உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?

This entry is part 18 of 23 in the series புவிச் சூடேற்றம்

சென்ற பகுதியில், ஒன்பது எல்லைகளில், 6 எல்லைகளை கடந்த 60 ஆண்டுகளில் மீறிவிட்டோம் என்று பார்த்தோம். 2021 முதல் 2030 வரை நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நாம் இந்த எல்லை மீறல்களிலிருந்து மீள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும்.

நல்ல வேளையாக, நாம் செய்ய வேண்டியவை, அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் இல்லை. என்ன செய்தால், மீள முடியுமென்று பார்ப்போம்.

நடவடிக்கை 1: தொல்லெச்ச எரிபொருள் ஊர்த்திகளைப் பயன்படுத்தாதீர்கள். 

சொல்வது எளிது. ஆனால், நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம். பெட்ரோல் கார்/ஊர்த்தி தயாரிப்பிலும், பயனிலும் உலகின் உச்சியில் இருக்கும் இரு நாடுகள் சைனா மற்றும் இந்தியா. இரண்டிலும் உலகின் பாதி மக்கட்தொகை அடங்கும். வளர்ந்த நாடுகள், பொது நலம் கருதி, இந்த இரு நாடுகளையும் பெட்ரோல் போதையிலிருந்து காப்பாற்ற வேண்டும். இன்னும் பத்து வருடம் என்ற பட்சத்தில், இந்தியா இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் என்ற நம்பிக்கை போய்விட்டது. அடுத்த தெருவில் இருக்கும் நண்பனைப் பார்க்க பைக் எடுக்காதீர்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், பைக் மற்றும் கார் நிறுத்த பெரிய கட்டணம் வசூலிக்க வேண்டும். இதற்குப் பொதுப் போக்குவரத்தே மேல் என்று நினைக்கும் இளைஞர்கள் கூடினால், பெட்ரோல் போதை கொஞ்சம் குறையும். பெட்ரோல் போதை குறைந்தால், எந்த எல்லைகளை நல்விதமாக பாதிக்கும்?

  1. பனியுறைவு அளவு – காற்றில் கலக்கும் கரியமில வாயு குறையும். இதனால், துருவங்களுக்கு ஒரு சின்ன நிவாரணம் கிடைக்கும்
  2. கரியமில வாயுவின் அளவு – காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவு சற்று குறையும்
  3. பல்லுயிர்சூழலின் அளவு – காற்று மாசு, நகர்புற பல்லுயிர்சூழலை பாதிக்கிறது. தொல்லெச்ச எரிபொருள் எரிப்பு குறைந்தால், சின்ன மாற்றம் அவசியம் நிகழும்
  4. கடலில் கலக்கும் கரியமில வாயு அளவு – நகரில் அடுத்த தெருவில் இருக்கும் நண்பனைப் பார்க்க நீங்கள் பைக் ஓட்டுவதனால் உருவாகும் கரியமில வாயுவில் மூன்றில் ஒரு பங்கு கடலில் சேருகிறது. கடலுக்கும் ஒரு சின்ன ஆறுதல், உங்கள் நடையால்!
  5. காற்றுத்துகள்களின் அளவு – இதைச் சொல்லவே வேண்டால் – நேரடியாக தொல்லெச்ச எரிபொருளை சார்ந்த இந்த அளவு குறைய நன்றாக நகரவாசிகள் காற்றை சுவாசிக்கலாம்.

அடுத்த முறை, உங்களது நண்பன், புத்தம் புதிய பெட்ரொல் கார் வாங்கினால், தொல்லெச்ச எரிபொருள் எந்திரத்தை வாங்கியதற்காகச் சாடுங்கள், பாராட்டாதீர்கள்.

நடவடிக்கை 2: மரங்களை அதிகமாக நடுங்கள்

 மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், மரங்கள் நடும் விஷயத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த நல்ல மாற்றம், தொடர்ந்து நிகழ வேண்டும். மரங்கள் நடுவதால், எப்படி நிலத்தில், மழை அதிகமாகிறது?

