
எங்கள் வீட்டில் காலை நேரம் தொடங்குகையில் சமையலறை சாளரத்தின் வெளியிலுள்ள கட்டைச் சுவரில் குரல் கொடுக்காமல் ஒரு பெரும் காகம் அமர்ந்திருக்கும். அதற்கு, ஓமப்பொடி வேண்டும்; அதுவும் உடனடியாக! கரைந்து இனத்தை அழைக்காமல் சாப்பிட்டு விட்டுப் பறந்து போகையில் எட்டு மணிக்கு வருவேன் எனச் சொல்வதைப் போலப் பார்த்து விட்டு போகும். இதற்கு எதைக் கண்டும் பயமில்லை. மற்றொன்று ஏழு மணி போல வரும். அதற்கும் தின்பண்டங்கள் தான் வேண்டும்; ஆனால், போட்டுவிட்டு சாளரத்தை மூடிவிட வேண்டும்; திறந்தே வைத்திருந்தோமானால், பறந்து, பறந்து தவிக்கும். ஜன்னலை மூடிய அடுத்த நொடி ஆவலாக உண்ணும். சில நேரங்களில் புறா இதை விரட்டி விட்டு தான் தன் இணையுடன் சேர்ந்து நாங்கள் போட்டதைச் சாப்பிடும். அச்சமயம் முன்னர் வந்த பெருங்காகம் எங்கிருந்தோ பறந்து வந்து புறாக்களை விரட்டும். இதில் நாங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்- முன்னர் தானியம் கொத்திய பறவைகள் இன்று நொறுக்குத்தீனி கேட்கின்றன. சில இயல்பாகவே தன் பசியை மட்டும் தீர்த்துக் கொள்கின்றன. சில உணவிடுவோருக்கும், உணவை உண்ண வரும் போட்டியாளருக்கும் ஒரே மாதிரி பயப்படுகின்றன. தான் மட்டுமே சாப்பிட்டாலும், தன் இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு உணவு கிடைக்கவில்லையெனில் பகையைப் போராடி துரத்தும் இன உணர்வும் இருக்கிறது.
நாம் பொதுவாக வெறுக்கும் கரப்பான் பூச்சிகள், தங்கள் இனப் பெருக்கத்தை எவ்வாறு பூச்சி மருந்துக் கொல்லிகளுக்கிடையே சாமர்த்தியமாக மாற்றியிருக்கின்றன என்பதைப் பார்ப்போமா?
பெண் பூச்சியுடன் கலவி கொள்ள விழையும், ஆண் கரப்பான் தன் பிட்டத்தைத் தூக்கிக்கொண்டு, இறகுகளை விரித்து தன் ‘டெர்கல்’ சுரப்பியிலிருந்து தான் தயாரித்த இனிப்பும், கொழுப்பும் சேர்ந்த பிசுபிசுப்பை பெண்ணிற்குத் தரும். பெண் அதைக் கொறிக்கும் போது, ஒரு ஆண்குறியால் பிணைத்து விட்டு, மற்றொரு ஆண்குறியால் விந்துக்களைச் செலுத்திவிடும். இந்தக் களியாட்டம் 90 நிமிடங்கள் நீடிக்கலாம்.
1993-ல் நார்த் கரோலினா பல்கலையில், அன்டார்டிகா தவிர உலகெங்கும் பரவியுள்ள ஜெர்மானிய கரப்பான் பூச்சிகளின் குறிப்பிட்ட ஒரு நடத்தையை ஆய்ந்தார்கள். பொதுவாக அதிக இனிப்பு விரும்பியான கரப்பான் பூச்சிகள், சர்க்கரையின் பால் வெறுப்பு காட்டியது வியப்பாக இருந்தது. கரப்பான் பூச்சி மருத்துவர் தன் இனத்தை சர்க்கரையை / க்ளுகோசைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியிருப்பாரோ?
இதற்கும் நாம் தான் காரணம். கரப்பான் பூச்சிக் கொல்லிகளில் இனிப்பு கலந்து, அதன் மூலம் அவைகளை ஈர்த்து, விஷத்தினால் கொன்றவர்கள் நாம். இனிப்பிற்கு மயங்கி தம் உயிரை விட்ட முன்னோர்களைப் பற்றிய எச்சரிக்கை உணர்வு அடுத்தடுத்த தலைமுறை பூச்சிகளுக்கு ஏற்பட்டு அவை தம் இனத்தைக் காக்கவும், பெருக்கவுமாக இனிப்பின் பால் வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளன.
