குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா?

கோவிட-19 பெருந்தொற்றின் உச்சத்தில் மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்து தெருக்கள் காலியாக இருந்த போது, வெளிப்புற இடங்களை விலங்குகள் மீட்டுக் கொண்டதாகக் காட்டும் போட்டோக்களும் காணொளிகளும் வெளிப்பட்டன. இந்த பிம்பங்கள் இயற்கை உரிய இடத்தை மீண்டும் கைப்பற்றி விட்டது என்னும் நல்ல சேதியை உணர்த்துவதாகக் கருதி பலராலும் பகிரப்பட்டன.

இருப்பினும் தாய்லாந்தின் லோப்புரியில் (lopbury ) இருந்து வந்த ஒரு காணொளிப் பதிவு பிரளயத்தைப் போன்ற காட்சியை சித்தரித்தது. நூற்றுக் கணக்கில் மக்காக் எனப்படும் நீண்ட வால் குரங்குகள் தெருக்களில் தெரிவதையும் ,அவற்றின் கண்ணில் பட்ட துர்பாக்கியசாலியிடமிருந்து ஏதாவது உணவுப் பொருள் துணுக்குகளைப் பறித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு அவனை விடாமல் தூரத்துவதையும் காணொளி காட்டியது. இக்குரங்குகள் சுற்றுலாப் பயணிகளிடம் உணவுப் பொருள் பெறுவதைப் பழக்கமாகக் கொண்டவை. அதன் விளைவாக கோயில் இடிபாடுகளைச் சுற்றி ஒரு வெற்றிகரமான விலங்கு உணவளிப்புத் தொழில் உருவாகி இருந்தது. பெருந்தொற்று உண்டாக்கிய லாக்டௌன்கள் மற்றும் பயணத் தடைகளால் இது போன்ற சுலப உணவு ஆதாரங்கள் காணாமல் போய்விட்டன. மனிதரைச் சார்ந்து வாழும் குரங்குகள் வேறு வழியின்றி தெருக்களை ஆக்கிரமித்தன..

உலகமெங்கும் விலங்குகளுக்கு உணவளிப்பது மக்களுக்கு பெருமகிழ்ச்சி தருகிறது- உண்மையில் அது வாயில்லா ஜீவனுக்கு உணவு வழங்கும் செயல் (Provisioning)-புழக்கடை மற்றும் நகர் சதுக்கத்துக்கு வரும் பறவைகள், தெருக்களில் சுற்றித் திரியும் பூனை, நாய்கள் , தெருவில் உலாவும் முரட்டு கால்நடைகள் அல்லது கோயில்களில் குடியிருக்கும் குரங்குகள் அனைத்தையும் வாயில்லா ஜீவன்கள் என்னும் பகுப்பு உள்ளடக்குகிறது.

விலங்குகளுக்கு அவற்றின் சுற்றுச் சூழல் அளிக்கும் உணவுப் பொருள் இயற்கையில் அபரிமிதமாகவும், தரமாகவும் கிடைக்கும் போதே உணவு வழங்கல் (provisioning) சில ரூபங்களில் நடந்து வருகிறது. ஒன்று, மனிதர்கள் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தின்னக் கொடுப்பது; மற்றது, விளைநிலங்கள், பழத்தோட்டங்கள், காய்கறித் தோட்டங்கள் அல்லது விவசாயக் கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் கிடைக்கும் அபரிமிதமான தீவனங்களை விலங்குகள் தாமாகவே பயன்படுத்திக்கொள்ள விடுவது. மேலும் உணவு வழங்கல் சில நேரங்களில் குறிப்பிட்ட விலங்கினங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெடுப்பாக இருக்கலாம். குறிப்பாக மித வெப்ப மண்டலங்களில் வாழும் விலங்குகள் குளிர் காலத்தில் எதிர்கொள்ளும் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க இவ்வழி பயன் அளிக்கும். விலங்கியல் காட்சியகங்கள், பூங்காக்கள் போன்ற நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் நடைபெறும் உணவு வழங்கல் நிகழ்வுகளுக்கு கல்விசார் முக்கியத்துவம் உண்டு. மேலும் நகர்ப்புறங்களில் விலங்கின எண்ணிக்கை அதிகரிக்கச் செய்தல் மற்றும் நிறைவான இயற்கை-மனித நல்லிணக்க அனுபவங்கள் உருவாக்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தப் பயன்படும் ஒரே உத்தி உணவு வழங்கல் என்று கூறலாம்.

