மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு

1999 அம்பலப்புழை

பிஷாரடி வைத்தியர் லண்டனில் இருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கு அப்புறம் அம்பலப்புழை திரும்பி வந்தார்.

அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது.

“போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.

காத்மாண்டு – தில்லி விமானத்தை தீவிரவாதிகள் கடத்திப் போனதற்கு இரண்டு நாள் கழித்து பிஷாரடி வைத்தியர் லண்டனில் இருந்து கொச்சிக்குப் பறக்கிறார். கொச்சியில் இருந்து டாக்ஸி வைத்துக்கொண்டு அம்பலப்புழை வந்து சேருவதாகத் திட்டம் அவருடையது.

பிஷாரடி வைத்தியர் அம்பலப்புழையில் மொத்தம் எட்டு தலைமுறையாக வசிக்கிற குடும்பத்தில் வந்தவர் என்று சொல்லிப் பெருமைப்படத் தவறியதில்லை. அவருக்கு லண்டன் பயணம் அங்கே பல்கலைக்கழகப் பேராசிரியராக ஒரு வருடம் போனது.

அது நீடித்து, திரும்பியே வராமல் முப்பத்தைந்து வருடத்துக்கு மேல் அங்கே இருக்க வேண்டிப் போனது. அவர் அம்பலப்புழையிலிருந்து லண்டன் புறப்பட்டபோது அம்பலப்புழையில் அதற்கு ஒரு வருடம் முன்னால் வந்திருந்த திலீப், ஓட்டல் திறந்திருக்கும் தெரிசா இப்படி நல்ல நட்பு ஏற்பட்டது.

தெரிசா பிரிட்டன் பிரஜையாக, மேற்கு யோர்க்‌ஷயர் பகுதியில் பிறந்து வளர்ந்தாலும் அம்பலப்புழையில் குடும்பத்து வேர்கள் உண்டென்று தேடி வந்தவள். அவளுடைய குடும்ப மரம் வரைபடத்தை ஆராய்ந்த பிஷாரடி வைத்தியர் அவளும் ஏழு தலைமுற அம்பலப்புழை சுவதேசி என்று கண்டறிந்தார்.

தெரிசா குடும்பத்தில் ஒரு வயதானவர் காற்றில் மிதந்து கோவில் கொடிமரத்தைச் சுற்றி அசுத்தம் செய்தவர் என்றும் அவரைப் பத்திரமாக கீழே இறக்கியது இந்த நாராயண பிஷாரடிக்கு ஆறு தலைமுறை முந்திய இன்னொரு பிஷாரடி தான் என்றும் விளக்க, அந்த நட்பு இறுக்கமானது.

குடும்ப மர வரைபடம் மூலம் சாரதா தெரிசா குடும்பமும் திலீப் ராவ்ஜி குடும்பமும் உறவினர்களாக ஐந்து தலைமுறை முன் இருந்ததையும் பிஷாரடி சுட்டிக்காட்டி, விளக்கிச் சொல்லி அவர்களை வியப்படைய வைத்தார்.

தெரிசா சாரதா ஆனதும், அம்பலப்புழையிலேயே நிரந்தரமாக வசிக்க இந்தியக் குடியுரிமை வாங்கியதும் அவருக்கு செய்தியாக, அவருடைய இன்னொரு அம்பலப்புழைக்காரர் – லண்டன் வாசி நண்பர் ப்ரஃபசர் எம்ப்ராந்திரி மூலம் தெரிய வந்தது. அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ண அம்பலத்தில் ஸ்ரீகார்யம் நோக்கும் மேல்சாந்தி குடும்பத்தில் பட்டவர் அவர். கென்ஸிங்டன் பிரதேசத்தில் பிசாசுகளோடு வாழ்கிறவர். நிஜப் பிசாசுகள்.

அவரைச் சந்திக்க வேணும் என்று பிஷாரடியை வழியனுப்ப வந்த முழுக்கூட்டமுமே முழங்க, நான் அம்பலப்புழை போய்த் திரும்பி வந்ததும் நிச்சயம் கூட்டிப் போகிறேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைக்கு ஆசை வார்த்தை சொல்லும் அம்மா மாதிரி சொன்னார் பிஷாரடி.