மரங்கள் வெளியேற்றுவது ஆஸிஜன் மற்றும் உள்வாங்கிக் கொள்வது கரியமில வாயு மற்றும் நீராவி. வெளியேறும் ஆக்ஸிஜன், சுற்றியுள்ள நீர்நிலைகளோடு உரசுகையில், சூரிய வெப்பத்துடன் நீராவி மீண்டும் உருவாகிறது. நீராவி சன்னமாக இருப்பதால், காற்று மண்டலத்தில் உயருகிறது, காற்று மண்டலத்தில் உயர உயர, நீராவி குளிர்கிறது, குளிரும் நீராவி மேகமாக மாறி, இன்னும் குளிர்ச்சி அதிகமாகையில், மழையாய்ப் பொழிகிறது.

மழை பொழியத் தேவை நீரும், ஆக்ஸிஜனும். இதில் ஒரு பங்கை மரங்கள் செய்கின்றன. ஒரு தர்க்கத்திற்காக, மனிதர்கள் எப்படியோ கட்டிடங்களைக் கட்டித்தள்ளி (இன்று கிட்டத் தட்ட இந்த நிலமைதான்), தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவை, பூமிக்குள் புதைத்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சுற்றிலும் நீர்நிலைகள் இல்லாத பட்சத்தில், மழை இருக்காது. பாலைவனத்தில் மழை இல்லாததற்கும் இதுவே காரணம்.

கடலில், சுற்றிலும் நீர்தான். நீராவி தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. கடலில், நிலத்தை விட அதிக மழை பெய்வது இயற்கை. பெரும் புயல்கள், கடலில் உருவாக இதுவே காரணம். வெகு சில புயல்களைத் தவிர, புயல்களின் தொடக்கம் கடலில் தான்.

அட, பூமியின் 70% கடல் என்ற பட்சத்தில், ஏன் மழை குறைந்து வருகிறது? எங்கோ இடிக்கிறதா?

நாம் தொல்லெச்ச எரிபொருள்கள் எரிப்பதால், உருவாகும் கரியமில வாயுவில் மூன்றில் ஒரு பங்கு கடலில் கலக்கிறது. கடலில் கலக்கும் கரியமில வாயு, கடல் நீருடன் கலந்து கார்பானிக் அமிலமாகிறது. இந்த அமிலத் தன்மை வாய்ந்த நீர் முன்பை விட, நீராவியாவது குறைவு. அத்துடன், நிலப்பகுதியிலிருந்து வெகுதூரக் கடல் பகுதிகளை இது அவ்வளவு பாதிப்பதில்லை. இதனால், சூரிய வெப்பத்தால், கடல் நீரில், மேல்வாரியான பகுதிகள் (நிலத்தருகே உள்ள பகுதிகள்) அதிகமாக சூடேறுகிறது. மேல்மட்ட கடல் வெபபநிலை (50 அடி ஆழத்திற்குள்) மாற்றம், திடீர் புயல்களை உருவாக்குகிறது.

உலகில், பல்வேறு இயக்கங்கள், பல மில்லியன் மரங்களை நடும்/ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நாம் கடந்த 60 ஆண்டுகளில் அழித்தது 3 டிரில்லியன் மரங்கள். இதை ஈடு செய்ய இன்னும் 60 ஆண்டுகள் போதாது. மரங்கள் வளர்ந்து, பயன் தருவதற்கு, 10 முதல் 20 ஆண்டுகள் வரைப் பிடிக்கும். ஆயினும், ஒவ்வொரு கண்டத்திலும் இந்த முயற்சி தொடர்ந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும். குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகள், நகர்புற வீட்டு மனைகள் விற்கும் பொழுது, வீட்டு நிலத்தை வாங்குபவர், அவசியம் இத்தனை இடத்திற்கு இவ்வளவு மரம் என்று அவசியம் நகராட்சியிடமிருந்து வாங்க வேண்டும். கனடாவில், இது சட்டம். அத்துடன், நகராட்சி, எவ்வகை மரங்கள், மண்ணின் தன்மையைப் பொருத்து வளரும் என்பதை முடிவு செய்கிறது. வளர்ந்த மரங்களை சரியாக கத்தரித்தல் போன்ற சேவைகளையும் வாங்கிச் கொள்ளும் வரிப்பணத்தில் செய்கிறது.

