
வரலட்சுமியை எல்லா நாளும் போல அன்று காலை ஐந்தரை மணிக்கு அவளுடைய கைபேசி அடித்து எழுப்பியது. அதன் சத்தத்தை நிறுத்தி விட்டு அவள் புரண்டு படுத்தாள். எழுந்திருக்க வேண்டாம் போல் இருந்தது. இன்று ஆபீசுக்குப் போகா விட்டால் என்ன என்று கூட ஓர் எண்ணம் மனதில் எழுந்து அடங்கிற்று. இன்று சம்பள தினம். அவள் போய்த்தான் ஆக வேண்டும். அப்படியே லீவ் எடுத்து விட்டால் அவள் நிம்மதியாய் இருக்கக் கூடாது என்று பக்கத்தில் படுத்திருக்கும் ரகுவும் லீவு போட்டு விடுவான், அந்தச் சித்திரவதைக்கு அவள் ஆபீசுக்கே போய் விடலாம். அவள் எழுந்து சுவர்க் காலண்டரில் தொங்கிக் கொண்டிருந்த மஹாலக்ஷ்மிக்கு ஒரு கும்பிடு போடு விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள். காலைக் கடன்களை முடித்து சமையல் அறைக்குள் நுழைந்தாள். பாலைக் காய்ச்சி திக்காக இரண்டு டம்ளர் காப்பி போட்டாள். கோத்தாஸ் காப்பியைத் தவிர ரகு வேறு எதையும் தொட மாட்டான். ‘காலங்காத்தால அதிலே கிடைக்கிற கிக் மாக்டவெல் விஸ்கி கூடக் கொடுக்காது’ என்பான். அந்த விஸ்கியும் ஒரு சிநேகிதனின் பிறந்த நாள் பார்ட்டியில் அல்லது ஆபீசில் யாராவது ரிட்டையராகிப் போனால் நடக்கும் பிரிவு உபசார விருந்தில் கிடைப்பதுதான். என்னமோ தினம் தினம் மாலையில் கைக்காசு செலவழித்து குடித்து வருபவனைப் போலப் பேசுவான். இந்தப் பேச்சு மட்டும் இல்லா விட்டால் உன்னை ஒருத்தன் கூட மதிக்க மாட்டான் என்று அவள் நினைத்துக் கொள்வாள். அவன் அவளை வார்த்தைகளால் ஓயாமல் சித்திரவதை செய்ததால் அவளுக்கும் அவனைத் தன் குரூரமான நினைவுகளில் நிறுத்திப் பழிப்பது பழக்கமாகி விட்டது.
அவள் காப்பி டம்ளரை எடுத்துக் கொண்டு போய்க் கண் விழித்தும் இன்னும் எழுந்திருக்காது படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ரகுராமனை எழுப்பிக் கொடுத்தாள். காப்பியைக் குடித்து விட்டுக் கட்டிலின் கீழே டம்ளரை வைத்து விட்டுப் படுக்கையில் காலாட்டியபடியே அவள் மறுபடியும் அங்கு வரும் வரை கண்களை மூடியிருந்ததைப் பார்த்து ‘ஏன் எழுந்து காப்பி டம்ளரைக் கழுவி வைத்தால் துரைக்குப் பிரெஸ்டிஜ் குறைந்து விடுமோ?’ என்று எரிச்சலுடன் நினைத்தாள். பாத்ரூமை ஒட்டி இருந்த வெளிக்கொடியில் தொங்கிக் கொண்டிருந்த நீல நிறப் பூந்துவாலையை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குப் போய்க் குளித்து விட்டு வெளியே வந்து புடவை மாற்றிக் கொண்டாள். பூஜை அறைக்குப் போய் விளக்கேற்றி விட்டு மறுபடியும் சமையலறைக்குள் புகுந்து முந்தின நாள் எட்டாம் கிராஸ் மார்க்கெட்டில் ரகுராமன் வாங்கி வந்திருந்த முத்தப் பழி வெண்டைக்காயையும் ரகுராமனையும் திட்டியபடி காய் நறுக்கினாள். காலை டிபனுக்கு என்று இட்லித் தட்டுக்களை எடுத்து மாவை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு அது வெந்து முடிவதற்குள் ஒரு வெங்காயச் சட்டினி பண்ணிக் கொண்டிருக்கையில் ரகுராமன் எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு குளித்து சுவாமி அறைக்குள் சென்று முதலில் விநாயகரையும் அதன் பிறகு அபிராமியையும் அழைத்து விட்டு வெங்கடாஜலபதியுடன் கரையேறி “லச்சுமி? என்ன டிபன்?” என்று டைனிங் டேபிள் முன் வந்து உட்கார்ந்தான். இவள் இரண்டு தட்டுகளில் இட்லிகளையும் சட்டினியையும் சாம்பாரையும் மிளகாய்ப்பொடி எண்ணையையும் கொண்டு வந்து டேபிளில் வைத்ததும் அவன் எடுத்துச் சாப்பிடும் போது வழக்கம் போல் பதினைந்தாம் கிராஸ் வீணா ஸ்டோர்ஸ் இட்லி புராணம் பாடாமல் அவன் சாப்பிட்டான்.
அவளும் நின்றபடியே இரண்டு இட்லிகளை வாயில் போட்டுக் கொண்டு இருவரும் சாப்பிட்டு முடிக்கையில் சரியாக ஹாலில் இருந்த கடிகாரம் ஒன்பது முறை காறுவதைக் கேட்டு ரகுராமன் “அஞ்சு நிமிஷம் லேட்டு” என்று பதறியபடி கையை அலம்பி விட்டு அவனது அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டான். சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போய் அங்கு நின்றிருந்த ஸ்கூட்டரை அவன் கிளப்பிச் சென்ற சத்தத்தைக் கேட்டபின் வரலட்சுமி அறைக்குச் சென்று அன்று அணிய என்று எடுத்து வைத்திருந்த சந்தனக் கலர் ஜார்ஜெட் புடவையையும் சிவப்பு நிற ஜாக்கெட்டையும் அணிந்து கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஆளுயரக் கண்ணாடியில் பார்த்து விட்டுத் தனக்குள் ஒப்புதல் தெரிவித்துக் கொண்டாள்.
