அதிர்ஷ்டம்

உள்ளூர் பிரமுகர் ஒருவர் இரக்கப் பட்டதால் தெய்வானைக்கு ஒரு மூன்றுசக்கர சைக்கிள் தானமாகக் கிடைத்தது. தனதுகட்சித் தலைவர் பிறந்தநாள் என்று வந்தபோது அவர் எதாவது செய்தாக வேண்டி யிருந்தது. தனது பிறந்தநாளுக்குக் கூட அவர் இப்படி மெனக்கிட்டு தான தர்மம் செய்தது கிடையாது. இப்போது செய்வது, சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைத் தூண்டிலில் பிடிக்க. தலைவர் பிறந்தநாள் என்றால் அதைவைத்து பொதுக்கூட்டம், மேடை என்று அமர்க்களப் படுத்திவிடலாம். அதைப் படம் எடுத்து தலைவர் பார்வைக்கு அனுப்பலாம். உள்ளுர் நிருபரிடமும் பத்திரிகைச் செய்திக்குச் சொல்லி யிருக்கிறார். கவுன்சிலர், எம் எல் ஏ என அவருக்குக் கனவு ஏணிகள் இருந்தன. மேலிடம் மனது வைக்க வேண்டும்.

தெய்வானைக்கு இடது கால் ஊனம். நேரே நிமிர்ந்தாற் போல நிற்கக் கொள்ளாது. நடக்கும்போது முன்குனிந்து இடது கையை இடது கால்முட்டியில் ஊனிக்கொண்டு எழுந்து ஒரு துள்ளல் துள்ளினாற் போல காலை வீசி நடப்பாள். குளத்து மீனுக்கு வலை வீசுகிறாற் போல. இடது கால் உள்ளே சதைப் பற்றற்று சூம்பி குச்சியாய்க் கிடந்தது. வண்டிமாட்டைக் குத்தும் சாட்டைக் குச்சி. அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. அது இல்லாமலே இருந்திருக்கலாம்.

அவள் தன் அம்மா வயிற்றில் தங்கியபோதே அது அவள் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. “இது எதுக்குடி இப்ப, இந்தச் சனியனை இப்ப ஆரு கேட்டா?” என்றாராம் அப்பா. இத்தனைக்கும் இவள் முதல் குழந்தை. அவர் எப்பவுமே அப்படித்தான். உலகம் அவர் எதிர்பார்த்தபடிதான் இயங்க வேண்டும் அவருக்கு. மகா சுயநலவாதி. தாலுகா அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் அவர். யாரைப் பார்த்தாலும் இந்தாளிடம் காசு தேத்த முடியுமா என்று மூளை ஆராயும். இப்படி சம்பாத்தியத்தில் முதல் செலவு குடிப்பது. இரண்டாவது செலவு, மறுநாள் குடிப்பது. அலாவுதீன் பூதம் போல அவர். ஆனால் இவர் உயிர் பாட்டிலுக்குள்.

நாலு முக்கில் பெரிய பூங்காவை ஒட்டி சிமென்ட்டு மேடை இருக்கிறது. மாலை நேரங்களில் அரசியல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ள அவரும் போனார். நேரம் பார்த்து கை தட்ட வேண்டும். எதிர்க் கட்சிக்குப் பேச்சாளர் சவால் விட்டால், விசில் அடிக்க வேண்டும். இப்படி சில அடிப்படை ’பூம்பூம்’ மாட்டு வேலைகள் அவருக்குத் தரப் பட்டிருந்தன. கூட்ட முடிவில் பிரியாணி, தாக சாந்தி வசதிகள் செய்து தரப்படும். சில சமயம் கைத் துட்டும்!

தெய்வானைக்கு அப்பா தயவில் இந்த மூணுசக்கர சைக்கிள் கிடைத்தது. இதை அடிக்கடி சொல்லிக்காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். “அவங்களையெல்லாம் நாம நம்ம வாழ்க்கைல மறக்கவே கூடாது” என்பார். காசு உள்ளவன் கடவுள் அவருக்கு. அவர் பேச்சுக்குப் பெரிதாய் அர்த்தம் எதுவும் கிடையாது. அவ்வப்போதான நியாயங்கள், இட்டுக்கட்டிய சுயநலமான நியாயங்கள் அவளை எரிச்சல் படுத்தின. சம்பள நாள் அன்று அவரைக் கண்டு பிடிக்கவே முடியாது. அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் சுற்றி வளைத்து வியூகம் வைத்து அவரைத் தேடுவார்கள். ரெவின்யூ ஸ்டாம்பில் கையெழுத்து போடுவார். பின்வாசல் வழியே வெளியே ஓடுவார். தவிர லாலாக்கடையில், பேக்கரியில் பாக்கி நின்றது. எப்படி அவரை நம்பிக் கடன் தருகிறார்கள் என்று தெய்வானைக்கு ஆச்சர்யமாய் இருக்கும்.