நம் வட்டாரங்களில் விலங்குகளுக்குத் தீனி போடுவதை நாம் எவ்வாறு அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டும்? இதில் சம்பந்தப் பட்டுளள விலங்குகள், பறவைகள், மனிதர்கள் மற்றும் சூழல்சார் அமைப்புகளின் பேசப்படாத ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய அவலங்கள் யாவை?

தம் அன்றாட வாழ்க்கைக்குள் மக்காக் (macaque) குரங்குகள் மேற்கொண்ட திடீர் ஆக்கிரமிப்பால் அதிர்ச்சி அடைந்த லோப்பரி மக்கள் இன்னும் அலைக்கழிப்பு குறித்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். குரங்குத் தொல்லை திரும்பவும் வராமல் தடுக்க என்ன செய்தார்கள்? மக்காக் குரங்குக்கு மேலும் அதிகமாக உணவு கொடுத்தார்கள். இவ்வாறாக உணவு வழங்கல் ஒரு பிசகான சுழற்சியை (vicious circle) உண்டாக்கியது. மக்கள் குரங்குகளுக்குத் தீனி போட்டார்கள். உணவளிப்புக்கு குரங்குகள் பழகிப் போயின ; மனிதர் பற்றிய அச்சம் முழுதுமாக அகன்றது ; அவை மனித இனம் உண்ணும் உணவையே மும்முரமாக நாடிச் சென்றன. மக்கள் உணவளிக்க மறுத்தால், குரங்குகள் அவர்களைத் தாக்க முற்பட்டன. அதையொட்டி மக்கள் அனைவரும் உணவளிக்க நிர்பந்திக்கப்படுவார்கள். இது தொடர்ந்து கொண்டிருக்கும்.

உணவளிக்கப்படும் குரங்குகள் பல நாடுகளில் மக்களுக்குப் பிரச்னை உண்டு பண்ணுவது தெரிய வந்திருக்கிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள புக்ஸா(BUXA) புலிகள் சரணாலயத்தின் அருகே, குரங்குகள் கடைகளை சூறையாடியும் வயல்களில் நாசம் செய்தும் வருவதைப் பற்றிய தங்கள் வருத்தங்களை மக்கள் கூறி இருக்கிறார்கள். முக்கியமாக லாக்டவுன்-க்குப் பின்னரே இந்த மாதிரி சம்பவங்கள் ஆரம்பித்தன. லாப்பரியைப் போலவே, புக்ஸா குரங்குகளுக்கும் சுற்றுலாப் பயணிகளால் உணவளிக்கப்படுவது பழக்கமாகி இருந்தது.

இந்த விவகாரங்கள் எழுவதின் காரணம் குரங்குகளின் தனிப்பட்ட குணாம்சம் என்று சொல்லிவிட முடியாது. பல மேற்கத்திய நாடுகளில், தெருக்களில் திரியும் பழக்கப்படாத (wild) காட்டுப் பூனைக் கூட்டங்கள் உணவளித்து பராமரிக்கப்படுகின்றனஇதன் தாக்கத்தால் உள்ளூர் பல்லுயிர் பெருக்கம் (bio-diversity) அழிவுறுகிறது. இந்தியாவில் நகரங்களிலும் கிராமங்களிலும் சுற்றித் திரியும் மில்லியன் கணக்கான உரிமை கோரப்படாத தெரு நாய்கள், மக்களால் வழங்கப்படும் உணவாலேயே விருத்தியாகின்றன. அவை அனைத்தும் உணவு வழங்காத மக்களை பகைமை உணர்வுடன் தாக்க முற்படுகின்றன.