அவள் தனது அலுவலகத்துக்குக் கிளம்பும் முன்பே ரகுராமன் வீட்டை விட்டுப் போய் விடுவது அவளுக்கு மிகவும் செளகரியமாக இருந்தது. இல்லாவிட்டால் அவள் உடைகளைப் பற்றி, அதை அவள் உடுத்தும் விதம் பற்றி எல்லாம் அவன் உதிர்க்கும் எக்ஸ்பர்ட் கமெண்டுகளை மிகுந்த எரிச்சலுடன் கேட்க வேண்டியிருக்கும். இந்த ஜார்ஜெட் புடவையை வாங்கிய அன்றைக்கு அவனும் கிரிஜா சில்க்ஸுக்கு வந்திருந்தான். அந்தப் புடவையை அவள்தேர்ந்தெடுத்து
விட்டு “எவ்வளவு வழவழப்பா இருக்கு பாருங்களேன்!” என்றாள். அவன் அதை ஸ்பரிசித்து விட்டு, “இவ்வளவு வழவழப்பா இருக்கே? கட்டிண்ததுக்கு அப்புறம் உடம்பிலிருந்து நழுவிடாது?” என்று அவளைப் பார்த்தான். வியாபாரப் பணிப்பெண் அதைக் கேட்டுச் சிரித்து விட்டாள்.
அவர்கள் புடவையை வாங்கிக் கொண்டு வரும் போது “அந்த சேல்ஸ் கேர்ள் நாம பேசறதைக் கேட்டுண்டே இருக்காளேன்னுதான் அங்கே சொல்லலே. மூவாயிரத்தை அழுது வாங்கற அளவுக்கு இந்தப் புடவை ஒண்ணும் அவ்வளவு நன்னாயில்லே. கலர் கூட காமாசோமான்னுதான் இருக்கு” என்றான்.
அவனுடன் சண்டை போட்டுத் தன்னில் நிரம்பியிருக்கும் சந்தோஷத்தை அவள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
“எனக்கு ரொம்பப் பசிக்கறது. ஏதாச்சும் ஓட்டலுக்குப் போலாம்” என்றாள்..
அவன் “சரி வா. மாவல்லி டிபன் ரூமுக்குப் போய் பெண்னே தோசா அடிக்கலாம். சூப்பரா இருக்கும்” என்று அந்தப் பேச்சுக்கு மாறி விட்டான்.
அவள் உடைகளை, அவள் உடுத்தும் விதத்தை விமரிசிப்பதன் மூலம் ஏதோ அவன் கட்டளையிடும் மகாராஜா என்று அவனது உள்மனம் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தது என்று அவளுக்குத் தெரியும். ‘புடவையைக் காலுக்குக் கீழ தழைச்சுக் கட்டு, மாரெல்லாம் இடுப்பெல்லாம் தெரியற மாதிரி எதுக்கு இவ்வளவு மெல்லிசு புடவை வாங்கிக் காசைக் கரியாக்கினே? தூக்கி எறி, சல்வார் என்னமா கமீஸை இவ்ளோ டைட்டா போட்டுண்டு அலையறே’ என்று எரிச்சல் தரும் அவனது கமெண்டுகள் தன் காதருகே வரும் போதே அவள் வெளியில் வீசிய காற்றோடு தூக்கி எறிந்து விடுவாள். ஒரு நாள் அவனிடம் “நான் நீங்க சொல்றதை யெல்லாம் கேக்கறேன்ல. இந்த டிரஸ் விஷயத்திலே மட்டும் குறுக்கே வர வேண்டாம்” என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லி விட்டாள். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தாமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாயால் அவள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வான்.
தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு ஹாலில் இருக்கும் கைப்பையையும் சாப்பாட்டுப் பையையும் தூக்கியபடி நடைக்கு வந்து காலில் செருப்புக்களை நுழைத்துக் கொண்டு வரலட்சுமி வெளியே வரவும் ஆபீசுக்கு அவளை ஏற்றிச் செல்ல வரும் வேன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவள் வேனில் ஏறி அங்கு அமர்ந்திருந்த அவளுடைய அலுவலக சிநேகிதிகளைப் பார்த்துப் புன்னகையை எறிந்து விட்டு ஒரு சீட்டில் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுடன் உட்கார்ந்து கொண்டாள்.