அவள் அம்மா வயிற்றில் இருந்தபோது எவளோ மருத்துவச்சியை நம்பி ஒரு வேண்டாத சூரணம் அம்மாவைச் சாப்பிடச் சொல்லி அப்பா வற்புறுத்தினார். சரி. அவரை ஏமாற்ற ஆயிரம் வழிகள். அம்மா ஏன் அதற்கு ஒத்துப் போக வேண்டும்? அதுதான் விஷயம். அம்மாவுக்கும் இந்தக் குழந்தை வேண்டாமாய் இருந்திருக்கிறது. தினப் போராட்டமான வாழ்க்கை. அம்மாவுக்கே வேளைக்குச் சோறு கிடையாது. இதில் குழந்தை வேறா, என அவள், அவளும் கடுப்பாகி யிருக்கலாம்.

ஆனால் அந்த மருந்து சரியாக வேலை செய்யவில்லை போல இருக்கிறது. அது விபரீதமாக வேலை செய்தாப் போல இருக்கிறது. தெய்வானை பிறந்தபோது ஒரு கரிய பூதமாய்ப் பிறந்தாள். அவளுக்கு இடது கால் சூம்பிக் கிடந்தது. பிறந்த குழந்தை அழவே இல்லை. மருத்துவச்சி கிள்ளிவிட்டு அழ வைத்தாள் என்று சொல்வார்கள். குழந்தையிடம் அசைவே இல்லை. அது அழவே இல்லை, என்றதும் “உசிர் இருக்கா செத்திருச்சா?” என்று அவள்அப்பா கேட்டதாகச் சொல்லி யிருக்கிறாள் அம்மா. அதற்காக அம்மா பாசமானவள் என்று சொல்ல முடியாது.

ஆனால் அப்பவே செத்திருக்கலாம், என்று தெய்வானைக்கு இப்போது அடிக்கடி தோன்றுகிறது. அந்த ஊரில் பத்தாம் வகுப்பு வரை இருந்தது. அதுகூட அப்பாவுக்குத் துடடுச் செலவு இல்லாமல், அமைந்தது. சீருடை இலவசம். பாடப் புத்தகம் இலவசம். மதிய உணவு இலவசம். அம்மாவுக்கு தினசரி அவளை பள்ளிக்கு அழைத்துவந்து விடும் போதெல்லாம், இங்கே பெரியவங்களுக்கும் மதிய உணவு போடலாமே, என்று தோன்றும். துவக்கப் பள்ளி அளவில் அவள் கூடவந்து கொண்டிருந்தாள். அம்மா தோளைப் பிடித்துக்கொண்டு காலை வீசி வீசி நடப்பாள் தெய்வானை. பிறகு உயர்நிலை வந்தபோதுதான் சைக்கிள் கிடைத்தது. அவளது தோழிகள் சைக்கிளில் பின்னால் ஏறிக் கொள்வார்கள். அவர்களோடு சைக்கிளை கைப்பெடல் போடுவது கஷ்டமாகத்தான் இருக்கும். என்றாலும் தெய்வானை மறுக்க மாட்டாள்.

தெய்வானை வயதுக்கு வந்தபோது அதைக் கொண்டாட ஆளே இல்லை. பிறந்தது ஒரே பெண். அதையே வைத்துக் காப்பாற்ற, பேணி வளர்க்க துப்பு கெட்ட வீடு. அப்பா அம்மா என்ன நினைத்தார்கள்? இவள் வயசுக்கு வந்ததையும் அரசாங்கமே விழா எடுத்துக் கொண்டாடப்டாதா என நினைத்தார்களோ என்னமோ?… என்றால் அப்பா அம்மாவின் கடமைதான் என்ன? பெத்துத் தெருவுக்கு அனுப்புவது. அவ்வளவுதானா?… சில ரயில் நிலையங்களில் தனித் தண்டவாளத்தில் ஒதுங்கி ஒரே ஒரு ரயில் பெட்டி மாத்திரம் அப்படியே காலங் காலமாய் நிற்கும். அதை எப்போது திரும்பச் சேர்த்துக் கொள்வார்கள், என்றே தெரியாது. அப்படித்தான் தானும் இந்த உலகத்தில் விடுபட்டு தனிமைப் பட்டுப் போனேன், என நினைத்துக் கொண்டாள்.

