உணவு, உடை, உறையுள், … 1

This entry is part 1 of 3 in the series உணவு, உடை, உறையுள்

பெற்றோர்கள் இறந்ததும் வரும் நிரந்தர இழப்பின் சோகத்தையும் மீறி மனதைத் தாக்கும் கழிவிரக்கம்.. இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பழகி அவர்களை, அவர்கள் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொண்டு இருக்கலாமோ? இளம் வயதில் அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருந்தன? அவற்றை எப்படி சமாளித்தார்கள்? அவர்கள் அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகளை ஏன் கேட்டு ஞாபகத்தில் வைக்கவில்லை? அவர்கள் விரும்பிப் படித்த புத்தகங்கள்? எழுத ஆசைப்பட்டது உண்டா? பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் சுவாரசியமான நிகழ்வுகள்? நிறைவேறாத காதல்கள்? காற்றில் பறக்கவிட்ட குறிக்கோள்கள்?

இனி இக்கட்டான நிலையில் அவர்களிடம் அறிவுரை கேட்க முடியாது. அவர்கள் காலம் பற்றி பாடப்புத்தகங்களில் சொல்லாத விஷயங்கள் அவர்களோடு போய்விட்டன. தன் குழந்தைகளிடம் தாத்தா பாட்டியின் படங்களைத்தான் காட்ட வேண்டும்.

சில ஆண்டுகளுக்குமுன் அப்பா இறந்தபோது ராகுல் அப்படி வருந்தவில்லை. அவன் அறிந்தவரை சிக்கலும் சுவாரசியமும் இல்லாத வாழ்க்கை. முடிவும் எதிர்பார்த்ததுதான். அம்மா வித்தியாசமானவள், காரியங்களில் தாராளம், வார்த்தைகளில் சிக்கனம். சென்ற ஆண்டில் தான் அவள் ஏழாவது பத்தாண்டைத் தொட்டாள். அவளுடன் கனமான விஷயங்கள் பேச இன்னும் நேரம் இருப்பதாக நினைத்திருந்தான். அது பொய்யாகிவிட்டது.

“தப்பு முழுக்க உன்பேர்ல இல்ல. அம்மாவை உயர்ந்த பீடத்தில வச்சுடறோம். சம நிலையில் பேசறது சிரமம்” என்று சித்தி சமாதானப் படுத்தினாள்.

உண்மை தான். சித்தியுடன் இருந்த சரளம் அம்மாவுடன் ராகுலுக்கு இருந்தது இல்லை.

“பள்ளிக்கூடத்தில படிக்கிறப்ப அவ கணக்கைவிட இங்க்லிஷ்ல நிறைய மார்க் வாங்குவோ. அவ தான் லிட்டரரி அசோஸியேஷன் செக்ரடரி. காலேஜ்லியும் இங்க்லிஷ் லிட்டரேசர். பி.ஏ. முடிக்கறதுக்கு முன்னாடி தாத்தா போயிட்டார். மேல படிக்க முடியல. எலெக்ட்ரிசிடி போர்ட்ல வேலைக்குப் போனா, சம்பளத்துக்காக. கொடுத்த வேலையை எவ்வளவு நிதானமா பண்ணினாலும் மத்தியானத்துக்கு முன்னாடியே அது முடிஞ்சிடும். சாப்பாட்டுக்கு அப்புறம் வேலை பண்ணற மாதிரி பாவனை. இரண்டாவது முதலாவதைவிடக் கஷ்டம்னு சொல்லியிருக்கா.”

“அம்மாக்கு இருபத்தியோரு வயசில கல்யாணம். இப்ப நினைச்சுகூடப் பார்க்க முடியாது.”

“அம்மா முதல் பெண். அவளுக்கு அப்பறம் மாமா, நான். எங்களோட வாழ்க்கை தள்ளிப்போகக்கூடாதுன்னு சம்மதிச்சா. அவளைவிட அத்திம்பேர் பன்னிரண்டு வயசு பெரியவர். இரண்டு பேருக்கும் பொதுவா எதுவும் இருந்தது இல்ல.”

“தெரியும். பி.காம். முடிச்சதும் அப்பாவுக்கு போர்ட் ட்ரஸ்ட்டில் கணக்கு பார்க்கும் வேலை. பத்து இருபது பாசுரங்கள் தெரியும். மாத்தி மாத்தி சொல்லி பூஜை செய்வார். மத்தபடி அம்மாவின் இலக்கிய ரசனை அவருக்குக் கிடையாது.”

“முக்கியமா, தனிக்குடித்தனம் வச்சதும் வீட்டில எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு தீர்மானம் எடுத்துனுட்டார். அக்கா ஆறு மாசம் பார்த்தா. அவளுக்கு அப்போ மூணு மாசம். அப்போலேர்ந்து வீட்டு நிர்வாகம் அவள் முழுநேர வேலை.”

“நாங்க எதாவது உதவி கேட்டா, ‘அம்மா கிட்ட சொல். அவளுக்கு வேறென்ன வேலை?’ன்னு அப்பா சாக்கு சொல்வார்.”

“இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் பிறந்த வீட்டுக்கு வந்தா. அப்ப கூட அவ மனசு தன் வீட்டைப் பத்தித்தான்.”

“எனக்கு இரண்டு சித்தப்பாக்கள். இரண்டு சித்திகளுக்கும் பாங்க்ல நல்ல வேலை. வீட்டில் சமைக்க ஆள், குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிண்டுபோய் கொண்டுவர ஆயாக்கள். பாட்டிக்கு அவங்களைப் பத்தி எப்பவும் பெருமை – ‘வனஜாக்கு சம்பளம் அதிகமாப் போறது, கீதாக்கு ப்ரமோஷன் காத்திண்டிருக்கு.’ அதில, ‘நீயும் இருக்கியே சோம்பேறித்தனமா’ன்னு அம்மா மேல மறைமுக குற்றச்சாட்டு. என் அம்மா சிக்கனமா சாமான்கள் வாங்கி எல்லாருக்கும் சமைச்சது, எங்களை வளர்த்தது, எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது எதுவும் பாட்டி கண்ணில் படாது. எல்லாம் சொல்லிட்டு கடைசி வரைக்கும் பாட்டி எங்க வீட்டில் தான் இருந்தா.”