இன்னொரு முக்கிய விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும். இது ஒரு கனேடிய முன்னோடி. மற்ற நாடுகள் அவசியம் பின்பற்ற வேண்டும்:

  1. டொரோண்டோ பெருநகரப் பகுதி, கனடாவின் மக்கட்தொகையில் ஆறில் ஒரு பங்கான பெரும்பகுதி
  1. இங்கு, கடந்த 40 வருடங்களாக பெரும் முன்னேற்றம், வீடு, சாலை மற்றும் தொழிற்சாலைகள் என்று ஏராளமான கட்டிடங்கள் உருவானது
  2. இந்த கட்டிடங்களை உருவாக்க, இந்தப் பகுதியைச் சுற்றி, கற்சுரங்கங்கள் அல்லது குவாரிகள் உருவாக்கப்பட்டன
  3. கற்சுரங்கங்கள், அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகள், மற்றும், பகுதியைச் சார்ந்த பல்லுயிர்ச்சூழலை பாதித்தது வியப்பல்ல
  4. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த குவாரிகளின் தேவை குறைந்து விட்டது. மற்ற நாடுகளைப் போல, அப்படியே விட்டு விட்டு நகரும் நாடல்ல கனடா. குவால்ப் பல்கலைக்கழகம், இப்பகுதிகளின் பல்லுயிர்ச்சூழல் மற்றும் நீர்நிலைகளை ஆராய்ச்சி செய்து பட்டியலிட்டும் வந்துள்ளது. இந்த பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கினார்கள்
  5. அருகாமையில் இருந்த சிறு விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகளைச் சேகரித்தார்கள், காலியான குவாரிகளை, புதிய நீர்நிலைகளாக மாற்றினார்கள்
  6. சேகரித்த உயிரினங்களை, மெதுவாக இயற்கையில் புதிய நீர்நிலைகள் அருகே விட்டார்கள், இவை வாழ்கிறனவா அல்லது இறந்து விடுகின்றனவா என்பதை டாக் செய்து கண்காணித்தனர்
  7. புதிய நீர்நிலைகளை, படகு வசதிகளுடன், சுற்றுலா தளமாக்கினார்கள். உள்ளே செல்ல கட்டணம் வசூலித்து, சுற்றுச்சூழல் பராமரிப்பை ஒரு செலவாக ஆக்காமல், சற்று அரசாங்கத்திற்கு லாபமும் ஈட்டுத் தந்துள்ளார்கள்!

இதுபோன்ற சுற்றுச்சூழல் வெற்றி, இந்தியா போன்ற நாடுகள் பொறாமை பட்டு, தகுந்த மாற்றங்களுடன் பின்பற்றினால், பெரும் நன்மை சமூகத்திற்குக் கிடைக்கும்

மரங்களை அதிகமாக வளர்த்தல், எந்த எல்லைகளை நல்ல விதமாக பாதிக்கும்? கட்டுரையில் துவக்கத்தில் சொன்னதை மறுபடி சொல்கிறேன். 