திடுதிப்பென்று ஒரு மாப்பிள்ளை அவளை வழியில் பார்த்து மயங்கி அவளையே கல்யாணம் பண்ணிக் கொள்வேன், என்று ஒற்றைக் காலில் நிற்கப்போகிறானா என்ன? ஹா ஹா அவளே ஒற்றைக்காலில்தான் நிற்கிறாள். அதொன்றும் இல்லை. அப்பா அடிக்கடி அவளைப் பார்த்துத் திட்டுவார். “பொம்பளையாடி நீ? கொள்ளிக் கட்டைய அடுப்பிலேர்ந்து பாதில எடுத்தாப்ல இருக்கே.” எல்லாம் அவர் அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்த மருந்தின் வினை… என்ன செய்ய? அப்பாவுடன் சண்டை போடத் துடிக்கும். அதையெல்லாம் அவர் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்.

தூங்கும் நேரம் தவிர அவர் குடித்தார். அலுவலக வேலை நேரத்திலேயே அவர் குடித்திருந்தார். சிறிது தள்ளாடியபடியே.நெஞ்சைத் தட்டியபடி சவடால் பேசி வளைய வருவார். என்னை யாரும் கேக்க முடியாது… நான் ஆருன்னு பாத்தே?… என்று தானறியாமல் ஓரடி பின் வாங்குவார். கூட்டம் சிரிக்கும். என்றாலும் அவருக்குக் கட்டுப்படும். பியூன் அவர். கீழிருந்து மேல் வரை லஞ்சம் செழித்த அலுவலகம் அது. அவரிடம் ஆரம்பித்து பட்டுவாடா நடக்கும். அதனால் அவரை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். வெட்கமோ கூச்ச நாச்ச்மோ இல்லாமல் இப்படி யாராவது அந்த அரசு அலுவலகத்துக்கு வேண்டி யிருக்கிறது. எல்லா அரசு அலுவலகத்துக்கும்.

தெய்வானைக்கு தன் கல்யாணம் பற்றி பெரிய யோசனைன யெல்லாம் கிடையாது. அப்பா அம்மா தனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போவது இல்லை, என அவளுக்குத் தெரியும். பத்து வகுப்பு வரை படித்தவள், என்பதால் அவள் தொலைபேசி இலாகாவுக்கு ஒரு பிசிவோ ஒதுக்கித் தர எழுதிப் போட்டாள். என்னவோ தோன்றியது. ஏற்கனவே அவளிடம் ஊனமுற்றவர் என சான்றிதழ் இருந்தது. அவளுக்கு மூன்று சக்கர சைக்கிள் அளித்த அந்த பிரமுகரைச் சந்தித்துப் பேசினாள். அவர் வழங்கிய அதே சைக்கிளைக் கையால் இயக்கிப் போய்ப் பேசினாள். அவர் சைக்கிள் வழங்கிய செய்தி, அவள்படத்துடன் பத்திரிகையில் வந்திருந்தது. அதில் அவருக்கு திருப்தி. உள்ளே வரச் சொல்லி விசாரித்து, தொலைபேசி இலகாவில் யாரிடமோ பேசினார்.

சீக்கிரமே அவளுக்கு பிசிவோ ஒதுக்கப் பட்டது. எனக்குக் கூட அதிர்ஷ்டம் இருக்கிறது, என அவளே ஆச்சர்யப்பட்ட நாள் அது. அது கிடைத்த இடமும் நல்ல இடம். பஸ் ஸ்டாண்டு பக்கம், நல்ல பார்வையான இடம். ஒரு பெட்டிபோன்ற கூண்டும் ‘பூத்’ என அமைத்துத் தந்தார்கள். ஒரு நல்ல நாளில் அவரையே கூப்பிட்டு அந்த பூத்தைத் திறக்கச் சொன்னபோது அவருக்கு ரொம்ப சந்தோஷம். புகைப்படம் எடுக்கச்சொல்லி அவர் ஒரு குறுக்கு ரிப்பனை கத்திரிக்கோலால் வெட்டினார். கை தட்ட கூட நாலு பேரைக் கூட்டி வந்திருந்தார். எல்லாருக்கும் கூல் டிரிங்ஸ் வழங்கப் பட்டது. “இன்னாபா சரக்கு இல்லியா?” என ஒருத்தன் கேட்டான். எல்லாரும் அதை ஒரு நகைச்சுவையாக நினைத்துச் சிரித்தார்கள்.

