தமிழாக்கம்: தி.இரா.மீனா

அது அவர்களுடைய முதலிரவு. அவன் நள்ளிரவு வரை தன் கதைகளைச் சொல்லி அவளை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தான்.ஒரு வாழ்வின் பல்வேறுபட்ட அனுபவங்கள். இளம்பருவத்தில் ஒரு கன்று குட்டியின் மீதேறி சவாரி செய்த கதையைச் சொன்ன போது அவள் சிரிப்பில் குலுங்கினாள். வெளிநாட்டில் வேலை தேடிய போது அடைந்த துயரங்களைச் சொன்ன போது அவள் கண்கள் கலங்கின.தன் பத்திரிக்கை துறை அலுவலகத்திலுள்ள நீண்ட கூந்தலை உடைய இளம்பெண்ணின் மீதான காதலைச் சொன்ன போது கீழுதட்டைக் உதட்டை கடித்துக் கொண்டாள்.லேசாக இரத்தம் வந்தது.
“இப்போது நீ ஏதாவது சொல்லு சுஜாதா” என்றான் அவன்.
“எதைப் பற்றி?”
“எதைப்பற்றியாவது.உன் வாழ்க்கையின் அனுபவங்கள் பற்றி” சொல்லியபடி தலையை அவள் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.அவள் கழுத்தில் ஒரு தங்க நெக்லஸ் அணிந்திருந்தாள். அதிலிருந்த லாக்கெட்டில் சின்னக் கிருஷ்ணனின் படமிருந்தது. அரசிலைகளுக்கிடையே சாய்ந்து, உச்சந்தலையில் மயிலிறகு கிரீடமாயிருக்க, தன் பெரு விரலைச் சூப்பியபடி இருக்கும் உன்னி கிருஷ்ணன்.
“அப்படியெனில் இந்த லாக்கெட் பற்றி நான் சொல்லட்டுமா?”
“சரி,சொல்லேன்.” இருந்த இடத்திலிருந்தே சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.
“நான் போய் பூக்கள் பறித்துக் கொண்டு வரட்டுமா?” சித்ராவும்,வத்சனும் அவளுக்காக கேட்டின் வெளிப்புறத்தில் காத்திருந்தார்கள்.அவர்கள் சுஜாதாவை விடச் சிறியவர்கள்.சித்ரா எட்டாவதும்,வத்சன் ஆறாவதும். வாரப் பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த அம்மா சுஜாதாவின் கேள்வியை உள்வாங்கி, தலையை நிமிர்த்தி,
“உனக்கு என்ன வயதாகிறது? கல்லூரிக்கும் போகும் பெண் பூ பறிக்கப் போகிறாளாம் ”என்றாள்
ஆனால் இன்று மட்டும்.. அதற்குப் பிறகு போகவே மாட்டேன்..”அவள் கெஞ்சினாள். ஒவ்வொரு ஓணத்தின் போதும் பூக்கூடையை எடுத்துக் கொண்டு வண்ணான் பாறைக்குப் போய்விடுவாள். அவள் பெரியவளாகிக் கொண்டு வந்ததால் இரண்டு வருடங்களாக இந்தப் பழக்கம் தடைப்பட்டிருந்தது.கேட்டின் அருகே சித்ராவும்,வத்சனும் பதட்டத்தோடு காத்திருந்தனர்.தன்னை விட்டுவிட்டு அவர்கள் போய் விடுவார்களோ என சுஜாதா பயந்தாள்.இன்று கல்லூரியிலிருந்து வந்த போது அவளும், சித்ராவும் சந்தித்துக் கொண்டனர்.“அக்கா,இனிமேல் நீங்கள் பூ வைத்துக் கொள்ளவே மாட்டீர்களா?” சித்ரா கேட்டாள்.
“பறித்து வந்து தர எனக்குத் தம்பி் என்று யாருமில்லை.”தம்பியில்லாத குறை குரலில் வெளிப்பட்டது.
“அக்கா, ஏன் நீங்கள் எங்களுடன் வரக்கூடாது?” அதைக் கேட்டதும் அவள் லேசாகச் சமாதானமானாள். தொலைந்து போன இளமை நாட்களின் ஞாபகங்கள் ஓர் ஓரமாய்…
“எங்களுடன் நாளை வருகிறீர்கள் அல்லவா?”
“எந்த இடம்?”
“வண்ணான் பாறை.”
“சரி,நான் வருகிறேன்.” எந்த நினைவுமில்லாமல் அவள் பதில் சொன்னாள்.
“சரி, போய் விட்டு வா. ஆனால் பொழுது இறங்குவதற்குள் வந்து விட வேண்டும்.உன் அப்பாவிற்குத் தெரிந்தால் பெரிய ரகளையாகி விடும்.”