இறந்தவரின் வாழ்க்கையைப் பேசி ஒருவரை யொருவர் ஒருவாறு தேற்றியதும்,

“உன்னால இப்ப சென்னை போக முடியுமா?”

“ஊகும். நீமா இப்ப ஊர்ல இல்ல.”

“எங்கே?”

“ஜப்பான். இப்பதான் கிளம்பிப்போனா. புது இடத்தில சாமான்கள் இறைஞ்சு கிடக்கு.”

பிறகு, கைவிட்ட குரலில்,

“நான் போய் என்ன பண்ணப்போறேன்? சஞ்சய் காரியங்களை கவனிச்சிப்பான்.”

யூ.எஸ். வந்ததில் இருந்து வாரம் ஒரு தடவையாவது ராகுல் சித்தியை அழைத்துப் பேசுவது வழக்கம். எந்தச் செய்தியையும் அவளிடம் சொல்லியாக வேண்டும். எந்தப் பிரச்சினைக்கும் அவள் அறிவுரை முதல் படி.

“சித்தி! என்னோட இந்திய பாஸ் வறுத்தி யெடுக்கறான். இந்த ரெண்டு வருஷத்தில வெளிலே சொல்றபடி ஒரு ரிசல்ட்டும் இல்ல. அது போறாதுன்னு எப்பவும் முதுகு வலி.”

“டாக்டர்கிட்ட காட்டினியா?”

“அவர் உன் மனசு தான் சரியில்லன்னு சொல்லிட்டார். ஒரு செமெஸ்டர் ப்ரேக் எடுக்கலாம்னு நினைக்கிறேன்.”

“இங்கே வந்து இரேன். என்னோட இரண்டு வால்களையும் பார்த்துக்கோன்னு சொல்ல மாட்டேன்.”

“நான் எங்க வீட்டுக்கே போறேன்.”

“திரும்பிவந்து வேறொரு ப்ரொஃபசரைப் பிடி!”

“ஒருவழியா பிஎச்.டி. முடிச்சுட்டேன். எட்டு வருஷத்தில.”

“வாழ்க்கை நீண்ட காலப் பயிர். அடுத்தது..”

“ஷிகாகோல போஸ்ட்-டாக். இரண்டு வருஷத்துக்குக் கவலை இல்ல. அதுக்கு முன்னாடி மூணு மாசம் சென்னை. போன தடவை போனப்ப அம்மா கிட்ட ரசமும் வேகவைத்த உருளைக்கிழங்கு கறியும் பண்ணக் கத்துண்டேன். இந்த தடவை உப்புமா, இட்லி, தோசை..”

“பொங்கல், பஜ்ஜி, கேசரி… ‘மணமகள் தேவை’யில் போடலாம். தென்னிந்திய சமையல் தெரிந்த கட்டிளம் காளைக்கு அதை ரசிக்கும் கன்னிப் பெண் தேவை.”

“நீங்க எந்த காலத்தில இருக்கீங்க?”

“சித்தி! முப்பத்திமூணு வயசில எனக்குக் கல்யாணம். ‘பயலாஜிகல் க்ளாக்’ல நேரம் பாக்கி இருக்கு.”

“ரொம்ப சந்தோஷம். பெண் யார்? எங்கே இருக்கா?”

“பெயர் நீமா. எஸ்.எஸ்.என். காலேஜ்ல பி.டெக். இங்கே வந்து யுஐசி(யுனிவெர்சிடி ஆஃப் இல்லினாய், ஷிகாகோ)ல எம்.எஸ். முடிச்சதும் ஷிகாகோலயே பிரமிட் கன்சல்டிங்.”

“படம் அனுப்பு, பார்க்கலாம்! “

நீமாவின் பெங்களூரு சிநேகிதி கல்யாணத்தில் எடுத்த படத்தை அனுப்பினான்.

“பட்டுப் புடவையில ரொம்ப அழகா இருக்கா.”

“ஸ்கர்ட் அன்ட் ப்ளவுஸ்ல இன்னும் அழகு.”

“அவளை எப்படி பிடிச்சே? ‘இன்டர்நெட் டேட்டிங்’கா?”

“நான் காலேஜ்ல போஸ்ட்-டாக். அது கூட இன்றோ நாளையோ. ‘ஈ-ஹார்மொனி’யில் போட்டா எந்தப் பெண் என்னை சீந்துவோ?”

“அப்ப..”

“அப்பாவும் அம்மாவும் இப்ப சோழிங்கநல்லூர் ஃப்ளாட்ல.”

“தெரியும்.”

“அம்மா தினம் சாயந்தரம் கட்டடத்தைச் சுத்தி நடக்கறது வழக்கம். அவளுக்குத் துணையா அங்கே இன்னொரு மாமி. அம்மா அவகிட்ட என்னைப் பத்தி சொல்ல..”

“என் பையன் ரொம்ப சமத்து, என்னை மாதிரி நன்னா சமைப்பான், பெண்கள் விஷயத்தில பத்தியமா நடந்துப்பான்.”

“அதை அந்த மாமி தன் பெண்கிட்ட சொல்ல, அவளே என்னைக் கூப்பிட்டா.”

“ஆக, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு..”

“ஒரு பாதி தான்.”

“இன்னொரு பாதி.”

“முதல் சந்திப்பிலேயே நீமாவுக்கு என்னைப் பிடித்துவிட்டது.”

திருமணத்துக்குப்பின் நீமா சில ஆண்டுகளாக வசித்த சௌகரியமான பெரிய அபார்ட்மென்ட்டில் புதுக்குடித்தனம். தனிமையை அனுபவிக்க மூன்று மாதம் கொடுத்துவிட்டு சித்தி அழைத்தாள்.

“எல்லாம் எப்படி போறது?”