எல்லார் கையிலும் மொபைல் வர ஆரம்பிக்காத காலம். ஹட்ச் என்று தும்மினாற் போல பெயர் கொண்ட ஒரு கம்பெனி. சின்ன கொம்பு வைத்த போன்களை அறிமுகப் படுத்தி யிருந்தது. எங்க போனாலும் நாய் ஒன்று கூடவே ஒடி வருகிறாற் போல விளம்பரம் எல்லாம் வரும். அப்போதெல்லாம் இன்கமிங் காலுக்கே காசு தர வேண்டும். ராங் நம்பர் வந்தால் ஆத்திரமாக வரும். பிசிவோவே அப்போது புதுசுதான். அந்த ஏரியா கிடுகிடுவென்று வளர்ந்து வந்தது. காட்டுத் தீ விறுவிறுவென்று தாவித்தாவிப் பரவுவது போல, மதுரைக்கு அருகில் என்று போட்டு இங்கே வரை வயல்களை யெல்லாம் கூறு கூறாக வெள்ளைக் கல் போட்டுப் பிரித்து மனை போட்டு விற்க ஆரம்பித்திருந்தார்கள். அதில் பிரமுகருக்கும் கணிசமான பங்கு உண்டு. அந்தத் தொழிலுக்குப் பெயர் ரியல் எஸ்டேட் என்கிறார்கள். காடு இருந்தால் எஸ்டேட். இது? காட்டை அழிப்பது. ‘போலி எஸ்டேட்’ அல்லவா, என்று தோன்றியது அவளுக்கு.

தவிர புதுசாய் பேஜர் என்று வந்தது. பேஜார் அல்ல. அது கெட்ட வார்த்தை. இது பேஜர். அதில் செய்திகள் மாத்திரம் அனுப்பலாம். பிசிவோவுக்கு டிமேண்ட் இருந்தது. கிடைத்ததே அதிர்ஷ்டம் தான். தெய்வானைக்கு ஒரு வேலை என்று உட்கார முடிந்தது. முதன் முதலில் தனக்கு ஒரு கால் ஊனம் என சந்தோஷப் பட்ட தருணம் அது. நல்ல போக்குவரத்தான இடம். பொழுது நகர்வதே தெரியவில்லை. தவிரவும் அதில் வருமானம் வந்தது. வீட்டைக் கவனிக்காத அப்பா. இந்நிலையில் அம்மாவுக்கும் அவளால் எதோ உதவ முடிந்தது.

பக்கத்தில் ஒரு புத்தகம் விற்கிற பெட்டிக்கடை. ராணி, குமுதம், பான் பராக், லாட்டரிச் சீட்டு என கலந்து கட்டி விற்பான் அந்தக் கடைக்காரன். அவனால் அவளுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. அவன் என்றில்லை, எந்த ஆணுமே வந்து அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டோ, ஆபாசமாய்ப் பேசியோ நடக்கவே இல்லை. இது குறித்து சந்தோஷப் படுவதா வருத்தப் படுவதா தெரியவில்லை அவளுக்கு.

ஆ. ஒரு ஆணால் அவளுக்குத் தொந்தரவு வந்தது. அடிக்கடி அப்பன்காரன் அவளைப் பார்க்க மதிய வாக்கில் வந்தான். இன்னாடி வேலன்னு உக்காந்த வொண்ணே அப்பனக் கண்டுக்க மாட்டேன்ற?… என்று ஆரம்பித்து, பெத்தவுகளக் காப்பாத்தறது உன் கடமைடி… கல்லாவுல எவ்ளோ துட்டு வெச்சிருக்கே?… என்று கேட்டான். காசு தராவிட்டால் விடுவதாக இல்லை. மகா தொந்தரவாய் இருந்தான். அவள்தான் நொண்டி. நிற்கத் தள்ளாடினாள் என்றால் அவன் நிலையும் தள்ளாட்டமாய் இருந்தது.

