அன்னம்

கணக்குப்பிள்ளை கிருட்டினன் வந்து வாசலில் நின்றான். அவன் வரும் நாள் இது அல்ல. வண்டியில் நெல் எடுத்து வருவான். சில சமயம் மாதச் செலவுக்கு ஐயா பணம் தந்து விடுவார். இந்தமாதப் பணம் வந்துவிட்டது. அவனைப் பார்த்ததும் சரவணன் உள்ளே ஓடி அம்மாவிடம் போனான். அம்மா அப்போதுதான் எதோ மாத்திரை போட்டுக்கொண்டு கண்மூடி அயர்ந்திருந்தாள். அவன் வரும் சத்தம் கேட்டு கண்ணைத் திறக்காமல் பொன்னம்மாள் “என்னடா?” என்றாள்.

“கிட்டு மாமா வந்திருக்காரு…” என்றான் சரவணன் பரபரப்புடன்.

என்ன இந்நேரத்துல, என்று யோசனையாய் இருந்தது. விஷயம் முக்கியமானதாய் இல்லாவிட்டால் சின்னவனிடமே தகவல் சொல்லி விட்டிருப்பான் கணக்கு. மெல்ல எழுந்து கொண்டாள். தலை கிர்ர் என்றது. எதையாவது பிடித்துக்கொண்டு நடக்க முடிந்தால் நல்லது. அசதி ஆளைச் சரித்துக் கீழே தள்ளியது. தலைமுடி அவிழ்ந்து தொங்க கொண்டையாய் முடிந்தபடி தள்ளாடி வாசலுக்கு வந்தாள்.

“என்ன கிட்டு?”

“ஒரு கெட்ட சேதிம்மா.”

அவள் தலையாட்டினாள். “ஐயா தவறிட்டாரு…” என்றான் அவன்.

பெரிய அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை. “ஓ” என்றாள். அழுகை இல்லை.. பத்து பன்னிரண்டு வருடம் முன்னால் விட்டுவிட்டுப் போன கணவனை இப்போது துக்கித்து அழ என்ன இருக்கிறது? அவர் விட்டுவிட்டுப் போன அன்றே அழுகை வரவில்லை அவளுக்கு. அவளே தன் கணவனையிட்டு எரிச்சல் ஆகியிருந்தாள். கணவன் என்று இல்லை. வாழவே பேரலுப்பு வந்திருந்தது அவளுக்கு. யாரையுமே எதையுமே பிடிக்கவில்லை. வலிகளூடே ஒரு வாழ்க்கைப் பயணம்.

ஓயாத வியாதித் தொந்தரவு இருந்தது அவளுக்கு. படுக்கையருகே ஸ்டூலில் விதவிதமான மருந்துகள் மாத்திரைகள். வாயு உபத்திரவம், சளி, இருமல். காய்ச்சல். சரியாக வெளிக்குப் போக. தூசி அலர்ஜியின் தொடர் தும்மல். எல்லாவற்றுக்கும் ரோக நிவாரணிகள் ஸ்டூலில் இருந்தன. வெள்ளை மாத்திரை, சிரப், சதையைச் சூடேற்றும் தைலம். அவள் கிட்டே போனாலே ஒரு மருந்துநெடி அடித்தது. சரவணனுக்கு.

சரவணன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அப்பா அவனை மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கும் போது வந்து போனார். பிறகு மிக சொற்பமாக அவரை சந்தித்திருக்கிறான். அப்பா சார்ந்த விஷயங்களை கிருட்டினன்தான் பொறுப்பேற்றுச் செய்கிறான். அப்பா பக்கத்து மதகுப்பட்டியிலேயே ஒரு ஜாகை பார்த்துக்கொண்டு விட்டார். அங்கே கொஞசம் விதைப்பாடு இருந்தது. அடிக்கடி அங்கே போய்வர வேண்டி யிருந்தது. அப்படியே எப்படியோ தமயந்தியுடன் பழகிக் கொண்டிருக்கலாம். அவர்கூட தாலி கட்டாமல் தமயந்தி வாழ்கிறாள். சமையல்காரியாக சிறு வேலைகள் செய்துவந்தவள் போல. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.

தனியே பிரிந்து போனாலும் அப்பா நெல் அனுப்புவதையோ, மாதச் செலவுகளுககுப் பணம் தந்தனுப்புவதையோ நிறுத்தவில்லை. முதல் தடவை கிருட்டினன் நெல் எடுத்து வந்தபோது பொன்னம்மாள் குதித்தாள். “ஏன் அவரு இங்க வர மாட்டாராமா?”. என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணிப் பார்த்தாள். கிருட்டினன் இடுப்பு முடியில் இருந்து பணம் எடுத்தான். ஒரு ஆயிர ரூபாய்த்தாள். அதைப் பார்த்ததும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா, என்று ஆகிவிடும் பயம் அவளுக்கு வந்தது.

பொன்னம்மாள் வகையில் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். இவன் சரவணன். மூத்தவன் பழனிவேல்ராஜன்.. கல்லூரி முடித்து அவன் இப்போது உரக் கம்பெனியில் வேலை செய்கிறான். அம்மா உடம்பில் இருந்து ஒரு தீராத மருந்து நெடி அடிப்பது போலவே அவனிடம் இருந்து உர நெடி வரும். ரேழி தாண்டி வீட்டுக்குள் புக உக்கிராண அறையில நெல் வாசனை வரும். அங்கே கீச் கீச்சென்று குருவிகள் சத்தம். சர்ர் சர்ரென்று அவை அறைக்குள் பறந்து கடப்பது, மின்விசிறியில் அடிபட்டு விடுமோ என்று பயமாய் இருக்கும். உக்கிராண அறையில் மின்விசிறி இருந்தாலும் யாரும் அதைப் போட மாட்டார்கள். அப்பா இல்லாமல் இப்போது உக்கிராண அறையே காலியாய்க் கிடக்கிறது. நெல்மூட்டை நெடியும் இல்லாமல் போயிற்று.

