
(1)
திடுக்கென்று
திரும்பிப் பார்க்கிறேன் –
என் முதுகின் குரல்.
(2)
தன் நிழலில்லாத்
தன் வெயிலில் சுகி-
தகிப்பில்லை.
(3)
விட்டு விட்டுப் பூக்கும்
காட்டின் அமைதி
குயிலோசையில்
(4)
பாழ் வெளி.
புகலில்லை.
வெயில் நிழலுக்கு அலையும்.
(5)
நிசிப் பொய்கை
நிரம்பி ’மீன்’கள்-
நிலவு தூண்டிலே போடாமல்.
(6)
உன் நிலவைத் தூக்கிக் கொண்டு
நள்யாமத்தில் என் வானைத் தேடுகிறேன்
என் நிலவு காணாமல்.
(7)
உதைத்துக் காலுற்ற பந்து
சினமடங்கச் சற்று
நேரமாகிறது.
(8)
இடிந்த வீட்டினுள்
இடிந்து விடாமல்
ஆகாயம்.
(9)
பறவைகள்
பறந்து தீர்ந்த வானம்
மிகுந்து மோனம்.
(10)
நேர்ந்து விட்ட புதிய சேவலோடு
பழைய சேவல் சண்டை!
பாவம் சாமி! தீர்த்து வைக்க முடியாமல்-
(11)
முருங்கை நுனிக்கிளையில்- ”களுக்”-
முதலில் ’ஆகா’ !
குருகு பிறகு!
(12)
திக்குத் தெரியாத காட்டில்
அலையும் நிசி-
நிலவு நெற்றி வியர்க்க
(13)
எதிரெதிர் ஈருருவங்கள் வெளியில் –
எது உள்ளே, எது வெளியே—
இடைவிடா இழுபறி-
(14)
யாருக்கு
யாருடையதுமில்லாத விழி
யாதுமறிய ?
(15)
சிறு பட்டாம் பூச்சியின்
குறு நிழல்- உதிர்ந்த
சொற்ப வெயிற் சிறகா?
(16)
சுடருக்கு நினைவில்லை
சற்று முன்பு தான் விரட்டிய
குருட்டு இருளை.
(17)
ஒளிவில்லை.
தொடரும் வேவு பார்த்து
தொல் நிழல்.
(18)
நீர்க்குளம் வறள- தன்
நிழல்மீன் கொத்துகிறதா
நோற்கும் கொக்கு ?
(19)
எவ்வளவு அவசரமோ
அவ்வளவு அவசரமாய்க் கடக்கிறது
எவ்வளவு நேரமாய்க் கம்பளிப் பூச்சி!
(20)
விடாது காடு நினைவு கூரும்
ஒவ்வொரு சருகையும்
காடு மெத்தி.
(21)
நிழல்களும் தனிமையாய் இல்லை.
நடமாட்டமில்லை.
வெறுமை.
(22)
தன்னந் தனி நான்-
ஒரு விநாடி நகர்வதற்குள்
அடுத்த விநாடி நெருக்குகிறது.
மிக அருமை !!!