தெருவில் எல்லார் முன்னிலையிலும் அவனோடு மல்லுக்கட்ட அசிங்கமாய் இருந்தது. பிசிவோ பேச வந்தவர்கள் அவன் இருக்கும்போது பேசாமல் கடந்து போனார்கள். பெரும்பாலும் இள வயதினர்தான் பிசிவோ பயன்படுத்தினாரகள். நாலு மைல் தொலைவில் ஒரு கல்லூரி எழும்பி யிருந்தது. பொறியியல் கல்லூரி. அது அரசியல்வாதி ஆளுக்கு ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பித்த காலம். காலையில் மாலையில் பஸ் ஸ்டாண்டில் இளசுகள் கூட்டம். வண்ண வண்ண உடைகளில் பார்க்க அத்தனை அழகு.

தெய்வானைக்குத் தானும் அவர்களோடு கல்லூரி போய்ப் படிக்க வேண்டும் போல இருந்தது. ஓரளவு சராசரிக்கு அதிகமாகவே அவள் மதிப்பெண்கள் வாங்கினாள். ஆனால் அவள் சார்பாக கல்லூரிக்குப் பணம் கட்ட ஆள் யார் இருக்கிறார்கள்? தொலைதூரக் கல்வி என்று இருக்கிறதாகக் கேள்விப் பட்டாள். கொஞ்சம் சம்பாதித்து பிறகு மேல்படிப்பை யோசிக்க நினைத்திருந்தாள். வாழ்வின் ஒவ்வொரு கட்ட நகர்வும் சவாலாகவே இருந்தது அவளுக்கு. பிசிவோ பேச வருகிற சின்னப் பையன்கள் அநேகமாக காதலிகளுக்கே பேசினார்கள். பெண்களும் அப்படியே. தங்கள் சொந்த அலைபேசியில் பேசினால் வீட்டில் கண்டுபிடித்து விடுவார்கள், என்று காதலர்கள் பயந்தார்கள். பொது தொலைபேசி அவர்களுக்கு காதலை வளர்க்க ரொம்ப வசதியாய் இருந்தது.

அவளுக்கும் இப்படி யாரையாவது காதலிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எப்பவாவது தோன்றும். அதுவும் அந்தக் கூண்டுக்குள் போய் அவர்கள் பேசுகிற கிளர்ச்சியில் அவளுக்கே என்னவோ போலிருக்கும். எப்படியெல்லாம் அந்தரங்கமாய் சீச்சீ, ஆபாசமாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆண்களை விட கல்லூரிபோகிற பெண்கள் எத்தனை தைரியமாய் உடல் குலுங்கக் குலுங்க சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்கள். மூணு நிமிடம் தாண்டினால், எக்ஸ்டென்ஷன் என்று பட்டனை அமுக்கச் சொல்லி தொடர்ந்து பேசுகிறார்கள். ஒரு கால் ஒரு ரூபாய். நாலு எக்ஸ்டென்ஷன், மொத்தம் அஞ்சு கால்… என்றால் அலட்சியமாக அஞ்சு ரூபாய் வைத்துவிட்டுப் போகிறார்கள். காதலர் இன்றி பிசிவோவுக்கு வருமானம் இல்லை.

அவளுக்கு இப்பவே வயது முப்பதைத் தாண்டியாகி விட்டது. கல்யாணம் என்கிற அறிகுறியே வீட்டில் இல்லை. அவள் வருமானம் அம்மாவுக்குத் தேவையாய் இருக்கிறது. அப்பாவால் அவர்கள் ரெண்டு பேருக்குமே பிரயோஜனம் கிடையாது. கல்யாணம் என்று ஆனாலும் அவள் வேலை பார்க்கிறாள், என்று இரண்டாம் தாரமாய் வாய்ப்பு கிடைக்கலாம். அவ்வளவுதான்…. ஹ கிடைக்காமலும் போகலாம். அவள் பேரே… பார். தெய்வானை. முருகனின் இரண்டாந் தாரம் வள்ளிக்கு இடம் விட்டவள்தானே, என வறட்சியுடன் நினைத்துக் கொண்டாள்.

