எங்கே போகிறேன்?

அந்த ஆதீனமே மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அனைவரின் முகத்திலும் கவலைகலந்த எதிர்பார்ப்பு. எதையோ இழக்கப்போவது போலவும், அதேசமயம், முக்கியமான ஒன்று நிகழப்போகிறது என்ற பயம்கலந்த மரியாதையும் அங்கு நிலவியது.

மிகவும் தணிந்த குரலில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

“சுவாமிகள் எப்போது சித்தியடையப் போகிறார்? ஒரு மாசமாக அப்படியே கண்ணைமூடி அமர்ந்திருக்கிறாரே! உடலில் ஒரு அசைவும் இல்லையே! மூச்சு போய்வருவதாகவும் தெரியவில்லை. எல்லாம் அடங்கிவிட்டாற்போல இருக்கிறதே! ஜீவசமாதிதான் செய்யப்போகிறார்களா?’

“அவர் உடம்பில் பிராணன் இருக்கா இல்லையான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவரை நாம தொட்டுப்பார்க்கவா முடியும்?” இது இன்னொருவரின் கேள்வி?

“உசிர் இல்லாட்டா உடம்பு அப்படியேவா இருக்கும்? இத்தனை நேரம் வாடை நம்ம மூக்கைத் துளைக்காதா?” ‘பிணவாடை’ என்பதைத் தன் வாயால் சொல்லக்கூடாது என்று ‘வாடை’ என்ற பதில் கேள்வியும் பிறந்தது.

“ஆதீன அதிகாரி என்ன சொல்றார்?”

“ஜீவசமாதி பண்ணப் போறதாப் பேச்சு அடிபடறதே? அப்படிப் பண்ணலாமா? அதுக்கு கவர்மென்ட் பெர்மிஷன் கொடுக்குமா?” மேலும் மேலும் கேள்விகள்.

“உமக்கு ஏனய்யா இந்த விசாரம்?”

“இல்லே! எத்தனை நாள்தான் இப்படி எல்லோரும் குழம்பறது?” பொறுமை போவதைக் குரல் காட்டியது.

“உமக்கு அவசரம்னா நீர் கிளப்பிப் போவதுதானே?”

“சுவாமிகள் எப்படிப்பட்ட மகானுபாவர்? எஞ்சினீரிங்ல பி.எச்டி வாங்கி, பெரிய கம்பெனி ஆரம்பிச்சுக் கோடிக்கோடியாக் குவிச்சவர். திடும்னு எதுவும் வேண்டாம்னு தலைமுழுகி, லௌகிக சுகம் எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு, தர்மவிசாரத்திலே இறங்கி, வேத அத்யயனம் செஞ்சு, உபநிஷத்து எல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சு, சந்நியாசம் வாங்கிண்டு, இந்த ஆதீனத்தைத் தொடங்கினார். சொத்து எல்லாத்தையும் ஆதீனத்துக்கு எழுதிவச்சுட்டு, பிரவசனம், பூஜை, உபதேசம்னு எல்லோருக்கும் எத்தனை நல்ல காரியம் செஞ்சார்? ஆதீனகர்த்தானு பேருதானே தவிர, நிர்வாகம் எல்லாம் மத்த அதிகாரிகள்கிட்ட ஒப்படைச்சுட்டாரே!” தான் அங்கேயே இருப்பதற்குக் காரணம் மறைமுகமாக வெளிவந்தது.

“ஓய்! எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயத்தை ஏன் எங்கிட்டச் சொல்றீர்?” மற்றவருக்குக் கேட்கப் பொறுமையில்லை. மேலே என்ன நடக்கப்போகிறதோ என்ற ஆர்வம் அவருக்கு.

“அப்படிப்பட்ட மகானுபாவர் மூணு மாசமா யார்கிட்டயும் பேசறதையே நிறுத்திட்டார். எப்பப் பார்த்தாலும், கண்ணை மூடித் தியானம்தான், நிஷ்டைதான்! இப்ப என்ன ஆகும்னு தெரியலை. மனசு கிடந்து அடிச்சுக்கறது. ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சுக்காம இங்கேந்து கிளம்பவும் மனசு வரல்லை,” என்று பெருமூச்சு வந்தது.

