
ஊரின் வெளியே முதலை வால் போல் ஓடும் கோட்டைச் சுவரை ஒட்டிய மரங்களண்டிய ஒற்றைப் பாதையில் சென்றால் பாறைகளை ஏந்தி வானுக்குக்காட்டியபடி நதி ஓடுவதைக் காணலாம். அங்குதான் நதி நடுவில் ஒரு பாறையில் அவள் நின்றிருந்தாள். ஆழ்ந்த யோசனையில் சமைந்த முகம். சோகமாகக் கூட இருக்கலாம்.ஆனால் அவள் அழகை தியானிப்பதாகத்தான் பட்டது. ஏனெனில் அப் பொழுதானது வழக்கமான ஒன்றல்ல. சூரியனை மறைத்துவிட மேகங்கள் காற்றால் இயக்கப்பட்டு திரண்டெழுந்த பொழுது அது. எட்டுத்திக்கும் ஒளியால் வெப்பத்தால் நிறைப்பவன் ஒரு குழந்தையைத் தீண்டுவது போல் மெல்ல உலகைத் தீண்டிய பொழுது அது. நதிக்கரையொட்டி எழுந்த மாபெரும் விருட்சங்கள் காற்றில் எழுந்த குளுமையுடன் சேர்ந்து இது ஒரு கனவென தோன்றச் செய்யும் பொழுது அது. கனவுதான். வேறென்ன? இவ்வளவு, இன்னும் என்ன என்ன உள்ளதென்று உளம் குமையும் பொழுது. கடல் நீரை கைக்குவையில் அள்ளுவது போல வாழ்க்கை சிறிதினும் சிறிதெனத் தோன்றும் கணங்கள். அவள் ஒரு மயிலைப்போல அங்கு நின்றிருந்தாள். ஏதோ ஒரு மேகக் குவை மலர்வடிவம்கொண்டு, காற்றிலிறங்கி அப்பாறைமேல் விழுந்தது போலிருந்தது. சொல்லித்தான் அழ வேண்டும். சொல்லித்தான் சிரிக்க வேண்டும். சொல்லின்றி நம்மை நாம் அறிவது எப்படி. அந்த அரிதான கணமொன்றை, தெய்வம் இயல்பாய் மண்ணிறங்கிக் காட்சி தந்த அக்கணத்தை, என் சொல்லால்தான் உன்னிடம் சொல்கிறேன். நீயும் பார்த்திருந்தால் நம் மனங்கள் சொல்லின்றிப் பேசி நிறைந்துவிடும். ஆனால் இப்போது சொல்தான் தேவை. மானுடத்தால் அடையப்பட்ட உச்சமான சாதனை இசைதான். இயற்கையின் மாபெரும் சாதனை மலர்தான். அப் பொழுதுக்கு உவமையாய் சித்தார் இசையைச் சொல்லலாம். அந்தப் பொழுதுதான் உலகை மீட்டியதா? வானத்தின் இருள்வெண்மையும் நீரின் அதிர்வும், காற்றின் ஓயாத ஓட்டமும், இலைகளின் மென் அசைவுகளும் சித்தாரின் தந்தி எனத்தான் அதிர்ந்தன. கோட்டைச் சுவர் மாடமொன்றில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். முடிந்தவரை அசையாமல் இருந்தேன். யாரும் பேசிவிடக் கூடாது என வேண்டிக்கொண்டேன். அப் பொழுதில் உடல் வெடித்து வெறும் பட்டுப்பூச்சிகளாய் மாறிவிடுவதாய் நினைத்துக்கொண்டேன். அவள் பெயரெல்லாம் உதிர்ந்த அழகுரூபமாக நதியில் எழுந்த ஒரு மலர்மரமென நின்றிருந்தாள். இப்படி உவமைகளாக உதிர்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்யட்டும். யானையைப்போல் அப் பொழுது அசைந்து அசைந்துசெல்வதை பார்த்துக்கொண்டே நின்றேன். ஏதோ ஒன்று இடறியது நண்பா. எது என்னை அந்த சித்தார் தந்திகளில் ஒன்றாக மாற விடாமல் தடுத்தது ? அதைத்தான் பிரக்ஞை என்கிறார்களா? காலைக் கட்டியிருக்கும் கட்டை அவிழ்த்தால் குதிரை வானிலேயே