ஓசிப் மண்டல்ஷ்டாம் ரஷ்ய மொழி கவிதைகள்

தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ்

ஓசிப் மண்டல்ஷ்டாம் (1891-1938) ரஷ்ய இலக்கியத்தின் இரண்டாம் பொற்காலம் எனரு கருதப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த ரஷ்ய கவிஞர்களில் முக்கியமானவர். அன்னா அக்மடோவா, மரீனா ஸ்வெத்தாயேவா, போரிஸ் பாஸ்டர்நாக் என்ற அந்தக் காலக்கட்டத்தின் முதல்தரக் கவிஞர்களில் ஒருவராக எண்ணப்படுகிறவர். ரஷ்ய மொழிக் கவிதைகளில் பண்டைய கிரேக்க கவிதைகளின் சிக்கனமான சொல்லாடல், துல்லியமான வெளிச்சமிக்க படிமங்கள் ஆகியவற்றைக் கொண்டுவர முயன்ற அக்மெயிஸ (acmeist) இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியவர்.

(1)

காய்ந்து போன இந்த எனது வாழ்க்கையை
ஒரு தீப்பொறி வீழ்த்தியிருக்கிறது

இந்த முறை கல்லைப் பற்றிப் பாடாமல்
மரத்தைப் பற்றிப் பாடுகிறேன்.

எடை குறைந்ததுதான், ஆனால்
அதே நேரத்தில் கரடுமுரடானது

ஒரே துண்டிலிருந்து வந்தவைதாம் –
மீனவனின் மரத்தாலான படகுத்துடுப்புகளும்,
ஓக் மரத் தண்டும்.

நல்ல திடமான தூண்கள் எழட்டும்,

முழுவதும் எடை குறைந்ததாய் இருக்கும்
மரத்தாலான சொர்க்கத்தைப் பற்றி

சுத்தியல்களே, இரவு நேரத்தில் பாடுங்கள்.

(1914)

(2)


இரவு நேரத்து நட்சத்திரங்களின்
குளிர்ச்சி நிறைந்த இந்தச் சலிப்பான
ஒளியை வெறுக்கிறேன்.

எனது பழைய பித்து நிலையே, வா!
அம்பு முனைபோன்ற கோபுரத்தின் உச்சியே!

சரிகைத் துணியாக மாறிக்கொள்
கருங்கல் பாறையே –
மெல்ல அழுத்தி வைக்கக் கூடிய
மெல்லிய வலைப்பின்னலாக,
உனது கூர்மையான ஊசி முனையால்
வானத்தின் வெறுமையைக் குத்து.

எனக்கென்று ஒரு காலம்
வராமல் போகாது –
எனது தோளில் இறக்கைகள்
இறுக ஆரம்பித்திருப்பதை
உணர்கிறேன்.

அப்படியே ஆகட்டும் –
ஆனால் எதை நோக்கித்தான்
பாயப் போகிறது
இந்த உயிர்ப்புள்ள எண்ணத்தின்
அம்பு?

அப்படி நடக்கவில்லை
என்றால்
முற்றிலும்
வெறுமை நிறைந்தவனாகவும்
கடினமானவனாகவும்
வீட்டுக்குத் திரும்புவேன்:

அங்கே, என்னால் காதலை
உணர முடியவில்லை.

இங்கே – நான்
காதலிக்கவே அஞ்சுகிறேன்…

(1912)

(3)

தூக்கம் பிடிக்கவில்லை. கிரேக்கக்
கவிஞன் ஹோமர். இழுத்துக் கட்டிய
பாய்மரங்கள்.

இந்தக் கப்பல்களின் பட்டியலில்
ஒரு பாதியைத்தான் படித்திருப்பேன்:
பறவைக்குஞ்சுகளின் நீண்ட
அணிவகுப்பாகக் கப்பல்கள்

கிரேக்க நிலங்களிலிருந்து
மேகங்களுக்குள் ஏறிச்
சடசடக்கும் நாரைகளின்
ஆடை விரிப்பாக

அந்நிய நிலத்தை
குறிவைக்கும்
நாரைகளால் செய்யப்பட்ட
ஆப்பாகக் கப்பல்கள் –

கடல்நுரைகளால் குளிப்பாட்டப்பட்ட
மன்னர்களின் தலைகள்.