  1. பனியுறைவு அளவு – மரங்கள் அதிகரித்தால், காற்றில் கலக்கும் கரியமில வாயு குறையும். கரியமில வாயு குறைந்தால், அதன் பலன்கள், பல்வேறு எல்லைகளில் பிரதிபலிக்கும். இதனால், துருவங்களுக்கு ஒரு சின்ன நிவாரணம் கிடைக்கும்
  2. கரியமில வாயுவின் அளவு – காற்றில் கலக்கும் கரியமில வாயு பெரிய அளவில் குறையும். கடந்த 60 ஆண்டுகளில், அழித்தது என்னவோ, மூன்று டிரில்லியன் மரங்கள். முன்னமே சொன்னது போல, நாம் உருவாக்கிய இந்த அழிவிலிருந்து ஓரளவு தப்பிக்க இதுவே ஒரு மிக முக்கிய வழி
  3. பல்லுயிர்சூழலின் அளவு – பல்லுயிர்சூழலை மீண்டும் இயற்கையில் மீட்பது மிகவும் இயலாத செயல். ஏனென்றால், அந்தச் சூழலை, இயற்கை, பல மில்லியன் ஆண்டுகளாய் உருவாக்கியது. கை சொடுக்கில் நடக்கும் விஷயமல்ல இது. மரங்கள் நடுவது, ஓரளவு பல்லுயிர்சூழலை புதிதாக உருவாக்கும் ஒரே வழி. பழைய சூழல் இதில் உருவாகும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால், இன்றை விட நல்ல சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்று மட்டும் சொல்ல முடியும்
  4. கடலில் கலக்கும் கரியமில வாயு அளவு – மரங்கள் அதிகமாக, இது நிச்சயம் குறையும். கடலில் கலக்கும் கரியமில வாயுவின் தாக்கம், புவி சூடேற்றத்தில் மிகவும் பெரிதானது. இதைக் குறைப்பது, எல்லா முயற்சிகளிலும் மேலானது. ஒரு முயற்சியால், இதைச் செய்வது இயலாத விஷயம். நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளும், கடலில் கலக்கும் கரியமில வாயுவைக் குறைத்தால், நாம் தப்பிப்போம்
  5. காடுகளின் அளவு – மரங்கள் அதிகமாவதால், காடுகள் உடனே பெருகாவிட்டாலும், சில ஆண்டுகளில், இந்த மாற்றத்தை நாம் பார்க்க முடியும். மீட்கப்பட்ட காடுகள், புதிய மற்றும் பழைய உயிரினங்கள் தழைக்க வழி செய்தால், குறைந்த நிலச்சரிவுகள், நிலத்தடி நீர் என்று பெரிய விஷயங்கள் நமக்கு திரும்பிக் கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னமே சொன்னது போல், பழைய உயிரினங்கள் யாவற்றையும் மீட்பது இயலாத செயல். ஆனாலும், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மீண்டும் தழைக்க வாய்ப்புள்ளது.
  6. காற்றுத்துகள்களின் அளவு – மரங்கள் பெருகினால், அவை நாம் வெளியேற்றும் கரி மற்றும் பெட்ரோல்/டீசல் புகை மண்டலத்தைக் குறைக்கும். பல நூறு கோடி தொல்லெச்ச எரிபொருள் ஊர்த்திகளை, மின் ஊர்த்திகளாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல

ஒரு விநோதமான திட்டத்தை இங்கு முன் வைக்கிறேன். எங்களுடைய பொழுதுபோக்கு சுதந்திரத்தைத் தடுக்க முடியாது என்று பொங்காதீர்கள். ஒவ்வொரு முறை, விவேக்கின் காமெடி விடியோவைப் யுடியூப்பில் பார்க்கும் இந்திய பிரஜை ஒவ்வொருவரும், ஒரு மரம் நட வேண்டும்! அல்லது மரம் நடும் அமைப்பிற்கு நன்கொடை வழங்க வேண்டும்.

நடவடிக்கை 3: இறைச்சியைக் குறைத்து உணவில் காய்கள்/பழங்களை அதிகரியுங்கள்

 உலகின் 7.5 பில்லியன் மனிதர்களுக்கு உணவு என்பது சாதாரண விஷயமல்ல. பழைய விவசாய முறைகள் மாறி, இன்று மேற்குலகில், விவசாயம் என்பது ஒரு மிகப் பெரிய தயாரிப்பு அமைப்பாக மற்றிவிட்டது. இது மெதுவாக இந்தியா போன்ற நாடுகளுக்கும், மாக், பர்கர் கிங் போன்ற அமைப்புகள் மூலம் ஏற்றுமதியும் செய்யப்பட்டு விட்டது. இந்த மேற்கத்திய உணவுத் தொழிலமைப்பு, (Industrial farming) மூன்று உயிர்களை வளர்த்துக் கொல்வதில் அடங்கியுள்ளது. அவை, கோழி, மாடு மற்றும் பன்றி.பல நூறு கோடிக் கணக்கில் இந்த உயிரினங்கள்  மனித உணவிற்காக, செயற்கை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. சரி, இதற்கும், புவி சூடேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். பெரிதாக சம்பந்தம் இருக்கிறது.

  • பல நூறு கோடி உயிரினங்களுக்கு உணவு உற்பத்தி செய்ய/வளர்க்க, இடம் தேவைப்படுகிறது. துபாயில் இந்திய துணைக்கண்டத்தின் வேலையாட்களை தங்க வைக்கும் இருப்பிடத்தை விட இன்னும் மோசமானவை இந்த பிராணிக் கூண்டு/கூடுகள். இந்த இடம் எங்கிருந்து வருகிறது.

