உனக்காக உறைபனியில்

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
君がため
春の野に出でて
若菜つむ
わが衣手に
雪はふりつつ

கனா எழுத்துருக்களில்
きみがため
はるののにいでて
わかなつむ
わがころもでに
ゆきはふりつつ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பேரரசர் கோக்கோ

காலம்: கி.பி. 830-887.

இத்தொடரின் 13வது செய்யுளை இயற்றிய பேரரசர் யோசெய் தனது மூர்க்கத்தனமான செயல்களால் பதவியிறக்கப்பட்டபோது அரியணை ஏறியவர் கோக்கோ. பேரரசர் நின்ம்யோவின் மூன்றாவது மகனான இவரது வயது 55 அப்போது. ஆனால் 2 ஆண்டுகளிலேயே நோய்வாய்ப்பட்டு 57வது வயதில் இறந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வு, அரசியல் காரணங்களுக்காக நின்று போயிருந்த பல சடங்குகளையும் விழாக்களையும் திரும்ப நடைமுறைக்குக் கொண்டுவந்ததுதான். 2-3 ஆண்டுகளில் பெரும்பாலான விழாக்களுக்கான இடமாகத் திகழ்ந்த மிசாசாகிக் கோயிலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். நற்குணங்களுக்கு உரியவராகவும் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் நினைவுகூரப்படும் இவரது இலக்கியப் பங்களிப்பாக இச்செய்யுள் ஒன்று மட்டுமே இருக்கிறது.

பாடுபொருள்: காதலிக்காக நோயிலிருந்து காக்கும் காயைப் பறித்துவரும் நிகழ்வு

பாடலின் பொருள்:

வசந்தகாலம் தொடங்குமுன் காய்க்கும் வகானா என்றொரு உடல்நலன் காக்கும் காய்கறியை உனக்காகப் பறித்துக் கொண்டிருந்தபோது பனி பொழிந்து எனது மேலாடையின் கைப்பகுதியை நனைக்கிறது.

அதியமான் அவ்வைக்கு அளித்த ஆயுள் நீட்டிக்கும் அதிசய நெல்லிக்கனியைப் போல ஜப்பானில் வகானா என்றொரு காய்கறி நோய் எதிர்ப்புத் திறனைக் கூட்டிப் பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. வசந்தகாலம் தொடங்கும் முன் பனிப்பொழிவு குறையத் தொடங்கும் காலத்தில் காய்க்கும் மருத்துவக் குணம் கொண்ட எழுவகைக் காய்கறிகளில் இதுவும் ஒன்று. இக்காய் முட்டைகோஸ், லெட்டூஸ் போன்ற இலைக்காய் வகையாகும். தற்போது ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 7ம் தேதி இதை உண்பது வழக்கமாக உள்ளது என்கிறார்கள்.

இத்தொடரில் பல செய்யுள்களில் மேலாடையின் கைப்பகுதி பனியால் நனைவது குறிப்பிடப்படுகிறது. கலாச்சாரம் தொடர்பான பல பொருட்களுள் ஒன்றாக ஜப்பானிய உடையான கிமோனோவும் சீனாவிலிருந்து இறக்குமதி ஆனது. கி.பி 4ம் நூற்றாண்டு வரை ஜப்பானியர்கள் விலங்குகளின் தோலையும் மரவுரி ஆடைகளையும் அணிந்தனர் என ஆரம்பத்தில் கருதப்பட்டு வந்தது. ஆனால் 1960களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் ஜோமோன் (நமது சங்ககாலம்) காலத்தைச் சேர்ந்த துணிகளும் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கயிறுகளும் கண்டறியப்பட்டு ஜப்பானின் ஆடை வரலாறு மாற்றி எழுதப்பட்டது. இத்தொடரின் முதல் அத்தியாயத்தில் இளவரசர் ஷோதொக்கு கி.பி 570களில் சீனாவுடன் தூதுக்குழுக்களைப் பரிமாறத் தொடங்கினார் எனப் பார்த்தோமல்லவா? அவருக்கு முன்பே இதுபோன்று சீனாவிலிருந்து வந்த கலைப்பொருட்கள்தான் அவருக்கு அத்தகைய ஆர்வத்தைத் தூண்டின.

கி.பி 8ம் நூற்றாண்டின் இறுதியில் தூதுக்குழுக்கள் பரிமாற்றம் நிறுத்தப்படும்வரை சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிக்கொண்டிருந்த கிமோனோ உடையானது பின்னர் உள்நாட்டிலேயே தயாராகத் தொடங்கியது. கிமோனோ என்பது பெண்களின் உடை. ஆண்கள் யுக்கத்தா என்ற உடையை அணிந்தனர். பிற்காலத்தில் கிமோனோ விழாக்களுக்கும் சடங்குகளுக்குமான உடையாக மாறியதில் எளிய உடையான யுக்கத்தா மற்ற நேரங்களில் பெண்களாலும் அணியப்படும் ஆடையானது. காலப்போக்கில் மாறுதல் அடைந்து வந்து கொண்டிருந்த இவ்வுடைகள் அந்தந்தக் காலத்திற்கேற்ப அணிவோரின் சமூகப் பொருளாதார நிலைகளை வெளிப்படுத்தவும் தவறவில்லை. அரசவையில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாத பணியைச் செய்து வந்தவர்கள் முழுக்கை கொண்ட உடையையும் விவசாயம், தச்சுவேலை போன்ற பணிபுரிவோர் அரைக்கை ஆடைகளையும் போர்வீரர்கள் போன்ற சண்டையிடுவோர் கைப்பகுதி அற்ற ஆடைகளையும் செய்தொழில் வசதிக்காக அணிந்தனர். அரசவையில் இருந்த முழுக்கை ஆடையோர்க்கு அவர்களின் கைப்பகுதியின் தூய்மை முக்கியத்துவம் பெற்றது. அழுக்காகும் வாய்ப்புகள் குறைவு என்பதால் தனக்கு விதிக்கப்படாத ஒரு பணியைச் செய்தாலொழியக் கைப்பகுதியின் தூய்மை கெடாது எனக் கருதப்பட்டது.

எனவேதான் முதல்பாடலில் தினைப்புனம் காத்த பேரரசர் தென்ஜியின் கைகளும் இப்பாடலில் காதலிக்காகக் காய்பறிக்கும் பேரரசர் கோக்கோவின் கைகளும் ஈரமாவது குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது.

வெண்பா:

வெள்ளுடை கொண்டோன் பணியன்று ஆயினும்

உள்ளங் கவர்ந்தோள் நலமுடனே – தள்ளாடா

வாழ்வுகொளக் காய்பறித் துள்ளுவார் மெய்ப்பை

கறையுறு வேதனையும் அற்று

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

Series Navigation<< துயரிலும் குன்றா அன்புநீ காத்திருக்கப் பொறுக்கிலேன் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.