அகிலம் அண்டம்

இவ்விரு சொற்களும் ஒன்றையே சுட்டுவதா? அல்லது அகில அண்டங்களையா? திருவானைக்காவின் அரசி, தாடங்கம் அணிந்த தேவி, அகிலாண்டேஸ்வரி என்ற திரு நாமத்தால் வணங்கப்படுகிறார். அனைத்து அண்டங்களையும் உள்ளடக்கிய அகில நாயகி அன்னை என்ற பொருள் அந்த ஒரு நாமத்தால் உணர்த்தப்படுகிறது.

அறிவியலாளர்களின் கூற்றுப்படி இந்த உலகில் 68% கரும் சக்தி (Dark Energy) இருக்கிறது; சற்றேறக்குறைய 27% கரும் பொருள் (Dark Matter) இருக்கிறது. உலகில் இருக்கும் நம் கருவிகளைக் கொண்டு, நம் பார்வை அல்லது சிந்திக்கும் திறனால் அறியப்படும் பொருளென்னவோ 5% தான்.

கரும் பொருள் என்பது என்ன? அது மின் காந்தப் புலத்துடன் (Electromagnetic) வினை புரியாத ஒன்று. அதாவது, அது மின் காந்தக் கதிர்வீச்சினை உள் வாங்காது, பிரதிபலிக்காது, வெளியிடாது.

ஒரு அகிலம் ஒளிக்கும், இருட்டிற்குமான எல்லைக்கோட்டில் இருக்கிறது. நீங்கள் கவனித்திருக்கலாம். கணக்கிலடங்கா விண்மீன்கள் தங்கள் ஒளிஜாலத்தைக் காட்டும் வானில், பிரகாசம் என்பது சீராக இல்லை என்பதை. இதை அல்பெர்ஸ்(Olbers) முரண் என்று சொல்கிறோம். இந்த அகிலம் விரிந்து பரவுவதால், தொலை தூர ஒளி இன்னமும் நம்மை வந்தடையவில்லை. இது இன்னமும் சுவையான ஒரு செய்தியைத் தருகிறது. எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தில், நேரடியாகப் பார்வையில் சிக்கும் எண்ணற்ற விண்மீன்களின் தொகுக்கப்பட்ட திடமான கோணம் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கிறது என்ற விந்தையான செய்தி அது. எல்லையற்ற அகிலத்தில், காலவெளியின் (Space-Time) புள்ளிகள் ஒவ்வொன்றும் மையமே.

“இரண்டு விஷயங்கள் தான் எல்லையற்றவை- அகிலம் ஒன்று, மனித முட்டாள் தனம் மற்றொன்று. ஆனால், முதலில் சொன்ன விஷயத்தைப் பற்றி என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.” -ஐன்ஸ்டைன்.

1927 இல் உருவான பெருவெடிப்புக் கோட்பாடு (Big BangTheory) நமது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை விளக்கும் அறிவியல் முயற்சியாகும். பிரபஞ்சம், எல்லையற்ற சிறிய, வெப்பமான மற்றும் அடர்த்தியான ‘ஏதாவது’ எனத் தொடங்கியது, இது ஒரு பெரிய வெடிப்பு மூலம் ஒருமையில் (Singularity) இருந்து வேகமாக விரிவடைந்து விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள் மற்றும் பிரபஞ்சத்தின் பிற பகுதிகளாக உருவானது என்று அறிவியல் சொல்கிறது.

சிறந்த அறிவியல் புனைவுகளை எழுதிய ஐஸக் ஆஸிமோவின் ‘கடைசி கேள்வி’ மிகவும் புகழ் பெற்றது. இந்தக் குழப்பத்தையும், விரிவடைந்து சென்று கொண்டேயிருப்பதால் ஏற்படும் நசிவுகளையும், (Entropy) இந்த உலகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடையாக மனிதன் கணினியில் ஐக்கியமாகி, இந்த ‘விரிவடை ஆபத்தை’ (expansion and decay) நிறுத்தி உலகை அழிவிலிருந்து மீட்டெடுப்பான் என்று அவர் சொல்கிறார். பேரொலியுடன் தொடங்கியதாகக் கருதப்படும் இந்த உலகம், சிணுங்கலான முணுமுணுப்புடன் முடிவுறுமோ?

