கதை சமைக்கும் விதிகள்

ஆமா..இதைத்தான் படிக்கப்போறான் பாரு அவ புருசன்…ஆமாம்.. நேத்து ஓட்டல்ல ஜப்பான்காரியைப் பாத்தம்னயே…அவளைக்கூடப் போடுவேன்…நம்ம கட்டத்தோட அமைப்பு அப்பிடி..’ என்று உள்ளங்கையை விரித்துக் காட்டியவன் தலையில் பாட்டிலைத் தூக்கி அடிக்கவேண்டும் போல இருந்தது. என்ன செய்ய, பெத்து வீடு கட்டுவதற்கே இவனிடம்தான் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கியிருக்கிறான்.

நண்பனின் புத்தக வெளியீட்டு விழாவுக்காக ஊட்டி வந்திருந்தான் பெத்து. நண்பன் அந்த வட்டார அரசு போக்குவரத்துக் கழகத்தின் உயரதிகாரி. இவனோடு ஒரு காலத்தில் வங்கியில் வேலை செய்திருந்தான். பல வருடங்களாக வாரப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி எல்லோருக்கும் தெரிந்த எழுத்தாளனாகியிருந்தான். ஆளுங்கட்சி உறுப்பினன். இந்த விழாவையே அந்தக் கட்சியின் இலக்கிய அணிதான் ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதை இவர்கள் இருவருக்கும் தெரிந்த, ஒன்றாக வேலை செய்த  பெண்ணைப் பற்றியது. அவளைப்பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்த ஒரு விஷயத்தை வைத்து ஒரு கதை எழுதியிருந்தான் நண்பன். ஏன் எழுதினான் என்று கேட்டதற்குத்தான் இந்த ரகளை. மனைவியின் ஊரான அம்பிளிக்கையில் குடும்பத்தை வைத்திருந்தான். வாரத்துக்கு இரண்டு நாள் குடும்பஸ்தன், மற்ற நாட்கள் இப்படி. ‘டே..மயிலு…அண்ணனுக்கு இன்னொரு சுக்கா சொல்லு…சரக்க அப்பிடியே வெச்சுருக்கான் பாரு.. சாப்புடறா.. சாப்புடறா.. இவனொருத்..தன்…. இங்க பாரு… அடுத்த வருசம் அநேகமா இலக்கிய அணிச் செயலாளராயிருவேன் அண்ணேன்…  என் கட்சில சேந்த்ரு..மெம்பர் கார்டு போட்டேன்னு வையி..ஒன் புக் ரிலீஸ் தலைவரை வெச்சே செய்வோம்..நான் இருக்கேன்..’ என்று தோளில் கை வைத்து அழுத்திய நண்பனை என்ன செய்யவென்று தெரியவில்லை பெத்துவுக்கு.

ஐந்தேகாலடிப் பெத்து ‘மிலிட்டரி’ சரக்கின் உபயத்தில், ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது  அமிதாப்பச்சனை விட உயரமாகியிருந்தான்.  பொதுவாகத் தண்ணியடித்தால் சலம்பத்தான் பிடிக்கும் பெத்துவுக்கு. வேறு எப்படியும் இருப்பது அந்தச் ‘சரக்கு’க்குச் செய்யும் அவமரியாதை என்பான். ஆனால் அது நண்பர்கள் வட்டத்தில் மட்டுமே பொறுத்தருளப்படும் என்பதால் இன்று ‘ஜென்டில்மென் மோட்’ க்கு மாறிவிட்டிருந்தான். நடுப்பகல் ஒன்றரை மணி, வெயில் சுட்டெரித்தது. இதென்ன அதிசயம் என்கிறீர்களா? ஊட்டியில், அதுவும் டிசம்பர் மாத கடைசியில் என்றால். ‘பாவிகள் போன இடம் பாதாளம்’ என்று கூட வேலைசெய்த ஈப்பன் சேட்டா சொன்னது நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டான் பெத்து. என்ன வெயில், சென்னையே பரவாயில்லை போல.  ஊட்டி ரயில் நிலையத்தில் ரெண்டு மணி ‘ரிட்டர்ன்’ மலை ரயிலைப் பிடிக்க பெருங்கூட்டம். மணி ரெண்டாகி விட்டிருந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து வரவேண்டிய ரயிலே அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்தது. மதிய உணவை அடையாறு ஆனந்த பவனில் முடித்துவிட்டு, ‘வேகு வேகெ’ன்று வெயிலில் நடந்து அப்போதுதான் ரயில் நிலையத்துக்குள் நுழைந்திருந்தான் பெத்து. ரயிலை விட்டு இறங்கி ‘டாய்லெட்’ டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள் பயணிகள். நீண்ட நேரம் ரயிலில் பிரயாணம் செய்த களைப்பும், பொறுமையின்மையும், எரிச்சலும் ததும்பும் முகங்கள். முதுகில் ரெண்டு முழத்துக்கு நீட்டிக்கொண்டிருந்த முதுகுப் பையின் விஸ்தீரணம் தெரியாமல் பலரும் சுற்றிச் சுற்றி இடித்துக்கொண்டிருந்ததில் எரிச்சல் அலையலையாய்ப் பரவியது. 