அப்பா இறந்தது அழுகையாய் இல்லை. அவனை அப்பா தூக்கிவைத்துக் கொஞ்சிய நினைவே இல்லை அவனுக்கு. அவனது நண்பர்களுக்கெல்லாம் அப்பா எத்தனை அன்பாய் பிரியமாய் இருந்தார்கள். ஒருமாதிரி தனிமையிலேயே அவனது இளமை கழிந்தாற் போல இருந்தது. அவன் வெளியே போனால் கூடவிளையாட ஆளே இல்லை. அண்ணாவிடமும் அத்தனை ஒட்டுதலாக அவன் நடந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. யோசித்துப் பார்த்தால், அம்மா அப்பா, அவர்கள் அன்பாய் ஒட்டுதலாய் இல்லாமல் போனால் குடும்பம் அப்படித்தான் பிசிறு தட்டி விடுகிறது.

அப்பாவுக்கு ஊரில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது! தங்கச்சிப் பாப்பா, என்று அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. என்றாலும் அம்மா குழந்தையைப் பார்க்க அவர்களை அழைத்துப் போகவில்லை. சரவணன் அந்தப் பெண்ணை ஒரு கல்யாணத்தில பார்த்திருக்கிறான். என்ன அழகு அவள். அத்தனை சிவப்பு. அவள்அம்மா வரவில்லை. சித்தியை சரவணன் பார்த்ததே இல்லை. இவளைப் பார்த்ததே சித்தியைப் பார்த்த திகட்டலாய் இருந்தது. அப்பா அவனை அருகே அழைத்து அந்தப் பெண்ணிடம் காட்டினார். “யோகலெட்சுமி, இது உன் அண்ணன்” என்று அறிமுகம் செய்துவைத்தார். அவனுக்கு அவளை ரொம்பப் பிடித்து விட்டது. சட்டென்று அவள் சிரித்தபோது கண்ணெல்லாம் சிரித்தது அவளுக்கு. கன்னத்தில் குழி விழுந்தது. அதெல்லாம் அப்படியே மனசில் பதிந்து விட்டது. ஏழெட்டு வருஷம் ஆனாலும் மறக்கவே இல்லை. முதல் பரிச்சயத்தின் சக்தி அது. உண்மையில் இப்போது அவள் பெரிய பெண்ணாக வளர்ந்திருப்பாள்., மேலும் அழகாகி யிருப்பாள். அப்பா இறந்து போனார் என்றதும், நாம மதகுப்பட்டி போகிறோம் என்று தெரிந்ததும், முதல் யோசனை அவனுக்கு, யோகலெட்சுமியைப் பார்க்கலாம் என்பதே. அவனுக்கு அழுகையாய் இல்லை… சந்தோஷமாய் இருந்தது!

முதல் தாரத்தின் வழி பிள்ளைக் குழந்தைகள் இருந்தன குருமூர்த்திக்கு. ஆக கொள்ளி போட மூத்தவன் பழனிவேலராஜன் தான் வரவேண்டும். அதற்காகத்தான் அந்தச் சண்டாளி தகவல் சொல்லிவிட்டிருக்கிறாள், என நினைத்தாள் பொன்னம்மாள். மதகுப்பட்டி இங்கே யிருந்து நாலாவது ஸ்டேஷன். காலையில் பாசஞ்சர் ரயிலில் கிளம்பிப் போக வேண்டும். பெரியவன் பழனிவேல்ராஜனுக்கு உர ஆபிஸ் போய் தகவல் கிருட்டினனே சொல்லிவிட்டு பிறகுதான் வீட்டுக்கு வந்தது. “நீங்க போயி ஏற்பாடுல்லாம் பண்ணுங்க மாமா. நான் அம்மாவை அழச்சிக்கிட்டு காலை ரயில்ல வந்திர்றேன்” என்று ஏற்கனவே அவன் பதில் சொல்லிவிட்டான். டுப் டுப்பென்று கிருட்டினன் திரும்ப புல்லட் ஏறிப் போய்விட்டான்.

பழனிவேல்ராஜனுக்கு அப்பாவின் சாவு பெரிய அளவில் துக்கமாய உள்ளே முட்டவில்லை. வெகு அபூர்வமாகவே அவரை அவன் பார்க்க முடிந்தது. எப்பவாவது வெளியிடங்களில் அவரை அவன் சந்தித்தான். பெரும்பாலும் அம்மா வீட்டைவிட்டு வெளியே இறங்குவது கிடையாது. ஊரில் விசேஷம் என்றால் அப்பா மாத்திரம் வருவார். “என்னடா நல்லா படிக்கறியா?” என்று விசாரிப்பார். அவை சம்பிரதாயக் கேள்விகள். அவன் படிக்காவிட்டால் அவர் கவலைப்படப் போகிறாரா, அதொன்றும் இல்லை.

அவர் அவர்களுடன் இருந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் ஒட்டுதல் இல்லாத அப்பா அம்மா சம்பாஷணை ஞாபகம் வருகிறது. அம்மா அப்பாவுக்கு டீ எடுத்து வருவாள். இரண்டாவது டிகாக்‌ஷனில் ஆறிப்போன டீ. “பழைய டிகாஷன் போல இருக்கே?” என்று கேட்பார் அப்பா. பின்ன அதை என்ன செய்ய? தூரக் கொட்டறதா? அப்பா “சூடு வேற கம்மியா இருக்கேடி?” என்பார். இப்பதான் அலுத்து சலித்து வந்து உட்கார்றேன். அது உங்களுக்குப் பொறுக்கலியா? இப்ப என்ன, நான் எந்திரிச்சி,ப் போயி திரும்பச் சுட வெச்சித் தரணுமா? “இப்ப நான் உன்கிட்ட டீ கேட்டனா?” என் தலையெழுத்து உங்களுக்கு ஒத்தாசை செஞ்சிட்டு கெட்ட பேரும் நான் வாங்கணும்… அம்மா பல் கடிக்காமல் பேசிப் பார்த்ததே கிடையாது. அத்தனைக்கு உள்ளே வலி அவளைப் புரட்டியெடுத்துக் கொண்டிருந்தது என நினைத்துக் கொண்டான் பழனிவேல்ராஜன்.