இந்தியர்களின் ‘சப்தப் ப்ரமாணம் நினைவில் வருகிறதா?

பிரபஞ்ச வரலாற்றின் ‘பிறப்பு’, மற்றும் ‘இறப்பு’ காலக்கோட்டில் நாம் தற்சமயம் விண்மீன்கள் நிறைந்துள்ள (Stelliferous) காலத்தில் இருக்கிறோம். இந்தக் காலமானது மறுசேர்க்கை (Recombination) என்று அழைக்கப்படுகிறது; நடுநிலை சக்தி பொதிந்த (Neutrally charged atoms) அணுக்களின் தோற்றத்தின் காலம் எனச் சொல்கிறார்கள். இந்த மறு சேர்க்கைக்கு முன்’ஆதி காலம் (primordial era) இருந்தது; அப்போது, அகிலம் அடர்த்தியாகவும், அதி வெப்ப ‘ப்ளாஸ்மாவும்’ (Plasma –நிறமற்ற திரவம்) கொண்டிருந்தது. விண்மீன்கள் எதுவும் இருக்கவில்லை.

பெரு வெடிப்பிற்குப் பிறகு சில ஒரு இலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர், அண்ட நுண்ணலை பின்புலக் கதிரியக்கச் (Cosmic Microwave background radiation) செயல்பாட்டிலிருந்து இன்று காணும் முதல் ஒளி தோன்றியது. பிரபஞ்சத்தின் வயது ஏறத்தாழ நூறு மில்லியன் ஆண்டுகள் ஆன பிறகு, முதல் நட்சத்திரங்கள் மின்னின. 600 மில்லியன் ஆண்டுகளில் முதன் முதலாக விண்மீன் மண்டலங்கள் (Galaxies) தோன்றின.

அகிலத்தின் வயது 100 ட்ரில்லியன்களை எட்டும் வரை இந்த விண்மீன் யுகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அகிலத்தின் எரி சக்தி குறைந்து கரும் இருட்டில் பிரபஞ்சம் மூழ்கி விடும்.

ஆர்தர் சி க்ளார்க் தன் சிறுகதையான, ‘ கடவுளின் ஒன்பது பில்லியன் பெயர்களில்’ எழுதியதைப் போல விண்மீன்கள் மறையத் தொடங்கும்; நம்முடைய சூரியனே கருங்குள்ளனாகிவிடும். பிறகு உயிரேது, உலகேது?

அகிலத்திற்கு குவாட்ரில்லியன் (1000 டிரில்லியன்; ஒரு ட்ரில்லியன்= 1000 பில்லியன்; ஒரு பில்லியன்=ஓராயிரம் மில்லியன்; ஒரு மில்லியன்=1,00,00,00= பத்து இலட்சம்) வயதாகும் போது சூரியக் குடும்பம் இருக்காது. அனைத்துக் கிரகங்களும் தங்கள் சுற்றுப்பாதையிலிருந்து தூக்கி வீசப்பட்டோ, அல்லது கபளீகரம் செய்யப்பட்டோ காணாமல் போய்விடும். விண்மீன் மண்டலங்கள் மக்கத் தொடங்கும்; அவை தங்கள் நட்சத்திரங்களை கருந்துளையிலோ அல்லது விண்மீன் மண்டல இடைவெளியில் உள்ள ஆழமான வெளியிலோ இழக்க நேரிடும். பத்து குவாட்ரில்லியன் ஆண்டுகளில், உலகில் இருக்கும் பொருளனைத்தும் மக்கி இலக்கற்ற ஃபோட்டான்களாகிவிடும். இந்த நேரத்தில் நிறையுள்ளதாக இருக்கக்கூடியது கருந்துளைகள் மட்டுமே. அவைகளும் ஹாகிங்(க்) (Hawking Radiation) கதிரியக்கத்தை வெளியிட்டு மெல்ல மெல்லச் செயலிழக்கும். ஒரு கூகோல் (Googol) வருடத்தில் (இலக்கம் ஒன்றைத் தொடந்து நூறு பூஜ்யங்கள் ) கருந்துளைகளும் ஒன்றுமே இல்லையெனவாகும்.