ஜாக்கிசானின் தங்கச்சி போலிருந்த அந்த வடகிழக்கிந்தியப் பெண்ணின் நெற்றியில் குங்குமம் இருந்ததா என்ற சந்தேகத்தை சரி செய்து கொள்வதற்காகவே அடையார் ஆனந்த பவனுக்கு, ஸ்டேஷனுக்கு வரும் வழியில் சாப்பிடச் சென்றிருந்தான் பெத்து.  நண்பன் கலந்து கொடுத்திருந்த ‘வோட்கா’வை வரும் வழியிலேயே முடித்துவிட்டிருந்தான் . முகத்தில் உறைந்த அரைச் சிரிப்போடு அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் உலாத்தினான்.  மக்கள் வெளியே உள்ள பழைய ரயில் இஞ்சின் முன்பாக நின்று விதம்விதமாக ‘போட்டோ’ எடுத்துக்கொண்டிருந்தார்கள்.  ரயில் கிளம்ப அறிவிப்பு உடனேயே வந்துவிட்டது. நல்லவேளையாக  இடம்போடுகிற வேலையில்லை, எல்லாமே முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகள். டீசல் எஞ்சின். ஆமை வேகம். வெயில் பொரிந்து கொண்டிருந்தது. பெஃர்ன்ஹில் கடந்து போனது. நின்றுகொண்டு சீட்டைத் தேடிக்கொண்டிருந்த ரெண்டு பெண்களும்கூட அமர்ந்துவிட்டிருந்தனர். கொஞ்சமாகக் காற்று வர ஆரம்பித்திருந்தது. முதுகுப் பைகளை இருக்கைக்குக் கீழே அமுக்கிவைத்து விட்டு காலை வைத்துக்கொள்ள சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள் பலரும். சுற்றுலாவால் பாழான ஊட்டி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பின்னால் போய்க்கொண்டிருந்தது. பெரும் நிலச்சரிவால் நீண்டநாட்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலைரயில் சேவை  நான்கு நாட்களுக்கு முன்தான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு ஐந்து மணி நேரப்பயணம். இறக்கம் என்பதால் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு மூன்றரை மணிநேரம்தான். அதனால்தான் ‘ரிட்டர்ன்’ னில் முன்பதிவு செய்திருந்தான் பெத்து.   

ஒரு பெட்டியில் நாற்பது சீட்டுகள். எதிரெதிரே இருபது இருக்கைகள். எதிரே அமர்ந்திருந்த பெண்மணி ‘லேஸ்’ பாக்கெட்டைப் பிரித்து கொறிக்க ஆரம்பித்திருந்தாள். அவள் உடலுக்கேற்ற ‘ஜம்போ பேக்’. எதிர்புறம் சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த ஒரு அப்பாவும் மகனும் ‘டம்ப் சரேட்ஸ்’ ஆடிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் ‘லேஸ்’ பாக்கெட் இவர்களுக்கு வந்ததிலிருந்து அந்தப் பெண்மணியின் கணவரும், மகனும் என்று தெரிந்தது.   சளசளவென்று பேசிக்கொண்டு ஏழெட்டு கல்லூரி மாணவிகள். ‘லவ்டேல்’ லில் வண்டி நின்று கிளம்பியது. ஆட்கள் ஏற்ற இறக்கமெல்லாம் கிடையாது. ஊட்டியிலேயே வண்டி நிறைந்து விட்டது. இருந்தாலும் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்றே சென்றது. ‘கேத்தி’ யில் யாரோ ஒரு பெண் ‘மூன்றாம்பிறை ‘க்ளைமாக்ஸ்’ சீன் இங்கதான் எடுத்தாங்க’ என்றாள். ஆர்வமாக எட்டிப்பார்த்தான் பெத்தபெருமாள். பின்னாலிருந்து ஒரு வடஇந்தியர் ஹிந்தியில் பாட ஆரம்பித்தார். குடும்பத்தோடு கை தட்டிக்கொண்டிருந்தார்கள்.  

பெத்தபெருமாளைப் பற்றிச் சொல்லுவதென்றால் அவன் ஒரு எழுத்தாளன். அதாவது அப்படித்தான் நினைவு கொள்ளப்படவேண்டும் என்று ஆசைப்படுகிறான். பெத்து எழுதி வெளிவந்தவை என்றால் இணைய இதழ்களில் வெளிவந்த சில கதைகளும், கட்டுரைகளும்தான். “அவள் சிறுநீர் பெய்யும் ஒலி காதில் கேட்காமல் இருக்க சத்தமாகப் பாட ஆரம்பித்தான் கணபதி” என்று எழுதி கசக்கி எறிந்த ஒரு காகிதத்தைப் படித்துவிட்டு சிட்டுவின் கண்டரமாணிக்கம் சித்தி ‘என்னடி, ஒன் புருசன் இப்பிடியெல்லாம் எழுதிருக்காக’ என்று கொளுத்திக்கொடுக்க ‘என்னங்க இப்பிடி எழுதி வெச்சுருக்கீக, சின்னப்பிள்ளைக படிச்சா கெட்டுப்போயிராதா’ என்று ஒரு பாட்டம் ஆரம்பித்த சிராவயலில் இருந்து அப்போதுதான் கல்யாணமாகி வந்திருந்த சிட்டுவை ‘அந்தக் கணபதி எவ்வளவு நல்லவன் பாரு, கண்டதும் காதுல விழுகக்கூடாதுன்னுதான் சத்தம் போட்டுப் பாடியிருக்கான், ஒரு நல்லவனப் பத்தி எழுதுறது தப்பா’ என்று சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது பெத்துவுக்கு. 