வீட்டில் அநேக நாட்கள் காலை டிபன் இட்லி ராயர் கடையில் போய் அண்ணா வாங்கி வருவதாக இருந்தது. தான் இத்தனை வேலை வீட்டுவேலை செய்வதே பெரிய விஷயம் என நினைத்தாள் பொன்னம்மாள். வேலைக்கு என அவளுக்கு ஆள் யாருமே தங்கவில்லை. அவளது பேச்சும் ஏச்சும் எரிச்சலும் அவர்களை விரட்டி யடித்தன. பொன்னம்மாத் தாயி வீட்ல யாரும் தொடர்ச்சியா வேலை செய்ததா சரித்திரம் கிடையாது.

அந்த உரக் கம்பெனியில் அவன் வேலையமர சிபாரிசு செய்தது அப்பாதான். கூட வந்து கம்பெனி ஓனரிடம் பேசினார். ஐய அதுக்கென்ன, என்று முதலாளி எ’ழுந்துநின்று பேசியது ஞாபகம் வருகிறது. “பாத்து நல்லபடியா சூதானமா நடந்துக்கடா” என்று அவனிடம் சொல்லிவிட்டு அப்பா உத்தரவு வாங்கிக் கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. “ஐயய்ய சின்ன வயசுதானே… எப்ப,” என முதலாளி அவனிடம் விசாரித்தார். “சரி. நான் நாளை காலைல வரேன்… நீ எப்ப போறே?” என்றும் கேட்டுக்கொண்டார்.

சாயங்காலமாய் பழனிவேல்ராஜன் வீடு திரும்பியபோது அம்மா காத்திருந்தாற் போல இருந்தது. “கொள்ளி வைக்கன்னு போகத்தான் வேணும். ஆனா அங்க தங்க முடியாதுடா” என்றாள் அம்மா நெற்றியில் தைலம் தேய்த்தபடி. அவள் நெற்றியில் கானல்நீர் ஓடினாற் போல இருந்தது. இருந்த உடல்வலியில் அம்மா இரா பூரா முனகிக் கொண்டே கிடந்தாள். “அந்தப் பாதகத்தி உக்காந்து திங்காளே, அது மொத்தமும் நம்ம துட்டுடா” என்றாள் அவனிடம். “காதிலும் மூக்கிலும் என்னமா ஜொலிக்கிறா…” என்று பல்லைக் கடித்தாள் அம்மா. எங்க பார்த்தாள் தெரியவில்லை. அல்லது, யாராவது வந்து சொல்லியிருப்பார்கள்.

‘‘வா பழனி, இப்பிடி உக்காரு…” என சிறிது நகர்ந்து கட்டிலில் இடம் கொடுத்தாள் அவனுக்கு. நாம போயி அவளுக்கு எதோ குடுத்திட்டு வீட்டைக் காலி பண்ணச் சொல்லி அவளை விரட்டிட்டு வரணும். வெறுங்கையோட நாம அனுப்ப வேண்டாம். பெண்பாவம் பொல்லாதது. நாம என்ன குடுக்கறமோ, பேசாம குடுக்கறத வாங்கிக்கிட்டு அவ வெளிய இறங்க வேண்டிதான்..” அவன் பக்கம் திரும்பினாள் அம்மா. “என்ன புரியுதா?”

அவன் அம்மாவைப் பார்த்தபடி தலையாட்டினான். எப்பவாவது மதகுப்பட்டி போய் அப்பாவைப் பார்த்துவிட்டு வர அவனுக்கு ஆசைதான். அம்மாவுக்கு அந்த யோசனையே பிடிக்கவில்லை. நம்மையெல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் போன மனுசன்தானே அந்தாளு? அவராதான் வரணும். நாம அந்த வீட்டுப் படியை மானங்கெட்டுப் போயி மிதிக்கப்டாது… என்றாள் அம்மா. இந்த ஊரில் எதும் விசேஷம் என்றால் சில சமயம் அந்தச் சிறுமி யோகலெட்சுமியையும் கூட உட்கார்த்திக்கொண்டு டுப் டுப்பென்று புல்லட்டில் வருவார். எப்பவும் அவளுக்குப் பட்டுப்பாவாடைதான். பெண்ணையிட்டு குருமூர்த்திக்குப் பெருமை இருந்தது. யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவர் பார்வை பெண் எங்கே விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று பார்த்தபடியேதான் இருந்தது.

உங்கய்யா எனக்கு எந்த சுகத்தையும் கொடுக்கல்ல பாத்துக்க… என் பிறவியே அப்பிடி ஆயிட்டது. உடம்பு போட்டு வாட்டி வதைக்குது. போதாக்குறைக்கு இந்த மனுசனும் நம்மை அப்பிடியே உதறிட்டுப் போயிட்டாரு… என்பாள். அழ மாட்டாள். சதா குறைப்பட்டுக் கொண்டே இருக்க விதிக்கப் பட்டவள் அவள், என்று தோன்றியது. எனக்கு விதிச்சதுஞ் சரியில்ல, அமைஞ்சதும் சரியில்ல, என்பாள் அம்மா.

மலையடிவாரத்தில் இருந்தது மதகுப்படடி. அங்கே முதல்நாள் மழை பெய்தால் மறுநாளே தண்ணீர் கீழூருக்கு ஓடி வந்துவிடும். வானமே மந்தாரமிட்டு மூடி தூரமே தெரியாமல அப்படியொரு மழை அடிக்கும். தெருவே புழுதி பொங்கி மரங்களின் குச்சிகளைப் பிடுங்கி உதிர்த்தபடி ஒரு பெருங் குளிர்காற்’று ஊரில் அடித்தால் மேலப் பக்கம் மழை பெய்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ஆகா ஆகா என்று மழைக்கு முதுகு காட்டிக் குளிக்கும் மரங்கள் பார்க்க கொள்ளை அழகு.