பறந்துவிடும். ஆனால் ஏதோ ஒன்று என்னைக் கட்டிப்பிணைத்தது. எனக்கான சாபம் தான் அது. ஒட்டு மொத்த மானுடத்துக்கான சாபமா? சிறகு எங்கோ சிக்கிக்கொள்வதும் வானெழமுடியாமையும் ஒன்றும் புதிதல்ல அல்லவா மானுடருக்கு? நான் மெல்ல அந்த மாடத்தில் அமர்ந்துகொண்டேன். சிறு கைப்பிடிச்சுவர் அதற்கு அப்பக்கம் உலகின் மாபெரும் ஓவியம். நாமென்ன ஒரு துளி வண்ணம். அல்லது ஒரு பொருக்கு நிறம். வண்ணத்தின் துமி. ஒரு நிறம் மற்றொன்றில் சுழித்து மெல்ல ஒன்றாவது போல் நான் மெல்ல என் நிறமழிந்தேன். மாமாவின் மிருதங்கத்தை நாம் தட்டுவதற்கும் மாமா மீட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டல்லவா? அதே மிருதங்கம்தான். மாமாவின் கை அதனை வீணை நாதமென எழுச்செய்யும். இந்த ஒரு வாழ்க்கையை வீணைநாதமென மீட்டிவிடத்தூண்டிய பொழுது அது.
என்றும் என் அன்புகள்
கதிர்
இடம் : ஸ்ரீரங்கப்பட்னா
05.02.1989
மாபெரும் மாயக்கம்பளம்தான் இவ்வாழ்க்கை எனத் தோன்றுகிறது. அதன் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு கோலம். இத்தனையும் தன்னுள் கொண்டு முன் செல்லும் எதனை வாழ்க்கை என்கிறோம். உலகம் வேறு. கிரகங்கள் வேறு. பிரபஞ்சம் வேறு. வாழ்க்கை என்பது இவற்றினூடே நாம் கடந்து செல்லும் கணங்கள் தான் அல்லவா? வேகமாகக் கடக்கும் பேருந்தில் இருந்தபடி தூரத்தில் தெரியும் மலையை பார்த்துக்கடப்பது போல் வாழ்க்கையைக் கடந்துவிடுகிறோம் அல்லவா? இந்த வேகமான கடந்து செல்லலில் காட்சியாகிவிடுகிறது ஒரு சிலருக்கு ஒட்டுமொத்தமும் கூர்கொண்டெழும் முனைகள்.
சீரப்பன் தெரியுமல்லவா உனக்கு? அவன் ஊரில் அவன் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். மலைச் சரிவில் அமைந்த வீடு. அவன் கீழிருந்து மலையேறும் முன் வீட்டை காண்பித்த போது அதுசரிவில் இருக்கும் வீடெனத் தோன்றியது. அருகில் சென்றுவிட்டால் மரக்குவைதான். வீட்டைச் சுற்றிப் பள்ளம் தோண்டிருந்தார்கள். வீட்டைச் சுற்றி அகழியென ஓடியது அது. யானை நுழையாமல் இருக்க பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். தலைதிரும்பும் திசையெல்லாம் மனிதர்களும் காங்க்ரீட் சுவர்களும் பார்த்த எனக்கு அது அளித்த அனுபவம் விநோதமானது. மலையின் ஒலியை, துடிப்பை, மூச்சைக் கேட்டபடி ஒரு வாரமிருந்தேன். ஒரு யானைக்கூட்டத்தைப் பார்த்துவிட ரொம்பவும் ஆசைகொண்டேன். ஒரு நாள் சீரனின் தம்பி கத்தினான் என்னை வரச் சொல்லி. வேகமாக ஓடிச்சென்றேன். தூரத்தில் கருந்திட்டாக மரமற்ற ஒரு பகுதியை கடக்கும் ஒரு யானைக் கூட்டத்தைக் கண்டேன். அவ்வளவுதான். மற்ற நேரங்களில் அம்மலைக்கூட்டத்தில் அங்கும் இங்குமாய் தும்பிக்கை உலைய யானைகள் நடந்து கொண்டிருப்பதைக் கற்பனை செய்து கொண்டதோடு சரி.