இதேபோல வேறொரு கதையில் இவன் சற்றே ‘முன்னபின்ன’ எழுதிவிட பெரும் ஆர்ப்பாட்டம் செய்த சிட்டுவை பழைய ‘ட்ரங்க்’குப் பொட்டியில் வைத்திருந்த ‘சரோஜாதேவி’ புத்தகத்தைக் காட்டி ‘ஒரு பொம்பள எப்பிடி எழுதியிருக்கா பாரு, நான் என்ன இப்படியா எழுதியிருக்கேன்’ என்று வாயை அடைக்க வேண்டியிருந்தது.  ‘கருமத்த எங்க போய்ச்சொல்ல’ என்று இப்போது கூட அதை நினைத்துத்தான் சிரித்துக்கொண்டிருந்தான் பெத்து. இது இப்படியென்றால் ‘சஷ்டி மண்டபத்தில் பட்டினிக் குசுவாடை தாங்கமுடியவில்லை’ என்று எங்கோ எழுதிவிட முருகபக்தரான இவன் பெரியப்பா இவனுடன் பேசுவதையே விட்டுவிட்டார். ‘பேசவே மாட்டாரு, எப்பப்பாத்தாலும் எழுதிக்கிட்டே இருப்பாரு’ என்று சொல்லும் சொந்தக்காரர்களிடம் சிரித்து மழுப்பிவிடுவான் பெத்து. ‘உங்ககிட்ட பேசுறதுக்கு வேற என்ன வேணாலும் செய்யலாம்?’ என்று சொல்லமுடியுமா என்ன? உறவுகள் வட்டத்தில் இவன் பேர் இப்படி கெட்டுக்கிடந்தாலும் அலுவலகத்தில் இவனை எழுத்தாளர் என்று சொன்னால்தான் தெரியும். கிண்டலாகச் சொன்னாலும் அதைப் பெருமையாகவே எடுத்துக்கொண்டான் பெத்து. உடன் வேலை செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிக்கு எழுதிக் கொடுப்பது பெத்துவே விரும்பிச் செய்யும் வேலை.      

சின்ன வயதிலேயே எழுதுகிற பித்து இருந்தது. கட்டுரைப்போட்டிகளில் அவ்வப்போது பரிசு வாங்கியதுண்டு. ‘அந்த அலுமினிய வெள்ளரி கிழக்கு நோக்கி ஏகிக் கொண்டிருந்தது’ (என்று எழுதி அடித்து வைத்திருப்பான். சுஜாதா நடையில் இருக்கிறதாம்) ‘புறாக்களின் தயவால் கோபுரம் அவ்வப்போது சிலிர்த்துக்கொண்டது’, ‘இன்னா பண்றது..நாலு வாட்டி லட்டு தின்னசொலொ  ஒருவாட்டி லவடா துண்ணுத்தான் ஆவணும்’, ‘கோபுரக்கலசங்கள் சூரிய ரச்மிகளில் பொன்னொளிர்ந்து கொண்டிருந்தன'(என்று எழுதி அடித்திருப்பான். மௌனி போல இருக்கிறதாம்) என்று அவ்வப்போது தோன்றுகிற, கேட்ட உதிரி வரிகள். ‘டேய்..நிறுத்து…மொதல்ல போளியைக் காலி பண்ணிடாதே…ரெண்டு போளி ரெண்டு வடை இருக்குன்னா…மொதல்ல வடையைக் கொஞ்சூண்டு பிட்டு வாயில போட்டுண்டு பாரு…காரம் அளவா இருந்தா..ஒரு போளி…ஒரு வடை..அப்பறம் ஒரு போளி..ஒரு வடை….காபிக்கு முன்னால நாக்குல காரம் ரொம்ப அளவா இருக்கணும்..இல்லாம இருந்தா இன்னும் உத்தமம். காரம் ஜாஸ்தியா இருந்தா…கொஞ்சம் தண்ணியக் குடி. இப்ப காப்பிய விட்டுண்டு பாரு…கொண்டா கொண்டாங்காது?’ போன்ற சில சிந்தனைத் தெறிப்புகள்.அவன் மனதில் ஓடுகிற எந்த எண்ணத்தையும் ஒரு கதாபாத்திரம் சொல்வதுபோல எழுதி வைத்துக்கொள்வான். இதற்காகவே ‘டைரி’ எழுத ஆரம்பித்தான். 

ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கொடியாட்டிவிட்டுப் போய் அமர்ந்துகொள்ளும் ‘ஸ்டேஷன் மாஸ்டர்’களைப் பார்த்து ‘தனக்கு இப்பிடி ஒரு வேலை கிடைக்காமல் போய்விட்டதே’ என்று தன் விதியை நொந்து கொண்டான் பெத்து. ‘கெடச்சிருந்தா மட்டும் அந்தவாக்குல எழுதித் தள்ளிருப்பியோ’ என்று மனதுக்குள்ளேயே வந்த கவுண்டமணியின் ‘கவுண்ட்டரை’ நினைத்துச் சிரித்தும்கொண்டான்.  இப்பிடித்தான் சிறிய வயதில் கடைசிப்பெட்டியில் இருக்கும் ‘ரயில்வே கார்ட்’ வேலை மீது தான் பித்தாக இருந்ததும், தொடர்ந்து யாரோ ஒரு மணிக்கொடி எழுத்தாளர் எழுதிய, ஒரு ரயில்வே கார்ட் பெட்டி மாறி தவறாக ஏறிய பெண்ணைச் சீரழிக்கும் கதையும் நினைவுக்கு வந்தது. இதுவரை பெத்து எழுதி சாதித்தது என்ன? இவன் பெரிதும் மதிக்கும் ஒரு எழுத்தாளர் அவருடைய இணைய தளத்தில் இவனுடைய சிறுகதையைப் பாராட்டி எழுதியதுதான் அவன் பெற்ற அதிகபட்ச அங்கீகாரம். கதையின் பெயர் ‘பிணந்தூக்கி’ (ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரைப் பற்றியது). எங்கே ‘பிணந்தூக்கி’ பெத்து என்று பேராகிவிடுமோ என்று பயந்தே இன்னொரு சிறந்த கதையை வேகமாக எழுதி வெளியிட்டான். அந்த இரு கதைகளினாலேயே தீவிர இலக்கியவட்டத்தில் அனைவரும் அறிந்த எழுத்தாளனாகியிருந்தான் பெத்து. அது நடந்து முடிந்தே ஐந்து வருடமாகியிருந்தது. அதற்குப்பிறகு இந்த ஐந்து வருட இடைவெளியில் இரண்டே கதைதான் எழுதியிருந்தான். நோயாளியான மாமனாரை இவன்தான் வீட்டில் வைத்துப் பராமரிக்க வேண்டியிருந்தது. வீட்டில் அமர்ந்து எழுத சரியான சூழல் இல்லை. என்றாவது எழுதவேண்டும் என்றால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு கன்னிமாரா நூலகத்திற்குச் சென்று எழுதுவான். ஊட்டியில் நண்பன் வீட்டில் அவன் எழுதுகிற அறையின் வசதிகள் பிரமிக்கவைத்தன. இரண்டு அகலத்திரைக் கணினியும், குளிர் சாதன வசதியும். என்ன குப்பையை எழுதினால் என்ன? அரசியல் பலம் உள்ளவன். நூலக ஆர்டர் கிடைத்துவிடும். பிறகென்ன?.. நம்மைமாதிரியா? ‘ம்ம்..அததிற்கு ஒரு கொடுப்பினை வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டான் பெத்து.  வேலைபார்க்கிற அண்ணன் படிக்கிற தம்பியிடம் சொல்வது போல ‘அடுத்தவாட்டி சென்னை வரும்போது போய் ‘டென்டிஸ்ட்’டைப் பாப்பம்டா பெத்து’ என்று கிளம்பும்போது நண்பன் கூறியபோது ‘இவனிடம் வாங்கிய கடனை முதல் வேலையாக அடைக்க வேண்டும்’ என்று நினைத்ததை நினைத்துக்கொண்டான். ஆனால் எப்படி? ம்ம்.. ஞானபீடம் வாங்கினால்தான் அடைக்கமுடியும். நடக்கிற காரியமா?  

‘வாதை உன் கூடாரத்தை அணுகாது

பொல்லாப்பு உனக்கு நேரிடாது’ – 
என் கூடாரத்தில் ஃபாதரே வாதை
நமக்கு ஏன் பொல்லாப்பு’

என்று  கவிஞனாக அறிமுகமாகவேண்டிய பெத்து,  ஸ்டீபன் சார் கல்லூரி ஆண்டு மலரில் போடமாட்டேன் என்று சொல்லி விட்டதால் ரொம்பப் பின்னால் எழுத்தாளனாகத்தான் அறிமுகமானான்.   ‘சார்.. கொஞ்சநேரம் அந்தப்பக்கம் ஒக்காந்துக்கலாமா? வீடியோ எடுத்துட்டு மாத்திக்கிறேன்’ என்று கேட்ட பக்கத்துசீட்டு இளைஞனுக்கு ஜன்னல் சீட்டை மனதில்லாமல் விட்டுக்கொடுத்தான். அப்போதுதான் வெளியே பார்த்தான். கண்ணுக்கெட்டியவரை பச்சைப்பசேலென்ற தேயிலைத் தோட்டங்கள்.  மலை முகடுகளிலிருந்து வழியும் சூரியக்கதிர்கள் தேயிலைத் தோட்டங்களை பொன்னொளிரச் செய்துகொண்டிருந்தன.  காற்று கொஞ்சம்கொஞ்சமாக ‘சில்’லேறி வந்து கொண்டிருந்தது.