“தேன்நிலவு முடிஞ்சு இப்ப நான் வேலை தேடும் படலம்.”

“அதுல..”

“யுனிவெர்சிடில நிறைய க்ரான்ட் வெட்டிட்டாங்க. அதிகாரம் சைனா இல்ல பழைய சோவியத் யுனியன்லேர்ந்து வந்தவங்க கையில. அவங்க ஆட்களைக் கொண்டுவந்து வச்சுக்கறாங்க. பெரிய கம்பெனிகளுக்கு என்னையும் என் பிஎச்.டி.யையும் பிடிக்கல. ஒரேயோரு சின்ன காலேஜ்லே ஒரு செமெஸ்டர் டீச்சிங்குக் கூப்பிட்டாங்க.”

“எங்கே?”

“ஷிகாகோலேர்ந்து ரொம்ப தூரத்தில. நீமா இங்கே, நான் அங்கே ஒத்துவராது.”

“நல்ல தீர்மானம்.”

“வீட்டு காரியங்களை கவனிச்சுக்கறேன்.”

“சந்தோஷமா செய்! ‘டு-இன்கம் ட்ராப்’ல எல்லாரையும் போல நீயும் மாட்டிக்க வேண்டாம். நாற்பது வயசிலயே டயபெடிஸுக்கும் ப்ளட் ப்ரஷருக்கும் மருந்து சாப்பிட வேண்டாம்.”

“ஆனாலும், ‘நீ என்ன செய்யறே’ன்னு யாராவது கேட்கும்போது என்ன சொல்றது?”

“இப்ப இருக்கறது இம்மெடீரியல் உலகம். என்னோட மெடீரியல் சயன்ஸ் யாருக்கும் வேண்டாம்.”

அவன் அப்பாவுக்குத்தான் ஏமாற்றம். ‘நேத்து என் பையனும் மாட்டுப்பெண்ணும் மென்லோ பார்க் கிளம்பிப் போனா. ரெண்டு பேருக்கும் ஃபேஸ்புக்ல பெரிய வேலை’ என்பதைத் தொடர்ந்து, ‘ராகுல் இப்ப என்ன பண்ணறான்?’ என்று மற்ற அப்பாக்கள் கேட்கும்போது, ‘நீமா பிரமிட் கன்சல்டிங்கில் சீனியர் மேனேஜர்’ என்று அவர் பேச்சை வெட்டுவது வழக்கம்.

“பதினாலு வருஷம் கழிச்சு நீமாக்கு ஷிகாகோ குளிர் பொறுக்காம போயிடுத்து.”

“இதுவரை அவ அங்கே இருந்ததே அதிசயம். இப்ப தான் வீட்டிலேர்ந்தே வேலை பண்ணலாமே. பிசினெஸ் ட்ரிப்புக்கு பக்கத்தில ஏர்போர்ட் இருக்கணும் அவ்வளவுதான். புது இடம் எங்கே?”

“எல் டொராடோ ஹில்ஸ்.”

“அங்கே ஏன்?”

“நீமா வேலை விஷயமா சாக்ரமென்ட்டோ போனா. பக்கத்தில அந்த ஊரைப் பார்த்ததும் அவளுக்குப் பிடிச்சுடுத்து.”

“வீடு பார்த்தாச்சா?”

“ம்ம்.. ஒரு வருஷம் வாடகைக்கு. பிடிச்சிருந்தா வாங்கிக்கலாம்.”

புது வீட்டின் முன் தெருவை அடைத்துக்கொண்டு ட்ரக் நின்றது. நகர்த்துபவர்கள் கனமாக சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்து, அட்டைப்பெட்டிகளை இறக்கி அந்தந்த தளங்களில் அடுக்கினார்கள். அவர்களுக்கும் சேர்த்து நீமா பீட்ஸா தருவித்தாள். எல்லா துண்டுகளும் காணாமல் போக, ட்ரக் சத்தத்துடன் தெருவைக் காலி செய்ய,

“மாடியில் இருந்து ஆரம்பிக்கலாம்.”

ஆடைகளை எடுத்து அடுக்கும் சுலபமான வேலை. அது முடிவதற்குள் நீமாவுக்கு பிரமிட்டில் இருந்து அவசர அழைப்பு. அவர்களின் முக்கியமான வாடிக்கை ‘ஸ்பெல்டா ஃபார்மா’வில் சமீபத்திய வர்த்தக ஒப்பொந்தங்களைப் பற்றி ஒரு விவரணக் கூட்டம்.

“ஷிகாகோ ஆஃபீஸ்ல தலையைக் காட்டிட்டு அங்கேர்ந்து நேரா டோக்யோ. அடுத்த திங்கள் திரும்பிவந்துடுவேன்.”

நீமா டிக்கெட்டுக்கும் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தபோதே, ராகுல் அவள் பெட்டிகளைத் தயார்செய்தான். ஐந்து நாட்களுக்குத் தேவையான வணிக, சாதாரண உடைகள், உள்ளாடைகள். அலங்காரப் பொருட்கள். தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் மனதை இலேசாக்கும் புத்தகங்கள். ‘ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?’ (இப்படியும் ஒரு தலைப்பா என்று அதை பிரித்துப் பார்த்தான்.) தோள்-பையில் மடிக்கணினியுடன் ஒரு செட் ஆடைகள் – பெட்டிகள் பயணத்தின்போது தவறிவிட்டால் அவை திரும்பக் கிடைக்கும் வரை.

“இன்னும் மூணி மணியில ஒரு ஃப்ளைட்.”

வணிக வகுப்பில் விமானப் பயணங்கள் நீமா தொழில் வாழ்க்கையின் அங்கம். இரண்டு மூன்று நாட்கள் என்றால் அவள் ஊர்தியை விமான நிலையத்தில் நிறுத்திவிட்டுத் திரும்ப எடுத்துவருவாள். நீண்ட பயணங்களுக்கு டாக்ஸி. அதுவும் சரிப்பட்டு வராவிட்டால்..

“நான் உன்னை விட்டுட்டு வரேன்.”