இந்த நிலையில் உலகம் ஸ்தம்பிக்கும். பிரபஞ்சம் இன்னமும் விரிவடைவதால், சில ஃபோட்டான்கள், (Photons) சில ந்யூட்ரினோக்கள், சிவப்புப் பெயர்ச்சியால் (Red shift) மேன்மேலும் சக்தி இழக்கும்.

மனித இனம் இத்தகைய சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளுமா? முடிவற்ற இந்த ‘விரிவடை வீழ்ச்சியை’ ஏதாவது செய்து நம்மால் நிறுத்த முடியுமா?

ஆஸிமோவின் கற்பனையின்படி, மனிதர்கள் அனலாக் கணினியில் (தொடர் கணினி) இணைவார்கள்; அனைத்து உணர்வுகளையும் அடக்கிய ஒரே ஒரு கணினியாக அது உருவெடுக்கும்; பிறகு கடவுளின் சொல்லைப் போல் ‘ஒளி எழட்டும்; ஒளி தோன்றியது’ என்ற மாய மந்திர வார்த்தை அகிலத்தை உயிர்ப்பிக்கும்.

இந்தக் கற்பனைச் சொல், மந்தஹாசப் புன்னகையைக் கொண்டு வருகிறது. ஏனெனில், இத்தகைய வெப்ப இறப்புச் சூழலில் அதிக அளவில் ந்யூட்ரினோக்களும், ஒளியும் தான் எஞ்சும். என்ன ஒன்று, அது மிக மிகப் பரந்து பட்டதாக இருக்கும்.

உலகின் மீள்தொடக்கத்திற்கு, பொருளைக் கொண்டு வருவது அல்லது ஒன்றுமில்லாததிலிருந்து புதுப் பொருளை படைப்பது என்ற இரண்டு வழிகள் தானிருக்கின்றன.

1992-ல் லீ ஸ்மோலின் (Lee Smolin) உலக உருவாக்க பரிணாமக் கருத்து ஒன்றை வெளியிட்டார். உயிர் வாழும் மற்றைய இனங்களைப் போலவே அகிலம், புதிய உலகங்களை, உற்பத்தி செய்யும் திறனுள்ளது என்பதை அடிப்படையெனக் கொண்டார். தகுதியுள்ளது தங்கும் என்ற கோட்பாடுதான்.

நீடிக்கும், நிலைத்து நிற்கும் உலகங்களை, உலகங்கள் உற்பத்தி செய்ய, டி என் ஏவைப் போலவே இயற்பியல் விதிகள் என நாம் அறியத்தக்கனவற்றால் எதிர்கால உலகங்கள் சமைக்கப்படும். இந்தக் கருதுகோள் அண்டவியலின் சிக்கலுக்கும், அடிப்படையாக இயற்பியலில் எழும் கேள்விக்கும் தெளிவாக விடை தருகிறது. இயற்பியலில் அடிப்படைக் கேள்வி இதுதான்-“ நிலைத்த பொருட்கள் உருவாகி, மனித இனம் வரை இந்த உலகம் ஏதோ காரணத்தினால் நன்கு மெருகேற்றப்பட்ட விதத்தில் அமைந்துள்ளதே, அதன் செயற்பாட்டு விதி என்ன?”

நாம் இங்கு வசிப்பதால், இதைப் போன்ற உலகில் இருக்கிறோம் என்ற மானுடவியல் சிந்தனையை விடுத்து, மிகவும் பழமையானதும், குறை ஆயுள் கொண்டதுவுமான உலகிலிருந்து பரிணாமம் பெற்று இன்றைய நிலைக்கு உலகம் வந்திருக்கக்கூடும் என்று அவர் சொன்னார்.

உலகம் படைக்கும் புது உலகமெப்படி ஏற்படுகிறது? கருந்துளைகள் அமைவதால் புத்துலகம் பிறக்கிறது. அகிலத்தைப் போலவே, கருந்துளையிலும் ஒருமை உள்ளது; அல்லது சக்தியும், பொருளும் இறுகிப் பிணைந்த பந்து என்று கூட எடுத்துக் கொள்ளலாம். வசதிக்காக, ஒருமையை எடுத்துக் கொள்வோம். எனினும், முக்கியமான வேறுபாடு உலகிற்கும், கருந்துளைக்கும் உண்டு; காலத்தில், பெரு வெடிப்பின் ஒருமை நிகழ்ந்து உலகம் ஏற்பட்டது; கருந்துளியின் ஒருமையோ வெளியில்.