கல்லூரி மாணவிகள் ‘அந்தாக்ஷரி’ விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கோணப்பல்லழகிதான் என்னமாகப் பாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டான் பெத்து. பக்கத்தில் இருந்த அவள் தோழிகள் இருவரும் இவனைக் குறுகுறுவென்று பார்ப்பதும், அவர்களுக்குள் சிரிப்பதும், மறுபடியும் பார்ப்பதுவுமாக இருந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே திரும்பிக்கொண்டான் பெத்து. ‘வயசான ஆளை என்ன பார்வை’ என்று நினைத்துக்கொண்டாலும் முகத்தை அழகாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யத்தான் செய்தான். முயற்சி என்பது லேசான தெற்றுப்பல்லை உதட்டைக்கொண்டு மறைத்துக் கொள்ளுவதுதான். இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அவன் மனைவி சிட்டு, அதாவது சிட்டாலாட்சி ஏற்கனவே எச்சரித்தது நினைவுக்கு வர முகத்தைப் பழையபடி வைத்துக்கொண்டான். இது என்ன ரோதனையாக இருக்கிறது, எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கேட்டு இடத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று பார்த்தால் அவள் நல்ல தூக்கத்தில் இருந்தாள். எதிரே இருந்த அப்பாவும் மகனும் கையைச் சுற்றிச்சுற்றி ஒரே நேரத்தில் விரல்களை நீட்டிக்கொண்டிருந்தனர். இரண்டு பேரும்  ஒரே எண்ணிக்கையைக் காட்டினால் சந்தோசத்தில் குதித்துக்கொண்டிருந்தான் மகன். என்ன விளையாட்டோ? பெத்து இதுவரை பிள்ளைகளுடன் விளையாடியது இல்லை. அவர்களும் பள்ளிப்படிப்பை முடிக்கப் போகிறார்கள். இதென்ன தேவையில்லாத நினைவுகள் என்று ஒதுக்கிவிட்டு வெளியே நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கும் காட்சிகளில் கவனம் வைத்தான் பெத்து. இதற்குத்தானே வந்தது. ஆங்காங்கே ஆனைத் தந்தங்களாய் அருவிகள் வழிய நின்றிருந்த விண்ணைமுட்டும் அந்தச் சிகரம் அதை விடப்பெரிய எதோ ஒன்றை நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கல்லூரி மாணவிகள் கலகலப்பாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். ‘மாலையில் யாரோ…மனதோடு பேச’ என்று அப்படியே சொர்ணலதா போலவே பாடிக்கொண்டிருந்தாள் கோணப்பல்லி. லேசாக அந்தப்பக்கம் பார்த்தான். இவனையே பார்த்துக்கொண்டிருந்த அந்தப்பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ‘நான் சொல்லல’ என்பதுபோல சிரித்துக்கொண்டார்கள். பெத்து அதன்பிறகு அந்தப்பக்கமே பார்க்கவில்லை.  

குன்னூரில் வண்டி நின்றது. ஒரு துணை இன்ஜின் டிரைவர், ஒவ்வொரு பெட்டிக்கும் சென்று ரயில் பதினைந்து நிமிடம் நிற்கும் என்று அறிவித்துச் சென்றார். டீசல் இஞ்சினை மாற்றி நீராவி இஞ்சினைப் பூட்டுகிற காட்சியைக் காண பலரும் போய் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். ‘போட்டோ’ எடுத்துக்கொண்டு ரயில்வே கேன்டீனுக்குச் சென்று அந்தத் துணை இன்ஜின் டிரைவருடன் அறிமுகம் செய்துகொண்டான் பெத்து. ரெண்டு பேருக்கும் டீயும் சமோசாவும் சொல்லிவிட்டு, பத்துநிமிடம் அவரைக் குடைந்தெடுத்து மலைரயில் பற்றி தகவல்களைச் சேகரித்துக்கொண்டான் பெத்து. அதாவது அவர் பேசப்பேச ‘மொபைலி’ல் பதிவு செய்து கொண்டான். இடைக்கிடையே ஒழுங்காக ‘ரெகார்ட்’ ஆகிறதா என்று பார்த்துக்கொண்டான். ஏனென்றால் கைபேசி வாங்கிய புதிதில்,    ஒரு பிச்சைக்காரனைப் பேட்டி எடுக்கப்போய் ‘ரெக்கார்ட’ருக்குப் பதிலாக ‘டைம’ரை ஆன் செய்து ஒன்றும் பதிவாகாததை பேட்டி முடிந்தபின்னரே கவனித்த அனுபவமும் அவனுக்கிருந்தது. ‘ரேக் அண்ட் பின்னியன்’ (Rack and Pinnion) ரயில்வே இங்கும் டேராடூனிலும்தான் உள்ளது என்றும், இந்த டெக்னாலஜியை டீசல் என்ஜினில் பயன்படுத்த செய்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்ததாகவும், எனவே குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி எஞ்சின்தான் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறினார் அந்த உதவி ஓட்டுநர்.

‘சார், ‘கிரேடியன்ட் ரயில்வே’ ன்னு சொன்னீங்களே, கொஞ்சம் ‘எக்ஸ்பிளைன்’ பண்ண முடியுமா?’ என்று பெத்து கேட்கவும் ‘இருக்கறதுலயே ஸ்டீப் அதிகம் உள்ளது இந்த ரூட்டுதான், அதாவது 12.5:1 கிரேடியன்ட், எப்பிடி சொல்றது, அதாவது ஒவ்வொரு பன்னென்றையடி மூவ்மெண்டுக்கும் ஒரு அடி உயரம் ஏறும், அல்லது 12.5 மீட்டர்னா ஒரு மீட்டர் உயரம் ஏறும், ஏத்தத்துல ஏத்திக் குடுக்கத்தான் ‘ரேக் அண்ட் பின்னியன்’. ஒரு செயின், ஒரு புல்லி. சைக்கிள் செயின் மாதிரித்தான்னு வெச்சுக்குங்க’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தலைமை ஓட்டுநர் இவரை அழைத்து நேரமாகிவிட்டது என்று கிளம்பச் சொல்லி கையசைத்தார். ‘மேட்டுப்பாளையம் வந்தோன்ன பாருங்க, க்ளீனா படம் போட்டு சொல்லுறேன்’ என்று சொல்லிக்கொண்டே எஞ்சினை நோக்கிச் சென்றார்  உதவி  ஓட்டுநர். முன்பென்றால் வளைத்து வளைத்து ஒரு பெரிய டைரியில் எழுதிக்கொண்டிருப்பான். இப்பத்தான் எவ்வளவு சுலபமாகிவிட்டது?   மொபைல் போன் வந்த பிறகுதான்  ‘இதெல்லாம் கதைக்காகாது’ என்று ஒதுக்கித்தள்ளாமல்  இந்த மாதிரி எத்தனை பேட்டி எடுத்திருப்பான் பெத்து. ஆனால் அதில் கதையானது கொஞ்சம்தான். 

