
வழக்கமாக வரும் தேர்தல் தான் என்றாலும் பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், இனவெறி, துப்பாக்கி வன்முறை என நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆளும்கட்சியின் நிர்வாகத்தை மக்கள் அளவிடும் முறையாக கருதப்படுவதால் இந்த ஆண்டு நவம்பரில் வரவிருக்கும் “இடைத்தேர்தல்” மிக முக்கியமானதாக இரு பெரும் கட்சிகளாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக 2020 ஜனவரியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்துவிட்டது பைடன் அரசு. குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை. மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைத் தான் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கிற தேர்தல் தீர்மானிக்கப் போகிறது.
இத்தேர்தலில் காங்கிரஸின் 435 மக்களவை, 35 செனட் இடங்கள், 36 மாநில கவர்னர் பதவிகள், பல மாநில சட்டமன்ற இடங்கள், உள்ளூர் அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு இரு கட்சிகள் சார்பிலும் கடும் போட்டிகள் நிலவுகிறது. ஜனநாயக கட்சியினரின் இழப்புகள் கணிசமானதாக இருக்கும் என கருத்துக் கண்காணிப்பாளர்கள் கணித்துள்ளதும் பைடனின் ஒப்புதல் மதிப்பீடு கீழிறங்கி இருக்கும் நிலையில் இருகட்சிகளுக்கும் இடைத்தேர்தலின் வெற்றி என்பது எதிர்வரும் 2024 அதிபர் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதும் பைடன் அரசின் எஞ்சியிருக்கும் இரண்டாண்டு நிர்வாகத்தையும் கணிப்பதால் இந்த கூடுதல் எதிர்பார்ப்பு.
அமெரிக்க காங்கிரஸ், மக்கள் பிரதிநிதிகள் சபை(ஹவுஸ்) மற்றும் செனட் உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றக் கிளை ஆகும். இது ஜனாதிபதியின் தலைமையிலான நிர்வாகக் கிளை, நீதித்துறைக் கிளையுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது. 50 மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 435 உறுப்பினர்களால் ஆனது பிரதிநிதிகள் சபை. மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை, மக்கள்தொகை விகிதத்தைப் பொறுத்து பிரநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த எண்ணிக்கை மாறுபடுகிறது. பரப்பளவில் பெரிய மாநிலங்கள் அதிகளவில் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும். அலாஸ்கா, டெலாவேர் போன்ற சிறிய மாநிலங்கள் ஒரே ஒரு பிரதிநிதியைக் கொண்டிருக்க, பெரிய மாநிலங்களான நியூயார்க்கிலிருந்து 27, கலிஃபோர்னியாவிலிருந்து 53 பிரதிநிதிகள் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இடைத்தேர்தலில் ஹவுஸ் உறுப்பினர்கள் இரண்டு வருடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாட்டு நலத்திட்டங்களை வரையறுத்தல், குற்றங்களின் அடிப்படையில் கூட்டாட்சி அதிகாரிகளைத் தண்டிக்கும் மசோதாக்களை இயற்றுதல், செனட்டில் சம எண்ணிக்கையில் இரு கட்சியினர் இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பிரதிநிதிகள் சபைக்கு இருப்பதால் இடைத்தேர்தல் முக்கிய அங்கம் வகிக்கிறது.
செனட் சபையில் மொத்தம் 100 உறுப்பினர்கள், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு செனட்டர்கள் மாநில மக்களால் ஆறு வருட காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மக்களவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், சட்ட மாறுதல்கள், மசோதாக்கள், அரசுத்துறை நியமனங்கள் மீது செனட் ஒப்புதல் அளித்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதனால் செனட் உறுப்பினர்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் ஆளும்கட்சிக்கு இன்றியமையானதாக கருதப்படுகிறது. தற்போதைய செனட்டில் இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் இருப்பதால் துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ன் வாக்கும் சேர்ந்து ஜனநாயக கட்சியால் முடிவெடுக்க முடிகிறது. இதே நிலைமை நீடித்தால் பைடன் அரசினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