அவள் பக்கத்திலிருந்த இந்து “இந்தப் புது மானேஜர் வந்தாலும் வந்தான், அஞ்சு நிமிஷம் ஆபீசுக்கு லேட்டா வரக் கூட முடியலே” என்று ரகசியக் குரலில் கூற ஆமாமென்று வரலட்சுமியும் தலையசைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்து அவர்களை யாரும் கவனிக்கவில்லை என்று நிம்மதியடைந்தாள். அந்த வண்டியில் அவர்களோடு வந்த மீனலோசனி புது மானேஜரின் தூரத்து உறவு என்று ஆபீசில் எல்லோருக்கும் தெரிந்த பின் அவளை வைத்துக் கொண்டு முன்னைப் போல ஆபீஸ் விவகாரங்களை ஓப்பனாக விமரிசித்துக் கேலி செய்து சிரித்து மகிழ முடியாமல் போய் விட்டது. கூடவே புது மானேஜரின் கண்டிப்பும் இளைய வயதும் பற்றி அவர்களது ஆபீஸ் மானேஜர் சரோஜாம்மா ஒரு நாள் சொல்லி அவர்கள் எல்லோரும் வேலையில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகள் கிளம்பி நிம்மதியைக் குலைத்துவிடும் என்று எச்சரித்திருந்தாள். அதற்கேற்றாற்போல அலுவலகத்தில் ஒவ்வொருவருடைய வேலைப் பளுவும் முன்பை விட அதிகமாகி விட்ட அதே நேரத்தில் அவ்வேலைகளைச் செய்து முடிக்க வேண்டிய கால அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு ஒவ்வொருவரும் மூச்சுத் திணறும் நிலைமைக்கு வந்து விட்டதாக ஒருவருக்கொருவர் புகார் செய்து கொண்டும் எரிச்சல் பட்டுக் கொண்டும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வரலட்சுமிக்கு மாத்திரம் அப்படி ஒன்றும் அந்த மானேஜர் யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கவில்லை என்று தோன்றினாலும் மற்றவர்களின் கருத்துக்களோடு இணைந்து போகாவிட்டால் அவர்களால் எளிதாகக் காயப்படுத்தி விடக் கூடிய எதிரியாக அவளைக் கருதிப் பாய்ந்து குதறி விடுவார்கள் என்று அவளுக்குத் தெரிந்ததால் தலையாட்டிப் பொம்மையாக இருப்பதே சௌக்கியமும் சௌகர்யமும் நிறைந்த தருணங்களை அவளுக்கு கொடுக்கும் என்று உணர்ந்த ஞானியாக வளைய வந்தாள்.
வண்டி அலுவலகத்தை அடைந்ததும் எல்லோரையும் போல அவளும் தன் அறையை நோக்கி விரைந்தாள். வழக்கமாக எல்லோருக்கும் முன் சீக்கிரமாக வந்து விடும் சங்கர் இன்று இன்னும் வரவில்லை. ஆச்சரியத்துடன் அவள் தன் இருக்கையில் அமர்ந்தாள். அப்போது அவளுடைய கைபேசி ஒலித்தது. சங்கர்.
“எஸ் ஸார்” என்றாள்.
“வரலட்சுமி, எனக்கு பெமல் ஈ.டி. ஆபீஸ்லேந்து போன் வந்தது. பதினோரு மணிக்கு மீட்டிங்காம். நம்மளோட கொட்டேஷன் பத்தி டிஸ்கஷ னுக்குக் கூப்பிட்டிருக்காங்க. முடிச்சிட்டு வரேன். இன்னிக்கி வேறே ஏதாவது மீட்டிங் இருக்கா எனக்கு?” என்று கேட்டான்.
“ஆனந்த் அயர்ன் ஒர்க்ஸ் சேஷாசலம் சாரை பன்னெண்டு மணிக்கு இங்க வரச் சொல்லிருக்கோம்.”
“ஓ . ஆனா அதுவும் பெமல் ஒர்க் சம்பந்தப்பட்டதுதான். அவரை நாளைக்குப் பன்னெண்டு மணிக்கு வரச் சொல்லிடுங்க. இன்னிக்கி மீட்டிங் முடிஞ்சு நான் வர ரெண்டரை மூணு மணி ஆயிடும் ” என்று சொல்லி விட்டுப் போனை அணைத்து விட்டான்.
அப்போது மார்க்கெட்டிங் பிரிவில் பியூனாக இருக்கும் செலுவராஜ் “நமஸ்காரா மேடம்” என்றபடி அவள் முன் வந்து நின்றான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னோட பைலு இன்னிக்கி உங்களுக்கு வரும் மேடம்” என்றான்.
“என்ன விஷயம்? பிரமோஷன் கொடுக்கப் போறாங்களா?” என்று அவள் சிரித்தாள்.
“ஆமா. வீட்டுக்கு அனுப்பப் போறாங்க.”
“என்னது?”
“அங்க ஆபீசர் முத்தம்மா இருக்கில்லே. அது கம்ப்லெண்டு கொடுத்திருக்கு. நானு அந்தம்மா கிட்டே மரியாதை இல்லாம பேசினேன்னு. அவங்களுக்கு மேலே இருக்கற ஆபீசர் சோமன் சாரு அவங்களுக்கு ரொம்பப் பிரெண்டு இல்லே. அதனாலே என்னை சஸ்பெண்டு பண்ணப் போறாங்களாம். மானேஜர் கையெளுத்துக்கு உங்களுக்கு இன்னிக்கி வரும்.”
அவள் பதில் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தாள். இவனும் விஷமக்காரன்தான். இப்போது கூட முத்தம்மாவையும் அவளுடைய ஆபீசரையும் பற்றி எப்படிப் பேசுகிறான்? கொஞ்சம் வாய் ஜாஸ்தி. ஆனால் முத்தம்மாவைப் பற்றி அவன் சொன்னதையும் ஆபீசே அறியும். திருமணமாகி வயதுக்கு வந்து விட்ட ஒரு பெண்ணையும் வைத்துக் கொண்டு முத்தம்மா எப்படித்தான் இப்படி இருக்கிறாளோ? ஆனால் முத்தம்மாவுக்கும் செலுவராஜுக்கும் இடையே நடந்த கலாட்டாவை அறிய வரலட்சுமிக்கு ஆர்வம் உண்டாயிற்று.