காடுகளை அழித்துத்தான்! 

  • இந்த பல நூறு கோடி உயிரினங்களுக்கு, அவை மனித உணவாகும் வரை, உணவளிக்க வேண்டுமல்லவா? இதற்காகவே, பிரத்யேக வயல்கள் உள்ளன. பல்லாயிரம் ஹெக்டேர்கள் வட மற்றும் தென் அமெரிக்காவில் சோளம், மற்றும் சோயா இதற்காகவே வளர்க்கப்படுகிறது. இந்த விவசாய நிலம் எங்கிருந்து? சொன்னால் போரடிக்கும் – காடுகளை அழித்துத் தான்!
  • இந்தத் தொழில் விவசாயத்திற்குத் தேவைப்படும் இன்னொரு மிக முக்கிய விஷயம், தண்ணீர். பூமியின் இயற்கை வளமான தண்ணீர் எல்லோருக்கும் பொது. ஆனால், உணவிற்காக வளர்க்கப்படும் பல நூறு கோடி உயிரினங்கள், இந்த உலகில் குடிநீருக்காக நம்முடன் களத்தில் போட்டி போடுகின்றன. மனித உணவிற்காக நேரடியாக பயன்படுத்தப்படும் (அரிசி, கோதுமை போன்றவை) பயிர்களுடன் இவ்வகை விவசாயமும் போட்டி போடுகிறது. 
  • தொழில் விவசாயம், ஏராளமான மின்சக்தி மற்றும் தொல்லெச்ச எரிபொருளையும் பயன்படுத்துகிறது
  • சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லா புவி சூடேற்ற முறைகளையும் ஏகத்துக்கும் பயன்படுத்தும் ஒரு தொழில், இந்தத் தொழில் விவசாயம்

இறைச்சியைத் துறப்பது, உலகின் பல்வேறு நாடுகளில் அவ்வளவு எளிதல்ல. முதல் படியாக, சில மேற்கத்திய அமைப்புகள், இறைச்சியின் அதே சுவையோடு, செடி மூலத் தயாரிப்புகளை, முன் வைக்கத் தொடங்கி விட்டன. உதாரணம், plant based burger. இத்துடன், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகள், உணவில் அதிகம் பயன்படுத்துவது புதிய பழக்கம் தான். ஆனால், நம்முடைய உயிர் பிழைத்தல் என்ற பட்சத்தில், தொழில் விவசாயத்தின் மீதான சார்புநிலையை, நாம் குறைக்க வேண்டும். வேறு வழியில்லை. 

இறைச்சியை உணவில் குறைந்தால், எந்த எல்லைகளை நல்விதமாக பாதிக்கும்? முன்பு சொன்ன அதே விளைவுகளில் பல இங்கும் பொருந்தும். 

  1. பனியுறைவு அளவு – காற்றில் கலக்கும் கரியமில வாயு கணிசமான அளவு நேர்முகம் மற்றும் மறைமுகமாகவும் குறையும். தொழில் விவசாயம், குறைவாக, தொல்லெச்ச எரிபொருள் மற்றும் நிலத்தைப் பயன்படுத்தும். இதனால், துருவங்களுக்கு ஒரு சின்ன நிவாரணம் கிடைக்கும்
  2. கரியமில வாயுவின் அளவு – காற்றில் கலக்கும் கரியமில வாயு குறைய நிறைய வாய்ப்புள்ளது. குறைந்த பிராணிகள் போக்குவரத்து, குறைந்த குளிர்சாதன பயன்பாடு இவை எல்லாம் நிச்சயம் உதவும்
  3. பல்லுயிர்சூழலின் அளவு – காடுகளை அழித்தே இந்தத் தொழில் விவசாயம் நடந்து வந்துள்ளது. தொலைந்த காடுகளை திரும்பப் பெருவது கடினம். ஆனால், கனடாவில் நடந்த கற்சுறங்க மீட்புப் பணி போல, பல கோடி ஹெக்டேர்களை இயற்கையிடம் திருப்பி விட வாய்ப்புள்ளது
  4. குடிநீர் அளவு – இன்று, இது ஒரு மிகப் பெரிய பிரச்சினை அல்ல. ஆனால், நாளையின் பிரச்சினை. தொழில் விவசாயம் பயன்படுத்தும் ஏராளமான குடிநீர், மற்ற மனித நடவடிக்கைகளுக்கு, நிச்சயம் கிடைக்கும். நதியின் ஆரம்ப நிலையில் உள்ள ஒரு தொழில் விவசாயம் மூடப்பட்டால், நதியின் கடைசி நிலையில் உள்ள மனிதப் பயிர் விவசாயி தண்ணீருக்காக செலவழிக்கும் பொருள் மற்றும் மன உளைச்சல் குறையும். மேலும், நீர் கிடைக்கிற பட்சத்தில், விவசாயிகளுக்கு, பல்வேறு பயிர் வளர்ப்பு வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்