திடுமென்று மிகவும் பரபரப்பான பேச்சு தொடங்கியது, ஒருவர் காதை மற்றார் கடித்து விவரம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

அனைவரையும் அமைதியாக இருக்கும்படி யாரோ அறிவித்தார்கள்.

கிசுகிசுப் பேச்சு ஆர்வமிகுதியால் அடங்கியது. அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவல், எதிர்பார்ப்பு.

“சுவாமிகள் எழுதிவைத்த திருமுகக் குறிப்பு ஆதீன அதிகாரிக்குக் கிடைத்திருக்கிறது. அதில் அவர் ஒரு மாதமாகியும் தியானத்திலிருந்து எழாதுபோனால் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆக்ஞை கொடுத்திருக்கிறாராம்!”

இதைக் கேட்டதும் அனைவருக்கும் பேச்சே எழவில்லை. ‘ஆ’ என்ற பேரொலி எழுந்து அடங்கியது.

‘ஜீவ சமாதியா? உயிருடன் கண்மூடித் தியானத்தில் ஒன்றியிருக்கும் சுவாமிகளைச் சுற்றிச் சுவரெழுப்பி மூடி, அதிஷ்டானம் கட்டப்போகிறார்களா? இதற்கு அரசு அனுமதி கொடுக்குமா? அரசை மீறி ஆதீன அதிகாரி செயல்பட்டால், அத்தனை பேரையும் அரசு என்ன செய்யும்? சிறையில் அடைத்துவிட மாட்டார்களா?’ என்றுதான் பெரும்பாலோர் மனதில் கேள்வி எழுந்தது.

இதற்குள் ஒரு கூடை நிறையத் தேங்காய்களை ஒரு சிப்பந்தி எடுத்துக்கொண்டு போனான்.

இரண்டு மூன்று நிமிடங்களில் சதுர் தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டது.

பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்…

***

…இனம்புரியாத சூழ்நிலை.

ஓலியும் இல்லை, அமைதியும் இல்லை. வெளிச்சமும் இல்லை, இருட்டும் இல்லை; உணர்வும் இல்லை, உணர்ச்சிகளும் இல்லை, நுகர்வும் இல்லை, செயலும் இல்லை, சிந்தனையும் இல்லை; மகிழ்வும் இல்லை, கவலையும் இல்லை; அச்சமும் இல்லை, ஆணவமும் இல்லை.

எங்கிருக்கிறேன்? என்ன செய்கிறேன்? ஒன்றும் புரியவில்லை.

யாரோ பேசுவதுபோலவும் இருக்கிறது, பேசாதது போலவும் இருக்கிறது.

இதென்ன இரண்டான்கெட்ட நிலை?

இதுதான் திரிசங்கு சுவர்க்கமா? இங்கா வந்திருக்கிறேன்?

இதையும் நான் எப்படி நினைக்க இயலும்? எனக்கு இது எப்படித் தோன்றுகிறது? எனக்குத்தான் சிந்தனையே இல்லையே?

உன் செயலை நான்தான் முடித்தேன் என்று யாரோ சொல்லுவதுபோல – இல்லையில்லை, அதை உணர்வதுபோலத்தான் இருக்கிறது. என்னிடம் ‘நான்’ என்று சொல்வது யார்? உணர்வது யார்? என் செயலை முடித்தது யார்? யார்? யார்?

எல்லாமே நான்தான். நீயும் நான்தான். நானும் நீதான். நீ இதுவரை கண்டது எல்லாமே நான்தான். என்னையன்றி எதுவுமே இல்லை.

அப்படியானால்? என் செயலை முடித்த நீங்கள் யார்? இதையும் நான் என் சுய உணர்வுடன் கேட்டதுபோலத் தெரியவில்லையே? உணர்வில்லாத, பேசமுடியாத, சிந்தனையில்லாத, வார்த்தகளற்ற, நான் எப்படி இதைக் கேட்கிறேன்?