விடைபெற்று என்னை பஸ் ஏற்றிவிட சீரப்பன் மலையடிவாரம் உடன் வந்தான். பேருந்து நிலையமென்றால் குரலெடுத்து அலறியபடி வரிசையாக நிற்கும் பேருந்துகளை நினைக்கவேண்டாம். அங்கு நின்றிருந்தது ஒரே ஒரு பேருந்து. அதற்கு அவ்வளவு கூட்டம். ஏறி நின்றுகொள்ளலாம் என அவனுடன் பேசிக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். திடீரெனப் பெரும் கூச்சல். ‘யானே யானே ஓடு ஓடு’ என ஒரே குரல். நான் யானையை எதிர்பார்க்கும் முகமாக மணியோசை கேட்கிறதா என உன்னித்தேன். சீரன் என்னை உசுப்பியபடி ஓடு ஓடு என ஓடத்தயாரானான். நாலைந்து சிதறி ஓடும் ஆட்களைத் தொடர்ந்து நீண்டு வளைந்த கொம்புடன் பேருடல் சுமந்து தும்பிக்கை முன் நீட்டி ஓடி வந்தது. கம்பீரமும் கோபமும். நான் பதைபதைக்க ஓடத் துவங்கினேன். பேருந்தில் இருந்து வாயிலிலும் சிலர் ஜன்னல் வழியும் குதித்து பெருக்கெடுத்தது திரளோட்டம். ஒரு சிறு கூட்டம் ஆன வரை ஓசையெழுப்பி யானையைக் காட்டுக்குள் திருப்பி விட முயன்றது. ஆனால் திட்டமிடப்பட்டு இயக்கப்படுவது போல் பிளிறலும் ஆக்ரோஷமுமாய் ஓடி வந்ததது யானை.
அங்கு நிகழ்வதை என்னவென்று வரையறுப்பது? யானை பேருந்தின் முன் பக்கமாய் ஓடிக்கொண்டிருந்த பெண்ணை நெருங்கிவிட்டது. யானையின் முதல் அடியில் பெண் இறந்து போனாள். சிறு வீச்சில் பறந்து சென்று சாலையோர மரத்தில் மோதி விழுந்தாள். ஓடிச்சென்று கொம்பால் சவிட்டியது. முதிர்ந்து வெடித்த மரப்பட்டையில் வேண்டுதலுக்கு அப்பப்பட்ட குங்குமமென துதிக்கையில் இரத்தம் அப்பியிருந்தது. நான் மூர்ச்சை போட்டு விழுந்தேன். பின் சீரன் வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டேன். ஒரு வாரம் முழுக் காய்ச்சல். நீரும் உணவும் செல்லவில்லை. உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. இறுக இறுக்கிய உடலை லேசாகத் தளர்த்தினால் போதும் உடல் வெடவெடவென அதிரத் துவங்கியது. உதடு வெடித்து வெளிறியது. ஒரு கணம் கூட கண்மூட முடியவில்லை. நினைவுள்ளதா, ஒருமுறை கைப்பிடிச்சுவருக்கு அப்பக்கம் உலகின் பேரழகு ஓவியமிருப்பதாய் எழுதியிருந்தாய். என் கைப்பிடிச்சுவருக்கு அப்பக்கம் மரணம் ஒரு கடலென ததும்புவதாய்ப் பட்டது. அதன் நாவுகள் நீண்டுநீண்டு வெறும் உயிர்களால் ஆன ஒரு கடல். உடலுதறிய உயிர்களால் ஆன கடல். கடல்நீரிலிருந்து எழுந்து வந்ததது யானை இரத்தம் தோய்ந்த தும்பிக்கையுடன்.