அம்மாவின் கடைசி வார்த்தை அவள் காதில் விழவில்லை.அவை வெளிவருவதற்கு முன்பே அவள் கேட்டிற்குப் போய் விட்டாள்.சித்ராவிற்கும், வத்சனுக்கும் கொள்ளை மகிழ்ச்சி. சுஜாதாவிடம் அவர்கள் பூக்கூடையைத் தர, மூவரும் வண்ணான் பாறையை நோக்கி நடந்தார்கள்.
வயலோரங்களில் தும்பைப் பூ படர்ந்திருந்தது.உரத்தோடு கலந்திருந்த வயல் நீர், பூக்களைப் பொலிவாக்கியிருந்தது. கூடையைச் சுழற்றிக் கொண்டு நடந்த போது,காலில் அணிந்திருந்த கொலுசுகளின் சப்தத்தை கவனித்தாள்..பழைய நாட்களிலும் அவள் அங்குமிங்கும் அலையும் போது அவற்றின் சப்தத்தை கேட்பாள்.ஆனால் அவளுக்குப் பத்து வயதாகும் போது அவற்றை இழந்தாள்.“நீ பெரியவளாகி விட்டாய்.இனி கொலுசு அணியக் கூடாது என்று சொல்லி அம்மா அவற்றைக் கழட்டிய போது அவளால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. தன் கொலுசோடு அவள் தன் இளம்பருவத்தையும் இழந்தாள். அவர்கள் வண்ணான் பாறையின் அருகே வந்த போது அவள் வேறு சில குழந்தைகளையும் பார்த்தாள்.ஒவ்வொருவரும் கையில் பூக்கூடை வைத்திருந்தனர். வண்ணத்துப் பூச்சியைப் போல அவள் தும்பைப் பூக்களின் மீதும்,குறும்பூக்களின் மீதும் பறந்தாள்.மறையும் சூரிய ஒளியில் வண்ணான் பாறை தங்கம் போல பளபளத்தது.பாறைகளின்முனைகளில் உள்ள கொடிகள் மீதும் இருட்டு பரவியது.ஏழு நிறங்களிலான பூக்களை வைத்து நாளை அவள் முற்றத்தை அலங்கரிப்பாள்.
அப்பாவும், அம்மாவும் காலையில் முதலில் அவளுடைய பூ அலங்காரத்தைத்தான் பார்ப்பார்கள். தும்பைப் பூக்களாலும், குறும் பூக்களாலும் அவள் கூடை நிரம்பி வழிந்தது.“அக்கா, நாம் கிளம்பலாம்.கோவிலில் சங்கு ஊதும் சப்தம் கேட்கிறது,” இருள் பரவியதைப் பார்த்து பயந்து வத்சன் சொன்னான்.சுஜாதாவுக்கு எதுவும் கேட்கவில்லை. அவளுடைய கூடையில் ஆறு வகையான பூக்கள்தான் இருந்தன.அவளுக்கு இன்னொரு வகை வேண்டும். எங்கிருந்தோ கேட்ட நீர்ப்பறவையின் குரலைக் கேட்டு பயந்த வத்சன் “வாருங்கள் போகலாம், எனக்கு பயமாக இருக்கிறது.” என்றான்.
“பொறுங்கள்,இதோ நான் வந்து விடுகிறேன்.” என்று சொல்லிய சுஜாதா ஏழாவது பூவைத் தேடி, அடர்ந்து படர்ந்திருந்த கொடிகளின் ஊடே போனாள். அதைப் பார்த்து சித்ராவும்,வத்சனும் நடுங்கிப் போனார்கள்.
அவர்கள் அந்த படர்கொடி காட்டிற்குள் போனதேயில்லை. அதனருகே போகக் கூட அவர்கள் பயந்தார்கள். அக்காட்டிற்குள் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகளிருக்கும்.படர்கொடி காடு எங்கே முடியுமென்று அவர்களுக்குத் தெரியாது.பல காலங்களுக்கு முன்னால் ஒரு தைரியமான சிறுவன் உள்ளே போனான்.ஆனால் அவன் திரும்பி வரவேயில்லை. மெல்லிய சிவப்பொளியின் பின்னால் காடு இருளானது. உள்ளே போன சுஜாதா ஸ்படிகப் பூக்களைப் பறித்து கூடையில் நிரப்பினாள். ஆனால் இன்னமும் அவளுக்கு ஏழாவது பூ கிடைக்கவில்லை. “அக்கா, வந்துவிடுங்கள். எங்களுக்கு பயமாக இருக்கிறது” சித்ராவும்,வத்சனும் கத்தினார்கள். பூப்பறிக்க வந்த மற்ற குழந்தைகள் எல்லோரும் போய் விட்டார்கள்.இறுக்கமாகப் படர்ந்திருந்த கொடிகளைத் தளர்த்திக் கொண்டு சுஜாதா மேலே நடந்தாள்.குத்திட்டு நிற்கும் முடியைப் போல அவளைச் சுற்றி தொங்கிச் சரிந்து நின்றன. சதுப்பு நில புல் கொத்தினூடே நடப்பது போல உணர்ந்தாள்.சிறிது தொலைவில் படர் கொடிகளுக்கு மத்தியில் திடீரென ஒரு விளக்கு மின்னியது.அவள் கண்கள் பிரகாசித்தன.