கேட்பதும் நான்; உன்னைக் கேட்கவைப்பவனும் நான். காண்பதும் நான்; காணவைப்பதும் நான். உணர்வதும் நான்; உணரவைப்பதும் நான். உணர்வுக்கு அப்பாற்பட்டவனும் நான்.

நீங்கள்தான் நான் இதுவரை தேடிய பரமேஸ்வரனா? பரம்பொருளான பரப்பிரம்மமா?

தேடியதும் நான், தேடவைத்ததும் நான்.

எனக்குப் புரியவில்லையே.

புரிவும் நான்; புரியவைப்பதும் நான்.

குழப்பமாக உள்ளதே!

குழப்பமும் நான், குழம்பவைப்பதும் நான். தெளிவும் நான், தெளியவைப்பதும் நான்.

யார் இந்த நான்? எனக்கு விளக்கம் தேவை. இதுவரை நான் படித்தது, புரிந்துகொண்டது, செய்தது எல்லாமே பரம்பொருளான பரமேஸ்வரனை, பரப்பிரம்மத்தைத் தேடித்தான், அதை அறிந்துகொள்ளத்தான்., அந்த சச்சிதானந்தத்தைதேடி, எல்லையில்ல ஆனந்தத்தை தேடி அலைந்தது, தியானித்தது, அனைத்தையும் துறந்தது – இது எல்லாம் செய்தும், நான் இங்கு எங்கு வந்தேன்? தெளிவு வேண்டும்!

உள்ளத்தால் உள்ள இயலதாவன் நான். உள்ளத்தைக் கடந்து நிற்பவன் நான். கண்களால் காணமுடியாதவன் நான். சொற்களால் சொல்லமுடியாதவன் நான். எதற்கும் அப்பாற்பட்டவன் நான்.

புரியும்படி விளக்கவேண்டுகிறேன். பரம்பொருளைப் பற்றி நான் படித்ததற்குத்தானே இப்பொழுது நான் விளக்கம் கேட்கிறேன். நான் எங்கு இருக்கிறேன்? எங்கு எதற்காக வந்துள்ளேன்? ஜீவாத்மனான நான் பரம்பொருளான உங்களுடன் ஒன்றிவிட்டேனா, இல்லை, இது இடைநிலையா? இல்லை இன்னும் கனவுலகில் இருக்கிறேனா? ஆழ் உறக்கத்தில் இருந்தால் எதையும் எண்ணவோ, கேட்கவோ இயலாதே?

நீ படித்தது, உலகம் என்று நீ நினைத்தது, அங்கு நீ கண்ட மனிதர், மிருகம், இயற்கை, ஏன் மொத்த அண்டமே ஒரு மயக்கம்தான். அனைத்தும் தனியான உனக்காக நான் தோற்றுவித்த மாயை.

மாயையா? அப்படியானால் நான் உயிர்வாழவில்லையா? குழந்தையாகப் பிறந்து வளரவில்லையா? அத்தனை உறவு, குடும்பம், நண்பர், உலகம், நான் பெற்ற அறிவு, தத்துவ விசாரம், தியானம், மனதை ஒருநிலைப் படுத்த அமர்ந்தது, இதெல்லாம்…?

திரும்பத் திரும்ப அனைத்தையும் நீ உன் கோணத்துக்குள் அடக்க முயல்கிறாய். உனக்குப் புரியும்படி உரைக்கிறேன். சுருங்கச்சொன்னால் கம்ப்யூட்டர் விளையாட்டில் இருக்கும் ஒரு பாத்திரம்போலத்தான் நீ! நீ உணர்ந்து எல்லாமே அந்த விளையாட்டுதான்! கம்ப்யூட்டர் விளையாட்டு எவ்வளவு உண்மையோ, அத்தனை உண்மைதான் நீ இதுவரை கண்டது, கேட்டது, அறிந்தது, துறந்தது, தேடியது – அனைத்துமே!

என்னது? நான் வாழ்ந்தது பொய்யா? துறவு பூண்டு உன்னைத் தேடியது பொய்யா? நான் படித்த வேதங்கள் பொய்யா? பரம்பொருளான நீயே பொய்யா? என்னைத்தவிர வேறு எதுவுமே இந்த அண்டத்தில் இல்லையா?

