வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்

நானும் சம்பந்த மூர்த்தி கோவில் தெருவில்தான் பிறந்தேன். திருநெல்வேலியில் பிறந்தேன் என்கிறதுக்காக திருநெல்வேலியையே நினைச்சுக்கிட்டிருக்க முடியுமா? திருநெல்வேலியும், சம்பந்த மூர்த்தி கோவில் தெருவும் சம்பளம் தருமா, சோறு போடுமா? ஊரையும், அந்தத் தெருவையுமே நினைச்சுக்கிட்டிருந்தால் பிழைப்புக்கு என்ன செய்கிறது? அந்த ஊருதான் பிழைக்கிறதுக்கு வழி இல்லாமே விரட்டிவிட்டுடுச்சே. கொஞ்சம் வயலும் வீடும் இருந்தா எப்பிடியாவது திருநெல்வேலியிலே இருந்திருக்கலாம். குறுக்குத் துறையிலே போயிக் குளிச்சிட்டு வரலாம். நல்ல நாள், பௌர்ணமின்னு நெல்லையப்பரையும் காந்திமதியையும் கும்பிட்டுட்டு வரலாம். ஒரு வெத்தலை பாக்குக் கடை, சின்ன லாலாக் கடை, இல்ல சைவாள் காபி கிளப்புன்னு ஏதாவது போட்டுப் பொழைக்க முடியாதான்னு கேட்கிறாள். அவளுக்கு ஊரோடயே இருக்கணும், நல்லது பொல்லாததுக்கு சொந்த ஜனங்களோட இருக்கணும்னு ஆசை. ஊர்தான் இருக்க விடலியே? பொழைக்க வழி இல்லாமே விரட்டில்லா விட்டுடுத்து. அப்பிடியே வேலை வெட்டி ஏதாவது கெடச்சாலும் படிச்ச படிப்புக்கு கவர்னர் உத்தியோகமா கெடைச்சிரும்?

எம்ப்ளாயிமெண்ட்ல எத்தனை வருசம் எழுதி வச்சிருந்து பார்த்தாச்சு. என் கூடப் படிச்ச ரவி, பெங்களூர்ல பெல் கம்பெனியில வேல கெடச்சுப் போயிட்டான், ரொட்டி ராஜகோபால், பாண்டியன் வங்கியில சேர்ந்தான். செல்வராஜ், அப்பா போட்டிருந்த கடையைப் பாக்கப் போயிட்டான். முருகானந்தம் பெல்பின்ஸ்ஸுக்கு வேலைக்கிப் போனான். எஸ். எஸ். எல். ஸி.யில 232 மார்க் எடுத்திருந்த எனக்கு எம்ப்ளாயிமெண்ட் ஆபிஸிலேருந்து பியூன் வேலைக்கிக்கூட கார்டு வரலை. நகரச் செயலாளர், எம்.எல்.ஏ.வுக்குப் பணத்தப் பொறட்டிக் குடுத்து கவர்மெண்டுல, பஸ் கம்பெனியிலன்னு வேலையில சேர்றதுக்கு கையில என்ன ஐவேசு இருக்கு? அப்பம் வாத்தியார் வேலைக்கி நல்ல டிமாண்டு இருந்திச்சு. மொதல்ல பத்தாயிரம் ரூவாயப் பொரட்டிக் குடுத்தா ஆர்டர் வந்துரும். பெறகு மாசா மாசம் சம்பளம் வாங்க ஆரம்பிச்ச பெறகு அம்பதினாயிரம் கொடுத்து அடைக்கணும். எப்பிடி எப்பிடியோ எல்லாரும் வேலை வெட்டியிலே சேர்ந்தாங்க. நான் முப்பது ரூவா சம்பளத்துல கொமஸ்தா வேலையில கெடந்து நொண்டியடிச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆத்துக் குளியல், செகண்ட் ஷோ படம், தீபம், தாமரை, கணையாழின்னு இலக்கியப் பத்திரிகைகள் வாங்குகிறது, என்.சி.பி.ஹெச்.ல ரஷ்யாவிலே அச்சடிச்ச புஸ்தகங்கள் வாங்குறதுன்னு காலத்தை ஓட்டினேன். ஜெயகாந்தன் கதைகளை விகடன்லேயும், தினமணி கதிர்லேயும் விழுந்து விழுந்து படிச்சேன். பென்ஹரும், ஹடாரியும் பார்த்தேன். போலீஸ்காரன் மகளும், தர்மம் தலை காக்கும் படமும் பார்த்தேன். கதைகள் எழுதி சிறு பத்திரிகையில் எழுத்தாளன் ஆனேன். அப்போ கையிலே ஒரு ரூவா இருந்தா போதும். ராஜாதான். சாலைக்குமாரசாமி கோயிலுக்கு எதிரே இருந்த கடையில் டீ கள்ளிச் சொட்டாக இருக்கும். பொருட்காட்சி வந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். வருஷா வருஷம் வருகிற அதே வளையல் – பாசிக் கடைகள், சோப்புக் கம்பெனிக் கடைதான். தம்போலா விளையாட்டுக் கடை, பெண்ணின் தலையும் பாம்பின் உடம்பும், உயரமான ஏணியிலே ஏறி தீ வைத்துக்கொண்டு கீழே தண்ணீர் தொட்டியில் விழுகிறவர் என்று அதே கேளிக்கைகள்தான். கலையரங்கில் தினசரி நாடகம், மெல்லிசைக் கச்சேரி, சினிமாவில் பார்த்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். எல்லாம் வந்து நாடகங்களைப் போட்டார்கள். விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் மெல்லிசைக் கச்சேரியும் இருக்கும்.