பெத்துவுக்கு பள்ளிநாட்களில் விடுமுறைக்கு மாமா வீட்டுக்கு கானாடுகாத்தானுக்குச் சென்றது நினைவுக்கு வந்தது. சேலையில் வெப்பக்காற்றை ஊதும் அம்மாவின் உப்பிய முகம் அருகிலெனத் தெரிந்தது. மூடிய கண்ணின் மீது வாயில் வைத்து ஊதிய  சேலையை ஒத்தி ஒத்தி கண்ணிலே விழுந்த கரியை எடுத்துவிடும் அம்மா.’ஊஊஊ….’ என்று நீராவி எஞ்சின் அலறியது. கல்லூரி மாணவிகள் அனைவரும் ‘ஓ..’ வென்று கைதட்டினார்கள். நீராவி இன்ஜின் பூட்டியபின் வண்டியின் ஓட்டத்திலேயே வித்தியாசம் தெரிந்தது. விலுக் விலுக்கென்று மென்மையாக குதித்துக்கொண்டே சென்றது ரயில் வண்டி. வண்டியின் கீழே ‘ரேக் அண்ட் பின்னியன் ‘ சங்கிலி உருளும் சத்தம் ‘சொய்’ யென்று காற்றிலே நெல் இறைத்தாற்போல கேட்டுக்கொண்டிருந்தது. வண்டியின் கதி மாறும்வரை ஒரு மெல்லிய அதிர்வு உட்காரும் இடத்திலிருந்து பரவி, ஒரு இனம் புரியாத கிளுகிளுப்பை அளித்துக் கொண்டிருந்தது.   ‘வெள்ளக்காரன் வெள்ளக்காரன்தான்யா’ என்று வாய்விட்டே கூறினான் பெத்து. அந்தப்பையன் செல்பேசியில் எடுத்த படத்தை, ஓடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தான். பெத்துவுக்கும் படம் எடுக்க ஆசை வந்துவிட்டது. கேமராவை ஓடவிட்டு ‘சாம்பிள்’ படம் எடுத்துப்பார்த்துக்கொண்டான். வெளியே பச்சைப்பசேலென்ற தேயிலைத் தோட்டங்கள். பச்சையாய் ஆரம்பித்து சிறிது தூரத்தில் வெயிலால் பொன்னொளிர்ந்து தொடுவானத்தில் சாம்பல் நிறத்தில் முடிந்தன. அதையும் தாண்டி உயரே கருநீலநிறத்தில் ரோமம் மண்டிய யானையின் முதுகு போன்ற நெடும் மலைத்தொடர்கள், அதற்குமேல் இன்னொரு மெல்லிய கருநீலமலை, அதற்கும்மேல் கையால் தொட்டால் கலைந்துவிடும் மேலும் மெல்லிய கருநீலம். மலையலைகள், அலைமலைகள். நுரைத்து ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றைக் கடந்தவுடன் இன்னொரு ஸ்டேஷன் கடந்து போனது, ‘ரண்ணிமேடு’. சமீபத்தில் பெய்திருந்த பெருமழையில் அருவிகளோடு அருவிகளாக ஆங்காங்கே மலைகளும் வழிந்து பெரும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டிருந்தது. ஆங்காங்கே வண்டி மெதுவாகச் சென்றபோதெல்லாம், ஒரு நாலைந்துபேர் கையில் மம்பட்டி, கடப்பாறைகளோடு விலகிநின்று வண்டிக்கடியில் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். செக்கச்செவேலென்ற மண் பாதையின் ஓரத்தில் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது.  

