உலகின் முதன் மொழி எமது
பல்லாயிரம் ஆண்டு தொன்மையானது!
ஆலகாலம் உண்ட சிவன் அருளினான்
நாமகள் உவந்து நாவில் எழுதினாள்
அகத்திய முனிவன் இலக்கணம் செய்தான்
பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கும்
பெருஞ்சிறு காப்பியமும் எம்மிடம்
திருமுறைகள் திவ்யப் பிரபந்தம் கம்பன்
பதினெண் சித்தர் அருணகிரி பட்டினத்தார்
தாயுமானவர் குமரகுருபரர் குணங்குடி மஸ்தான்
வள்ளலார் ஆவுடையக்காள் சிற்றிலக்கியங்கள்
பாரதி என்பன எம் செல்வங்கள்
தொல்காப்பியம் நன்னூல் யாப்பருங்கலம்
தண்டியலங்காரம் எம் கருவூலம்
அப்பாலுக்கும் அப்பால் புகழும்
முப்பாலுக்கும் உடைமை எமக்கு!
மெய்தான் ஐயா!
நல்லூழ்! நற்பேறு!
இத்தனைத் தொன்மொழி சொற்பெருங்காடு
அறநூல் வழிநூல் துணைநூல் எல்லாம்
யாண்டு கரந்துளீர் இன்று எம்மனோரே!
எண்ணெய் உறிஞ்சும் வெறுந்தாள் என
வடை வைத்துத் தின்று எறிந்தீரோ?
உண்டு கழுவிய ஈரம் துடைத்தீரா
மலம் வழித்து மடித்துப் போட்டீரா
தூமை துடைத்துத் தூர வீசினீரா?
கூழாக்கிக் காகிதம் செய்து
ஆயிரம் கோடி வணிகம் நடக்கும்
திரைக்காவிய போஸ்டர் அடித்தீரா?
இனமானம் கடைத்தேறப் புரட்சி கூவும்
காவலருக்குப் பேனர் வைத்தீரா?
அன்றேல்
நீவிர் தெய்வம் எனத் தொழும்
சினிமா சீரியல் நாயக நாயகி
உள்தொடை அதனில் ஒளித்து வைத்தீரா?
எங்கே தொலைத்தீர் வானத்து அமரர்காள்?
எங்கு மறைத்தீர் இறை தந்த திரவியத்தை?
23/04/2022

களியாட்டங்களில் திளைத்திருக்கும் கூட்டம். . செல்வம் உண்மையான மகிழ்ச்சி / பணி எது என்பதை மறக்க வைத்திருக்கிறது. நுகர்வு வெறிக்கொண்டு அலையும் உலகில் எழுத்தாளரின் நியாயமான குமுறல்/வினாக்கள் சேர்வோரை சேர்ந்தால் நலம் பயக்கும்…