சந்திப் பிள்ளையார் முக்கிலும், மந்திரமூர்த்தி ஸ்கூல் முன்பும் கட்சிக் கூட்டமெல்லாம் நடக்கும். வேடிக்கை, பொழுதுபோக்கு என்றால், கட்சிக் கூட்டங்களும் பொழுதுபோக்குதான். சம்பந்தமூர்த்தி கோவில் தெருவில் பூமி விலாஸ் கம்பெனி ராமசாமி முதலியாரும், பேட்டை ரோடு சுப்பையா மூப்பனாரும் வார்டு எலெக்‌ஷனுக்கு நின்றார்கள். அந்த வயசில் எனக்கு ஓட்டேது? ஆனால் நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஓட்டுக் கேட்டுப் போவேன். கூட்டத்தோடு கூட்டமாக இருப்பதில் இனம் புரியாத சந்தோஷம்.

கிட்டு மாமா, பக்கத்திலிருந்த பாப்புலர் டாக்கீஸுக்குத்தான் படம் பார்க்க அழைத்துப் போவார். மூன்றாவது, நாலாவது படிக்கும்போது பாப்புலர் டாக்கீஸில் ஏகப்பட்ட படம் பார்த்தேன். திருநெல்வேலியில் கோவில், ஆறு, சினிமா, பொருட்காட்சி இவைகளை விட்டால் வேறு என்ன உண்டு? ஒரு நாள் சாயந்திரம் காட்சி மண்டபத்திலிருந்து ஒருத்தரை, ‘டாப்’பைத் திறந்த காரில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். அவர் தன் மடியில் கருப்பு நிறத் தோல்பை வைத்திருந்தார். அவரை நெடுஞ்செழியன் என்றார்கள்.

ராயல் டாக்கீஸில் சோமுப் பிள்ளை மாமா வேலை பார்த்தார். அவர் தரைக்கு டிக்கெட் கொடுத்தார். எத்தனை ரூபாய் கொடுத்தாலும் சில்லரையை நிமிஷத்தில் கரெக்டாகக் கொடுப்பார் என்று பேர். மனுஷரென்றால் புகழ் வேண்டாமா? சோமுப் பிள்ளைக்கு இப்படியொரு பேர். வெளித் தெப்பத்தில், காவிச் சேலை ஆறுமுகத்தாச்சி, ஒரு கையில் தீச்சட்டியை ஏந்திப் பிடித்துக்கொண்டு நிலை நீச்சலில் மைய மண்டபத்துக்குப் போவாள். அதைப் பார்க்க ஒரு கூட்டம் நிற்கும். சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம், பேட்டை ரோட்டில், பழனிக் கம்பௌண்டர் ஆஸ்பத்திரிக்குப் பின்னால் ஒரு வீட்டில் குடியிருந்தோம். எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில், டவுன் பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்த நமச்சிவாயத்து அண்ணன் இருந்தான். தினசரி மனைவியோடு சண்டை போடுவான். அதைப் பார்க்கவும் கூட்டம் கூடும். ஜனங்களுக்கு எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க வேண்டும். அது எப்படிப்பட்ட விஷயமாக இருந்தாலும் வேடிக்கைதான்.