”கல்பா, எடின்பரோ வாழ்க்கை எப்படி இருக்கு?”

பிஷாரடி கல்பாவைக் கேட்டார்.

“லண்டன் மாதிரி பரபரப்பும் நிதானமும் சேர்ந்ததாக இல்லே. நிதானம், நிதானம், மழை, நிதானம். இப்படித்தான் போகுது. வார நாளுக்கும் சனி ஞாயிறுக்கும் பெரிசா வித்தியாசம் தெரியலே” என்றாள் கல்பா.

”சதா மழை பெய்யறது, மழையிலே கருப்பு கருப்பா பெரிய விக்டோரியா காலத்து கட்டிடம் எல்லாம் நனைஞ்சு அழுகிற மாதிரி சோகத்திலே இருக்கா?”

மருது கேட்டான். ”உனக்கு எப்படித் தெரியும்” என்றாள் வியப்போடு கல்பா. ”புது சிநேகிதி சொன்னாள்” என்று சட்டென்று மருது சொல்ல, ”அதெல்லாம் வேறேயா? ஒழிஞ்சு போ” என்று பொய்க் கோபம் காட்டினாள் கல்பா.

“இளமையும் ஊடலும் எப்போதும் பார்க்க அழகு” என்றபடி ”ஹாமர்ஸ்மித் போயாச்சு, அடுத்து ஹீத்ரோவ் தான்” என பாதாள ரயில் அறிவிப்பை திரும்ப ஒப்பித்தார் பிஷாரடி,

பெருங்கூட்டமாக ஹீத்ரோவின் புறப்பாடுப் பகுதிக்குப் போனார்கள். வெளியில் இருந்த கடைகளில் தகடு தகடாக கறுப்பு சாக்லெட்டும், மில்க் சாக்லெட்டும் வாங்கி எல்லாம் அப்பாவுக்கு, இந்த டார்க் சாக்லெட் தம்பிக்கு என்று வாங்கிய கல்பா, பழம் கலந்த இன்னொரு பார் சாக்லெட் எடுத்து வைத்தாள்.

“இது யாருக்கு, அடுத்த வீட்டுலே பாட்டிக்கா?” மருது கேட்டான்.

“எதுக்கு பக்கத்து வீட்டுப் பாட்டி கிட்டே போகணும். எனக்கே எனக்குன்னு ஒரு தாத்தா வந்தாச்சு”.

அவள் சொல்ல மருது மட்டுமில்லை, பிஷாரடியும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.

“ப்ரஃபசர் சார் இது உங்களுக்கும் சஸ்பென்ஸ். போய்ட்டு பாத்துட்டு கூப்பிடுங்க” என்றாள் சிரித்தபடி கல்பா.

இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு செக் இன் பண்ண. ஒரு காப்பி சாப்பிடலாமா என்று பொதுவாக விசாரித்தான் மருது.

“சார், சீக்கிரம் திரும்பி வந்துடுங்க” என்று அவன் பிஷாரடி சாரிடம் சொல்லும்போது அவன் மனதில் அவர் திரும்ப வரப் போவதில்லை என்று தோன்றியது. கல்பா, முசாபர், டாக்டரேட் ஆய்வு நடத்தும் ஆப்பிரிக்க மாணவர்கள் இப்படி பிஷாரடியோடு நெருங்கப் பழகிய எல்லோருக்கும் அந்த நினைப்பு இருந்திருக்கும். அதற்கேற்ற மாதிரி ஆளுக்கொரு சாக்லெட் பார் வாங்கிக் கொடுத்திருந்தார் அவர்.

‘என்றும் உன்னோடுதான். என்னை மறப்பாயோ’ என்று மேலே எழுதிய அழகாக வடிவமைத்த சில்க் அட்டையோடு வந்த இனிப்பு அது.

கல்பாவுக்கு வாசு என்ற தன் தம்பியின் வருங்கால இணையனுக்கு சாக்லெட் வாங்கி அனுப்பலாமா என்று தோன்றியது. அவனை முன்னே பின்னே தெரியாமல் அன்பளிப்பு அனுப்புவது நல்ல பழக்கமா என்று புரியாமல் குழம்பி இப்போதைக்கு வேண்டாம் என்று தவிர்த்து விட்டாள் கல்பா.