பேரழகியான ஹெலனின்
வசிப்பிடம் என்பதைத் தவிர
டிராய் நகரம் உங்களுக்கு
வேறென்னவாக இருக்கக் கூடும்?

நீங்கள் எங்கு பயணப்பட்டிருக்கிறீர்கள்
அக்கேயாவின் மனிதர்களே?

கடலும் ஹோமரும் – காதலுக்கே
அசைந்து கொடுக்கிறார்கள்.

நான் யாருக்குச் செவிசாய்ப்பது?
இப்போது ஹோமரும்
ஊமையாகிவிட்டான்.

பெரிய பேச்சுக்கள் பேசிக்
கொண்டே
கருங்கடல் தீர்மானமாய்
என்னிடத்தில் வந்து

என் படுக்கையின் தலைமாட்டில்
கூக்குரலிடுகிறது,

மிகுந்த ஆரவாரத்தோடு,
கடுமையாக.

(ஆகஸ்டு 1915)

(4)

இது என்ன தெரு?
மண்டல்ஷ்டாம் தெரு, சார்.

ஓ, தொலையட்டும் –
இந்தப் பெயரை எப்படித் திருப்பிப் போட்டாலும்
நேராக ஒலிக்காமல் கோணலாகத்தான் கேட்கிறது

அவனிடத்தில் நேரான காரியங்கள்
மிகச் சிலவே இருக்கின்றன.

வாழ்க்கையில் அவன் அணுகுமுறையும்
தூய்மையானதாக இல்லை.

அதனால்தான் இந்தத் தெரு –
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால்
இந்த நாற்றமெடுக்கும் குடியிருப்பு

மண்டல்ஷ்டாம் என்ற
பெயருடையதாக இருக்கிறது.

(ஏப்ரல் 1935)

(5)

குழந்தைகளின் புத்தகங்கள் மட்டும் வாசிப்பதற்கு,
குழந்தைகளின் சிந்தனைகள் மாத்திரம்
மார்போடு அணைத்துக் கொள்ள,

முதிர்ந்த வயதின் விஷயங்கள் அனைத்தும் வெறுத்துத் தள்ள,
எந்தவிதமான வேதனைதையும் பின்வாங்கச் செய்கிறது.

வாழ்க்கை, சாகடிக்கும்படியான சங்கடமாய் இருக்கிறது,
திருத்திக் கொள்ள எதுவுமில்லை,

ஆனால் நான் எதற்கும் குறைச்சலாகவே பயன்படும்
இந்த எனது நிலத்தைக் காதலிக்கத்தான் செய்கிறேன்,
நான் வேறெந்த நிலத்தையும் பார்த்ததில்லை.

மர ஊஞ்சலின் மீது, எனக்குள் முற்றிலும் மூழ்கியவனாய்,
வெகு காலத்திற்கு முன்பு, ஆனந்தமாய் ஊஞ்சலாடி இருக்கிறேன்,

இப்போதோ வெறிபிடித்தவனாய்
நினைத்துப் பார்க்கிறேன் – அவற்றைச் சுற்றி,
அதீத உயரத்தில் வளர்ந்திருக்கும்
கறுத்த நிறமுடைய ஃபிர் மரங்களை.

(1908)

(6)

முற்றத்தில் தாமதமாகத்தான் கை கால் கழுவினேன்.

கரடுமுரடான நட்சத்திரங்கள்
வானத்தை சுடர்விடச் செய்து கொண்டிருந்தன.

கோடரியின் கூரிய முனை மீது
உப்பு தேய்த்ததுபோல் நட்சத்திர வெளிச்சம்.

நீர் தளும்பிக் கொண்டிருந்த பீப்பாய்
குளிர்ந்து போயிருந்தது.

வெளிப்புற வாசல்களைச் சாத்தியாகிவிட்டது.
நிலத்தின் கடுமை இரக்கமற்றது.