“ஏன் என்ன ஆச்சு?” என்று அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“முந்தாநாளு சனிக்கிளமன்னு நானும் என் மச்சானும் கறி வாங்க மார்கெட்டுப் பக்கம் போனோம். அப்போ இந்த அம்மாவோட குரலு கேட்டுச்சு. என் பேரெச் சொல்லிக் கூப்பிட்டுது. சரின்னு நாங்க அந்தம்மா நிக்கிற இடத்துக்குப் போனோம். அந்தம்மா கூட இன்னொரு தடியான அம்மா நின்னுகிட்டு இருந்துது. யாரோ பிரெண்டு போலன்னு நினைச்சுகிட்டு ‘என்னம்மா,கூப்பிட்டீங்களா?’ன்னு கேட்டேன். “டேய் எங்க வீடு உனக்குத் தெரியுமில்லே? அங்க கொண்டு போயி இதையெல்லாம் வச்சிருடா. நானு எங்க அக்கா கூட கோயிலுக்குப் போறேன்’னு காயி, மளிகை சாமான்னு ரெண்டு பெரிய பைய காமிச்சு சொல்லிச்சு. நான் பயங்கரக் கடுப்பாயிட்டேன். டேய்ன்னு என்னமோ அவுங்க வீட்டு வேலைக்காரனக் கூப்புடற மாதிரி கூப்பிட்டுக்கிட்டு? வேலைக்காரனே அப்படிக் கூப்பிட விடுவானோ என்னவோ? அதுவும் என் மச்சானையும் வச்சிக்கிட்டு அவுங்க அக்கா முன்னால அதிகாரம் காமிக்கப் பாத்தா? ‘அடப் போம்மா. மொதல்லே மரியாதையா பேசக் கத்துக்கோ. உங்கிட்ட காசில்லியா? ஒரு ஆட்டோ வச்சுக்கிட்டு போகுறதுதானே?’ன்னேன். அந்தம்மாவுக்கு முகமெல்லாம் செவந்திருச்சு. ‘என்னடா என்கிட்டே மரியாதை இல்லாம பேசறே? இரு, திங்கக் கிழம உம்மேல கம்ப்லெண்டு குடுக்கறேன்’னு சத்தம் போட்டுச்சு. மறுபடியும் டேய்ன்னு கூப்பிட்டதும் எனக்கும் செம கோபம் வந்திருச்சு. ‘யாரு உங்க தோஸ்து ஆபீசருகிட்டேதானே?ன்னு கேட்டுட்டு மச்சானையும் இளுத்திட்டு கிளம்பிட்டேன்” என்றான் செலுவராஜு.
‘உனக்கு கொஞ்சம் வாய் நீளம்தான். முத்தம்மாவுக்கும் ஆபீசர் சோமனுக்கும் இருக்கறதுதான் உனக்குத் தெரிஞ்சிருக்கே. எதுக்கு வம்பை விலைக்கு வாங்கிட்டு இப்பத் தடுமார்றே?’ என்று சொல்ல வாயெடுத்தாள். பிறகு நிறுத்தி விட்டாள். ‘அவன் ஏதோ சொன்னானா, நாம கேட்டோமான்னு இல்லாம உனக்கு எதுக்கு வம்பு?’ என்று உள்குரல் கேட்டது.
செலுவராஜுக்கு ஆதரவாகப் பேசுவது போல அவள் அவனிடம் “மானேஜர் மீட்டிங்குன்னு வெளியே போயிருக்காரு. மத்தியானம்தான் வருவாரு. இன்னும் உன்னோட ஃபைல் இங்க வரலே. நீ மட்டும் தனியா மானேஜரைப் பாப்பியா? உங்க சங்கத்தலைவரையும் கூட்டிகிட்டுப் போ” என்றாள்.
“தலேதான் நீ முதல்ல போயி மானேஜரு என்ன சொல்லுறாருன்னு கேட்டுகிட்டு வா. அதுக்கு ஏத்தாப்பிலே நாம ரெடி பண்ணிக்கிட்டு அவர் கிட்டே போவோம்னாரு” என்றான் செலுவராஜு.
“அப்ப சரி. மத்தியானம் நீ இங்க வா” என்று சொல்லி விட்டு மேஜை மீதிருந்த ஃபைல் ஒன்றை எடுத்தாள். செலுவராஜு அங்கிருந்து நகர்ந்தான்..
சங்கர் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வான் என்று அவள் யோசித்தாள். அவனுக்குத் தலைமை அலுவலகத்தில் வேலையில் கெட்டிக்காரன் என்று நல்ல பெயர். வந்த ஒரு வாரத்தில் தினசரி வேலை செய்யும் நேரத்தை அரை மணி நீட்டினான். மதியம் சாப்பாட்டு நேரத்தை ஒரு மணி நேரத்திலிருந்து அரை மணி நேரத்துக்குக் குறைத்தான். கூடவே சனிக்கிழமை அரை நாள் வேலை என்றிருந்ததை முழு நாள் விடுமுறை என்று மாற்றி விட்டான். இஷ்டப்பட்ட போதெல்லாம் மீட்டிங் என்று மானேஜர் அறைக்கதவைத் தட்டிக் கொண்டிருந்த தொழிற்சங்கத்தைக் கூப்பிட்டு மாதத்தில் பதினைந்து நாள் இடைவெளியில் இரு முறை சந்தித்தால் போதும் என்று நிர்ணயித்து விட்டான். பிரசவ விஷயத்தைத் தவிர மற்ற எல்லா அலுவலக விஷயங்களிலும் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று உத்தரவிட்டான்.
மிகவும் கண்டிப்புக்காரன் என்று அலுவலகத்தில் தன் முகத்தை அவன் பதித்துக் கொண்டதாக வரலட்சுமி நினைத்தாள். கண்டிப்பு, ஒழுக்கம் சார்ந்த குணம் என்னும் பொதுஜனப் புத்தி அவளது அலுவலகத்தினரிடமும் இருந்தது. அதனால்தான் முத்தம்மா செலுவராஜு விஷயம் அவனது கவனத்துக்கு வரும் போது எப்படிக் கையாளுவான் என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.
அவள் கையிலிருந்த ஃபைலை மேஜை மீது தூக்கிப் போட்டாள். வேறு வேலை எதுவும் பெண்டிங்காக இல்லை. சங்கர் இன்னும் சிலமணி நேரங்களுக்கு அலுவலகத்தில் இருக்க மாட்டான் என்பதைக் கொண்டாட வேண்டும் போல அவளுக்கு இருந்ததால் காண்டீனை நோக்கிச் சென்றாள்.