கீழூரிலும் பூஸ்திதி இருந்தது. அப்பா குத்தகைக்கு விட்டிருந்தார். அப்பாவோடு வயலுக்குப் போன சிறு வயது ஞாபகங்கள் இப்போதும் பழனிவேல்ராஜனுக்கு இருந்தன. தரைமட்டக் கிணற்றில் தலைமுண்டாசைக் கழற்றி எறிந்துவிட்டு குபீரென்று பாய்வார். அவனுக்கு நீச்சல் தெரியாது. சிறு புன்னகையுடன் குஞ்சாமணி தெரிய அம்மணமாய் மேலே நிற்பான். திடீரென்று அவனை அலாக்காகத் தூக்கிக் கிணற்றில எறிந்தார் அப்பா. பகீரென்றது. ஆ ஊ…வென்று முங்கி முங்கி மேலே வந்தான். கண்ணுக்குள்ளெல்லாம் தண்ணீர் புகுந்துவிட்ட மாதிரி இருந்தது. மூக்கு வழியே நீர் ஏறி சளியோடு திகைப்பு காட்டியது. என்ன நடந்தது? அப்பாவின் கைகள் அவனை அணைத்துத் தூக்கின. அவனை அப்படியே கரைக்குத் தள்ளி வந்தார். “பயப்படக் கூடாதுடா. ஒருதரம் உள்ள விழுந்தினாத்தான் பயம் போகும்” என்றார். பிறகு அவன் நீச்சல் கற்றுத் தேர்ந்து விட்டான். நாலுநாள் அப்பா கையில் தவழ்ந்தா மாதிரி, பிறகு மல்லாக்க நீச்சல். பிறகு முங்கு நீச்சல் வரை பழகி விட்டது.

அம்மா இருமிக் கொண்டே என்ன்வோ பேசிக் கொண்டிருந்தாள். போக, கொள்ளி வைக்க உடனே கிளம்பிவிட முடிந்தால் நல்லது. ஆனால் அந்தப் பாதகத்தியிடம் ஒரு சண்டை இருக்கிறது. எப்படி அவள் கொஞ்சங் கூட ’கூச்ச நாச்சம் இல்லாமல இப்படி அடுத்தவள் புருஷனைக் கைக்குள் போட்டுக் கொண்டு தாலி கூட இல்லாமல், ஒரு பெண் குழந்தையும் பெற்றுக் கொண்டு… ஊர்ல நாலு பேர் கேட்க மாட்டாங்களா?

பெரியவனிடம் கட் அன்ட் ரைட்டாகச் சொன்னாள். அவ அழறா, பெண் குழந்தை வெச்சிருக்கா, பாவமா இருக்கு… அது இதுன்னு இரக்கப் பட்றாதே ராஜு. அவ விஷக்கன்னியாக்கும். நம்ம குடும்பத்துக்கே அவ பிசாசு மாதிரி. அவரு இருந்தவரை இவ ஆடற மட்டும் ஆடினா. இப்ப?… அம்மா மேலும் மேலும் புலம்பிக் கொண்டிருந்தாள்.

காலையில் மதகுப்படடி போய் இறங்கியபோது கிருட்டினன் ஸ்டேஷனுக்கே வந்திருந்தான். அந்த வண்டியில் இறங்கிய நிறையப் பேருக்கு அவர்களை அடையாளம் தெரிந்தது. குருமூர்த்தி சாவுக்கு என வந்தவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். ஸ்டேஷனில் இறங்கியதில் இருந்து தெருவெங்கும் பத்திருபது வீட்டுக்கு ஒரு ‘கண்ணீர் அஞ்சலி’ நோட்டிஸ் ஒட்டப் பட்டிருந்தது. டவுணுக்குப் போய் ராவோடு ராவாக அடித்து வந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அது பெரிய விஷயம். கணக்குப் பிள்ளைக்கு கணக்கு எழுத சௌகரியம்.

மனுசருக்கு வயசு அம்பதுச் சொச்சம் தாண்டவில்லை. அதற்குள் இப்படி ஆகிப்போயிற்று. சிலருக்கு குருமூர்த்தியின் முதல் சம்சாரம் பொன்னம்மாளையே அடையாளம் தெரிந்தது. மாட்டுவண்டியில் இருந்து பொன்னம்மாள் இறங்கியபோது, திருத்துறை ஆச்சி வந்து அழுதபடி அவளைக் கட்டிக் கொண்டாள். நிறையப் பேருக்கு தந்தி அடித்திருந்தது. மரத்தடி வாசலில் மூணு நாலு நீண்ட பெஞ்சுகள் போட்டிருந்தது. நல்ல கூட்டம். நெல்லடி களம்போல நீண்ட வெளி. ஒரு பக்கமாக ராட்டினக் கிணறு. இடுப்பு பெருத்த புளிய மரம் ஒன்று நின்றது. அதன் அடியிலேயே பெஞ்சுகள் போடப் பட்டிருந்தன.

உள்ளே தனி கட்டிலில் குருமூர்த்தி கிடத்தப் பட்டிருந்தார்., அழுகை வராவிட்டாலும் மனைவி என்ற சம்பிரதாயப்படி பொன்னம்மாள் அழுதாள். பாதி அழுகையில் அவளுக்கு இருமல் வந்தது. ரொமப அழுதாலும் அவளுக்கு என்ன செய்யும் என்றே தெரியாது. யாரோ நாற்காலி ஒன்று உள்ளேயிருந்து எடுத்துவந்து குருமூர்த்தி அருகே அவளை உட்கார்த்தினார்கள். என்றாலும் ரெண்டு நிமிடத்துக்கு மேல் அவளால் உட்கார முடியவில்லை. உடல் துவண்டது.