கொடிகளுக்கு மத்தியில் ஒரு கோட்டை. அதன் சுவர்கள்,தூண்கள், வளைவுகள் ஆகியன தங்க முலாமிடப்பட்டிருந்தன. அந்தச் சுவர்களிலிருந்து கொடிகள் தொங்கின.
“உங்கள் வரவு நல்வரவாகுக” என்று யாரோ உள்ளிருந்து சொன்னார்கள்.
அவள் பயத்தில் உறைந்தாள்.”உள்ளே வாருங்கள்” கரகரத்த ஓர் ஆண் குரல்.அவள் தயங்கி நின்றாள். திடீரென ஒரு பெரிய உருவம் கதவருகே வந்து நின்றது.மிகப் பெரிய உருவம்.ஓர் அரக்கனாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.இடுப்பில் சில தொங்கிக் கொண்டிருந்த கொடிகளைத் தவிர வேறெதுவும் ஆடையில்லை.
”உள்ளே வா”என்று அவன் சொல்ல அவள் மேலே நடந்தாள்.அவளுக்கு அரக்கர்களைக் கண்டு ஒரு போதும் பயமில்லை.
“உன் பெயரென்ன?”
“சுஜாதா. கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறேன்.” அவள் கையிலிருந்த கூடையிலிருந்து கை நிறைய பூக்களை எடுத்து முகர்ந்தான்.
“நான் யாரென்று தெரியுமா?”
“அரக்கனா?” அவன் முகத்தை நேரடியாகப் பார்த்து கேட்டாள்.
“இந்தக் காட்டிலிருப்பவன். இது என்னுடைய இடம்.” சொல்லியபடி முன்னே நடந்து கோட்டையைச் சுற்றிக் காண்பித்தான்.உள் அலங்காரம் அவளை ஆச்சர்யப்படுத்தியது.நாற்காலிகள்,படுக்கை எல்லாமே பொன்னாக.. தன் முன்னாலிருந்த நாற்காலியில் அவளை உட்காரச் சொன்னான்.”இந்தப் படர்கொடி காட்டிற்குள் வந்த முதல் பெண் நீதான்.அதனால் நான் உனக்கு ஒரு பரிசு தருகிறேன்.உனக்கு என்ன வேண்டுமோ கேள்.”
அவள் கண்கள் விரிந்தன.
“லாக்கெட்டில் உன்னி கிருஷ்ணன் படம் இருக்கும் நெக்லஸ் வேண்டும்” வெட்கத்துடன் கேட்டாள். இந்த ஆசை அவள் மனதில் நீண்ட காலமாக இருந்தது. பெற்றோரிடம் பல தடவை கேட்டிருக்கிறாள்.ஆனால் எந்தப் பிரயோஜனமுமில்லை.
“ஏற்கெனவே உன்னிடம் வைரச் சங்கிலியும் , நெக்லஸும் இருக்கின்றன.இன்னும் எதற்கு உனக்கு நகை?”என்று சொல்லி விட்டார்கள். “உன் திருமணத்தின் போது கடவுள் இருக்கும் லாக்கெட் சங்கிலி வாங்கித் தருகிறேன்.” என்று நல்ல மனநிலையிலிருக்கும் ஒரு நேரத்தில் அப்பா அவளிடம் சொன்னார்.எப்போது என் திருமணம் என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
“பி.ஏ.படித்து முடிக்க வேண்டும், பிறகுதான் திருமணம் என்று அப்பா சொல்லி விட்டார். அதுவரை நான் எப்படி பொறுத்திருக்க முடியும்?”