ப்ரபசர் பிஷாரடியிடம் புத்தகம், சாக்லெட் என்று அப்பாவுக்கும் தம்பிக்கும் அனுப்பி வைத்திருப்பது இருபது கிலோவாவது இருக்கும் என்று தோன்றியது.

பிஷாரடி அவருடைய உற்றார், உறவினர், நட்புக்கு ஏதும் வாங்கிப் போகிறாரோ? விமானத்தில் கூடுதல் தொகை கட்டாமல் பயணம் செய்ய பிரிட்டீஷ் ஏர்வேஸ் விதித்த 45 கிலோவுக்குள் அவர் மூட்டைமுடிச்சு இருக்குமா? 46 கிலோ வந்தது. பரவாயில்லை, ஒரு கிலோ இலவசம் என்று அவரை எடுத்துப் போக அனுமதித்து விட்டார்கள்.

கொச்சியில் விமானம் இறங்கும்வரை பிஷாரடிக்கு எந்த சங்கடமும் இல்லை. கொச்சியில் இருந்து அம்பலப்புழை போக சிரமப்பட வேண்டிப் போனது. கொச்சியில் பணிமுடக்கு அல்லது அடைமழை அல்லது இரண்டும் சேர்ந்தோ பொதுவாழ்க்கையை நிறுத்திவைக்கும். அந்த வழக்கப்படி சீக்கிரமாக வந்த பருவக்காற்று மழை. தெருக்கள் எல்லாம் தண்ணீர் தேங்கி டாக்சி யாரும் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். ஒரு வழியாக டாக்சி கிடைத்தது.

ரொம்ப பொறுமையாகக் கார் ஓட்டும் ட்ரைவரும், எல்லா கஷ்டத்தையும் சமாளிக்கும் மாருதி காரும் பயணத்தை சகித்துக்கொள்ள மட்டும் செய்யவில்லை. ட்ரைவரின் தொடர்ந்த புன்னகையும், வண்டியில் அவர் இசைக்க வைத்த கமுகர புருஷோத்தமனின் ’ஆத்ம வித்யாலயமே’ போன்ற பழைய சினிமா கானங்களும் மழைநாளை சுவாரசியப்படுத்தின.

அம்பலப்புழையில் வண்டி நுழையும்போது வெய்யில் அடித்துக் கொண்டிருந்ததைக் காட்டி ட்ரைவரும் பிஷாரடி சாரும் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டார்கள். அப்போது கமுகர புருஷோத்தமனின் ‘ஏகாந்ததயுடெ அபார தீரம்’ பார்க்கவி நிலையம் படத்தில் இருந்து பாடிக் கொண்டிருந்தது.

எண்பது ரூபாய் பேசின தொகைக்கு மேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்கிக் கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார் உன்னி என்ற அந்த டாக்சி ஓட்டுநர். கொண்டு வந்ததில் ஒரு பெரிய சாக்லெட் பட்டையை வண்டியில் வைத்தே லக்கேஜான சூட்கேஸைத் திறந்து எடுத்துக் கொடுத்தார் பிஷாரடி சார்.

வீட்டில் பிஷாரடி வைத்தியரின் தொண்ணூறு வயசு அம்மா சுகாசினி வாரஸ்யர் இன்னும் செயலாக அலைந்து திரிந்து சமையல்கார அம்மாவின் செயல்பாட்டை நுணுக்கமாகக் கண்காணித்துக்கொண்டு, காய்கறி நறுக்க தாக்கீது கொடுத்துக் கொண்டிருந்தாள். பிஷாரடியின் சகோதரி குடும்பம் அடுத்து வசிக்க, கிட்டத்தட்ட தனியாகத்தான் அந்தப் பெரிய வீட்டில் இருந்தாள் அம்மா. சகோதரி, அவளுடைய மகள் வயிற்றுப் பேரர்கள், பேத்திகள், மகன், மனைவி என்று அவருக்கு அவ்வப்போது ஏர்மெயில் எழுதியும் ஆடியோ காசட்டில் பேசி வீட்டு, ஊர் விவரம் விவரமாக அறிவித்துத்தான் இரண்டு தரப்பிலும் இதுவரை இந்த முப்பத்தைந்து வருடமாக தகவல் அறிவித்து, பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

