மொழிபெயர்ப்புகளின் கூட்டு நடனம்

ஏப்ரல் 24, 2002 அன்று பிரசுரமான 269 ஆம் இதழில், சில மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரித்தோம். நான்கு கவிதைகளை இங்கிலிஷிலிருந்து நான் தமிழாக்கம் செய்திருந்தேன். [ சுட்டி கீழே]

அவற்றை வாசித்த நண்பர் ஒருவர் மூளையைப் பிசைவதாகக் குறிப்பெழுதினார். அவை சோதனையாக இருப்பதாகச் சொல்கிறார் என்று நான் புரிந்து கொண்டேன்.

மூலத்தைப் பலமுறை படித்து விட்டு, அவை புத்தியைக் குடைவதாக உணர்ந்த பின்னரே அவற்றைத் தமிழில் கொணர முடியுமா என்று ஒரு சோதனை முயற்சியாகச் செய்து பார்த்திருந்தேன். அவை வாசகருக்குச் சோதனையாகும் என்று எனக்குத் தோன்றி இருக்கவில்லை.

அவற்றை வாசித்த நம்பி கிருஷ்ணன், அவற்றில் முதலானதாக இருந்த பெத் பாக்மானின் சிறு கவிதையைத் தானும் எடுத்து மொழி பெயர்த்து அனுப்பினார்.

அந்தக் கவிதையை எப்படி சரளமான தமிழில் அர்த்தம் இழக்காமல், மேலும் மெருகுள்ளதாக ஆக்கி இருக்க முடியும் என்று மென்மையாகச் சுட்டுகிறார் என்று நான் எடுத்துக் கொண்டேன்.

பிறகு அது குறித்த எங்கள் உரையாடலில் அக்கவிதையின் பூடகமான வரிகளைப் பற்றிய ஒரு சில சந்தேகங்களைப் பேசிக் கொண்டோம். நம்பி கிருஷ்ணனின் விளக்கங்கள் மிகவும் உதவின.

இதர மூன்று கவிதைகளையும் இதே போல மொழி பெயர்த்துக் கொடுத்தால் அடுத்த இதழிலேயே அவற்றைப் பிரசுரித்து விட்டு, இரண்டு மொழி பெயர்ப்புகளும் எப்படி மாறுகின்றன என்று ஒரு குறிப்பையும் எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். அவர் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போலத் துடிப்பாக இயங்கும் மனிதர். (நான் எதிர்மாறு, அதுவும் இயங்கினால்தான் உண்டு. அனேக நேரம் அதுவும் இராது.)

அவருடைய நான்கு மொழிபெயர்ப்பு வடிவங்களும் இங்கே கீழே பிரசுரிக்கப்படுகின்றன.

நான் உடனடியாக அவற்றைப் படித்துச் சிலாகித்தாலும், அவற்றைக் குறித்தும், என் மொழிபெயர்ப்பை ஒப்பிட்டும் எழுத வேண்டிய குறிப்பை எழுதி இருக்கவில்லை என்பதால் அடுத்த இதழிலேயே நம்பிகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பைப் பிரசுரிக்க இயலவில்லை.

மூன்று வாரங்கள் ஆன பிறகும் எனக்கு இந்த மொழிபெயர்ப்புகளிடையே உள்ள வேறுபாடுகளைப் பற்றிய குறிப்பை எழுத இயலவில்லை. வரிவரியாக அல்லது முக்கியமான வரிகளாக எடுத்து ஒப்பிட்டு மாறுபாடுகள் பற்றியும் அவை என்ன காரணங்களால் மாறுபடுகின்றன என்பது பற்றியும் விளக்க முதலில் எண்ணி இருந்தேன் என்றாலும், இப்போது அந்த விளக்கங்கள் தேவையா என்றே எனக்கு ஐயம் வந்திருந்தது.

முக்கியமாக ஒரு விஷயத்தை மட்டும் சுட்டுகிறேன்.