அலுவலகக் கட்டிடத்தின் பின்னால் வேப்ப மரங்களும் மாமரங்களும் கொண்டு வந்து தந்திருந்த நிழலில் கான்டீன் இருந்தது. அப்போது காலை பத்தரை என்பதால் நடமாட்டம் எதுவும் இல்லை. இதே இடம் ஒரு மணிக்குக் கூட்டத்திலும் சத்தத்திலும் அப்படி ஒரு பாடு படும். வீட்டில் நன்றாகச் சமைக்காத மனைவிமார்களை வெளியுலகம் அறிந்து கொள்ளட்டும் என்பது போல ஆண்கள் கூட்டம் அலை மோதும்.
வரலட்சுமி டோக்கன் வாங்கி கவுண்டரில் கொடுத்து காப்பியை வாங்கிக் கொண்டு ஹாலின் நடுவில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். காப்பி சூடாகவும் சுவையாகவும் இருந்தது.
“என்ன இன்னிக்கி மழையை வரவழைச்சிடணும்னு திட்டம் போட்டுருக்கீங்களா?” என்று அவளருகில் குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தாள். நரசிம்ம ரெட்டி. யூனியன் தலைவர்.
“வாங்க, உக்காருங்க” என்று அவள் எதிரேயிருந்த நாற்காலியைக் காண்பித்தாள். “காப்பி சாப்பிடறீங்களா?” என்று கேட்டபடி எழுந்தாள்.
“நீங்க உக்காருங்க மேடம். நான் டோக்கன் வாங்கி மணி கிட்டே கொடுத்து ஒரு டீ கொண்டு வரச் சொல்லிருக்கேன்” என்றபடி அவளெதிரே உட்கார்ந்து கொண்டார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேநீர் வந்தது.
“நான் ஒண்ணும் தப்பு பண்ணலையே மழையைக் கொண்டு வந்து போன வாரம் மாதிரி ஜனங்களைக் கஷ்டப்படுத்த” என்று சிரித்தாள் வரலட்சுமி. முந்தைய வாரம் மழையால் போக்குவரத்து ஸ்தம்பித்து அலுவலகங்கள் எல்லாம் இரண்டு நாள்கள் மூடப்பட்டன.
“லஞ்சு நேரத்திலே கூட கான்டீன் பக்கம் வராதவங்க இப்ப ஆபீஸ் நேரத்திலே ….” என்று ரெட்டியும் சிரித்தார்.
சங்கர் மீட்டிங்குக்குப் போயிருப்பதையும் அவன் மத்தியானம் மூன்று மணி வாக்கில்தான் வருவான் என்பதையும் அவள் அவரிடம் தெரிவித்தாள். “பாஸ் இல்லேன்னு கொஞ்ச ஓபி அடிக்க நினைச்சிட்டேன்.”
அவர் தேநீரை அருந்தி விட்டு டம்ளரை மேஜை மீது வைத்தார்.
“இன்னும் நீங்க நம்ம சங்கத்திலே சேர்றதுக்கு முடிவு எடுக்கலியே.”
வரலட்சுமி “நான்தான் உங்க கிட்டே சொன்னேனே. நான் மானேஜருக்குப் பி.ஏ. அதனாலே அவர் சம்பந்தப்பட்ட வேலைன்னு எங்கிட்டே கொடுக்கறதிலே சில விஷயங்கள நான் கான்ஃபிடன்ஷியலா வச்சுக் காப்பாத்தணும். அதனால நான் யூனியன்லசேர்றதை அவரோ இல்லே ஹெட் ஆஃபீஸோ ஒத்துக்க மாட்டாங்க. இது உங்களுக்கும் தெரிஞ்ச விஷயம்தானே?” என்றாள்.
“உங்களோட இந்த ஆர்க்யூமென்ட்ட நானும் நேத்தி வரைக்கும் நம்பிகிட்டு இருந்தேன்” என்றார் ரெட்டி.
அவள் திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள்.
” நீங்க அவங்களோட ஆபீஸ் ரகசியத்தையெல்லாம் காப்பாத்தறவருன்னு அவங்க நினைக்கிறாங்களா?”
“நீங்க சொல்றது எனக்குப் புரியலையே” என்றாள் வரலட்சுமி குழப்பத்துடன்.
“மீனலோசனிக்கு ஆபீசர் பிரமோசன் கிடைச்சிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? இல்லே உங்க மானேஜரு இதை உங்ககிட்டே சொல்லவாவது செஞ்சாரா?”
வரலட்சுமி அதிர்ச்சி அடைந்தாள். ஆபீசர் பதவிக்கான போட்டியில் அவளும் இருந்தாள். மீனலோசனி அவளுக்கு இரண்டு வருடம் ஜூனியர். தன்னுடைய சீனியாரிட்டியையும் திறமையையும் ஒதுக்கி விட்டு அவளுக்குப் பிரமோஷனா? அது எப்படி?
வரலட்சுமியின் மனதைப் படித்தவர் போல ரெட்டி அவளைப் பார்த்து “சொந்தத்துக்கு முன்னாலே கெட்டிக்காரத்தனம்லாம் செல்லாக் காசு” என்றார். “பத்து நாளா பிரமோசன் லெட்டரை மானேஜரு அவர் பீரோவிலேயே வச்சிக்கிட்டு இருக்காரு. உங்க கிட்ட கொடுக்கல பாருங்க. நேத்திக்கு ஹெட் ஆபீசிலே எச் ஆர் மானேஜரோட நான் பேசினப்போ அவருதான் சொன்னாரு.'”
சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தன.