இட்டலிகளும், உளுந்து வடையும் வெண்பொங்கலும் காலை உணவாக, ’ஒன்னு கெரங்ஙி வரட்டெ’ என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார். அவர் அதிர்ஷ்டம் தெருவில் ஒருத்தர் கூட வேட்டி கட்டிக் கொண்டு எதிரில் வரவில்லை. வேட்டி, செட் முண்டு, ப்ளவுஸ் ஓய்ந்து போன சகாப்தம் போல் இருந்தது அது.

அம்பலப்புழை தன் தனித்துவத்தை இழந்ததுபோல், கொச்சியும் ஆலப்புழையும் அம்பலப்புழையும் ஒரே ஆளுமையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான முகத்தோடு வெளிப்படுத்தியிருந்தன. கேரளமே பொது முகங்களின் அணிவகுப்பாகி இருக்கலாம் இந்த முப்பத்தைந்து வருடங்களில் என்று பிஷாரடிக்குத் தோன்றியது.

திலீப்பை சந்தித்து கல்பா கொடுத்து விட்டிருந்த பரிசுகளை, பரிசுகளை என்ன பரிசுகளை, விதவிதமான ஸ்விஸ், பெல்ஜியம் சாக்லெட்டுகளை அவரிடம் தர வேண்டும். அதோடு வேறு ஏதோ கொடுத்து விட்டிருக்கிறாளே, ஆமாம், எஸ் மினிஸ்டர், எஸ் ப்ரைம் மினிஸ்டர் பிபிசி நாடகங்களின் எழுத்துப் பதிப்பு, சட்டைகள் என்று இன்னும் சிலவும் கொடுக்க வேண்டியவை பட்டியலில் உண்டு.

எல்லாம் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி திலீப் வீட்டுக்கு நடந்தார். தெரு திருப்பத்தில் தெரிசா வீடு. எங்கே போச்சு அது? அடுத்த தெருவில் வாசலில் வேப்பமரங்களும், மேலே ஏறிப்படரும் மிளகுக் கொடிகளுமாக சிறியதாக ஆனால் அழகாக திலீப் வீடு. எங்கே போச்சு அது? காணோம்.

தெரிந்த வீடுகளையும் வேண்டப்பட்டவர்களையும் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருப்பவனாகத் தன்னை உணர்ந்தார் பிஷாரடிசார். இன்று முழுக்கத் தேடினாலும் அந்தக் கட்டிடங்கள் கண்ணில் படப்போவதில்லை என்று களைத்துப் போனபோது நினைவு வந்தது அவருக்கு.

கல்பா அழகாகப் பொதிந்து கட்டியிருந்த சட்டை, புத்தகம் மேல் பூவும் காயுமாக வரைந்திருந்த பரிசுப் பொருள் காகிதத்தில் திலீப் ராவ்ஜி என்று பெயர் எழுதித் தொடர்ந்து விலாசமும் எழுதியிருந்தாள் அவள் முன் ஜாக்கிரதையோடு. பிஷாரடி இப்படி பழைய நினைவோடு அலைந்து கொண்டிருப்பார் என்று எதிர்பார்த்திருப்பாள் அவள்.

ஸ்ரீகிருஷ்ணா அபார்ட்மெண்ட்ஸ் தரைத்தள ஃப்ளாட்டில் திலீப் ராவ்ஜி இருப்பதாகத் தெரியவந்தது. ஸ்ரீகிருஷ்ணா குடியிருப்பைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. வாசலில் ஒன்றுக்கு இரண்டாக வாட்ச்மேன் மர முக்காலிகளில் உட்கார்ந்து தமிழில் பேசிக் கொண்டிருந்தார்கள். மிகுந்த மரியாதையோடு பிஷாரடி சாருக்கு திலீப் ராவ்ஜியின் அபார்ட்மெண்டைக் காட்டினார்கள் அவர்கள்.