என் மொழிபெயர்ப்புகளில் நான் மூலத்தின் பொருளையும் அதன் வடிவத்தையும் எத்தனைக்கு மாற்றமில்லாமல் கொடுக்க முடியும் என்று பார்க்கிற அணுகல் கொண்டவன். இந்த அணுகல்தான் உயர்ந்தது என்றில்லை. அது எனக்குப் பிடித்த முறை என்பதைத் தாண்டி அதை முன்னிறுத்தத் தனி வாதம் ஏதும் இல்லை.

நம்பி, தமிழ் வாசகருக்குக் கவிதை இடறலின்றி சரளமாக வாசிக்கக் கிட்ட வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிலைப்படுத்தி மொழி பெயர்ப்பவர். அதனால் மூலத்தின் பொருளை அவருடைய மொழிபெயர்ப்பு இழக்குமா என்றால், இல்லை என்பதுதான் பதில்.

அர்த்தத் தளர்ச்சியோ, இழப்போ இல்லாமல்தான் அவரும் மொழி பெயர்க்கிறார். ஆனால் சொல் பிரயோகத்தில் அவருக்கு மேலும் லாகவமான சொற்கள் தட்டுப்படுகின்றன. கூடவே ஒரு சந்த நேர்த்தியும் அவருக்குக் கை வருகிறது.

அவருடைய மொழிபெயர்ப்பு நேர்த்தியை நீங்களும் படித்து மெச்சுவீர்கள் என்ற எண்ணத்தில் இங்கு அவற்றைப் பிரசுரிக்கிறோம்.

சிறிது நேரம் எடுத்துக் கொண்டு இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளையும், என் மொழி பெயர்ப்பையும் படித்துப் பார்த்து ஒப்பிட்டு நோக்கி, உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் மின்னஞ்சலாகவோ, அல்லது இந்த மொழிபெயர்ப்பின் கீழேயோ பதிவிடுங்கள்.

என் முந்தைய மொழிபெயர்ப்பை இங்கே காணலாம்

மைத்ரேயன்

மே 19, 2022


நம்பி கிருஷ்ணனும் நானும் பரிமாறிக் கொண்ட கருத்துகளையும் வாசகர்களுக்குத் தர வேண்டும் என்று நம்பி கருத்து தெரிவித்தார். அந்த உரையாடலைக் கிட்டத்தட்ட அப்படியே இங்கு கொடுத்திருக்கிறேன். இந்த உரையாடல் வாட்ஸப் மூலம் நடந்தது.

ஏப்ரல் 24, 2022

(அன்று முன்னால் பிரசுரமான கவிதைகளைப் படித்த நம்பி கிருஷ்ணன், அவற்றில் ஒரு கவிதையைத் தானும் மொழி பெயர்த்து, அந்த மாற்று வடிவை அனுப்பினார். அந்த வடிவு இது.)

தோல்திசுக்களை ஒளியும்
இலைநாள் ஆழத்தை நீரும்
தொடுவதைப் போல்
எவரையுமே தொட்டிராத வருடத்தில்
புதிதாய் மணந்த இந்த உட்புறத் தனிமையில்
நீள்சதுரக் குளியல் தொட்டிக் குழாயை
என் கால்பெருவிரல் திறக்கும்.
வேறெவரையும் தொட்டிராத அவ்வருடத்தில்
ஒருவரையொருவர் மட்டுமே
தொட்டுக் கொண்டோம்
இரவிரவாக
பருவம் பருவமாக,
இன்னொரு வசந்தத்திலும். 

நான் பதிலெழுதினேன். ‘நீங்கள் மற்றவற்றையும் மொழிபெயருங்கள். அவற்றை அடுத்த இதழில் மாற்று வாசிப்பு என்று பிரசுரிக்கிறோம்.”

நம்பி: ஹா, எக்கச்சக்க வேலை. அவை அத்தனை மாறுபட்டு இராது.

— இந்தக் கவிதையில் ஒரு அர்த்தத் தெளிவின்மை இருக்கிறது. ஏதோ நடுக்கதையில் துவங்குவது போல (In media res) அல்லது முதல் வரி தலைப்பின் தொடர்ச்சி போலத் தெரிகிறது.

– அல்லது துவக்க வரிகள் தொட்டியில் நடந்ததைச் சுட்டுகின்றனவா?

– அதனால்தான் தலைப்பையே நான் நான்காவது வரியாக இங்கு சேர்த்தேன்.