“தாங்க்ஸ் ராகுல்! திரும்பி ஷிகாகோ வந்ததும் டெக்ஸ்ட் அனுப்பறேன்.”

அவளுடைய லெக்சஸில் அவன் தனியே திரும்பிவந்த போது அண்ணன் சஞ்சயின் சோகச்செய்தி.

“நேற்றுகூட பிள்ளையார் கோவிலுக்குப் போகணும்னு அம்மா சொல்லிண்டு இருந்தா. இன்னிக்கிக் காலையில..”

நீமாவுக்கு ஒரு தகவல். வருத்தம் தெரிவித்து அவளிடமிருந்து உடனே ஒரு பதில். பிறகு சித்தியை அழைத்துப் பேசினான்.

மனதைத் திருப்ப கச்சிதமான சமையலறையில் சுற்றி வந்தான். மளிகை சாமான்களுக்குக் கணிசமான அலமாரி அடுக்கு. பருப்புகள், அரிசி, கோதுமை மாவு டப்பாக்களை அடுக்கினான். கூரிக், கூசினார்ட் இயந்திரங்களுக்கு மேஜையின் மூலையில் இடம் ஒதுக்கினான்.

அடுப்புக்குக் கீழே இடப்பக்கம் சமையலுக்கான பெரிய கரண்டிகள். இன்னொரு பக்கம் சின்ன கரண்டிகள். சற்று தள்ளி வாசனைப் பொருட்கள். கண் உயரத்தில் சர்க்கரை, காப்பி, கோக்கோ, தேயிலை. பாத்திரங்களுக்கு சுவரை ஒட்டிய ஆளுயர அலமாரிகள்.

மிகப்பழையவை என சாப்பாட்டு மேஜையும் நாற்காலிகளும் எடுத்துவரவில்லை. நீமா வந்ததும் அவளுக்குப் பிடித்தமாதிரி ஸ்கான்டிநேவியன் ஃபர்னிசர். இப்போதைக்கு சமையலறையின் அரண்போல நின்ற உயர்மேஜை. அதைப் பயன்படுத்த நான்கு உயர் நாற்காலிகள் ஆர்டர் செய்தான். மறுநாள் வந்துவிடும்.

புது இடத்துக்கு வந்ததும் செய்ய வேண்டிய முக்கியமான வேலை – காலி ரெஃப்ரிஜரேட்டரையும் காய்-பழக்கூடைகளையும் நிரப்புவது. வருவதற்கு முன்பே தேவையான சாமான்களையும் புதிய ஊரில் அவை மலிவாகக் கிடைக்கும் கடைகளையும் பார்த்து வைத்திருந்தான். அதைச் செய்ததும், வாங்கிவந்தவற்றை வைத்து என்ன சமைக்கலாம்?

அவன் அலைபேசி ஒலிக்க..

‘காரின் வாரன்ட்டி முடிந்துவிட்டது’ என்று பயமுறுத்தும் அழைப்போ என்று அதை எடுத்தான்.

அவன் நண்பன் சுதாகர்.

“எல் டொராடோலயா இருக்கே? என்ன ஆச்சரியம்!”

“நேத்து ராத்ரி தான் இங்கே வந்தோம். சாமான்களை எடுத்துவச்சிண்டு இருக்கேன்.”

“அதை அப்புறம் பண்ணலாம். நான் ‘மெட்ராஸ் மசாலா’க்குக் கூட்டிண்டு போறேன். உன் இடம் சொல்!”

“6066 ஆல்பட்ராஸ் லூப். நுழைவாசல் திறக்க..”

“சித்தி! நேத்திக்கி என்னோட ஐஐடில படிச்ச சுதாகர் வந்திருந்தான். இங்கே இன்ட்டெல் பக்கத்தில ஒரு மென்ட்டல் ஹெல்த் க்ளினிக்கை வாங்கறதுக்கு. அவன் வந்து போனதிலேர்ந்து ஒரே டிப்ரெஷன்.”

“ஏன்?”

“முதல்ல நான் கெமிகல் இஞ்சினீரிங் எடுத்ததே தப்பு. இருபது வருஷத்துக்கு முன்னாடி அதுக்கு மதிப்பு இருந்திருக்கும். சரி. அப்பறம் யூ.எஸ். வந்து ஏன் பிஎச்.டில சேர்ந்தேன்? என்னமோ புதுசா கண்டுபிடிச்சுக் கிழிக்கிற மாதிரி. அதையும் உருப்படியா செய்யல. இப்ப ‘லிங்க்ட்-இன்ல’ கவர்ச்சிகரமா போட ஒரு வரி கூட இல்ல. சுதாகர் பி.டெக்.கில ஏனோதானோன்னு பண்ணினான். அப்பறம் மூணாந்தர காலேஜ்ல எம்.எஸ். (மேனேஜ்மென்ட்). கேபிஎம்ஜி அக்கௌன்டிங் கம்பெனில ஆறுமாசம் எடுபிடி வேலை. இப்ப ‘க்ளவுட்லெஸ் ஸ்கை’ல ‘வைஸ் ப்ரசிடென்ட் ஃபார் மார்கெடிங்’. அவன் பேச்சில பத்துக்கு ஒரு வார்த்தை, மில்லியன். நானும் இருக்கேனே – சூபர் மார்கெட்ல எப்படி நாலு டாலர் மிச்சம் பிடிக்கலாம்னு.”

“இல்ல ராகுல்! நீ அப்படி நினைக்கக்கூடாது. நீமா நிம்மதியா வேலை பண்ண நீ வீட்டைப் பார்த்துண்டு இருந்திருக்கே.” ராகுல் மௌனமாக இருந்ததால் அவள் தொடர்ந்தாள். “மூணு மாசத்துக்கு முன்னாடி உன் அம்மா ஹின்டுல ‘சேஞ்ஜ் ஃபார் அ ருபீ’ன்னு ஒரு ஆர்டிக்ல் எழுதியிருந்தா.”

“நான் பார்க்கல.”