அவன் உள்ளே போனான். அவள் கேட்ட நெக்லஸை எடுத்து வந்து அவள் உள்ளங்கையில் வைத்தான். அது மூன்று பவுனாவது இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் நெக்லஸை அணிந்து கொண்டாள்.கொக்கியைப் போடுவதற்கு அவன் உதவி செய்தான்.அப்படித்தான் அவளது வாழ்வின் உன்னதமான ஆசை நிறைவேறியது. கொடிகளை விலக்கிக் கொண்டு, காட்டை விட்டு வெளியேறி அவள் வீட்டிற்கு வேகமாக ஓடினாள். ஏழாவது பூ அவளுக்கு கிடைக்கவில்லை.எனினும் அவளுக்கு கொண்டாட்டம்தான்.அவள் அந்த அரக்கனைப் பார்க்கவில்லையா? கோட்டைக்குள் போகவில்லையா?
நெக்லஸைப் பெறவில்லையா?உன்னிகிருஷ்ணன் சாய்ந்திருப்பது போன்ற படம் கொண்ட லாக்கெட் அவள் நெஞ்சில் ,சிவப்பு ரவிக்கைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவள் அதற்கு முத்தம் கொடுத்தாள்.
“உண்மையைச் சொல், எங்கே போயிருந்தாய்?”அம்மாவின் குரல் அச்சுறுத்தியது.
“பூப்பறிக்கப் போனேன் என்பதை மறந்து விட்டாயா?”
“எங்கே பூக்கூடை?” மறந்து போய் அதை கோட்டையிலேயே வைத்து விட்டு வந்து விட்டாள்.
“என்ன இது?” அம்மாவின் கண்கள் அவள் மார்பில் நிலைத்தன.
“யார் கொடுத்தார்கள் ?
உண்மையைச் சொல்,உடைத்து துண்டுகளாக்கி விடுவேன்.”
“ஓர் அரக்கன்.” அம்மா அவளை வெறித்தாள்.
“உண்மைதான் அம்மா,படர் கொடி காட்டிற்குள் இருக்கும் அரக்கன்தான் கொடுத்தான்.”
இதற்குள் அப்பா வெளியே வந்துவிட்டார்.
“இதைப் பார்த்தீர்களா? அரக்கன் கொடுத்தானாம்.”அம்மா விளக்கினாள்.
“யார் அவன் ?பெயரென்ன?” அப்பா கேட்டார்.
“அந்தக் கோடீஸ்வர வீட்டுப் பையன் கொடுத்தானா? அவன்தான் உன் அரக்கனா?” அப்பா பேசியதைக் கேட்டு அவளுக்கு வலித்தது.பல பெண்களுக்கு அந்த பணக்காரப் பையன் நகைகள் வாங்கிக் கொடுத்த கதைகளை அவள் கேட்டிருக்கிறாள்.
“நான் சொல்வது உண்மைதான் அப்பா. அவன் காட்டு ராஜா..”மேலே பேசுவதற்கு முன்னால் அப்பா அவளை ஓங்கி அறைந்தார்.
அப்பா அவளை அறையில் தள்ளிப் பூட்டினார்.குடிக்க,சாப்பிட அவர்கள் எதுவும் தரவில்லை.“ இன்றுவரை யாரும் நம் குடும்பத்திற்கு இப்படி ஓர் அவப்பெயரை வாங்கித் தந்ததில்லை. நான் …”கதவின் அந்தப் பக்கத்திலிருந்து அப்பா கோபத்தை கொட்டிக் கொண்டிருந்தார்.திரும்பத் திரும்ப எத்தனை முறை அடித்தார் ?எத்தனை முறை அறைக்குள் வைத்து பூட்டினார்? பட்டினி போட்டார். நெக்லஸை அவன்தான் தந்தான் என்பதை யாரும் நம்பவில்லை. கன்னங்களில் நீர் வழிந்தது.வெள்ளை நிறப் பட்டு ரவிக்கையின் மேல் நழுவிக் கொண்டிருந்த அந்த நெக்லசின் லாக்கெட்டிலிருந்த உன்னி கிருஷ்ணனை தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு மென்மையாகத் தொட்டு,”நான் உன்னை நம்புகிறேன்” என்றான்
———————————
நன்றி:
The Seventh Flower– The Train That Had Wings Selected Short Stories of M. MUKUNDAN
பிரெஞ்சு காலனியத்திலிருந்த மய்யழிக் கரையோர நகரமான மாகேயை தன் பிறப்பிடமாகக் கொண்ட எம்.முகுந்தன் மய்யழிக் கதைக்காரர் என்றழைக்கப்படுகிறார். தெய்வத்தின்டே விக்ரிதிகள், ஆகாசதினு சுவட்டில், டெல்லி , ஒரு தலித் யுவதியுடே கதான கதா உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நாவல்களும், நதியும் தோணியும் ,வீடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளும் இவர் பங்களிப்பாக அமைகின்றன. சாகித்ய அகாதெமி, வயலார் விருது, எழுத்தச்சன் புரஸ்காரம் உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்.