இடையிடையே அடையார் ஆனந்தபவனில் உணவு பரிமாறிய, ஜாக்கி சானின் தங்கச்சி போல இருந்த அந்த வடகிழக்கிந்தியப் பெண்ணின் நினைவு வந்து போனது. வேறொன்றுமில்லை. அவள் ஊரிலிருந்தே கல்யாணம் செய்துகொண்டு வந்தாளா? அல்லது இங்குதான் நடுவகிட்டில் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டிவந்ததா? அவனும் அதே ஓட்டலில்தான் வேலை பார்க்கிறானா? அல்லது இந்த உலகத்திடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள போட்டுக்கொண்ட வேஷமா? இவளிடம் ஒரு கதை இருக்கிறது என்று பார்த்த நொடியிலேயே தோன்றியது பெத்துவுக்கு. பெத்து இப்படித்தான், ஒருமுறை சத்யம் சினிமாவில் ‘லைப் ஆப் பை’ ஆங்கிலப்படம் பார்க்கச் சென்று டிக்கட் வாங்க வரிசையில் நின்றபோது அவனுக்குமுன்னால் ஒரு புரோகிதர் ‘திமிரு’ படத்துக்கு ரெண்டு டிக்கட் கேட்டார். ‘இன்னும் பத்து நிமிஷத்துல இன்டெர்வல் விட்ருவாங்க’ என்று தியேட்டர் ஊழியர் சொல்லியும் கேட்காமல் ரெண்டு டிக்கட் வாங்கிக்கொண்டு போனார். பெத்துவுக்கு படத்தில் மனம் செல்லவே இல்லை. இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். படத்துக்குத்தான் வந்தாரா? அல்லது வீட்டுக்குப் போய் விட்டாரா? பாதி முடிந்த அதிரடி சண்டைப்படத்துக்கும், புரோகிதருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? எதுவும் ‘அலிபை’ கிரியேட் செய்கிறாரா? என்று பலவிதமாக யோசித்துக்கொண்டிருந்தான். வீட்டிற்கு வந்து ‘விடுதலை’ என்றொரு கதை எழுதியபிறகுதான் நிம்மதியடைந்தான். திடீரென்று ரயிலுக்குள் ஒரே இருட்டு. பெரிய டன்னலுக்குள் சென்று கொண்டிருந்தது வண்டி. எல்லோரும் ‘ஓஓஓ’ வென்று கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார்கள். ‘டன்ன’லை விட்டு வெளியே வந்தவுடன் வண்டிக்குள் பளீரென்று ஒளிவெள்ளம். பற்கள்…பற்கள்..எங்கும் பற்கள். என்ன கதையில் வரும் வரி இது, தி.ஜா வின் பாயசம். நினைவுக்கு வந்தவுடன் பெத்துவின் வாயிலும் பற்கள். அந்தப் பெண்களின் நினைவு வந்தவுடன் படக்கென்று வாயை மூடிக்கொண்டான்.     

வெளியே எட்டிப்பார்த்தால் ஒவ்வொரு ஜன்னலிலிருந்தும் விதம் விதமான கைபேசிகள் படம் பிடித்துக்கொண்டிருந்தன. அவைகளைப் படம்பிடிப்பதைத் தவிர்க்குமுகமாக கையை இன்னும் சற்று வெளியே நீட்டியதில், அய்யோ…இதென்ன, அந்தத் திருப்பத்தில் இருந்த அடர்ந்த செடியில் மோதி பெத்துவின் கைபேசி கீழேவிழ, இருக்கையிலிருந்து எழுந்து கிட்டத்தட்ட பாதி உடல் வெளியே தொங்க எங்கு விழுந்தது என்று பார்க்கப்பார்க்க வண்டி கடந்து போய்விட்டது. கையெல்லாம் முட்கள் கிழித்து கோடு கோடாக ரத்தம். ஏதாவது அபாயச் சங்கிலி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஒன்றுமில்லை. அதற்குள் இன்னொரு குகைக்குள் வண்டி நுழைய ஒரே இருட்டு, ஓ..வென்று அலறல். நீண்ட குகையாதலால், வெளிச்சம் வர நேரமானது. ‘சார்..இந்தாங்க ஆயின்மென்ட். நல்லவேளை ஸ்பீடு கம்மி, அதுனால அடி ஏதும் படல’ என்று மருந்து தடவி விட்டான் பக்கத்து சீட் பையன். நாலு வரிசைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்து பெத்துவிடம் ‘ சார், ஒங்க மொபைல் அந்தச் செடிக்குள்ளேயேதான் இருக்கு. நான் பாத்தேன்’ என்றான். பெத்துவுமே பார்த்திருந்தான். என்ன செய்ய? …ச்சை.. எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது. கை வேதனையை மிஞ்சிய மன எரிச்சல். ‘இதுக்காகத்தான் நான் எல்லாத்தையும் ‘கிளவுட்’ ல போட்டுறது..’ , ‘சார், செஸ் பிளேயர் விஸ்வநாத் ஆனந்த்க்கு ஐம்பது டெலிபோன் நம்பர் மெமரிலேந்து சொல்ல முடியுமாம்..’ சுற்றிலும் ஏதேதோ குரல்கள். எதற்கும் இருக்கட்டும் என்று எப்போதோ மனதில் பதியவைத்திருந்த சிட்டுவின் கைபேசி எண்ணை நினைவில் ஓட்டிப்பார்த்தான் பெத்து. ம்ம்ஹூம்….பாதிதான் நினைவுக்கு வந்தது.  கைபேசி ‘சார்ஜ்’ போய்விட்டால் என்னசெய்வதென்று ரயில்வே ‘பி என் ஆர்’ எண்ணை மட்டும் ஒரு பேப்பரில் குறித்துவைத்திருந்தது நினைவுக்கு வந்தது. மின்சாரக்கட்டணம், தொலைபேசிக்கட்டணம் என்று வருடக்கணக்காக எல்லாமே கைபேசி மூலம்தான். எல்லாவற்றிற்கும் மேலாக அவன் இத்தனை வருடங்களாகப் பாடுபட்டுச் சேகரித்த, அவனிடமிருந்து பிறக்கப்போகும் பல கதைகளுக்கான தரவுகள்.  ‘கையறு நிலை’ தான். ஒரு நொடியில் எல்லோருடைய தொடர்பு எல்லைக்கும் அப்பால் போய்விட்டிருந்தான் பெத்து.