இது ஒன்றும் சிக்கலானதல்ல. ஏனெனில், ஒரு பொருள் கருந்துளையில் விழும் போது அதன் நேரப் பரிமாணம், எந்த திசையில் தன் நேரம் செல்வதாக அது அனுபவிக்கிறதோ, அதன்படி, ஒருமையை நோக்கி படிப்படியாக வளையும். இதனால், அது ஒருமையை அடைகையில், அதன் நேரப் பரிமாணம் அதில் தங்கும். கருந்துளை ஒருமையின் மறுபுறத்தில் ஒரு உலகமிருந்தால், உள்ளே விழுந்த பொருள், புது உலகின் பெரு வெடிப்பில் வெளிப் பொருளாக வரும் -ஆனால், முந்தைய வஸ்துவாக அல்ல. எனவே செய்திகள் அனுப்ப முயலாதீர்கள்!

அண்டவியலின் கேள்விகள் சிலவற்றிற்கு கருந்துளை பெரு வெடிப்புக் கோட்பாடு பதிலைத் தருகிறது. முக்கியமாக அடிவானத் தொடர்பான ஒரு கேள்வி- நாம் அண்டவியல் நுண்ணலை கதிரியக்கப் பின்னணியில் பார்க்கும் போது இரவு வானின் நட்சத்திர கதிரியக்கங்கள் நமக்கு ஒரு சிந்தனையைத் தருகிறது. அந்தக் கதிர்வீச்சின் வெவ்வேறு பகுதிகள் பிரபஞ்சம் தோன்றியதற்குப் பிறகு நிகழ்ந்திருக்க முடியாத அளவில் தொடர்புள்ளவை. பெரு வெடிப்பிற்கும் முன்னர் இந்த விண்மீன்கள் இருந்திருக்கின்றன. அவைகளின் ஒளி தொலை தூரத்திலிருந்து நம்மை நோக்கி வருகிறது.

இன்று நடப்பில் அனுசரிக்கப்படுவது ‘ ஊதல் அல்லது வீக்கம்’ ( Inflationary) என்ற கருதுகோள்; கருந்துளைப் பெரு வெடிப்பும் அதைச் சார்ந்த கருத்துதான். ‘டெ சிட்டர்’ என அழைக்கப்படும் காலவெளி, தன் ஆரம்ப நிலையில், அதாவது ஒரு உலகைக் கருந்துளையின் ஒருமையுடன் இணைக்கையில் வீங்கிய நிலையில் தானிருக்கிறது. கருந்துளையில் இருக்கும் அன்னை உலகில் அந்த வஸ்து விழும் போது பின்னர் அது எதிர்கொள்ளும் கலப்புகள், அடிவானத்தைப் பொறுத்த நம் சிந்தனைக்கு ஒரு சிறந்த விளக்கத்தைத் தருகின்றன.

ஆமாம், இடத்தைப் பொறுத்த வரையில் ஏன் அது நமக்குத் தட்டையாகத் தெரிகிறது? வான் இயற்பியலாளர்கள் இதை கரும் சக்திக் கருத்தினைக் கொண்டு விளக்கப் பார்க்கிறார்கள். ஆனால், கருந்துளை பெரு வெடிப்பு இதை இடவியல் கூறுகளோடு தொடர்புறுத்துகிறது. தட்டையான உலகத் தோற்றம் என்பதே போதுமானதாக இருக்கிறது. கரும் சக்திக்கு இவர்களிடத்தில் எந்த வேலையுமில்லை. அன்னை உலகம், குழந்தை உலகை, அன்னையர் பிள்ளைகளைப் பெறுவதைப் போல படைத்துக் கொண்டிருக்கிறது. பிறப்பு வாயில் வழியில் எளிதாக வெளி வரும் வகையில் குழந்தைக்கு தலை ஓடு நெகிழ்வாக அமைந்திருப்பதை நினைவில் கொண்டால், இது சுலபமாகப் புரியும்.