இந்தியாவில் தெருநாய்களுக்கு அருகில் விளையாடும் குழந்தைகளே அதிகமாக வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப் படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் உணவு வழங்கும் விருப்பத்தோடு நெருங்கும் குறுகிய சந்தர்ப்பத்தில் கடிபடுகிறார்கள். மனித ரேபிஸ் வைரல் பிணி நிகழ்வுகளில் 96% -க்கு வெறிநாய்க்கடியே நோயின் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய வெறிநாய்க்கடி நோய் மரணங்களில் கிட்டதட்ட 45% ஆசியாக் கண்டத்தில் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. தெரு நாய்கள் ஹெப்பாட்டிட்டீஸ் E வைரஸ் -ன் சேமிப்புக் கிடங்குகளாகவும் செயல்படுகின்றன.

குரங்குகளிடமிருந்து நோய் வழியல் (spillover) அபாயமும் இருக்கிறது. பங்களாதேஷ் பிராந்தியத்தில் மக்காக் குரங்குகளிடம் பொதுவாகக் காணப்படும் சிமியன் ஃ போமி வைரஸ் (simian foamy vitus) மனிதர்களுக்கும் தொற்றக் கூடியதாக இருந்தாலும் அது மனிதருக்கு நோய் தருவதில்லை என்று பங்களாதேஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். எனினும் இந்த அல்லது பிற வைரஸ்களின் mutant variant மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கும் ஆபத்து எப்போதும் உள்ளது. இதே போல் மனிதர்கள் histoplasmosis மற்றும் candidiasis போன்ற பூஞ்சை நோய்களாலும் அல்லது salmonellosis போன்ற நுண்ணுயிரிசார் (bacterial) நோய்களாலும் பீடிக்கப் படுவதற்கான நிகழ்தகவை புறாக்களின் கழிவுகள், உதிரும் இறகுகள் அதிகரிக்கச் செய்கின்றன. உயர் புறா அடர்த்திக்கும் அதிகரித்து வரும் உணவு வழங்கல் நிகழ்வுகளுக்கும் தெளிவான தொடர்புள்ளது. மற்றும் அதுவே டெல்லியில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல் நோய் பரவலுக்கும் காரணம் என்றறிந்த நகராட்சி பொது சுகாதார ஊழியர்கள் புறாக்களுக்கு வழக்கமாக உணவு வழங்கும் இடங்களை விட்டு விலகி இருக்குமாறு மக்களை அறிவுறுத்துகிறார்கள்.

விலங்குகளுக்கு உணவு வழங்கலின் எதிர்மறை தாக்கங்களைப் பற்றி ஆழ்ந்த யோசனை செய்ய இயலாத அளவுக்கு மக்கள் தன்னலமற்றவர்களாய் ஒருவேளை இருக்கக் கூடும். இப்பழக்கம் ஏதாவது உயர் நன்மையை அளிக்கக் கூடியது என்று சொல்ல முடியுமா? சுருக்கமான விடை ‘இல்லை’ என்பதே.

உள்ளூர் விலங்கினத்தின் மீது வளர்ப்பு நாய்கள் ஏற்படுத்தும் எதிரிடை விளைவுகள் குறிப்பிடத்தக்கவை. வளர்ப்பு நாய்களால் தொடர்ந்து மனித உணவு ஆதாரங்களை அணுக முடிவதால் அவ்விளைவுகள் தீவிரம் அடைகின்றன. எடுத்துக்காட்டாக, சிலே(Chile ) நாட்டில் மனித நிதியுதவி பெற்று வளர்க்கப்படும் நாய்களால் சிறு ஆட்டுப் பண்ணைகளில் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் ஆண்டுக்கு ஆயிரக் கணக்கில் காயப்படுத்தப் படுகின்றன அல்லது கொல்லப்படுகின்றன. நம்மூரிலும் எண்பது விலங்கினங்கள் (அவற்றில் முப்பது அருகி வரும் விலங்கினங்கள் ) நாய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. IIT-Madras-ல் நாய்-ஆதரவு குழுவும் விலங்கின ஆதரவு குழுவும் தம் சண்டையைத் தீர்த்து வைக்க சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். காட்டில் நிறுவப் பட்டுள்ள இக்கல்லூரி வளாகத்தில் நூற்றுக் கணக்கான புள்ளி மான்களும் வெளிமான்களும் பல ஆண்டுகளாக வளர்ப்பு நாய்களால் கொல்லப்பட்டன என்பது விலங்கின ஆதரவுக் குழுவின் வாதம். பின்னர் நீதிமன்ற ஆணைப்படி நாய்கள் பாதுகாப்பிடத்தில் அடைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் சில கட்டிவைக்கப்பட்ட நிலையில் (captivity) இறந்து போயின. கடைசியில் நீதி மன்றம் வளர்ப்பு நாய்களை பாதுகாப்பிடத்தில் இருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டது.