“நீங்க உள்ள வந்து கட்டில்ல ரெஸ்ட் எடுத்துக்கங்கக்கா…” என்று இனிமையான குரல் கேட்டது. பொன்னம்மாள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். இவள்தான் தமயந்தியா? பளிச்சென்று இருந்தாள். சின்ன வயசு போலத்தான் இருந்தது. கழுத்தில் ஒருபிடி நகை. ஜாதகத்தில் புதன் நல்லா இருந்தால் வயசு தெரியாமல் முகம் இளமையாய் இருக்கும். புதன்… காதலுக்கும் காரகாதிபதியாக்கும், என திடீரென்று நினைத்துக் கொண்டாள். மேலே நினைக்க முடியவில்லை. தலை கிறுகிறுத்தது. யாரோ தாங்கியபடி அவளை உள்ளே அழைத்துப் போனார்கள்.

ஒரு ஜக்கில் டீயும் ஒரு அடுக்கு டம்ளர்களுமாக பையன் ஒருவன் சுற்றிச் சுற்றி வந்தான். வேண்டப்பட்டவர்கள் கூப்பிட்டு வாங்கிக் குடித்தார்கள். கிருட்டினன் எல்லா ஏற்பாடும் நன்றாகச் செய்து கொண்டிருந்தான். குருமூர்த்தியின் பெண் யோகலெட்சுமி எங்கே, என்று சரவணன் கண்கள் தேடின. அவள் வீட்டுக்குள் யார் மடியிலாவது இருப்பாளாய் இருக்கும். அம்மா போய்ப் படுத்து விட்டதில் அவனுக்கு ஆசுவாசமாய் இருந்தது. அவனுக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? யாராவது அவனுடன் விளையாட வந்தால் விளையாடலாம்போல இருந்தது. வீட்டின் எதிரே எவ்வளவு விஸ்தாரமான இடம்.

உள்ளே போய் அவன் கிடத்தப் பட்டிருக்கிற அப்பாவை ஒருதரம் கிட்ட நின்று பார்த்தான். இறந்த உடலைப் பார்ப்பதுவே பயமாய் இருந்தது. செத்தவர்கள் பேயாக அலைவார்களாம். ராத்திரி அண்ணனுடன் தான் படுத்துக் கொள்ள வேண்டும், என நினைத்தபடி அவன் உள்ளறைகளில் யோகலெட்சுமியைத் தேடிப் போனான். யார் மடியிலோ உட்கார்நதிருந்தவள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்து கையாட்டி அருகே கூப்பிட்டாள். ஆ அவளுக்கு என்னை நினைவு இருக்கிறது, என நினைக்கவே சரவணனுக்குப் பரவசமாய் இருந்தது.

“வா சரவணா” என்று அவனை கிட்டே வரச் சொல்லி கட்டிக் கொண்டாள் தமயந்தி. “நல்லாப் படிக்கறியா?” என்று கேட்டு அவன் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். சின்னப் பையனாகவும் இல்லை. பெரிய பையனாகவும் இல்லை என்கிற வயசுக்காரன் அவன். சித்தி அவனைக் கட்டிக் கொண்டது அவனுக்கு வெட்கமாக இருந்தது. என்றாலும் பிடித்திருந்தது. சித்தி என்ன அழகு. முக அழகு என்று இல்லை. மன அமைதி, சந்தோஷம். அதுதான் அழகு போல இருந்தது.

பழனிவேல்ராஜன் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்க அவனிடம் நிறையப் பேர் வந்து துக்கம் கேட்டார்கள். அப்பா எப்படிச் செத்துப் போனார், என்றே அவனுக்குத் தெரியாது. என்ன பேச என்றே தெரியவும் இல்லை அவனுக்கு. தனியே கிருட்டினனிடம் போய் எல்லா விவரமும் கேட்டுக் கொண்டான். சட்டென்று அவன் தலையைத் தூக்கி வீட்டுக்குள் பார்த்தபோது சித்தி தமயந்தி அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். அவனும் தலையாட்டி புன்னகைத்தான்.

அப்பா அவனையோ அவன் அம்மாவையோ மதகுப்பட்டி வீட்டுக்கு அழைத்ததே இல்லை. அதுவரை சித்தியை பழனிவேல்ராஜன் சந்தித்தது இல்லை. எல்லாரும ரொம்ப தன்மையான ஆட்களாய்த் தெரிந்தார்கள். அந்த வீட்டிலேயே ஒரு ‘லெட்சுமி வாசம்’ தட்டியது. அம்மாவுக்கு யாரோ சோடா வாங்கிக் கொண்டு போனார்கள். அதையே பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன். சோடா தொண்டைக்குள் விறுவிறுவென்று இறங்கும்.

“நீ கலர் குடிக்கறியா?” என்று அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள் தமயந்தி. சரி என்’று சரவணன் தலையாட்டினான். அவனுக்கு ஒரு ‘காளிமார்க்’ கிரேப் வந்தது. அதுதான் அவனுக்குப் பிடிக்கும். சினிமா தியேட்டரில் இடைவேளையில் அண்ணனிடம் கேட்டு வாங்கி ஆளுக்குப் பப்பாதி குடித்திருக்கிறான். கோலிகுண்டை கட்டைவிரலால் உள்ளே தள்ளி புஸ்சென்று நுரை வர அவனிடம் நீட்டினாள் தமயந்தி. நுரைத்த கடலையே குடிக்கிற மாதிரி இருந்தது அவனுக்கு.

ஒருமாதிரி ஆஸ்துமா தொந்தரவு போல மூச்சிறைத்தது பொன்னம்மாளுக்கு. ரயிலில் வந்தது, கரித் தூசி ஒத்துக்கொள்ளவில்லையோ என்னமோ. இத்தனை தூரம் ரயிலில் வர முடிந்ததே ஆச்சர்யம்தான். வேறு வழி இல்லை. இப்போது திரும்ப ஊர் பத்திரமாய்ப் போய்ச் சேர வேண்டும். பையன்கள் பற்றி நினைப்பு வந்தாலும் அப்படியே கண்மூடிக் கிடந்தாள். நல்ல பெரிய வீடு. மாடியில் குதிர் இருக்கிறது. கூடவே மரப்பலகை போட்டு சிறு அறை போல இருந்தது. பின்அறையோடு தளம் போட்டு இணைத்திருந்தது. அங்கே ஓரமாய் துளை போட்டு ஜலதாரை. யாரும் இராத்திரி தங்க இடம் போல வசதி இருந்தது. ஆனால் மேல் ஓடுதான் ரொம்பத் தாழ தலை இடிக்கிறாற் போல இருந்தது.