என்னவோ சீட்டு சரியாகப் போணியாக வில்லையா தெரியவில்லை. பெட்டிக்கடைக்காரன் அவளிடம் “ஒரு சீட்டு வாங்கிப் பாரேன் தெய்வானை?” என்று கேட்டான். “நானா? எனக்கு அதிர்ஷ்டமே கிடையாதுண்ணா. அதிர்ஷ்டம் இருந்தா நான் ஏன் இங்கவந்து ஒத்தை ஒத்தை ரூபாயா எண்ணிக்கிட்டிருக்கேன்?” என்று சிரித்தாள். பிறகு என்ன தோணியதோ, போய் கண்ணை மூடிக் கொண்டு ஒரு சீட்டு எடுத்தாள். ஒரு சீட்டு ஒரு ரூபாய். பையன்கள் பஸ் ஸ்டாண்டுப் பக்கம், கோவில் பக்கம் போய்ப் போய் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

சரி. அரசாங்கமே என்ன சொல்லுது. விழுந்தால் வீட்டுக்கு. விழாவிட்டால் நாட்டுக்கு… என்றுதானே சொல்லுது?… என மனதில் ஒரு சமாதானம். ஹா ஹா… லாட்டரியில் பரிசு விழுந்தால் அதற்காகவாவது ஒரு மாப்பிள்ளை வர மாட்டானா, என்று தோன்றியது. நினைவுகளை உதறிவிட்டு நாஞ்சில் பி.டி.சாமி தொடர்கதையை விட்ட இடத்தில் இருந்து வாசிக்கத் தொடங்கினாள்.

காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விடுவாள். ஆறரைக்கெல்லாம் பேப்பர் கடைக்காரன் கடை திறந்திருப்பான். தினசரி பேப்பர்கள் மொத்த பண்டிலாக அங்கே போட்டு பிரித்து அடுக்குவார்கள். பரிட்சை ரிசல்ட் சமயங்களில் பையன்கள் காலையிலேயே அங்கே வந்து பேப்பர் வாங்கி ரிசல்ட் பார்ப்பார்கள். திரும்பி அவள் இரவு பத்து மணிக்கெல்லலாம் பூத்தை மூடி விடுவாள். அதற்குமேல் எந்தக் காதலர்கள் வரப் போகிறார்கள்.

அன்றைக்கு ஏழு மணிக்கு வந்து மூணுசக்கர வண்டியை ஒதுக்கி வைத்துவிட்டு கடையைத் திறக்கிறாள். கடைக்காரன் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தான். “என்ன அண்ணா?” என அவளும் புன்னகை செய்தாள். “அதிர்ஷ்டம் இல்லைன்னியே. உன் நம்பருக்குப் பரிசு விழுந்திருக்கு” என்றான். நம்ப முடியவில்லை. நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். ‘எனக்கா?” என்றாள். “ஆமாம். லாட்டரில. உன் டிக்கெட்டுக்கு ஒரு லட்சம்…” என்றான். “நிஜமாவா?” என்று கடையில் தன் நாற்காலியில் உட்கார்ந்தாள். அவன் செய்தித்தாளைக் கொண்டுவந்து காட்டினான். கல்லாப் பெட்டிக்குள் அந்த லாட்டரிச் சீட்டை பத்திரப் படுத்தி வைத்திருந்தாள். வீட்டில் பாதுகாப்பாக அவளால் அதை வைத்திருக்க முடியாது. பெத்த அப்பனையே நம்ப முடியாது. சீட்டை எடுத்து சரி பார்த்தாள். ஆமாம். அது சரிதான். ஒரு லட்சம்! என்ன இது. அதிர்ஷ்டமா, எனக்கா? எத்தனை பெரிய பணம். இதை எனக்குச் செலவு பண்ணக் கூடத் தெரியாது.

“இந்தப் பணத்தை எப்பிடி வாங்கணும், நீங்கதான் சொல்லித் தரணும் அண்ணா…” என்று அவனிடம் கேட்டுக் கொண்டாள். மனம் படபடப்பாய் இருந்தது. போய் அம்மாவிடம் சொல்லலாமா என்று தோன்றியது. வேலை என்று வந்தாகி விட்டது. மதியம் வேணா சிறிது நேரம் கடையைப் பூட்டிவிட்டு வீடுவரை போய் வரலாம் என்று தோன்றியது. அதிர்ஷ்டம்… எனக்கு! சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.

பதினோரு மணிக்கே அப்பன்காரனுக்கு விவரம் எப்படியோ காதுக்கு வந்திருந்தது. தள்ளாடியபடி வேகவேகமாய் அவளை நோக்கி வருவதை அவள் பார்த்தாள். அந்தக் கண்கள், அதன் பணவெறி… சட்டென்று அந்த லாட்டரி டிக்கெட்டை பலவாறாகக் கிழித்து வாயில் போட்டு மென்று தின்றாள் தெய்வானை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.