சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்

ஒரு குன்றின் முகட்டில் இருந்து பார்த்த போது கண்ணுக்கு எட்டிய வரை பெரும் பாறைகளாலான குவியல்கள் தான் தெரிந்தன. சற்று உற்று நோக்கிய பின் இந்த கொந்தளிப்பை ஆங்காங்கே சீர் செய்வது போல அந்த கருங்கற்களை கொண்டே வடிவமைக்கப்பட்ட சுவர்களும், கோபுரங்களும், தூண்களும் சிதிலங்களாக நின்று கொண்டிருப்பது தெரிந்தது. இவற்றின் ஊடே ஒரு கருநீல நாகம் போல துங்கபத்திரா நதி வளைந்து ஓடி கொண்டிருக்க, ஈரப் பாறைகளின் மேல் பாசி போல தென்னையும், வாழையும், நெல் பயிரும் பச்சைத் திட்டுக்களாக கீழே பரவிக் கிடந்தது. தூரத்தில் தெரிந்த கமலாபுரம் ஏரி மேற்கின் விளிம்பில் மறையும் சூரியனின் ஒளியால் தகித்தது. ஹம்பி, இந்த மாலை வேளையில், கோவில்களின் சுவற்றில் தீட்டப்பட்ட புராதன ஓவியங்கள் அகல் விளக்கின் சிறு ஒளியில் மிளிர்வது போல ஒரு தோற்றத்தை எங்களுக்கு அளித்தது. ஆனால் இந்த எழில் ஒரு மேற்பூச்சே. ஏறக்குறைய நானுற்று ஐம்பது வருடங்களாக ஒரு பெரும் சோகத்தைத் தன்னூடே புதைத்து வைத்து கொண்டிருக்கிறது இந்த நிலம்.

இருபத்திமூன்றாம் நாள் ஜனவரி மாதம் 1565 ஆம் ஆண்டு கிருஷ்ணா நதிக் கரையில் அமைந்திருக்கும் தலிக்கோட்டாவில் ஐந்து பஹ்மானி சுல்தான்களின் கூட்டுப் படைகளுடன் விஜயநகர படைகள் மோதின. போர் விஜயநகர மக்களுக்கு புதிதல்ல. ஏறக்குறைய இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக விஜயநகரப் பேரரசு போரின் வாயிலாகவே விரிவடைந்திருக்கிறது. வெற்றிகளின் அணிவகுப்பு விஜயநகரம் ஒரு அழிக்க முடியாத சக்தி என்ற எண்ணத்தை வேரூன்றியிருந்தது. எங்கோ இரு நூறு கிலோமீட்டர் தொலைவில் நடக்கும் யுத்தம் விஜயநகர மக்களின் அன்றாட வேலைகளை பாதிக்கவில்லை. ஆனால் அவை அனைத்தும் சில தினங்களிலேயே முழு முடிவிற்கு வந்துவிடும் என்று அவர்கள் கனவிலும் கூட எண்ணியதில்லை. அது தான் நடந்தது. பெரும் விஜயநகரப் படையை வழி நடத்திச் சென்ற ராமராயா போரில் சிறை பிடிக்கபட்டு அவரின் தலைத் துண்டிக்கப்பட்டது. விஜயநகரப் படைகள் சிதறின. மூன்று நாட்களில் சுல்தான்களின் படைகள் விஜயநகரத்தை அடைந்தன. ஓர் ஊழித் தாண்டவம் தொடங்கியது.