நான்: அது நிறைய வேலை வாங்கும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு கவிதையின் பொருளையும் நான் சரியாகப் புரிந்து கொள்ளுவதற்குச் சில தினங்கள் ஆயிற்று. அவை அனேகமாக உரை நடை போலவும் தெரிகின்றன (ஆனால் அது நிஜமல்ல). ஒவ்வொரு கவிதையிலும் கருத்துகளின் ஆழ்ந்த விரிவு இருக்கிறது, அது வாக்கியங்களை வார்த்தெடுக்கிறது. நான் ‘கவிதையாக்கத்தை’ இந்த மொழிபெயர்ப்புக்குக் கொணர முயலவில்லை (முயன்றாலும் என்னால் அதைச் சாதிக்க முடியுமா என்ற கேள்விக்கு நாம் செல்ல வேண்டாம்.) ஏனெனில் இவற்றின் கூர்மையான உரைநடையே கற்பனைக்குச் சவாலாக இருந்தது.

– பெத் பாக்மான் ஐந்தாவது வரியைச் சிறு மாறுதலோடு பயன்படுத்துகிறார் – ‘It was the year we touched no one’

நம்பி: ஆமாம், ஆனால் ஒளியோ அல்லது தண்ணீரோ எப்படித் தொடுகின்றனவோ அப்படி இல்லை இந்தத் தொடுகை.

நான்: நீங்கள் இதை இன்னும் சுலபமாக ஓடுவதாக, கவிதை போல ஆக்குகிறீர்கள் (இலக்கண நோக்கில் இல்லை, ஆனால் ஒரு poem என்ற விதத்தில்). அதனால் உங்கள் மொழியாக்கம் படிக்கச் சுலபமாக இருக்கிறது, மனதிலும் நிற்கிறது.

நம்பி: அதுதான் எனக்கு முக்கியம், கறாராகச் சரியாக மொழி பெயர்ப்பதை விட.

….

– மூலக் கவிதையைப் படிக்கும்போதுதான் அதன் முதல் வரி எப்படி தலைப்பெழுத்து இல்லாமல் (Capital letter) துவங்கியது என்பதைப் பற்றி யோசிக்கச் செய்தது.

– அந்தக் குளியல் தொட்டி வாக்கியத்துக்குப் பிறகு ஒரு கால்புள்ளி இல்லையென்பதும் யோசிக்கச் செய்தது.

நான்: கால்பெருவிரல் நீர்க்குழாயைத் தொடுவது (அதைத் திருப்புவது) எப்படி ஒளி தோலுக்குள் திசுக்களைத் தொடுவது போலவோ, அல்லது இலையின் நரம்பின் ஆழத்தில் நீர் தொடுவதுபோலவோ இருக்கும் என்று எனக்குப் பிடிபடவில்லை.

நம்பி: அதனால்தான் சொல்கிறேன், அந்த முதல் வரி தலைப்பைத்தான் சுட்டுகிறது. அந்தத் தெளிவு மயக்கத்தை விட்டு விடாமல் கொடுக்க வேண்டும்.

நான்: பெருவிரல் பொதுவாகக் குழாயைத் தொடுவது அபூர்வம்தான். அனேகம் பேர் (இந்நாட்டில்) தூவாலைக் குளியல்தான் செய்கிறார்கள். (shower) ஆனால் இந்த நபருக்கு இப்போது நீரில் முங்கி ஊறுவதற்கு நேரம் இருக்கிறது. அதனால் நீரில் சாய்ந்து படுத்திருக்கும் நபர் எட்டி, காலால் குழாயைத் திருப்புகிறார். புதிதாய் தொட்டியின் உட்புறத்தை மணந்து அந்தப் பெருவிரல் குழாயைத் திருப்புகிறது. 🙂

கவிதை ‘நாயகி’ இந்த வருடம் யாரையும் தொடாததால் அவள் தனியளாய் தொட்டியில் ஊறுகிறாள். ஆனால் நீர் இலை நரம்புகளில் கசிந்தோடுவதோ, ஒளி திசுக்களைத் தொடுவதோ எப்படி பெருவிரல் குழாயைத் திறப்பதை ஒத்திருக்கும்? அது இன்னும் புதிராகத்தான் தெரிகிறது.