பிஷாரடி அழைப்பு மணியை அடித்தபோது ஒரு நிமிடம் யாரும் வரவில்லை. அடுத்து கதவு திறக்க, தாங்கு கட்டைகளை ஊன்றியபடி நின்றவர் பிஷாரடியை விட வயதானவர். எவ்வளவு இருக்கும், எண்பதா, தொண்ணூறா, முழு நூறா என்று தான் பிஷாரடி சாரால் கணிக்க முடியவில்லை.

இது திலீப்பின் அபார்ட்மெண்டாக இருக்க முடியாது. திலீப் வீட்டில் அவர் தான் மூத்தவர். அவர் இப்படி இருக்க மாட்டார். அதுவும் பிஷாரடியைவிடஅதிக வயதானவராக.

”மன்னிக்க வேண்டும். நான் லண்டனில் இருந்து வருகிறேன். நாராயண பிஷாரடி. காலேஜ் ப்ரஃபசரா இருந்தேன். இப்போ ரிடையர் ஆன அப்புறம் ப்ரஃபஸர் எமிரிடஸ். கௌரவ பேராசிரியர். என் நண்பர் திலீப் ராவ்ஜியைதேடி வந்தேன். தவறான அபார்ட்மெண்டுக்குக் கை காட்டி விட்டார்கள் போலிருக்கு. உங்களைத் தொந்தரவுபடுத்தியிருக்கிறேன். மன்னிக்கவும்”.

பிஷாரடி சார் கை குவித்து வணங்கிச் சொல்ல, பெரியவர் சொன்னார் – ”திலீப் அபார்ட்மெண்ட் இதுதான். நான் திலீப் ராவ்ஜியின் அப்பா பரமேஸ்வரன்”.

“என்ன யோசிக்கறீங்க, உள்ளே வாங்க. ப்ளீஸ் கம் இன்”.

கட்டைகள் பளிங்கு பாவிய தரையில் ஒலிக்க அவர் முன்னே போக, மெல்ல அவரைப் பின் தொடர்ந்தார் பிஷாரடி. அவருக்கு கல்பா சொன்னது நினைவில் வந்தது. வீட்டில் சஸ்பென்ஸ் இருக்கு என்றாளே. இந்த முதியவர் தானா அது?

உட்காருங்கள் என்று தன்னை அமர்த்தும்போது அவர் தளர்ந்திருப்பதை கை நடுக்கத்தால் உணர்ந்தார் பிஷாரடி.

“அது ஒன்றுமில்லை, ராத்திரி சீராக உறங்க முடியலே அதுதான் இப்போ சிரமமாக இருக்கு. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க உட்காருங்கோ. சொல்லுங்கோ. எலிசபெத் மகாராணி எப்படி இருக்கா? பிரின்ஸ் பிலிப் என்ன பண்ணிண்டிருக்கார்?”

”எல்லாரும் ஆரோக்கியமாகத்தான் இருக்காங்க. நீங்க நலமான்னு கேட்டு விட்டிருக்காங்க. உங்க பேத்தி கல்பாவும் ராணியம்மாவும் சேர்ந்து உங்களுக்கு மில்க் சாக்லெட் டன் கணக்கிலே வாங்கி அனுப்பியிருக்காங்க”.

அப்பாவுக்கு, தாத்தாவுக்கு என்று எழுதிய சாக்லெட் பரிசுப் பொதியை பிஷாரடி சார் பரமனிடம் அளிக்கும்போது வாசலில் நிழலாட்டம். திலீப் ராவ்ஜி வந்துவிட்டார்.

அவர் கார் சாவியை சுவரில் ஆணியடித்திருந்த முளைகளில் ஒன்றில் நுழைத்துத் தொங்க விட்டபடி பிஷாரடியைப் பார்த்து வெற்றுப்பார்வையோடு ’ஹை, ஐ ஆம் திலீப்’ என்றார்.

”திலீபா, அவர் உன் நண்பர். உன்னைத் தேடித்தான் வந்திருக்கார் லண்டன்லே இருந்து”.

பரமன் சொல்ல திலீப்பின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

”ஓ பிஷாரடி சார், எவ்வளவு வருஷம் கழிச்சு பார்க்கறோம். முப்பது?” அவர் பிஷாரடியோடு கை குலுக்கினார்.