நல்ல வசதியாய்த்தான் அவளை வைத்துக் கொண்டிருந்திருக்கிறார் என்று தெரிந்தது. எப்படி மயக்கினாளோ இந்தத் …. என ஒரு வசவு வந்து தொண்டையெல்லாம் கசந்து வழிந்தது. அங்கே அப்படிப் படுத்திருக்கப் பிடிக்கவும் இல்லை. வெளிச்சத்தங்கள் கேட்டன. ஓதுவார் வந்துவிட்டார் போல இருக்கிறது. வாசலில் சப்பரம பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. உளளே நுழைகையில் சப்பரம் கட்டும் வேலைகளைப் பார்த்தாள். தாழம்பூவும், கனகாம்பரம், மல்லிகை, சம்பங்கி என்று ஏக அமர்க்களம். எல்லாம் கிருட்டினனின் வேலை. அந்தக் காலத்தில் நம்ம வீட்டில்தான் வந்து வாசலில் பவ்யமாய் நிற்பான். அவனுக்கு வந்த வாழ்க்கை…

தேவாரமும் இதர முறைமைப் பாடல்களும் பாடியபடியே குருமூர்த்தியைக் குளிப்பாட்டினார்கள். அவளால் எழுந்துகொள்ளவே முடியவில்லை. கடைசியில் வாய்க்கரிசி போடவும் நமஸ்காரம் பண்ணவும் அவள் வந்தால் போதும் என்றுவிட்டார்கள். ஈர வேட்டி கட்டிக்கொண்டு பழனிவேல்ராஜன் காரியங்கள் செய்தான். சுடுகாட்டில் அவனுக்கு மொட்டை போட ஆளுக்குச் சொல்லி யிருந்தது. கூடவே பழனிவேல்ராஜனுக்குப் பக்கத்திலேயே கிருட்டினன் நின்றான்.

சரவணனுக்கு அழுகை வரவில்லை. ஆனால் அப்பா, அப்பா… என்று யோகலெட்சுமி அழுதாள். அவளை கிட்டே அழைத்து அணைத்துக் கொண்டாள் தமயந்தி. யோகலெட்சுமியைப் பார்த்து சரவணனுக்கு அழுகை வந்தது. அவனும் தமயந்தி கிட்டேபோய் நின்றபோது அவனையும் இழுத்து அணைத்துக் கொண்டாள் தமயந்தி. பெரும் சப்பரம். அப்பாவை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி வைத்தார்கள். இருந்த தலைக் கிறுகிறுப்பில் உள்ளாவேசமாய் இருந்தாள் பொன்னம்மாள். வேகமாய்ப் போய் அவரை செருப்பைக் கழற்றி அடிக்க வேண்டும் போல இருந்தது.

அவளுக்கு வெந்நீர் போட்டுத் தந்தார்கள். தண்ணீர் நிச்சயம் ஒத்துக்கொள்ளாது. வீட்டிலானால் மாலை வெயில் இறங்க வெந்நீரில் நீலகிரி தைலம் ஊற்றிக்கொண்டு குளிப்பாள் பொன்னம்மாள். கட்டிலில் அவள் உட்கார்ந்திருக்க சுற்றிலும் ‘அவள் மனிதர்கள்’ இருந்தார்கள். தலையை விரித்து காற்றாட விட்டிருந்தாள் பொன்னம்மாள். பையன்கள் இரண்டு பேருமே காட்டுக்குப் போயிருந்தார்கள். மொட்டை போட்டுக்கொண்டு வருவார்கள். இவர் வரணும், இன்னொருவர் வரணும்… என தள்ளிக்கொண்டே போய் இரவே வந்துவிட்டது. தமயந்தி தனியே கூட்டிப்போய் சரவணனுக்கும், யோகலெட்சுமிக்கும் இட்லி கொடுத்தாள். அவள் சாப்பிடவில்லை.

எல்லாரும், கிருட்டினன் உட்பட யோசனைகள் கேட்டு அவளிடம் வந்து வந்து நின்றார்கள். அதை கவனித்துவிட்டு பல்லைக் கடித்தபடி முகம் திருப்பிக் கொண்டாள் பொன்னம்மாள். எப்படி இவள் ஆட்சி நடத்துகிறாள். நான் இருக்க வேண்டிய இடம் இது. என் இடம். இது எனக்குத் தரப்பட வேண்டிய மரியாதை…

கொள்ளிபோடப் போனவர்கள் திரும்பி வரும்வரை எல்லாரும் சாப்பிடாமல் காத்திருந்தார்கள். பொன்னமமாள் அதற்குள் எலுமிச்சை ஜுஸ் குடித்துக் கொண்டாள். எல்லாம் இதமாய், தேவையறிந்து செய்யத் தெரிந்தவளாய் இருந்தாள் தமயந்தி. அவள் எங்கேயும் முன்னால் இல்லை. என்றாலும் அவள் முன்னிலையில் அவள் தலைமையில் எல்லாம் கச்சிதமாய் நடந்தது.

முதல் சாப்பாடு நடக்க மாலை ’ஏழுமணி ஆகிவிட்டது. நிறைய இலைகள் போடப்பட்டன. இந்த ஐந்தா‘று ஆண்டுகளில் குருமூர்த்தியின் செல்வாக்கு பெருகி யிருந்ததை பொன்னம்மாள் தெரிந்துகொண்டாள். யோகலெட்சுமி பக்கத்தில் உட்கார்ந்து சரவணன் சாப்பிட்டான். அவன் மொட்டையைப் பார்த்து யோகலெட்சுமி சிரித்தாள். “ஷ். சிரிக்கக் கூடாது” என அவளை அடக்கினாள் தமயந்தி.