“பல பேர் அதைப் புகழ்ந்ததனால அந்தப் பெயரிலேயே ஒரு சீரீஸ் எழுதணும்னு எடிட்டர் கேட்டுண்டார். இரண்டாவது அவ கடைசியா எழுதினது. அதுக்காகவே அக்கா இன்னும் பத்து வருஷம் இருந்திருக்கலாம்.”

இருவரின் சோகம் சில நொடிகளைத் தின்றது.

“அதை உனக்கு அனுப்பறேன்.”

உணவு உடை உறையுள் உடலின்பம்

வசந்தா ஸ்ரீராமன்

இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தி: 2,620 பில்லியன் டாலர்.

க்ரிப்டோ நாணயங்களின் உள்ளடங்கிய மொத்த மதிப்பு: 2,785 பில்லியன் டாலர்

யூ.எஸ்.ஸின் ஓர் ஆண்டுப் பயிர் விளைச்சல்:140 பில்லியன் டாலர்

யூ.எஸ்.ஸில் சாப்பாடு தருவிக்கும் ஐந்து ‘ஆப்’களின் மொத்த விலை: 136 பில்லியன் டாலர்

என் சிறுவயதில் அமெரிக்கர்களைப் போல் நாம் உழைப்புக்கு மதிப்பு தருவது இல்லை என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அங்கே ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். கோவிட் பரவத் தொடங்கியதில் இருந்து மில்லியன் கணக்கான பேர் வேலை இழக்க, இலவச உணவுக்கு ஏழைகள் வரிசையில் நிற்க, உடலால் உழைக்கிறவர்களின் வருமானம் உயராமல் இருக்க, எதையும் உற்பத்தி செய்யாத பங்கு சந்தையின் மதிப்பு இரட்டித்து இருக்கிறது.

அவர்களைக் காப்பி அடித்து நாமும் அப்படி நடந்து கொள்கிறோம்.

‘சியாட்டில் கான்ஃபரன்ஸுக்கு நள்ளிரவு ஃப்ளைட்டைப் பிடிக்க வேண்டும்’, ‘ஆண்டு அறிக்கை இரவுபகலாக ஒரு வாரம் இழுத்தடித்து விட்டது’, ‘ஆறு வருஷத்துக்கு முந்தி பத்தாயிரம் டாலரில் ஆரம்பித்த எங்கள் டெக் கம்பெனியை ஏழு பில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஆல்ஃபபெட் தயார்’ என்று பெருமையாகச் சொல்பவர்களை உயரத்தில் வைத்து,

உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமான ஆரோக்கியமான சாப்பாடு, துவைத்து உலர்த்தி மடித்த ஆடை, சுத்தமான இல்லம், மனத்துக்கு இனிய கலாரசனை, உன்னதமான உடல் இன்பம் வழங்குபவர்களை அலட்சியமாகப் பார்க்கிறோம்.

முன்னவர்கள் செய்வதில் செய்து தான் ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை. அத்துடன் அவர்கள் தடபுடலாகக் காரியம் செய்ய அவர்களுக்கு யாராவது சாப்பாடு கொண்டுவந்து கொடுத்து, அவர்களின் குப்பைகளை வாரி, அவர்கள் குழந்தைகளை வளர்த்து நிஜமான வேலை செய்ய வேண்டும் – அவர்கள் வருமானத்தின் ஒருசிறு பங்கில்.

கணினியில் மின்னணுக்களை நகர்த்தி ‘பிட்காய்ன்’ உருவாக்குவது ‘மைனிங்’ காம். அதற்குத் தேவையான நிலக்கரி (மின்சாரத்திற்கு) மற்றும் கனிமங்களை (சக்திவாய்ந்த கணினிகளுக்கு) சுரங்கத்தில் இருந்து வெளியே எடுத்துவருவது என்ன?

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் காலம் வரும்போது…

“தாங்க்ஸ் சித்தி! அம்மா எனக்குக்கொடுத்த கடைசிப்பரிசு.”

நீமாவின் அலுவலகப் பயணங்கள் தரும் பிரிவு ராகுலின் காதலை வளர்த்தும். அப்போது கடிகாரத்தை வேகமாக ஓட்டுவதற்கு நேரம் தேவைப்படும் வேலைகள் – பழைய துணிகளையும் உபயோகம் குறைந்த பொருட்களையும் ‘குட்வில்’ கடைக்கு எடுத்துச் செல்லுதல், திரைச்சீலைகளைச் சுத்தம் செய்தல், ஒட்டடை அடித்தல். அவளை விமான நிலையத்தில் எதிர்கொண்டாலும், இல்லை அவள் வாசற்கதவு வழியே நுழைந்தாலும் அவன் அதுவரை சந்தித்து இராத புதுப்பெண் நீமா.

இந்த தடவை சாமான்களை அடுக்கும் வேலை. அதில் அடுத்த கட்டம் வரவேற்பறையில் அடுக்கியிருந்த பெட்டிகள். நீமாவின் பயணங்களை ஞாபகப்படுத்தும் காட்சிப்பொருட்கள். கண்ணாடி அலமாரியில் தஞ்சம் புகுந்தன. ஒரு பெட்டியின் மேல் நகர்த்துபவர்களின் கொட்டை எழுத்துக்கள் ‘ட்ராயிங் சப்ளைஸ்’. பெட்டியைப் பார்த்தபடி உட்கார்ந்தான்.

நீமா ஊரில் இருக்கும் சமயங்களில் அன்றாடப் பொருட்களை வாங்க அவனுடன் போவது வழக்கம். கிளம்புவதற்கு முன் என்னென்ன வேண்டும் என்று கணக்கெடுப்பதும் திரும்பிவந்ததும் அவன் வழியில் அவற்றை அடுக்குவதும் அவள் காரியம்.

“நீ வீட்டுக்கு எவ்வளவோ செய்யறே. இது என் பங்கு.”

மூன்றாவது திருமணநாளுக்கு சில வாரங்கள் இருந்தபோது,

“இன்னிக்கி எங்கே போறோம்?”

“படேல் ப்ரதர்ஸ்.”