ஏழாம் நாளென நினைக்கிறேன். சீரனின் பாட்டிதான் என்னைத் தொட்டு “கூட வா” என்றாள். உள் எரிந்த சிம்னி விளக்கைக் கூட அணைத்துவிட்டிருந்தார்கள். வெறும் இருள். அவளைப் பின் தொடர்ந்து சென்றேன். யானை வருவதைத் தடுக்க வெட்டப்பட்ட குழியின் வெகு அருகில் அழைத்துச்சென்றாள். வெறும் இருளும் தாள முடியாத அமைதியும்தான். மலை யானையைப் போல் கிடந்தது. மெல்ல மேகம் ஒன்று உருவமாய் வடிவம் கொள்வது போல் அந்த இருளுக்குள் அசைவை உணர்ந்து பின் அது என்னவென்று என் சித்தம் உணர்ந்து கொண்டது. ஒரு யானைக்கூட்டம் அப்பக்கம் கடந்து சென்றது. எனக்கு உடல்நடுக்கில் மூத்திரம் பிரிந்தது. மெல்லக் கேட்ட யானைகளின் ஒலி, அதன் மூச்சிளைத்தல் எனக் காது பழகியது. ‘பயப்படாத’ எனக் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அப்பொழுதான் கண்டேன் சிறு யானைக் கன்றை. மைக்கொழுந்து போல் தாயை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு யானைக் குடும்பம். குடும்பம் எனும் சொல் பல்லாயிர வருட பரிணாமத்தில் அவை அடைந்த அமைப்பு. நீரை அள்ளி வீசி அது ஒரு வடிவத்தில் விழுவதைப் படமெடுப்பது போல் நம் வரையறைகள். உடல் மெல்லத் தளர்வதை உணர்ந்தேன். பூமி மேல் அலையும் தும்பிக்கையென நிலவொளி கிடக்க அதனூடே அந்த யானைக்கூட்டம் சென்று மறைந்தது. நான் திரும்பி நோக்கியபோது இருள் மட்டும்தான் உடனிருந்தது. நான் வெகு நேரம் அங்கு நின்றிருந்தேன். அந்த இரவுதான் ஏழு நாட்களில் நான் முதலில் தூங்கியது. அந்த ஏழு நாட்களை ஒரு இசைக்கோர்வையாகத்தான் தொகுத்துக்கொண்டேன். அந்த யானை அப்பெண்ணை உதறி வீசியபோது இசையின் முதல் பெருக்கு. என் நெஞ்சின் உள் மார்புக்கூட்டினுள் பதிக்கப்பட்ட ஒரு உறுதியான குச்சியை எலும்பு உடைய யாரோ பிடித்திழுத்து வெளியெடுத்த கணம். தெய்வம் காட்சியாகும் கணம். என் கைப்பிடிச்சுவருக்கு அப்பால் மலையும் நிலவொளியும் அதிலொரு யானைக்குடும்பமும்.
அன்புடன்
ஆ.ராகவன்
இடம் : திருச்சிராப்பள்ளி
05.06.1989
அன்புடன் ராகவன் மற்றும் கதிருக்கு,
நலம் சூழ ஆசிகளுடன் சொல்லிக்கொள்வது யாதெனில் எனக்கு உங்களைப் போல் அன்பு விளி இல்லாமல் கடிதம் துவங்கும் பழக்கம் இல்லை என்பதுதான். நலமும் நலம் அறிய ஆவலும் தெரிவித்தபின்தான் என்னால் கடிதம் எழுத முடியும். உங்கள் கடிதங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றன. மனதை அலட்டிக்கொள்ளாமல் நிதானமாக இருக்க சிலருக்கு வாய்ப்பதில்லை சிலருக்கு வாய்ப்பதேயில்லை.வாழ்க்கை முன் திகைத்து திகைத்து நிற்பதால்தான் நான் உங்களையும், நீங்கள் என்னையும் அன்னோன்யமாக உணர்கிறோம் என நினைக்கிறேன். “மனுஷா அன்பை ஃபார்முலா போட்டு வகுக்காதேடா” என்பார் மாமா. ஆனது ஆகட்டும். வாழ்வில் விரும்பும்படியோ விரும்பாவண்ணமோ பல நிகழ்வுகளும் மனிதர்களும் வந்து போய்விட்டனர். ஆனால் என்னை விடாமல் இருப்பது மிருதங்கம் மட்டும்தான். கச்சேரிகளுக்குத் தொடர்ச்சியாகப் போய் வருகிறேன்.