கிருஷ்ண தேவ ராயர் காலத்திலேயே ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்த தலைநகரம் சில நாட்களிலேயே இடுகாடானது; போர்துகீச யாத்ரி டாமிங்கோ பேஸ் விஜயநகரில் நாட்டியம் ஆடும் பெண்கள் கூட செல்வ செழிப்போடு இருந்தனர் என்று குறிப்பிட்ட அளவிட இயலாத செல்வம் சூறையாடப்பட்டது; சிற்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ என்று ஐயப்படும் அளவிற்கு செதுக்கப்பட்ட பல கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இருநூற்று ஐம்பது வருட காலம் தென் இந்தியாவிற்கு ஒரு அரணாய் இருந்த சாம்ராஜ்யத்தை பேரிருள் கவ்வியது. அன்று பூமியில் புதைந்த நகரம் மீண்டும் மீளவே இல்லை. விஜயநகர் அழிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அங்கு வந்த இத்தாலியன் யாத்திரிகர் பிரெட்ரேசி இந்த நகரின் காலி வீடுகளில் புலிகளும், கொடிய மிருகங்களும் தான் வசிக்கின்றன என்று எழுதி வைத்திருக்கிறர்.

வரலாற்று ஆராய்ச்சியாளர் ராபர்ட் சியூவெல் இந்த நகரத்தின் அழிவைப் பற்றி குறிப்பிடும்போது, உலக வரலாற்றிலேயே ஒரு செழுமையான நகரம் இதை போல திடீர் அழிவை கண்டதில்லை. ஒரு நாள் செல்வமும், செழிப்பும், உழைப்பும் கொண்ட நகரம் மறு நாளே வர்ணிக்க இயலாத கொடும் வன்முறைகளால் சிதைக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார்.

இன்றைய ஹம்பியில் ஒரு நகரம் வேரோடுப் பிடுங்கப்பட்டதின் வலியோ, அதன் அலங்கோலங்களோ தென்படவில்லை. மாறாக சீரான சாலைகளும், நேர்த்தியான வழிகாட்டிப் பலகைகளும், செதுக்கப்பட்ட புல் தரைகளும், பூக்கள் குலுங்கும் மரங்களும், மீட்டெடுக்கப்பட்ட இடிபாடுகள் மேல் இரவில் பாய்ச்சப்படும் வண்ண விளக்குகளின் ஒளியும் ஒரு மாபெரும் நகரத்தின் சிதிலத்தை கூட ஒரு கலைக் காட்சியாக மாற்றி காண்பிக்கிறது. சாயம் பூசப்படாத இந்த நகரின் வடுக்களை, புதர் மண்டிக் கிடக்கும் கட்டமைப்புகளை, போரில் வீழ்ந்த வீரர்களைப் போல் சிதறிக் கிடக்கும் தூண்களைக் காண வேண்டும் என்றால் ஹம்பிக்கு மிக அருகில் இருக்கும் கமலாபுரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஹம்பியின் அகழ்வாராய்ச்சிக்கு முன் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை காணலாம். இல்லை என்றால் இருந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டே 1856ல் அலெக்சாண்டர் க்ரீன்லா எடுத்த புகைப்படங்களை வலையில் இங்கே காணலாம். வலியை சற்று உணரலாம்.

ஹம்பி ஒரு வெந்து தணிந்த காடு என்று பலர் கூறினாலும் மூன்று நாள் யாத்திரையில் எங்கள் கண்களில் பட்டது என்னவோ இன்னமும் உயிருடன் இருக்கும் சில தீக்கங்குகளே.