நம் உலகம் நிலையான உலகத்தைப் படைத்தவாறே இருக்கிறது என்று ஸ்மோலின் சொல்கிறார். உலகங்கள், கருந்துளைகளால் உற்பத்தியாகிறதென்றால், குழந்தை உலகங்கள் படைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அவர் கூற்றின்படி நம் உலகம் கருந்துளைகளை உற்பத்தி செய்யும் விதத்தில் மெருகேற்றப்பட்டுள்ளது.

ஆயினும், ஒரு கேள்வி இருக்கிறது. இந்த அனைத்துக் கருந்துளைகளிலும், விண்மீன்களின் நிறையளவில், பொருளும், சக்தியும் இருந்தால், அவைகள் புதுப் பிரபஞ்சங்களை எவ்விதம் உருவாக்கும்? அவைகள் சிறிய மண்டலங்களை உருவாக்காதா?

கருந்துளையில் காலமும் வெளியும் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்கின்றன. அன்னை உலகில் ஒரு பொருள் எப்போது விழுந்திருந்தாலும், குழந்தை உலகின் பெரு வெடிப்பாக அது வெளிப்படும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். புது உலகின் வெவ்வேறு இடங்களில் ஆனால் ஒரே நேரத்தில் அது வெளிவரும்.

எனவே, அன்னை உலகின் நோக்கில், பெரு வெடிப்பு, இட அழுத்தத்திற்கு உள்ளாகும் கருந்துளை; ஆனால், குழந்தை உலகைப் பொறுத்த வரையில் அது தற்காலிகமாகச் சுருக்கப்பட்ட ஒன்று. இதைப் போலவே, அன்னை உலகில் அது நேரம் சார்ந்த விரிவு; பிள்ளை உலகில் அது இடம் சார்ந்த அல்லது வெளி சார்ந்த விரிவு. இதை எவ்விதம் பொருள் கொள்வது? கருந்துளையில் விழக்கூடிய அனைத்துப் பொருட்களும், முதல் விண்மீனை மட்டும் தோற்றுவிப்பதில்லை, புது உலகையும் தான். எனவே கேள்வியிலேயே பதிலும் அடங்கியுள்ளது.

அப்படியென்றால் அதிகப் பொருட்கள் உற்பத்தியாகும் தானே? ஆனால், பொருட்களால் மட்டுமே நிறைந்திருக்கும் உலகமல்ல. காலவெளியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் தான் இதை முழுமையாக அறிய முடியும். எடுத்துக்காட்டாக, வெகு தொலைவில் இருக்கும் இரு விண்மீன் கோளங்களில் உள்ள கிரகங்களை எடுத்துக் கொள்வோம்; அவ்விரண்டிலும் நங்கூரத்தை நிறுத்தி கோடானுகோடி நீளமுள்ள ஒளி வருடக் கம்பியால் இணைப்பதாக வைத்துக் கொள்வோம். உலகம் விரிவடைகையில் அந்தக் கம்பியில் விசை கூடும்; அது சாத்தியமான ஆற்றலை உருவாக்கும். இது உலகின் இயல்பு நிலை. இந்த விரிவானது ஈர்ப்பு எதிர்ப்பினை உருவாக்கும். இது காலவெளியின் விசை என்று சொல்லப்படுகிறது. ஒன்றுமில்லாததிலிருந்து சக்தி பிறக்கிறது. பொது சார்பியல் கோட்பாட்டின்படி அண்டவியல் சமாச்சாரங்களில் ஆற்றல் பாதுகாப்பதைப் பற்றிய சிந்தனை தேவையற்றது. ஆற்றல் பாதுகாப்பு, நேரத்தின் அல்லது காலத்தின் சமச்சீரைச் சார்ந்தது. எப்போது நடைபெற்றது என்பதைச் சார்ந்து பௌதீக வெளிப்பாடுகள் மாறுவதில்லை அல்லவா?

உலகிற்கு தொடக்கம் இருக்கிறது; தான் விரிவடைவதையும் அது சொல்கிறது; ஒவ்வொரு கால இடைவெளியும், மற்ற இடைவெளிகளோடு தத்தமக்குள் துல்லியமாக மாற்றிக் கொள்ளாது. அதனால்தான், விரிவடையும் உலகம் பெரிய அளவில் ஆற்றலை உற்பத்தி செய்தாலும், அதிக அளவில் செய்வதில்லை!