“முப்பது இல்லே, முப்பத்தஞ்சு. அப்பப்போ லெட்டர் போடுறதோட சரி. போன வருஷத்துக்கு முந்திய ஓணத்துக்கு நீங்களும் கல்பாவும் ஓணாஸம்ஸகள் சொல்லவும், அதுக்கு நாலு வருஷம் உங்களுக்கும் மிசிஸ் அகல்யாவுக்கும் தீபாவளி வாழ்த்து நான் சொல்லவும்..”.

பிஷாரடி குரல் தடைப்பட்டு பாதியில் நிறுத்தினார்.

”மிக்க வருந்துகிறேன் திலீப் ஜி. ஐந்து வருஷத்துக்கு முன் மிசிஸ் அகல்யா காலமானதுக்கு இப்போ துக்கம் கேட்கறது சரியான்னு தெரியலே.”

“துக்கமும் சந்தோஷமும் எப்பவும் பகிர்ந்துக்கலாம்” என்றார் பரமன். அவர்கள் சற்றே மௌனமாக இருந்தார்கள்.

”இவர் எங்கப்பா. நாற்பது வருஷம் முந்தி தில்லியில் இருந்து பம்பாய்க்கு பிளேன்லே வந்துக்கிட்டிருந்தபோது நாக்பூர்லே வச்சு காணாமல் போயிட்டார். எங்கெங்கேயோ, ஏதாவது அபூர்வமான விபத்துலே மாட்டிக்கிட்டாரா அல்லது உயிரோடவே இல்லையா என்றெல்லாம் சந்தேகத்தோடு தேடினது நாற்பது வருஷம் கழிச்சு போன மாதம் அகல்யா திவசத்தன்னிக்கு முடிவுக்கு வந்தது. மருமகளோடதான விஷ்ணு இலையிலே சாப்பிட அப்பா வந்துட்டார்”.

”எங்கே போயிருந்தீங்கன்னு கேட்டா ஆப்ரிக்க குடியரசு, முடியரசு சின்னச் சின்ன நாடுகளைச் சொன்னார் அப்பா. அங்கே எல்லாம் அரசியல் ஆலோசகரா இருந்து எல்லாம் அலுத்துப் போய் இங்கே வந்துட்டாராம்”.

திலீப் சொன்னதை யாரோ மூன்றாம் மனுஷரைப் பற்றிச் சொல்வதைக் கேட்கிற மாதிரி சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் பரமன்.

”பிஷாரடி சார், நீங்க வரலாற்று பேராசிரியர் தானே?” திலீப் ராவ்ஜி கேட்க, ஆமா என்றார் பிஷாரடி. கிருஷ்ணன் கோவில் பூசாரியும் கூட என்று சொல்லலாமா? வேண்டாம் அது இப்போதைக்கு, அதனால் திலீப்புக்கு என்ன கிடைக்கும்? சொல்லாமல் இருந்தால் அவருக்கு ஒரு இழப்பும் இல்லைதான்.

”அப்பா நேற்றைக்கு அவர் உறக்கத்திலே ஏதோ ஒரு முன்னே பின்னே தெரியாத பரிச்சயம் இல்லாத தேசத்துக்குப் போனதாக சொன்னார். ஊர்ப் பெயர் மாதிரி ஏதோ சொல்லி எனக்குத் தெரியுமான்னு கேட்டார். சின்னக் குழந்தை மாதிரி ஸ்வப்னத்திலே வந்த ஊர், மனுஷங்க, பேச்சு, சம்பவம் இப்படி துண்டு துணுக்கா நினைவு வச்சுண்டு அதெல்லாம் போயிருக்கியான்னு கேட்டிட்டிருக்கார். அவர் ரொம்ப களைச்சிருக்கார். அதான் முக்கிய காரணம். அப்பா, நீங்க ஊர்ப் பெயர் சொன்னேளே, அது என்ன திரும்பச் சொல்லுங்க”.

திலீப் உற்சாகமாக அவரிடம் சொல்லத் திரும்ப, பரமன் உட்கார்ந்தபடிக்கே ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தார்.

“அப்பா, அப்பா”.