இன்னும் உன் அகம்பாவம் நீங்கவில்லையே! ‘நான்’ என்பது உன்னைவிட்டு நீங்கவில்லையே! நீயே இல்லை என்றால், உலகமாவது, அண்டமாவது? நீ கணிணி விளையாட்டில் வீடு கட்டுகிறாய், அரசனாகிறாய்? படை சேர்க்கிறாய். போரிடுகிறாய். முதலில் சிறிதுசிறிதாகக் கற்கிறாய். அது பெரிதாகிறது. அதற்காக கணினியில் இருக்கும் அனைத்தும் உண்மை ஆகிவிடுமா? நீ விளையாடுவதைப்போல நான் விளையாடுகிறேன். அதில் நீ ஒரு சிறிய பாத்திரம். அதில் நீ அறிந்த வேதங்கள், உலகங்கள், மற்ற சமயங்கள், அவற்றின் வேதங்கள் எல்லாம் அந்த விளையாட்டில் அடங்கியதே! கணினி விளையாட்டின் தொடக்கத்தில் உன்னைத்தவிர வேறு எதுவும் இருக்காதது போல, நீ தொடங்கியபோது உனக்கு வேறு எதுவும் புலனாகவில்லை. நான் விளையாட விளையாட, நீ படித்த வரலாறு, போர்கள், சமாதானங்கள், மனிதப் பரிமாண வளர்ச்சி, என்று உனக்குப் புலப்படத் தொடங்கின. ஆனால் அவை எதுவும் உண்மையல்ல; பெயர், உருவம், செயல் இவை அடங்கிய மாயத் தோற்றமே!

என்னால் இன்னும் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. எனது தர்மம், சனாதன தர்மம். அதுவும் மாயையா?

அதுவும் இந்த விளையாட்டில் நீ தெரிந்துகொண்டதே! நீ ஒரு இஞ்சினியர். உனது கம்ப்யூட்டரில் இருக்கும் மைக்ரோ பிராசசர் மணல் துகள்தானே! அதுதானே உனக்கு அத்தனை மயக்கத்தையும் தோற்றுவிக்கிறது.

அதில் சாப்ட்வேர் உள்ளதே?

அது தானாகவா செயல்படுகிறது? அதுவும் அந்த மணல் துகளுக்குள் புதைந்து கிடப்பதுதானே! எப்பொழுது மின்சாரம் அதில் பாய்கிறதோ, அப்பொழுதுதானே அந்த மணற்துகளும் செயல்படுகிறது?

அந்த மின்சாரம் பரம்பொருளா?

மின்சாரத்தை நீ பார்க்கமுடியுமா?

ஷாக் அடித்தால் அதை உணரமுடிகிறதே!

அதுவா மின்சாரம்? அது ஒன்றுக்கும் உதவாத உடம்பில் ஏற்படும் ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சியை ஏற்படுத்தியதும் நான். இல்லாவிட்டால், அது உன்னைக் கொன்றுவிடுமே! விளையாட்டு முடிந்துவிடுமே! அதுவும் மாய உணர்வே?

எதுதான் உண்மை?

உனக்குப் புரிவதற்காக ஒன்றைச் சொன்னால் அந்த ஒன்றைப் பற்றித்தானே நீ சிந்திக்கிறாய்? அது எதற்காக, ஏன், எங்கு சொல்லப்பட்டது என்பதை அல்லவா உணரவேண்டும்! என்னை எதற்காக அடையவிரும்பினாய்?

நான் பரம்பொருளை, பரப்பிரம்மத்தை, பரமேஸ்வரனைத் தேடினேன்…?

இப்பொழுது மூன்று பெயர்கள் சொன்னாயே, அந்த மூன்றில் எதை, ஏன், எங்கு தேடினாய்?

என்றும் குறையாத, அள்ளியள்ளிப் பருகினாலும் குறையாத அந்தச் சச்சிதானந்தப் பெருநிலையை அடையத்தான்.