‘கைபேசி’க்கு முந்தைய காலம் போல எஸ்.டி டி பூத் எல்லாம் இப்போது இருக்குமா? தெரியவில்லை. வண்டி ஊர்ந்து ஊர்ந்து சென்று கடைசியில் நின்றே விட்டது. பத்துநிமிடமாகியும் நகர்வதாகத் தெரியவில்லை.’ட்ராக்கு புல்லா பாறை விழுந்து கெடக்கு, வண்டி போகாது’ என்றார்கள் போய்ப் பார்த்துவிட்டுவந்த இளைஞர்கள். தொங்கோட்டமாக ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்துவிடலாமா? கைபேசி விழுந்த இடத்திலிருந்து இங்குவர வண்டிக்கே பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பொறுமையிழந்து ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். சிலர் தண்டவாளத்தின் நடுவே ஓடிய பல் சக்கரங்களை ‘போட்டோ’ எடுத்துக்கொண்டிருந்தனர். விண்ணை முட்டுகிற அந்தச் சிகரம் பெத்துவைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தது.

பின்னாளில் ஒரு சிறுகதையில் அந்தக்கதை நாயகனின் கூற்றாக இந்த நிகழ்ச்சி இவ்வாறு நினைவுகூறப்பட்டிருந்தது.

 
“அரை மணிக்கு மேல ஆச்சு. கொஞ்சநேரத்துல ‘ஊஊ..’ னு இஞ்சின் சவுண்டு. திடீர்னு நான் குன்னூர்ல பேசிட்டிருந்தேனே, அவர் விசில் ஊதி எல்லாரையும் வண்டில ஏறச்சொன்னாரு, சரி பாதை சரியாயிருச்சுனு ஏறி உக்காந்தோம். வண்டி மெதுவா பின்னால போக ஆரம்பிச்சுச்சு. ஒண்ணும் புரியல. “இப்பிடி ஏதாவது ‘இன்சிடென்ட்’ நடந்தா பக்கத்து ஸ்டேஷன்ல ரிப்போர்ட் பண்ணணுமாம். அதான் ‘ரண்ணிமேடு’ ரிட்டன் போறோம். டிரைவர்ட்ட சொல்லிட்டேன் ஒங்க மொபைல் விழுந்த விவரத்தை. டன்னல் தாண்டின ஒடனே நிப்பாட்டறேன்னாரு” னு சொன்னான் பக்கத்துல இருந்த பையன். எனக்கா சந்தோசம் தாங்கமுடியல. அடுத்த பத்து நிமிஷத்துல என் கைல மொபைல் வந்துருச்சு.

என் கைபேசி தொலைந்து போயிருந்த அந்த அரைமணிநேரம் நான் ‘சும்மா’ இல்லை. வங்கிப்பணியில் அதிகாரிகள் தேர்வுக்குப் படித்துத் தயார் செய்துகொண்டேன். தேர்விலே வென்று அதிகாரியானேன். வடமாநிலங்களுக்கு உயரதிகாரியாக மாற்றலாகிச் சென்றேன். வீடென்ன, காரென்ன. மொத்தத்தில் என் மனைவிக்குப் பிடித்த கணவனாக ஒரு அரை மணிநேரம் வாழ்ந்தேன். இதெல்லாம் என் கையில் அந்தக் கைபேசி கிடைக்கும் வரைதான். மேட்டுப்பாளையம் வந்திறங்கிய உடனே அந்த உதவி டிரைவருடன் தேநீர் அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் “ஒங்களுக்கு ரொம்ப லக்கு சார்..  இன்னைக்கி நான் மட்டும் ‘இன்சார்ஜ்’ ஆ இருந்திருந்தன்னா ‘ட்ராக்’கை  ‘க்ளியர்’ பண்ணிட்டு மேல போயிட்டே இருந்திருப்பேன். நான் கூட சொல்லிப் பாத்தேன். அவரு கேக்கல”. அப்ப, தற்செயலா ‘இன்சார்ஜ்’ ஆ இருந்த ஒருத்தர், இன்னொரு டிரைவர் சொல்லறத்தைக் கேக்காம, தற்செயலா பக்கத்துல இருக்குற ஸ்டேஷன்ல ரிப்போர்ட் பண்ணனும்னு தோணி, அது தற்செயலா நான் கைபேசியைத் தொலைத்த இடத்தைத் தாண்டி ஒரு ஸ்டேஷனா இருந்து இவ்வளவு தற்செயல்களுக்குப் பிறகு இந்தக் கைபேசி என் கையில் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்திருக்கிறது. அதன் பின்னர் அந்தக் கைபேசியிலிருந்து நான் சேகரித்த தரவுகளிலிருந்து நான் எழுதிய இந்த இருபது கதைகள் கொண்ட தொகுப்பிற்கு ‘விதி சமைத்த கதைகள்’ என்று பெயரிட்டேன். அதனளவில் அதன் இலக்கை எய்திய கதைகள். விதியால் சமைக்கப்பட்ட இந்தக்கதைகளில் ஒன்றிரண்டாவது விதி சமைக்கவும் கூடும் என்று கருதுகிறேன்”      

கதையை எழுதி முடித்துவிட்டு அந்த எஞ்சின் டிரைவரின், கதைக்கு நேர்மாறான முடிவினால், தலைகீழாக மாறிப்போன தன் வாழ்க்கையை நினைத்து, சீரான பற்களோடு சிரித்துக்கொண்டார் பெத்தபெருமாள். அவர் இன்று அந்த வங்கியின் ஓர் உயரதிகாரி. மேகாலயாவில் பணிபுரிகிறார்.  

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.