நீமா டப்பாக்களைத் திறந்து மூடி,

“வெந்தயம்,

கடலைப் பருப்பு,”

அவள் பெங்களூரு தோழியிடம் இருந்து, “உனக்கு விஷயம் தெரியுமோ?”வைத் தொடர்ந்து செய்திகள். பேசி முடித்ததும்,

“நாம எங்கே இருந்தோம்?”

“கடலைப் பருப்பு.”

சமையலறையின் எதிர் மூலைக்கு நடந்து,

“பூண்டு,

சிவப்பு வெங்காயம்,

எலுமிச்சம்பழம்.

அவ்வளவுதான்.”

ராகுல் க்ளிப்-அட்டையில் இருந்து காகிதத்தை எடுக்குமுன் அவன் பின்னால் வந்துநின்ற நீமா,

“இன்னும் பழங்காலமா இருக்கே. செல்லுல என்டர் பண்ணினா, ஒவ்வொரு தடவையும் எழுத வேண்டாம், இல்லையா?”

“அதெல்லாம் உன்னைமாதிரி பிஸி ஆட்களுக்கு.”

பட்டியலின் கீழே அவள் தோழியுடன் பேசிய நேரத்தில் அவன் பென்சிலால் எழுதிய ஒரு படம். ஜன்னல் வழியாகத் தெரிந்த இலைகள் உதிர்த்த மரம். இரண்டையும் அவள் சிலநொடிகள் உற்றுப்பார்த்தாள். மரத்தின் வெறுமை படத்தில் வெளிப்பட்டதைக் கவனித்தாள்.

“என்ன பார்க்கறே?”

“ஒண்ணும் இல்ல” என்று அவள் சமாளித்தாலும் திருமண தினத்தில்..

அவன் அவளுக்கு மூன்றுவித இனிப்புக்கட்டிகள் செய்து தர,

“ராகுல்! பிரிச்சுப்பார்!”

காகிதம் சுற்றிய பெட்டிக்குள் இன்னொரு வர்ண அட்டைப்பெட்டி. வாடர்-கலர் கிட் – முப்பது வர்ணங்கள், மூன்று ப்ரஷ்கள், முன்னூறு காகிதங்கள்.

“தாங்க்ஸ்.”

“பக்கத்தில ஒரு ஆர்ட்ஸ் டீச்சர். அவ கிட்ட முப்பது பாடங்கள். அது முடிஞ்சதும் என்னை ஒரு படம் வரையணும்.”

“அப்ப, தாங்க்ஸைத் திரும்ப வாங்கிக்கறேன்.”

உள்ளூர் பயணம் என்றால் விமானத்தில் நுழையுமுன், வெளிநாட்டில் இருந்து வரும்போது குடியேற்ற சம்பிரதாயங்களை முடித்ததும் ராகுலுக்கு நீமாவிடம் இருந்து குறுந்தகவல் வரும். நள்ளிரவைத் தவிர மற்ற நேரங்களில் அவள் வீட்டிற்குள் கால்வைக்கும்போது சூடான உணவு தயாராக இருக்கும். அவனுடன் சாப்பிடும்போது பயணக்கதைகள்.

“நீ பண்ற பூரியைத் தொட்டா கையில எண்ணெய்ப் பிசுக்கே இருக்காது. நேத்து சியாட்டில்லே இன்டியன் ரெஸ்டாரன்ட் போயிருந்தோம். பூரியைப் பிழிஞ்சா ஒரு அவுன்ஸ் எண்ணெய் கிடைக்கும். மத்தவங்க அனுபவிச்சுத் தின்னாங்க.”

“அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.”

திங்கள்கிழமை காலையில் ராகுலின் அலைபேசியில்,

– அர்ரைவ்ட் அட் ஷிகாகோ. நீமா –

அங்கே அலுவலகத்தில் தலைகாட்டிவிட்டு இரவு ஃப்ளைட்டில் திரும்புவதாக ஏற்பாடு. ஜப்பான் பயணம் அதைத் தொடர்ந்து உள்நாட்டு விமானம். வந்ததும் சிற்றுணவே போதும் என்று அவளுக்குப் பிடித்தமான ரவா கேசரி. மறுநாளைக்கு தோசை மாவு. அரைத்து, பொங்கவைத்து, கலக்கி ரெஃப்ரிஜரேட்டரில்.

ஏழு மணிக்கு எதிர்பார்த்த தகவல் வரவில்லை.

யுனைடெட் ஏர்லைன்ஸ் தளத்தில்..

விமானம் சரியான நேரத்தில் கிளம்பிவிட்டது.

அதைப் பிடிக்கும் அவசரத்தில் அவள் செய்தி அனுப்ப மறந்திருக்கலாம். முன்னொரு தடவை.. அமேஸானுக்குப் பலியான ‘டேவிட் கிட் ‘புத்தகக்கடையை மூடாமல் திறந்துவைக்கும் முயற்சியில் நீமா தோல்வியடைந்து திரும்பிவந்தபோது வீட்டில் நுழையும் வரை அவளுக்கு வீட்டு நினைவே இல்லை.

கவலையை மறக்க சுஜாதாவின் ‘ஊஞ்சல்’ நாடகத்தை நேரில் பார்ப்பதுபோல வாசித்தான். நான்கு மணி பறந்துபோனது.

விமான நிலையம் போய் காத்திருக்கலாமோ? அந்நேரத்தில் அங்கே போக அரை மணிதானே, நீமா தகவல் அனுப்பியதும் காரைக் கிளப்பலாம் என அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

விமானம் தரையைத் தொட்டுவிட்டது.

ஆனால், அலைபேசி மௌனம் சாதித்தது. பெயர் தெரியாத அழைப்புகள் கூட வரவில்லை.

ஒருவேளை இவ்வளவு நேரமாகிவிட்டதே என்று அவனுக்குத் தொந்தரவு தராமல் சவாரி பிடித்து வருகிறாளோ?

இரண்டு மணிக்குக் கேசரியை ரெஃப்ரிஜரேட்டரில் வைத்தான். வாசல் விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கப்போனான்.