ஆக பலனை விரும்பித்தான் என்னைத் தேடினாயா?

அப்பொழுது நீங்கள்தான் பரம்பொருளாகிய பரப்பிரம்மமா?

கேள்விகேட்கும் அளவுக்கு உன்னிடம் புரிதல் இல்லையே!

அப்படியானால் இதுவரை நான் தேடியது வீணா? அதுவும் மாயத் தோற்றமா?

ஐயமா உனக்கு? பரம்பொருளைத் தேடியதற்குப் பலனை எதிர்பார்த்தாய். இப்போழுது தேடியதே வீண், மாயத் தோற்றம் என்ற எண்ணம் உனக்குத் தோன்றுகிறதே! வீணான ஒன்றைத் தேடுவதே வீண்தானே! அப்படி வீண் என்று நினைத்து என்னைத் தேடினால் , நீ எப்படி என்னை அடையமுடியும்?

என் சிற்றறிவுக்கு எட்டவில்லையே!

அளக்கமுடியாத என்னை அளக்க முற்படுகிறாயே!

தவறுதான். பரம்பொருளை யாரால் அளக்கமுடியும்?

உனக்கு என்னவேண்டும்?

எனக்குள் இருக்கும் பரம்பொருளை நான் உணரவேண்டும். சச்சிதானந்தில் மூழ்கித் திளைக்கவேண்டும். குறைவில்லாத அந்த ஆனந்தத்தை அடையும் பக்குவம் வரவேண்டும்.

அப்பொழுது உனக்குப் பக்குவம் இல்லை என்பதை நீயே ஒப்புக்கொள்கிறாயா?

அந்தப் பக்குவத்தை அடையும் வழிதான் என்ன?

நீ படித்த புத்தகங்கள் என்ன சொல்கின்றன?

ஒன்றொன்றாகப் பரம்பொருளைத் தேடி, இது அதுவல்ல, இது அதுவல்ல என்று உணர்ந்து அனைத்தையும் விடவேண்டும் என்று சொல்கிறது.

நீ சொல்லும் வழியிலேயே செல்வோம். எதுவானாலும் அது பரப்பிரம்மான நான் அல்ல என்றால், நீ தேடும் சச்சிதானந்தமாக நான் எப்படி இருக்க முடியும்? என்றும் குறையாத ஆனந்தம் என்ற சுகமான ஒரு அனுபவத்தைத்தானே நீ தேடியிருக்கிறாய்? அந்த ஆனந்தம் அள்ள அள்ளக் குறையாதது, அதில் மூழ்கவேண்டும் என்று சொன்னாயே, அந்த ஆனந்தமும் நான் அல்ல என்றுதானே நீ ஒதுக்கித் தள்ளியிருக்கவேண்டும்?

சச்சிதானந்த சொரூபம்தான் பரப்பிரம்மம் என்றல்லவா சுருதிகளும், ஸுமிருதிகளான உபநிஷத்துகளும் உரைக்கின்றன?

அதே வேதங்களும், வேதாந்தங்களான உபநிடதங்களும் ஆகமங்களும் எனக்கு உருவமில்லை என்றும் கூறுகின்றனவே! குழப்பத்தைத் தீர்க்க இந்தக் கேள்விக்குக் பதில் சொல்! எதற்காக இஞ்சினீயர் தொழிலைவிட்டுத் தத்துவ விசாரத்தில் இறங்கி என்னைக் குறித்துத் தியானத்தில் ஈடுபட்டாய்?

பரப்பிரம்மத்தை அடையத்தான்.

நான் உன்னுள் இருக்கிறேன் என்றும், நீதான் அதுவாக இருக்கிறாய் என்றும், பரம்பொருளான பரம்பொருளாக நான் இருக்கிறேன் என்றும் மறைகள் பகர்கின்றனவே, அப்படியிருந்தும் என்னை எங்கு தேடினாய்?

தியானித்துத் தேடினேன். அதற்குமுன் அனைத்தையும் துறந்தேன். பசி, தாகத்தை மறந்து மனதை ஒருநிலைப்படுத்தினேன்.