நடவடிக்கை 4: கழிவைக் குறைத்து, மறுபயன்பாட்டை அதிகரியுங்கள்

 கழிவு பற்றி நாம் உலகம் முழுவதும் அதிகம் பேசி, அதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பது உண்மை. ஆனாலும், இன்னொரு முக்கிய கழிவு பற்றிய புரிதல், நம்மிடையே, ஒரு பொருளைத் தயாரிக்கும் பொழுது எழுவதே இல்லை. இன்றைய பொருள் என்பது நாளைய கழிவு. ஆயினும், கழிவைப் பற்றி சிந்திக்காமலே, இன்றும், நாம் பொருட்களை உருவாக்குகிறோம். இசை சிடி தயாருக்கும் பொழுது, அந்த பொருளைப் பற்றிய கழிவுச் சிந்தனை நம்மிடையே இன்னும் இல்லை. நேற்றைய சிடிக்களை பூமிக்குள் புதைத்து விட்டோம். இன்று தயாரிக்கும் சிடிக்கள் எங்கு போகும்? இன்றைய செல்பேசிகள் எங்கு போகும்? இந்தச் சிந்தனை அவசியம் எழ வேண்டும். ஒரு தயாரிப்பை வடிவமைக்கும் பொழுது, அதன் வாழ்நாள் முடிந்தவுடன், எப்படி மறுபயன்பாட்டிற்கு உதவும் என்பதையும் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். கடந்த 300 வருடங்களாக நாம் இதைச் செய்யத் தவறி விட்டோம். இன்று, ப்ளாஸ்டிக், அனல் மின் நிலையம், மின்னணுவியல் சாதனங்கள், அணுமின் நிலையம் என்று எல்லாவற்றிலும், இந்தப் பிரச்சினை, நம்மை கதிகலங்க வைக்கிறது. அரசாங்கங்கள், தொழில்நுட்ப அமைப்புகள் எங்கும் இந்தச் சிந்தனை வளர வேண்டும். இதை வட்டத் தயாரிப்பு (circular manufacturing) என்று சொல்கிறார்கள். பொருட்களை வாங்கும் நுகர்வோரும், இதை மனதில் கொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களை, பொருளின் பயன் முடிந்த பிறகு, அந்தத் தயாரிப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்று விளக்கச் சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்கள், தங்களது தயாரிப்பின் மறுபயன்பாடு பற்றிய விடியோக்களை தங்களது இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் இது நிகழும் என்று நம்புவோம். 

அதுவரை, ஒவ்வொரு நுகர்வோரின் மறுபயன்பாட்டுக் கடமைகள் என்று நிறைய உள்ளது.

  1. ஒற்றை பயன்பாட்டு ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டாம்
  2. மளிகை மற்றும் காய்கறி வாங்கத் துணிப்பையைப் பயன்படுத்துங்கள்
  3. பழைய பல் தேய்க்கும் ப்ரஷ் போன்றவற்றை வீட்டில் பொருட்களைத் துடைக்கப் பயன்படுத்துங்கள்
  4. வட அமெரிக்காவில் வசிப்பவர்கள், அநாவசியமாக சமயலறை பேப்பர் டவல்களை ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியாதீர்கள். பல சமயம் மறுபயன்பாட்டிற்கு உதவும்
  5. உணவை சரியாகத் திட்டமிட்டு, கழிவைக் குறையுங்கள். ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்து உண்ண வேண்டும் என்பதெல்லாம் பழைய காலம். நேரம் இல்லாவிட்டால், சமைத்த உணவை குளிர்சாதனத்தில் வைத்து, மீண்டும் சுட வைத்து, உண்ணுங்கள்
  6. அடுத்த தெருவில் இருக்கும் கடை மற்றும் நண்பரைப் பார்க்க ஒருபோதும், கார் அல்லது பைக்கைப் பயன்படுத்தாதீர்கள்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