இறுதியாக, தெரு நாய்கள் பெருகினால் அவை பிற விலங்கினங்களுக்கு பரப்பக் கூடிய நாய் நொடிப்பு நோய் (canine distemper) மற்றும் வெறிநாய்க்கடி நோய்ப் (rabies) பரவல் அதிகரிக்கும். அண்மையில் புனே மாவட்ட புல்வெளி நிலங்களில் 6 அருகிவரும் இந்திய ஓநாய்கள் நாய் நொடிப்பு நோய் தாக்கி உயிர் விட்டன. உணவு வழங்கப்படும் பறவைகளும் இதே போல் நோய் பரப்பக் கூடியவை. உணவு வழங்கப் படும் புறாக்களும் பிற பறவை இனங்களும் வேறு துணை உணவு வழங்கல் இடங்களில் கூட்டமாக கூடும் போது, நோய்க் கிருமிகள் பிற பறவை இனங்களுக்குப் பரவி, ஒட்டுமொத்த பறவை எண்ணிக்கையில் பரவலான வீழ்ச்சியை உண்டாக்குகிறது.

மக்காக் குரங்குகளுக்கு உணவிடுவது அவற்றின் வாழ்விடமான காடுகள் மீதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எடுத்துக் காட்டாக, வனாந்திரத்திலேயே வசிக்கும் குரங்குகளுடன் ஒப்பிடும் போது, பக்ஸாவில் (Buxa) உணவு வழங்கலைச் சார்ந்து வாழும் ரீசஸ் மக்காக் குரங்குகள், காடுகளின் இயல்பான விதை தெளிப்பு முகமையாகச் செயல்படுவதில்லை என்றே கருதலாம் இயற்கையான விதை தெளிப்பு நடைமுறைகள் காடுகளின் புதுப்பித்தல் மற்றும் ஈடு செய்தலுக்கு இன்றியமையாதவை. இறுதியில், உணவு வழங்கல் குரங்குகள் ஏற்படுத்தும் இத்தகைய சூழல்சார் தொகுதிப் பணி இழப்புகள் (loss of ecosystem services), வெப்ப மண்டல சூழல்சார் தொகுதிகளின் சிதைவுக்கு வழிவகுக்கும்.

உணவு வழங்கல், அதைப் பெறும் விலங்குகளுக்கும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பிரட்(Bread) போன்ற மிகு கலோரி, குறை ஊட்டச்சத்து மனித உணவுகளை உண்ணும் விலங்குகள் வழக்கமாக பருமனாகி (obese) விடுகின்றன; முடி உதிர்தல் நோய் வந்து விடுகிறது; உடல் உழைப்பை வெறுக்கும் அளவுக்கு சோர்வடைந்தும் உடலில் ஒட்டுண்ணிகள் நிறைந்தும் அவை நைந்து போகின்றன. வணிக முறை பறவைத் தீவன தயாரிப்புகள் பறவைகளைப் பல்வகை பூஞ்சை நச்சுப் பொருட்களின் (mycotoxins) தாக்குதலுக்கு உட்படுத்தக் கூடும். நெரிசலான சாலைகளில் உணவு வழங்கப்படும் போது விலங்குகள் சாலை விபத்துக்களில் சிக்கி மரணமடையும் அபாயம் உள்ளது. உணவளிக்கும் போது குரங்குகள், நாய்கள் போன்ற குழுக்களாக வாழும் விலங்குகள் இடையே ஏற்படும் குழுச்சண்டைகளால் அவ்விலங்குகள் பலத்த காயங்கள் பெறுவதோடு மரணங்களும் சம்பவிக்கக் கூடும்.