நம்பி: இந்த வாசிப்புகள் எல்லாமே மொழிபெயர்ப்பில் சாத்தியமானவையாகக் கொடுக்கப்பட வேண்டும்.

அல்லது இங்கு ‘நாங்கள்’ (We) என்பது அவளையும், குழாயையும் சொல்கிறதா? 🙂

இப்படி நானும் பாஸ்கரும், பிரசுரிக்குமுன் வாட்ஸப்பில் பேசிக்கொண்டதை மொழிபெயர்ப்புக்குக் குறிப்புகளாகச் சேர்ப்பதை முன்பு செய்து வந்தோம். அது மொழிபெயர்ப்பை மேலும் ருசிகரமாக ஆக்குகிறது.

நான்: (நாங்கள் என்பது பற்றி நம்பி சொன்னதற்குப் பதிலாக) நானும் அப்படித்தான் முதல் வாசிப்பில் புரிந்து கொண்டேன். என் மொழி பெயர்ப்பு அதைத்தான் காட்டுகிறது.

நம்பி: என் மொழிபெயர்ப்பிலும் இந்த அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான்: ‘நீள்சதுரத் தொட்டியில் என் கால்பெருவிரல் இந்த உள்புறத்தைப் புதிதாய் மணந்து, குழாயைத் திறக்கும்.’ அவளுடைய உடல் தொட்டியைப் புதிதாய் மணந்திருப்பதாகத்தான் நானும் சொல்லியிருக்கிறேன், ஆனால் அந்தப் பெருவிரலும், குழாயும் பற்றி இல்லை.

– ஆனால் மூலக்கவிதையில் சொற்கள் பொருத்தப்பட்டிருக்கும் விதத்தில், கால்பெருவிரல் தொட்டியின் உள்புறத்தைப் புதிதாய் மணந்திருப்பது போலத் தெரிகிறது. 🙂

நம்பி: ஆனால் வாக்கிய அமைப்பு தெளிவாக இல்லை.

நான்: நீங்கள் அந்த அர்த்தங்களைத் தெளிவாக்குகிறீர்கள்

– பெத்பாக்மானின் வரிகளில் அர்த்தத் தெளிவின்மை இருக்கிறது, புதிதாய் மணந்தது கால்பெருவிரலா அல்லது அவளேயா. இந்தத் தெளிவின்மையை நான் என் மொழிபெயர்ப்பில் தரவில்லை.

நம்பி: ஆமாம்.

நான்: வாட்ஸப் வருமுன் கூகிள் குரூப்ஸில் நாங்கள் இப்படி உரையாடுவோம், சில சமயம் அந்த உரையாடல்களை ஒரு கட்டுரையாகச் சொல்வனத்தில் பிரசுரித்திருக்கிறோம். ஸ்வீடியக் கவிஞர் ட்ரான்ஸ்ட்ராமரின் கவிதைகளை மொழி பெயர்ப்பது பற்றிய உரையாடல்களைப் பிரசுரித்திருக்கிறோம்.

நம்பி: அப்படித்தான் செய்ய வேண்டும்.

– அல்லது இது வேறெந்தப் பத்திரிகையையும் போலத்தான் தெரிய வரும்.

– பதாகையில் நாங்கள் இதை முயன்றோம். நான்கைந்து பேர் ஒரே கவிதையை வைத்துக் கொண்டு மாற்று வடிவுகளை மொழி பெயர்த்துக் கொடுத்துப் பார்த்தோம்.

நான்: எனக்குக் கவிதைகளை வைத்து இப்படி மாற்றி மாற்றிச் செய்வது பிடிக்கும். இதற்கு நிறைய உழைப்பு வேண்டும். நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால் இப்படி உழைக்கத் தயாராக இருப்பவர்கள் அதிகம் கிடைப்பதில்லை.

நம்பி: (தான் சொல்லி வந்ததைத் தொடர்கிறார்) அல்லது சங்கக் கவிதைகளை இங்கிலிஷ் மொழிபெயர்ப்புகளிலிருந்து தமிழுக்கு மாற்றிக் கொடுத்து, அவற்றை ‘ஃபாரின் ரிடர்ண்ட்’ என்று பிரசுரித்தோம்.