காங்கிரஸால் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களில் கையெழுத்திட, வீட்டோ செய்ய அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்றாலும் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று அதிபரின் உத்தரவுகளை வீட்டோ செய்யும் பெரும் அதிகாரம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இருக்கிறது. தற்பொழுது ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து பேதங்களால் பல திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது பைடன் அரசு. இதனால் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகளவில் அதுவும் அதிபர் பைடனுக்கு செவிசாய்ப்பவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே புதுச்சட்டங்கள், சட்ட மாறுதல்கள், மக்கள் நலத்திட்ட தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றையேனும் அதிபரால் நிறைவேற்ற இயலும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மேலும், பத்து வருடங்களுக்கு ஒரு முறை மக்கள்தொகை மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் மாநில சட்டமன்ற மாவட்டங்களின் எல்லைகளை “மறுவடிவமைக்கும் செயல்முறை” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 50 மாநிலங்களில் உள்ள 435 ஹவுஸ் மாவட்டங்கள் ஒவ்வொன்றையும் தோராயமாக ஒரே அளவில் உருவாக்குவதே இதன் இலக்கு. இரு அரசியல் கட்சிகளும் “ஜெர்ரிமாண்டரிங்” மூலம் வேண்டுமென்றே தங்கள் மாவட்டங்களைச் சிதைத்து அவர்களது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை கூட்டும் முயற்சியில் ஈடுபடுவதும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “ஜெர்ரிமாண்டரிங்” என்பது சட்டமன்ற அமைப்புகளுக்குள் குறிப்பிட்ட அரசியல் நலன்களுக்குச் சாதகமாக தேர்தல் மாவட்டங்களின் எல்லைகளை மாற்றி அமைக்கும் நடைமுறையாகும். 2020 தேர்தலுக்குப் பிறகு குடியரசுக்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் தீவிரமாக மாவட்ட எல்லைகள் பலவும் அவர்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதுவும் கூட இத்தேர்தலில் ஜனநாயக கட்சிக்கு எதிராக மாறும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
பொதுவாக இடைத்தேர்தலின் போது நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, குற்றங்கள், பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு, குடியேற்றம், கல்வி, தேர்தல் வாக்குறுதிகள் போன்ற முக்கிய அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும். தற்பொழுது நாடு எதிர்கொண்டிருக்கும் வரலாறு காணாத பணவீக்கம், கச்சா எண்ணெய் விலையேற்றம், குழந்தைகளுக்கான பால் பவுடர் தட்டுப்பாடு, விநியோக சங்கிலிப் பிரச்னைகள், தொடரும் கோவிட்19 தொற்றுப்பரவல், உக்ரைன்-ரஷ்யா யுத்தம் என நீளும் பட்டியலால் மக்களிடையே ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் குறைந்திருக்கும் வேலையின்மை விகிதம், கூடியிருக்கும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை, மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கான முயற்சி, கட்டுக்குள் இருக்கும் கொரோனா தொற்றுப்பரவல் என்ற ஜனநாயக கட்சியினரின் பேச்சுக்கள் எடுபடுமா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் ஆவணமற்ற குடியேற்றவாசிகளை கட்டுக்குள் கொண்டு வர ஆளும் கட்சியினர் தத்தளித்துக் கொண்டு இன்று வரையில் ட்ரம்ப் அரசின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதும் இதன் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதும் பைடன் அரசின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
பெண்களின் கருக்கலைப்பு உரிமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் ஜனநாயக கட்சியினருக்குப் பெண்களின் ஆதரவு கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சமீபகால துப்பாக்கி வன்முறைகளைக் கையாள பைடன் அரசின் சீர்திருத்த கொள்கை மசோதாவை காங்கிரஸில் நிறைவேற்ற இத்தேர்தலின் வெற்றி வாய்ப்புகளை அதிகம் எதிர்நோக்குகிறது ஜனநாயக கட்சி.
தற்பொழுது குற்றங்களும் இனவெறிச்செயல்களும் பெருகி வருவது கண்கூடாகத் தெரிகிறது. காவல்துறையின் செலவினங்களைக் கட்டுப்படுத்தி நிதியை அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செலவிட வேண்டும் என்று 2019 தேர்தலில் “Defund the Police” என வலியுறுத்திய ஜனநாயக கட்சியே தற்போது அதிகரித்து வரும் குற்றங்களைச் சமாளிக்க காவல்துறைக்கு நிதி வழங்குவதே சரியானது, “Fund the police” என்று அதிபர் பைடன் தனது காங்கிரஸ் பிரதிநிதிகள் சபை உரையில் கூறியதும் அரசின் கொள்கை மாற்றங்களில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையால் செல்வாக்கை சிறிது இழந்துள்ளது.
குடியரசுக் கட்சியினர், LGBTQ, பிரிவினைவாத கலாச்சாரப் பிரச்சினைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தினால் பென்சில்வேனியா போன்ற மிதமான வாக்காளர்களைக் கொண்ட மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் தோல்வியடைய நேரிடும்.
சமீபத்திய வாஷிங்டன் போஸ்ட்-ஏபிசி நியூஸ் கருத்துக்கணிப்பில், “பணவீக்க சிக்கலை ஜனாதிபதி பைடன் கையாண்ட விதத்தில் அதிருப்தியும் ஐம்பது சதவீதம் பேர் குடியரசுக் கட்சியினர் பிரச்சினையைத் திறமையாக கையாள்வார்கள் என்று நம்புவதாகவும்” வெளியிட்டுள்ளது.