மலையவந்த ரகுநாத சுவாமிக் கோவிலில் நுழைந்த உடன் செஞ்சாந்துத் திலகமும், அலையாடும் வெள்ளை தாடியுடன், விலா எலும்புகள் தெரிய ஒரு பெரியவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி எங்களை வரவேற்றார். கோவிலின் கருவறையில் இருந்து சிறு மணியின் சத்தமும், துளசிதாசின் ராமச்சரிதமானஸ் யாரோ உரக்கப் படிக்கும் ஓசையும் கேட்டன. எங்களுக்கு அது ஆச்சர்யமாக இருந்தது. ஹம்பியில் இப்பொழுது இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்கள் வெறும் சிற்பங்கள் நிறைந்த கருங்கல் அமைப்புகளே. கருவறையில் இருந்த தெய்வங்கள் எப்போதோ மறைந்துவிட்டன. ஹசாரே ராமர் கோவில் பிராகாரத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ராமாயண காட்சிகள் அனைத்தும் அழகியலின் உச்சம். ஆனால் கருவறையில் இருட்டும், வவ்வால்களின் எச்சத்தின் நெடியும் தான் நிரம்பி இருக்கிறது. விட்டலா கோவிலின் கருவறையில் ஏதாவது இருக்கட்டுமே என்று யாரோ எண்ணியது போல இரு பெரும் சதுரக் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. விட்டலை தரிசிக்க வேண்டும் என்றால் வெளியே புகழ்ப் பெற்ற கல்த்தேரின் முகட்டில் தான் காண முடிகிறது.

‘உள்ளே செல்லுங்கள்’ என்று பெரியவர் கைகாண்பித்தார். ஒரு பெரும் பாறையில் ராமர், சீதை, லக்ஷ்மணருடன் அனுமாரும் காட்சிக் கொடுக்கின்றனர். இந்தப் பாறையை சுற்றியே மண்டபம் அமைக்கப் பெற்றுருக்கிறது. கருவறையின் விமானம் பாறையின் மேல் துருத்தி கொண்டிருப்பது ஒரு விசித்திரம். நான்கு வருடம் முன் டெல்லியிலிருந்து வந்த வாலிபர் ஒருவர் பூஜை செய்துக் கொண்டிருந்தார். ‘இங்கே பார்த்தீர்களா இந்த ஒரு கோவிலில் தான் ராமரை தவக் கோலத்தில் காண முடியும், அனுமனை கவனித்தீர்களா இரண்டு உள்ளங்கைகளையும் விரித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்’ என்று உற்சாகத்துடன் விவரித்தார். ‘டெல்லியிலிருந்து இங்கே எங்கே ?’ என்று கேட்டதற்கு ‘வந்தேன், பிடித்து விட்டது, தங்கி விட்டேன்’ என்று சுருக்கமாக பதிலளித்தார். இங்கே பல ஆண்டுகளாக வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ராமச்சரிதமானஸ் பாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ராம நவமி மற்றும் பிற உற்சவக் காலங்களில் நல்ல கூட்டம் கூடும் என்றும் இஸ்கான் அமைப்பினர் பலர், இந்த கோவிலுக்கு வருவது உண்டு, என்று எங்களின் வழிகாட்டியான ஆட்டோ ஓட்டுனர் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்தார்.

விரூபாக்ஷக் கோவில் கோபுரத்தின் முன் வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு தேர்களும், பல நூற்றாண்டுகள் முன் ஓர் பெரும் கடை வீதி இருந்ததாக அறியப்பட்ட வீதியில் வண்ணப் பொடிச் சிதறல்களும், இன்னும் சில மணியில் மூடி விடுவோம் என்று அவசர கதியில் இயங்கிய இனிப்புப் பலகார கடைகளும் தேர்த் திருவிழா முடிந்து விட்டது என்று அறிவித்தது. சற்று சோர்ந்துப் போனோம். அதற்குக் காரணம் உண்டு.