நானும் சமயங்களில் இப்படியெல்லாம் எதையெதையோ வேடிக்கை பார்த்தவன்தான். கூட்டத்தோடு கூட்டமாக அலையாமல் இல்லை. இந்த ஐம்பத்தி இரண்டு வயதில் கூட்டத்தைப் பார்த்தாலே எருக்கழிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. ஆனால் கூட்டமில்லாமல் உலகம் ஏது? எங்குதான் கூட்டமில்லை? கோவிலில், திருவிழாவில், ரயிலில், பஸ்ஸில், கல்யாண வீட்டில், கட்சிக் கூட்டங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம்தான். ஒரு காலத்தில் டவுன் பஸ்ஸில் கூட்டமாக இருந்தாலும் ஏறிவிடுவேன். இப்போது நின்றுகொண்டு போக முடியவில்லை. உட்கார இடமில்லை என்றால் பஸ்ஸில் ஏறாமல் இருந்து விடுகிறேன். கையில் பணமிருந்தால் ஆட்டோதான்.

”இப்பிடிக் காசைக் கரியாக்குதேளே… ஏன் பஸ்ஸில் போனா என்ன கௌரவம் கொறைஞ்சா போயிரும்?” என்கிறாள் சாந்தி. கௌரவப் பிரச்னை ஒன்றுமில்லை. அந்த நெரிசலும், கசகசப்பும் ஒத்துவரவில்லலை.

தர்மு சிவராம் பஸ்ஸில் போய்ப் பார்த்ததே இல்லை. எங்கு போனாலும் ஸிட்டிக்குள் நடந்துதான் போவார். பாரதி, ந. பிச்சமூர்த்திக்குப் பிறகு அவர்தான் தமிழின் முக்கியமான கவிஞர் என்று இலக்கிய உலகத்தில் எல்லோரும் சொல்கிறார்கள். உண்மையாகத்தான் இருக்கும்.

கிரீன்வேஸ் ரோடு வஸந்த விஹாரில் வருஷா வருஷம் ஜே. கிருஷ்ணமூர்த்தி வந்து பேசுவார். அவருடைய பேச்சைக் கேட்க தர்மு சிவராம் வருவார். நடந்தேதான் வஸந்த விஹார் வளாகத்துக்கு வருவார். அங்கும் ஏகப்பட்ட கூட்டம் மரங்களுக்கிடையில் உட்கார்ந்திருக்கும். ஜே.கே.யின் ஆங்கிலம் எளிமையாகத்தான் இருக்கும். ஆனால் பிரபஞ்சம், தத்துவம், மனித இருப்பு என்று ஆழமான விஷயங்களை ஜே.கே. அலசுவார். ஜே. கிருஷ்ணமூர்த்தி கூட்டங்களுக்குப் போகும் போதெல்லாம் எனக்கு, ஊரில் நெல்லையப்பர் கோவிலில் ஆறுமுக நயினார் சன்னதிக்கு எதிரே நடந்த அ.க. நவநீத கிருஷ்ண பிள்ளையின் திருவாசக விரிவுரைக் கூட்டம்தான் ஞாபகத்துக்கு வரும். ஜே. கிருஷ்ணமூர்த்தியை அ.க. நவநீத கிருஷ்ண பிள்ளைக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ? ஆனால் இரண்டு பேருமே வெள்ளை வேஷ்டி, சட்டைதான் அணிவார்கள். ஜே.கே. படித்த மேல்தட்டு வர்க்க ‘எலைட்’ பார்வையாளர்களைக் கவர்ந்தார். நவநீத கிருஷ்ண பிள்ளையின் முன்னால் பொன்னம்மா ஆச்சி, கமலத்தாச்சி, சங்கரன் பிள்ளை, ஆவுடைநாயகம் என்று தாத்தாக்களும், ஆச்சிமார்களுமாகத்தான் உட்கார்ந்து பிரசங்கம் கேட்பார்கள்.

பிரசங்கம் கேட்கும்போது, விபூதியும், எண்ணெயும் கலந்த வாசனை லேசாக வீசும். நவநீத கிருஷ்ண பிள்ளையை விட ஜே.கே. எந்த விதத்தில் உசத்தி? ஜே.கே.க்கு உலகம் பூரா பார்வையாளர்கள் இருக்கலாம். அவரைப் பின்பற்றுகிறவர்கள் இருக்கலாம். ஆனால் அ.க.ந. திருநெல்வேலிக்காரர், தெற்குப் புதுத்தெருக்காரர். நானும், சாந்தியும் நடமாடிய தெருக்களில் நடமாடியவர். அவர் இப்போது உயிருடனிருக்கிறாரோ என்னவோ? அவர் பேசிய திருவாசக விரிவுரையும், கந்தபுராணமும் இன்னமும் நெல்லையப்பர் கோவில் பிரகாரங்களில் செருமிப்போயிருக்குமா?