நான்: ‘நாங்கள்’ ஒரு வருடத்தில் யாரையும் தொடவில்லை என்பது- பெருவிரலும், தொட்டியின் உள்புறமும்/ குழாயும், என்பதையும், அந்தக் கவிதையில் வரும் நபரும், தொட்டியும் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம்.

நம்பி: இந்தக் கட்டாயப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலை ருசிப்பது போலவும் ஒரு அர்த்த ஓட்டம் இந்தக் கவிதையில் கிட்டுகிறது. சுயமைதுனத்தில் மகிழ்வது போன்ற ருசிப்பு இது.

நான்: (ஃபாரின் ரிடர்ண்ட் என்ற குறிப்பைச் சுட்டி) மக்ஸ்வீனிஸ் பத்திரிகை ஒரு முழு இதழை இந்த வகையில் பிரசுரித்தது. மூல மொழிக் கவிதை, இங்கிலிஷ் மொழிபெயர்ப்பு, இங்கிலிஷ் மொழி பெயர்ப்பை மறுபடி மூல மொழிக்கு மாற்றுவது ஆகிய மூன்று வடிவுகளும் பிரசுரமாயின. ஆனால் இரு மொழிகளையும் தெரிந்தவர்கள்தான் அந்த மாற்றங்களை ரசித்துப் படித்துப் புரிந்து கொண்டிருக்க முடியும்.

நம்பி: பாருங்க, மக்ஸ்வீனியைப் பற்றிக் கேட்டிராமலோ, அதைப் படிக்காமலோ கூட, அதிகம் தெரியவராத ஒரு தமிழ்ப் பத்திரிகையும் இதையே செய்திருக்கிறது! 🙂

-நம்மிடம் தொடர்ந்து உழைக்கும் முனைப்பு இல்லை, எல்லாமே அவ்வப்போது எதையோ செய்து கிறுகிறுப்பு பெறுவதில் போகிறது.

நான்: ஆனால் கடைசி மூன்று வார்த்தைகளைப் பாருங்க. ‘and then another spring’, அந்த ‘and’ என்பது தொடர்கிற தனிமைப்படுத்தலைச் சுட்டலாம். பெருவிரல்/ குழாய்/நாங்கள்/ தொட்டியின் உள்புறம் ஆகியவற்றின் திருமணம் தொடர்கிறதை இது சுட்டலாம். அல்லது இதுவே வசந்தம் தொடர்ந்து வந்தது என்று குறிக்கலாம், திருமணம்/ தனிமை ஆகிய நிலைகளிலிருந்து இவரை விடுவிப்பதைக் காட்டலாம்.

நம்பி: பாருங்க, உங்களுக்கு இப்பவே இந்த மொழி பெயர்ப்பு பற்றி ஒரு கட்டுரை கிட்டி விட்டது.

– (நான் பெருவிரல் குழாயைத் தொடுவது எப்படி ஒளி திசுக்களைத் தொடுவதை ஒத்திருக்கிறது என்று புரியவில்லை என்று சொன்னதற்குப் பதிலாக) ஒளியோ, நீரோ தாம் செய்வன நெருக்கமான பாலுறவு கொள்வதை ஒத்த செயல் என்பதை அறிந்திருக்கவில்லை என்று பொருள்.

நான்: (முந்தைய வடிவை அதிகம் மாற்றாமல், இவ்வளவுதான் என்னால் மாற்ற முடிந்தது: )

இலை நரம்பாழத்தில் நீரின் செயலோ
அதன் தோலுள் திசுக்களில் ஒளியின் செயலோ போல்,
தனியாய் நீள்சதுரக் குளியல் தொட்டியின்
உட்புறத்தைப் புதிதாய் மணந்த என்,
கால் பெருவிரல், திறக்கும் குழாயை.
நாங்கள் யாரையும் தொட்டிராத
வருடமது, ஆனால் ஒவ்வோர் இரவும்
ஒருவரையொருவர் தொட்டோம்,
பருவம் பருவமாய் கடந்து, பிறகு
இன்னொரு வசந்தத்திலும்.