“நான் உங்களுக்காக சொல்லலே. ஒரு அநியாயத்தை கண்டும் காணாம நான் இருக்கக் கூடாதுன்னுதான் சொல்லறேன். நாங்க இந்த விசயத்தை மேனேஜ்மெண்டு கிட்டே எடுத்துட்டுப் போயி நாயம் கேப்போம். ஆனா அதுக்கு நீங்க சங்க மெம்பரானாதான் நடக்கும். இல்லேன்னா மத்த கமிட்டி மெம்பருங்க ஒத்துக்க மாட்டாங்க.”
வரலட்சுமி அவரிடம் “கொஞ்சம் யோசிச்சிட்டு சொல்றேன்”என்றாள்.
“அது சரி. அது சரி. நான் வரட்டா?” என்று ரெட்டி எழுந்தார்.
அவர் போன பின்பும் வரலட்சுமி அங்கேயே அமர்ந்திருந்தாள். மனம் நிலை கொள்ளவில்லை. சங்கர் ஏன் இப்படிச் செய்தான்? பிரமோஷனைப் பற்றிக் கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவனுடைய அந்தரங்கக் காரியதரிசி என்று அவளுக்குப் பெயர் கொடுத்து விட்டு ஏன் இப்படி மறைக்க வேண்டும்? இதுதான் அவன் அவளது வேலை மீது வைத்திருக்கும் நம்பிக்கையா? சங்கர் அவளுடைய முதுகில் குத்தி விட்டாற் போன்ற உணர்விலிருந்து அவளால் தப்பிக்க முடியவில்லை.
சொன்னபடி மூன்று மணிக்கு சங்கர் வந்து விட்டான். அவள் காண்டீனிலிருந்து வந்து தன் சீட்டில் உட்கார்ந்த அரைமணியில் செலுவராஜுவின் ஃபைலும் வந்து விட்டது. வேறு சில கடிதங்கள், ஃபைல்களுடன் செலுவராஜுவினதையும் எடுத்து சங்கர் வருவதற்கு முன் அவன் அறைக்குள் சென்று டேபிள் மீது வைத்து விட்டு வந்தாள். அவன் வந்து அரைமணி கழித்து இன்டெர்காமில் அவளைக் கூப்பிட்டான்.
அவள் உள்ளே சென்ற போது செலுவராஜுவின் ஃபைல் அவன் மேஜை மீது விரிந்து கிடந்தது. அவனுக்கு எதிரே அவள் அமர்ந்ததும் “இதப்பத்தி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
அவள் செலுவராஜு தன்னிடம் வந்து சொன்னதைத் தெரிவித்தாள்.
“ஆனா ஆபீசிலே அவன் மரியாதைக் குறைவா பேசினான்னு இல்லே கம்ப்ளெயிண்ட்?”
“அவன் அடிக்கடி அப்படி பேசறான்னுதான் கம்ப்ளெயிண்ட். என்னிக்கு இது நடந்தது, இன்னிக்கு ஏன் வந்ததுன்னு ஒண்ணும் முத்தம்மா ஃபைல்லே எழுதலை பாருங்க.”
“ஆமா, இந்த மூணு பேரையும் கால் மணி கழிச்சு இங்க வரச் சொல்லுங்க.அப்போ நீங்களும் இங்க இருங்க. ஒரு வேளை மினிட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும். லெட்ஸ் ஸீ.”
மற்ற மூவரும் வந்தவுடன் நால்வருமாக சங்கரின் அறைக்குச் சென்றார்கள்.
சங்கர் செலுவராஜூவிடம் “ஏம்ப்பா இன்னிக்கிக் காலேலே இந்த அம்மாவை மரியாதக் குறைவா பேசினியா?” என்று கேட்டான்.
செலுவராஜூ திகைத்துப் போய் “இன்னிக்கா? நா அவங்களோட இன்னிக்கி ஒரு வார்த்தை கூடப் பேசலியே” என்றான்.
சங்கர் முத்தம்மாவைப் பார்த்தான்.
அவள் “இன்னிக்கி இல்லே. அவன் கொஞ்ச நாளாவே என்னை மதிச்சு மரியாதை கொடுக்காம பேசுறான்” என்றாள்.
“அப்ப இது பல நாளா நடந்துட்டிருக்கா?”
முத்தம்மா தலையை அசைத்தாள்.
“அப்ப இவ்வளவு நாளா விட்டுட்டு இன்னிக்கி எதுக்கு இந்தக் கம்ப்ளெயிண்ட்?”
முத்தம்மா திடுக்கிட்டு சில வினாடிகள் பேசவில்லை. பின்பு சமாளித்துக் கொண்டு “எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கிட்டு இருக்கறதுன்னுதான்..”என்றாள்.
சங்கர் செலுவராஜூவைப் பாத்து “நீ எதுக்கு அப்படியெல்லாம் மரியாதை இல்லாம ஆபீசுக்குள்ளே பேசிருக்கே?” என்று கேட்டான்.
“அப்படியெல்லாம் இல்லியே சார். ஆபீசு வேலை தவிர அவங்க என்னைப் போய் மத்தியானம் ஓட்டல்லேந்து டிபன் வாங்கிட்டு வான்னு அனுப்பிச்சா, இல்லேன்னா டெய்லர் கடைக்குப் போயி தச்ச துணியை வாங்கிட்டு வான்னு அனுப்பிச்சாக் கூட நான் ஒண்ணும் சொல்லாம போய் வாங்கிட்டு வருவேனே சார்” என்றான். முத்தம்மா அதைக் கேட்டு நெளிந்தாள்.
செலுவராஜு தொடர்ந்து சனிக்கிழமை நடந்த சம்பவத்தைக் கூறி விட்டான்.
அதைக் கேட்டு விட்டு சங்கர் செலுவராஜூவை அறைக்கு வெளியே சென்று காத்திருக்குமாறு கூறினான்
சங்கர் முத்தம்மாவிடம் “வாட்ஸ் திஸ் நான்சென்ஸ்? வெளியே நடந்ததுக்கு ஆபீசிலே புகாரா ?” என்றவன் சோமன் மீது பாய்ந்தான்.
