்கள் ஏதேனும் உள்ளதா? மார்ட்டின் விக்கிரமசிங்க, இந்த நாவலில், இந்தக் கேள்விகளை அழுத்தமான வடிவில் எழுப்பி அதன் மூலம் பொதுவெளியில் மதிப்புமிக்க விவாதத்தை ஊக்குவிப்பதில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது கம்பெரலிய எனும் முத்தொகுப்பு நாவல்கள் மூலம் இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையின் பாதையை மதிப்பிடுவதற்கு ஒரு தனியான இலக்கிய முறைமையை, அளவுகோலை நிறுவ முயன்றார் என்றே தோன்றுகிறது.

கலியுகயவில், நகர்ப்புற வாழ்க்கை அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நுட்பமான வழிகளையும் மார்ட்டின் சித்தரிக்கிறார்; நகர்ப்புற வாழ்வின் அதிகாரம் என்பது அதன் அழிவு மற்றும் ஆக்கம் எனும் இரு தளங்களிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என நினைக்கிறேன். நாவலின் கதாபாத்திரங்களுக்கிடையில் நிகழும் நுண்ணிய அதிகாரப் பிரயோகங்கள் நமக்கு பின்நவீன பிரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் ஃபூக்கோவால் முன்வைக்கப்பட்ட அதிகார சூத்திரங்களை நினைவூட்டுகின்றன. அவர் ‘அதிகாரத்தின் நுண் செயல்பாடு’ பற்றி விவாதிக்கிறார். அது கண்ணுக்குப் புலனாகாத, மிக இயல்பான செயல்பாடு போன்று பார்க்கப்படுகிறது. கலியுகய வில் இந்த நுண் அதிகாரங்கள் எப்படித் தொழிற்படுகின்றன என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டான சம்பவங்கள் இருக்கின்றன. உதாரணமாக அனுலா என்ற கதாபாத்திரமே பியல்-நந்தா குடும்பத்தின் இந்த கண்ணுக்குப் புலனாகாத அதிகாரத்தினால் உறிஞ்சப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான். அவளது எளிமையான கனவுகள் கூட அந்தக் குடும்பத்துக்காகவே தியாகம் செய்யப்பட்டிருக்கின்றன. தவிர, நாவலில் இடம்பெறும் முன்னணி கதாபாத்திரங்களின் ஆசைகள் அவர்கள் கண்டறியாத நகர்ப்புற வாழ்க்கையின் கட்டமைப்புகளாலும், நடைமுறைகளாலும் எப்போதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவும் மனித வாழ்வுமீது எவ்வாறு நுண்ணதிகாரம் தொழிற்படுகிறது என்பதை வாசகன் புரிந்து கொள்ளும் ஒரு இடமாகத் திரட்சியுறுகிறது.

இந்த நாவல் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே, ஃபூக்கோ ஒரு செல்வாக்கு மிக்க கோட்பாட்டாளராக உருவெடுத்தாலும், இந்த நாவலில் சித்தரிக்கப்பட்ட வாழ்க்கையைப் புரிந்துகொள்வதில் அவரது கருத்துருவாக்கங்கள் மிகவும் பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

கலியுகய நாவலின் வெளிப்பாட்டு முறையில் வாசகனை உறுத்தும் சில அபத்தங்களும் நிகழ்ந்துதான் உள்ளன. கலியுகய என்பது கம்பெரலியவின் தொடர்ச்சி. கதைகூறல் நுட்பத்தைப் பொறுத்தவரை, கம்பெரலிய ஓர் அறிவார்ந்த, ஒரு நேரான, சிக்கல் தன்மை குறைந்த கண்ணோட்டத்தை ஏற்றுக்கொள்கிறது, ஆனால், பிற்கால படைப்புகள் கதைகூறலில் பெரிய சிக்கல் தன்மையைக் காட்டுகின்றன. கலியுகய ஆலனின் நூறு பக்க கடிதத்துடனும் அதன் உள்ளடக்கங்களுக்கு நந்தாவின் எதிர்வினையுடனும் தொடங்குகிறது. பின்னர் அது கடிதத்தை விட்டுவிட்டு, நந்தா, பியல், அனுலா, ஆலன், சந்திரசோம, நலிகா ஆகியோரின் வீழ்ச்சி பற்றிய கதையைத் தொடங்குகிறது. இப்படி கதைகூறல் அடர்த்தியற்ற சம்பவங்களாலும், விடுபடல்களாலும் எளிமையற்ற தோற்றத்தைக் காண்பித்தாலும் கதாபாத்திரங்கள் குறித்த அந்தந்த கண்ணோட்டங்கள் வியத்தகு முறையில் தொடர்பு கொள்கின்றன. அதே நேரம், திஸ்ஸவின் உணர்வும், சிந்தனையும், நடவடிக்கைகளும் எப்போதும் தீர்மானகரமானதாகவே இருக்கின்றன. கம்பெரலியவில் மார்ட்டின் விக்கிரமசிங்கவால் அவன் எப்படி ஒரு அறிவார்ந்த, உயர் மனப்பாங்குள்ள கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டானோ அதே குணாதிசயங்களுடனேயே கலியுகயவிலும் அவன் காண்பிக்கப்படுகிறான். பாரம்பரிய பௌத்த பண்பாட்டு மரபு சார்ந்த நம்பிக்கைகள் மீதான தனது தனிப்பட்ட தாக்குதல்களைக் கூட மார்ட்டின் விக்கிரமசிங்க திஸ்ஸவைக் கொண்டே தொடர்ந்தும் மேற்கொள்கிறார். அதனால் அவன் ஒரு தீர்மானமிக்க, மதிப்பிடும் பாத்திரமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். அவன் பல்வேறு வழிகளில் நாவலின் அமைதியான தார்மீக மையமாக இருக்கிறான்.