நீமாவுக்கு என்ன ஆகியிருக்கும்? என்ற கவலையில் இரவு மெல்லப் போனது.

வழக்கம்போல அதிகாலையில் இமைகள் பிரிந்தபோது கண்கள் எரிந்தன. தண்ணீரில் அவற்றை நனைத்தான்.

ஏன் முன்னமே தோன்றவில்லை? கவலையில் மூளை மழுங்கிவிட்டது. நீமாவுக்கு ஒரு செய்தி.

– ஆர் யு ஓகே நீமா? ராகுல் –

அலைபேசி அணைக்கப்பட்டு இருக்கிறது என்ற பதில். எப்படியும் அவள் பார்வையில் படும்.

நீமா காரணத்தோடு தான் தகவல் அனுப்பாமல் இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் நேரம் நகர்ந்தது.

முந்தைய இரவின் களைப்பில் மதியம் நீண்ட தூக்கம். எழுந்ததும் மனதை வேறுபக்கம் திருப்ப வீட்டில் இருந்து வெளியே கால் வைத்தான். சரிவான வீட்டுப்பாதையை ஒட்டிப்படிகள். ஏறிய போது நான்கு முதியவர்கள் பேசிக்கொண்டே அவனைத் தாண்டிச் சென்றார்கள். வந்ததில் இருந்து தினம் அந்நேரத்தில் அவர்களைப் பார்க்கிறான்.

“ஏ டாக்டர்! ‘கீடோ டயட்’டைப் பத்திக் கொஞ்சம் சொல்!”

“நீ தான் ஒல்லியா இருக்கியே. உனக்கு எதுக்கு அதைப்பத்தி தெரியணும்?”

“என்னோட அமெரிக்க மாட்டுப்பெண் நம்மை சாப்பாட்டை பலவருஷமா ரசிச்சு சாப்பிட்டிண்டு இருந்தா. திடீர்னு எதையும் தொடறது இல்ல. காரணம், ‘கீடோ டயட்’ல இருக்காளாம்.”

“ஆதிநாளில் இருந்து பட்டினி கிடப்பது…”

“டாக்டர் கொஞ்சம் இல்ல, நிறையவே சொல்லப்போறார். ஜாக்கிரதை!” என்று மூன்றாவது குரல்.

தினம் மாலையில் கவலை இல்லாமல் பேசிக்கொண்டே நடக்கும் அவர்களைப் பார்த்து ராகுலுக்குப் பொறாமை. நீமாவைத் தவிர வேறு பேச்சுத்துணை இல்லாதது அவனுக்குப் பெரிய குறை. தினம் வேலையின் இறுக்கத்தைத் தளர்த்த நடந்தோ, இல்லை காப்பி குடித்துக்கொண்டோ இலேசான விஷயங்களைப் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்கிறபோதும் யாரும் அவனுக்கு அகப்பட்டது இல்லை.

தெருவுக்கு வந்து பார்வையைச் சுற்றிலும் ஓடவிட்டான். ஷிகாகோவைப் போல நெரிசலும் இல்லை, காற்றின் தூசுகளும் இல்லை. சிறு குன்றுகளும் குட்டி மரங்களும். தொடுவானத்தில் ஃபோல்சம் ஏரியின் நீலம். அழகான இடத்தைத்தான் நீமா தேர்ந்தெடுத்து இருக்கிறாள். ஓய்வுக் காலத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் இருந்தாலும் இந்த இடத்திலேயே மீதி வாழ்நாளைக் கழிக்க அவள் விருப்பப்படலாம்.

ஒரு உயர்மட்ட ஊர்தி வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மூவரில் ஒருத்தி அவனைப் பார்த்ததும் அவன் அருகில் வந்தாள்.

“ஹாய்! நான் பார்பரா.”

“ஹாய், பார்பரா! நான் ராகுல்.”

“நீ நீமாவின் கணவன்?”

“யெஸ்..”

“நான் ‘ஹெட்லன்ட் ரியால்டி’யை நடத்துகிறேன்.”

வீடு மாற்றத்தின்போது அப்பெயரை நீமா குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது.

“வாடகை..” என ஆரம்பித்தாள்.

அவள் வழியாகத்தான் தற்போதைய உரிமையாளருக்குப் பணம் போவதாக இருக்கும்.

“முதல் தேதிக்கு முன்பே மின்-வழியாகச் செலுத்திவிடுவோம்.”

“அதை அனுப்ப வேண்டாம் என்று சொல்லத்தான் உன்னை நிறுத்தினேன். நீமா முழுப்பணம் கொடுத்து வீட்டை வாங்குவதாக இருக்கிறாள். அதை உங்கள் இருவர் பெயரிலும் மாற்றுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டேன்.”

“தாங்க்ஸ்!”

மீதி நாளுக்கான வாழ்த்துடன் அவள் திரும்பி நடந்தாள்.

நீமா வீட்டை வாங்கத் தீர்மானித்தது ஆச்சரியமாக இல்லை. ஆனால், ஏன் முழுப்பணம் தர வேண்டும்? அந்தக் கேள்வியில் அவளுக்கு ஒன்றும் நேரவில்லை என்ற ஆறுதலும் சேர்ந்தது.

அந்த நம்பிக்கையின் ஆயுள் இருபத்திநான்கு மணி நேரம்.

அவன் செய்யக்கூடியது என்ன?

யாரைக் கேட்பது?

நண்பர்கள். யாரும் தொழில்வழி இல்லை.

அலவலக வலைத்தளம்.

புகுப்பெயரோ கடவுச்சொல்லோ இல்லாமல் ஒரு விவரமும் அங்கே கிடைக்காது.

அவளுக்கு என்ன நேர்ந்து இருக்கும்?

இன்னொரு – ஆர் யு ஓகே? – அவளை சந்தேகிப்பது போல ஆகும்.

மூன்றாம் நாள். சித்தியிடம்,

“ஷிகாகோல இறங்கினப்பறம் நீமா கிட்டேர்ந்து எந்தத் தகவலும் வரல. என்னோட டெக்ஸ்ட்டுக்கும் பதில் போடல.”