“ஒண்ணும் விசாரிக்காம ஃபைல்லே எப்படி ரெகமெண்ட் பண்ணியிருக்கீங்க? முதல்ல உங்க ரெண்டு பேர் மேலேதான் நான் ஆக் ஷன் எடுக்கணும்” என்றான்.
அவர்கள் இருவரும் நடுக்கத்துடன் சங்கரைப் பார்த்தார்கள்.
“இன்னொரு தடவை இது மாதிரி நடந்தா நான் சும்மா இருக்க மாட்டேன். இந்த ஃபைலை நீங்களே வச்சுக்குங்க. யூ கேன் கோ” என்றான். அவர்களுடன் சேர்ந்து கிளம்பிய வரலட்சுமியைப் பார்த்து “நீங்க ஒரு நிமிஷம் இருங்க ” என்றான். அவள் மறுபடியும் உட்கார்ந்தாள்.
“கொஞ்சம் முன்னாலேயே சனிக்கிழமை விவகாரத்தை சொன்னதுக்கு தேங்க்ஸ்” என்றான்.
அவள் அவனிடம் “நீங்க ரொம்ப நல்லா ஹேண்டில் பண்ணினீங்க சார்” என்றாள். தொடர்ந்து “சேஷாசலம் சாரை நாளைக்கு பன்னெண்டு மணிக்கு வரச் சொல்லி போன் பண்னேன். நாளைக்குக் காலேல அவருக்கு இன்கம்டாக்ஸ் ஹியரிங் இருக்காம். மத்தியானம் மூணு மணிக்கு வரட்டுமான்னு கேட்டாரு. உங்க புரோகிராம் டயரியைச் செக் பண்ணினேன். நீங்க நாளைக்கு மத்தியானம் ஃபுல்லா ஃப்ரீதான். சரி வாங்கன்னு உங்க கிட்ட கூடக் கேக்காம வரச் சொல்லிட்டேன்” என்றாள்.
“யூ ஆர் ஸ்மார்ட். நான் ஆபீஸ்லே இல்லாதப்போ நீங்கதான் பாஸ்” என்று அவன் சிரித்தான்.
“என்ன ஸ்மார்ட்டா இருந்து என்ன பிரயோஜனம்?” என்றாள் வரலட்சுமி.
“வாட் டூ யூ மீன்?”
” நான் கெட்டிக்காரியா இருக்கேன்னு சொல்றீங்க. ஆனா மீனலோசனிக்குத்தானே பிரமோஷன் கிடைக்குது!”
அவன் அவளை உற்றுப் பார்த்தான். ‘பிரமோஷன் விஷயம் யார் உனக்குச் சொன்னார்கள்?’ என்று அவன் கேட்கப் போகிறானா?
உண்மையே வெளிப்பட்டதற்குப் பின் புலன் விசாரணை எதற்கு?
ஆனால் அவளுக்குச் சற்று உதறலாக இருந்தது. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ? ‘என்னைக் கேட்க நீ யார்?’ என்று அவள் மீது பாய்ந்தால்?
“ரொம்பத் தைரியம். பட் ஐ லைக்கிட்” என்றான்.
அவள் நிம்மதியுடன் “தாங்க்ஸ் சார்” என்று எழுந்தாள்.
“இந்த பெமல் டெண்டர்ல ப்ரைஸ்தான் கொஞ்சம் ப்ராப்ளம் கிரியேட் பண்ணுது, நாம ரெண்டு வருஷம் முன்னாலே இதே மாதிரி ஒரு கான்ட்ராக்ட்ட வோல்வோக்கு செஞ்சோம். ஞாபகம் இருக்கா? நீங்க அந்த ஃபைலைக் கொண்டு வாங்க” என்றான் சங்கர்.
இரண்டாவது மாடியில் ப்ராஜக்ட்ஸ் டிவிஷன் இருந்தது. அங்கு போய்த் தேடிக் கண்டுபிடித்து எடுக்க அரைமணி நேரம் ஆகி விட்டது. வரலட்சுமி சங்கரின் அறைக்குள் சென்று அவனிடம் ஃபைலைக் கொடுத்தாள்.
“ஓ, யூ ஆர் வெரி ஃபாஸ்ட். தேங்க்ஸ்” என்றான் சங்கர்.
‘இன்று இவனுக்கு என்ன ஆகி விட்டது?’ என்று வரலட்சுமி நினைத்தாள். ‘என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் பாராட்டுக்களைக் குமிக்கிறானே!’
“என்னடா இவன் இன்னிக்கி பாராட்டிக்கிட்டே இருக்கானேன்னு நினைக்கிறீங்களா?”
அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“இன்னும் ஒரே ஒரு பாராட்டுதான் மிச்சம்” என்ற சங்கர் அவளைப் பார்த்தான்.
அவளுக்கு எதுவும் சொல்லத் தோன்றாததால் அவனைப் பார்த்தபடி நின்றாள்.
“இந்த ஸாரி உங்களுக்கு ரொம்ப அழகாயிருக்கு” என்றான்.
இதை நிச்சயமாக அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவன் வார்த்தைகள் தூக்கி எறிந்த சந்தோஷத்தை அவளால் பிடித்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
அவள் ஒருமுறை மேலிருந்து கீழாகத் தன்னையே பார்த்துக் கொண்டாள். காமாசோமாவா அல்லது அழகா?
“தாங்க் யூ சார்” என்றாள் அவள்.
“புடவை மட்டுமில்லே, நீங்களும்தான்” என்றான் சங்கர்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
“சார், நீங்க இப்பிடிப் பேசுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.” அவளுக்குத் தன் நிதானத்தைப் பற்றி ஆச்சரியம் எழுந்தது. ஏன் அவன் கூறியதைக் கேட்டதும் ஷட்டப் என்று தன்னால் திருப்பி அடிக்க முடியவில்லை.? வேலையைப் பற்றிய பயமா?