கம்பெரலிய நாவலின் கதை கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு ஊடாக ஒரு சமூக மாற்றத்தின் மொத்தச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது. ஆனால், கலியுகய வில் அத்தகையதொரு முழுமையான கோலத்தை, சித்திரத்தை தரிசிக்க முடியாது. இங்கு, மொத்த கதாபாத்திரங்களின் இடைவினைகள் அனைத்தும் கதையின் சிக்கல்தன்மையை எளிமையாக்குவதற்கான சில கூறுகளை அறிமுகப்படுத்துவது உண்மையெனினும், நாவலின் மொத்த அனுபவ சாரத்தை விவரிப்பதற்கு ஒரு நிலையான குறிப்புப் புள்ளி கிடைக்காதது போல் உள்ளது. கம்பெரலியவில் அப்படி இருக்கவில்லை. அதில் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே கதையாடலில் ஆசிரியரின் தலையீடு தேவையற்ற விதத்தில் குறுக்கிடுகிறது. மற்றப்படி கதை கூறலில் கலியுகயவுடன் ஒப்பிடும் போது அது ஒரு மேன்மையான இடத்தில் நிற்கிறது.

கலியுகயவில் வரும் ஆசிரியரின் தலையீடும், விபரிப்பும் கதையின் நேர்கோட்டுத்தன்மைக்கும், இலகுவான புரிதலுக்கும் உதவுவதாக இல்லை. கம்பெரலியவில் கதைகூறலில் வெளிப்பட்ட அந்த இலகுத்தன்மை பின்னதில் சற்று சிக்கலான வடிவத்துக்கு மாறியுள்ளது. அது கதைக்கான சிறப்பு அம்சத்துக்கு ஒரு சவாலாகவும் விளங்குகிறது. இந்த நெருடலுக்குக் காரணம் சிலவேளை முத்தொகுப்பு நாவலின் மூன்றாவது நாவலான யுகாந்தய, இரண்டாவது நாவலான கலியுகயவிற்கு முன்னர் வெளியிடப்பட்டமையாக இருக்கலாம் என அனுமானின்னிறேன். யுகாந்தய 1949 இல் கலியுகய விற்கு முன் வெளியிடப்பட்டதற்கான முக்கியமான காரணம், யுகாந்தய மய்யமாக பேசிய சமூக வாழ்க்கையும், அது கிளர்த்திய அனுபவங்களும் அந்த நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட சில மாற்றங்களின் நேரடியானதும், உடனடியானதுமான தாக்கத்தை பிதிபலிப்பதாக அமைந்திருந்தது என்பதை அந்நாவலையும் அக்கால இலங்கையின் அரசியல் சமூகப் போக்குகளையும் உன்னிப்பாக வாசித்துப் புரிந்துகொண்ட ஒரு வாசகனால் அறிந்து கொள்ள முடியும். மார்ட்டின் விக்கிரமசிங்க அந்த உண்மையை உணர்ந்திருந்ததனாலேயே யுகாந்தயவை கலியுகயவிற்கு முன்னர் வெளியிட்டார் என எண்ணுகிறேன். விக்கிரமசிங்கவின் அந்த முடிவு நாவலின் இயல்பான கதையோட்டத்தில் திட்டவட்டமான சில சறுக்கல்களை ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது. எனினும், விக்கிரமசிங்கேயின் இந்த முத்தொகுப்பு நாவல்கள், ஒரு காலகட்ட இலங்கைச் சமூகங்களின் மீளுதலற்ற சமூக, கலாசார மாற்றங்களின் பாதையை செப்பமாக முன்வைக்கின்றன.

One Reply to “கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.