‘என்’ என்ற சொல்லுக்குப் பின் ஒரு கால் புள்ளி, தொட்டியின் உள்புறத்தை/ தனிமையில் மணந்தது அந்த நபர் என்று குறைக்கிறது. இருக்கட்டும் என்றுதான் கால்புள்ளியை அங்கே இட்டேன்.

ஆனால் மூலத்தில் நெடுகப் பரவி வரும், கசிந்து வரும் பொருள் மசமசப்பு இவற்றில் கிட்டவில்லை.

வைரஸ் ஆண்டின் தாக்கத்தைத் தனி நபரளவில் பெருத்த அரசியல்/ தத்துவச் சிக்கல்களை எல்லாம் துணைக்கழைக்காமல், தனி நபர் அளவிலேயே சமூகத்தை விட்டுப் பிரிந்த ஒரு நபர் என்ன ஆழத்தில் அந்தத் தனிமையை உணரக் கூடும் என்பதை இந்தக் கவிதை சுலபமாகச் சுட்டி விடுகிறது. நீங்கள் சொல்வதைப் போல இதை ஒரு சிறு கட்டுரையாகவாவது எழுதலாம்.

மற்ற மூன்று கவிதைகளையும் நீங்கள் எடுத்து மொழிபெயர்த்தால், இந்த மறு வாசிப்புகளை அடுத்த இதழில் நாங்கள் பிரசுரிக்கலாம். நான் நம் உரையாடலை விளக்கி ஒரு கட்டுரை எழுதுகிறேன். பொருள் மசமசப்பு (ambiguity) எப்படி ஒரு கவிதையின் எழிலை, அதன் கற்பனைத் திறன் பற்றிய ஒரு இலக்கிய உரையாடலைத் தூண்டுகிறது என்று சுட்ட முடியும்.

26/4/22

நம்பி: முயல்கிறேன்.

(27/4/22 அன்று நம்பி எல்லாக் கவிதைகளையும் மொழி பெயர்த்து அனுப்பி விடுகிறார். ஆனால் அதை ஒட்டிய கட்டுரையை எழுதி முடிக்க எனக்கு இயலாததால் உடனடியாக அடுத்த இதழில் அவற்றைப் பிரசுரிக்காமல் இந்த இதழில் (271) பிரசுரிக்கிறோம். இன்னும் பொருள் மசமசப்பு பற்றிய கட்டுரையை நான் எழுதவில்லை. அடுத்த இதழில் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம். )

மைத்ரேயன்/ மே 22, 2022.


நம்பி கிருஷ்ணனின் மாற்று மொழி பெயர்ப்பில் நான்கு கவிதைகள்

எவரையுமே தொட்டிராத வருடத்தில்

தோல்திசுக்களை ஒளியும்
இலைநாள ஆழத்தை நீரும்
தொடுவதைப் போல்
புதிதாய் மணந்த இவ்வுட்புறத் தனிமையில்
நீள்சதுரக் குளியல்தொட்டிக் குழாயை
என் கால்பெருவிரல் திறக்கும்.
வேறெவரையும் தொட்டிராத அவ்வருடத்தில்
ஒருவரையொருவர் மட்டுமே தொட்டுக்கொண்டோம்
இரவிரவாக
பருவம்பருவமாக,
மேலுமொரு வசந்தத்திலும்.

பெத் பாக்மான் (Beth Bachmann :: The Year I Touched No One)