“நவீன வாழ்க்கை போரடிச்சு, இல்ல வேலையின் பளு தாங்கமுடியாம கொஞ்ச நாள் எல்லாத்தையும் துறந்து தனியா இருக்கணும்னு எங்கேயாவது போயிருக்கலாம்.”

ஜப்பான் பயணத்துக்கு முந்தைய நீமாவை மனதில் கொண்டுவந்தான். அவசர அழைப்பு என்பதால் நெற்றிச்சுருக்கங்கள். வேலையின் பிரச்சினைகளை அவள் அவனிடம் சொன்னது கிடையாது. அவனுடைய அறிவு அவள் உலகத்தில் பென்னி (ஒரு சென்ட்) கூடப் பெறாது என்பதுடன் அவனையும் ஏன் வருத்த வேண்டும் என்கிற நல்ல குணமும்.

“நீங்க சொன்னா சரி.”

“பத்து வருஷத்துக்கு முன்னாடி. ஒரு ஜுன் மாசம். சித்தப்பாக்கு இன்னும் ஆறு மாசம் தான் வேலைன்னு காலேஜ்ல சொல்லிட்டா. அந்த சமயத்தில ரெண்டு குழந்தைகளும் அநியாயத்துக்கு அடம் பிடிக்கும். ஒரு நாள், ‘கவலைப்பட வேண்டாம், சீக்கிரம் திரும்பிவந்துடுவேன்னு’ ஒரு நோட் எழுதிவச்சிட்டு கிளம்பிட்டேன். வெர்மான்ட் கடற்கரை பக்கத்தில ஒரு காபின். டெலிஃபோன் டிவி கிடையாது. தினம் எழுந்து கடலோரமா ஒருமணி நடை, சாயந்தரம் அதே மாதிரி. சிரமம் இல்லாத சாப்பாடு, காய், பழங்கள், வேர்க்கடலை. பகல் நேரத்தில ஜேன் ஆஸ்டின், ஜியார்ஜ் எலியட். இரண்டு வாரம் முடிஞ்சபோது எந்த பிரச்சினையையும் சமாளிக்க முடியும்னு தைரியம். சமத்தா திரும்பிவந்தேன்.”

சித்தி கொடுத்த நம்பிக்கையில் இன்னும் ஒரு நாள்.

அவன் வங்கியின் கணக்கைத் திறந்தபோது சில நாட்களுக்கு முன் பதினாறு ஆயிரத்துக்குக் கீழே நின்ற எண்கள் நாற்பதாயிரத்தைத் தொட்டன.

தினப்படி தேவைகளைத் தவிர்த்து மற்ற வீட்டுச் செலவுகள் – அலைபேசி ஒப்பந்தம், இணையத்தொடர்பு, தண்ணீர், மின்சாரம் – நீமாவின் ஏற்பாடு.

அந்த இருபத்திநாலாயிரம் அவன் ஒருவனின் ஓர் ஆண்டிற்கான செலவுகள்.

– ஆர் யு ஓகே? – க்கு இன்னும் பதில் இல்லை.

முழுவிலை கொடுத்து வீடு வாங்கி இருக்கிறாள்.

அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால்..

ஏன்?

அவன் கணவன் என்ற கடமையில் தவறிவிட்டானா?

நீமா மட்டுமே சம்பாதிக்கிறாள் என்பதால் மட்டுமல்ல, பெண்களை மதித்து நடத்த வேண்டும் என்கிற அம்மாவின் அறிவுரையினாலும் அவன் அவளை அலட்சியப்படுத்தியது இல்லை. அவள் ஏன் பிரிதலை நினைக்க வேண்டும்?

அவள் வாழ்க்கையில் அவன் அவசியம் இல்லை என்கிற எண்ணமா?

சேச்சே! நிச்சயம் அப்படி இராது. அவர்களிடையே மனத்தாங்கல் வந்திருக்கிறது. “நீ வீட்டில சும்மாதானே இருக்கே” என்று அவள் சொல்லம்பு வீசியது கிடையாது. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவன் தன் தேவைகளை எவ்வளவு கவனத்துடன் பூர்த்தி செய்கிறான் என்பதை ‘நேஷனல் ஸ்பௌஸ் டே’யின் போது வாழ்த்து அட்டைகளில் தெரிவிப்பது வழக்கம்.

கடைசி அட்டையில்…

உன்னைச் சந்திப்பதற்கு முந்தைய என் வாழ்க்கை

எனக்கு மறந்தே போய்விட்டது – நீமா

அவள் மறந்தாலும் பழைய நட்பு மறக்காமல் அவளை அவனிடம் இருந்து பறித்துவிட்டதா?

திருமணத்துக்கு முந்தைய அவள் உறவுகள் பற்றி அவன் கேட்டது கிடையாது. அவனைவிட நீமா இரண்டு வயது தான் சின்னவள் என்றாலும் – அவன் சென்னை மாம்பலத்தில் நடுத்தர வர்க்கத்தின் தயாரிப்பு, அவள் வளர்ந்தது பெசன்ட் நகரில் ஒரு தொழில் அதிபரின் வளமான குடும்பத்திற்குச் செல்லப்பெண்ணாக – அவள் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவள். அவனுடைய வரைமுறைகளை அவளிடம் எதிர்பார்த்தது இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை அவன் நீமா இல்லாமல் வாழ்ந்து இருக்கிறான். மறுபடி அந்த வெறும் வாழ்க்கையை நினைக்கக்கூட முடியவில்லை. அவள் கைநீட்டித் தொடும்படி அருகில் இருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு இனிக்கும். அவள் எட்டாத தூரம் போய்விடுவாளோ?

அவன் கவலை அநாவசியமாக இருக்கலாம்.

காரணம் தெரியும் வரை மனதை அலைய விடாமல் காத்திருப்பது நல்லது. நம்பிக்கையுடன் அலைபேசியைப் பார்த்தான்.

Series Navigationஉணவு, உடை, உறையுள், … – 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.