அன்றைய விஜயநகரத்திற்கு வந்த வெளிநாட்டு யாத்ரீகர்கள் இந்த நகரின் செல்வத்தைக் கண்டு மலைத்ததுப் போல விழாக்களில் மக்களின் பங்களிப்பையும், கரைப் புரண்டோடும் உற்சாகத்தையும் கண்டு ஆச்சரியத்துடன் பதிவிட்டிருக்கின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகரத்திற்கு வந்த இத்தாலிய யாத்ரீகன் நிக்கோலோ காண்டி அசைந்தாடி வரும் தேர்களுக்கு இடையே விலையுயர்ந்த நகைகளுடன் நடனமாடி வரும் பெண்களையும் அவர்களை தொடர்ந்து வரும் மக்கள் வெள்ளத்தையும், பண்டிகைகளில் ஊரெங்கும் மிளிரும் கோடிக்கணக்கான விளக்குகளையும், வண்ணப் பொடிக் கலந்த நீரை அரசன் ஆண்டி என்று பாராமல் எல்லோர் மேலும் பீய்ச்சும் களியாட்டங்களையும் ஒரு வித பிரமிப்போடு விவரிக்கிறார். இந்த வர்ணனைகளால் மனதில் எழும் படிமங்களை இன்றய ஹம்பியில் காண இயலாது என்று அறிந்திருந்தாலும், ஒரு சிறு விழாவையேனும் இந்தத் தொல் நகரில் கண்டு அதை மனத்திரையில் பண்டைய விழாவாகக் கற்பிதம் செய்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு நழுவி விட்டதே என்ற எண்ணமே எங்கள் சிறு சோர்விற்கானக் காரணம்.

‘தேர்த் திருவிழா இங்கே முடிந்து விட்டால் என்ன…கோதண்டராம சுவாமிக் கோவிலில் இன்று ரதோத்ஸவம், அங்கே போகலாம்’ என்றார் ஆட்டோ ஓட்டுனர். துங்கபத்திராவின் கரையில் ஒரு மேட்டில் அமைந்திருக்கிறது இக் கோவில். ஆலயம் சிறியது தான், முழுதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு வெயிலில் பிரகாசித்தது. இந்த வெள்ளைப் பட்டில் சிந்திய வண்ணங்கள்ப் போல யானையின் மீதிருந்த சிவப்புப் பட்டும், வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய மரத்தேரில் இருந்த வண்ணக் கொடிகளும் ஒளிர்ந்தன. தேரைச் சுற்றி சுமார் முந்நூறு பேரே இருந்திருப்பார்கள், ஆனால் சமூக இடைவெளிக்கும், வெறிச்சோடிய சாலைகளுக்கும் பழகிய எங்கள் கண்களுக்கு அது ஜனத்திரளாகத்தான் தோன்றியது.

வண்ணச் சீலைகள் அணிந்து இடுப்பில் தொற்றிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு வாயில் ஏதோ திணித்தபடியே தேரைத் தொட்டுத் தொட்டு கண்களில் ஒற்றி கொண்ட பெண்களும் , நடப்பவை அத்தனையையும் கைப்பேசியில் அடக்க இங்கும் அங்கும் ஓடும் இளைஞர்களும் , யானையின் தும்பிக்கை தலையை வருட பயமும், மகிழ்ச்சியும் கலந்து சிரிக்கும் சிறார்களும், தேர் நகரத் தொடங்கிய பின் அதன் மேல் தூவப்பட்ட வண்ண மலர்களும், எழுந்த கோஷங்களும், பறை, தப்பட்டைகளின் அதிர்வும் புதியதல்ல. இன்றும் பல திருவிழாக்களில் காணப்படும் காட்சிகளே. ஆனாலும் துங்கை நதிக்கரையில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு சிதிலம் அடைந்த மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு இந்தக் காட்சிகளை காணும் பொழுது பல காலங்களாக தொடரும் ஓர் தொன்மையானக் கலாச்சார நீள் சங்கிலியின் இணைப்பு தான் இந்த விழா என்ற எண்ணம் மனதில் நிழலாடியது.

