இரு டம்ளர்கள் 

தமிழில்: மதுவந்தி

என் பாட்டி வீட்டில்
இரு டம்ளர்கள் இருந்தன.
காபிக் கறையேறிய இரு டம்ளர்கள்.

அன்றைக்கான ஸ்லோகங்கள்
அவசரமாய் முணுமுணுக்கப்பட்ட பின்னர்
கர்ணம்மா வருவாள்.
கர்ணம்மாவை நாங்கள்
பார்த்து வந்திருக்கிறோம்,
எங்கள் வீட்டில் பூனைகள்
இருந்த நாட்களிலிருந்து.
பூனைகளோ, பாட்டி உதட்டுச்சாயம்
பூசிய நாளிலிருந்து வசித்து வந்தன.
இரவின் முடிவில்
தாங்கொணா தாகத்தால்
மேலண்ணத்தில் ஒட்டிய நாவாய் .
அவர்கள் இணைந்திருந்தனர்.
.
அவர்களின் கணவன்மாரின்
கைங்கரியத்தால் உடம்பு
கருநீலமான போது
அவர்களிருவரும்
ஆதரவாய்க்
கைகோர்த்துக் கொள்வர்.
அவர்கள் கழுத்தின்
கீழே பாதி நிலா
தோன்றியபோது,
இருவரும் கண் சிமிட்டிக் கொள்வர்.

மலர்ச் சரங்கள் தொடுக்கவும்,
புடவை மடிப்புகள் அமைக்கவும்,
ஒருவரிடமிருந்து ஒருவர்
கற்றுக் கொள்வர்.
அவர்கள் ஒரே நேரத்தில்
குழந்தைகள் பெற்றார்கள்,
தங்களது மார்பகங்கள்
தளர்ந்து வீழ்ந்து முழங்கால்
தொடுவதைப் பார்த்தபடி.

சாவு நிகழ்ந்த வேளைகளில்,
நாடகமெனத் தோன்றும்படி
அதிகமின்றியும்,
அக்கறையேயில்லையெனத்
தோன்றாதபடி
குறைவின்றியும்,
எவ்வளவு ஒப்பாரியிட வேண்டுமென.
.அவர்களுக்குத் தெரிந்திருந்தது,

மற்றவர்களின்
மகிழ்வான பொழுதுகளில்
அவர்களுக்குத் தெரிந்திருந்தது,
தங்களின் பொறாமைகளை,
மெல்லிய குசல விசாரிப்புகளில்
முகமூடியிட்டுக் கொள்ள.

அவர்களின் நடை கூட
ஒரு ஒத்திசைவான தாளத்தில்
கிட்டத் தட்ட ஒரே மாதிரி நடை.

அன்றைக்கான ஸ்லோகங்கள்
அவசரமாய் முணுமுணுக்கப்பட்ட பின்னர்
கர்ணம்மா வருவாள்.
ஓவ்வொரு காலையும்,
இருவேறு டம்ளர்களில்
காபி குடிப்பார்கள்.
தரையில் அமர்ந்தபடி
கர்ணம்மா *”நித்ய வெள்ளி”டம்ளரிலும்,
நாற்காலியில் அமர்ந்தபடி
பாட்டி வெள்ளி டம்ளரிலும்.

அதீத கவனத்துடன்
அந்தந்த நாளின் வேலைகளை
விவாதித்துத் திட்டமிடுவார்கள்,
கர்ணம்மா நேற்றிரவின் மீதத்தைச்
சாப்பிடும் போது.
வார்த்தைகள் தீர்ந்த மௌனத்தில்,
கோணல் புன்னகை தவழ விடுவர்.

பாட்டி மெல்லிய குரலில்
நண்பர்களைப் பற்றிய பாட்டை
முணுமுணுக்கையில்,
கர்ணம்மா டம்ளர்களைத்
தேய்த்து கழுவிக்
கொண்டிருப்பாள்.

 


“Two Glasses“ –prose Poetry by Anirudh Raghavan
  (Vol 57-Issue no 14,2n April22, Economic and Political weekly)         
  (* எவர்சில்வர்) .  

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.