காடுகளுக்கான ஒர் இரங்கற்பா, களங்கமின்மையும் கூட

இவ்வூரை நாற்புறம் சூழ்ந்திருக்கும்
யூகலிப்டஸ், செகோயா, பைன்.
இலைகள் தழைகூளத்தின் மீது சன்னமான மிதியடிச் சத்தம்
நஞ்சுக்கருவாலி. மலையெருக்கு. ஆலிஸ்ஸம். காட்டுத்தீயின்
வாடை, புகைமூட்டில் சுருண்டெழும் இலைகள்.
ஊடுருவும் அன்னிய உயிரினங்களையும் கட்டுப்படுத்தப்பட்ட
எரிப்பையும் வனக்காவலர்கள் பேச ஊர்ஜனமோ
எதிர்ப்புச் சுவரொட்டிகளை உயர்த்துகிறார்கள்.
ஃபாக்ஸ்டெயில். கோல்டன்ராட். ஸேஜ்.
பதிவானதில் இக்கோடையே வெப்பமானதாம்
ஜ்வாலைகள் அடங்காதாம், வறட்சி நீடிக்குமாம்
ஊடகங்கள் வலியுறுத்துகின்றன. எங்கள் குளியல் நேரம்
குறைந்துவிட்டது, புற்களோ மரப்பட்டைகளாகவும் 
பைஞ்சுதையாகவும் மாறிவிட்டன. அம்மா பாஸ்தா சமைத்த நீரை 
வடிகட்டி மூலிகைத் தோட்டத்தில் கொட்டுகிறாள். 
நீந்துசுனையில் புகைமணம் கமழும் 
பெண்ணை சந்தித்தேன். கடுகு விதை
சோளப் பூ. காரப்பூண்டு. கூளத்தில் 
குழந்தையின் பெயர்சூட்டலொன்றை உற்றிருந்தோம்,
வெள்ளையுடுத்திய குடும்பத்தார், கரை நெடுகிலும்
நீலப்பச்சைப் பாசி. காற்றில் உலர்ந்தோம்
உள்ளூர்ப் பூங்காவொன்றில். வெற்று முதுகளில் 
கம்பம்புல்லின் ஈட்டிமுனைகள்.  
ஒருவர் வாயில் மற்றொருவர் நீர் தேட
சருமத்தில் தீ மூண்டது.
வார்க்கோதுமை. நெருஞ்சி. பாவம். 


டெஸ்பி பௌட்ரிஸ் (Despy Boutris :: Elegy for the Woods, and Innocence)


இறந்த லூபினுடன் சுய சந்தேகம்

கோடைக்குப் பின், இழிபிணங்களை அகற்றுகிறேன்
பூம்பாத்திகளிலிருந்து: கரடான சுடுகாட்டு மல்லி உலர்ந்த சாமந்தி,
மட்கிய லூபின் – இனிய உயிர்ச்சாறை செடிப்பேன்கள்
உறிஞ்சியதால்தான் வண்ணமிழந்து மட்கின என்பதை 
காலம்கடந்தே அறிந்துகொண்டேன். குழந்தையாக என்
முலை மறுத்த மகன் இன்னமும் அனேக உணவை மறுக்கிறான். 
நோஞ்சான்,  மிட்டாய் நிற பூங்கொத்துக்களைப் பார்த்து
கிட்டத்தட்ட பூனயைப் போல் கரையும் இந்த மென்வயிற்றுப்
பூச்சிகளைப் போல் கிஞ்சித்தும் இல்லை அவன். காரில் முதன்முறையாக
அவனை விட்டகன்று செல்கையிலேயே எனக்கு தெரிந்துவிட்டது,
எங்கள் பிணைப்பறுமென, என்  கண்ணீர் வற்றுமென,
ஆனால் அந்நிதர்சனம் ஆசுவாசப்படுத்தவில்லை, பால் மறந்த
முலைகள் வாரம் முழுதும் அழுதன. ஏதும் அதிகமில்லை அங்கே
ஒரு காலத்தில் சட்டைக்குள் துழாவிய பையன்களிடம் கூறுவேன் 
ஏமாற்றத்தை பகிர்ந்துகொள்வோமென நம்பி.
லூபின் செடியை நெறித்து வேரோடு பிடுங்குகிறேன், பசுமைகுன்றா
செடிகள், ஃபெர்னிகளுக்கிடையே, நெடுஞ்சாலைகள் நெடுகிலும்,
ஜூன் மாதம், ஊதா குதூகலத்துடனும் தழைக்கும் கலையுடனும்
அது கட்டற்று வளர்ந்துயர்ந்து ஆச்சரியப்படுத்தியதை
நினைவுகூர்ந்தபடியே. அது உயிருடன் இருந்திருக்க வேண்டும். 