திலீப் ராவ்ஜி அவரை எழுப்ப முயற்சி செய்தபடி பிஷாரடியைப் பார்த்துப் புன்னகைத்தார்.

”வேணாம், அவரை தொந்தரவு படுத்த வேணாம் திலீப் ராவ்ஜி. இத்தனை வருஷம் கழிச்சு எப்படி வந்தார்னு மட்டும் தெரிஞ்சா போதும்” என்றார் பிஷாரடி.

அவரோடு அல்லது அவர் குடும்பத்தோடு அம்பலப்புழை தமிழ் பிராமணக் குடும்பம் தொடர்பு கொண்டிருக்கும் இரண்டாவது உறக்கம் அது. முதலாவது, ஆறு தலைமுறை முந்தைய பிஷாரடி வைத்தியர் உறங்கியபடி மிதந்து கொண்டு கோவில் கொடிமரத்தைச் சுற்றி வரும்போது அசுத்தம் செய்த ஆலப்பாட்டுக் கிழவர்.

அவருக்கு குணமாகியிருக்கும் ஏனென்றால் பிஷாரடிகளின் சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளர்களின் விவரங்கள் கிட்டத்தட்ட நூற்று ஐம்பது வருடங்களுக்கு, இந்த ஆலப்பாட்டு வயசன் உட்பட உண்டு.

இப்போது நாற்பது வருஷம் முன்பு காணாமல் போய் திரும்பி வந்த திலீப்பின் அப்பா என்ற முதியவர்.

“ஏன் கேக்கறீங்க, அப்பா பேசிட்டு இருக்கறபோதே உறங்கிடறார். அதைவிட்டா அவர் கிட்டே பெரிசா ப்ராப்ளம் ஏதும் இல்லை. ஒரே கனவைப் பல மாதிரியாக, சினிமாவிலே ஒரே காட்சியை வெவ்வேறு காமிராக்களை வைத்து வெவ்வேறு கோணங்களிலே படமாக்கற மாதிரி ஒரே கனவு போல. வேறே வேறே அனுபவங்கள். அவர் போய் இருந்ததாக சொல்லிக்கிற ஆப்பிரிக்க நாடுகளிலே மந்திரவாதம் நடத்தறவங்க ஏதாவது செஞ்சிருப்பாங்களான்னு கூட சந்தேகம் உண்டு”.

திலீப் சொல்ல பிஷாரடி இந்த வயசன் மேல் மற்ற எல்லா நோயாளிகளையும் விட அதிகம் ஆர்வம் ஏற்பட்டதை உணர்ந்தார். கனவு தான் கண்டாரா அல்லது நினைவிலேயே வேறே கால, வெளியில் போய் வருகிறாரா? ஏன் அவர் அங்கே போகணும்? ஆலப்பாட்டு வயசன் மாதிரி அல்லது அதைவிட சுவாரசியமான நோய்க்கூறு தட்டுப்படுகிறதா?

பிஷாரடி வைத்தியர் வீட்டில் ஐந்து தலைமுறைக்கு முந்திய எழுத்துகளை பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அப்படி கெட்டி அட்டை போட்டு ஓரமாகத் தைத்து வைத்திருக்கும் நோயாளி வரலாற்றை எல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தார் அவர்.

”உங்க அப்பாவுக்கு என்ன வயசு இருக்கும்?” என்று திலீப் ராவ்ஜியைக் கேட்டார் பிஷாரடி சார். அவர் கொஞ்சம் யோசித்து அது ஒரு நூற்றுப்பத்தாவது இருக்கும் என்றார்.

பிஷாரடி அதற்கான வியப்பு எதுவும் காட்டவில்லை என்பது திலீப் ராவ்ஜிக்கு ஆச்சரியமாக இருந்தது. பிஷாரடி கற்பித்து வரும் வரலாறு எல்லாமே ஆயிரம் ஐநூறு வருடங்களுக்கு முற்பட்டவர்கள் பற்றியது. அவருக்கு ஐம்பது வருடத்துக்குக் கீழ் இருந்தால் தான் நம்பக் கடினமானதாக இருக்கக் கூடும்.