ஓளியின் வேகத்தைக் காட்டிலும் அதி விரைவாக உலகம் விரிவடையும் போது, ஹப்பிள் கோளத்தைத் தாண்டி நீங்கள் வீசும் எதிர்மறை சக்தி, பொருட்களை உண்டாக்கும் ஆற்றலுடையது. ஹப்பிள் கோளமென்பது நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, ஒளியைக் காட்டிலும் வேகமாக விரிவடையும் வெளியையும், ஒளியைக் காட்டிலும் குறைவாக விரிவடையும் வெளியையும் பிரித்துக் காட்டும் கோளமாகும். எதிர்மறை சக்தி வீசப்படுகையில், ஹப்பிள் கோளத்தின் வெளியேயுள்ள வெற்றிட ஆற்றலின் அடர்த்தி குறைந்து, இலவசமாகப் பொருட்களும், சக்தியும் கிடைக்கும்.

பால் டேவீஸ் (Paul Davies) என்ற இயற்பியலாளர் தன்னுடைய ‘உலகச் சுரங்கத் தோண்டலில்’ (Mining the Universe Book), ஊதிப் பெருகும் உலகிலிருந்து எவ்வண்ணம் எல்லையற்ற ஆற்றலை அறுவடை செய்ய முடியும் என்று சொல்கிறார். கருந்துளைகள் ஹாகிங்(க்) கதிரியக்கத்தினால் உருவாக்கும் இலவச ஆற்றலைப் போலவே டெ சீட்டர் வெளியும் இலவச சக்தியைத் தரும் என்று அவர் சொல்கிறார். அன்னை உலகில் இருக்கும் கருந்துளையுடன் பிள்ளை உலகை இணைக்கும் இந்த டெ சீட்டர் வெளி, ஒன்றுமில்லாததிலிருந்து பொருளையும், ஆற்றலையும் அதிக அளவில் உற்பவிக்கும். சாதாரண விரிவு நிலையில் இந்த உற்பத்தி அனேகமாகக் குறைந்துவிடும். இப்படித்தான், விண்மீன் நிறையிலிருந்து உருவாகும் கருந்துளை, விண்மீன் மண்டலங்களாலான அகிலத்தை உருவாக்குகிறது. சமீபத்திய அனுமானங்களின்படி, மற்ற உலகங்களுக்குத் தலைவாயில்களாக ஏகப்பட்ட கருந்துளிகள் அண்டவெளியெங்கும் விரவிக் கிடக்கின்றன.

ஆஸிமோவின் ‘கடைசிக் கேள்விக்கு’ப் போவோம். அகிலத்தின் மீள்தொடக்கத்திற்கு அறிவுச் செயல்பாடு அவசியமா? இந்தப் பிரபஞ்சமும், அதன் முன்னோடிப் பிரபஞ்சங்களும் இதற்கான விடையை ஏற்கெனவே சொல்லிவிட்டன. உலகம் புது உலகத்தைச் சிருஷ்டி செய்யும் நேரம் என்பது விளையாட்டிலில்லை.

ஆனால், அது நெடுங்காலப் போக்கில் புது சிருஷ்டியை அறிந்து செயல்படுத்துகின்றது . மற்றொரு உலகிற்குப் போக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்; கருந்துளையில் குதித்து விடுங்கள். இச்செயலில் நீங்கள் இறந்துவிடுவீர்கள்; ஆனால், உங்கள் உடற்பொருட்களோ, அல்லது உடன் எடுத்துச் செல்லும் பொருட்களோ மறுசுழற்சியில் புது உலகில் இடம் பெறும்.

இப்படியாக, வெறும் விண்மீன் நிறையிலிருந்து வரும் கருந்துளை, விண்மீன் கோலங்கள் கொண்ட உலகை உருவாக்குகிறது.

இந்த உலகை மீளவும் நாம் உருவாக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். இந்த உலகின் மொத்த ஈர்ப்பு விசையையும் நம்மால் மாறுபாடுகளுக்கு உட்படுத்தமுடியுமென்றால் மீளுருவாக்கம் சாத்தியமே. இவ்வுலகம் புதுப் பொருளையும், ஆற்றலையும் உண்டாக்கும் அத்தகையதொரு ‘வீக்கத்தில்’ செல்ல வேண்டும். அப்போது பழைய உலகத்தில் குமிழ் உலகம் தோன்றும்; ஆனாலும் சிறந்த வழி என்னவோ கருந்துளை வழிதான்.