டானியெல் காதெனா ட்யூலென் (Danielle Cadena Deulen :: Self-Doubt with Dead Lupine)


பொருள் நிலைப்பும் ராம்பூவின் ஒரு வரியும்

சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
என்னைத் தேர்ந்தெடுக்கத் தவறிய வாழ்வுகளைப் பற்றி
இரவின் அகண்ட நடனக்கூடம், அதன் படபடக்கும் சரவிளக்கு.
குளிர்ப்பதனபெட்டி மீது காந்தங்களுக்கடியே தொல்படிவமாக
விதியின் சுற்றறிக்கையிலிருந்து கத்தரிக்கப்பட்ட
காலாவதியான சலிகைக் கூப்பான்களின் பகற்கனவு.
ஒருகாலில் வாழமுடியாவிட்டாலும்
அங்கு விடுமுறைக்காவது போகலாம்தானே?
முடிவிலியிளுள்ள முடிவுறுவில் ஏணையின் ஒரு முனையை முடிச்சிட்டு,
மறுமுனையை இச்சையின் மணிக்கட்டில் பிணைத்தேன்.
நான்கு-திரைக்கம்புக் கட்டிலில் அவை சாய்ந்திருக்கையில்.
அக்காதல்
ஒரு டைம்ஷேர். அத்தேர்வோ ஒரு சிந்தனைச் சோதனை.
தான் ஒரு வயலின் என்பதை ஒரு மரக்கட்டை கண்டுபிடித்தால்?
என் இதயத்துடிப்பொலி அதன் எதிரொலியாய்வுத் திறத்தால்
உனக்கு அழைப்பு விடுத்தால்?
யோசித்துப் பார்க்கிறேன் எது சுலபமென்று
குகைச்சுவராக இருப்பதா ஆப்பெழுத்தாக இருப்பதா
மழையாக இருப்பதா அதில் தொப்பலாக நனைவதைச் சுட்டும்
சொல்லாக இருப்பதா. என்னைத் தேர்ந்தெடுக்கத் தவறிய வாழ்வு
வானமாய் வேறொரு நேர மணடலத்தை அபிஷேகிக்கிறது.
மீந்திருக்கும் ஒளியையே
காண்கிறேன் என் கண்களை மூடுகையில்.

லாரா எக்கர் (Lara Egger :: Object Permanence with a Line from Rimbaud)

One Reply to “மொழிபெயர்ப்புகளின் கூட்டு நடனம்”

 1. முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். மூலக் கவிதைகளும், உங்கள் இருவரின் மொழி பெயர்ப்பும் இல்லாவிடில் கவிதைகளைப் புரிந்து கொள்ளத் திணறியிருப்பேன்.
  என்பார்வையில் இரண்டிலும் கவிதை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. எனினும், நான் முதல் கவிதையை இவ்வாறு சொல்லலாம் என நினக்கிறேன்.
  ” தோலின் உள் திசுக்களில் செல்லும் ஒளியைப் போலவோ
  இலை நரம்பாழங்களின் நீரைப் போலவோ
  அந்த நீள் செவ்வகத் தொட்டியில்
  புதிதாய், அதன் உட்புறத்தை மணந்தது போல்
  என் கால் பெருவிரல் அதன் குமிழைத் திருகியது.
  யாரையும் நாங்கள் தொட்டிராத வருடம்.
  ஆனால், ஒவ்வோர் இரவிலும்,ஒவ்வோர் பருவத்திலும்,
  மற்றொரு வசந்தத்திலும்”
  இரண்டாவது கவிதையில் நம்பி பயன்படுதியுள்ள ‘அன்னிய உயிரினங்கள்’ பொருந்துகிறது.
  மூன்றாவதில் அவர் எழுதியுள்ள ‘கண்ணீர் வற்றுமென’ மூலத்தில் இல்லையெனத் தோன்றுகிறது. முலை வற்றிப் போனதைத்தான் ஆசிரியர் சொல்கிறார். அதை மைத்ரேயன் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.
  நான்காவது கவிதையில் ‘இழி பிணங்கள்’ அழுத்தத்தைச், சூழலின் கடுமையைச் சொல்கிறது.
  கவிதைகள் குறித்த உரையாடல்கள் சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.