அவளோடு எப்போது பேச ஆரம்பிப்பது, என்று பொன்னம்மாளுக்கு யோசனை. இப்போதே இத்தனை நாழியாகி விட்டது. காலை திரும்ப காட்டுக்குப் போய் சாம்பலை எடுத்து நதியில் கரைக்க வேண்டும். அநேகமாக எல்லாருமே ராத்திரி கிளம்பி விடுவார்கள்.

புது இடம். புதுத் தண்ணி, என்று பொன்னம்மாளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. லேசாய் கணகணவென்று இருந்தது. சரியாய்ச் சாப்பிடக் கூட முடியாமல் போய்ப் படுத்துவிட்டாள். கண்கள் மூடிக் கிடந்தாலும் நீர் கட்டி வெந்நீராய்க் கொதித்தன. அவளை அபபடியே விட்டுவிட்டார்கள். தலைக்குத் தண்ணி ஊற்றிக்கொண்டாலே அவளுக்கு இப்படி ஆகிவிடுகிறது.

சரவணன் யோகலெட்சுமி கூட அன்றைக்குப் படுத்துக் கொண்டான். ஒரே சிரிப்பு அவளோடு. விடுகதைகள் நிறையப் போட்டு விளையாடினான் அவளுடன். குட்டிக் குட்டிக் கதைகள் சொன்னான். அறுவை ஜோக்குள் வேறு நிறையச் சொன்னான். கெக் கெக் என்று அவள் சிரிப்பது அவனுக்கு போதையேற்றியது. ஒரு விரலைக் காட்டி, இது சேலை. பிறகு அதை உறிஞ்சினாற் போல வைத்துக் கொண்டு, இது?.. என்று கேட்டான்.

“வாயில் சேலை!” யோகலெட்சுமி கெக் கெக் என்று சிரிக்கிறாள்.

கிருட்டினன் உத்தரவு வாங்கிக்கொண்டு கிளம்பும்போது மணி பதினொன்று. வீடே காலியாகி விட்டது. சிதை எரிந்து முடிந்து எலும்புகளைத் திரட்டிக் கொள்ள காலை எட்டு ஒன்பது மணிக்கு மேல் வரச்சொல்லி யிருந்தார்கள். போய்விட்டு காலையில் வருவதாகச் சொன்னான் கிருட்டினன். அவசர வேலைகளுக்கு என்று அவன் புல்லட் எடுத்துப் போகிறவன் தான். இப்போது குருமூர்த்தி அவரே இல்லை. அவன் புல்லட் எடுத்துப் போவதை யார் கேட்கப் போகிறார்கள்.

பழனிவேல்ராஜன் வாசல்பக்க அறையில் படுக்க விரிப்பு விரித்து வசதி செய்து தந்திருந்தாள் தமயந்தி. அவனோடு புன்னகை தாண்டி அவள் பேசவே இல்லை. அவனுக்கும் அவளிடம் பேச தயக்கமாய் இருந்தது. அவளைப் பார்த்தால் மோசமான பெண் போலத் தெரியவில்லை. அம்மாவானால்…. சண்டைக்குத் தயாராகிறாள். சரி. நாளை எப்படியும் அம்மா தன் சுயரூபத்தைக் காட்ட முயலக் கூடும், என நினைத்தான். எது எப்படின்னாலும், அவனுக்கு ஒரு வசனம் ஏனோ நினைவு வந்தது. முடியுள்ள சீமாட்டி கொண்டையும் போடலாம்., அவிழ்த்தும விடலாம். அதொரு அழகு, இதொர ஆகு. மொட்டைப் பாப்பாத்தி என்ன பண்றது?

அவன் படுத்துக்கொண்டதைப் பார்த்துவிட்டு “விளக்கை அணைச்சிறட்டுமா?” என்று கேட்டு அணைத்துவிட்டுப் போனாள் தமயந்தி. எப்போதுமே புன்னகையுடன் புத்துணர்ச்சியுடன் அவள் நடமாடினாற் போல இருந்தது. அழித்திண்ணை. வாசல் பக்கமிருந்து அருமையான காற்று. தானறியாமல் தூங்கிப் போனான்.

காலையில் அப்பாவின் சாம்பலையும் எலும்புகளையும் கரைத்துவிட்டு வரும்போது பதினோரு மணி ஆகிவிட்டது. வந்த விருந்தாளிகள் எல்லாரும் கிளம்பிப் போய்விட்டார்கள். தமயந்தியே எல்லாருக்கும் சமைத்திருந்தாள். அவர்கள் எல்லாரும் வந்தது யோகலெட்சுமிக்கு உற்சாகமாய் இருந்தது. எல்லாரையும் உட்காரவைத்து அவளே இலை போட்டு தண்ணீர் தெளித்து இலையைத் துடைத்து வைத்தாள். என்ன சமத்துக் குட்டி இவள், என நினைத்தான் பழனிவேல்ராஜன். அண்ணா அண்ணா, என்று அவள் கூ ப்பிடுவது எத்தனை அழகு. சரவணன் அவளோடயே ஒட்டிக்கொண்டான்.

ஆ சமையல் அற்புதமாய் இருந்தது. துளி உப்பு கூடவில்லை. குறையவில்லை. இப்படியொரு சாப்பாட்டை அவர்கள் சாப்பிட்டதே இல்லை. ருசிக்குச் சமைக்கிறதும் அதை அன்போடு முகம் பார்த்து பரிமாறுகிறதும்… அவர்கள் வீட்டில் கிடையவே கிடையாது. கரியடுப்பில் வதக்கிய கத்திரிக்காய் கொத்சு அடாடா என்று இருந்தது. சரவணன் ரொம்ப உற்சாகமாய் வாங்கிச் சாப்பிட்டான். பொன்னம்மாளே அநதச் சாப்பாட்டில் அசந்துபோன மாதிரிதான் தெரிந்தது.