இன்னமும் ஒரு கோடுகூட வரையாத
புதிய ஓவியத் திரையைப்போல்
பரிசுத்தமான அடித்தளம் ஏதுமில்லை.

உப்பு மணியைப் போல நட்சத்திரமும்
உருகக் கூடியதுதான்.

குளிர்ந்த இரவில் தண்ணீர்
மேலும் கருப்பாக இருக்கிறது.

அதேபோல் – மரணமும்
மேலும் பரிசுத்தமானதாக

வருத்தங்கள் மேலும் கூர்மையாக
அனுபவிக்கப்பட வேண்டியதாக

இந்தப் பூமி – மேலும் பயங்கரமானதாக,
முகத்தில் அடித்தாற்போல் பேசுவதாக.

(1921)


(7)

அச்சத்தையூட்டும் உயரத்தில்
அலையும் வெளிச்சம்!
நம் கண்ணில் தெரிவது
ஒரு நட்சத்திரம்தானா?

ஓ ஒளி ஊடுருவும் நட்சத்திரமே!
ஓ அலையும் வெளிச்சமே! –

உன் சகோதரனான பெத்ரோகிராட் நகரம் செத்து கொண்டிருக்கிறது!

பூமிக்குத் தொடர்பான கனவுகள்
பயமூட்டும் வகையில் உயர்ந்து
வானளாவி எரிகின்றன,
பச்சை நட்சத்திரம் ஒன்று பெருமூச்செறிந்தபடியே ஒளிர்கிறது,

நீ, தண்ணீருக்கும் வானத்துக்கும்
சகோரதனான நட்சத்திரம் என்பது
உண்மைதான் என்றால்

உன் சகோதரனான பெத்ரோகிராட் நகரம் செத்து கொண்டிருக்கிறது!

அந்தப் பயங்கர உயரத்தில்
ஒரு ராட்சசக் கப்பல்
தன் இறக்கைகளை விரித்துப் பறக்கிறது…

எல்லாத் திசைகளிலும் பரவி நிற்கும்
அழகிய வறுமையில் ஆழ்ந்திருக்கும்
நட்சத்திரமே,

உன் சகோதரனான பெத்ரோகிராட் நகரம் செத்து கொண்டிருக்கிறது!

கறுத்த நேவா ஆற்றுக்கு மேலே
மரணமின்மையின் மெழுகு உருகி ஓடுகிறது.

நீ நட்சத்திரம்தான் என்றால்,
உன் நகரம் கறுப்பு நிறமாய்
மாறிவிட்டது என்பதை அறிந்து கொள்,

உன் சகோதரனான பெத்ரோகிராட் நகரம் செத்து கொண்டிருக்கிறது!

(1918)

(8)

உறைந்திருக்கும் பனியின் முகத்தில்
உற்றுப் பார்க்கிறேன்,
நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் –

பனி – எந்த இடத்திலும் கட்டுப்படாததாக,
நான் – எந்த இடத்தையும் எனது
என்று சொல்ல முடியாதவனாக

விரிந்து கொண்டே போகும்
புல் திடல்களின் உயிர்ப்புள்ள அதிசயம்
தன்னைத் தானே மீண்டும் மீண்டும்
தேய்த்துத் தன்னையே
மீண்டும் மீண்டும் நெய்து கொள்கிறது.

இது நடந்து கொண்டிருக்கும் போதே
கஞ்சிபோட்டுத் துவைத்த
வறுமையைப்போன்ற ஒன்றோடு
சூரியன் இமைகளைச் சுருக்கிப் பார்க்கிறது

அதன் இமை சுருங்கிய பார்வை
அமைதியாகவே இருக்கிறது,
அதில் இப்போது எந்தவொரு
வருத்தமும் இல்லை என்று

இந்தப் பத்தடுக்குக் கானகங்கள்
எனக்கு துயரத்தோடு நினைவூட்டுகின்றன…

தூய்மையான ரொட்டியைப்போல்
பாவமற்ற பனி என் கண்களில்
ஓசையுடன் அரைபடுகிறது.


(1937)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.