பொலிட்டிக்கோ தலைமைத் தேர்தல் செய்தியாளரின் கணிப்பின்படி செனட்டில் குடியரசுக்கட்சியினர் தங்களுடைய 50 இடங்களையும் தக்க வைத்துக் கொள்வார்கள். 2022ல் 35 இடங்களில் செனட் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் 21 இடங்கள் ஏற்கனவே குடியரசுக் கட்சியினர் வசமே உள்ளது. 14 ஜனநாயக கட்சியின் இடங்களும் 2020 இல் அதிபர் பைடனுக்கு வாக்களித்த மாநிலங்களில் உள்ளன. இதில் அரிசோனா, ஜார்ஜியா, நெவேடா, நியூ ஹாம்ப்ஷயர் மாநிலங்களில் குடியரசுக்கட்சியினரும், பென்சில்வேனியா, விஸ்கான்சின் மாநிலங்களில் ஜனநாயக கட்சியினரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். 2020 தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் ட்ரம்ப் கட்சியினர் அதிக இடங்களை இழக்க நேரிடும் என்ற கணிப்பு பொய்த்து 208 இடங்களைக் கைப்பற்றி 221 இடங்களைப் பெற்ற பைடன் அரசை திகைக்க வைத்தது நாடறியும். மாவட்ட எல்லை மறுவரையறை காரணமாக 2022 தேர்தல் ஆடுகளம் முற்றிலும் மாறியுள்ளது. இதுவும் குடியரசுக்கட்சிக்குச் சாதகமாக அமையலாம். அவர்கள் மீண்டும் அதிகளவில் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றும் வாய்ப்புகள் இருப்பதாகவே கருத்துக்கணிப்புகளில் எதிரொலிக்கிறது. சமீபத்திய துப்பாக்கி வன்முறைகளுக்குப் பிறகு இதில் மாற்றம் ஏற்படும் என்று பைடன் அரசு நம்பிக்கையாக உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பிரைமரி தேர்தல்கள் மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது. மே மாதம் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்து முடிந்த ஆளுநர், காங்கிரஸ் உறுப்பினர்களின் பிரைமரி தேர்தல் கலவையான முடிவுகளையே ட்ரம்ப் ஆதரவு வேட்பாளர்களுக்கு அளித்துள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிக கவனம் பெறும் மாநிலமாகவும் மாறி உள்ளது. ஜூன் 7, 2022 அன்று கலிஃபோர்னியா, அயோவா, மிசிசிப்பி, மொன்டானா, நியூஜெர்சி, நியூமெக்சிகோ, தெற்கு டகோட்டாவில் நடந்து முடிந்துள்ள கட்சியின் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பிரைமரி தேர்தல் முடிவுகளும் முந்தைய அதிபர் ட்ரம்ப்பின் ராஜாங்கத்தைப் பரிசீலனை செய்தாலும் இரு பெரும் கட்சிகளுக்கும் சவாலான இடைத்தேர்தலாகவே இருக்கப்போகிறது. இதில் ஜனநாயக கட்சி செல்வாக்கு மிகுந்த நியூஜெர்சி, நியூமெக்சிகோ மாநில குடியரசுக்கட்சி வேட்பாளர்களுக்கு ட்ரம்ப் ஆதரவு ஏதும் கோரவில்லை. மற்ற மாநிலங்களிலும் ட்ரம்ப் ஆதரவாளார்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு எதிராகவும் கட்சிக்குள் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மாநில இடைத்தேர்தல் முடிவுகள் அந்தந்த மாநில பிரச்னைகளில் ஆளும் கட்சியின் நிலைபாட்டைப் பொறுத்து தான் அமையப் போகிறது என்பதை பிரைமரி தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறது.
இந்த இடைத்தேர்தல், குடியரசுக்கட்சியினரின் ட்ரம்ப் ஆதரவுக்கும் பைடன் அரசின் மீதான மக்களின் நம்பிக்கைக்கும் இடையே நடக்கும் மறைமுகமான போர் என்றே கூறலாம். ஒரு சில குடியரசுக்கட்சியினரின் வெற்றிகள் கூட அதிகார சமநிலையைக் குறைத்து பைடனின் சட்டமன்ற செயல்களை கடுமையாகக் கட்டுப்படுத்தும். தடுப்பூசி, தேர்தல் முடிவுகள், பொருளாதார நெருக்கடி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என ஆளும் கட்சி மீது குடியரசுக்கட்சியினர் விசாரணை செய்யும் அதிகாரங்களைக் கூட வழங்கும் அபாயம் உள்ளது. இது ஆளும் கட்சிக்குப் பலத்த பின்னடைவையே ஏற்படுத்தும்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் ராபர்ட் எஸ். எரிக்சன் அரசியல் இதழ் ஒன்றில் “அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மெஜாரிட்டி உறுப்பினர்களுடன் அமையும் அரசு, இடைத்தேர்தலில் அதிக இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்” என்று கூறியுள்ளார். ஆளும் கட்சியின் மீதான அதிருப்தியைத் தெரிவிக்க மட்டுமே வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் போக்கு இருப்பதும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற உதவுகிறது. 1934 முதல் நடைபெற்ற 21 இடைக்காலத் தேர்தல்களில் பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபர்களாக இருந்த கால கட்டத்தில் இரண்டு முறை மட்டுமே ஆளும் கட்சி செனட் மற்றும் ஹவுஸ் இரண்டிலும் வெற்றியைத் தக்க வைத்துள்ளது.
அதிபரின் நான்காண்டு பதவிக்காலத்தில் இரண்டாம் ஆண்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதில்லை என்ற பொதுக்கூற்றை இந்த இடைத்தேர்தல் மடை மாற்றுமா அல்லது அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கும் குடியரசுக்கட்சியினரின் கனவு பலிக்குமா?