“நூற்றுப் பத்து வயது உயிர் வாழ்வது சாத்தியமா பிஷாரடி சார்?” திலீப் ராவ்ஜி வலிந்து அந்த விஷயத்தைக் கொண்டு வந்தார்.

“ஜப்பானில் நூற்றிருபது வயதில் கூட மனுஷர்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் திலீப் சாரே. அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே. ஆனா நூற்றுப் பத்து வயசிலே காற்றைக் குடித்துக் கொண்டு இருந்திருப்பாரா என்ன? எங்கே இருந்தார்? என்ன ஆகாரம் தினம் கழித்தார்? அந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா?”

“இல்லே பிஷாரடி சாரே, அவர் எங்கே இருந்தார்னு அப்போ கொஞ்சம் இப்ப கொஞ்சம்னு தகவல் தர்றார். என்ன சாப்பிட்டார், எப்படி வயசு பாதிக்காமல் ஓடியாடிட்டிருந்தார் இப்படியான தகவல் எதுவும் சொல்றதுக்கு முந்தி டியூப்லைட் அணைஞ்சு போற மாதிரி தூக்கம். அது பத்து இருபது நிமிஷம் தான். கழிஞ்சு எழுந்திருந்தா ஒண்ணு அவரோட ஒரே ஒரு ஒற்றைக் கனவு இன்னிக்கும் வந்திருக்கும். வந்திருக்கலாம். இப்போ கூட அவர் கனவிலே அந்த இடத்துக்கு போயிருக்கலாம்”.

”திலீப்புக்கு இப்போது அப்பா நூற்றுப்பத்து வயதுவரை என்ன சாப்பிட்டு உயிர் வளர்த்தார் என்பது அறிஞ்ஞோடா. தெரியாது. யாருக்கும் சாத்தியமில்லாத ஒரே கனவை திரும்பத் திரும்பப் பார்ப்பது அல்லது ஒன்றைத் தொடர்ந்து வரும் ஒரே சூழ்நிலைக் கனவுகள், அதில் வரும் ஊரும், மனுஷர்களும் நிஜ வாழ்க்கை போல கனவுகள் தோறும் அதே தோற்றத்திலும் அடையாளத்திலும் வந்து இருந்து ஸ்வப்ன ஜீவிதம் நடத்திப் போவதும் சாத்தியம் இல்லாதபோது இவருக்கு மட்டும் அனுபவிக்கக் கிடைப்பது. இதெல்லாம் ஏன் என்று கேள்வி கேட்டு ஒரு நினைவு வாய்க்கால் ஓடினால் இதெல்லாம் எப்படி என்று வேறு கேள்விகள் கேட்டு இன்னொரு நினைவு வாய்க்கால் கூடவே சாடிக்கொண்டிருக்க சாத்தியம் உண்டு. இரண்டு வகைக் கேள்விகளும் அவற்றின் பதில்களைத் தேடுவதின் மூலம் முக்கியமான உரையாடல்களைத் துவங்கி வைக்கும்”.

பிஷாரடி வைத்தியர் நீளமாகப் பேசி களைத்துப் போய் இருந்தார். அவரும் விமானப் பயணம், டாக்சி பயணம், மழை ஊடாகப் பயணம் என்று களைத்திருந்தார். திலீப் இங்கே தானே இருப்பார், இந்த சமாசாரம் எல்லாம் இன்னொரு நாள், அது நாளையாகக்கூட இருக்கலாம், பேசலாம். அவருடைய தகப்பனார் என்று சொல்லப்படும் இந்த வயசரும் ஆலப்பாட்டு வயசர் போல் பத்திரமாகப் பாதுகாத்து வைக்க வேண்டியவர். இல்லையோ, ஒரு கணம் இருப்பார், அடுத்த கணம் காணாமல் போய்விடுவார்.

பிஷாரடி வைத்தியர் அப்புறம் வருவதாகப் புறப்பட, ”இருங்க ப்ரபசர், சாய் குடிச்சுட்டு போங்க. ஏர்ல் க்ரே டீ. லண்டன்லே இருந்து வாங்கி வச்சிருக்கேன்” என்றார் திலீப் ராவ்ஜி.

(தொடரும்)

Series Navigation<< மிளகு அத்தியாயம் இருபத்தொன்று மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.