“டோன்ட் மிஸ்டேக் மீ. கொஞ்ச நாளாவே எனக்கு சொல்லணும்னு இருந்துது. சொல்லிட்டேன். நான் பாஸ்னு பேசலே. ஜஸ்ட் லைக் எ ஃப்ரெண்ட். உங்களுக்குப் பிடிக்கலேன்னா பரவாயில்லே. யூ கேன் லீவிட். வீ வில் ரிமெய்ன் அஸ் கலீக்ஸ்.”
அவள் அவன் கண்களை நேரடியாகச் சந்தித்தாள். நடிக்கின்றானா? ஏற்கனவே இம்மாதிரிப் பேச்சைப் பலமுறை பேசிச் சோதித்துக் கொண்டிருந்திருப்பானோ? ஆனால் அவன் கண்களையோ முகத்தையோ தாழ்த்திக் கொள்ளாமல் அவளைப் பார்த்தான்.
அவளுக்குத்தான் எதிர்பாராத தாக்குதலாக அவள் மேல் பட்டது போலிருந்தது. ஆனால் அவன் முகமும் பார்க்கும் விதமும் அவளுக்கு அவன் மீது எரிச்சலையோ பயத்தையோ ஏன் உண்டாக்கவில்லை என்று நினைத்தாள்.
அவள் எதுவும் பேசாமல் தன்னிடத்திற்குத் திரும்பினாள். அவன் முன்னால் காண்பித்துக் கொள்ளா விட்டாலும் அதிர்ச்சியின் வலிமை அவள் உள்ளே உந்திக் கொண்டிருந்தது. அவன் மீது அவள் கொண்டிருந்த மரியாதையை அவன் சிதைத்து விட்டானா? ஆனால் ‘லெட்ஸ் ரிமெய்ன் கலீக்ஸ்’ என்ற தருணத்தில் அவன் மீது மதிப்பு கூடியதே தவிர குறையவில்லையே? அவளைத் தனக்குச் சமமான ஜீவன் என்று நினைத்த போக்குதானே அதில் தென்பட்டது? தன்னுடைய பாராட்டு அவளுக்கு நிம்மதியைத் தராத பட்சத்தில் அதைத் தொடர வேண்டியதில்லை என்று சொன்னதில் அவர்களுக்கு
இடையே இருந்த ஆபீஸ்தனம் விலகிச் சென்று விட்டது போல அவளுக்குத் தோன்றியது.
வீடு திரும்பியதும் இதை ரகுவிடம் சொன்னால்……
இதுக்குத்தான் ஒழுங்கா டிரஸ் பண்ணிண்டு போன்னு ஒரு நாளைப் போல அடிச்சிண்டேன். உனக்கு மண்டைக் கர்வம் ஜாஸ்தி. ரொம்ப அழகுன்னு நெனப்பு. வச்சுக் கிழிச்சிட்டான். முதல்லே இந்தப் புடவையைக் கழட்டி நெருப்பு வச்சுக் கொளுத்து. மூவாயிரத்தை அக்கினி பகவானுக்குப் போட்டேன்னு நினைச்சுக்கிறேன் . அவனோ உங்க ஆபீஸ்லே பவர்ஃபுல்னு சொல்லிண்டு இருக்கே. நான் இது மாதிரியெல்லாம் நடத்துக்கவே இல்லையேன்னு உன் மேலே காம்ப்ளெய்ண்ட்ட கொடுத்து உன்னை வீட்டுக்கு அனுப்பிச்சிட்டா? நாமதான் தெருவிலே நின்னுண்டு சிங்கி அடிக்கணும். நீ ஏன் தனியே அவன் ரூமுக்குப் போகணும்? கூட யாராவது இருக்கற மாதிரி போயிருக்கணும். பெரிய ரௌடியா இருப்பான் போல. இதுபத்தி உங்க ஆபீஸ்ல யார்கிட்டயாவது பேசினியா? இல்லியா? நல்லதாப் போச்சு. கோவிட்டு அது இதுன்னு வேலை போயி அவனவன் செத்துண்டு இருக்கான். வேலையைக் காப்பாத்திக்கறது முக்கியம் இல்லியா? நீ இனிமே ஜாக்கிரதையா அவன் கிட்டே இருக்கணும்.
மணி ஐந்தரை அடித்ததும் அவள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள். வேனில் ஏறிக் கொண்டாள். காலையில் வந்ததைப் போலவே இப்போதும் அவள் அருகே இந்து.
“அது எப்படி நீ காலம்பற பாத்தா மாதிரி இப்பவும் ஃப்ரெஷ்ஷா வர்றே?” என்றாள். வரலட்சுமி புன்னகையை அவளுக்குப் பதிலாகத் தந்தாள். உள்வலி முகத்தில் தெரியவில்லை என்று மனதில் நிம்மதி ஏற்பட்டது.
அன்றிரவு அவர்கள் சாப்பிடும் போது ரகுராமன் வழக்கம் போல அவளிடம் “இன்னிக்கி என்ன விசேஷம் உங்க ஆபீஸ்லே?” என்று கேட்டான்.
வரலட்சுமி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு ” அதை ஏன் கேக்கறேள்? இன்னிக்கிப் பெரிய கலாட்டா” என்றாள். “எங்க ஆபீஸ்லே முத்தம்மா இருக்கால்லியோ, அவ ஒரு கம்ப்ளெயிண்ட்டை எடுத்துண்டு வந்து…”
பாற்கடல் என்ற தலைப்பு; வாழ்க்கை என்றால் நஞ்சும் அமுதும் கலந்து கட்டி இருக்கும் என்பதாலா? வரலக்ஷ்மி என்றால் இருக்கும் இடம் பாற்கடல் ஆகிவிடும் என்று பொருளா?