மறுபயன்பாட்டை அதிகரித்துக், கழிவைக் குறைந்தால், எந்த எல்லைகளை நல்விதமாக பாதிக்கும்?

  1. பனியுறைவு. அளவு – நாம் தூக்கி எறியும் ஒவ்வொரு பொருளையும் அகற்ற, அவை எரிக்கப்படுகின்றன அல்லது புதைக்கப்படுகின்றன. மறுபயன்பாடு அதிகரித்தால், எரிக்கப்படும் கழிவு குறையும். இதனால் சற்று காற்றில் கலக்கும் கரியமில வாயு குறையும். கரியமில வாயு குறைந்தால், அதன் பலன்கள், பல்வேறு எல்லைகளில் பிரதிபலிக்கும். இதனால், துருவங்களுக்கு ஒரு சின்ன நிவாரணம் கிடைக்கும்
  2. கரியமில வாயுவின் அளவு – காற்றில் கலக்கும் கரியமில வாயு சிறிய அளவில் மறுபயன்பாட்டினால் குறையும். கழிவு எரித்தல் மற்றும் புதைத்தல், என்பது ஒரு புகை விடும் லாரியைப் போல, சாதாரணர்களுக்குத் தெரிவதில்லை 
  3. கடலில் கலக்கும் கரியமில வாயு அளவு – கடலில் கலக்கும் கரியமில வாயு மனித நடவடிக்கைகளால் உருவானது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். Incineration என்பது மிகவும் ஏராளமான சக்தியைப் பயன்படுத்தும் ஒரு முறை. கழிவுகளை எரிப்பது குறைந்தால், நாம் அநாவசியமாகப் பயன்படுத்தும் மின்சக்தி, மற்றும், அந்த சக்தியை உற்பத்தி செய்யப் பயன்படுத்தும் தொல்லெச்ச எரிபொருளின் தேவையும் குறையும்

இவை யாவும் பயனுள்ள முறைகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாக ஒப்புக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் (நம் மக்கள் மனதில், விஞ்ஞானம் என்றால் அமெரிக்கா என்று பதிந்து போன ஒரு தப்பான பிம்பம்) யாரோ ஒரு விஞ்ஞானி, உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் போல, மாயமாக ஒரு கண்டுபிடிப்பு மூலம், புவி சூடேற்றத்தை ஒரே நொடியில் திர்த்து விடுவார் என்று நம்புவது அபத்தம். எந்த ஒரு முறையாலும் இந்தப் பிர்ச்சினை தீரப் போவதில்லை. அடுத்த பகுதிகளில், இந்த பிர்ச்சினையின் காரணிகளின் விகிதம், அதில் எதை நாம் தீர்க்க முடியும், எது உடனே பலன் கொடுக்கும், எது சில ஆண்டுகளுக்குப் பின் பயன் தரும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

(தொடரும்)

Series Navigation<< நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19 >>

One Reply to “உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?”

  1. மிக அற்புதமான தொடர்! மோடி அரசு வந்ததிலிருந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள் பற்றியும் அடிப்படை உரிமைகள் பற்றியும் கவலைப்படவே நேரம் சரியாக இருப்பதால் அண்மைக்காலமாக நம்மிடையே சூழலியல் பற்றிய சிந்தனைகள், உரையாடல்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்தத் தொடர் எனக்குள் அதை மீண்டும் புத்துயிர்த்தி இருக்கிறது. என்னைப் போல் எல்லோரிடமும் இந்தப் புத்துயிர்ப்பு நிகழ்ந்தால் இந்தப் பூமியும் புத்துயிர்க்க அது ஒரு வாய்ப்பாக அமையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.