இறுதி வார்த்தை

மக்கள் உயரிய நோக்கத்தால் உந்தப் பட்டு விலங்குகளுக்கு உணவு அளித்தலை மேற்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும் அடுத்து எப்போதாவது தெய்வக் குறியீட்டுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவோ அல்லது நல்ல வினைப்பயனை சம்பாதிக்கவோ அல்லது பட்டினியாய்க் கிடக்கும் விலங்குக்கு உதவும் விதமாகவோ ஏதாவது ஒரு விலங்குக்கு உணவளிக்கும் பேராவல் உங்களுக்குள் எழுவதை நீங்கள் உணர்ந்தால், தயவு செய்து இந்த கேள்விகளை உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: என் செயலுக்கு திட்டமிடப்படாத விளைவுகள் உண்டா?

வாழுநருக்கோ (residents), சூழல்சார் தொகுதிகளுக்கோ (Ecosystems) அல்லது உணவைப் பெறும் விலங்குகள் அனைத்துக்குமோ என் செயலால் எதிர்மறையான அழுத்தம் ஏற்படுகிறதா?

வெனிஸ் நாட்டு செயின்ட் மார்க் சதுக்கத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் பறவைகளுக்கு உணவு வழங்குதல் சட்ட விரோதமானது என்று உத்தரவிட்டிருந்த போதிலும், இன்றும் அங்கே எக்கச்சக்கமான பறவைகளைக் காண முடிகிறது என்ற உண்மையை நீங்களே உங்களுக்கு நினைவூட்டிக் கொள்ளுங்கள்.

நாய்கள் அல்லது பூனைகளைத் தத்து எடுத்து உணவும் தங்குமிடமும் அளிப்பது தலைசிறந்த முடிவு. மக்காக் குரங்கைப் பொறுத்தவரை, அது இயல்பான மீள்தன்மை கொண்ட விலங்கினம். அது எந்த ஈக்கோ சிஸ்டத்திலும் தன்னை சரியாக இணைத்துக் கொள்ளும். நம் உதவி அதற்கு தேவைப்படாது.

விளக்கக் குறிப்புகள்

மக்காக் (macaque) : இவை ஆசியா கண்டத்தில் உள்ள நடுத்தர பரிமாணமுள்ள குரங்கு இனங்கள். மக்காக் குரங்குகள் என்றும் குறிப்பிடலாம். இவற்றில் நன்கு அறியப்பட்ட வகைக் குரங்கு வட இந்தியாவில் மிகுந்து காணப்படும் ரீசஸ் (rhesus) குரங்கு.

ரேபீஸ் (rabies): இது ஒரு கொடிய வைரஸ். வைரஸ் பாதிப்பு கொண்ட விலங்கின் எச்சில் மூலம் பிற விலங்குகளுக்கும் மனிதர்க்கும் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் நாய்களுக்கு ஏற்படுகிறது. நாய்க்கடி நோய் என்ற பெயரிலும் அறியப்படுகிறது

ஆசிரியர்கள் குறிப்பு:

Asmita Sengupta and Abi Tamim Vanak work at the Ashoka Trust for Research in Ecology and the Environment

சுட்டி : https://www.theindiaforum.in/article/why-feeding-monkeys-bad-forests

கட்டுரைதழுவல்மொழிபெயர்ப்புஅறிவியல்சூழலியல்

தி இந்தியா ஃ போரம் சஞ்சிகை ஏப்ரல் 22 வெளியீடு

One Reply to “குரங்குகளுக்குத் தீனி அளித்தால் வனங்கள் அழியுமா?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.