அன்று கீரனூரில் அதிகாலையிலேயே வாசிக்கச் சென்றிருந்தோம். கச்சேரி முடிந்து ஒரு வீட்டில் விருந்து முடித்துவிட்டு, பேருந்துக்குக் காத்திருந்து பின் அந்நேரத்திற்கு பேருந்து இல்லையென அறிந்து நடந்தே ஊர் திரும்பினோம். மழை மெல்ல இருட்டிக்கொண்டு வந்தது. தூரத்தில் சிறு புகை எழும் சட்டியைப் பார்த்ததுமே ராமண்ணா ஓரமாக ஒதுங்கினார். இறுதி ஊர்வலமொன்று வந்து கொண்டிருந்ததுதான் காரணம். ஆனால் சவ ஊர்வலம் எங்களைக் கடப்பதற்குள் மழை பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஓடிச் சென்று ஆலமரத்தின் கீழ் நின்று கொண்டோம். இறுதி ஊர்வலத்தைப் பாதியில் நிறுத்தும் வழக்கம் இல்லைதான். ஆனால் அன்று நிலைமை வேறு. மழை அடித்தது மேலெல்லாம். ஒவ்வொரு துளியும் கடப்பாரை போல் இறங்கியது. காற்று பெரும்படையென ஓடும் சத்தம். ஊர்வலம் மெல்ல பிணத்துடன் மரத்தின் கீழ் ஒதுங்கியது. கட்டப்பட்ட பாதம் தெரிந்தது. மூக்கின் நுனி தெரிந்தது. நான் மெல்ல மெல்ல அமைதியாகிக் கொண்டிருப்பதை உணர்ந்துகொண்டிருந்தேன். எதிர்சாரியில் தூரத்தில் ஒரு பெண் மழைக்கு முக்காடிட்டு ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிறு வெட்டலுடன் பெரும் இடி ஒன்று. வானம் இருட்டி அந்தி போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. யாரோ வானில் அமர்ந்து நம் கற்பனையில் அடங்கா பெரியதொரு மிருதங்கத்தை வாசிப்பதாய்ப்பட்டது. மழை அவ்வூரை உள்ளங்கையில் அள்ள முனைவது போலிருந்தது. ஒரு சவ ஊர்வலம் கச்சேரி ஜமா ஒரு பெரு மழை. மின்னி மின்னி வெட்டும் அந்த பெரு வானின் கீழ் வெகு நேரம் நின்றோம். மழை ஓயவும் என் மிருதங்கத்தை சோமன்னாவிடம் கொடுத்து வீட்டில் வைத்துவிடும்படி கூறிவிட்டு அந்த சவ ஊர்வலத்தின் பின் சென்றேன். ஷ்யாமலாவை தகனம் செய்த அதே சுடுகாடுதான். அந்த ஒரு மரணத்தில் நான் முழுவதும் சரிந்து இல்லாமல் போனதை நினைத்துகொள்கிறேன் இப்போது. கேள்விக்குறியில் இருக்கும் கொக்கி குரல் வளையில் மாட்டிக் கிழிபட்ட காலம் அது.
விறகு வராட்டி என அடுக்கித் தயாராக இருந்தது. சாங்கியங்கள் இருபது நிமிடம் எடுத்தன. இறந்தவரின் உறவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வராட்டியாய் அடுக்க மெல்ல அவ்வுடல் இவ்வுலகிலிருந்து மறைந்துகொண்டிருந்தது. கடைசியாய் முகம் பார்த்துக்கொள்ளச் சொன்னார்கள். பின் சாதாரணமாக வெகு சாதாரணமாக அம்முகம் மனிதர் பார்வையிலிருந்து மறைந்தது.
மெல்லப் பற்றி எழுந்தது தழல். காற்றின் ஈரப்பதமெல்லாம் ஒரு பொருட்டல்ல எனப் படர்ந்தது நெருப்பு. சற்று நொடிக்கெல்லாம் என் தலைக்கு மேல் உயரமாய் எழுந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. அசைவற்று தழலைக் கண்டபடி எண்ணமென ஏதுமின்றி நின்றிருந்தேன். பின் மனம் கண்டுகொண்டது தழலில் நாதத்தை. அது ஒரு சொற்கட்டில் எரிவதை. தழல் ஒரு தனி ஆவர்த்தனத்தை வாசித்துக்கொண்டிருந்தது. மழை மெல்ல வலுத்தது. மண்நோக்கி விழும் துளி, விண்ணொக்கி எழும் தழல். என் கைப்பிடிச் சுவருக்கு அப்பால் நாதம். மழையாலும் தழலாலும் ஆன நாதம்.
அன்பும் ஆசிகளும்
சுந்தர்
இடம்: திட்டியூர்
10.11.1989
***