அது இருக்கட்டும். ஏன் ஆதினத்தை ஆரம்பித்தாய்?

சனாதன தர்மம் தழைக்கத்தான்.

ஆக, பலனை வேண்டித்தானே அதை ஆரம்பித்தாய்? பலனை எதிர்பார்த்தால் என்னை எப்படி அடையமுடியும்? புண்ணியம், பாவம், நல்வினை, தீவினை இவை என்னை அறிந்தவரைப் பற்றாதே! எது தழைப்பது, எது அழிவது என்பது உனக்கெதற்கு?

அப்படியானால் நான் செய்தது தவறா? பரம்பொருள் எங்கும் எதிலும் இருக்கிறான் என்றுதானே நம்பினேன்!

அப்படி நம்பியிருந்தால் எதையும் பரம்பொருளின் போக்கில் விட்டுவிட வேண்டியதுதானே!

அதைத்தானே செய்தேன்! ஆதின விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிட்டேனே!

இல்லையே!

என்ன சொல்கிறீர்கள்?

இறுதிவரை ஆதீனத்தையும் உன் கைக்குள்தானே கட்டுப்படுத்தி வைத்திருந்தாய்!

அப்படியா? எப்படி?

ஒரு மாதமாகியும் தியானத்திலிருந்து எழாதுபோனால் ஜீவசமாதி செய்துவிடும்படி ஆஞ்ஞை கொடுத்துத் திருமுகக் குறிப்பு எழுதினாயே, அது எதற்கு? அதை நிறைவேற்றும் அதிகாரி – உன் சொல்லை வேதவாக்காக மதிக்கும் அதிகாரி, அவருக்கு உதவியவரைச் சிறைக்குச் செல்லவைக்கும் கொடிய தண்டனை அல்லவா உன் ஆக்ஞை? அத்துடன், நீ எந்த சனாதன தர்மம் தழைக்கவேண்டும் என்று எந்த ஆதீனத்தை ஆரம்பித்தாயோ, அதுவே அரசால் இழுத்து மூடக் காரணமாகவும் உன் இறுதி விருப்பம் அமையும்படி செய்துவிட்டாயே! இதுதான் பரம்பொருளைத் தேடும் முறைமையா?

ஜீவசமாதி ஆவது சனாதன தர்மத்தில் வழக்கம்தானே?

அந்த மரபை நான் குறைசொல்லவில்லை. அது தானாக நிகழின் தவறில்லை. அதனால் மற்ற ஜீவர்களான எனக்குத் துன்பத்தை வரவழைக்கக் காரணமான செயலைதஆக்ஞையாக, கட்டளையாக இட்டுச் செல்வது எப்படியிருக்கிறது என்றால், படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பதைப்போல இருக்கிறது. இப்படிப்பட்ட நீ, என்னை அறிய இயலாது. அதற்கான பக்குவம் உனக்கில்லை. என் விளையாட்டில் நீ மீண்டும் ஒரு பாத்திரமாகிப் பக்குவம்பெற முயலவேண்டும்.

வேண்டாம், வேண்டாம், எவரும் சிறைசெல்ல வேண்டாம். என்னால் ஆதினம் அழிய வேண்டாம், உடனே நான் என் தியானத்தை…

***

…படார் என்று உச்சந்தலையில் விழுந்து உடைந்து தெரித்த தேங்காய், மண்டையோட்டைப் பிளந்தது. சுவாமிகளின் உயிர் பிரிந்தது. உரையாடல் நின்றுபோனது.

“சுவாமிகள் கடைசிவரை ஒன்றுமே பேசாமல் ஜீவசமாதி ஆகிவிட்டார்! அப்போது அவருடைய கண்கள் தானாகத் திறந்ததே! என்ன ஆச்சரியம்!” என்ற பெரிய கோஷம், தூரத்தில் போலீஸ் ஊர்தி வரும் சங்கொலியையும் மீறி எழுந்தது.

***

(பிருகதாரண்யக உபநிடத்தின் சில பகுதிகள் இக் கதைக்குக் கருவாக அமைந்தன,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.