ஒவ்வொரு முறையும் ஒரு கருந்துளை அமைகையில், ஆஸிமோவின் கடைசிக் கேள்விக்கான பதிலாக ஒளியும் தோன்றும்.

கருந்துளைகள் மட்டும் தானா அல்லது வெண்துளைகளும் உண்டா? ஒளியைக் கூட விழுங்கிவிடும் கருந்துளை. நெருங்கும் (?) (நெருங்க விடாது) அனைத்தையும் துப்பிவிடும் வெண்துளை.

இந்திய நால் வேதங்களில் முதலாகச் சொல்லப்பட்ட ரிக் வேதக் கவிதை (10.129) இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி ஆழமாகவும், அறிவார்ந்தும் பேசுகிறது.

நாசாதிய சூக்தம் (Nasadiya suktha)- na-asat)

பிரபஞ்சத்தின் தோற்றம்
இல்லாமையும் இல்லை, இருப்பும் இல்லை;
விண்வெளியின் சாம்ராஜ்யமோ, அப்பால் இருக்கும் வானமோ அல்ல;
என்ன கலக்கியது? எங்கே? யாருடைய பாதுகாப்பில்?
அப்போது மரணமோ அழியாமையோ இல்லை;
இரவையும் பகலையும் வேறுபடுத்தும் அடையாளம் இல்லை;
அந்த ஒன்று அதன் சொந்த உந்துதலின் மூலம் காற்றற்று சுவாசித்தது;
அதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இருள் முதலில் இருந்தது, இருளால் மறைந்திருந்தது;
தனித்துவமான அடையாளங்கள் இல்லாமல், இவை அனைத்தும் தண்ணீராக இருந்தது;
வெற்றிடத்தால் ஆனவை மூடப்பட்டன;
அந்த ஒன்று வெப்ப சக்தியால் உருவானது;
உண்மையில் யாருக்குத் தெரியும்? அதை இங்கே யார் அறிவிப்பார்கள்?
இது எங்கிருந்து தயாரிக்கப்பட்டது? இந்த படைப்பு எங்கிருந்து வந்தது?
இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கத்துடன் கடவுள்கள் பின்னர் வந்தனர்.
அது எங்கிருந்து உருவானது என்று யாருக்குத் தெரியும்?
கடவுளின் சித்தம் படைத்ததா, அல்லது அவர் ஊமையாக இருந்தாரா?
ஒருவேளை அது தன்னை உருவாக்கியது, அல்லது ஒருவேளை அது இல்லை;
உலகத்தின் உன்னதமான பிரம்மன், அனைத்தையும் வியாபித்துள்ள மற்றும் அனைத்தையும் அறிந்தவன்
அவருக்கு உண்மையில் தெரியும், இல்லை என்றால் யாருக்கும் தெரியாது

எத்தனைத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது இந்த ஞான விஞ்ஞானம்? அரிதான, நம்முடையதான, பல அறிவுகள் நம்மால் அறியப்படாமலேயே இருப்பது நாய் பெற்ற தெங்கம்பழமோ?

இது மட்டுமல்ல; பல்வேறு புவனங்களைச் சொல்கிறது இயற்பியல். நம் சனாதன தர்மம் மேலேழு உலகங்களையும், கீழேழு உலகங்களையும் காட்டுகிறது.

மேலேழு: பூ, பூவஸ், ஸ்வர், மஹஸ், ஜனஸ், தபஸ், சத்யா

கீழேழு : அதள, விதள, சுதள, ரசாதள, தலாதள, மஹாதள, பாதாள,

***


உசாவிகள்:

ரிக் வேதம், இணையச் செய்திகள், அறிவியல் ஊடகங்கள், மற்றும், மீடியம் இதழ் கட்டுரை https://medium.com/the-infinite-universe/the-universe-may-have-answered-the-last-question-3509530dff78 by Tim Anderson

2 Replies to “அகிலம் அண்டம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.