பரிணாம வளர்ச்சி என்றாலே விலங்குகளைத்தான் நினைக்கிறோம்; நம் சமையலறையில் இருக்கும் சிறு பூச்சிகள் எப்படித் தம்மை சூழலுக்கேற்றவாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதும் பரிணாம வளர்ச்சி பாடத்தில் சேர்ந்ததுதான் என்று வட கரோலினா பல்கலையில் பூச்சியியலாளராகப் பணியாற்றும் அயாகோ வாடா கட்சுமாடா (Ayako Wada Katsumata) சொல்கிறார். மற்றொரு வியப்பான செய்தியையும் இவரது குழு சொல்கிறது: பெண் கரப்பான், எந்த இயல்பினால் இனிப்புத் தூண்டிலை வெறுக்கிறதோ, அதே போல, இனிப்பைச் செலுத்தும், பொது (வன்) குண இயல்பிலுள்ள ஆண் கரப்பானையும் தவிர்க்கிறது. ஏனெனில், கலவியின் போது ஆண் வெளியிடும் அந்த இனிப்பை, பெண் கரப்பானின் உமிழ் நீர் பல கூறுகள் கொண்டதாக வெகு விரைவில் சிதைத்து எளிய க்ளுகோசாக மாற்றும்; அந்த இனிப்பு அதற்குக் கசந்து போவதால், இரட்டைக் குழல் தாக்குதல் செய்ய முற்படும் ஆணை விட்டு விலகிவிடும். ‘ஆஹா, எத்தனை நல்ல செய்தி; இதன் மூலம் கரப்பான் எண்ணிக்கை குறையுமே என்று நீங்கள் சந்தோஷப்படலாம். அப்படி அல்ல என்று சொல்கிறார்கள் இந்த ஆய்வுக் குழுவினர்.
சில வன்மையான ஆண் கரப்பான்கள் இனிப்பை வெறுப்பதில்லை; இத்தகைய ஆண்களை விட சர்க்கரையை விரும்பாத ஆண் பூச்சியை பெண் பூச்சி விரும்புகிறது. ஆண் பூச்சியும் இதை வேகமான கலவியினால் ஈடுகட்டுகிறது. பூச்சியியலாளரும், இந்த ஆய்வினை எழுதியவருமான கோபி ஷால் (Coby Schal) சொல்கிறார்: ஆண் பூச்சி சுரப்பதை, சர்க்கரையை விரும்பாத பெண் பூச்சி, மூன்று வினாடிகளில் எடுத்துக் கொள்ளும். வன்மையான ஆண் பூச்சிகள் இந்த மூன்று வினாடிகளில் செயல்படுவதில்லை; ஆனால், க்ளுகோஸ் விரும்பாத ஆண் பூச்சி விரைவில் கலவி செய்யும். பெண் பூச்சியினை கவருவதற்காக ஆண் பூச்சியின் கல்யாணப் பரிசு இரசாயன மாறுதலுக்கு உட்படும் என்பதற்கான நிரூபணங்கள் உள்ளன என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
நம்முடைய விஷ வலைகளுக்குத் தப்பி, தன் இனப்பெருக்கத்தை தகவமைத்துக் கொள்ளும் பூச்சியிடமிருந்து நாம் அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன. நாம் அவற்றைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் உயிர்கொல்லிகளைத் தவிர்ப்பதற்கு, உடலளவிலும், நடத்தையிலும் அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவதானிக்கத் தக்கவை, அறிதலும் அவசியம்.
கரப்பான் பரிணாமத்தைப் புரிந்து கொண்டு, அதன் ஆய்வாளர்கள் சொல்வதைப் பின்பற்றி சர்க்கரை குறைந்த அல்லது சர்க்கரையற்ற பூச்சிக் கொல்லி மருந்துகளை தயாரிக்க பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், இந்த ஆய்வு தொடக்க நிலையிலிருப்பதால், அத்தகைய மருந்துகள் கிடைக்க நாம் காத்திருக்க வேண்டும். அந்த வலையில் அவை சிக்காமலிருக்கக்கூடும் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.
ஒரு கொசுறுச் செய்தி: கன்னிப் பெண் கரப்பான்கள் தங்களுடன் கூடி வாழ்ந்தால் முட்டைகளை உற்பத்தி செய்யும்; தனித்திருக்கும் கன்னிகளால் முடிவதில்லை என ஒரு ஆய்வு சொல்கிறது.
உசாவி :