இக்கோவிலுக்கு அருகே துங்கபத்திரா நதி குறுகி, வளைந்து நீரில் சூழலை உண்டாக்குகிறது . சக்ரதீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் பரிசலில் பயணித்தோம். பரிசல்காரர் தமிழிலேயே பேசினார். ஆறு மாதம் பரிசலும் மற்ற நேரங்களில் விவசாயத்தை கவனிப்பதாக சொன்னார். நதியின் ஒரு கரை பாறைகளால் வானத்தைத் தொட்டது. மழைக் காலங்களில் அதோ அது வரை நீர் செல்லும் என்று கைதூக்கி காண்பித்தார், அவர் சுட்டிய இடம் இப்பொழுது நீர் இருக்கும் நிலையிலிருந்து ஏறக்குறைய முப்பது அடி மேலே இருந்தது. இங்கே எவ்வளவு ஆழம் என்று கேட்டதற்கு நாற்பது அடி இருக்கலாம் என்று துடுப்பை லாவகமாக சுற்றிய படியே பதிலளித்தார் கரும்பச்சை நிறத்தில் இருந்த நீர் ஆழங்களை மறைத்தது. உள்ளே தூங்கி கொண்டிருக்கும் நிசப்தமான பெரும் பாறைகளை நினைத்த போது கைகள் சற்று சில்லிட்டன. பரிசலின் விளிம்பை தன்னிச்சையாக கை விரல்கள் இறுக்கிக் கொண்டன. கரையில் மணடபங்களும், பாறைகளில் குடையப்பட்ட தெய்வங்களின் சிறு சந்நிதிகளும், மீன்களின் சிற்பங்களும், சிவலிங்கங்களும் மெதுவாக நகர்ந்தன.

உச்சி வெயில் தகித்தாலும் நீர் குளிர்ந்திருந்தது. இரு எதிர் துருவங்கள் இடையே பரிசலில் மிதந்து கொண்டிருந்தது ஒரு சுகமான அனுபவமாக இருந்ததால் கண்களை சற்று மூடிக்கொண்டேன். ‘என்னா சார் போர் அடிக்குதா’ என்று வினவிய பரிசல்காரர் என் பதிலுக்கு காத்திராமல், தன் காலால் பரிசலை எத்தி துடுப்பை வேகமாக சுழட்டி பரிசலை ஒரே இடத்திலேயே தட்டாமாலை சுற்றுவது போல் சுற்றி விட்டார். சில நிமிடங்களுக்கு நீல வானம், கரும் பாறை, ஆழ்ப் பச்சை நீர் என்று துண்டுக் காட்சிகள் ஒன்றில் ஒன்று அமிழ்ந்து ஒரு வண்ணக்கலவை வட்டமிட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வட இந்தியாவில் ஹோலி பண்டிகையின் பொதுக் குடித்த பாங்கின் விளைவு சிறிதளவு இப்பிடித்தான் இருந்தது. கரையில் ஒரு குடும்பம் பாறைகளில் இறங்கி நதியின் நீரை தலையில் தெளித்து கொண்டிருந்தது. ‘பார்த்து பாறை வழுக்கும்’ என்று பரிசல்காரன் கன்னடத்தில் குரல் கொடுக்க ‘நாங்கள்ளாம் கடல்லயே குளிக்கிறவங்க’ என்று பெரியவர் பதிலளித்தார். ‘சொல்றதை கேக்கமாட்டாங்க’ என்று பரிசல்காரர் முணுமுணுத்துக் கொண்டாலும் அவரது கண்கள் பாறையின் விளிம்பில் கையில் குழந்தையுடன் நதியில் இறங்க தயாராக இருக்கும் பெண்ணிடமும், பக்கத்தில் அவள் கையை பிடித்துக் கொண்டிருக்கும் மூதாட்டி மீதும் கவலையோடு படர்ந்தது. நல்ல மனிதர்.