நான் நெல்லையப்பர் கோவிலை, சம்பந்த மூர்த்தி கோவில் தெருவை, குறுக்குத் துறை ஆற்றை, ராயல் டாக்கீஸில் பார்த்த பிரேமபாசத்தை, கல்லூர் பிள்ளை கடை இட்லி – சாம்பாரை, கண்ணப்பர் டாக்டர் வீட்டு மச்சில் சினிமா படம் போட்டு விளையாடிய விளையாட்டை, தொண்டர் சன்னதியில் வேலை பார்த்த பேச்சி அண்ணனை, முக்காண்டி மாமாவை எல்லாம் விட்டுவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். மாம்பலம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் என்று திரிகிறேன். என்னுடன் கோவிந்தன், கமலக்கண்ணன், ஜெகதீச ஐயர், பார்த்து என்ற பார்த்தசாரதி என்று வேலை பார்க்கிறார்கள். ஏதேதோ ஹோட்டல்களில் சாப்பிடுகிறேன். திருநெல்வேலித் தடியங்காயை வெள்ளைப் பூசணி என்றும், சீனி அவரைக்காயை கொத்தவரங்காய் என்றும், சீனியை சர்க்கரை என்றும் சொல்லப் பழகிவிட்டேன். வேட்டி, சட்டையை விட்டு பேண்ட், சர்ட்டுக்கு மாறிவிட்டேன். ஆல்பின் டோப்ளரின் பியூச்சர் ஷாக் புத்தகம் நினைவுக்கு வருகிறது. திருநெல்வேலியை மாதிரித்தான் வீடுகளும், கடைகளும், தெருக்களும் இருக்கின்றன. சென்னைக்கு வந்த புதிதில் திருநெல்வேலி ஞாபகம் இருந்துகொண்டே இருந்தது. ஊர் என்பது என்ன? வீடுகளும், தெருக்களுமா? அல்லது மனிதர்களுமா?

(தொடரும்)

Series Navigation<< வாக்குமூலம் – அத்தியாயம் 1வாக்குமூலம் – அத்தியாயம் 3 >>

One Reply to “வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்”

 1. கம்பரும், வால்மீகியும், வியாசரும் இன்றளவும் போற்றப் படுகிறார்கள் என்றால் ஒரு முக்கியக் காரணம், தங்கள் படைப்பில் , நிலத்தை ஊர்களை தெருக்களை சிறப்பாக எழுத்தால் வரைந்து இருக்கிறார்கள்.
  வாசகர்கள் கண்முன்னே அயோத்தி, மிதிலை, நாகபூர், இலங்கை, ராமேஸ்வவரம், குரங்கணி, பாடலிபுத்திரம் , மதுரா நகர்களை, தெருக்களை கொண்டு வந்து விடுகிறார்கள் வரிகள், சொற்கள் தொடுத்தல் மூலம்.
  ———–
  அதுபோலவே, நமக்கு வண்ண நிலவனின் சொந்தக் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள் பிடிக்கிறதோ இல்லையோ ,
  ஊர்களை தெருக்களை சொற்களால் தொடுப்பதில் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் முன்னோடியாக, அப்டேட்டடாக இருக்கிறார் திரு வண்ண நிலவன்.
  ——–
  திருநெல்வேலி சுவாமி சன்னதி தெரு என்று சொற்களால் அவர் பூச்சரம் தொடுக்கையில் வாசிக்கும் நமக்கு
  ஐயப்பன் பஜனை மண்டலி, திண்டுக்கல் ராமய்யர் பூட்டு வீட்டுக் கடை, மேலப்பாளையம் அசீம் பாயின் சென்ட்ரல் மெடிக்கல்ஸ் , உடன் பிறவா சகோதரர்கள் ரமேஷ் சுரேஷ் விமலின் ஷா ஷோலச்சந்த் ஜெயின் மொத்த வணிகக் கடை, உடன் பிறவா சகோதரிகள் ரேகா, குஷ்பு, மஞ்சு, ஃபாப்பியா (குஞ்சு ரமணி க்கும் உடன் பிறவா சகோதரிகள் தாம் ) அவர்களின் SS பராக் கடை பிரிட்டானியா படம் வரைந்த டெலிவரி வேன்கள், ds டெய்லர்ஸ், எஸ்கே டெய்லர்ஸ், பானுமதி டாகடர் கிளினிக் கண் முன்னே அயோத்தி, மிதிலை, மதுரா போல விரிந்து விடுகிறது.
  —-
  படையப்பா போல வயசானாலும் இன்னமும் சொற்களால் பூச்சரம் தொடுக்கும் ஸ்டைல் வண்ண நிலவனிடம் குறையவே இல்லை –
  ——
  ஊர்களை, தெருக்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் சக படைப்பாளிகள் ஷோபா சக்தி, சோ தர்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.