எழுந்து கொண்டபோது பழனிவேலராஜனுக்கு ஏப்பம் வந்தது. அவன் கைகழுவ பின்கட்டுக்குப் போனபோது புன்னகையுடன் ’கூட வந்தாள் தமயந்தி. “சாப்பாடு ’ஏ ஒன்” என்றபடி “பின்ன சும்மாவா?” என்றான். அவளுக்குப் புரியவில்லை. “உங்க பேர் என்ன?” என்றான். “தமயந்தி யார்? நளனுக்கு மனைவி இல்லையா?” என்றான். “இல்ல” என்றாள். அவனுக்’குப் புரியவில்லை. “உங்க அப்பா பேரு குருமூர்த்தி” என்று புன்னகைத்தாள் அவள். எத்தனை அழகாய்ப் பேசுகிறாள்.

நல்ல சாப்பாடு என்பது ஓர் அமைதியான வாழ்க்கைக்கு எத்தனை முக்கியம் என்று தெரிந்தது அவனுக்கு. பிரியமாய்ப் பரிமாறப்படுதல், அது ஒரு பக்கம். அப்பா தமயந்தியின் பிரியத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டமாதிரி அவனுக்குத் தோன்றியது. திரும்பவும் கீழூருக்கு வர அவருக்கு எண்ணம் வரவே இல்லை. வந்து அந்த அமைதியான வாழ்க்கையில் கல்லெறிய அவர் பயப்பட்டிருக்கலாம். அண்ணா அண்ணா, என்று யோகலெட்சுமி அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவளுக்கு எதாவது வாங்கித்தர வேண்டும் போல இருந்தது.

ஒரு மணிக்கு ரயில். அவர்கள் கிளம்ப வேண்டும். அம்மா பிடிவாதமாய்த் தன்னை உட்கார்த்திக் கொண்டு அவனிடம் பேச ஜாடை காட்டினாள். சரவணன் யோகலெட்சுமியைக் கூட்டிக்கொண்டு வெளியே விளையாட ஓடிவிட்டான். அவனை இங்கேயே விட்டுவிட்டுப் போனால் இருந்து விடுவான் போல இருந்தது.

முகம் கொள்ளாத கசப்பும் வெறுப்புமாய் உட்கார்ந்திருந்தாள் பொன்னம்மாள். அவன் பேச ஆரம்பிக்குமுன், எதிர்பாராமல் தமயந்தியே பேச ஆரம்பித்தாள். “உங்க அப்பாவை அடிக்கடி போயி உங்களையெல்லாம் பாத்திட்டு வரச்சொல்லி சொல்லிக்கிட்டுதான் நான் இருந்தேன். உண்மையில் மாதாமாதம் உங்க வீட்டுக்கு தவறாமல் பணம் தந்தனுப்பினதே நான்தான்…”

இவ என்ன பணம் தந்தனுப்பறது? யாருக்கு யார் பணம் தர்றது… என பொன்னம்மாளுக்கு உள்ளே எரிமலை குலுங்கியது. அதற்குள் அவளுக்கு இருமல் ஆரம்பித்து விட்டது. தமயந்தி தொடர்ந்து பேசினாள். “அவர் காலமும் ஆயிட்டது… அப்டின்னு நீங்க விட்டுக் குடுத்திறக் கூடாது. வந்திட்டுப் போயிட்டு இருக்கணும்.

“இந்தப் பொண்ணு… சட்னு வளர்ந்துருவா. அப்பா இல்லைன்னா இனிமே நீங்கதான் இவளைப் பத்திரமா பாத்துக்கணும். இவளோட நல்ல காரியம் எல்லாமே இனி உங்க கைலதானே? நீங்க அண்ணன்மார் இல்லையா?” என்றாள்.

அவன் எதோ சொல்ல வருமுன், வாசலில் மாட்டுவண்டி கட்டித் தயாராய் இருந்தது. கிருட்டினன் உள்ளே வந்தான். பொன்னம்மாள் பேச முடியாமல் எழுந்துகொண்டாள். கைத்தாங்கலாக கிருட்டினன் பொன்னம்மாளை அழைத்துப்போய் முட்டு கொடுத்து தூக்கி வண்டியில் ஏற்றினான். வாசல் வரை வந்தாள் தமயந்தி.

சரவணனும் கிளம்ப மனம் இல்லாமல் வண்டியில் ஏறிக்கொண்டான். பொன்னம்மாள் தமயந்தி முகத்தைப் பார்க்கவே இல்லை. தமயந்தி யோகலெட்சுமிடம் “அண்ணா எல்லார்க்கும் டாடா சொல்லுடி…” என்றாள். “திரும்ப எப்ப வரே அண்ணா?” என்று அவள் சரவணனைக் கேட்டாள். வண்டி ஒரு குலுக்கலுடன் கிளம்பியது.

சரவணனுக்கு சொர்க்கத்தை விட்டுப் பிரிவது போல இருந்தது.

வண்டி ஓடிக் கொண்டிருக்கும்போதே கத்த ஆரம்பித்தாள் பொன்னம்மாள். “அவபாட்டுக்குப் பேசிட்டே போறா. நீ மறிக்காம கேட்டுக்கிட்டே இருந்தியேடா?”

அப்பாவை இதுநாள்வரை சந்தோஷமாக அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அம்மா, என சொல்ல நினைத்து, அவளையும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பழனிவேல்ராஜன். ஏவ், என்று ஏப்பத்தை சிரமப்பட்டு அடக்கினான்.

சரவணனுக்கு யோகலெட்சுமி ஞாபகம் விலகவே இல்லை. இது என்று ஒரு விரலைக் காட்டி, “பாபா…” பிறகு அதே விரலைச் சரித்துக் காட்டி, “இது?”

One Reply to “அன்னம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.