விஜயநகர சாம்ராஜ்யத்தின் முதல் தலைநகரமான ஆனேகுந்தி இன்றைய ஹம்பிக்கு வடக்கு திசையில் துங்கபத்திரா நதியின் மறுகரையில் அமைந்திருக்கிறது. இந்தப் பிரதேசம் ராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தயே என்ற நம்பிக்கை பலமாக வேரூன்றியிருப்பதை இங்கு காணலாம். ‘இம்பரில் பொன்னின் நாடு இழிந்தது அன்ன, வாலி வாழ் பொருப்பு இடம்’ என்று கம்பன் கிஷ்கின்தயின் பெருமையை கூறுவதற்கு ஏற்ப இங்குள்ள பல இடங்களில் ராமாயண தடங்களை பெருமையுடன் சுமக்கின்றன. சபரி தபஸ் செய்ததாக கூறப்படும் குகையும் அதன் அருகில் அமைந்திருக்கும் பம்பா சரோவர் என்ற குளமும், அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையும், ராமன் சுக்ரீவனையும், அனுமனையும் முதலில் கண்ட இடமும், வாலியின் கோட்டையும் என்று அனுமனின் வால்ப் போல நீண்டுக் கொண்டே போகிறது ராமாயணத் தடங்கள். இந்தப் பகுதியில் விரிந்து, பரந்து பாயும் துங்கபத்திரா நதியின் ஒரு சிறு தீவில் ஒன்பது மத்வத் துறவிகளின் பிருந்தாவனம் அமையப் பெற்றிருக்கிறது. மிகவும் அமைதியான பிரதேசம். நவ பிருந்தாவனம் என்று அழையப்படும் இந்த இடத்தில் 14ஆம் நூற்றாண்டிலிருந்த ஸ்ரீ பத்மநாப தீர்த்தரிலிருந்து 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் வரை கோவில் கொண்டிருக்கிறார்கள். பொன்ப் பித்து பிடித்த மனங்களின் அழிவுச் செயல்கள் இந்தத் துறவிகளின் பிருந்தாவனத்தை கூட விடவில்லை. 2019ல் ஸ்ரீ வ்யாசராஜா தீர்த்தரின் பிருந்தாவனம் புதையல் இருக்குமோ என்ற சந்தேகத்தினால் சிதிலபடுத்தப்பட்டது. அந்த தீச்செயலின் விளைவால் இன்று பிருந்தாவனத்தை சுற்றிலும் அந்த சூழ்நிலைக்கு சற்றும் ஒவ்வாத இரும்புக் கம்பி வேலிப் போடப்பட்டு, கண்காணிப்பு கருவிகள் பொருத்தப் பட்டிருக்கின்றன.

ஹம்பியின் பெரும் பாறைக் குவியல்களான நிலப்பரப்பு பூமி அதிர்வினாலோ, எரிமலைகளினால் கக்கப் பட்ட தீக் குழம்பினாலோ ஏற்பட்டவை அல்ல. நிலத்தின் மேல் முட்டி நிற்கும் கருங்கற்கள் நீராலும், காற்றாலும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக செதுக்கப்பட்டு வருபவை. இவற்றின் விசித்திர படைப்புகளை ஹம்பி முழுவதும் காணலாம். சிறு பாறைகளின் மேல் ஏறி நிற்கும் பெரும்பாறைகளின் அதிசயத்தை இங்கு வழிகாட்டிகள் சுட்டி காட்டுவார்கள். எங்களை பொறுத்தவரை அந்தக் காட்சி விஜயநகரத்திற்கான ஒரு உருவகமே. ஓர் பெரும் கலாச்சாரத்தை தன் சிறு கைகளாலே பல நூறு ஆண்டுகள் தூக்கி நிறுத்திய விந்தயை இங்கு தான் காண முடிந்தது.

இக்கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் வரலாற்றுத் தரவுகள் கீழ்க்காணும் நூல்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை

  1. Robert Sewell, A Forgotten Empire, The Asian Publications, 2017, Chennai
  2. Manu S. Pillai, Rebel Sultans, Juggernaut Books, 2018
  3. Prema Kasturi and G Sundaram (Edited), South India Heritage, EastWest Books, 2011
  4. The Vijayanagar Empire: Chronicles of Paes and Nuniz, Asian Educational Services, 2003

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.